அந்த சிவகாமி மகனிடம்…
–கவிஞர் காவிரிமைந்தன்.
‘இருக்கும் பிடிசோறு தனக்கென எண்ணாது கொடுக்கின்ற கோயிலது’ என்னும் தாய்மையைப் போற்றும் பாடல்வரிகளைக் கொண்ட படம் – பட்டிணத்தில் பூதம்.. கவியரசர் அடிக்கடி அரசியலில் கட்சி மாறுவதேன் என்று கேட்கப்பட்டபோது.. இல்லையே… நான் அப்படியே இருக்கிறேன்.. கட்சிகள் தான் என்னைவிட்டு மாறிக்கொண்டே இருக்கின்றன என்றாராம். இப்படி திரைத் துறையிலும் அரசியல் துறையிலும் இலக்கியத்துறையிலும் முத்திரை பதித்த கண்ணதாசனிடம் முத்தாய்ப்பானது.. அவரது கவியாற்றலே என்பது காலம் கண்டறிந்த உண்மை!
அதுவும் தனது தனி மனித உணர்வுகளைக் கூட, அனுபவங்களை அப்படியே வரிகளில் வடித்திடும் பேராற்றல் கண்ணதாசனிடம் கண்டதுபோல் காணக்கிடைப்பது அரிது.
ஆம்.. அரசியல் களத்திலே ஏற்பட்ட ரணங்களாய் தடம் மாறி நின்றபோதும் கல்விக்கண்தந்த கர்மவீரர் காமராசரிடம் கொண்ட பற்று.. பாசம்.. அற்றுப்போகாமல்.. தன் ரத்த நாளங்களிலும் காமராசரை மெச்சிப் புகழ்ந்து வைத்திருந்தார். மேலும் அவரைக் காணவேண்டும் என்று பெரிதும் விரும்பினார்.
காதலன் காதலிக்கு தூது அனுப்பவதற்கு ஆயிரமாயிரம் வழிகள். ஆனால், இங்கே கண்ணதாசன் காமராசரைக் காண துடித்தபோது.. கை கொடுத்தது எது தெரியுமா? திரைப்பாடல் மட்டுமே! அதுவும் இத்திரைப்படத்தில் இக்காட்சி அமைப்பு இதற்காகவே இணைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
பெண் பார்க்கும் படலத்தில் இடம் பெறும் பாடலாய்.. எத்தனை எளிமையாய்.. எத்தனை லாவகமாய்.. தூதுவிடுகின்றார் பாருங்கள்.. அருமையான பாடலிது என்று கொண்டாடலாம். அப்படி இசை அமைத்திருக்கும் அதிசய மனிதர் திரு.கோவர்த்தனம் ஆவார். ஆயிரம் பாடல்களை இசையமைத்துப் பெற வேண்டிய புகழை ஒரே பாடலில் பெற்றுவிட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது.
புன்னகை அரசி கே.ஆர்.விஜயா அவர்களின் நளினங்கள் நாட்டியமாடும் திருமுகத்தை யார்தான் மறக்க முடியும்?
காமராசரின் தாயார் பெயர் சிவகாமி.. அட.. பாடல் பிறந்து விட்டது!!!!
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி – என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி – வேலன்
இல்லாமல் தோகை ஏதடி…
வேலை வணங்காமல் வேறென்ன வேலை – என்னும் சிலேடை விளையாட்டுக்களோடு..
எத்தனைப் பாடல்கள் இப்போது வந்தாலும் அந்தக் காலப் பாடல்கள் போல் ஆகுமா என்று ஏன் ஏங்குகிறோம்.. அர்த்தம் புரிகிறதல்லவா?
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி
http://www.youtube.com/watch?v=rm0jGFq1z3Y
காணொளி: http://www.youtube.com/watch?v=rm0jGFq1z3Y
படம் : பட்டணத்தில் பூதம்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசை : திரு.கோவர்த்தனம்
குரல் : T.M.S., P. சுசீலா
நடிகர்கள் : ஜெய்சங்கர்+கே.ஆர்.விஜயாஅந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி – என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி – வேலன்
இல்லாமல் தோகை ஏதடிஅந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி…
கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலைநெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே
நிழலாடும் விழியோடும் ஆடினானே – அன்று
நிழலாடும் விழியோடும் ஆடினானே – என்றும்
கண்ணில் நின்றாடச் சொல்லடிமலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ
மாறாது மாறாது இறைவன் ஆணை – என்றும்
மாறாது மாறாது இறைவன் ஆணைஇந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி – இன்னும்
சேரும் நாள் பார்ப்பதென்னடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி – தோகை
இல்லாமல் வேலன் ஏதடி…ஆ……ஆ……ஆ..ஆ..ஆ.ஆ
அந்த சிவகாமி மகனிடம்…
அந்த சிவகாமி மகனிடம்…
அந்த சிவகாமி மகனிடம்…
சேதி சொல்லடி… என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி….