அரவான்
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் T. சிவா தயாரிக்க, ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்ச்சனாகவி, கரிகாலன் நடிக்க, ’வெயில்’, ’அங்காடித்தெரு’ வெற்றிக்குப் பிறகு இயக்குனர் G. வசந்தபாலன் இயக்கும் திரைப்படம் ‘அரவான்’. பின்னணிப் பாடகர் கார்த்திக் முதன்முறையாக இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
அரவான் பதினெட்டாம் நூற்றாண்டின் பின்னணியில் நிகழும் கதை. அந்த காலகட்டத்தினை நிஜமான காட்சிகளாய் கண் முன் நிறுத்த வேண்டி, படப்பிடிப்புக்கு இடம் தேடிய குழு பாண்டியர்கள் ஆண்ட, போர்க்காலங்களில் ஒளிந்து வாழ்ந்த ஏராளமான மலைப்பகுதிகளைத் தேடினர். மூன்று மாத காலத் தேடலுக்குப் பின் இறுதியாக, மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டி மலையினைத் தேர்வு செய்தனர்.
பெரிதாக மக்கள் புழக்கத்தில் இல்லாத, மலை கல் குவாரிக்காரர்கள் கண்படாத மலை இந்த அரிட்டாபட்டி மலை. பல குகைகளும், நெடிய பள்ளங்களும் சுனைகளும் நிறைந்த அற்புதமானதொரு மலை. மலையின் ஒரு பக்கத்தில் எண்பது இலட்சம் ரூபாய் செலவில் கலை இயக்குனர் விஜய்முருகன் தன் பிரம்மாண்டமான குழுவுடன் ஒரு மலைக் கிராமத்தினை மிக நேர்த்தியாக 100 நாணல் வீடுகள், பனை ஓலை வீடுகள், கல் வீடுகள், பெரிய கருப்பு கோயில், இன்றைய சோம்பேறி மடம் என்று சொல்லப்படுகின்ற மந்தை இவைகளுடன் செட் போட்டு உக்கிர வெயிலில் 500 துனை நடிகர்களுடன், தொடர்ந்து படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.
இது குறித்து இயக்குனரிடம் கேட்டபொழுது, “பதினெட்டாம் நூற்றாண்டினை பிரதிபலிப்பதற்கு இம்மலை முக்கியமானதாக இருகிறது. இம்மலையும், எண்பது லட்சம் ரூபாய் செலவில் போடப்பட்ட செட்டும்ம் படத்திற்கு மிகப் பெரிய பலமாக இருக்கும்” என்றார். இரவு பகலென இடைவிடாது ‘அரவான்’ வளர்ந்து வருகிறான்.