வாராய் என் தோழி வாராயோ…
— கவிஞர் காவிரிமைந்தன்.
மலராத பெண்மை மலரும்
முன்பு தெரியாத உண்மை தெரியும்
வாராய் என் தோழி வாராயோ…
வாசம்தரும் மலர்கள் ஆயிரம் இருக்கலாம்! ஆனால் பாசம் தரும் மலரல்லவா – பாசமலர்? அண்ணன் – தங்கை உறவை அற்புதமாய் சொன்ன படம்! எண்ண அலைகளாய் என்றும் நினைவுகளில் நீந்தும் படம்! நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் இணைந்து நடிப்பில் இமயமென உயர்ந்த படம்!! கருப்பு வெள்ளையில் திரையில் வடித்த இக்கவிதையை இயக்கியவர் திரு.ஏ.பீம்சிங் என்பதை மறக்க முடியுமா?
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் – பாடல்பெற்ற ஸ்தலங்களாய் பரிணமிக்கின்றன. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் கற்பனை மெட்டுக்களுக்கு கவியரசு கண்ணதாசன் வார்த்தை முத்துக்களை வழங்கி ஒரு விழாவே நடத்தப்பட்டிருக்கிறது. தரமான குடும்பப்படம் எடுப்பதில் தன்னிகரற்று விளங்கிய இயக்குனரின் கைவண்ணத்தில் மிளிரும் இப்படம் தமிழ்த்திரைச் சரித்திரத்தில் ஒரு மைல்கல்!! குரல் தந்த பின்னணி பாடகர்கள் டி.எம்.எஸ்., பி.சுசீலா, பி. பி. ஸ்ரீநிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி ஆகிய பலரும் நம் நெஞ்சில் நிறைகிறார்கள்.
அன்றுவரை பின்னணி கோரஸில் பாடிவந்த செல்வி எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் முதன் முதலாக முன்னணிக்கு வந்து முழுமையாகப் பாடிய முதல்பாடலிது என்பதுதான் இப்பாடலுக்கான முதல் தகவல்! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இப்பாடகி தமிழ்த்திரையில் தனது முத்திரையை பதித்து உலா வந்ததை நாம் அனைவரும் அறிவோம். இன்றுவரை அந்நன்றியை மறவாதவராய் விளங்கும் எல்.ஆர்.ஈஸ்வரியைக் காண்கிறோம்!
முதல் பாடலே முத்தான பாடலாய்.. ஒரு வரவேற்பு பாடலாய் அமைந்த பல்லவியைப் பாருங்கள்.. அதுவும் சூப்பர் ஹிட்!!
இப்பாடலில் உள்ள மற்றுமொரு சங்கதி.. அன்றைய காலக்கட்டத்தில் தணிக்கைக் குழுவிற்கு திரு.சாஸ்திரி என்பவர் தலைவராக இருந்தார். கண்டிப்புக்கு பெயர் போனவர். தணிக்கைக்குழுவில் இப்பாடல் உட்படுத்தப்பட்டபோது, கவிஞருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கவிஞரே.. இப்பாடலில் நீங்கள் சொல்லியிருக்கும் விஷயம் – கத்தரி வைக்கச் சொல்கிறது. ஆனால் சொல்லியிருக்கும் விதம் – கத்தரிக்க விட மாட்டேன் என்கிறது. என்ன செய்வது என்று கவிஞரிடம் வினவினார் சாஸ்திரி அவர்கள்.
கவிஞரின் பேனா முனையில் பூத்த அந்த வரிகளில் பெண்மையின் கெளரவம் மலர்ந்து கிடக்கிறது. இதைவிட எப்படி அந்த விஷயத்தைச் சொல்லிவிட முடியும் என்று படிப்பவரை மட்டுமின்றி கேட்பவரையும் வியக்க வைக்கிறது.
மலராத பெண்மை மலரும் – முன்பு
தெரியாத உண்மை தெரியும்!
பாசமலர் திரைக்காவியத்தின் பாடல்கள் அனைத்தும் பரிபூரண சுகமானவை என்பதைப் பகர்வதற்கு இப்பாடலும் சத்திய சாட்சி!
இது கவிதைக் கோமகன் கண்ணதாசனின் அரசாட்சி!!
காணொளி: http://www.youtube.com/watch?v=u1ZCYDXjqTI
படம்: பாசமலர்
பாடல்: கவியரசு கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
குரல்: எல்.ஆர்.ஈஸ்வரிவாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ..
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ..மணமேடை தன்னில் மனமே நாணும்
திருநாளைக் காண வாராயோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ..மணக்கோலம்கொண்ட மகளே..
புது மாக்கோலம் போடு மயிலே
குணக்கோலம் கொண்ட கனியே
நம் குலம் வாழ பாடு குயிலே..
சிரிக்காத வாயும் சிரிக்காதோ..
திருநாளைக் கண்டு மகிழாதோ..தனியாகக் காண வருவார்
இவள் தளிர் போல தாவி அணைவாள்
கனி போல சேர்ந்து மகிழ்வாள்
இரு கண் மூடி மார்பில் துயில்வாள்
எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ..மலராத பெண்மை மலரும்
முன்பு தெரியாத உண்மை தெரியும்
மயங்காத கண்கள் மயங்கும்
முன்பு விளங்காத சேதி விளங்கும்
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ..