வீறுகொண்டு எழு!
-திருக்குவளை மீ.லதா
வீரம் விளைந்த மண்ணு!
விவேகம் நிறைந்த மண்ணு!
பெண்மையைப் போற்றும் மண்ணு!
புலி விரட்டிய பெண்டிரும்
போர் புரிந்த பெண்டிரும்
போதனை செய்த பெண்டிரும்
வாழ்ந்த வாழ்க்கை வரலாறாய்!
இன்றோ வானம் வசப்பட்டும்!
போர்க்களமான வாழ்க்கை??
சூறையாடப்படும் கற்பும்
சுருக்கிட முடியும் கயிறுமாக
வாசல் தாண்டி வந்தால்
வாழும் வாழ்க்கை கேள்விக்குறியாய்
மடிந்து போகும் பெண்ணே!
விடியல் நோக்கி நடைபயிலேன்!
குறுகிப் போகாதே கண்ணே!
நிமிர்ந்து நின்று பதிலுரையேன்!
உலகம் உனக்கும் குடை விரிக்கட்டும்!
மலர்தூவி வாழ்த்துப்பா பாடட்டும்!
எழுத்தாணி எழுதட்டும் ஏட்டிலே உன் புகழை!