வாழ நினைத்தால் வாழலாம் …
—கவிஞர் காவிரிமைந்தன்.
எண்ணம் போல் வாழ்வு – எத்தனை எத்தனை உண்மை?
எத்தனை எத்தனை இன்பம் வைத்தாய் இறைவா? என்கிற குரல் ஒரு பக்கம் கேட்டாலும் …
என்ன செய்வதென்றே புரியவில்லை… எப்படி வாழ்வதென்றே தெரியவில்லை… ஒரு ஜாண் ஏறினால் முழம் வழுக்குகிறது…
தோல்விக்கு மேல் தோல்வி… சாவதைத் தவிர வேறு வழியில்லை.. தற்கொலை ஒன்றுதான் பிரச்சினைகளுக்கு முடிவு …
என்று முடிவுக்கு வரும் கூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது!
வாழத்தான் முடிவில்லை… சாகவும் முடியாதா? என்கிற இவர்களின் கேள்வி அலட்சியம் செய்வதற்கில்லை!
தேர்தல் தோல்வி… காதல் தோல்வி… வாழ்வில் தோல்வி… என்கிற தோல்வி வட்டத்திற்குள் துவண்டுபோகின்றவர்களின் விலாசம் தேடி வெற்றி தேவதை வருவதே இல்லை…
துன்பம்… துன்பம் என்று துவண்டுபோவதைவிட அதிலிருந்து மீளுகின்ற வழியென்ன? என்ன செய்யலாம் என்பதை விடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து அடுத்த அடி எடுத்து முன்னேறுபவனை வெற்றித்திருமகள் கட்டித்தழுவக் காத்திருக்கிறாள் என்பதைக் கவனிக்கத் தவறவேண்டாம்!
சோதனையும் வேதனையும் தாங்கிக் கொண்டு சாதனையைப் படைத்திடும் போராட்டமேவாழ்க்கை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்! அலைகள் எதிரே வருகிறதே என்று படகுகள் கரையிலேயே நின்றுவிடுவதில்லை. அலைகளை எதிர்த்து அவற்றையும் தாண்டிச்சென்று அமைதியான நீர்ப்பரப்பில் பயணிப்பதை நாம் அறிவோம் அல்லவா? கடனும் சுமையும் எவனுக்குத்தான் இல்லை? துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம் என்று பாடல் தந்த கண்ணதாசன் வாழ்வதற்கு காட்டும் வழிகள் நேர்மறை நோக்கு கொண்டவை…POSITIVE THOUGHTS!!!
ஆ…ஆ…ஆஹஹா ஓஹொஹோ…
ஆ…ஆ…ஆஹஹா ஓஹொஹோ…
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழக்கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்
[வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்]
கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்
வாழச் சொன்னால் வாழ்கிறேன் மனமா இல்லை வாழ்வினில்
ஆழக்கடலில் தோணியாக அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்
ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி
துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவர் வாழும் காலம் முழுதும்
ஒருவராக வாழலாம்
வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்
வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்
________________________________________
பாடல்: வாழ நினைத்தால் வாழலாம்
திரைப்படம்: பலே பாண்டியா (1962)
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
காணொளி: https://youtu.be/d8te6nIUMk0
https://youtu.be/d8te6nIUMk0
எத்தனை அழகான பாட்டுவரி என்பதை மட்டும் ரசிக்காமல்… பாட்டுவரி மட்டுமல்ல… வாழ்க்கையில் நாம் கற்க வேண்டிய பாட வரி!! நம்பிக்கையின் நங்கூர வரிகளை நாம் கேட்டு உச்சரிக்கவும்… உணர்ந்துகொள்ளவுமே…
நெஞ்சமே… இந்த வரிகளை மனனம் செய்! மரணம் கூட மரித்துப்போகும்… உணர்ந்து சொல்… உன்னைப்போல் ஒருவருமில்லை என்கிற அளவு உயர்வாய்!
வாழ நினைத்தால் வாழலாம்!!!- பல்லவி சொல்கிற வார்த்தைகளில் – மனிதனே உனக்கு வேண்டிய அளவு பலமிருக்கிறது. கேட்டுப்பார்… ஆசை இருந்தால் நீந்தி வா… ஆம்… ஆசைதான் மனித நோய்களுக்கான மூலக்காரணம் என்பது தெரிந்த விஷயம்தான்… ஆனால் அதே ஆசைதான் … லட்சியமாக… கடமையாக… கோட்பாடாக… என்று நம்மை நெறிப்படுத்தி வெற்றியை… சாதனையை.. எட்டவும் ஏற்றம்பெறவும் வைக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவேதான் ஆசையெனும் நெருப்பு மனதுக்குள் கனன்றுகொண்டேயிருக்கும் வரைதான் வாழ்க்கை இனிக்கும் என்பதையும் சூசமாகக் குறிப்பிடுகிறார்!