ஏப்ரல் 13, 2015

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு கவிஞர்  வைகைச்செல்வி அவர்கள்

வைகைச்செல்வி

 

“சுற்றுச் சூழல் சீர்கெட்டால், அற்றுப் போகும் மனித இனம்!” என்று முழங்கும் கவிஞர் வைகைச்செல்வியை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர்  மகிழ்ச்சி அடைகிறோம். இவர் தொகுத்த “நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” என்ற சுற்றுச்சூழல் கவிதைத் தொகுப்பில் இடம் பெறும் வரியிது. “ஜி. ஆனி ஜோஸ்பின்” என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் வைகைச்செல்வி வல்லமை இதழிலும் எழுதியுள்ளார். சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் மேலதிகாரியாகப் பணியாற்றிய வைகைச்செல்வி ஆங்கில இலக்கியம், வணிகவியல், வணிக மேலாண்மை ஆகியவற்றில் முதுகலைப் பட்டங்கள் (M.A.(Eng.Literature), M.Com., M.B.A.) பெற்றதுடன், மேலும் தனது தொழில் சார்ந்த பட்டயப் படிப்புகள் (Post Graduate Diplomas in Environmental Laws, Industrial Pollution Control, Labour Laws & Computer Applications) பலவற்றையும் படித்தவர். சுற்றுச் சூழல் பயிற்சிக்காக டென்மார்க், வங்காளதேசம் நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். தற்சமயம் கல்வியாளராக பொறியியல் கல்லுாரி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

மதுரையை பூர்வீகமாகவும், சென்னையை வாழுமிடமாகவும் கொண்ட வைகைச்செல்வி 1980 முதல் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் பல வழங்கி எழுத்துலகில் தடம் பதித்தவர். பெண்ணியம் மற்றும் பெண்மை போற்றுதலும், அவர்தம் பணியின் பின்புலமான இயற்கை சுற்றச்சூழல் பாதுகாப்பு கண்காணிப்புத் துறையின் பணியின் கொள்கைகளுமே இவரது படைப்புகளின் களங்களாக விளங்கி வருகின்றன. கவிஞர் வைகைச்செல்வியின் “இன்னொரு உலகில்… இன்னொரு மாலையில்…”, “அம்மி”, “நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே” போன்ற கவிதைத் தொகுதிகள் அவர்தம் கவித் திறனையும், கருத்துச் செறிவினையும் பறை சாற்றுவன. கவிதைகள் தவிர்த்து “கறிவேப்பிலை செடியும் நெட்டிலிங்க மரங்களும்” என்ற சிறுகதைத் தொகுப்பு, “பணிச்சூழலில் பெண்களுக்கான பாதுகாப்பு” போன்ற படைப்புகள் இவரது பெண்ணியம், சுற்றச்சூழல் பாதுகாப்பு கருத்துகளின் வெளிப்பாடுகள்.

“கருவில் பெண்ணை அழிப்போர்க்குக் காட்டை அழித்தல் பெரிதாமோ?” என்ற முத்துரை பதிக்கும் கவிதை வரி பெண்களுக்காகவும் இயற்கை பாதுகாப்பிற்கும் இவர் ஒருங்கே கொடுக்கும் குரல்.

இவரது முதல் கவிதைத் தொகுப்பான “அம்மி” பாராட்டுகள் பலவற்றை இவருக்குப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து சுற்றுச்சூழல் தூய்மையை வலியுறுத்தி, தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்களின் 70 கவிதைகளைத் தொகுத்து 2003 டிசம்பரில் இவர் வெளியிட்ட “நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே” என்னும் தலைப்பில் வெளியிட்ட கவிதைத் தொகுப்பு தமிழ்நாடு பல்கலைக் கழகத்தில் பாட நூலாகத் தேர்வு செய்யப்பட்டது.

“கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று ஆரம்பம்” என்ற இவரது கவிதை, தொழில்மயமான தற்கால உலகம் சுற்றுச்சூழலை சீர்குலைப்பதைச்  சுட்டிக்காட்டி இந்நிலையை மாற்ற வலியுறுத்துகிறது.

நான்கு திசைகளிலும்
புகை போக்கிகள்!
நச்சுக் காற்று நெளிந்து ஊடுறுவி
மனித நாற்றுகளை
மௌனமாய்த் தலைசாய்க்க
கத்தியின்றி…ரத்தமின்றி
யுத்த மொன்று ஆரம்பம்!
காடும் மலையும் இல்லை யென்றால்
வீடும் நாடும் இனி யேது?
சுற்றுச் சூழல் சீர்கெட்டால்
அற்றுப் போகும் மனித இனம்!

பணியிடங்களில் பெண்களின் திறமைகள் மதிக்கப்படாது அவர்கள் உயர்பதவிகள் வழங்கப்படுவதில் புறக்கணிக்கப்படும் “கண்ணாடிக் கூரை” (glass ceiling) சூழ்நிலை இவரது பெண்ணியக் குரல் வழியே கீழ்கண்டவாறு ஒலிக்கிறது.

ஆண்டுகள் பலவாய் ஓடி…ஓடி
இறுதியில்
(பதவி உயர்வென்னும்)
அந்த ஏணியை அடைந்தேன்!
கூரிய கற்களும்… கொடிய முட்களும்
குத்திக் கிழித்தும்
(உயர்ச்சி நோக்கி ஆவலாய்)
ஓடிய கால்கள் …..!
ஏணியின் உயரம்
அயர்ச்சியை அளிக்க ….
புத்துயிர் பெற்றுக்
கண்களைத் திறந்தேன்!

காலை எடுத்து
முதற்படி வைப்பதற்குள் ….
என்னைத் தாண்டிச்
(சென்றன) சில காகங்கள் ….
கழுத்தில் சலங்கையுடன்,
காலில் எலியுடன்,
ஏணியைத் தள்ளி
(என்னையும் மிதித்துக் கொண்டு)
இடத்தை நிரப்பின!

இக்கவிதையினைப் படிக்கும்பொழுது “தனிப்பட்ட மன முறிவுகளைத் தாண்டி பொது இழப்புகளைப் பெண்கள் ஆராயத் தலைப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மிகச் சிலரே. எனினும் அவர்கள் ஒரு புதிய பாதையின் முன்னோடிகள். வைகைச் செல்வி அவர்களில் ஒருவர்” என மாலன் கூறியதை நாம் இங்கு நினைவுகூர்தல் பொருத்தமாகவும் இருக்கும்.

“பெண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்ற வைகைச்செல்வியின் கட்டுரையும் பலவகையிலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட அன்றைய காலத்து பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் இருந்த வலிமையும், வீரியமும், உயிர்ப்பும், காலத்தை வென்று நிற்கும் தன்மையும் இன்றைய பெண்படைப்பாளிகளின் படைப்புக்களில் இல்லையோ! என்ற ஐயத்தை எழுப்புகிறது.

“வானகமே, வையகமே”, என்னும் சூழ்மண்டலக் கண்காணிப்பு இதழில் “இது நம்ம பூமி” என்னும் தலையங்கக் கட்டுரையைத் தொடர்ந்து எழுதி அதன் கௌரவ ஆசிரியராக சிறப்பாகச் செயலாற்றி வரும் வைகைச்செல்வி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பெண்ணுரிமை என இருதுறைகளிலும் மேலும் மற்றொரு எல்லைக்கோட்டை முனைவர் பட்டம் மூலம் சமீபத்தில் எட்டினார்.   இவரது  தொடர் முயற்சியை பாராட்டும் நோக்கில் வல்லமைக் குழவினருக்கு வைகைச்செல்வியைப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும் கவிஞருமான திரு. ஜெயபாரதன் அவர்கள்.

வைகைச்செல்வி1வைகைச்செல்வி2

சுற்றச்சூழல் கவிஞர், பெண் சாதனையாளர் போன்ற பட்டங்களையும் பெற்றவர் வைகைச்செல்வி. இவரது படைப்புகளில் பல்கலைக்கழக ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நெய்வேலி நிறுவன புத்தகக் கண்காட்சியின் 2002 ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர் விருது, திருப்பூர் அரிமா சங்கம் வழங்கிய “சக்தி 2002” பெண் எழுத்தாளர் விருது போன்ற விருதுகளைப் பெற்ற கவிஞர் வைகைச்செல்வி, இப்பொழுது தான் பெற்ற வெற்றிகளின் வரிசையில் முனைவர் பட்டத்தையும்  [Ph D. in Occupational Health Hazards of Women in Textile Industries & Environmental Management] பெற்றுள்ளார். “பணிபுரியும் பெண்களின் (ஜவுளியாலைகள் மற்றும் தீப்பெட்டித் தொழில்) பிரச்சனைகளும் அதற்கான ஒருங்கிணைந்த சுற்றுச் சூழல் மேலாண்மையும்” (Thesis: Occupational Health Problems of Women employees in Textile and Match industries and Integrated Management of Environment) என்ற தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டு பெற்ற முனைவர் பட்டம் இது. இவரது ஆராய்ச்சிக் கோணமும் பெண்களையும் இயற்கையையும் இணைத்த ஒரு கோணத்திலேயே அமைந்தது பாராட்டிற்குரியது.

பெண்கள் நலனும், சுற்றுச்சூழலின் நலனும் தொடர்ந்து உலகில் கவலைக்குரிய நிலையிலேயே இருப்பதை உணரும்பொழுது இவரது ஆய்வு இவரது கருத்துகளுக்கு வலிமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதைப் பாராட்டி கவிஞர் வைகைச்செல்வியை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பேருவுவகை கொள்கிறோம். வைகைச்செல்வி தனது சமுதாய மற்றும் இலக்கியப்பணியில் வெற்றிகள் பலபெற வாழ்த்துகள்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

 

 

தகவல் பெற்ற தளங்கள்:
http://www.geotamil.com/pathivukal/jayabarathan_vaikaschelvi_3.html
http://annakannan-katturaigal.blogspot.in/2004/04/blog-post_01.html
https://jayabarathan.wordpress.com/vaigaiselvi/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.