நல்ல நேரம் – தொலைக்காட்சி நிகழ்ச்சி
ஸ்ரீ சங்கரா தொலைக் காட்சியில் தினந்தோறும் மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி “சுப ஹோரை”.
ஒவ்வொரு மனிதனின் பிறந்த நேரம், நட்சத்திரம், ராசி, கிரக நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அம் மனிதனின் எதிர் காலத்தையும், அது பிரகாசிக்க மேற் கொள்ள வேண்டிய பரிகார வழி முறைகளையும் அப்போது கடைபிடிக்க வேண்டிய நெறி முறைகளையும் விளக்கி நல்வழி காட்டும் கலையே ஜோதிடக் கலை.
நமது பாரதத்தின் பழம் பெருமை வாய்ந்த இக்கலை அன்றைய காலம் தொட்டு இன்று வரை பல்வேறு பரிணாம வளர்ச்சியடைந்து, நம்பியவர்களுக்கு நன்மையளித்துக் கொண்டிருக்கிறது.
அன்றைய காலத்தில் அரசர்களுக்கு ஜோதிடத்தைக் கூற அரசவையில் பரம்பரை ஜோதிடர்கள் இருந்ததாகவும், அவர்களது கூற்றுப்படியே அரசர்கள் செயல்பட்டதாகவும் அதற்கான பரிகார வழிமுறைகளை மேற்கொண்டதாகவும் வரலாற்றுச் செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது.
அக்கலையின் மூலம் இன்றைய தலைமுறையினரும் பலன் பெறும் வகையில் அதை புதிய பரிணாம வளர்ச்சியோடு ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி வழங்கும் நிகழ்ச்சியே ’சுப ஹோரை’.
நூறாவது நிகழ்ச்சியை விரைவில் எட்டவிருக்கும் இந்நிகழ்ச்சியை வழங்கும் திரு. மகேஸ், தொலைபேசி மூலம் நேயர்கள் கேட்கும் ஜோதிட மற்றும் ஆன்மீகம் சம்பந்தமான அரிய கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும் சாஸ்திர சம்பிரதாயங்களின் படி வழங்கும் பதில்கள் அற்புதம்.
இந்நிகழ்ச்சியின் நூறாவது ஒளிபரப்பில் பிரபலங்கள் கலந்து கொண்டு அவர்களது ராசி, நட்சத்திரங்களுக்குரிய பலன்களை நேரடியாக கேட்டுப் பெறும் வகையில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.