“படிக்காத மேதை” – கர்மவீரர் காமராசர்!

சித்ரப்ரியங்கா பாலசுப்பிரமணியன்.

“படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு
பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு”

என்னும் கவிஞர் கண்ணதாசன் வரிகளுக்கு உகந்தவரான நம் படிக்காத மேதை காமராஜர் பற்றி எழுதுவதற்கான வாய்ப்பு பெற்றதில் நான் அகம் மகிழ்கிறேன். காமராஜர் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் விருதுப்பட்டி என்னும் ஊரில், 1903 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 15 ஆம் நாள் அவதரித்தார். தந்தையார் குமாரசாமி நாடார் விருதுப்பட்டியில் தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார், தாயார் சிவகாமி அம்மாள். அவரின் தங்கை நாகம்மாள்.

அவருக்குக் குலதெய்வமான காமாட்சியின் பெயர் முதலில் சூட்டப்பட்டது. பின்னர் அன்னை சிவகாமி அம்மாள் ராஜா என அவரைச் செல்லமாக அழைக்க, இரண்டும் சேர்த்து காமராஜர் என்றே நாளடைவில் அழைக்கப்படலானார்.

காமராஜர் அவர்கள் இளம் வயதிலேயே தந்தையை இழந்து தவித்தார்.”தந்தையோடு கல்வி போம்” என்பதற்கு ஏற்ப தந்தை மறைவுக்குப் பின் கற்பதைக் கைவிட்டு, தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தன் மாமா இருவரின் துணிக்கடை மற்றும் மரக்கடையி்ல் சிறிது காலம் வேலை பார்த்தார். மேலும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டதனால், சுதந்திரப் போராட்ட வீரராகத் திகழ நாளடைவில் அதுவே வித்திட்டது.

பின்னர் அவர் சத்தியமூர்த்தி அவர்தம் தொண்டனாகி, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றார். கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணி எரிப்பு, உப்புச் சத்தியாகிரகம், சைமன் கமிஷன் முதலியன முக்கியம் வாய்ந்தவை. முதன் முதலில் 1952 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் வென்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார். மேலும் 1954 ஆம் ஆண்டு, தலைவர் பதவியைத் துறந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆனார். நேர்வழியில் அரசியலில் நுழைந்து ஆட்சி நடத்திய நேர்மையான மனிதர் நம் காமராஜர்.

முதலமைச்சராக இருந்த போது இலவசக் கல்வி திட்டம், மதிய உணவுத் திட்டம் ஆகியவை ஏற்படுத்திக் கொடுத்து, ஏழை எளிய மக்கள் நல்வாழ்விற்குப் பெரிதும் துணை புரிந்தார். “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” எனும் நிலை மாற்றி அனைவர்க்கும் உணவளித்தவர் நம் ஐயா அவர்கள்.

காமராஜரின் கல்வித் திட்டங்கள் இனிதே நிறைவேற அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குநர் திரு.நெ.து.சுந்தர வடிவேலுவும், தொழிற் திட்டங்கள் நிறைவேற அந்நாள் தொழில் அமைச்சர் திரு.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் பெரிதும் துணை புரிந்தனர். 1957ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வென்று, ஒன்பது ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து, தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட “கே பிளான்” மூலம் பதவியை துறந்து, மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் தலைவரானார்.

காமராஜர் ஆட்சிக் காலம் தமிழகத்தின் பொற்காலமாக விளங்கியது. எட்டாக் கனியாக இருந்த கல்வி ஏழை, பணக்காரன்; உயர்ந்தவர், தாழ்ந்தவர் என அனைவர்க்கும் பாகுபாடின்றிக் கிடைத்ததால் அவரைக் “கல்விக் கண் திறந்த காமராஜர்” என அழைத்து மகிழ்ந்தனர்.

“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று
என்று எண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம்
என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்”

என்னும் முண்டாக் கவிஞன் வரிகளுக்கு உயிரளித்து, பெண் கல்வி வளர்ச்சியை அதிகப்படுத்தி, பெண்மையைப் பெருமைப் படுத்தியவர் நம் காமராஜர். கைநாட்டாய் இருந்த மக்கள் தாங்கள் பெற்ற கல்வியால், கையெழுத்திடும் நிலைக்கு உயர்ந்ததும் அவர் காலத்தில் தான். மேலும் அவரின் மதிய உணவுத் திட்டம் மூலம் ஏழை எளிய குழந்தைகட்கு வயிராற உணவும் கிடைத்தது. இலவச சீருடைத் திட்டத்தின் மூலம் அனைத்து மாணவர்களிடையே வேற்றுமை உணர்வு நீங்கி, ஒற்றுமை உணர்வு மேலோங்கச் செய்த பேராளர் நம் கல்வித் தந்தை. “கல்வி சிறந்த தமிழ்நாடு” எனத் தமிழ்நாட்டின் கல்வி நிலையை உயர்த்திய பெருமை நம் காமராஜர் அவரையே சாரும்.

தமிழகம் எங்கும் பல பள்ளிகள் திறக்கப்பட்டும், பயிற்சி ஆசிரியர் பற்றாக்குறை இருப்பினும் ஓராசிரியர் பள்ளிகள் பல நிறுவினார். அந்தப் பள்ளியில் நியமித்த ஆசிரியர்களுக்கே பின்னர் அரசு செலவில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தார். இத்திட்டத்திற்கு அன்றைய பள்ளிக் கல்வி இயக்குநர் திரு.நெ.து.சுந்தரவடிவேலு பெரிதும் துணையாய் இருந்தார். பிள்ளைகள் மட்டுமின்றி பெரியவர், வயதானோர் கல்வி பயில முதியோர் கல்வித் திட்டமும் தொடங்கப் பட்டது.

மதிய உணவுத் திட்டம் நிறுவப்பட்ட போது பெரும்பாலும் பணக்காரர்களிடம் இருந்தே நன்கொடை வசூலித்து செயல்படுத்தப் பட்டது. அது பின்னர் அரசு செலவிலேயே நடைமுறைக்கு வந்தது. இந்தப் பெருமை காமராஜர் அவரையே சாரும். மேலும் தன் கல்வி சேவைக்காக நேருவாலும், பெரியாராலும் புகழப் பட்டவர்.

அவர் முதலமைச்சராய் இருந்த போது 471 உயர் நிலைப் பள்ளிகள் 1361 உயர் நிலைப் பள்ளிகளாகவும், 8 ஆக இருநத கல்லூரிகள் 17 ஆகவும், மேலும் 3 தொழிற் பயிற்சி கல்லூரிகள் வந்தது. இவை அவர் ஆட்சிக் காலத்தில் மக்களுக்குக் கிடைத்த வரங்களாகும். கல்விக்காக 15 கோடியே 68 லட்சம் ஒதுக்கப்பட்டு, 34 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயன் பெற்றதும் இவர் ஆட்சிக் காலத்தில் தான். மேலும் மாவட்டம் தோறும் நூலகங்கள் அமைத்தார். பாடப் புத்தகங்கள் தமிழில் அச்சிடப் பட்டு வெளி வந்ததும் இவர் ஆட்சியில் தான்.

மனித நேயத்திற்கு இன்னொரு பெயர் காமராஜர் அவர்கள். காந்தியடிகளைப் போல அமைதியான வாழ்க்கை வாழ்ந்ததால் “தென்னாட்டுக் காந்தி” என அன்போடு அழைக்கப்பட்டார். காமராஜர் பிறந்தநாள் ஜூலை 15 , சாதாரண தினம் அல்ல. பல நூற்றாண்டின் நினைவுகளைத் தரும் இனிய நாளாகும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ராஜினமா செய்து பின்னர் கட்சிக்காரர்கள், நேரு அவர்கள் வற்புறுத்தலுக்கு இணங்க முதலமைச்சர் ஆனார். கட்சிக்காரர்கள், நண்பர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் தம் பதவியில் தலையிடக் கூடாது என்றும், பர்மிட், கோட்டா, காண்டிராக்டிற்காக தன்னிடம் வரக் கூடாது என்னும் நிபந்தனை விதித்தார். கட்சிப் பணத்தைக் குடும்ப செலவிற்குப் பயன்படுத்தாது நேர்மையைக் கடைபிடித்தார் காமராஜர் அவர்கள்.

இந்திய நாட்டைத் தன் நாடாகவும், இந்திய மக்களை தன் உடன்பிறந்த சகோதர சகோதரிகளாகவும் அவர் நினைத்து வந்தார். திருமணம் செய்யாது, தன்னை நாட்டிற்காக அர்ப்பணித்து வாழ்ந்து வந்தார். நம் அனைவர் கல்விக் கண் திறந்த தந்தை. அரசின் தொழிற்பேட்டைகள் அருகே தொழில் தொடங்க வசதிகள் உருவாக்கித் தந்து, விவசாயத்துக்காக அணைக்கட்டுக்கள் பல அமைய வழி வகுத்துக் கொடுத்தார்.

அவர் ஆட்சிக் காலத்தில் நீர் வளம், நில வளம் மற்றும் மின்சார வளம் மிகுந்ததாகத் தமிழ்நாடு திகழ்ந்தது.மேலும் திருச்சி BHEL நிறுவனம், ஊட்டி இந்துஸ்தான் ஃபோட்டோ தொழிற்சாலை, பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை, ஆவடி டாங்க் தொழிற்சாலை, சேலம் ஸ்டீல் தொழிற்சாலை போன்ற பெருமை வாய்ந்த மேலும் பல்வேறு தொழிற்சாலைகள் உருவாக்கப் பட்டன.மேலும் பல கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டு, 4 மின்திட்டங்கள், 15 அணைக்கட்டுகள், 35 தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன.

அரசியலில் கிங் மேக்கராக இருந்து நேருவுக்குப் பின் சாஸ்திரி, அதன் பின் இந்திரா காந்தி எனப் பதவி ஏற்க, காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்து, அதில் உரிமை எடுத்து சாதித்துக் காட்டியவர் காமராஜர். அந்த நேரத்தில் தான் 20 அம்ச திட்டங்கள், வங்கிகள் தேசிய மயமாக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டன. பின் தேர்தலில் தி.மு.க வென்று அண்ணா பதவிக்கு வந்த போது, அரசியலில் ஏற்பட்ட பல மனக்கசப்புகள் காரணமாக, “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக” எனத் தி.மு.க இந்திராவை ஆதரித்த போதும் அவர் ஒதுங்கிக் கொள்ள முடிவு செய்தார்.

பெருந்தலைவர் காமராஜர் பேச்சாற்றலில் சிறந்தவர். “ஆகட்டும் பார்க்கலாமின்னேன்” என எதற்கும் அஞ்சாது பதிலளிப்பதே அதற்குச் சிறந்த முத்தாய்ப்பாகும். மேலும், “கற்றலிற் கேட்டல் நன்றே” எனக் கேள்வி ஞானத்தில் சிறந்து விளங்கினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ளது இந்தியா. இந்திய நாட்டின் ஒரு பகுதி தமிழ்நாடு. எனவே இந்தியா நன்றாக இருந்ததால் தான் தமிழ்நாடு நன்றாய் இருக்கும், தமிழன் நன்றாய் இருப்பான் என்பதை வலியுறுத்தியவர்.

கடவுளுக்குத் தேங்காய் உடைத்து, பூ மாலை சார்த்தி, எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என எண்ணாது, ஒவ்வொருவரும் நாடு முன்னேற்றம், மக்கள் முன்னேற்றம் எனச் செயலில் சாதித்துக் காட்ட வேண்டும் எனச் சொன்னவர் நம் கருப்பு காந்தி காமராஜர். மக்களுக்காக, மக்களில் ஒருவராகவே வாழ்ந்து நாடு முன்னேற்றம் காண உறுதுணையாய் இருந்தவர் நம் காமராஜர்.

நம் கல்விக் கண் திறந்த தந்தை, ஏழைப் பங்காளன், கருப்பு காந்தி, கர்ம வீரர், பாரத ரத்னா காமராஜரை இறைவன் தம்மிடம் அழைத்துக் கொண்ட நாள்,1975 ஆம் ஆண்டு காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆகும். சற்று உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் அன்று மதியம் சட்டக் கல்லூரி மாணவர்கள் சிலரை சந்தித்த பின்னர் ஓய்வெடுக்க அறைக்குச் சென்றார்.

உணவு அருந்திய பின்னர் அறைக்குள் சென்ற போதும் அவருக்கு வியர்த்துக் கொட்டியது. உதவியாளர் வைரவன் தான் எப்போதும் அவர் உடன் இருப்பார். அவர் ஒன்றுமில்லை என அமைதிப்படுத்தினார். பின்னர் அவர் உடம்பு வியர்க்கவே பதறிப் போய் காமராஜர் உடம்பைத் துடைத்து விட்டார். மருத்துவரை அழைக்கவா என அவரிடம் கேட்டார். அதற்கு அவர் தனக்கு எப்போதும் பார்க்கும் டாக்டர் சௌரிராஜனுக்கு போன் செய்து தரக் கேட்டார். தான் மணி அடித்தால் உள்ளே வருமாறும், விளக்கை அணைத்து விட்டுச் செல்லக் கூறினார்

டாக்டர் சௌரிராஜன் காமராஜர் நிலை கேள்விப் பட்டு விரைந்தார். உள்ளே நுழைந்த அவர் சலனமே இல்லாமல் தலைக்கு முட்டுக் கொடுத்து படுத்துக் கொண்டிருந்தவரை பரிசோதித்து, பலனின்றி கதறி அழுதார். மேலும் இரண்டு டாக்டர்கள் பரிசோதித்த பின் பலனில்லாமல் போகவே, அவர் மறைவு அதிகாரப் பூர்வமாக மாலை 3.20 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

காந்தியத்தின் அடுத்த தூண் நாட்டு மக்கள் அனைவரையும் பெருந்துயரில் ஆழ்த்தி விட்டு மண்ணில் சரிந்தது. ஆம் காமராஜர் அக்டோபர் 2 ம் நாள் 1975 அன்று மறைந்தார். அன்று மாலை 6.30 மணிக்கு அவர் பூத உடல் இராஜாஜி பவனில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மறுநாள் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்கப் பட்டது. தலைவனை இழந்த துயர் தாளாது பல பேர் மாரடைப்பாலும், இறுதி ஊர்வலம் காண வந்த போது விபத்திலும் உயிரிழந்தனர். மேலும் அப்போது தமிழக முதல்வராயிருந்த மு.கருணாநிதி, அமைச்சர் திண்டிவனம் ராமமூர்த்தி அவர்களால் தலைவருக்கு நினைவு மண்டபம் எழுப்ப முடிவு செய்யப்பட்டது.

பெருந்தலைவர் காமராஜருக்கு நினைவிடம் சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, கிண்டியில் 6.04 ஏக்கர் மொத்தப் பரப்பளவில் அமைக்கப் பட்டது. மார்பளவு சிலை ஆனது அமைக்கப்பட்டு , 14 பிப்ரவரி 1976 ஆம் ஆண்டு அரசுடைமை ஆக்கப்பட்டது.

“சீராட்டும் தாய் தவிர சொந்தமென்று ஏதுமில்லை” எனக் கவியரசர் கண்ணதாசன் காமராசர் தாலாட்டில் பாடியுள்ளார். காமராஜர் அதற்கேற்ப எளிமையான மனிதர். படிக்காத மேதை காமராஜர் வாழ்க்கை இன்றைய தலைமுறையினருக்குப் பாடமாக அமைகிறது. எல்லாத் தலைமுறையினருக்கும் பாடமாக அமையும் என்றால் மிகையாகாது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.