ஸம்ஸ்கிருதமும் கணினியும்

0

சு.கோதண்டராமன்

ஸம்ஸ்கிருதம்  எவ்வாறு கணினிக்கு ஏற்ற மொழி என்பதை Artificial Intelligence Magazine Volume 6 Number 1 (1985) என்ற பத்திரிகையில் விளக்கியுள்ளார் ரிக் பிரிக்ஸ் என்ற நாசா விஞ்ஞானி. Rick Brigs – RIACS, NASA Ames Research Center, Moffet Field, California 94305. அவருடைய கட்டுரையைத் தழுவியது இது.

வினையை  மையப்படுத்தும் செமான்டிக் நெட்

கணினி மூலம் மொழிபெயர்க்கும்போது, அகராதிப்படி நேருக்கு நேரான வார்த்தைகளைப் போடுவதன் மூலம் சரியான மொழிமாற்றம் செய்ய முடியாது என்பதை அனைவரும் அறிவர். அதற்கு முதல்படியாக, ஒரு மொழியில் சொல்லப்பட்ட கருத்தை, ‘செமான்டிக் நெட்’  Semantic Net எனப்படும் கூற்று வகையில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, முருகன் வள்ளிக்குப் பழம் கொடுத்தான் என்ற வாக்கியத்தைச் செமான்டிக் நெட்டாக மாற்றினால் கீழ்க்கண்டவாறு வரும்.

கொடு- செய்பவர் – முருகன்

கொடு – பெறுபவர் – வள்ளி

கொடு – பொருள் – பழம்

கொடு – காலம் – இறந்தகாலம்

இதில் கொடு என்ற வினையை மையப்படுத்தி அது வாக்கியத்தின் மற்ற சொற்களோடு எத்தகைய உறவு கொண்டிருக்கிறது என்பது சந்தேகத்திற்கோ, இரண்டு பொருள் வருவதற்கோ இடமில்லாத வகையில் முறைப் படுத்தப்படுகிறது. அதைப் படமாகக் கீழே காண்க.

 

இனி சற்றே சிக்கலான மற்றொரு உதாரணம் பார்ப்போம்.

“பெரியதெரு, 37 ஆம் எண் இல்லத்தில் உள்ள ஆசிரியர் முருகன், வள்ளி என்ற வக்கீலுக்கு ஒரு புத்தகம் தந்தார்.”

 

செயல் – நிகழ்வுகள் என்னும் பெருங்குழுவில் உறுப்பான கொடுத்தல் நிகழ்வுகளில் ஒன்று.

செய்பவர் – விலாசங்கள் என்ற பெருங்குழுவில் உறுப்பான பெரியதெரு, 37 என்பதை இடமாகக் கொண்டவர், நபர்கள் என்ற பெருங்குழுவில் உறுப்பான முருகன், தொழில்கள் என்ற பெருங்குழுவில் உறுப்பான ஆசிரியத் தொழில் செய்பவர்.

பெறுபவர் – தொழில்கள் என்னும் பெருங்குழுவில் உறுப்பான வக்கீல் தொழில் செய்பவர், நபர்கள் என்னும் பெருங்குழுவில் உறுப்பான வள்ளி.

செயப்படுபொருள் – பொருள்கள் என்ற பெருங்குழுவில் உறுப்பான புத்தகம்.

காலம் – இறந்த காலம்.

மேற்கண்ட  வகையில் சொன்னால் தான் கணினியால் புரிந்து கொள்ள முடியும்.. ஆனால் நாம் நடைமுறையில் இவ்வாறு பேசுவதில்லை. இந்தக் கணினி மொழியிலிருந்து இயற்கை மொழிகள் மிகவும் விலகி நிற்கின்றன. அப்படி இருக்க, இந்தக் கணினி மொழியிலிருந்து சற்றும் விலகாத ஒரு இயற்கை மொழி உண்டென்றால் அது ஸம்ஸ்கிருதம் மட்டுமே என்கிறார் பிரிக்ஸ்.

ஸம்ஸ்கிருத இலக்கணத்தில் வாக்கியத்தின் சொற்களிடையே உள்ள உறவுகளைக் காண மேற்கண்ட முறையே பின்பற்றப்படுவதாக அவர் கூறுகிறார். இம்முறை கி.மு. முதலாவது ஆயிரம் ஆண்டுகளில் பாணினியால் அறிமுகப்படுத்தப்பட்டு பின் வந்தவர்களால் விரிவுபடுத்தப்பட்டது என்றும் 18ஆம் நூற்றாண்டில் மராட்டியப் பிரதேசத்தில் வாழ்ந்த நாகேசர் என்பவரால் எழுதப்பட்ட வையாகரண சித்தாந்த மஞ்ஜூஷா என்ற நூல் இவ்வரிசையில் கடைசியாக வந்த நூல் என்றும் கூறுகிறார். அதிலிருந்து சில உதாரணங்கள் தருகிறார்.

சொற்றொடரும் அதன் உறுப்புகளும்

இந்திய  இலக்கண ஆசிரியர்களின் முறைப்படி, ஒவ்வொரு வாக்கியமும் ஒரு  செயலைக் குறிப்பிடுகிறது. அச்செயல் வினைச் சொல்லாலும் அதன் துணைகளாகிய பெயர்ச்சொல் முதலியவற்றாலும்  குறிப்பிடப்படுகிறது.

‘சித்ரா கிராமத்தைச் சென்றடைகிறாள்’ என்ற வாக்கியத்தை நாகேசர் அலசுவது இவ்வாறு –

“ஒரு செயல் நடைபெறுகிறது. அது தொடர்பு என்னும் ஒரு விளைவை ஏற்படுத்துகிறது. செய்பவர் சித்ரா, வேறு யாரும் அல்ல. காலம் நிகழ்காலம். செயலின் செயப்படுபொருள் கிராமம், வேறு எதுவும் அல்ல.“

வினைச் சொல்லின் பொருள்  செயல்- பலன் என்று இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு செயலும் பல உட்செயல்களாகப் பகுக்கப்படக் கூடியது என்ற கருத்தை நாகேசர் வலியுறுத்துகிறார்.

கந்தன்  முருகனுக்குப் புத்தகம் கொடுத்தான் என்பதில் கொடுத்தல்  என்பது செயல், புத்தக இடமாற்றம் என்பது பலன். இச்செயல், கந்தன் கையில் வைத்திருத்தல், அதை முருகனை நோக்கி நீட்டுதல், அது முருகன் கையோடு தொடர்பு கொள்ளுதல், கந்தன் கையை விட்டு நீங்குதல் ஆகிய பல உட்செயல்களைக் கொண்டது என்று கூறுகிறார்.

வேற்றுமைகளும் காரகங்களும்

தமிழில் இருப்பது போல ஸம்ஸ்கிருதத்திலும் எட்டு வேற்றுமைகள் –விபக்திகள்- உண்டு. அதில் முதல் 7 வேற்றுமைகள்- தமிழில் போலவே முறையே செய்பவர், செயப்படுபொருள், கருவி, சென்றடையும் இடம், புறப்படும் இடம், உடமை, இருக்கும் இடம் ஆகியவற்றைக் குறிப்பிடுவன. இதில் ஆறாம் வேற்றுமையான உடமையும், 8 ஆம் வேற்றுமையான விளியும் வாக்கியத்தின் மையக் கருத்தான செயலைப் பற்றி விளக்குவதில்லை. ஏனைய ஆறும் செயலை விளக்குவதால் அவை ‘காரக’ என்ற பெயர் பெறுகின்றன. இந்த ஆறு காரகங்கள் செயலுக்கும மற்ற துணைச் சொற்களுக்குமான உறவைக் குறிப்பிட்டு சொற்றொடருக்கு முழுமையான பொருளைத் தருகின்றன.

பிரிக்ஸ்  விளக்கும் நாகேசரின் இந்த உதாராணத்தைக் கவனியுங்கள். ‘நட்பின் காரணமாக மித்ரா தேவதத்தனுக்காக நெருப்பு கொண்டு பானையில் அரிசி சமைக்கிறாள்.‘

இதில் செயல் சமைத்தல். இது அடுப்பை மூட்டுதல், பானையை வைத்தல், நீர் ஊற்றுதல், அரிசி இடுதல், அரிசியின் கடினத் தன்மையைப் போக்கி மென்மையாக்குதல் ஆகிய பல உட்செயல்களைக் கொண்டது. இச் சொற்றொடரின் பொருளை நாகேசர் அலசும் முறை இது-

“மென்மையாக்குவதற்குச் சாதகமான ஒரு செயல் நடைபெறுகிறது. செய்பவர் – மித்ரா, உட்படும் பொருள் – அரிசி. கருவி –.நெருப்பு, செயலின் பயன் சென்றடையும் இடம் – தேவதத்தன், செயல் புறப்படும் இடம் அல்லது காரணம் – நட்பு, நடைபெறும் இடம் – பானை.”

இவ்வாறு செமான்டிக் நெட் முறையும் நாகேசரின் அலசல் முறையும் ஒன்றாக இருப்பது காட்டப்படுகிறது.

சொல்  வரிசை அமைப்பு

Syntax எனப்படும் சொல் வரிசை முறை ஆங்கிலத்தில் முக்கிய இடம் பெறுகிறது. Rama killed Ravana என்பதில் சொற்களின் இட வரிசையை மாற்றி விட்டால் பொருள் மாறிவிடும் அல்லது பொருள் விளங்காது. மாறாக, தமிழில் ராமன் ராவணனைக் கொன்றான் என்பதை இடம் மாற்றி

ராமன் கொன்றான் ராவணனை என்றோ

ராவணனை ராமன் கொன்றான் என்றோ

கொன்றான் ராமன் ராவணனை என்றோ எழுதினாலும் பொருள் மாறாது.

ஆனால் தமிழில் இது ஓரளவுக்குத்  தான் பொருந்தும். ‘கோசலவேந்தன் ராமன் லங்காதிபனான ராவணனை கூர்மையான அம்பினால் கொன்றான்’ என்ற சொற்றொடரை மேற்கண்டது போல் மாற்றி எழுதினால் பொருள் சிதைந்துவிடும்.

ஆனால் ஸம்ஸ்கிருதத்தில் அடைமொழிகளுக்கும் வேற்றுமை உருபு சேர்க்கப்படுவதால், ‘கோசலவேந்தன் ராமன் லங்காதிபனை ராவணனை கூர்மையானதால் அம்பினால் கொன்றான்’ என்று தான் எழுதவேண்டும். அதனால் சொல் வரிசையை எப்படி மாற்றினாலும் பொருள் மாறுவதில்லை. “கோசலவேந்தன் ராவணனை கூர்மையானதால் கொன்றான் ராமன் லங்காதிபனை அம்பினால்” என்று எழுதினாலும் ஒத்த காரகச் சொற்களை இணைத்துப் பொருள் கொள்வதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

ஒரு சொல் சொற்றொடரில் எத்தகைய  பணி ஆற்றுகிறது என்பதை மாறுபாடு இல்லாமல் கணினி புரிந்து கொள்ள இதுவே சிறந்த வழி என்கிறார் பிரிக்ஸ்.

கூட்டல் கழித்தல் முறை

‘மரத்திலிருந்து இலை விழுகிறது’ என்ற சொற்றொடரை செமான்டிக் நெட் வகையில் அமைத்தால் இலை என்னும் பொருள், இருப்பிடம் 1 இலிருந்து இருப்பிடம் 2க்கு நிலை மாற்றம் அடைவதாகச் சொல்ல வேண்டும்.

இலை என்னும் பொருள், இருப்பிடம் 1 இலிருந்து பிரிகிறது. இருப்பிடம் 2 உடன் சேர்கிறது என்று அலசுகிறார் நாகேசர். இது முதல் இருப்பிடத்தில் கழித்தல், இரண்டாவது இருப்பிடத்தில் கூட்டல் என்னும் கணினி முறைக்கு ஏற்றதாக இருப்பதால் இந்திய முறை செமான்டிக் நெட் முறையினும் மேம்பட்டதாக இருக்கிறது என்பது பிரிக்ஸின் கருத்து.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.