“ஒருவன் ஒருவன் முதலாளி”
–நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்.
கவிஞர் வைரமுத்து ”ஒருவன் ஒருவன் முதலாளி,” என்ற பாடலை 1995 ஆம் ஆண்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த ‘முத்து’ திரைப்படத்திற்காக எழுதினார். ஆஸ்கர் விருது, பத்ம பூஷண் விருது பெற்ற ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்திருந்தார். எஸ். பி. பாலசுப்பிரமணியன் பாடிய பாடலிது.
விதியை மதியால் வெல்லலாம் என்பது எல்லோரும் அறிந்ததே. நமது கவிஞர் வைரமுத்து அவர்கள் ‘விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி” என்று மிக நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார். அதாவது இதன் பொருள், எல்லாம் என் தலைவிதி என்று சோம்பேறியாக இருந்து விடக்கூடாது என்பதுதான். நம் தலை விதியை நாம் தான் தீர்மானிக்கிறோம்.
ஆசையை அறவே ஒழிக்க வேண்டும் என்று இந்திய மண்ணில் பிறந்த புத்தபிரான் கூறினார். இதைத்தான் கவிஞர் அவர்கள் “ஆசை துறந்தால் அகிலம் உனக்கு” என்று கூறுகிறார். சாவி காணாமல் போனால் பூட்டை உடைப்பதற்குச் சுத்தியல், கோடாரி போன்றவை தேவைப்படலாம். ஆனால் பூப்பறிக்கக் கோடாரி தேவை இல்லை. நமது கைகளாலே பறித்து விடலாம்.
நம் + கை = நம்பிக்கை… யானையின் பலம் தும்பிக்கையிலே, மனிதனின் பலம் நம்பிக்கையிலே. மனிதனின் மனம் மண்தான் கடைசியில் ஜெயிக்கும் என்பதை உணர மறுக்கிறது என்று கூறுகிறார். “வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு, வாழ்க்கையை வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு” என்னும் வரி சொல்வது நமது வாழ்க்கையில் துன்பம் ஒரு செயற்கையான நிகழ்வாகும் என்பதை.
இதோ , கவிஞர் வைரமுத்துவின் ”ஒருவன் ஒருவன் முதலாளி” பாடலின் வரிகள் …
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்கக் கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு
சைய்யச் சைய்யார சைய்யார சைய்ய …
சைய்யச் சைய்யார சைய்யார சைய்ய …
மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம்தான் உணர மறுக்கிறது
கையில் கொஞ்சம் காசு இருந்தால்
நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு
வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு
(ஒருவன் ஒருவன் முதலாளி)
வானம் உனக்குப் பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு
வாழச் சொல்லுது இயற்கையடா
வாழ்வில் துன்பம் செயற்கையடா
பறவைகள் என்னைப் பார்க்கும்போது
நலமா நலமா என்கிறது
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும்போது
முத்து முத்து என்கிறதே
இளமை இனிமேல் போகாது
முதுமை எனக்கு வாராது
(ஒருவன் ஒருவன் முதலாளி)
காணொளி: https://youtu.be/NXiD9eGaEEI