பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: கொல்லிமேல் கொட்டு வைத்தார்
அடங்கி யகப்பட வைந்தினைக் காத்துத்
துடங்கிய மூன்றினான் மாண்டீண் – டுடம்பொழியச்
செல்லும்வாய்க் கேமஞ் சிறுகாலைச் செய்யாரே
கொல்லிமேற் கொட்டுவைத் தார்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
அடங்கி, அகப்பட ஐந்தினையும் காத்து,
தொடங்கிய மூன்றினான் மாண்டு, ஈண்டு உடம்பு ஒழிய,
செல்லும் வாய்க்கு ஏமம் சிறுகாலைச் செய்யாரே
கொல்லிமேல் கொட்டுவைத் தார்.
பொருள் விளக்கம்:
அடக்கம் என்னும் பண்பினைக் கடைப்பிடித்து, தனது கட்டுக்குள் அகப்படுமாறு ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி, எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் ஒழுக்கத்துடன் வாழத் துவங்கி மாண்புடன் வாழ்ந்து, இவ்வுலக வாழ்வில் கொண்டுள்ள உடல் அழிந்து மறுமைக்குச் செல்லும் வழிக்குப் பயன் தரும் நன்னெறியைத் தக்க காலத்தில் செய்து வாழாதவர், உயிர் எடுக்கும் நச்சு உணவை நாடுவதற்கு ஒப்பாகும் செயலைச் செய்யும் அறிவிலியாவார்.
பழமொழி சொல்லும் பாடம்: நன்னெறியைக் கடைப்பிடித்து, தக்க அறச்செயல்களைச் செய்யாமல் வாழ்வது அறிவற்ற செயலாகும். மண்ணுலகில் வாழும் முறைப்படி வாழ்க்கையை நடத்துபவர் தெய்வத்திற்கு இணையாக மதிக்கப்படுவார் என இதனைச் சுருக்கமாக,
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (குறள்: 50)
என்று கூறும் வள்ளுவர்,
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. (குறள்: 36)
பின்னர் செய்வோம் என்று காலம் தாழ்த்தாது அறவழியைக் கடைப்பிடித்து ஒருவர் வாழ்ந்தால், அவரது மரணத்திற்குப் பின்னரும் அவர் நிலைத்த புகழுடன் வாழ அது உதவியாக அமையும் என்று மேலும் விளக்குகிறார்.
குறிப்பு:
ஒப்பிட்ட நான்கு* பழமொழி நானூறு உரையாசிரியர்களும் வெவ்வேறு வழியில் பொருள் சொல்லும் பாடலாகவும், பாடபேதங்கள் உள்ள பாடலாகவும் விளங்குவது இந்தப் பழமொழி நானூறு பாடல். ‘செய்யாரே’ என்பது செய்தாரே எனவும். ‘கொல்லி’ என்பது ‘கொள்ளி’ எனவும், ‘கொட்டு வைத்தார்’ என்பது ‘கோட்டு வைத்தார்’ எனவும் பேதங்கள் காணப்படுகின்றன. அத்துடன் கொல்லி என்று (உயிரை) அழிக்கும் செயலாகவும், கொல்லி என்பது கொல்லி மலையாகவும், கொள்ளி என்று நெருப்பாகவும் உரையாசிரியர்களால் பொருள் கொள்ளப்படுகிறது. கொட்டு என்று களைக்கொட்டு போல நிலத்தை அகழப் பயன்படும் கருவியாகவும், கோட்டு என்பது நெற்கூடையாகவும் பொருள் கொள்ளப்படுகிறது. கொண்ட பொருளிற்கேற்ப கொல்லி மலையின் மேல் நெல்லை குமித்து பிற்காலத் தேவைக்கு சேர்த்து வைக்காதவர் எனவும், நெருப்பின் மீது விதை நெல்லைச் சமைத்து உண்ணும் செயலைச் செய்பவர் எனவும், உயிர் கொல்லும் கிழங்கை கொட்டுக் கருவியால் அகழ்ந்து உண்ண முற்படுபவர் எனவும் பலவாறாகப் பொருள் கொள்ளப்படுகிறது. அவ்வாறே துறவற நெறியைக் கடைப்பிடித்தல், சனாதன நெறிப்படி வாழ்தல், மூன்று தீய குணங்களான செருக்கு, சினம், வஞ்சம் என்றவற்றைக் கட்டுப்படுத்துதல் என்று பாடலுக்குப் பலவகையில் உரையாசிரியர்கள் தங்கள் கருத்தினை ஏற்றிப் பொருள் உரைத்துச் செல்கிறார்கள்.
எனவே, பொதுவாக, பிற்கால நலனைக் கருத்தில் கொண்டு தக்க காலத்தில் அறநெறியைக் கடைப்பிடித்து வாழாத ஒருவரது செயலை, விதை நெல்லைச் சமைத்து உண்டுவிடுபவர் செயல் போன்றோ, அல்லது நச்சுத் தன்மை கொண்ட உணவை உண்ண முயல்பவர் செயல் போன்றோ ஒரு அறிவற்ற, தொலைநோக்கற்ற செயலாக இப்பாடல் குறிக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். இக்குழப்பங்களுக்குக் காரணம் இப்பழமொழி வழக்கொழிந்து போனதால் காலமாற்றத்தில் பொருள் புரியாத நிலை ஏற்பட்டிருக்கக் கூடும்.
*1. செல்வக்கேசவராய முதலியார் (1917); 2. நாராயண ஐயங்கார் (1918); 3. ம. இராசமாணிக்கனார் (1948); 4. புலியூர்க் கேசிகன் (2010)