பழமொழி கூறும் பாடம்

– தேமொழி.

பழமொழி: கற்றொறும் தான் கல்லாதவாறு

 

சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதே னென்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித் துழன்றொன் றறியுமேல்
கற்றொறுந்தான் கல்லாத வாறு.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
சொல்தொறும் சோர்வு படுதலால், சோர்வு இன்றிக்
கல்தொறும், ‘கல்லாதேன்’ என்று, வழி இரங்கி,
உற்று ஒன்று சிந்தித்து, உழன்று ஒன்று அறியுமேல்,
கல்தொறும் தான் கல்லாதவாறு.

பொருள் விளக்கம்:
(கற்றறிந்தோருடன் உரையாடுகையில்) செய்துவிடும் சொற்குற்றம் காரணமாகத் தடுமாறினால், அதனால் மனத் தளர்வு கொள்ளாமல், நன்கு கற்றறியும் வரை நான் கல்லாதவரே என்று உணர்ந்து, தனது கல்லாமை நிலைக்காக வருந்தி, மனதை ஒருமைப்படுத்தி கற்பேன் என்ற உறுதிகொண்டு, முயன்று ஒன்றைக் கற்க வேண்டும். அவ்வாறு கற்றறியும் வரை தான் ஒரு கல்லாதவரே என்பதையும் உணர வேண்டும்.

பழமொழி சொல்லும் பாடம்:  கல்வி கற்கும் ஒவ்வொருவரும் தான் அதனைக் கற்றறியும் வரை கல்லாதவரே என்பதை உணர்ந்து கற்கவேண்டும். கற்றறிந்தோருடன் அச்சமின்றி உரையாடத் தனது கல்வியறிவை ஒருவர் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதை வள்ளுவர்,

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு. (குறள்: 725)

கற்றறிந்தோர் அவையில் அச்சமின்றி விவாதிக்க உதவும் வகையில் இலக்கண, இலக்கிய வாதக்கலை ஆகியவற்றைக் கற்றறிந்து திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்கிறார்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க