இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (189)

0

— சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !

அன்பினிய வணக்கங்களுடன் அடுத்தொரு வாரத்தில் உங்களைச் சந்திக்கிறேன். இன்று உலகத்திலே நாமனைவரும் ஒரு இக்கட்டான சூழலிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகம் தனது கால மாற்றங்களில் ஒரு முக்கியமான திருப்பத்தினுள் சென்று கொண்டிருப்பது போன்று ஒரு பிரமை.

எங்கே போகிறோம், நாம் போகும் திசை நாம் பயணிக்க விரும்பிய திசைதானா? என்பது தெரியாமலே ஆற்று வெள்ளத்திலோ, இல்லை பெருங்காற்றினாலோ அடித்துச் செல்லப்படும் ஒரு சருகினைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது எமது வாழ்க்கை.

இனம், மதம், மொழி எனும் அடையாளங்களைத் தக்க வைத்துக் கொள்கிறோம் எனும் வெறியில் மனிதனை மனிதன் காவு கொள்ளும் நிகழ்வுகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் நாமோ கலாச்சாரச் செறிவு கொண்டவர்கள், நாகரீகமடைந்தவர்கள் என்று எம்மை நாமே ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருப்பது போலத் தென்படுகிறது.

தனிமனிதர்களைக் குடும்பமாக்கி, குடும்பங்களைச் சமுதாயமாக்கி, சமுதாயங்களை நகரமாக்கி, நகரங்களையெல்லாம் சேர்த்து நாடுகளாக்கி, நாடுகள் ஒன்றுகூடிய ஒரு ஒப்பில்லாத உலக சமுதாயமாக ஏதோ புதியதோர் உலகை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டே ஆதிமனிதன் வெட்கித் தலைகுனியக்கூடிய வகையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.

ஆமாம்! மக்களுக்காக அரசியல் என்று ஆரம்பித்து இன்று அரசியலுக்காக மக்கள் எனும் நிலைக்கு எம்மை நாமே மாற்றிக் கொண்டு விட்டோம். அரசியல்வாதிகளைக் குறை கூறும் நாம் இவ்வரசியல்வாதிகளை உருவாக்க யார் காரணம் என்பதைச் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. ஆங்கிலத்தில் supply and demand என்பார்கள். அதாவது தேவைகளும் அத்தேவைகளுக்கான பூர்த்திகளும் என்பதே அது.

எமக்குத் தேவைகள் இருப்பதால் அத்தேவைகளை நிறைவேற்றும் பணியைத்தான் அரசியல்வாதிகள் செய்கிறார்கள். அத்தேவைகளை எவ்வழியிலும் பெற்றுக் கொள்ளலாம் எனும் மனோபாவத்திற்கு மனிதன் வந்துவிட்டால் அதைப்பூர்த்தி செய்வதற்கு எவ்வழியையும் கையாளலாம் எனும் மனோநிலைக்கு அதைப்பூர்த்தி செய்பவர்கள் ஏன் வரமாட்டார்கள்?

இன்று எமது பின்புல நாடுகள் மட்டுமல்ல மனித நாகரீகத்திற்கு நாம்தான் எடுத்துக்காட்டு என்று மார்தட்டிக் கொள்ளும் மேலைநாடுகளிலும் கூட மக்கள்-அரசியல்-மக்கள் எனும் இந்த வலயம் தொடர்ந்து ராட்டினம் போலச் சுழலுவதால் இன்றைய காலகட்டம் ஒரு அபாயகரமான சூழலை நோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது எனலாம்.

செவ்வாய்க்கிழமை பெல்ஜியம் நாட்டில் நடந்த நிகழ்வினை எடுத்துக் கொள்ளுங்கள். பயங்கரவாதமா ? தீவிரவாதமா ? அல்லது நியாயமான போராட்டமா? என்று பலர் விவாதிக்கும் அதேசமயம், இத்தகைய ஒரு நிகழ்விற்கு விலையாகக் கொடுக்கப்பட்டது என்ன ? மனிதஉயிர்கள் மட்டுமே என்று சிலர் கூறக்கூடும்.

இல்லை, மனிதநேயத்திற்கே விடப்பட்ட ஒரு சவாலாகவே இதைக் கருத வேண்டும். நிறவேற்றுமையின் அடிப்படையில் மேலைநாடுகளில் வாழும் மக்களின் மனோநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் இத்தகைய நிகழ்வுகள் வகிக்கும் முக்கியத்துவத்தை ஒருவரும் மறந்து விடக்கூடாது.

பல்லினக் கலாச்சாரம் மிகுந்த அமெரிக்க நாட்டிலே இன்று டொனால்ட் ட்ரம்ப் போன்றதொரு தீவிர வலதுசாரிக் கொள்கையும், இனவேற்றுமையைக் கக்கும் கொள்கைகள் கொண்ட ஒருவர் முக்கிய கட்சிகளில் ஒன்றின் பிரதிநிதியாக வேகமாக முன்னேறிச் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு ?

சகிப்புத்தன்மைக்கு முதலிடம் கொடுத்து வந்த, பல்லினக் கலாச்சாரத்திற்கு தம்மை உதாரணமாகக் காட்டும் ஒரு நாடாக விளங்கும் இங்கிலாந்தில் வேற்றின மக்களின் வருகைக்கு எதிர்ப்பும், வேற்றின மக்களின் மீதான காழ்ப்புணர்ச்சியும் அதிகரிப்பதற்கும் யார் பொறுப்பு ?

விசித்திரமான இந்த உலகத்திலே விந்தை மிகுந்த மனிதர் நாம் எம்மை விட விஞ்சியவர்கள் இல்லை எனும் ஓர் நினைப்போடு வாழ்கின்றோமா ? தன்னம்பிக்கை என்பது மனிதனின் மனதில் ஆழமாக வேரூன்றவில்லையானால் அவனால் வாழ்வில் உயர்வடைய முடியாது என்பது யதார்த்தம் எனும் அதேவேளை, அத்தன்னம்பிக்கை எப்போது ஆணவமாக மாறுகிறதோ அப்போது அது அவனின் சரிவிற்கும் வித்திடுகிறது இதுவும் யதார்த்தமே !

இது இன்று நேற்றல்ல அன்றைய மகா அலெக்ஸாண்டர் காலத்திலிருந்து நேற்றைய கேர்னல் கடாபி வரை உண்மையென நிரூபிக்கப் பட்டிருக்கிறது. நாம் பழம்பெருமை பேசிப்பேசி இன்றைய உலகில் வாழ்வது கடினம். அன்றைய பெருமைகளுக்கு காரணமாக இருந்த அதியுயர்ப் பண்புகளை வாழ்வின் வசதிகளுக்காக விற்று விட்டு அன்றைய பெருமைகளை மட்டும் கட்டிக் காத்துக் கொள்வதை எவ்வகையில் யதார்த்தமெனக் கொள்வது ?

trumpஇவ்வகிலத்திலே பல்வேறு மொழிகளையும், பல்வேறு மதங்களையும் பின்பற்றுவது மட்டுமல்ல பல்வேறு நிறங்களிலும் நாம் வலம் வருகிறோம். இத்தகையதோர் உலகிலே அமைதியையும், சமாதானத்தையும் பாதுகாத்து எமது சந்ததி நிம்மதியாக வாழவேண்டுமானால் நாமனைவரும் எமது மதங்களுக்கும், மொழிக்கும் முன்னால் மனிதாபிமானத்தையே முக்கியமாகக் கொள்ள வேண்டும். அது ஒன்றே மனிதனை மனிதனுடன் வேற்றுமையின்றி இணைக்க உதவும் பொதுமொழியாகும்.

இன்று நாம் சர்வதேசரீதியில் எமது கலாச்சாரத்தைக் காப்பது எனும் பெயரில் உயிர்களைக் காவும் கொள்ளும் நிகழ்வானது புலம்பெயர் நாடுகளில் ஓரளவிலாவது தமது கலாச்சாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயலும் எமது சகோதர, சகோதரிகளைத்தான் பாதிக்கப் போகிறது என்பதை மறந்தே இத்தகைய பயங்கரமான நிகழ்வுகளை நடத்துகிறது சில கும்பல்கள்.

எந்த ஒரு மதமோ அன்றி அம்மதத்தின் சின்னங்களாக வழிபடும் ஆதிமூலங்களோ நல்லிணக்கத்தைத் தவிர வேறு எதனையும் வலியுறுத்தவில்லை. அப்படி வலியுறுத்துவதாக மதங்களின் சார்பாக யாராவது போதிப்பார்களேயானால் அவர்கள் அதைத் தமது சுயலாபத்திற்காகவே செய்கிறார்கள்.

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் நியாயமான, நிம்மதியான வாழ்வை நடத்தும் உரிமை உண்டு. அதை மதங்களின் பெயராலோ, அன்றி மொழிகளின் பெயராலோ அன்றிச் சாதியின் பெயராலோ பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.

அன்பின் பாதையில், அறத்தின் துணையோடு அடுத்தவரை எம்மைப் போல் எண்ணும் மனிதாபிமான அடிப்படையில் வாழ்வது ஒன்றே இவ்வுலக தர்மமாகும்.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

படம் உதவி:
http://www.keepcalm-o-matic.co.uk/p/keep-calm-and-share-unity-in-diversity/

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.