ம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா

எல்லாப் புகழும் இறைவனுக்கே
இயன்றவரை உதவிடுவோம் யாவர்க்குமே
நல்லவற்றை நினைத்திடுவோம் நாளெல்லாம்
அல்லவற்றை அகற்றிடுவோம் அனைவருமே
சொல்லுவதை சுவையாகச் சொல்லிடுவோம்
சோர்வின்றி நாளெல்லாம் உழைத்திடுவோம்
கொல்லுகின்ற கொலைவெறியை மறந்திடுவோம்
குணமதனைச் சொத்தாக்கி உயர்ந்திடுவோம் !

எல்லையில்லா ஆனந்தம் ஈந்தளிக்கும்
எல்லையில்லா இறையினைநாம் ஏற்றுநிற்போம்
வல்லமையின் வடிவான இறையினைநாம்
வணங்காமல் இருந்துவிடல் முறையேயன்று
சொல்லளித்துச் சுவையளிக்கும் தூயசக்தி
துதிப்பார்க்கு காட்சிதரும் பெரியசக்தி
எல்லையில்லா உலகினையே படைத்தசக்தி
இறையொன்றே என்றுநாம் நினைப்போமென்றும் !

நினைப்பார்க்கு இறையாகக் காட்சிதந்து
வெறுப்பார்க்கு நம்பிக்கை ஊட்டிநின்று
பொறுப்புடனே வாழ்வதற்கு வழியாய்நிற்கும்
போற்றுகின்ற பொருளே இறைவடிவமாகும்
கருத்துடனே நினைவார்க்கு கருணையாகி
கவலையுடன் இருப்பார்க்கு கையுமாகி
இருக்கின்ற சக்திதான் இறையென்றெண்ணி
இருக்கின்றார் இவ்வுலகில் பலருமின்று !

இறைபற்றிக் கருத்துப்பல இருந்திட்டாலும்
எல்லோரும் இறைபற்றி எண்ணுகின்றார்
எதிர்வாதம் இவ்வுலகில் எழுந்திட்டாலும்
இறைபக்தி அற்றநிலை எங்குமில்லை
இறையிருக்கு இறையிருக்கு எனும்நினைப்பை
எவர்வந்து தடுத்தாலும் பலனேயில்லை
இறையிருந்து நல்லவழி காட்டிநிற்பார்
இறைதொழுது எல்லோரும் இருப்போம்நாளும் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *