ரமணாயனம்…..தொடர்ச்சி….அமுத சுரபியில் வெளிவந்தது…..!

 

தவரச காண்டம்
—————-

சீதைக்(கு) இருப்பிடம் ஸ்ரீராமன் தங்குமிடம்
கீதைக்(கு) இருப்பிடம் கண்ணனே -தாதையும்
கூடியிருந்து அன்பருடன் காகுத்தன் ராமனாய்
தேடிவந்தோர்(கு) ஊட்டினார்கீ தை….(299)

பனியோ, குளிர்மழையோ பல்துலக்கும் நேரம்
தனியேவோர் பாறையில் தாவி -கனிவாய்
செளபாக்கியம்மா கீழிருந்து சாமியைக் காண
தவபாக் கியத்தார் தயவு….(300)

கண்கெட்ட பின்னுமேன் காணவந்தாய் என்னையென
பண்பட்ட சாமி பரிந்திட -உன்பட்டு
பார்வை முதலியார் பாட்டியிவள் மேல்பட்டால்
தீர்வைத் தருமென்றாள் தாய்….(301)

இந்தநேரம் பார்த்திந்த ஏழையிடம் ஏதுமில்லை
வந்தய்யர் நொந்தவண்ணம் வாடிட -‘’இந்தரோஷம்
சுந்தரேசா ஏனுனக்கு உந்தனையே நீயெனக்கு
தந்தபின்னும்’’ என்றார் தவர்….(302)

தேசூரைச் சேர்ந்த துலுக்கப்பெண் தித்திப்பை
ஆசான்தன் அன்னைக்(கு) அளித்திட -ஆசாரம்
போய்விடும் என்றுரைக்க ‘’ பாரபட்சம் உண்டெனில்
போய்விடு’’ என்றார்ஊர் பார்த்து….(303)

அரிசனமோ அன்றி அரசனோ அங்கு
தரிசனம் தந்தோர்க்குத் தன்னை -சரிசமமாய்
காட்டுவார் ஆன்மீக காந்தியாம் கண்களால்
நீட்டுவார்நால் வர்ண நிழல்….
நீட்டுவார்நால் வர்ணக் கொடி….(304)

நேரெதிர் நிற்பவர் நினைவின்றி நெக்குருக
பாரதியார் பாடலைப் பாடிட -நாரதர்கள்
கோளுரைக்க கோபித்துக், கூப்பிட்(டு) அருட்ப்ரகாசம்
பாலுரைத்தார் பாடப் பரிந்து….(305)

ஆணென்ன பெண்னென்ன ஆன்மீகப் பாற்கடலில்
ஜாணென்ன மைலென்ன சாந்தியாம் -ஆன்மாவில்
பேதமற்று போனபின்பு ஏதுபால் ஆதலால்
ஓதலாம் பெண்களும் ஓம்….(306)

வாட்டியொரு வெள்ளைமூ தாட்டியிரு கால்களை
நீட்டிட கோபித்தார் நிர்வாகி -காட்டினார்
சம்மணம் இட்டமர்ந்து, சட்டம் பொதுவென்று
தம்மடக்கு வாதத்தாள் தொட்டு….(307)

வந்தராஜ வாரிசு வந்தனித்தோர் சாதுவிடம்
தந்தகாசு கண்டு துடித்தவர் -எந்தடா
பேறுபாயப் பிச்சை பெறவந்தோன் போட்டயிந்த
நூறுரூபாய் நோட்டு நகைப்பு….(308)

அகப்பட்ட(து) ஆடு அபாயப் பாறை
முகப்புற்ற மாபிளவில் மாட்டி -சுகப்ரும்மம்
அன்றந்த ஆடுபிடித்(து) ஆயுள் அதற்க்களந்தார்
நின்றழும் பெண்ணுக்காய் நேர்ந்து….(309)

விதுரர் குடில்சென்ற விஷ்ணுகண்ணன் கூழை
சிதறாது நாலுகை சேர்த்து -அதரத்தால்
உண்டாற்போல், ஆட்டிடையன் அன்போ(டு) அளித்ததை
மண்டியிட்டு உண்டார் மகான்….(310)

தீண்டாமை காலத்தில் தாயன்புக் கேணியர்
தோண்டியில் தண்ணீர் தளும்பிட -வேண்டிடும்
புல்லறுக்கும் பெண்கள் புறமுதுகில் பெய்வாராம்
கொள்ளிரக்கம் கீழோர்பால் கொண்டு….(311)

தானிருக்க முன்போர் திண்ணையும் கூரையும்
ஊணியப் பாட்டி உகந்ததோசைத் -தீனியின்முன்
தேவா மிருதமும் தலைகுனியும் என்றாராம்
மூவா அவளன்பு மொக்கு….(312)

பட்ஷணம் மேலல்ல பாட்டியிவள் பக்தியின்
லட்ஷணமே அன்பின் லஹரியென்றார் -அஷ்ஷணமே
தின்றாராம் வேகாத தோசையை விண்டுவிண்டு
அன்றாயர் கண்ணனிவர் அன்பு….(313)

அம்பதாம் ஆண்டு அவரருணை வந்தநாள்
ரொம்பதான் பாரபட்சம் அன்பர்கள் -உண்பதில்
சாப்பாடு கொள்வேன் சமபந்தி போஜனமாய்
சாப்பாடு வென்றவரின் சொல்….(314)

போளூர் நடேசன் பவுர்ணமி பட்ஷத்தில்
மாளூர் ஜெயித்தோர் முடியிறக்கும் -நாளில்வெண்
கோவணம் மண்ணமர நாவிதர்நாற் காலியுற
ஓவியம் தீட்டவர்மா ஓடு….(315)

தமையந்தி நேரத்தில் தேடிவரு வோர்க்கும்
சமையல் செய்தன்னம் தூதாய் -அமைய
நளபாகர், சிந்தைசூழ் ‘நான்’சனி ஓட்டி
உளபாகம் தேற்றும் உணவு….(316)

அதிகாலை வேளை அடுப்படியில் வேலை
கொதிசாம்பார் கூட்டு கறிகாய் -புதினாவில்
சட்டினி என்று சமையல் படிதாண்டா
பத்தினி யாம்பகவான் பார்….(317)

தொப்பலாய் வேர்த்த தவத்திற்(கு) இதமாக
சுப்பரா மய்யா விசிறிவிட -செப்பினார்
‘’காற்றுள்ள போதேநீ தூற்றிக்கொள் ஆன்மாவை
மாற்றமில்லா மாற்றதுவே மெய்’’….(318)

இங்கிலாந்து கேரட்டும் இந்தியக் கத்திரியும்
எங்கு விளைந்தாலும் எந்தோட்டம் -பொங்கலை
ஆழிசூழ் பூமியே ஆசிரமத் தோட்டம்தான்
வாழிய ஏக உணர்வு….(or)
வாழிய ஏக வழுத்து….(319)

ஆக்கிய சாம்பாரில் தூக்கல் புளிப்பிருக்க
நாக்கில் ருசிபார்த்த நாயன்மார் -வாக்குரைத்தார்
‘’எத்தைநாம் தின்றால்நம் பித்தம் தெளியுமென்று
ஒத்தைக்கால் நிற்போர்க்கு ஊத்து….(320)
மீதமான மோர்நீரை மூடிடாத சாக்கிட்டு
போதுமென்றார் சமையலுள் பொல்லாப்பு -ஏதுமிதில்
கோபமில்லை சாதுக்கு, கொள்ளுவதும் தள்ளுவதும்
ஆபரண மாட்டல் அவிழ்ப்பு….(321)

கிஷ்கிந்தா காண்டம்
——————–

நோக்கும் இடமெல்லாம் நாமின்றி வேறில்லை
பார்க்கும் எவற்றிலும் பேதமில்லை -காக்கை
கருநாகம், மந்தி, கொடுஞ்சிறுத்தைக் கூட்டம்
குருரமண சீடர் குழு….(322)

முதுகில் குரங்கு ,முழந்தாளில் ஆடு
எதிரில் அணிலெனக்(கு) என்று -புதிராகப்
பார்த்திருக்க ஒவ்வொன்றாய் வேர்க்கடலை ஊட்டியதைப்
பார்த்திருந்தால் பாரதியார் பாட்டு….(323)

மேனியில் நாகம் மெதுவாக ஊர்ந்திடும்
ஞானிமுன் சித்திரமாய் நின்றிடும் -கானின்
புலிவந்து திண்ணையில் பொய்யுறக்கப் பூனையாய்
மெலிதாக சொல்லும் மியாவ்….(324)

அமெரிக்க அன்பர் அகாஸ்டோ கேட்டார்
சமரசம் சாத்தியமா சொல்வீர் -அமரிக்கை
மேவ அமர்ந்த மனிதரே உம்மைப்போல்
தாவும் குரங்குமொன்று தான்….(325)

நாமொழிக்க நாமிங்கு ஞானிதான் என்கிறீர் ?
ஏனுமக்கு சந்தேகம் என்றவர் -நானிருந்தும்
நீரிருந்தும் ஆங்கே நமதுபணி யாளிருந்தும்
ஓரிருப்பு தானிங்(கு) உணர்வு….(326)

விலங்கு, மனித, விருட்ச விதங்கள்
விளங்கும் பலவான வீம்பு -விலங்காய்
ஒருமை உணர்வை ஒதுக்கிடப் பூட்டும்
வெறுமை விடுதலைசா வி….(or)
வெறுமை விடுதலை வீடு….(327)

வாடும் பயிர்கண்டு வாடிய வள்ளலார்
பாடுமப் பண்பே பவித்திரம் -ஓடும்
உயிரடையும் ஓர்நாள் ஒருமைக் கடலை
தயிர்கடைய வெண்ணெய்த் திரள்….(328)

மந்திமொட்டைப் பையனை மற்ற குரங்குகள்
தொந்திரவு செய்ய தவம்செய்து -வந்தவனைக்
கண்டால் மிரண்டு கவிகள் நடுங்கியதாம்
உண்டாம் அதற்க்கும் உணர்வு….(329)

பட்சணம் தன்னை பறிகொடுத்த வர்க்குமந்தி
லட்சணம் சொன்னார் லயித்துமகான் -லட்சிய
நோக்கிது போலவே நோக்குமிருந் தால்ஞானம்
பார்க்கலாம் தாவிப் பறித்து….(330)

நொண்டிக் குரங்குவெகு நட்பாம் ரமணருக்கு
சண்டித் தனம்செய்ய சாப்பிட -கண்டித்த
வர்கரத்தைப் பாய்ந்து வாயால் கடித்திட
தற்பரம் தண்டனை தீர்ப்பு….(331)
தீர்ப்பாக ஓரிருநாள் பார்க்கா திருந்திட
ஆர்பாட் டமடங்கி அம்மந்தி -பார்ப்போர்
வியக்கக் குழைந்தவர் வீராப் படங்க
புயத்தில் அமர்ந்தது போய்….(332)

பணியாய் மனிதர்க்கு போன குரங்கு
இனிவனம் சென்றால் எதிர்ப்பு -எனினும்
ஆரண்யம் சென்றரசன் ஆனவன் வந்தனன்
காருண்யர் விஸ்வாசம் கொண்டு….(333)

கொண்ட மனையாள்கள் குட்டிகள் சூழ்ந்திட
நொண்டி ரமண தரிசனம் -கொண்டதைக்
கண்டவர்கள், ராமனை கிஷ்கிந்தா காண்டத்தில்
கண்டபலன் கொண்டார் களித்து….(334)

கல்லெறிந்தோர் அன்பர் குரங்கொன்றைக் கொன்றிட
சொல்லறியா சோகத்தில் சூழ்ந்தயினம் -சொல்லியதாம்
போன சிதையை பகவானின் முன்வைத்து
ஆன கதையை அழுது….(335)

அழுத குரங்குகள் ஆறுதல் பெற்று
தொழுது வணங்கித் திரும்ப -பழுது
விளைவித்த அன்பர் விழுந்தாராம் நோயில்
கிளைசுற்றம் கேட்டது காப்பு….(336)

காப்புத் திருநீறாய் பாப்பார சாமியிவர்
சாப்பாட் டடுப்படி சாம்பலிட -ஆ!பார்
அசலான அற்புதம் முசல்மான் அன்பரெழுந்(து)
அசலாமா லேகும் அழைப்பு….(337)

தாகம் தவமாக ,தண்ணீர் ரமணராக
காகம் கிணற்றங்கால் கொம்பில் -யாகமாய்
மூன்றுநாள் மூச்சடக்க மோட்சம் அளித்தெடுத்தார்
சான்றாய் சமாதியும் செய்து….(338)

செய்யுமோ மெய்த்தவம் சிந்தை அதற்குண்டோ
உய்யுமோ மோட்ச உலகுக்கு -அய்யமாய்
சொன்னவர்க்கு சொன்னார் சிறகுடைய காக்கைக்கும்
தன்னான்மா பொன்னான்மா தான்….(339)

அன்பர் குளிக்கும் அடவிக்கு நீரருந்த
வன்புலி வந்திட வாஞ்சையாய் -நண்பரே
இன்றுபோய் நாளைவா என்றதும் அச்சிறுத்தை
கன்றுபோல் சென்றதாம் கான்….(340)

வாதுமைக் கண்களால் வாத்சல்ய மாய்ரமண
சாதுவைப் பார்க்குமாம் சாப்பிடும் -போதினில்
கோவிந்த லஷ்மி கடாட்சத்தால் ஆசிரமம்
ஓவென்(று) உயர்ந்ததென்பார் தேவு….(341)

ஆவென்று வாய்பிளந்து ஆசிரமம் பார்த்திருக்க
ஆவன்று தேவன் அனுக்ரகத்தால் -சாவென்ற
சூட்சுமம் தாண்டி சுயநினை வோடுமுக்தி
மோட்சம் புகுந்ததுடல் மாய்த்து….(342)

ஆயி சமாதிக்(கு) அருகே பசுவுக்கு
கோயில் எழுப்பினார் குருநாதர் -ஆயினும்
ஏனைய பேருக்காய் ஆனை கஜேந்திரன்
வானை அடைந்ததாய் வாக்கு….(343)

உருவுனார் துண்டை உருண்டதாம் முட்டை
குருகுருவிக் குஞ்சின் கதிக்காய் -பரிவுடன்
ஈரத்துணியில் முட்டையிட்டு ஈன்றவள் போல்காத்து
வாரம் முழுக்கஅதை வேவு….(344))

வேவுக்கு காரணம் வேதனையும், தாய்க்குருவி
கோவிக்கும் என்ற கிலியுமாம் -சாவிற்கே
அஞ்சாத அஞ்சலவர் அஞ்சினார், அஞ்சாம்நாள்
குஞ்சான போது குதிப்பு….(345)

குதித்தன்பர் மாதவனைக் கூப்பிட்டுக் குஞ்சை
இதைப்பார் உயிரோ(டு) இருக்கு -பதித்தார்பின்
அக்குஞ்சை ஆன்ம அருணைசேய் நெஞ்சத்தில்
அக்கினிக்குஞ் சான தது….(346)

வேட்டுவப் பையன் வறுமை களைந்தவனால்
காட்டுப் புறாகொண்ட குற்றுயிரை -நீட்டுவித்தார்
பச்சை திராட்சை பிழிந்ததன்மேல் பத்திட்டு
இச்செய்கை யாறரிவார் இங்கு….(347)

மரமண்டை தொண்டர்கள் மாமரத்தை தாக்கி
கரம்கொண்ட கொம்பினால் கொய்ய -பரம்பார்த்து
‘’போதும் நிறுத்தும் பழத்துக்கு நன்றியாய்
தீதிழைத்தல் பாவம் திருந்து’’….(348)

எச்சம்மா நேர்ந்தாளாம் லட்சம் இலைபறித்து
அர்ச்சனை சாமிக்(கு) அளிப்பதாய் -அச்சச்சோ
சொல்லி விளித்தாராம் சாமிக்(கு) உனதுடலை
கிள்ளிக் கொடுப்பாயோ கூறு….(349)

கூறியது கேட்ட கிழவி முழித்தாளாம்
மீறியதைச் சொன்னார் மகரிஷி -பாரினில்
புல்லிலை காய்கனி பூச்சி புழுவினில்
உள்ளவனே உள்ளானுன் னுள்….(350)

ஆசிரம காண்டம்
—————–

வெப்பம் குடிதண்ணீர் சொற்பம், விருபாட்ஷி
அப்பனைக் காண்போர்க்(கு) அவஸ்தையாம் -தப்பிட
மாசிரமப் பட்டு மகானுக்காய் கந்தனென்போன்
ஆசிரமம் கட்டினான் அங்கு….(219)

கண்ணை மறைக்கின்ற கள்ளிப் புதரகற்றி
தென்னை மரம்வைத்து தோட்டமிட்டான் -மண்ணிலவன்
ராமன் குகனாய் ரமணருக்கு வந்தகந்தன்
நாமம் நினைவில் நிலைப்பு….(220)

கந்தன் குடிலுக்கு வந்தாறாம் ஆண்டினில்
தன்தாய் தளர்ந்திடத் தாயுமானார் -தந்தார்
நடுபுகுந்த கூற்றை நகர்ந்திடக் கூறி
மடிசுமந்து மோட்ச மகிழ்வு….(221)

கொப்பளமாய்த் தோன்றும்நான் சொப்பனமே ஆராய
அப்புளுகன் ஆட்டம் அடங்குமாம் -அப்பளப்
பாட்டினால் அன்னைக்கு ஊட்டினார் ஞானச்சாப்
பாட்டினை சூடாய்ப் பொரித்து….(222)

விலாநோக தன்னை வயிற்றில் சுமந்தோள்
உலாவந்த தேகம் உதிர்ந்திட -பலாக்கொத்தில்
மூர்த்தியாய் மாபலி தீர்த்தக் கரைதனில்
சேர்த்தார் சமாதி சமைத்து….(223)

உன்னை வெறுக்கலாம் தன்னை மறக்கலாம்
அன்னை துறத்தல் அவமன்றோ -கண்ணை
இமைகள் அணைக்க நமையாள் உறக்கம்
சுமையா சுவர்கமா சொல்….(224)

அராப்பள்ளி மாலன் சிராப்பள்ளி ஈசன்
இராப்பகல் நூற்போன் இணைந்த -இராப்பள்ளி
நாதன்தன் தாய்க்களித்தான் பாதுகாவ லாய்மாத்ரு
பூதனை லிங்கம் பிடித்து….(225)

தாயார் சமாதி தரிசிக்க வந்தவர்க்கு
ஆயாச மாலும் அடியார்ள் -பாயாசம்
நோக்கி எறும்புகள் போக்காய்ப் படையெடுக்க
ஆக்கினார் ஆசிரமம் அங்கு….(226)

எந்தசக்தி என்னை எமனெதிர்க்க வைத்ததோ
அந்தசக்தி தானிங்(கு) அழைத்தது -வந்தபின்
அங்கிங்(கு) ஆசிரமம் ஆனாற்போல் ஆனதென்றார்
தங்குமிடம் தாயார் தயவு….(227)

ஓலை சமாதியின் ஓரமாய்க் கட்டிய
சூளையில் வேகாத செங்கல்லால் -ஆலயச்
சுற்றுச் சுவரெழுப்பக் கற்றுக் கொடுத்தாராம்
முற்றும் துறந்த முனி….(or)
அற்றைக்கு ஞானச்சித் தாள்….(228)

ஆகமச் சொற்படி அடிக்கல் , புனிதநீர்
சாகர கங்கை அபிஷேகம் -ஸ்ரீகரர்
நேராய் நுழைந்து நிறுவிஸ்ரீ சக்கிரத்தை
ஆராதித் தாரங்(கு) அமர்ந்து….(229)

ஆயிரம் ஆலயம் ஆயினும் அண்ணலின்
தாயிற் சிறந்ததோர் கோயில்லிலை -தூயயிச்
சேதியைச் சாதகர் சாட்விக் எனப்பட்ட
சாதரு ணாசலா சொல்….(230)

ஆசான் அனுமதிக்க ஆசிரம அன்பர்கள்
காசோலை தந்திட கட்டுமானம் -கோசாலை
சான்றோர்க்கு நூற்சாலை சாதக சாதுக்கள்
போன்றோர் புகலிடம் பின்பு….(231)
விருந்து சமைக்க விருந்தினர் தங்க
விரிந்திட ஆசிரமம் விண்ணாய் -நிரஞ்சனா
நந்தர் பொறுப்பேற்று நிர்வாகம் செய்யநிச்
சிந்தையாய் நாதர் சதம்….(232)

முகவையார் கண்ண முருகனார் பிள்ளை
அகவையில் ஆசு கவியாய் -பகவனை
தேனிக்(கு) இணையாய் திருவாச கித்தானார்
மாணிக்க வாசக மாய்….(233)

மணமாலை தந்த க்ஷரமண மாலை
மனமாயை கொண்டுழலும் மாந்தர் -குணம்மாய்க்கும்
நானாரை தன்மருக நானார்க்(கு) அளித்தமாம
னானாரால் மாற்றம் நிகழ்வு….(234)

எதானாலும் என்றும் யதார்த்தத்தில் நீந்தும்
சதாசர்வ சாந்த சிவனை -கதாநாத
காந்தனைக் கண்ட கனிமம் முருகனார்
நான்தனைத் வென்றதன் நாள்….(235)

கையிலென்ன காயிதம் கேட்ட ரமணரிடம்
அய்யநின் பேரில் அடியேனின் -செய்யுளென்ற
ஆசுகவி வாக்கினை அங்கீ கரித்தவரை
ஆசிகவி ஆக்கினார் அன்று….(236)

மாசிகரம் மாதுமையாள் பூசிக்கும் ஆசுரரை
வாசகர்தம் பாசுரத்தால் விட்டன்று -ஈசன்
பெருந்துறை வந்தாற்போல் பேதையிவன் பாக்காய்
இருந்தயிறை யேரமணா இன்று….(237)

திருவெம்பா வையைப்போல் தீந்தமிழில் ஞான
குருவெம்பா வையை முருகாநீ -தரவுன்பால்
மாணிக்க வாசகரின் மேதமை உள்ளதென்றார்
சீனிக்(கு) எறும்பால் சிறப்பு….(238)

சாதுவாய் வந்த சிவனை அறியாது
வேதியர் அன்றானை வன்புலியை -மோதவிட
தோலுரித்த ஈசன் திருவாய் உபதேசம்
மாலறுக்கும் உந்தியார் நூல்….(239)

பகவான் திருவாய் புலர்ந்த அமுதை
அகவாய் மலர்ந்து அருந்தி -முகவை
முருகனார் செய்யுள் முகமாய்க் கொடுத்தார்
குருவா சகக்கோவை காண்….(240)

‘’அய்யே அதிசுலபம் ஆன்மவித்தை’’ பல்லவியை
மெய்யன் முருகனார் முன்மொழிய -அய்யன்
சரணமைந்து சொன்னார் சரளமாய் அன்று
வருணன் ரமணகவி வாக்கு….(242)

அன்பர்கள் கேள்விக்கு அய்யன் பதில்களை
மண்பெற கோர்த்த முருகனார் -தன்பதிவில்
எள்ளதில் எண்ணையாய் ஏற்றிக் கொடுத்ததே
‘’உள்ளது நாற்பதின்’’ உரு….(243)

உள்ளதை உள்ளபடி உள்ளது நாற்பதை
உள்ளம் அறிதற்க்(கு) உவமானம் -சுள்ளிக்
கழியால் கடலைக் கடத்தல், ரமண
வழிநாற் பதுஅவ் வகை….(244)

ரமண வழி நாற்பது வெண்பாக்கள்….245 to 284….!
——————————————————___________________

ரமண வழி வெண்பாக்கள்
——————————-

உடலுயிர் நானா ? உணர்ச்சிகள் நானா ?
நடைமுறை வாழ்க்கையில் நானார் ? -திடமாய்க்
குடைந்த மனமாம் குகைதனில் ஆன்மா
கடைந்த நவநீதம் காண்….(1)….3-12-2008

மருந்துண்ணும் வேளை குரங்கெண்ணம் கொள்ளும்
விருந்துண்ணச் சொன்னால் விலகிப் -புறம்சென்று
இஷ்டமில்லா தோரிடம் ஏந்திப் பிழைத்திடும்
துஷ்டநெஞ்சை தூர விரட்டு….(2)….3-12-2008

ஆழ்ந்த உறக்க மதிலே அமைதியாய்
வாழ்ந்து களிப்பவன் யாரென்று -தாழ்ந்து
அகங்காரம் விட்டந்த ஆன்மனைத் தேடி
சுகம்காணும் நாள்வரை சுற்று….(3)….3-12-2008

எமனை எதிர்த்து மரணம் அளித்த
ரமண ரகசியம் கற்றோர் -அமண
உலகிலே ஆன்ம உடையணிந்து வாழ்வர்
அலகிலா இன்பம் அடைந்து….(4)….3-12-2008

நோய்நாட வேண்டாம் அதன்முதல் நாடவேண்டாம்
ஆய்வாம் ரமண வழி ஆன்மீகம் -ஓய்வாம்
மருந்தால் உடலின் மயக்கம் விலக்கும்
விருந்தாம் உணர்வை வடித்து….(5)….3-12-2008

சொப்பனத்தில் கண்ட சொகுசான தூக்கமது
அப்படியே போச்சு அடரமணா ! -அப்புறம்
எப்படியோ என்னை எவனோ எழுப்பினான்
இப்படித் தானா இறப்பு….? (6)….3-12-2008

காட்சிபல கண்டேன் கண்டதெல்லாம் இல்லையென்று
சாட்சி சிரிக்கின்றான் சொல்ரமணா ! -ஆட்சி
அவனிடமா என்னிடமா ஆராயும் சக்தி
எவனிடம் உண்டென்(று) இயம்பு….(7)….3-12-2008

ஈரம் தெரிகிறது ஏதோ இருக்கின்ற
சாரம் அறிந்தேன் சரிரமணா -தீரம்
அளித்திடு ஆழத்தில் ஆன்மாவில் மூழ்கி
குளித்திட நானும் களித்து….(8)….3-12-2008

சர்க்கரை தேடிச் சுவைக்கும் எறும்பதின்
அக்கறை பொங்க அடரமணா !- அக்கரை
சேர்ந்திட வேண்டும் சுமையாம் மனக்கழுதை
தேய்ந்திடச் செய்கட் டெறும்பு….(9)….4-12-2008

தானே கழுத்தில் தரித்தப்பொன் மாலையை
காணோமென் றாளாம் கதைரமணா !-வீணே
புதையலைத் தேடிடும் பூதமே மாயை
அதையழித்தல் ஆன்ம அடைவு….(10)….4-12-2008

வினையால் அணையும் பெயரும் புகழும்
எனையாள லாமோ ரமணா ! -தனியாய்
அணையாத ஆன்ம அகலாய் ஜொலிக்க
நினைவாகும் நீயே நெருப்பு….(11)….4-12-2008

நால்வர் பொறுப்பேற்று நாமே தலைமுதல்
கால்வரை தூக்கி கனக்கின்றோம் -மால்வினை
தேடல் விசாரத்தில் கூடிக் களிக்கும்முன்
ஊடல் உணர்வே உடல்….(12)….5-12-2008

எடுப்பார்கைப் பிள்ளை எதிர்ப்போர்க்குத் தொல்லை
எடுத்துரைக்கப் போனால் இல்லை -கொடுப்பாய்
திருடன் மனக்கையில் தேடலாம் சாவி
திருடன் புருடனாய்த் தேர்வு (OR) தீர்வு….(13)….5-12-2008

உச்சரிக்கும் மந்திரம் உற்பத்தி ஆகுமிடம்
எச்சரிக்கை யோடுபார்க்க ஏகாந்தம் -நச்சரிப்பாய்
நானில்லை என்ன நமதில்லை என்னபின்
ஜாண்பிள்ளை ஆன்மா ஜனிப்பு….(14)….6-12-2008

பார்ப்பான் அகத்தில் புலித்தோல் பசுவாக
ஆர்ப்பரிக்கும் ஆணவத்துள் ஆன்மனாய் -தோற்பான்
அவனே ஜெயிப்பான் அவனே சமர்த்த
சிவனே அருணா சலத்து….(15)….5-12-2008

கயமை அகந்தை கடமை பலனை
நயமுறக் கூறி மயக்கும் -சுயமாய்
இருந்த இடத்தில் பொருந்தி இருந்து
அருந்து அருணா சலம் (OR) ஜலம்….(16)….5-12-2008

முப்பதில் வாழ்க்கையில் மூப்பதில் மூழ்கையில்
அப்பவும் இப்பவும் ஆசைதான் -தப்பிட
மேனி நமதென்ற மாய மனப்படி
ஏணியில் ஏறா(து) இறங்கு (OR) இரு….(17)….6-12-2008

உட்புகும் உள்ளம் உணரும் உவகையை
கட்புலனை கைகோர்க்கும் காயமாம் -மட்பாண்டம்
நோயில் ஒடுங்கிபின் பாயில் முடங்கிடும்
தாயில்லா சேயாய்த் தவித்து….(18)….6-12-2008

சயனத்தில் தோன்றுகின்ற சொப்பனத்தை மூடும்
நயனத்தால் காண்கின்ற நானார் -அயனொத்து
தூக்கம் கனவு விழிப்பைப் படைத்திடும்
போக்கே மனதின் பழுது….(19)….6-12-2008

ஆவிற்(கு) ஒருகோயில் ஆயிக்(கு) ஒருகோயில்
காவிக்குள் வாழ்ந்த கிரஹஸ்த்தா -சாவிற்கே
சஞ்சலம் தந்த சமர்த்த ரமணரே
தஞ்சமுன் பாதம் தயவு….(20)….7-12-2008

வானகம் வீழ்ந்தாலும் வையகம் ஓய்ந்தாலும்
நானகம் தோயநவ நீதமாம் -கானகம்
போகாதே கண்மூடி சாகா வரம்காண
வாகா னதாம்ரமண வழி….(21)….9-12-2008

நந்த வனம்மாயை நாலாறு மாதம்பொய்
வந்ததோர் ஆண்டி வெறும்புளுகு -விந்தையை
வீணே ரசிக்கும் விளையாட்டு ஓயமனம்
காணோம் எனஓடும் காண்….(22)….9-12-2008

கண்டது காயாம் கவர்ந்தற்று , கைகூப்பி
கண்டதை விண்ட கனிரமணர் -உண்டதில்
சோறுண்டு மெல்ல சுகப்பானை விட்டான்ம
ஊரொன்றில் உய்யும் உயிர்….(23)….22-12-2008

வினையளவு கர்மம் திணையளவு தேடல்
பனையளவு ஆனந்த பானம் -முனையளவு
ஊசி நிலத்திலும் உல்லாச வாசியாம்
வாசி ரமண வழி….(24)….23-12-2008

கள்ளதில் போதையாய் கண்ணனில் ராதையாய்
உள்ளதே ஆன்மா உணர்ந்திடு -உள்ளது
நாற்பது சொன்ன நமது ரமணனை
ஏற்பவர்(கு) இல்லை இறப்பு….(25)….2-1-2009

உடலுறவு கொண்டு உணர்வை மறைக்கும்
மடமனதின் மாயா வினோதம் -அடஅதை
அப்படியே ஏற்று அருணா சலரமணன்
சொற்படி செல்ல சுகம்….(26)….2-1-2009

காண்போன் அழிய ககனம் ஒழிந்திடும்
நான்போய் உதிக்கும் நமச்சிவாயம் -ஆண்பெண்
அபேதம் அதையுணர்ந்து ஆன்ம வெளியில்
உபாதிகள் அற்று உலவு….(27)….2-1-2009

எதிராக வந்த எமனை எதிர்த்து
பதினாறில் வென்ற பகவான் -பதிலாக
”நானார்” வினாவை நமக்களித்தார் நாமுய்ய
தேனாறான் மாவில் திளைத்து….(28)….3-1-2009

அய்யே அதிசுலப ஆன்ம விசாரணையை
கையில் கனியாய் கவர்ந்தவராம் -அய்யன்
ரமண வழியில் ரகசியங்கள் இல்லை
நமனே துணையாம் நமக்கு….(29)….5-1-2009

உடலதற்(கு) இல்லை உபாதிகள் ,ஆன்ம
கடலதற்(கு) இல்லை கரைகள் -வடிவெடுத்து
வந்துவந்து போகும் வினையுரு வானவன்
தொந்தரவு நெஞ்சைத் துரத்து….(30)….6-1-2009

மானாபி மானம் மதிநுட்பம் மாட்சிமைகள்
நானாகி வந்த நயவஞ்சம் -தானாகி
தன்னந் தனியாய் தவத்தில் திளைப்பவர்கு
எண்ணம் எதிலே எதற்கு….(31)….7-1-2009

மனோமயம் ஆளும் மமதை அரசன்
கனாநனா காணும் குடிகள் -வினாவிட
பூஜ்ஜியம் தோன்றிடும் ராஜ்ஜியம் ஆகிடும்
”நான்”ஜெயம் ஆன்மா நிகழ்வு….(32)….7-1-2009

குப்பன்தன் சொப்பனத்தில் சுப்பனாய் மாறுகிறான்
குப்பென வேர்த்து விழிக்கின்றான் -தப்பிதில்
குப்பனாய் சுப்பனாய் கோலங்கொள் நானைநீ
துப்புர வாக்கத் தெளிவு….(33)….9-1-2009

தீதாளும் நெஞ்சு திரையிட்டு மூடிடும்
பாதாள லிங்க பரவசத்தை -வேதாந்தம்
செப்பரிய ஆன்மாவை சோதித்(து) அளித்தனன்
அப்பளப் பாட்டில் அடைத்து….(34)….10-1-2009

ரமண ஜயந்தி அன்று எழுதியது
—————————————

அருணா சலமமர்ந்த ஆதிரைக்குப் பின்னே
மறுநாள் பிறந்த முனியே -திருநாள்
ஜயந்தியில் மீண்டும் ஜகத்தின் மரண
பயந்தீ அணைக்கப் பிற….(35)….11-1-2009

முற்றும் உணர முழுதும் துறயிதில்
சற்று குறைந்தாலும் சம்சாரம் -பற்றில்
ஒருகாலும், சத்தில் ஒருகாலும் வைப்போர்
ஒருகாலும் காணார் ஒளி….(36)….17-1-2009

வெள்ளித் திரைக்கு வரலாமோ வெட்கம்தான்
கள்ளத் தனமான காட்சிகளால் -உள்ளத்
திரையதில் தோன்றி மறைகின்ற(து) எல்லாம்
கரைவந்து மாயும் திரை….(37)….17-1-2009

தானாய்ப் படர்க்கையாம் தன்மையின் முன்நிலை
நானாய் ஒளிந்திடும் நம்மகந்தை -தூணாம்
அதனை உதைக்க அரியுரு வான
முதலாய் உதிக்கும் முடிவு….(38)….21-1-2009

ஊணறியா, ஓடும் உயிரறியா, உள்ளுறையும்
கோனறியா வண்ணமுன் கண்மூடும் -நானறிய
வெள்ளமாய் வெண்பா வடித்த ரமணரின்
உள்ளது நாற்ப(து) உரைத்து….(39)….21-1-2009

முகமது தேடும் மலைபோல ஆன்ம
அகமதில் வாழும் அருணை -புகலாய்
இருந்த இடத்தில் இறைவனைக் காண
விரைந்து வருமாம் விழிப்பு….(40)….21-1-2009

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *