சுவடிப் பாதுகாப்பில் அறிவியல் நெறி

2

முனைவர் த. ஆதித்தன்,

இணைப்பேராசிரியர்,

அரிய கையெழுத்துச் சுவடித் துறை,

தமிழ்ப் பல்கலைக்கழகம்,

தஞ்சாவூர் – 613 010

இன்று கிடைக்கும் பழஞ்சுவடிகள் நம் முன்னோர்களின் அறிவுச் செல்வங்களாகும்.  அக்கால மக்களின் நாகரிகம், பழக்கவழக்கங்கள் முதலானவற்றை அறிந்து கொள்வதற்கு அவை பெரிதும் உதவுகின்றன.  அத்தகைய சிறப்பு வாய்ந்த சுவடிகளைக் காலம் காலமாகப் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாத்து வருகிறோம்.

இயற்கை முறையில் பல்வேறு வகையான பூச்சி எதிர்ப்புப் பொருள்களைப் பயன்படுத்தி சுவடிகளை முன்னோர்கள் பாதுகாத்து வந்தனர்.  அறிவியல் வளர்ச்சியின் விளைவாக இன்று சுவடிப் பாதுகாப்பு முறைகளிலும் பல்வேறு உத்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளோம்.  அவற்றைக் குறித்து எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம் எனலாம்.  அறிவியல் வழிப் பாதுகாப்பு குறித்து, “அறிவியல் வளர்ச்சியினால் அறிவுப் பூர்வமாகச் சிந்தித்துப் பல்வேறு கண்டுபிடிப்புகளிலும் நவீன கருவிகள் மற்றும் வேதிப்பொருள்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் பாதுகாப்பு முறைகளை அறிவியல் வழிப் பாதுகாப்பு என்பர்.  அதாவது, அறிவியல் வழிப் பாதுகாப்பு என்பது அறிவியல் வளர்ச்சியினால் கண்டறிந்துள்ள பல்வேறு வேதிப்பொருள்களைச் சுவடிப் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்துதல் மற்றும் பாதுகாப்புச் சாதனங்களைத் தேர்வு செய்து சுவடிகளின் தன்மை, பாதிக்கும் காரணிகள், பயன்படுத்தும் பொருள்களினால் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றை ஆய்வு செய்து தேவையான முறைகளை, காலமுறையில் பயன்படுத்துதல் ஆகும்.”1  என்கிறார் மோ.கோ. கோவைமணி.

அறிவியல் முறையினில் பல்வேறு வகையான இரசாயனங்களைப் பயன்படுத்தி வருகிறோம்.  சுவடிகளின் வைப்பிடங்கள், சுத்தம் செய்யும் முறை, ஒன்றோடொன்று ஒட்டியச் சுவடிகளைப் பரித்தெடுத்தல், சுவடிகளின் உறுதித்தன்மையை மேம்படுத்துதல் என அனைத்து வகையான பாதுகாப்பு முறைகளலும் இந்த இரசாயனங்களின் பங்கு முதன்மையிடம் பெறுகிறது.

அறிவியல் முறையில் சுவடிகள் வைக்கும் அறையானது தட்பவெட்ப நிலை மாறுபாடுகளால் எளிதில் பாதிக்கப்படாதவாறு அமைதல் அவசியம்.  அதே போன்று சுவடிகளை மர அலமாரிகளில் வைத்துப் பாதுகாப்பது உகந்தது என்கின்றனர் சுவடியலாளர்கள்.  ஏனெனில் உலோகங்களால் ஆன அலமாரிகளில் வைக்கும்போது அவை எளிதில் வேதிவினைகளுக்கு ஆட்படக்கூடும்.  உதாரணமாக இரும்பு அலமாரிகள் எளிதில் துருபிடிக்கக் கூடியவை.  அவற்றில் ஏற்படும் துரு சுவடிகளையும் பாதிக்கும். சிதைவடையச் செய்யும்.  எனவே இரும்பு போன்ற ஆக்கிசிஜனேற்றத்தால் எளிதில் பாதிப்படையும் உலோகங்களால் ஆன அலமாரிகளைப் பயன்படுத்துவது அறிவியல் நெறியின்படி உகந்ததல்ல என்கின்றனர்.

சுவடிகளை அறிவியல் முறையில் தூய்மை செய்வதற்கு எத்தில் ஆல்கஹால், கிளிசரின், அசிட்டோன் அல்லது கார்பன் டெட்ரா குளோரைடு ஆகியன பயன்படுத்தப்படுகின்றன.

சுற்றுப்புற மாசினால் படியும் தூசானது சுவடிகளைப் பெரிதும் பாதிக்கின்றன.  அவற்றை முதலில் பஞ்சு அல்லது மென்மையான துணிகளால் துடைத்துச் சுத்தம் செய்ய வேண்டும்.  அதன்பின்பும் இருக்கக்கூடிய கறைகளைப் போக்க இரசாயனப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.  இது குறித்து, “கறைகள் மற்றும் பூச்சிகளின் எச்சங்கள் இருப்பின் அவற்றைச் சுத்தமான நீருடன் சம அளவில் எத்தில் ஆல்கஹால் சேர்த்துச் சுத்தம் செய்யலாம்.  வேதிமக் குணம் கொண்ட படிவுகளை வேதிமக் கரைசலான அசிட்டோன் அல்லது கார்பன் டெட்ரா குளோரைடை குறைவான அளவு பயன்படுத்திச் சுத்தம் செய்யலாம்.

அதிகமாக வேதிமக் கரைசலைப் பயன்படுத்தினால் சுவடிகளில் உள்ள சேர்ப்புப் பொருள்கள் கரைந்து சுவடியின் உறுதித்தன்மை இழக்க நேரிடும்.  ஓலைகளைக் கிளிசரின் மற்றும் சுத்தமான  நீர் 1:10 விகிதத்திலும் அல்லது கிளிசரின் மற்றும் எத்தில் ஆல்கஹால் (1:1)  விகிதத்திலும் கலந்து கொண்டு சுத்தம் செய்யலாம்”என்கிறார்.  மோ.கோ. கோவைமணி.

இவ்வாறு சுத்தம் செய்யப்பட்டச் சுவடிகள் நீண்ட காலம் பிரித்துப் பார்க்கப் படாமல் கட்டி வைத்தப்படியே இருந்தாலும் பாதிப்புக்குள்ளாகும்.  அவற்றில் பூஞ்சைக் காளான், புத்தகப்புழு போன்றவை உருவாகும்.  படியும் தூசு ஈரப்பதத்தோடு சேரும்போதும் சுவடிகளின் மீது பூசப்படும் மேற்பூச்சுத் தைலங்கள் மிகுதியாக இருப்பின் அவற்றிலும் பூஞ்சை எளிதில் ஏற்படும்.  இதனால் சுவடிகளின் ஓலைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும்.  இச்சுவடிகளைப் பிரித்தெடுப்பதற்குப் பொதுவாக இருமுறைகள் பின்பற்றப்படுகின்றன.  ஒன்று குளிரூட்டுவது மற்றொன்று நீராவியல் வெப்பமூட்டிப் பிரிப்பது.  இவ்விரு முறைகளிலும் புத்தகப்புழு,  பூஞ்சைக் காளான் ஆகியவை அழிந்துவிடும்.  ப. பெருமாள் பிரித்தெடுக்கும் முறை  குறித்து,

“ஒட்டியுள்ள சுவடிகளைக் குளிரூட்டப்பட்ட அறையில் 24 மணிநேரம் வைத்துப் பிரிக்கலாம்.  மேலும் நீராவியில் 15 முதல் 30 நிமிடங்கள் வைத்து ஒட்டியுள்ள ஓலைச் சுவடிகளைப் பிரித்தெடுக்கும் முறையும் பயன்படுத்தப்படுகிறது.  மேலை நாடுகளில் குளிர்ந்த அல்லது வெப்பமான நீராவி வெளிவிடும் இயந்திரத்திலிருந்து நீராவியைப் பாய்ச்சி பிரிக்கப்படுகிறது.  இம்முறைகளில் பிரித்தெடுக்கச் சிரமம் இருப்பின் பாதுகாப்புத் தைலம் அல்லது சுத்தமான நீருடன் சம அளவு எத்தில் ஆல்காஹால் சேர்த்துப் பூசிப் பரித்தெடுக்கலாம்” 3 என்கிறார்.

சுவடிகளைப் பராமரிக்க எண்ணெய் பூசப்படும்பொழுது ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கு லெமன்கிராஸ் தைலம், பாலி எதிலின் கிளைகால் ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்து பயன்படுத்தலாம் என்பர்.  இவ் இரசாயனக் கலவையைப் பயன்படுத்தும்போது சிதிலமான சுவடிகள் கூட விரைவாக உறுதியடைந்து வளைந்து கொடுக்கும் என்கின்றனர் சுவடியியலாளர்கள்.

மரபுவழிப் பாதுகாப்பில் கிழிந்தஓலைகளை நூல்கொண்டு தைப்பதுண்டு. அவ்வாறு செய்யும்பொழுது சுவடிகளில் சிறுபிளவோ, வேறு பாதிப்புகளோ ஏற்படுவதுண்டு  எனவே இதற்கு மாற்றாக முதலில் பசை நாடா(செல்லோடேப்) கொண்டு ஒட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்துள்ளனர்.  ஆனால் நாளடைவில் பசை நாடாவில் உள்ள பசை அதனைத் தாண்டி பக்கத்தில் ஊடுருவி ஒட்டப்பட்ட ஓலைகளிலும் ஒட்டுவதுண்டு.  அந்நிலையில் உள்ள ஓலைகளைப் பிரித்தெடுக்கும்போது அவை உடைந்துவிடுவதுண்டு.  எனவே இம்முறையும் கைவிடப்பட்டுள்ளது.  தற்பொழுது பயன்பாட்டில் உள்ள முறைகள் குறித்து மோ.கோ.கோவைமணி, “உடைந்த ஓலைகளை ஒட்டுவதற்குப் புதிய ஓலைகளின் பொடியுடன் பி.வி.ஏ. எமல்ஸன் சேர்த்து ஒட்டும் முறையை லக்னோ தேசிய பாதுகாப்பு ஆய்வகம் பயிற்றுவிக்கிறது.  இம்முறையில் ஒட்டப்பட்ட சுவடிகள் நல்ல நிலையில் வளையும் தன்மை கொண்டுள்ளது.  மேலை நாடுகளில் உடைந்த ஓலைகளைச் சேர்த்து மெல்லிய டிசு காகிதத்தின் நார்ப்பொருட்களைக் கொண்டு ஒட்டப்படுகிறது.

மிகவும் சிதிலமான சுவடிகளைப் பாதுகாக்க ஓலைச்சுவடிகளின் இருபுறமும் செல்லுலோஸ் அசிடேட் தாள் மற்றும் ஜப்பான் டிசுத்தாள் கொண்டும், சீபான் துணி, மெதில் செல்லுலோஸ் பசை கொண்டும் லேமினேசன் செய்யப்படுகின்றது.  மேலை நாடுகளில் சிதிலமான சுவடிகளைப் பாதுகாக்கவும், கையாளவும் தற்பொழுது என்கேப்புசுலேசன் என்ற முறை பயன்படுத்தப்படுகிறது.”4 என்கிறார்.

இவ்வாறு அறிவியல் நெறிகளின் அடிப்படையில் புதிய பராமரிப்பு முறைகள் பலவற்றை சுவடியியலாளர்கள் பின்பற்றி வருகின்றனர்.  இரசாயனப் பொருள்களைப் பயன்படுத்துவதுதான் அறிவியல் நெறி என்னும் கருத்து பொதுவாக நிலவி வருகிறது.  அது ஏற்புடையதல்ல.  இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு வழிவழியாக நாம் பயன்படுத்தி வந்த முறைகளை அறிவியல் முறைகளுக்கு உட்படுத்த வேண்டும்.  அவற்றை எந்த விகிதாச்சாரத்தில் பயன்படுத்தினால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பனவற்றை அறிவியல் அணுகுமுறையில் துல்லியமாக ஆராய்தல் வேண்டும்.  அவ்வாறு முறையாக ஆராயும்பொழுது பல புதிய உத்திகளும் அதன் காப்புரிமைகளும் கூட நம்மவர்களுக்குக் கிடைக்கக் கூடும்.  மேலும் பாதுகாப்பு நெறிமுறைகளில் புதியமைல் கல்லையும் நாம் எட்டமுடியும்.

சான்றெண் விளக்கம்:

 1. கோவை மணி , மோ.கோ., ஓலைச்சுவடியியல், பாமொழி பதிப்பகம், பாரதிநகர், தமிழ்ப் பல்கலைக்கழக அஞ்சல், தஞ்சாவூர் – 613 010., இரண்டாம் பதிப்பு – செப்டம்பர் 2016, பக்கம் எண்:160
 2. மேலது, பக்கம் எண்:161
 3. பெருமாள்.ப., சுவடிப்பாதுகாப்பு வரலாறு, கோவிலூர் மடாலயம், கோவிலூர் – 630 307., இரண்டாம் பதிப்பு- மார்ச் 2014., பக்கம் எண்:138
 4. கோவை மணி , மோ.கோ., ஓலைச்சுவடியியல், பாமொழி பதிப்பகம், பாரதிநகர், தமிழ்ப் பல்கலைக்கழக அஞ்சல், தஞ்சாவூர் – 613 010., இரண்டாம் பதிப்பு – செப்டம்பர் 2016, பக்கம் எண்:162

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “சுவடிப் பாதுகாப்பில் அறிவியல் நெறி

 1. சுவடிப் பாதுகாப்பில் பயன்படுத்தப்படும் நல்நெறி முறைகளை விளக்கி எழுதியுள்ளமை மிகவும் பாராட்டுக்குரியது. ஆய்வாளர்கள் படிக்க வேண்டியக் கட்டுரை.
  நன்றி
  முனைவர் ஆ.ராஜா
  தமிழ்ப் பல்கலைக்கழகம்

 2. சுவடிகளைப் பாதுகாக்கும் முறைகள் பற்றிய ஆய்வு மிகவும் அருமை.
  தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *