சென்னை சேவாலயாவுக்கு “சுவாமி விவேகானந்தர் விருது” – செய்திகள்
சென்னை: அடையாறு, காந்தி நகர் பகுதியில் இயங்கி வரும் ‘சேவாலயா’ என்ற அமைப்பானது தேசிய அளவில் சுவாமி விவேகானந்தர் விருது வென்றுள்ளது. இது பற்றி விரிவாக:
”சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட, நான்கு நல்ல தொண்டு நிறுவனங்களுக்கு, ‘சுவாமி விவேகானந்தர் விருது’ வழங்கப்படுகிறது” என மத்திய அமைச்சர் (இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத்துறை) திரு.அஜய் மக்கான் அவர்கள், அக்டோபர் மாதம் 23ம் தேதி புதுடில்லி ஸ்ரீராம கிருஷ்ண மடத்தில், நடைபெற்ற விழாவில் பேசினார். நான்கு தொண்டு நிறுவனங்களில் ஒன்றாக ’சேவாலயா’ நிறுவனத்திற்கு சுவாமி விவேகானந்தர் விருதையும் வழங்கி கவுரவித்தார்.
சேவாலயாவின் நிறுவனர் தலைவர் திரு. வி. முரளிதரன் அவர்கள் இது குறித்து பேசியபோது :“நான் சிறுவனாக இருந்தபோது, சுவாமி விவேகானந்தர் என்னுடைய வழிகாட்டுதலாக இருந்தார். மேலும் என்னுடைய மேடைப்பேச்சை ராமகிருஷ்ணர் மடத்தில்தான் கற்றேன். உலகளவில் சுவாமிஜியினுடைய செய்தியானது, பல லட்சம் மக்களைக் கவர்ந்துள்ளது; அது மட்டுமல்ல, பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கும் அவரது செய்தியானது, தூண்டுகோலாக அமைந்துள்ளது என்பதில் ஐயமில்லை!” என்று கூறினார்.
“இந்தியாவில் சுமார் 12,00,000 தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஏறக்குறைய ஐம்பது சதவிகிதம், ’லெட்டர் பேடு’ அளவிலேயே நின்றுவிடுகின்றன. மற்றும் பல பெயருக்காகவும், சுய இலாபத்திற்காகவும் செயல்படுகின்றன. மிகச்சில தொண்டு நிறுவனங்களே, ஆன்மீக அடித்தளத்தோடு, உண்மையான சமூகத் தொண்டாற்றி, நீண்ட காலம் நிலைத்து நிற்கின்றன. நாடு முழுவதிலிருந்தும் எங்களுக்குக் கிடைக்கப்பெற்ற அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை, சிறந்த வல்லுநர்களைக் கொண்டு, நீண்ட பரிசீலணைக்குப் பின்னர், ’சேவாலயா’ உட்பட நான்கு தொண்டு நிறுவனங்களை தேசீய அளவில் தேர்ந்தெடுத்தோம்” என பேலூர் ஸ்ரீராம கிருஷ்ண மடத்தின் உதவித் தலைவர் சுவாமி விஸ்வாத்மானந்தஜி விருது வழங்கும் விழாவில் தெரிவித்தார்.
சேவாலயாவின் நிறுவனரும் மற்றும் நிர்வாக அறங்காவலருமான திரு.வி.முரளிதரன் அவர்கள், சேவாலயா நிறுவனமானது எவ்வாறெல்லாம் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் செய்திகளால் தூண்டப்பட்டு, செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது, என்பதை கணினி நிகழ்த்துதல் (Computer Presentation) மூலம் பகிர்ந்துகொண்டார்.
புதுடில்லி ஸ்ரீராம கிருஷ்ண மடத்தின் செயலர் சுவாமி சாந்தமானந்தாஜி, விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்க, ஜெய்ப்பூர் ஸ்ரீராம கிருஷ்ண மடத்தின் செயலர் சுவாமி ஹிரிதானந்தாஜி நன்றி நவின்றார்.
சேவாலயாவின் அலுவலகம் மட்டும் தான் காந்தி நகரில் உள்ளது. அதன் சேவைகள் முழுவதும் திருநின்றவூர் அருகில் உள்ள கசவு என்னும் ஊரில் தான். சுற்றியுள்ள கிராம மாணவர்கள் பயன் பெறும் வகையில் அங்கு ஒரு மேல்நிலைப்பள்ளியும், முதியோர் இல்லமும் செயல்படுகின்றன. எந்தவிதக் கட்டணமுமின்றி கல்வி அளிக்கப்படுகிறது. ஆதரவற்ற மாணவர்களுக்கு இலவச விடுதியும் உள்ளது. அங்குள்ள ஊழியர்களும் தன்னலமின்றித் தொண்டு செய்வது பாராட்டுக்குரியது.
“சேவை” என்ற பெயரில் அபரீதமாக விளம்பரம் செய்துகொள்ளும் இந்த காலத்தில், இந்த சேவாலயாவின் சேவை மிகவும் சிறப்பாக உள்ளது என்பது நான் திருநின்றவூர் அருகில் உள்ள கிராமத்துக்கு நேரில் சென்று கண்ட உண்மை. இந்த “சேவாலயா” நிறுவனத்துக்கு “சுவாமி விவேகானந்தா விருது” கிடைத்தது மிகவும் பொருத்தமானதே. இதன் அறங்காவலர் திரு.முரளிதரன் அவர்களின் எளிய வாழ்க்கை அனைவருக்கும் ஒரு பாடமாகவே அமையும். இங்கு பணி புரியும் ஊழியர்கள் அனைவரும் சேவை மனப்பான்மையுடன்தான் செயல்படுகிறார்கள். ஒரு விருது பொருத்தமான இடத்துக்கு வழங்கும் போது அந்த விருதும் பெருமைபடுகிறது….! அந்த விருதுக்கான செயல்களும் பெருமைப்படுகிறது…..! அந்த செயல்களை செய்யும் ஊழியர்களுக்கும் உற்சாகமான பெருமையாகும். அனைவருக்கும் பாராட்டுக்கள்.