Tag: சுரேஜமீ

  • வள்ளுவ மாலை

    -சுரேஜமீ​​

    பிறப்பின் வ​ந்தது ​ஊ​ழெனின்​ ​ஓடிடும்​
    ​நிற்கத் ​திருக்குறள் சொல்வழி​ – தீர்வும்
    உள​திங்கே நல்கிப் பயனுற வாழ்வின்           valluvar
    நிலையோங்கி நிம்மதி காண்!​     

    ஓதும் மறைபுரியார் வாழ்வின் நிறையறியார்
    போதும் மனமுடைச் சிந்தையில் ஏகத்
    திருக்குறள் போலொருநூல் ஏதுண்டு? – ஞாலம்
    ஒருகுரலாய்ச் சிந்திக்கச் சொல்!

    வெப்பம் தணிக்கக் கோடையில் நீரருவி
    தெப்பம் நனைப்பதுபோல் வாழ்வின் குறைபோக்க
    நுட்பம் பலதரும் மெய்நூல் – திருக்குறள்
    திட்பமாய் நல்கிடப் பேறு!

    ஊர்சொலக் கேளார் உறவுசொல வேண்டார்
    நூல்சொலும் வாரீர் வருந்துன்பம் போக்குமோர்
    வழியும் மாந்தர்க்கு மண்ணில் – திருக்குறள்
    வாழிய வகையறிந்தேல் நன்கு!

    வாழ்வின் முடிவுதான் தேடியலை மாந்தர்க்கு
    ஊழ்வினை அறுத்து உத்தமர்செய் – வெல்லும்
    திருக்குறள்  சூழும் மாற்றி நிலைதரும்
    நல்வினை ஏற்றும் பார்!

     

    Share
  • சிகரம் நோக்கி … (5)

    சுரேஜமீ

    peak11

    வந்த நாள் முதல் இந்த நாள் வரை
    வானம் மாறவில்லை; வான்
    மதியும் மீனும் கடல் காற்றும்
    மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
    நதியும் மாறவில்லை!

    மனிதன் மாறிவிட்டான்!! – கண்ணதாசன்

    கவிஞனின் சிந்தனைத் தெளிவு, கற்றவர் அறிந்திட்டால், வாழும் மண்ணே சொர்க்கம் எனலாம். அறிய மறுக்கிறோமா அல்ல தன் தேவை எதுவரினும், தரணியைக் கெடுத்தேனும் பெற்றிட எண்ணும் அறியாமை நிழல் நம்மைத் தடுக்கிறதா? விடை சொல்ல மறுக்கும் ஒவ்வொரு கணமும், இப்புவியில் ஏதேனும் ஓரிடத்தில் ஒரு சீற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

    இதுவரை நாம்

    சென்ற கட்டுரையின் தொடர்ச்சியாக, இப்புவியின் இருப்பைக் கெடுக்கும் இயற்கையின் தலையாய பிரச்சினைகளைப் பட்டியலிட்டு அலசுவதில், முதல் நான்கு நிலைகளாக,

    1. மக்கள் தொகை
    2. காலநிலை மாறுபாடுகள்
    3. பல்லுயிர்ப் பெருக்கங்களின் இழப்புகள்
    4. வேதிப்பொருட்களின் சுழற்சி

    பற்றி சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டோம். மற்ற காரணிகளைப் பற்றி சுருக்கமாக இந்தக் கட்டுரையில், உங்கள் சிந்தனைக்குச் சில செய்திகளை இட்டுச் செல்ல விரும்புகிறேன்.

    5. தண்ணீரின் தேவை

    இந்த உலகம் மூன்றில் ஒரு பங்கு நீரால் சூழப்பட்டு இருந்தாலும், மக்களுக்குத் தேவையான சுத்தமான அல்லது சுத்தீகரிக்கப்பட்ட குடிநீரின் தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒன்றும் வியப்பான செய்தி அல்ல. உலக ஆராய்ச்சி வல்லுநர்கள் விடுக்கும் எச்சரிக்கை என்ன தெரியுமா? உலக மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை என்பதும், இதே நிலை நீடித்தால், மிகக் கடுமையான விளைவுகளைச் சந்தித்து, மூன்றில் இரண்டு பங்கு மக்கள் குடிநீருக்காக தன்னை வருத்தும் நிலையும், அது சார்ந்த சமூகக் குற்றங்களும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

    நண்பர்களே, இது ஏதோ படித்துவிட்டு நகர்ந்து செல்லக் கூடிய செய்தி அல்ல! சற்று யோசியுங்கள். என்றாவது எதிர்பார்த்து இருப்போமா நாம் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் காலத்தை? உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? வளைகுடா நாடுகளில் குடிநீரின் விலை திரவ எரிபொருளை விட (Petrol) அதிகம் என்பது!

    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவன் ஒரு குறளில் தண்ணீரின் இன்றியமையாமையை இப்படிக் கூறுகிறான்!

    துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை!

    விவசாயிகள் உணவுப் பொருள் உற்பத்தி செய்வதற்காக மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஒரு நல்ல உணவாகவும் பயன்படுகிறது வான் மழை என்று சொன்னால், அதை நாம் சிறப்பாகச் சேமிக்க வேண்டாமா? இதன் உட்பொருளே, நாம் நீரைச் சேமிக்க வேண்டும் என்பதுதான்!

    வான்மழை நமக்கு மட்டுமல்ல! புவியில் உருவாகும் அனைத்து உயிரினங்கள் மற்றும் தாவரங்களுக்கும் இன்றியமையாதது என்று சொன்னால், நாம் இனி ஒரு கணம் கூட மரங்களை வெட்டுவதற்கும்,, நீர்நிலைகளை மூடுவதற்கும், இயற்கையை அழிப்பதற்கும் அனுமதிக்கக் கூடாது என முடிவெடுத்து, குறைந்த பட்சம், இருக்கும் இயறகையைக் காப்பாற்றி, நீரின் அவசியத்தையும், அதை எப்படிச் சேமிப்பது என்பதோடு மட்டும் நின்று விடாமல், உபயோகிக்கப் பட்ட கழிவு நீரைக்கூட, தாவரங்களுக்குச் சென்றடையும் வகையில் செய்யவேண்டும்.

    முடிந்த வரை ஒவ்வொரு மனிதனும், எங்கெங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் மரம் நட்டு, பாதுகாத்து, வான்மழை செழிக்க வகை செய்ய வேண்டும்!

    6. கடல்நீர் அமிலமயமாதல்

    அபரிமிதமான தொழிற்சாலைகளின் வளர்ச்சியும், அதன் விளைவாக வெளியாகும் கரியமில வாயுவின் அதிகப்படியான உற்பத்தியும், கடல்வாழ் உயிரினங்களைக் கிட்டத்தட்ட அதன் அரிச்சுவடு கூட இல்லாமல், அழித்திடும் நிலையை உருவாக்கி இருக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு இணையாக அதன் தேவைகளை நிறைவு செய்வதற்கு, தொழிற்சாலைகள் தேவை என்பதில் இரு கருத்து இல்லை. ஆனால், அவைகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் பற்றிய அறிவுபூர்வமான சிந்தனை தேவை என்பதையும் நாம் அறிய வேண்டும்.

    குறிப்பாக, கரியமில வாயுவின் 25% கடலில் கலப்பதாகவும், அதன் காரணமாக ஏற்படும் அமிலங்கள், கடந்த 250 வருடங்களில் சுமார் 30% கடற்பரப்பில் அமிலத் தன்மையை உருவாக்கி இருக்கிறதென்றும், இன்னும் நூறு வருடங்களில், இது ஐந்து மடங்கு அதிகரிக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    7. மாசு படிதல் (Pollution)

    ஒரு நல்ல வெள்ளை நிறக் கைக்குட்டையைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டுக்கு அருகில் இருக்கும் சாலையில், ஒரு இரண்டு நிமிடம் நடந்து செல்லுங்கள். அதன்பின்னர், உங்கள் முகத்தைக் கைக்குட்டையால் துடையுங்கள். இப்போது, கைக்குட்டையின் நிறத்தைப் பாருங்கள். என்ன புரிகிறதா? நிறம் மாறி இருக்கிறதா? இந்த நிறம் மாற்றத்திற்கான காரணத்தை என்றாவது சிந்தித்து இருக்கிறோமா? எதைக் கொடுத்தாவது, நம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்ற கட்டாயம், நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து, குடிக்கும் நீர் வரை இந்த அண்டத்தை மாசு படித்தியிருக்கிறதென்றால், அதற்கு முழுக்காரணமும்; நம் நவீன வாழ்க்கை முறைதான் என்றால் நீங்கள் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். நாம் உபயோகப்படுத்தும் வீட்டு சாதனங்கள் தொடங்கி, வாகனத்திற்கு உபயோகிக்கும் திரவ எரிபொருட்கள், கனரக தாதுக்கள், நெகிழிப் பொருட்கள் மற்றும் செயற்கை இழைபொருட்கள், நம் சுற்றுச் சூழலில், அளவுக்கதிகமான நச்சுத்தன்மையை ஏற்படுத்தி, நம் வாழ்விற்கு சவாலாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இயற்கை வளத்தையும் அழிக்கிறது.

    என்றைக்கு மனதளவில் நாம் தெளிந்த சிந்தனையோடு, இயற்கையின் வரத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறோமோ, அன்றுதான் நம்மால், ஒரு சுகாதாரமான, இயற்கையோடு ஒன்றிய வாழ்விற்கு, நம்மைத் தயார்படுத்தி, மனித வாழ்வின் பயனை நுகரமுடியும் என்பதை நாம் உணரவேண்டும்.

    நண்பர்களே நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், நமக்கோ இயற்கைக்கோ ஊறு நேராமல் இருந்தால், அதுதான், இந்த உலகிற்கு நாம் செய்யும் ஒப்பற்ற உதவி என்பதோடு மட்டுமல்ல, வளரும் சமுதாயத்திற்கு நாம் காட்டும் வழி என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது! இயற்கைப் பிரச்சினைகளைப் பற்றிய இந்த சிந்தனைகள், எவ்வளவு உணர்ச்சி பூர்வமானவை என்பதை நான் அறிவேன்.

    இணைந்த கைகளாக இருப்போமேயானால், இந்த பூமி நம்மை வாழ்த்தும்!

    தொடர்ந்து சிந்திப்போம்…..சிகரம் நோக்கி!

    Share
  • வள்ளுவ மாலை

    -சுரேஜமீ

    மானம்போய் வாழும் நிலைவேண்டார் மாந்தர்
    மனமேகும் என்றும் திருக்குறளை – போகும்
    நிலம்யாவும் சொல்லும் மறையொத்த நீதியும்      valluvar
    நேர்நின்று வெற்றி காண!

    கூட்டல் அறிந்து போக்கும் கழித்தலும்
    வேட்டல் பெருக்கி வாழ்தல் வகுக்கும்
    யாத்தல் திருக்குறளைப் போற்றிட – வந்திடும்
    சேர்த்தல் நிலைக்கும் மேல்!

    தெய்வம் மறுத்தாலும் தேடின வந்திடுமே
    செய்யும் வினையாவும் வள்ளுவம் ஏகிட
    பெய்யும் மழையொப்பத் தானாய் வரும்நலம்
    மெய்யிது காண்பீர் பணிந்து!

    வையத்து நோயெலாம் உள்ளத்தின் பாவமாம்
    எண்ணத்தில் போரிடும் தூயவை வென்றிட
    ஏற்றத்தில் வைத்துத் திருக்குறள் பற்றிட
    தோன்றும் புகழுடை வாழ்வு!

    தர்மமும் தானமும் பற்றிட வாழ்வினில்
    பெற்றவர் உற்றவர் நன்மையும் கண்டிடத்
    தூயநற் சிந்தனை தூண்டிடும் நல்லதை
    வள்ளுவம் வழிநின்று செய்!

     

    Share
  • வள்ளுவ மாலை

    சுரேஜமீ

    குறளென்ப சான்றோரே நீதிவழி நிற்றற்கு
    வேறொத்த நூலில்லை வாழ்வின் வகையறிய
    தேடிப்படி ஏட்டினிலே பேர்சொல்ல – ஊர்சொல்ல  valluvar
    வேண்டுமெனில் ஓதுகுறள் நன்று!

    நன்றுணர் ஏகும்செயல் யாவும் துணைநிற்க
    நானிலம் கண்டதோர் நூலாம் – திருக்குறள்
    நாடிடத் தீதறுகுணம் பெற்றுக் கலைமகள்
    நாளும் இருப்பாள் நின்று!

    யுகம்பல காணும் மொழிதாங்கி வந்ததோர்
    மூலிகையாம் வாழும்கலை சொல்லும் – திருக்குறள்
    சாதிக்கும் வாழ்க்கைக்குப் போதித்து வாய்ப்பளிக்கும்
    சோதித்துப் பார்க்கத் தெளிந்து!

    நில்லாத நீரோடைத் தாண்டும் தடைபோலச்
    சொல்லாடும் வேதம் திருக்குறளே மாந்தர்க்கு
    வேண்டுவர் வென்றிட உலகத்தில் யாவையும்
    தோண்டிட ஊறும் அறிவு!

    இச்சையால் பெற்றிடும் இன்பம் சிலநாளே
    பிச்சையோ வாழ்வில் கொடிது – செவ்வனே
    ஊனைத் திருத்தி உள்ளம் வழியேகத்
    தூணாம் திருக்குறள் கேள்!

     

    Share
  • முகநூல் பெற்ற வரம்!

    -சுரேஜமீ

    முன்னம் பெற்றவளோ
    பின்னம் பிறப்பானோ
    இன்னம் இவனன்றி                                      facebook
    யாவரும் உறவின்றிப்
    போவதும் எங்கென்பேன்?

    பிறந்தால் இவன்போல்
    அற்றேல் பிறந்தென்ன?
    உற்றார் தாண்டி
    உலகம் உறவுகொள்ள
    உற்றான் இவன்!

    வரும் எனக் காத்திருந்து
    வந்ததல்ல வரம்
    வல்லமை தாங்கிநின்று
    வாழ்த்துக்கள் குவிந்ததனால்
    வருமானம் கொட்டிநிற்க
    வானெட்டும் புகழின்று!

    தேர்வில் வெற்றிபெற்றால்
    தேடிடும் வேலையிங்கே
    வாழ்க்கைத் தேடலில்
    வாகை சூட
    வாழ்வின் பயனதன்றோ
    வள்ளுவம் சொன்ன வழி!

    வாழ்க நீ மார்க்
    வாழ்வே வணங்க உன்னை
    வாருங்கள் தலைமுறையே
    வாழ்க்கையைக் கற்றிடவே
    வாழ்ந்திட இவன்போல
    வாழ்தலின் பொருள் விளங்க!

    வாழி நீ மார்க் சுக்கெர்பெர்க்
    வாழி நீ பல்லாண்டு
    வாழிய தமிழ் போல!!

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

     

    Share
  • சிகரம் நோக்கி … (4)

    சுரேஜமீ

    peak1
    இயற்கை நம் கண் முன்னே நிற்கும் மிகப் பெரிய சவால் மட்டுமல்ல; நம்மைச் செதுக்கி சீர்தூக்கும் ஒப்பற்ற ஆசிரியர் என்று கூடச் சொல்லலாம். ஆக்கத்திற்கும் அழிவிற்கும் சான்றாக இருப்பது. கடந்த இரு நூற்றாண்டுகள் மனிதனின் அறிவு வளர்ச்சியைப் பன்மடங்கு உயர்த்தி இருந்தாலும், உலகம் தொடங்கிய காலத்திலிருந்து தன்னை இயக்கிக் கொண்டிருக்கும் இயற்கைக்கு எதிராக, இன்னமும் நாம் ஒரு அடி கூட எடுத்து வைக்க இயலவில்லை என்றால்,

    இது எதை உணர்த்துகிறது?

    இயற்கைச் சீற்றத்தால் எத்தனையோ பேரழிவுகள் நடந்திருக்கின்றன. எத்தனை பூகம்பங்கள்? சுனாமிகள்? வருமுன் எச்சரிக்கத் தெரிந்த நமக்கு, வருவதைத் தடுக்க ஒருக்காலும் இயலவில்லை. ஆக, நாம் அறிந்து கொள்ள வேண்டியது,

    இயற்கையோடு கூடுமான அளவு ஒத்து வாழ வேண்டும் எனக் கற்றுக் கொள்வதும்,
    இந்த பூமி வெப்பமடையாமலும், மாசு படியாமலும் பார்த்துக் கொள்வதும்தான்!

    இந்த உலகத்திற்கு மனித குலம் செய்யும் ஒப்பற்ற கைமாறு என்று உணர வேண்டும்.

    மனம் போன போக்கில் வாழ நினைக்கும் நாம் என்றாவது, இயற்கை இப்படி வாழந்தால் என்ன நடக்கும் என்பதை யோசித்திருக்கிறோமா? இயற்கைக்கு ஏது மனம் என்ற எண்ணம் வருகிறதோ? இயற்கையின் மணம் தவறும் செயலுக்குத் துணைபோகும் ஒவ்வொரு நிமிடமும், இயற்கையின் மனத்தைச் சீண்டுகிறோம் என்ற சிந்தனைத் தெளிவை உங்கள் முன் வைக்க எண்ணுகிறேன்.

    இயற்கையின் முதல் பத்து தலையாய பிரச்சினைகள் என்ன என்பதை உங்களுக்காகப் பட்டியலிடுகிறேன்;

    1. மக்கள் தொகை

    சமீபத்திய கணக்குப்படி (2015), உலக மக்கள் தொகை சற்றேறக் குறைய 731 கோடி. நம் இந்தியாவில் மட்டும், 126 கோடி என்றால் , நம் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 17% சதவிகிதத்திற்கும் சற்று கூடுதலாக இருக்கிறது.

    சற்று யோசியுங்கள் நண்பர்களே. மனிதன் வாழ்வதற்கு உணவும், உடுக்க உடையும் மிகவும் இன்றியமையாதது. இதை எங்கிருந்து நாம் பெறுகிறோம்? நம்மை இத்தகைய அபரிமிதமான வளர்ச்சிக்கும், தேவைகளுக்கும் தயார்படுத்தி இருக்கிறோமா என்பதே கேள்வி?

    2. காலநிலை மாறுபடுதல்

    மிகவும் வேதனை தரக்கூடிய செய்தி இதுவென்றால், நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். நம்முடைய முன்னேற்றப் பாதையில், நாம் கண்ட வளர்ச்சியெல்லாம், இந்த பூமித்தாயின் நலிவில்தான் என்றால், வளர்ச்சி என்று மார் தட்டிக் கொள்வதில் என்ன மகிழ்ச்சி இருக்கிறது?

    இன்றைக்குப் புவியியல் வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? இன்றைய நிலையில், எல்லையை மீறி நாம் செய்த செயல்களால், சுற்றுச் சூழல் பல்வேறு எதிர்மறையான கால மாற்றங்களுக்கு உள்ளாகிவிட்டது. ஆகையால், நம் கையை மீறிப் போன இந்த நிலையைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், வேண்டுமானால், கூடுதல் செய்வதைத் தவிர்ப்பதும், பூமியைப் பிளந்து கிடைக்கும் ஆற்றல் மற்றும் படிம எரிபொருள்களுக்கு மாற்றாக, இயற்கையோடு ஒத்த நிலையில் உள்ள எரிசக்திகளை உருவாக்குவதும்தான் என்று.

    3. பல்லுயிர் பெருக்கங்களின் இழப்புகள்

    இதைப் பற்றி எவரேனும் சிந்தித்ததுண்டா? இதை உங்களுக்கு எளிதில் புரிய வைக்க வேண்டுமெனில், ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன். கிராமங்களில் கிணறு பார்த்திருப்பீர்கள். கிணற்றை உற்று நோக்கினால், கிணற்றில் நீர் மட்டுமா இருக்கும்? சில பச்சைத் தாவரங்கள் இருக்கும். சில தவளை போன்ற உயிரினங்கள் இருக்கும். நுண்ணுயிரிகள் பல இருக்கும். இவைகளெல்லாம் இயற்கையின் தேவைகள் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதற்கான ஒப்பீடுகள் மட்டுமன்று; மாறாக நம் வாழ்விற்குத் தேவையான சத்துள்ள குடிநீருக்கும் ஆதாரமாக இருக்கிறது என்றும் சொல்லலாம். இது ஒரு புவி சார்ந்த வாழ்வியல் சுற்று.
    ஒரு கிணற்றுக்கே இவ்வளவு என்றால், சற்று உங்கள் சிந்தனை வட்டத்தைப் பெரியதாக்கி, உங்கள் ஊரில் உள்ள மற்ற நீர் நிலைகள், தாவரங்கள், இயற்கை வளங்கள் என எண்ணிப் பார்த்தால் புரியும், இந்த பூமியில் அழிந்து வரும் உயிரினங்களின் அடிச்சுவடுகள்!

    4. வேதிப்பொருட்களின் சுழற்சி

    நாம் இதுகாறும் கரும்புகை மட்டுமே சூழலை மாசுபடுத்துவதாக எண்ணுகிறோம். ஆனால், பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் முதலிய வேதிப்பொருட்களின் சுழற்சிக்கும் இதில் முக்கியப் பங்குண்டு என அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
    உணவு மற்றும் வேறு தேவைகளுக்காக ஓராண்டுக்கு ஏறக்குறைய 120 லட்சம் நைட்ரஜன் மூலக்கூறுகள் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப் படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இதனால் ஏற்படும் பாதிப்புகள் எண்ணிலடங்கா! சுவாசிப்பதற்குத் தேவையான ஆக்சிஜனை உண்டு பண்ணக் கூடிய பல நுண்ணிய கடல் தாவரங்கள் அழிவதோடு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த சுற்றுச் சூழலும் மாசு படுகிறது என்பது நம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று!

    நாம் பெறக்கூடிய ஒவ்வொரு வெற்றியும், நம் சமூகத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடியதாக இருக்க வேண்டுமே ஒழிய, ஒரு தனி மனித சுயநல நோக்காக இருக்கக்கூடாது என்பதில்தான், நம் வரலாறு அடங்கியிருக்கிறது. வரும் தலைமுறைகள் முன் இருக்கக் கூடிய சவாலான பிரச்சினைகளை, அவர்கள் எதிர்கொள்ளக் கூடிய வகையில், அறிய மேற்கொள்ளும் முயற்சியில், சுற்றுச் சூழல் மிகவும் இன்றியமையாதது.

    asigaram

    இதோ நம் கண்களைக் குளமாக்கி, இதயத்தை சுக்கு நூறாக்கிய, நேபாளத்தில் நடந்த இயற்கைச் சீற்றம் சுமார் 3000 க்கும் மேலான உயிர்களையும், பழமையான வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்களையும், மிகப் பெரிய பேரிழப்பையும் அந்நாட்டு மக்களுக்குக் கொடுத்திருக்கிறதென்றால்,

    இம்மாதிரியான நிகழ்வுகளுக்கு, சுற்றுச் சூழலும் ஒரு காரணம் என்பதை நாம் அறிய வேண்டாமா?

    நண்பர்களே சிந்தியுங்கள்!

    தொடர்ந்து பயணிப்போம்…….

    Share
  • வள்ளுவ மாலை

    -சுரேஜமீ

    திருக்குறள் ஓதுவீர் ஓங்கும் புகழெய்த
    ஓடும் மனதிற்குப் போடும் கடிவாளம்
    தேடும் அறிவிற்கோர் ஏற்றம் – வருமொரு        valluvar
    தீதும் அகற்றிடும் நூல்!

    நூல்பல தேடிப் படித்தாலும் வாரா
    தெளிதமிழ் சிந்தனை ஏகும் – திருக்குறள்
    வாழ்வில் தரும்நலம் யாவும்! – அதன்வழி
    ​நில்​ மானுடம் போற்றச் சிறந்து!

    வெல்லும் செயல்யாவும் சொல்லும் வழிநி​ற்க
    உள்ளும் புறமும் தீதறுநல் லின்பமும்​​
    மாற்றானும் வாழ்த்திட நாளும் – பெருகிடும்
    மாண்பும் திருக்குறள் பண்பு!

    நீடில்லா வாழ்சேர் நிலமும் – ஆக்கும்
    நிதம்பல செல்வமும் யார்கொண்டு செல்வர்?
    தகுமென வாழா மனத்தினன்- தெய்வத்
    திருக்குறள் ஓதல் சுகம்!

    நானென் செயவென நோகாமல் நாளும்
    நவில்வாய்த் திருக்குற ளொன்றை – அதுதரும்
    நன்னெறி பற்றிடத் தெருவோர் போற்றும்
    நாயகன் நீயாவாய் நம்பு!

     

    Share
  • முயலாமை!

    சுரேஜமீ.

    NSK and TAM

    அம்மா மதுரம் அவர்கள் திருவரங்கத்தைச்(Srirangam) சேர்ந்தவர்கள் என்பது தாங்கள் அறிந்ததே! கவிஞர் வாலி அவர்களும் அதே ஊரைச் சார்ந்தவர்தான்! வாலியின் இளமைக் காலங்களில், அய்யா என்.எஸ்.கே வைச் சந்திக்க விரும்பியிருக்கிறார். அப்போது, மதுரம் அம்மாவின் தம்பி மணி அவர்களும், வாலி அவர்களும் நண்பர்கள் என்பதால், அவர்கள் மூலம், உங்கள் அத்தான் (என்.எஸ்.கே) வரும்போது, சந்திக்க ஏற்பாடு செய் எனக் கேட்க, அந்த சந்திப்பும் நடந்தேறி இருக்கிறது.

    என்.எஸ்.கேயிடம் தன்னை ஒரு தமிழ் ஆர்வலர் என்றும், பாட்டில் நாட்டம் உண்டு எனவும் அறிமுகம் செய்து கொண்டுள்ளார் வாலி. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட என்.எஸ்.கே அவர்கள்,

    தம்பி நீ சொல்றதெல்லாம் சரி. நான் உன்னை ஒரு கேள்வி கேக்குறேன். அதுக்கு சரியான பதிலை சொல்லு அப்படின்னு சொல்லி,

    ‘முயலும் ஆமையும் கதை கேட்டிருக்கேளே …அது சொல்ற நீதி என்னனு சொல்லு! என்று கூறியிருக்கிறார்!

    ஏதேதோ சொல்லியும், கடைசி வரை கலைவாணர் எதிர்பார்த்த ஒற்றை வரி நீதி சொல்ல இயலவில்லை வாலி அவர்களால்!

    தலையைச் சொறிந்து கொண்டே….அண்ணே நீங்களே சொல்லுங்களேன்! அப்படின்னு வாலி கேட்க,

    கலைவாணார் சொன்ன பதில் என்ன தெரியுமா?

    ‘முயலாமை’!

    இதுதான் கலைவாணாரின் சிறப்பு!

    (நன்றி: அருமைச் சகோதரர் NSK நல்லதம்பி)

    Share
  • அன்னையர் தினம்?

    -சுரேஜமீ

    அன்னையர் தினம் என்று அன்னியன் வைக்கின்றான்;
    அதற்கும் நாமெலாம் அடிபணிந்து நிற்கின்றோம்!
    அன்னைக்கு ஏதொரு தினம்?
    அனுதினமும் அவள்தினம்தான்!

    அன்னை தந்தை வளர்த்தெடுத்தார்
    அவனியில் நாம் மகிழ்கின்றோம்!
    அவர்தம்மை பிரிந்திருத்தல்
    நாம் செய்த பாவமன்றோ!

    அவர்தம்மைப் பார்த்திருத்தல்
    அன்னவரின் பெருமையன்றோ!
    அது கிடைக்கா எதுகிடைத்தும்
    அருளில்லை இவ்வுலகில்!

    பெற்றவரைப் போற்றிடுவர்
    பேரெல்லாம் பெற்றிடுவர்
    பெருமைபட வாழ்ந்திடுவர்
    பெருகிவரும் செல்வமெலாம்!

    வாழ்த்துதற்கு நாமென்ன வானவரா?
    வணங்கிடுங்கள் தெய்வமதை
    வளர்நாளும் வரலாறாய்
    வாழ்ந்திடுங்கள் வாழ்த்துக்களால்!!

     

    Share
  • வாழுகின்ற தமிழுக்கு ஒப்பாக வாழுபவன்!

    -சுரேஜமீ

    வாழ்த்துக்கள் வருவதற்கு வரம்வேண்டி நிற்போர்முன்
    வானவரே வலியவந்து வாழ்த்துவது கண்டவன்தான்
    வையத்திலொரு கவியாம் கவிக்கெல்லாம் அரசனவன்
    வாழுகின்ற தமிழுக்கு ஒப்பாக வாழுபவன்!                                     kannadasan

    கூடுகின்ற கூட்டமெலாம் கூவிநிற்கும் குயில்களாகப்
    பாடுகின்ற பாட்டெல்லாம் படைத்தவனே பகன்றதன்றோ!
    தேடுகின்ற நெஞ்சமெலாம் தேடிவைத்த சொத்துமவன்
    வீடுதோறும் நிறைந்திருக்கும் வீதியெல்லாம் புகழ்மணக்கும்!

    அன்னைத் தமிழ்கண்ட அருமைத் தவப்புதல்வனவன்
    அவன்புகழைப் பாடுதற்கு அவனியில் யார்தகுதியென்று
    அவனிருந்து எடுத்ததுதான் ஆலமரமான தென்றால்
    அவனுக்கும் துணைவேண்டி அடுத்தவனும் வருகின்றான்!

    பாட்டெழுதி நோட்டடிக்கும் பரிதாப நிலையில்லை
    பாட்டேவந்து நிற்கும் தனைஎழுது தமிழாலென்று
    பாட்டவனும் புனைந்திடவே பாரெல்லாம் மகிழ்ந்திடவே
    பாட்டாளி வர்க்கமெலாம் பைந்தமிழால் நனைந்ததன்றோ!

    கூட்டிவரும் கூட்டமெலாம் கூண்டோடு கலைந்துவிடும்
    கூடுகின்ற கூட்டமெலாம் பார்போற்ற நிலைத்துவிடும்
    கலைக்கூடம் சொல்லுமிதை இவன்பெற்றார் எவரென்றே
    கண்ணதாசன் வழிவந்த வாழியவன் வணங்கிடென்றே!

     

    Share
  • சர்க்கரை நோய்

    -சுரேஜமீ

    கணையம்
    கடவுள் கொடுத்த
    வரம்!

    ஐம்புலன்களை
    அடக்கவில்லை எனில்                             liver
    ஆறறிவின்
    பயனேது?

    உண்ணும் உணவே
    சர்க்கரையாய்  மாறி,
    இரத்தத்தில் கலந்து,
    சத்தாக மாறும்,
    என அறிவியல்
    சொல்லியும்
    அறியாமல் நாம்,
    துரித உணவும்,
    நினக்கும்போதெல்லாம்
    உண்பதும்,
    கணையத்திற்கு ஒவ்வா!

    வண்டு தேனை
    மலரிலிருந்து
    உறிஞ்சுவது போல,
    கணையம்
    சர்க்கரையைப்
    பிரித்தெடுக்கும்!

    செரிமானத்திற்க்குத்
    தேவையான
    கணைய நீர்
    சுரக்கா சர்க்கரைச்
    சிறுநீராய் வெளியேற,
    முறையான சர்க்கரை
    இரத்தத்தில் கலக்கிறது!

    தேவைக்கு மிகுதியானால்
    சேமிப்பும் நடக்கும்!
    என்ன விந்தை
    இறைவன்
    படைப்பில்!

    சேமிப்புக் கரைந்தாலோ,
    கணையம் ஏற்காத
    சர்க்கரை உடலில்
    இருந்தாலோ,
    நோய் என்று சொல்கிறது
    மருத்துவம்!

    மனிதா
    சற்றே யோசி!
    காரணம்
    கடவுளின்
    படைப்பா?
    உனது
    பரபரப்பா?

    நிதானமாக
    உண்!
    நினைவோடும்
    கால அளவோடும்,
    உண்!
    நோயற்று,
    உன்னதமாக
    வாழ்!

     

    Share
  • சிகரம் நோக்கி – 3

    சுரேஜமீ

    புரிதல்

    peak1

    கடந்த பத்து ஆண்டுகள் கொடுத்த பொருளாதார வளர்ச்சி நம் சமூகத்தையே திருப்பிப் போட்டிருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. கல்வி வியாபாரமாக்கப் பட்டதும்; சேவை வணிகமாக்கப் பட்டதும் தந்த மிகப் பெரிய வளர்ச்சி இதுவென்று சொன்னால் மிகையாகாது. ஒவ்வொரு நடுத்தர குடும்பமும் தன்னை ஒரு தட்டு உயர்த்தி மேல் தட்டுக் குடும்பமாகக் காட்சியளிக்கிறது!

    இவை ஒரு பக்கம்.

    மறு பக்கம்,

    இந்தப் பத்து ஆண்டுகள் புரிதல்(Understanding) என்னும் சொல்லைக் கேள்விக்குரியதாக்கி இருக்கிறது! என்பதும்,

    அன்புகூட ஒரு விலை சார்ந்து நிற்கிறதோ என்ற ஐயமும், கூடி வாழ்ந்த காலங்கள் தானாகவே சிதைந்து, தனித்து வாழும் பொருளாதாரம் சார்ந்த சிக்கல்கள் உருவானதும், அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின், இசைவில்தான் இல்லற வாழ்க்கையே தொடங்கும் ஒரு அவல நிலையும், நம் இதயங்களின் ஈரத்தைக் குறைத்ததோடு மட்டுமல்லாமல்,

    பெரும்பாலான இல்லற வாழ்க்கைத் தோல்விகளுக்கும் வழி வகுத்திருக்கிறதென்றால், மறுப்பாரும் சிந்திக்க வேண்டும்!

    இதற்கு அடிப்படைக் காரணமே புரிதலின்மைதான்!

    முதலில் புரிதல் என்றால் என்ன? புரிதலின் தொடக்கம் எது? புரிதல் அவசியமா? என்று கேள்விகளை உங்களுக்குள் அடுக்குங்கள். தெளிவு தானாக வரும். இதற்கு தூண்டுதலாக, சிலவற்றை, உங்கள் சிந்தை முன் வைக்க முயற்சிக்கிறேன்.

    நாம் அனைவருமே ஒரு தாயின் பிள்ளைகள்தான். நம் வீட்டில் உள்ள மூத்தோர்களுக்குத் தெரியும், நம்மை எப்படி வளர்த்தார்கள் என்று, நாமும் எத்தனையோ குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்கிறோம். இதற்கும், தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா?

    ஒரு தாய்க்குத் தன் பிள்ளையின் பசி தெரியும்; வலி தெரியும்; செயல் புரியும்! தாய்தான் நம் புரிதலின் முதல் படியே என்றால், தந்தை அடுத்த படி! வளர்க்கும் விதத்திலேயே நம் நாடி நரம்புகளின் அடுத்த நொடியைத் தெளிவாகத் தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றவர்!

    ஆக, புரிதலின் பால பாடம் அன்னை, தந்தையிடம் தொடங்குவதால்தான், நம் மொழி சொன்னது;

    ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை;
    தந்தை சொல் மிக்க மந்திரமில்லை! என

    நாம், மொழியால் புரிய வைப்பதற்கு முன்னரே, நம்மைக் குறிப்பால் புரிந்து நம் தேவையை உணர்ந்த பெற்றவர்கள் நிச்சயம் போற்றுதற்குரியவர்களே!

    ஆதலால், அவர்களிடம் நம் புரிதலின்மையைத் தெளிவு படுத்திக் கொள்ள, நமக்கு இருக்கும் முதல் வாய்ப்பு ‘பெற்றவர்கள்தான்’ என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்!

    அடுத்து புறச்சூழல்.

    ஐந்து வயது தொடங்கி குறைந்தது 15 முதல் 17 ஆண்டுகள் கல்விச் சாலையில் நம் பயணம் தொடர்கிறது. மனிதனுக்கே உண்டான மகத்தான வாய்ப்பு இது என்று சொன்னால்,

    இறைவனின் படைப்பின் பெருமையையும் நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள்!

    ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிதென்று’!

    பல மனிதர்களுடன் இன, மத, மொழி வேறுபாடு கலைந்து, ஓன்றே குலமாக, ஒருவனே தேவனாக, நம்மைச் செதுக்குகின்ற கல்விக்கூடங்கள், புரிதலின் அடுத்த நிலையை, நமக்கு ஏற்படுத்தித் தருகின்றன.

    ஆனால், நாம் எப்படி இந்தப் ‘புரிதலை’ நுகர்கிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கி இருக்கிறது!

    avaவள்ளுவன் அழகாகச் சொல்கிறான் பின்வரும் குறளிலே, ‘புரிதலின் அருமையை’!

    ‘குறிப்பிற் குறிப்புணர் வாரையுறுப்பினுள்
    யாதுங் கொடுத்துக் கொளல்.’

    இதுதான் மொழியின் ஆளுமை என்பது. எந்த மொழிக்கும் இல்லாத ஒரு பெருமை நம் தமிழ் மொழிக்கு! நம் மனித வாழ்வியல் சார்ந்த எந்த பிரச்சினைக்கும் உண்டான விடையைத் தன்னகத்தே கொண்டுள்ள ஒப்புயர்வற்ற ஒரே மொழி தமிழ்தான் என்பதே நமக்குப் பெருமைதானே!

    நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதைக் குறிப்பாலேயே உணர்ந்து, அதன்படி குறிப்பறிந்து செயல்படுவோரை, நம்மிடம் இருப்பது எது கொடுத்தும், அவரைத் தமதாக்கிக் கொள்ள வேண்டும் என வள்ளுவரே சொல்லி இருக்கிறாரென்றால்,

    புரிதலின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து செயல்படுவது எவ்வளவு இன்றியமையாதது என்பதை மனதில் இருத்தல் அவசியம்!

    இப்படி ஒரு புரிதல் இருக்குமாயின், நம் அலுவலகத்தில், நாம் மேற்கொள்ளும் எந்த முயற்சியிலும் வெற்றியடைவோம் என்பது மறுக்க முடியாத உண்மை. தலையாய எந்தப் பிரச்சினையின் துவக்கமுமே, புரிதலின்மையில் தான் தன் பயணத்தை ஆரம்பிக்கிறது.

    நான் மிகவும் வேதனைப் படக்கூடிய ஒரு செய்தி, தற்காலத்தில் குடும்ப நல நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கும் வழக்குகளும், இளைஞர் மற்றும் யுவதிகளின் கூட்டமும்தான்! இது நம்மிடையே சகிப்புத்தன்மை அற்ற நிலையையும், நமக்கு இருக்கும் பொருளாதாரத் தன்னிறைவின் தவறான புரிதலும்தான் என்று கருதத் தோன்றுகிறது.

    ஊடல் இல்லாத எதுவும் நல்ல கூடலுக்கு அழகாகாது. இது காதலுக்கு மட்டுமல்ல. நல்ல நட்புக்கும்தான். ஆசை வார்த்தைகளையும், போலி வாழ்க்கையையும் நம்பி வாழக்கூடாது.

    வாழ்வே ஒரு சுகம்; வாழ்வில் நல்ல புரிதல் இருந்தால்!

    வள்ளுவன் தன் 1330 குறளின் உச்சமாக, இந்தப் புரிதலை மையமாக வைத்துக் கடைசிக் குறளாக,

    ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

    கூடி முயங்கப் பெறின்!

    என்று முடித்தான் என்று சொன்னால், அதன் வலிமையை நாம் ஆராயவேண்டும் என்பதற்காகத்தான்!

    இந்தக் குறளும், அதன் பொருளும் புரிந்த யாரும் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்திருக்க மாட்டார்கள் என உறுதியாக நம்புகிறேன்! ஊடலுக்குப் பின் வரும் கூடல்தான் இல்லற வாழ்விற்கே மகிழ்ச்சி என்றால்,

    சரியான புரிதலில்தான் இன்பம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்!

    புரிந்தால் சிகரம் தொட்டுவிடும் தூரம்தான்!

    அன்புடன்
    சுரேஜமீ

    Share
  • வள்ளுவ மாலை

    -சுரேஜமீ

    எதுசேர்க்கும் போம்வழி இன்பம் நிலத்தார்க்கு
    ஏற்றதொரு வாழ்வில் புலன்வழிச் செல்லா-
    வினையறிந்து வீழான் துணையொடு – வள்ளுவன்  valluvar
    வாக்கின் வழிசெல் நன்கு!

    மொழிமுன் னேகிதனைப் போக்கிநற் பண்பே
    வழியாக்கி மானுடம் உய்யவோர் – வேதமும்
    செய்திட்ட மாமுனியாம் வள்ளுவன் – நூல்தினம்
    செப்பிட வாழ்வே அறம்!

    உயிரும் மெய்யும் தனைவாட்ட –  தன்னுதிரம்
    கூட்டிட  நாளும்  தவமிருப்பாள்  தாயவள்
    வேண்டுவோர்க் கில்லையொரு துன்பம் – தினமோதும்
    வள்ளுவம்  நெறியுடை  யோர்!

    நீடுவாழ்தல் ஏதுபயன் மண்ணில் நெறியிலார்
    ஏடுசொல் ஏகிலர் என்றும் – இருள்சூழ்
    சேர்செல்வம் யாவும்  துணைவரா –  நெஞ்சில்
    செலுத்திடும் வள்ளுவம் வரும்!

    சாதிமதம் சந்ததி யறுக்கும் – தீவினைகொள்
    சாத்திரம் பேசுமொரு கூட்டம் – வழிநில்லா
    நீதிதரும் பொய்யில் மறைநூல் – வள்ளுவம்
    சொல்நெறி வாழும் உயிர்க்கு!

     

    Share
  • வள்ளுவ மாலை

    -சுரேஜமீ

    மாண்புடைப் பண்பும் நெறியும் உள்ளேகி
    மண்ணில் பயனுற வாழ்தற்கு – நாளும்
    மனதினில் வள்ளுவம் ஏகிட – ஞாலமும்      valluvar
    மாந்தரின் சொர்க்கம் இனி!

    வானுறை வாழ்விற்கு வையகம் தந்தது
    மாண்புகள் கொண்டு மறைநிக ரானது
    மானுடம் ஓங்கிடத் தம்மை விளக்கும்
    வள்ளுவம் படித்திடக் காண்!

    நாளும் மனதில் வள்ளுவம் ஏகிட
    நாமும் பெறலாம் நற்குணம் வாழ்வில்
    நிகரிணை என்றும் நமக்கிலை – சத்தியம்
    நீயறிவாய் செப்பிடக் குறளை!

    அறிவுசெல் உள்ளம் தொடங்கிய நாளாய்ச்
    செறிவாய் நன்கு படித்திருந்தால் – வள்ளுவம்
    வாழ்வில் நெறிவகைப் பண்பும் திறமும்
    விளக்கிடும் ஞாலம் சிறந்து!​    

    பிறப்பும் வாழ்வும் பிரிவும் நட்பும்
    பகையும் வெற்றியும் வீரமும் காலமும்
    பண்பும் நெறியும் காமமும் – கற்றுணர்
    வள்ளுவம் சொல்லும் வழி!

     

    Share
  • சிகரம் நோக்கி.. (2)

    சுரேஜமீ

    peak

    எதைக் கொண்டு வந்தோம்? வாழ்க்கையில் நாம் துய்ப்பதும்; எய்துவதும், ஏகுவதும், பெற்றதும், பெறுவதும் அனைத்தும், இடையில் வந்தவையே!

    அதற்கும் மேலாக இவையெல்லாம், நம்மை விட்டுச் செல்பவையோ அல்லது நாம் விடுத்துச் செல்பவையோதான்!

    நாம் செய்ய வேண்டுவன எல்லாம், இந்த உண்மையைச் சரியாக வளரும் தலைமுறைக்குப் புரிய வைப்பதுதான்!

    எப்படி?

    asurajதென்னாட்டு சார்லி சாப்ளின், நாஞ்சில் தந்த முத்து, நகைச்சுவையால் நல்ல தமிழில் நம்மை சிந்திக்க வைத்த மனிதர், இருந்து கொடுப்பதல்ல வள்ளல் தன்மை; இல்லாதும் கொடுப்பதே எனும் வாழ்க்கைக்குச் சொந்தக் காரர், அவர் தான் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள்!

    அவர் ஒரு முறை ஒரு விழாவில் பங்கெடுத்து, சிறுசேமிப்புத் திட்டம் பற்றிப் பேசுகிறார். அவ்விழாவில், சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சரும், பொருளாதார நிபுணருமான, ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் தலைமையேற்றிருக்க, என்.எஸ். கே ஒரு கதை மூலம் நமக்கு எது தேவை என்பதை விளக்குகிறார்!

    அந்தக் கதை உங்களுக்காக…..

    ஒரு உணவு மற்றும் தங்கும் விடுதிக்கு வரும் பயனாளி, 100 ரூபாயைக் காசாளரிடம் கொடுத்து, தான் விடுதியை விட்டுச்asu செல்லும்போது திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் கூறுகிறார். அந்த சமயத்தில், காசாளரிடம் பாக்கி வசூலிக்க மளிகைக் கடைக்காரர் வருகிறார். உடனே, அந்தப் பணத்தை மளிகைக் கடைக்காரருக்கு கொடுக்கிறார் காசாளர். மளிகைக் கடைக்காரர், சிகிச்சைக்காக மருத்துவரிடம் செல்கிறார். ஆக, அந்தப் பணம் தற்போது மருத்துவரின் கைக்கு வந்துவிட்டது.

    அடுத்த நாள் மருத்துவர், ஒரு விருந்தோம்பலுக்காக, உணவு மற்றும் தங்கும் விடுதிக்குத் தரவேண்டிய பாக்கிக்காக,காசாளரிடம் அந்த 100 ரூபாயைக் கொடுக்கிறார்.

    அன்று மாலை, விடுதியிலிருந்து காலி செய்து புறப்படும் பயனாளி வருகிறார். தான் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு, தான் கொடுத்த அந்த 100 ரூபாயைப் பெற்றுக் கொள்கிறார்.

    பெற்றுக் கொண்ட பயனாளி, காசாளரிடம் என்ன கூறுகிறார் என்பதே, நாம் கற்றுக் கொடுக்க வேண்டிய பாடம் என்று சொன்னால் மிகையாகாது!

    பயனாளி கூற்று – இது ஒரு செல்லாத நோட்டு! செலவாணி ஆகிறதா என்று பார்க்கத்தான் உன்னிடம் தந்தேன் என்று!

    கூறியதோடு மட்டுமல்ல; அந்த 100 ரூபாயை, காசாளரின் கண்ணெதிரே கிழித்தும் போட்டு விட்டார்!

    கலைவாணர் அவர்கள் இந்தக் கதையைக் கூறிவிட்டு,

    இதில் யாருக்கு நட்டம்? எனும் கேள்வியையும் எழுப்பினார்!

    இதற்கு தலைவராக இருந்த சண்முகம் செட்டியார், இதுதான் செல்லாத நோட்டாயிற்றே; ஆதலால், யாருக்கும் நட்டமில்லை என்கிறார்!

    அப்படியானால், காசாளர், மளிகைக் கடைக்காரர், மருத்துவர் என பலருடைய கடன்கள் இதன் மூலம் அடைபட்டிருக்கிறதே என்கிறார் கலைவாணர்!

    அதற்குச் செட்டியார் தந்த பதில் என்ன தெரியுமா? இதற்குப் பெயர்தான் ‘நாணயம்’ என்பது! ஒரு பொருள் மீது வைக்கப்படும் மதிப்பு! ஒரு மனிதன் மீது இருக்கும் நம்பிக்கை!

    ஆக, நாம் கையாளும் காகிதத்திற்கே அவ்வளவு மதிப்பு என்றால், அதை உருவாக்கும் மனிதர்களுக்கு எவ்வளவு மதிப்பு என்பதை நாம் அறிந்தோமா?

    உயிர்கள் துச்சமாக அல்லவா மதிக்கப்படுகின்றன?

    மீண்டும் தொடங்கிய இடத்திற்கே செல்வோம்! எதைக் கொண்டு வந்தோம், நாம் இழப்பதற்கு! இருப்பதைப் பகிர்ந்து, இன்பமாய் வாழ, நாம் கற்றுக் கொடுத்தால்,

    வரும் சமுதாயம் வாழ்வில் ஒளி பெறும்!

    ஒரு பதிவாக ஆரம்பித்தது, ஒரு தொடராக ஆகிவிட்டது! தொடர்வோம் சிந்தனையை!!

    சிகரத்தை நோக்கி!

    சுரேஜமீ
    Share