Tag: த. ஸ்டாலின் குணசேகரன்

  • மக்கள் சிந்தனைப் பேரவையின் ‘ அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது ’

    மக்கள் சிந்தனைப் பேரவையின்

    ‘ அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது ’

    ஈரோடு புத்தகத்திருவிழாவில் வழங்கப்படுகிறது.

    ————————————————————————————————————————————–

     

    மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இளம் அறிவியலாளர் ஒருவருக்கு ‘ அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது ’ வழங்கப்படுகிறது. இவ்விருது பாரட்டு மடல் , தகுதிப்பட்டயம் ஆகியவற்றோடு ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையையும் உள்ளடக்கியதாகும்.

    விருதாளர் 40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வு முயற்சிகளில் வெற்றிபெற்றவராக விளங்க வேண்டும்.

    தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலுள்ள ஆய்வுக் கூடங்களிலோ அல்லது அங்கிகரிக்கப்பட்ட வேறு ஆய்வுக் கூடங்களிலோ ஆய்வுகள் மேற்கொண்டவராகத் திகழ்வதோடு பெயர் பெற்ற அறிவியல் இதழ்களில் இதுவரை இவரது 10 ஆய்வுக்கட்டுரைகளாவது வெளிவந்திருக்க வேண்டும் .

    இத்தகைய அடிப்படைத் தகுதிகள் உள்ளவர்கள் தனது ஆய்வுகள் குறித்த அனைத்துக் குறிப்புகளையும் அனுப்பி வைப்பதோடு எந்தக் கண்டுபிடிப்புக்கு அவர் விருதுக்குரியவராக விளங்குகிறார் என்பதையும் தனியாகக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

    அறிவியல் துறையில் மிகமுக்கிய ஆளுமைகளாக விளங்குகிற ஐந்து மூத்த அறிவியலாளர்களடங்கிய தேர்வுக்குழுவே விருதாளரைத் தேர்வு செய்யவுள்ளது. இது தமிழகம் தழுவிய விருது என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்களில். எவரும் தங்களது குறிப்புகளை அனுப்பிப் பங்கேற்கலாம்.

    ஆய்வாளர்கள் தங்களது ஆய்வுக் குறிப்புகளையும் ஆய்வு தொடர்புள்ள அனைத்து ஆவணங்களையும் 20.07.2018 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள ஈரோடு புத்தகத் திருவிழா மேடையில் இவ்விருதளிப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

    தொடர்பு முகவரி : மக்கள் சிந்தனைப் பேரவை , A 47 – சம்பத் நகர் , ஈரோடு – 638 011. மின்னஞ்சல் : info@makkalsinthanaiperavai.org

    தொடர்பு எண் : 0424 – 2269186 , 94891 23850

    ————————————————————————–

    Share
  • முதன்மைக் கல்வி அலுவலரிடம் வேண்டுகோள்…

    —————————————————————————————————————————–

    ஈரோடு மாவட்டப் பள்ளி ஆசிரியர்கள் – மாணவர்கள் புத்தகத்திருவிழாவை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள ஆவன செய்யுமாறு முதன்மைக் கல்வி அலுவலரிடம் வேண்டுகோள்…

    —————————————————————————————————————————–

    ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் , பயிலும் மாணவர்களும் , ஈரோடு புத்தகத் திருவிழாவை முழுமையாகப் பயன்படுத்தும் விதத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மைக் கல்வி அலுவலரிடத்தில் மக்கள் சிந்தனைப் பேரவை வேண்டுகோள் வைத்தது.

    புத்தகத் திருவிழா நடைபெறுவதையொட்டி பள்ளிகளில் நடைபெறும் வழிபாட்டுக் கூட்டங்கள் மற்றும் வகுப்பறைகளில் பாடப் புத்தகங்களுடன் பொதுப் புத்தகங்களையும் வாசிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விதத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டுமென்றும் , பள்ளி மாணவர்களை புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வந்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவும் நல்ல புத்தகங்களை வாங்கி அவரவர் இல்லங்களில் சிறு நூலகங்கள் அமைக்க ஊக்கப்படுத்தப்பட வேண்டுமென்றும் பேரவையின் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    இதற்கான வேண்டுகோள் கடிதத்தை பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். பாலமுரளி அவர்களிடம் வழங்கினார்.

    பேரவையின் பணிக்குழு உறுப்பினர்களாக விளங்கும் முன்னாள் தலைமையாசிரியர்கள் கவுந்தப்பாடி எஸ். சண்முகம் , தளவாய்பேட்டை   பி.ஆர். செல்வராஜ் , சிவகிரி சி.ஆறுமுகம் , ஈரோடு டி. கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Share
  • மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ‘ பாரதி விழா ’

    ஸ்டாலின் குணசேகரன்

    *************************************************************************************************************************

    மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ‘ பாரதி விழா ’

    *************************************************************************************************************************

    001

    மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ஈரோடு நகரில் ஆண்டுதோறும் பாரதி பிறந்தநாளாகிய டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி மாநிலம் தழுவிய முறையில் ‘ பாரதி விழா ’ நடத்தப்பட்டு வருகிறது.

    002 (1)

    003

    இந்த ஆண்டின் ‘ பாரதி விழா ’ 11.12.2017 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு ஈரோடு – கொங்கு கலையரங்கில் நடைபெற்றது. பேரவை

    நடத்துகிற பாரதி விழாவில் ஆண்டுதோறும் மூன்று முக்கிய அம்சங்கள் இடம் பெறுகின்றன :

    004

    005

    1) பாரதி 1921 ஆம் ஆண்டு இறுதியாக உரை நிகழ்த்திய ஈரோடு – கருங்கல்பாளையம் நூலகத்திலிருந்து பாரதி விழா நடைபெறும் அரங்கம் வரை, பாரதியின் ஈரோடு வருகையை நினைவுகூரும் பொருட்டும் அவ்வருகையின் போது அவர் நிகழ்த்திய ’மனிதருக்கு மரணமில்லை,  ‘இந்தியாவின் எதிர்கால நிலை ‘ என்ற தலைப்புகளிலான  இறுதிப் பேருரைகளை நினைவுகூரும் விதத்திலும்  ’ பாரதி ஜோதி ‘ ஏந்திய வண்ணம் பேரவையின் தன்னார்வலர்களாக விளங்கும் 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அணிவகுப்பு…

    006

    007

    2) தமிழகத்தின் தலைசிறந்த ஆளுமை ஒருவருக்கு ‘ பாரதி விருது ’  வழங்குதல்…

    3) காலமாகிவிட்ட நாட்டுக்குழைத்த நல்லோர் ஒருவரின் திருவுருவப்படத் திறப்பு…

    மாலை 4.30 மணிக்கு ‘ பாரதி ஜோதி ‘ கருங்கல்பாளையம் நூலகத்தில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் வி.ஜீவகுமாரன் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. இவரின் உரைக்குப் பின்பு அணிவகுப்பு தொடங்கியது.

    008

    009

    இந்த ஆண்டின் ‘ பாரதி விருது ‘ தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் அவர்களுக்கு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர், கல்வியாளர் – சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்களால் விழாமேடையில் வழங்கப்பட்டது.

    010

    011

    கவிஞர் தமிழ்ஒளியின் திருவுருவப்படத்தை பொதுவுடைமை இயக்கத் தலைவர் திரு ஆர் நல்லகண்ணு அவர்கள் திறந்து வைத்தார்.

    முன்னதாக மக்கள் சிந்தனைப்  பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் விழா அறிமுகவுரை நிகழ்த்தினார்.

    012

    013

    இந்நிகழ்ச்சிக்கு தேசிய நலவிழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ எஸ்கேஎம். மயிலானந்தன் அவர்கள் தலைமையேற்றார்

    பேரவையின் செயலாளர் ந.அன்பரசு வரவேற்புரையாற்றினார். நிறைவாக பொருளாளர் க.அழகன் நன்றியுரையாற்றினார்.

    014

    015

    இந்நிகழ்வில் பல கல்வி நிலையங்களைச் சார்ந்த, மக்கள் சிந்தனைப் பேரவையின் உறுப்பினர்களாகத் திகழும் மாணவ – மாணவியர் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.

    ஊர்ப் பிரமுகர்கள், கல்வியாளர்கள் பல்வேறு பொதுநல அமைப்புகளின் பொறுப்பாளர்கள், பெண்கள் என பொதுமக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

    016

    சிறப்பு விருந்தினர்களின் உரைகள், எழுச்சியுடன் பங்கேற்ற பார்வையாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக அமைந்தது.

    மிகச்சரியாக மாலை 6 மணிக்குத் தொடங்கிய கூட்டம், முன் கூட்டியே அறிவித்திருந்தவாறு இரவு 8.30 மணிக்கு நிறைவு பெற்றது.

    விழா அரங்கில், பேரவையின் சார்பில் ‘ பாரதி விழா சிறப்பு நூலரங்கம் ’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கவிஞர் தமிழ்ஒளி, சிலம்பொலி சு.செல்லப்பன், பொற்கோ, ஆர்.நல்லகண்ணு ஆகியோரின் நூல்களோடு மொழி, இலக்கியம், கவிதை மற்றும் தமிழாய்வு சார்ந்த ஏராளமான நூல்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.

    Share
  • மாணவி அனிதாவின் மரணம்…

    *********************************************************************************************************************
    மாணவி அனிதாவின் மரணம்…
    ஆழ்ந்த கவலையையும் உரத்த சிந்தனையையும் ஒருசேர உருவாக்கியுள்ளது…

    மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் அறிக்கை
    *********************************************************************************************************************

    மாணவி அனிதாவின் மரணம் பத்தோடு பதினொன்றாகக் கருதி கடந்து விடமுடியாத ஒன்றாகிவிட்டது. மனசாட்சியை உலுக்கும் வீச்சும் வீரியமும் மாணவி அனிதாவின் மரணத்திற்கு உண்டு.

    இது ‘ தற்கொலை தானே ’ என்று பகுத்தறவு பேசித் தள்ளிவிட முடியாத நிகழ்வுதான் அனிதாவின் மரணம்.

    ஏழைக் கூலித்தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்துள்ளார்… தாழ்த்தப்பட்ட சாதிப் பிரிவைச் சார்ந்தவராகத் திகழ்ந்துள்ளார். சிறுவயதிலேயே தாயை இழந்துள்ளார். சிறிதும் வளர்ச்சியடையாத குக்கிராமத்தில் வளர்ந்துள்ளார்.

    இத்தனை இன்னல்களையும் இடையூறுகளையும் சந்தித்தபோதும் அரிதின் முயன்று கல்வியில் மிகச் சிறந்தவராக விளங்கியுள்ளார்.

    நீட் தேர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அனிதா இன்று மருத்துவக் கல்லூரி மாணவியாக நம்மோடு மகிழ்வுடன் வாழ்ந்திருப்பார்.

    அனிதாவின் மரணம் ‘ ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனி ’ என்ற கூற்றை உறுதி செய்துள்ளது.

    ‘ வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டும்தான் அடுத்தடுத்த வாய்ப்புகளா ? ’ என்ற அடிப்படையான கேள்வியையும் எழுப்பியுள்ளது.

    ‘ தரமான கல்வி வேண்டும் ’ என்பதிலும் ‘ அனைவருக்கும் சமமான கல்வி வேண்டும் ’ என்பதிலும் இருவேறு கருத்துகளுக்கு இடமிருக்க முடியாது.

    அத்தகைய நிலையை அடைய மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டியது என்ன ? சமூகத்தின் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் ? கல்வித் துறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் யாவை ? நீதித்துறையின் பார்வை எத்தகையதாக இருக்க வேண்டும் ? போன்ற எண்ணற்ற கேள்விகள் முறையாக பதிலளிக்கப்படாமல் கிடப்பில் கிடக்கின்றன.

    இவை போன்ற அடிப்படையான அம்சங்களில் அரசும் சமூகமும் கவனம் செலுத்தத் தவறியதை இடித்துச் சொல்வதுபோல் அனிதாவின் மரணம் அமைந்துவிட்டது.

    கல்வி வளர்ச்சியை மேலோட்டமாகவோ எந்திரகதியாகவோ பார்க்காமல் தரத்தை, வளர்ச்சியை சமூகக் கண்ணோட்டத்தோடு இணைத்துப் பார்க்கின்ற ஆழ்ந்த அக்கறையுள்ள சமூக நோக்கம் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.

    இந்த செய்திகயைத்தான் அனிதா தனது மரணத்தின் மூலம் இச்சமூகத்திற்கு விட்டுச் சென்றுள்ளார்.

    திறமை – திறமை என்கிறார்களே, மதிப்பெண் – மதிப்பெண் என்கிறார்களே அந்தத் திறமையும் மதிப்பெண்களும் இருந்தும் அனிதா ஏன் தான் நினைத்ததைப் படிக்க முடியவில்லை என்ற கேள்வி எழுகிறதல்லவா ?

    திறமையிருக்கிற அனிதாவுக்கு மேலும் தரமான கல்வி வாய்ப்பளிக்காதது யார் குற்றம் ? குற்றம் இழைக்காத ஒருவர் தனக்குத்தானே தண்டனையளித்துக் கொண்டதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதல்லவா ?

    அதுதான் அனிதாவின் மரணத்தில் நிகழ்ந்திருக்கிறது.

    அனிதாவின் மரணத்திற்கு மக்கள் சிந்தனைப் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

    கல்வி சிலருக்கானதோ பலருக்கானதோ அல்ல… அது மகத்தானது மட்டுமல்ல… மக்களுக்கானது. அனிதாவின் மரணம் ஆழ்ந்த கவலையளிப்பதோடு உரத்த சிந்தனையையும் ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

    ————————————————X————————————————

    Share
  • ஈரோடு புத்தகத் திருவிழாவில் பழங்குடியின மாணவர்கள்

    ***************************************************************************************

    ஈரோடு புத்தகத் திருவிழாவில் பழங்குடியின மாணவர்கள்

    ***************************************************************************************

    1

    பர்கூர், கடம்பூர் ஆகிய சத்தியமங்கலம் பகுதியிலுள்ள மலைகளில் வாழும் சமார் 40 பழங்குடியின மாணவர்கள் ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு அவர்களின் ஆசிரியர்களால் அழைத்து வரப்பட்டனர். மிகவும் பின்தங்கிய மலைப் பிரதேசங்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் 6,7,8 ஆகிய வகுப்புகளில் படிக்கிற பழங்குடியின மாணவர்களாகிய இவர்கள் ரயில்களையோ, நகரிலுள்ள தரமான பேருந்துகளையோ கூடப் பார்த்ததில்லை. இவர்கள் பர்கூர் மலைப்பகுதியிலுள்ள கொங்காடை, கடம்பூர் மலைப் பகுதியுலுள்ள குன்றி, விளாங்கோம்பை, அக்னிபாவி, ஜி.என். தொட்டி, நாயகன்தொட்டி, அணில்நத்தம் பண்ணையத்தூர் ஆகிய எட்டு கிராமங்களில் இயங்கிவரும் அரசின் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களாவர். இவர்களின் ஆசிரியர்கள் சிரத்தையெடுத்து ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு இவர்களை அழைத்து வந்ததோடு புத்தகத் திருவிழா அரங்கிற்குள் முழுமையாகச் சுற்றியும் காட்டினர். இம்மாணவர்களுக்கு மலைப்பகுதிகளில் செயல்பட்டுவரும்       ‘ சுடர் ’ தொண்டு நிறுவனம் உதவி வருகிறது.

    3

    இம்மாணவர்கள் விழாக்கோலம் பூண்டிருந்த புத்தகச் சந்தையைப் பார்த்தும் குவிந்து கிடந்த லட்சக்கணக்கான வண்ண வண்ணப் புத்தகங்களைப் பார்த்தும் குதூகலமடைந்தனர்.

    புத்தக அரங்கைவிட்டு வெளியே வந்த இம்மாணவர்களிடம் “ யார் யார் புத்தகங்கள் வாங்கினீர்கள் ? ” என்று பேரவைத் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் கேட்டார். அனைவரும் வெறுங்ககையோடு வெளியே வந்ததோடு கையை விரித்து “ யாரும் எதுவும் வாங்கவில்லை ” என்று சைகை காட்டினர்.

    அத்தனை மாணவர்களுக்கும் புத்தகங்கள் பேரவையின் சார்பில் வாங்கிக் கொடுக்கப்பட்டதோடு அவர்களுக்கு மதிய உணவும் அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டது.

    2

    தீபாவளி சமயங்களில் கையில் பட்டாசு வாங்கிச்செல்லும் குழந்தைகளினின் பூரிப்பை இப்பழங்குடி மாணவர்களின் முகங்களில் பார்க்க முடிந்தது.

    ஆம்… ஈரோடு புத்தகத் திருவிழா தொலைதூரத்திலுள்ள மலைப்பிரதேசக் கிராமங்களையும் எட்டியுள்ளது.

    Share
  • உழைப்பின் மேன்மையை உணர்த்தியவர் !

     த. ஸ்டாலின் குணசேகரன்

    கார்ல் மார்க்ஸ் படித்த பள்ளியில் இறுதிவகுப்புப் படிக்கும் மாணவர்கள் வித்தியாசமான தலைப்பொன்றில் ஆய்வுக் கட்டுரை எழுத வேண்டுமென்பதை வழக்கமாக வைத்திருந்தனர். இதற்காக மாணவர் மார்க்ஸ் ‘ எதிர்காலப் பணியைத் தேர்வு செய்வது குறித்து ஒரு இளைஞனின் சிந்தனைகள் ’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.

    karl-marx

         அக்கட்டுரையில் “ ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கும்போது நமது பிரதான வழிகாட்டியாக இருக்க வேண்டியது மனித குலத்தின் நலனையும், நமது சொந்த மேம்பாட்டையும் காத்துக் கொள்ளுதல் என்பதேயாகும். இவ்விருநலன்களும் ஒன்றோடொன்று மோதக் கூடியவை என்று நினைக்கக்கூடாது. ஒரு நலன் மற்றொரு நலனை நாசம் செய்துவிடும் என்று கருதக்கூடாது. அதற்குமாறாக, சகமனிதர்களின் மேம்பாட்டுக்காக, நன்மைக்காகப் பாடுபடுவதன் மூலமே, ஒருவர் தன்னுடைய மேம்பாட்டை அடைய முடியும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

    “ ஒருவர் தன்னுடைய நலனுக்காக  மட்டுமே பாடுபடுவதென்றால் அவர் ஒருவேளை பெரிய அறிவாளியாக விளங்கலாம். ஒரு பெரிய ஞானியாகத் திகழலாம். ஒரு மிகச்சிறந்த கவிஞனாக உயரலாம். ஆனால் அவர் ஒருபோதும் முழுமனிதனாக உருவெடுக்க முடியாது ” என்று அந்தக்கட்டுரையில் முத்தாய்ப்பாகப் பதிவு செய்துள்ளார். மாணவர் மார்க்ஸுக்கு அப்போது வயது 17.

    மார்க்ஸின் தந்தை ஹென்ரிச் மார்க்ஸ் ஜெர்மன் நாட்டிலுள்ள தனது சொந்த ஊரான டிரியர் நகரில் வழக்கறிஞராகத் தொழில் செய்து வந்தார். அந்நகரின் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராகவும் விளங்கினார்.

    தந்தை கல்வியின் முக்கியத்துவம் புரிந்து மகனை ஊக்கப்படுத்துபவராக விளங்கியபோதிலும் மார்க்ஸ் இயல்பாகவே சுயசிந்தனை உள்ளவராகவும் அறிவுத் தேடல் மிக்கவராகவும் திகழ்ந்தார்.

    பான் பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டிருந்தபோது பான் நகரில் ‘ கவிஞர்கள் சங்கம் ’ என்ற ஓர் அமைப்பு இருந்தது. இச்சங்கத்தில் சேர்ந்து ஏராளமான கவிதைகள் பாடினார் மார்க்ஸ். மார்க்ஸின் கவிதைகள் மிகச்சிறப்பாக இருந்ததால் மிக விரைவில் அச்சங்கத்திலேயே மிகச்சிறந்த மூன்று கவிஞர்களில் மார்க்ஸூம் ஒருவர் என்று பிற கவிஞர்களால் பாராட்டப்பட்டார்.

    பெர்லின் பல்கலைக்கழகத்தில் மார்க்ஸ் தத்துவம், வரலாறு, கலை, இலக்கியம், சட்டம் ஆகியவற்றை ஆழ்ந்து படிப்பதில் தீவிரகவனம் செலுத்தினார். சட்டத்தையும் தத்துவத்தையும் ஒரே அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றில் மூழ்கிக்கிடந்தார் மாணவர் மார்க்ஸ். ‘ சட்டத்தின் தத்துவம் ’ என்றுகூட தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில் ஒரு சொற்றொடரையே உருவாக்கி எழுதியுள்ளார்.

    மார்க்ஸ் மாணவராக இருந்த காலத்தில் தத்துவஞானி ஹெகல் ஜெர்மனியில் பெரிதாகப் பேசப்பட்டவர். 1831 இல் ஹெகல் மறைந்த பிறகு இளம் ஹெகலியவாதிகள் ஒன்றுகூடி ‘ டாக்டர்ஸ் கிளப் ’ என்ற ஓர் அமைப்பை பெர்லினில் நடத்தி வந்தனர். இவ்வமைப்பின் முக்கியப்பணியே தத்துவம், பொருளாதாரம், வரலாறு, அரசியல் போன்ற  சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்குமான ஆழமான கருத்துக்கள் பற்றி மனம்விட்டு அக்கறையோடு விவாதிப்பதாகும். இவ்வமைப்பின் உறுப்பினர்கள் எல்லோரும் ஆகச் சிறந்த அறிவாளிகள் என்பதோடு மார்க்ஸைக்காட்டிலும் 10, 12 வயது மூத்தவர்கள். மார்க்ஸுக்குப் பல வருடங்களுக்கு முன்பே பட்டம் பெற்றவர்கள். இருப்பினும் மார்க்ஸை தங்களைக் காட்டிலும் மேலானவராக மனப்பூர்வமாக மதித்தனர். மார்க்ஸின் மேதமை அவ்வமைப்பின்  நிர்வாகிகளையே ஆச்சரியப்படவைத்தது. இவ்வமைப்பின் முக்கிய மூத்த நிர்வாகியான கோப்பன் தன்னுடைய ‘ மகா பிரடெரிக்கும் அவரது எதிராளிகளும் ’ என்ற சிறந்த நூலை இளைய கார்ல் மார்க்ஸுக்குக் காணிக்கையாக்கியிருந்தார். அக்காணிக்கைக் குறிப்பில் மார்க்ஸைப் பற்றி ‘ சிந்தனைகளின் உண்மையான ஆயுதக்கிடங்கு ; மெய்யான கருத்துப் பட்டறை ’ என்று குறிப்பிட்டிருந்தார்.

    மற்றொரு ஆகச் சிறந்த அறிவாளியாக அப்போது மதிக்கப்பட்ட ஹெகலியவாதி மோசஸ் 1841 இல் நண்பருக்கு எழுதிய கடிதத்தில்

    “ மிகப் பெரிய, வாழும் ஒரே மெய்யான தத்துவ ஞானியைச் சந்திக்க நீ தயாராகலாம்… டாக்டர் மார்க்ஸ் என்று அழைக்கப்படும் எனது நாயகன் மிகவும் இளைஞனே… 24 வயதிற்கும் மேலிருக்காது. இடைக்கால மதம் மற்றும் அரசியலுக்கு அவனே மரண அடி கொடுக்கப் போகிறவன். தத்துவதாகமும் நகைச்சுவை உணர்வும் ஒருங்கே அமையப்பெற்றவன். ரூசோ, வால்டேர், ஹோல்பாக், லெசிஸ், ஹைனே, ஹெகல் ஆகிய அனைவரும் ஒரே மனிதனாக உருப்பெற்று வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துகொள். ஒரே மனிதனாக என்றால் இயந்திர கதியான கலவையும் அல்ல. டாக்டர் மார்க்ஸைப் பற்றிய ஓரு சித்திரம் உனக்கு இப்போது கிடைத்திருக்கும் என நம்புகிறேன் ” என்று எழுதியுள்ளார்.

    மார்க்ஸ் தனது இருபதாவது வயதிலிருந்தே தத்துவ ஆராய்ச்சியில் மூழ்கினார். கிரேக்க வரலாற்றையும் தத்துவங்களையும் ஊன்றிப்படித்தார். கிரேக்கத் தத்துவத்தில் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் என்றுதான் பொதுவாக ஆராய்சியாளர்கள் கவனம் செலுத்துவார்கள். மார்க்ஸ் இவர்களின் தத்துவங்களை ஆய்வு செய்ததோடு எபிகூரஸ், டெமாக்ரிடஸ் ஆகிய இரண்டு கிரேக்கத் தத்துவ ஞானிகளின் புதுமையான சிந்தனைகள் குறித்து வேறு எவரும் செய்திராத அளவுக்கு அவரின் இளமைக் காலத்திலேயே ஆழமாக ஆய்வு செய்துள்ளார்.

    “ கிரேக்கத் தத்துவ வரலாற்று ரகசியங்களின் சாவி இவர்களது சிந்தனையோட்டத்தில் இருந்தது ” என்று மார்க்ஸ் தக்க ஆதாரங்களோடு முதன்முதலாக நிறுவினார்.

    டெமாக்ரிடஸ் கி.மு. 420 காலகட்டத்தைச் சேர்ந்தவர். சாக்டரடீசின் சமகாலத்தில் வாழ்ந்தவர். “ சாக்ரடீசுக்குக் கிடைத்த புகழ் டெமாக்ரிடஸ் என்ற மாபெரும் ஞானிக்கு ஏன் கிடைக்கவில்லை ? ” என்ற கேள்வியை மார்க்ஸ் எழுப்பியுள்ளார். அதேபோல எபிகூரஸ் கி.மு. 342 காலத்தைச் சேர்ந்தவர். அவர் பள்ளிக்கூடங்களை நிறுவி தனது தத்துவங்களை  போதித்தவர். “இருவரும் கிரேக்க ஞானிகளாகத் திகழ்ந்தும் மற்ற தத்துவ ஆசிரியர்களைப் போல பேசப்படாததற்கும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் படாததற்கும் காரணம் வெறும் கதைகளுக்கும் நடைமுறை நம்பிக்கைகளுக்கும் முக்கியத்துவம் தராமல் அறிவியல் ஆதாரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்ததாகும்” என்கிறார் மார்க்ஸ்.

    மார்க்ஸ் தனது மேற்பட்டவகுப்பை முடித்தபிறகு ‘டெமாக்ரிடஸ் மற்றும் எபிகூரஸ் ஆகியோரின் இயற்கை பற்றிய தத்துவத்தின் வேறுபாடு’ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு பல்கலைக்கழகத்தில் சமர்பித்து டாக்டர் பட்டம் பெற்றார்.

    டாக்டர் பட்டம் பெற்ற பிறகு விரிவுரையாளர் வேலையில் சேர முயற்சி செய்தார். மார்க்ஸை ஆசிரியர் பணிக்கு கல்லூரிகள் ஏற்கவில்லை. அவரளவுக்குக் கல்வித் தகுதியும் ஆற்றலும் ஆளுமையும் பெற்றவர் அப்போது அங்கு எவருமில்லையாயினும் மார்க்ஸின் சிந்தனை மாறுபட்டது என்பதே பணி மறுப்புக்குக் காரணம்.

    ரைன்லாந்து பகுதியில் வளர்ந்து கொண்டிருந்த சில தொழில் முனைவோர் ஒன்றுசேர்ந்து ‘ ரைனிஷி ஷெய்டுங் ’ எனும் தினசரி பத்திரிகையைத் தொடங்கினார்கள். இதில் மார்க்ஸ் கட்டுரைகள் எழுதி வந்தார். பத்திரிகை சுதந்திரம் குறித்து ஒரு அரசியல் விவாதம் அவ்வூர் சட்டமன்றத்தில் நடைபெற்றபோது மார்க்ஸ் எழுதிய கட்டுரையில் “வாழ்வதற்கும் எழுதுவதற்கும் எழுத்தாளன் சம்பாதிக்க வேண்டும் என்பது உண்மையே… ஆனால் சம்பாதிப்பதற்காகவே அவன் வாழவோ எழுதவோ கூடாது. எழுத்தாளனுக்கு அவனது எழுத்து ஒரு கருவி அல்ல. அது தன்னளவிலேயே முடிந்த ஒரு இலக்கு, தேவைப்பட்டால், எழுத்து உயிர்பெற்றிருக்க தனது உயிரையும் அவன் தியாகம் செய்வான் ” என்று எழுதினார். இக்கட்டுரை சுமார் 50 பக்கங்களுக்கும் மேலானதாகும்.

    தொடர்ந்து இந்த இதழில் வெளியான மார்க்ஸின் கட்டுரைகள் அந்த இதழுக்கே வலுசேர்த்தன. பத்திரிகை நிர்வாகம் மார்க்ஸை அவ்விதழின் ஆசிரியராக நியமித்தது. 24 வயதில் தனது வித்தியாசமான சிந்தனையாலும் எழுத்தாலும் மார்க்ஸ் தினசரி பத்திரிகையாசிரியரானார். இவர் ஆசிரியரானதும் இவருடைய முயற்சியாலும் இவரது வித்தியாசமான கருத்துக்களாலும் கவரப்பட்டு வாசகர்களின் எண்ணிக்கை விரைவிலேயே இரட்டிப்பு ஆயிற்று. பிற்காலத்தில் மார்க்ஸின் வாழ்நாள் அணுக்கத்தோழராக விளங்கிய பிரடரிக் எங்கெல்ஸ் மார்க்ஸுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாத நிலையில் இந்த இதழின் இங்கிலாந்து நாட்டு நிருபராகப் பணியாற்றினார். கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்ற விரும்பிய மார்க்ஸ் பத்திரிகையாசிரியராகப் பணியாற்றியதோடு அதில் அழுத்தமான முத்திரையும் பதித்தார்.

    ஜோசப் பிரெளதான் என்ற தத்துவ அறிஞர் ‘ வறுமையின் தத்துவம் ’ என்ற ஒரு நூலை எழுதினார். அந்நூலில் “ சமுதாயத்தின் வரலாறு என்பது கருத்துக்களின் போராட்டமே ” என்றும் “ ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நல்ல அம்சமும் உண்டு கெட்ட அம்சமும் உண்டு ; நல்லதை எடுத்துக் கொண்டு கெட்டதை விட்டு விடலாம் ” என்றும்        “ இப்போது உள்ள அமைப்பின் பொருளாதார அடிப்படைகளை மாற்றக் கூடாது ” என்றும் பொத்தாம்பொதுவான சில பழைமைவாதக் கருத்துக் களை அடிப்படையாகக் கொண்டு ‘ வறுமையின் தத்துவம் ’ என்ற நூலை எழுதியிருந்தார்.

    கார்ல் மார்க்ஸ் இந்நூலை வாசித்துவிட்டுக் கொதித்தெழுந்து ஜோசப் பிரௌதான் முன்வைத்த ஒவ்வொரு கருத்துக்கும் ஆணித்தரமான மாற்றுக் கருத்தை முன்வைத்ததோடு அந்நூலின் வாதங்கள் அனைத்தையும் முற்றாக முறியடிக்கும் வகையில் ‘ வறுமையின் தத்துவம் ’ என்ற நூலுக்கு மறுப்பு நூலாக ‘ தத்துவத்தின் வறுமை ’ என்ற நூலை எழுதினார். இது மார்க்ஸின் மிகப் பிரசித்திபெற்ற நூலாகும்.

    ஜெர்மனியிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக வெளியேறி வேறுபல நாடுகளில் குடியிருந்தோர் அனைவரும் தங்களுக்குள் ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்கி நியாயவான்கள் கழகம் ( League of the just ) என்ற அமைப்பை உருவாக்கியிருந்தனர். லண்டனில் இதன் தலைமை அலுவலகம் செயல்பட்டது. இதில் மார்க்ஸ் இணைந்தார். பொதுவாக இருந்த ‘ நியாயவான்கள் கழகம் ’ என்ற அமைப்பின் பெயர் மார்க்ஸின் ஆலோசனைப் படி ‘ கம்யூனிஸ்ட் கழகம் ’ என்று மாற்றப்பட்டது. அனைவரும் சகோதர்களே ( All Men Are Brethren ) என்ற இந்த அமைப்பின் முழக்கம் ‘ உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் ’ என்று மாற்றியமைக்கப்பட்டது.

    இவ்வமைப்பின் மாநாட்டில்தான் கார்ல் மார்க்ஸ் – பிரடெரிக் எங்கெல்ஸ் ஆகிய இருவருக்கும் ஒரு அரசியல் அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அந்த மகத்தான வரலாற்றுப் பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டுத்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை         ( Manifesto of communist party ) என்ற ஆவணத்தை மார்க்ஸும் எங்கெல்ஸும் இணைந்து 1848 இல் நடைபெற்ற ‘ கம்யூனிஸ்ட் லீக் ’ அமைப்பின் மாநட்டில் சமர்ப்பித்தனர்.

    ‘ கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை ’ என்ற இச்சிறு நூல்தான் இன்றளவும் உலக வரலாற்றில் ஒரு முக்கிய அரசியல் ஆவணமாத் திகழ்கிறது. பிற்காலத்தில் மார்க்ஸ் எழுதிய ‘ மூலதனம் ’ என்ற பெருநூலின் முன்னுரைபோல் இந்நூல் அமைந்துவிட்டது. உலகின் பலமொழிகளில் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதோடு ஏராளமான பெரும்பெரும் திறனாய்வு நூல்கள் இந்நூலைப் பற்றியே வெளிவந்திருக்கின்றன. இத்தகைய சிறப்புமிக்க நூலை எழுதியபோது கார்ல் மார்க்ஸுக்கு வயது 30 ; பிரடரிக் எங்கெல்ஸுக்கு வயது 28.

    மார்க்ஸின் இருபத்தைந்தாண்டுகால தொடர் உழைப்பில் உருவானது ‘ மூலதனம் ’ என்ற நூல். அந்நூலை முழுவதுமாக முடித்த பிறகு அச்சிடுவதற்கு சற்று தொலைவிலுள்ள வேறு ஒரு ஊருக்குச் சென்று பதிப்பகத்தாரிடம் நேரில் கொடுக்க வேண்டும். அதற்காகப் புறப்பட்ட மார்க்ஸ் தான் அடமானம் வைத்திருந்த கோட்டையும் கைக்கடிகாரத்தையும் மீட்பதற்கு எங்கெல்ஸுக்குக் கடிதம் எழுதி அதற்கான தொகையையும் பயணச் செலவுக்கான தொகையையும் பெற்ற பிறகே புறப்பட முடிந்தது..

    மார்க்ஸின் குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக பராமரிப்பு இல்லாமல் இறந்து போயினர். ஒரு குழந்தை இறந்த பிறகு சடலமாகக் கிடக்க மார்க்ஸ் குடும்பமே அடுத்த அறையில் உட்கார்ந்து குழந்தையை அடக்கம் செய்வதற்கு சவப்பெட்டி வாங்க யாரிடம் உதவி கேட்கலாம் என்று இரவு நேரத்தில் கண்ணீரோடு கலந்து பேசினர்.

    உலகத்தின் வறுமையை நீக்க தன் வாழ்நாள் பூராவும் இடையராது உழைத்த கார்ல் மார்க்ஸ் கற்பனைக்கெட்டாத வறுமையில் வாடியுள்ளார்.

    பிரபுக் குடும்பத்தில் பிறந்தவரும் பேரழகுப் பெட்டகமாக விளங்கியவருமான மார்க்ஸின் மனைவி ஜென்னி வர்ணிக்க முடியாத வறுமையில் வாடியபோதும் மார்க்ஸுக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருந்திருக்கிறார். மூலதனத்தின் மூலதனமாக ஜென்னி விளங்கியுள்ளார். இந்தத் தம்பதியர் முன்னுதாரணமான கணவன் – மனைவிக்கு இலக்கணம் வகுத்துள்ளனர்.

    வசதியான குடும்பத்தில் பிறந்த எங்கெல்ஸ் மார்க்ஸின் உயிர்நாடியாகத் திகழ்ந்துள்ளார். இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் மட்டுமே காணப்படுகிற உண்மை நட்பின் உன்னத இலக்கணமாக மார்க்ஸ் – எங்கெல்ஸ் நட்பு திகழ்ந்துள்ளது.

    மார்க்ஸைப் போலவே எங்கெல்ஸும் மேதமை மிக்கவர். மார்க்ஸ் இறந்ததற்குப் பிறகு அவர் முடிக்காமல் விட்டுச் சென்ற அத்தனை அரும்பணிகளையும் மார்க்ஸ் பெயராலேயே முடித்துவிட்டு மூச்சை விட்டுள்ளார் பிரடரிக் எங்கெல்ஸ்.

    உழைப்பின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்திய மார்க்ஸின் சிந்தனையும் உழைப்பும் மகத்தானவை.

      கார்ல் மார்க்ஸின் 200 ஆவது பிறந்த தினச்சிறப்புக் கட்டுரை

    தினமணி, 06.05.2017

    ( கட்டுரையாளர் : மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் )

    Share
  • ஈரோடு மாநகராட்சியில் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் வார்டுதோறும் வாசகர்வட்டம்

                              த. ஸ்டாலின் குணசேகரன்

                                      தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை.

    _______________________________________________________

    ஈரோடு

    27.03.2017

    ஈரோடு மாநகராட்சியில்

    மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில்

    வார்டுதோறும் வாசகர்வட்டம்

    மக்கள் சிந்தனைப் பேரவை தொடங்கப்பட்டு 18 ஆண்டுகளாகின்றன. பேரவை தொடங்கப்பட்டதிலிருந்தே கல்வி, வாசிப்பு, சமூகச்சிந்தனை, சமூகசேவை ஆகியவற்றில் முழுகவனம் செலுத்திபல செயல்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

    ஈரோடு புத்தகத் திருவிழாவை கடந்த 12 ஆண்டுகளாக மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தி வருகிறது. வாசிப்பை வலியுறுத்தி 12,500 கல்லூரி மாணவர்களின் மராத்தான் ஓட்டம், ‘ ஈரோடு வாசிக்கிறது ’ என்ற தலைப்பில் 15,000 மாணவர்கள் ஒரே இடத்தில் ஒருமணி நேரம் புத்தகவாசிப்பு, 20,000 மாணவர்கள் தங்கள் இல்லங்களில் ஒரு நூலகத்தைத் தொடங்க உறுதியேற்பு போன்ற வாசிப்பை வலியுறுத்தும் பல நிகழ்வுகளை பேரவை நடத்தியுள்ளது.

    அடுத்தகட்டமாக ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ‘ வார்டுக்கு ஒரு வாசகர்வட்டம் ’ என்ற வகையில் தொடங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வாசகர்வட்டம் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 20 வாசகர்களும் அதிகபட்சம் 50 வாசகர்களும் இருக்கவேண்டும், மாதமொரு வாசகர்வட்டக் கூட்டம் நடைபெற்று மாதம் முழுவதும் உறுப்பினர்கள் வாசித்தவை குறித்து அதில் கலந்துரையாடுதல் போன்ற பல விதிமுறைகள் பேரவையால் வகுக்கப்பட்டுள்ளன.

    தங்களது வார்டுகளில் வாசகர்வட்டம் தொடங்க எண்ணுவோர் அதற்கான படிவத்தைப் பெற A- 47, சம்பத் நகர், ஈரோடு – 638 011 என்ற முகவரியில் இயங்கும் மக்கள் சிந்தனைப் பேரவை அலுவலகத்தை அணுகி அதற்கான படிவங்களையும் ஆலோசனைகளையும் பெறலாம் என்று பேரவையின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

    கூடுதல் விபரங்கள் www.makkalsinthanaiperavai.org என்ற இணையதளத்தில் உள்ளன. 0424 – 2269186, 88831 24443 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

    Share
  • பகத்சிங்கின் பன்முக ஆளுமை

    த. ஸ்டாலின் குணசேகரன்

    bhagat-singh_2qmc_18559

    மாவீரன் பகத்சிங் 1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி மாலை லாகூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டபோது அவருக்கு வயது 23 மட்டுமே நிறைவு பெற்றிருந்தது. அவருடன் தூக்கிலிடப்பட்ட ராஜகுரு, சுகதேவ் ஆகிய இரண்டு புரட்சியாளர்களுக்கும் ஏறக்குறைய அதே வயதுதான்.

    இருபத்திமூன்று வயதில் இமாலயத்தாக்கத்தை இந்திய இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்திய பகத்சிங்கின் செயல்பாடுகள் யாவும் விளையாட்டுப் போக்கிலே விளைந்தவையல்ல. சாகசம் புரிய வேண்டும் என்று சிந்தித்துச் செயல்பட்ட ஒரு திறமைமிக்க இளைஞரின் வீரதீரச் செயல்பாடுகளுமல்ல.

    பகத்சிங்கின் வரலாற்றை ஆழமாக ஆய்வு செய்தால் வயதிற்கும் மீறிய பக்குவமும் ஆளுமையும் பெற்ற ஒரு இளம் தலைவரை இந்திய நாடு பெற்றிருந்த பெருமையை நம்மால் நன்கு உணர முடியும்.

    மாவீரன் பகத்சிங் ஒரு புரட்சியாளர், தியாகி, தேசபக்தர் என்பதை அனைவரும் அறிவோம். இந்தச் சொற்றொடர்களால் மட்டும் முழுமையான பகத்சிங்கை நமக்கு அறிமுகப்படுத்திவிட முடியாது. இவையெல்லாம் அவரது அடிப்படைகளென்றாலும் பன்முக ஆளுமைமிக்க தலைமைப் பண்புகளே அவரது தனிச் சிறப்புகளாகும்.

    பிறவி மேதமை என்பது கூட அறிவியல் சார்ந்ததுதான் என்று அறிவியலாளர்கள் நிறுவியிருக்கிறார்கள். மரபணு ஒரு மனிதனின் உருவாக்கத்திற்கு அடித்தளமிடுவதாக அறிவியல் தெரிவிக்கிறது. பகத்சிங்கின் சிறப்புமிக்க ஆளுமைக்கு எத்தனையோ புறக்காரணங்கள் இருந்திருப்பினும் அவரது குடும்ப வரலாற்றையும் இணைத்துப் பார்க்கிறபோது மரபணுவின் பங்களிப்பும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

    பகத்சிங்கின் ஒட்டுமொத்தக் குடும்பமே ஒரு ஆழமான, அழுத்தமான தேசபக்தக் குடும்பம். பகத்சிங்கின் தாத்தா ஆர்ஜுன்சிங் ‘ ஆர்ய சமாஜம் ’ என்ற சுவாமி தயானந்த சரஸ்வதியின் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்தவர். ஆன்மீகத்தையும் அரசியலையும் இரண்டு கண்களாகப் போற்றியவர். சுய முயற்சியால் இந்தி, சமஸ்கிருதம், உருது, பாரசீகம் மற்றும் பஞ்சாபி மொழிகளில் எழுதப்படிக்க மட்டுமல்லாது பாண்டித்தியமும் பெற்றவர். ‘ யுனானி ’ முறை மருத்துவத் தொழிழையும் சிறப்பாகச் செய்து வந்தவர்.

    வேளாண்மை அர்ஜுன்சிங்கிற்கு அடிப்படைத் தொழிலாகவும் விளங்கியது. தனது கடுமையும் நுட்பமுமான நேரடி உழைப்பால் உழவுத்தொழிலில் பெருவெற்றி பெற்றவர் அர்ஜுன்சிங். வளமும் வசதியும் மிக்க குடும்பமாக இவரது குடும்பம் திகழ்ந்தது.

    அர்ஜுன்சிங் அந்தப் பகுதியில் மக்கள் செல்வாக்கு மிக்கவராகவும் விளங்கினார். அவரது சொந்த ஊரில் சீக்கியர் கோயிலான ‘ குருத்வாரா ’ கட்டினார். குருத்வாரா சீர்திருத்தங்களுக்கும் அகாலி இயக்கத்தின் மாற்றங்களுக்கும் குரல் கொடுக்கும் விதமாக தலையில் கருப்புநிற முண்டாசு கட்டிக்கொண்டு தனது புரட்சிகரமான மாற்றுக் கருத்தை வெளிப்படுத்தினார்.

    அர்ஜுன்சிங் படிப்படியாக ஆர்யசமாஜ இயக்கத்திலிருந்து விடுபட்டு காந்தியடிகள் அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். இந்திய விடுதலைக்காக சீக்கியர்கள் அமெரிக்காவில் உருவாக்கிய தீவிரமான அரசியல் இயக்கமான ‘ கதார் ’ கட்சியின் இந்தியத் தொண்டர்களுக்கு ஆங்கிலேயே அடக்குமுறையின் போது தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்து முழுப்பாதுகாப்பளித்தார்.

    அர்ஜுன்சிங்கிற்கு கிஷன்சிங், அஜித்சிங், ஸ்வரன்சிங் ஆகிய மூன்று ஆண் மக்கள் வாரிசுகளாக விளங்கினர். இந்த மூவருமே அர்ப்பணிப்பு உணர்வு மிக்க தேசபக்தர்கள். நாட்டுப்பணியே தமது முழுநேரப்பணியாக உணர்வுப் பூர்வமாக ஏற்றுத் தேசத் தொண்டாற்றியவர்கள். மூவரில் மூத்தவரான கிஷன்சிங்கின் மகனாகப் பிறந்தவர்தான் பகத்சிங்.

    ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு கடுமையாக ஆட்பட்ட பகத்சிங்கின் தந்தை கிஷன்சிங் காவல்துறையின் கரங்களில் அகப்படாமல் தலைமறைவாக நேப்பால் சென்றுவிட்டார். இவர், ‘ பாரதமாதா சங்கம் ’ என்ற அமைப்பின் மூலமும் தீவிரக் களப்பணியாற்றுபவராக விளங்கினார். இவரின் தேசப்பணியின் காரணமாக இவருக்கு அந்தக் காலகட்டத்தில் குடும்பத்தாரோடு வசிக்க முடியாத சூழ்நிலை நிலவியது. சித்தப்பா அஜீத்சிங் பர்மாவுக்கு ஆங்கிலேயே அரசால் நாடு கடத்தப்பட்டிருந்தார். கடைசிச் சித்தப்பா ஸ்வர்ன்சிங் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.

    வெவ்வேறு பகுதிகளிலும் சூழல்களிலுமிருந்த மூன்று சகோதரர்கள் விடுதலை பெற்றும் கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையிலும் சொந்த ஊருக்குத் திரும்பினர். ஏதேச்சையாக மூவரும் ஒரே நாளில் தங்களது வீட்டிற்கு முன்னும் பின்னுமாக வந்தடைந்தனர். சொல்லி வைத்தாற்போன்று 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதியான அவர்கள் வீடுதிரும்பிய அதேநாளில்தான் பகத்சிங் பிறந்தான். அவர்கள் வருவதற்கும் பகத்சிங் பிறப்பதற்கும் காலம்,  நேரம் பொருத்தமாக அமைந்தது. பகத்சிங்கின் தாத்தா வர்ணிக்க முடியாத ஆனந்தத்தில் ஆழ்ந்து பஞ்சாபி மொழியில்     ‘ அதிர்ஷ்டக்காரன் ’ என்ற பொருள்பட ‘ பகன்வாலா ’ என்று பெயர் சூட்டினார். அதுவே பள்ளியில் பெயர்ப் பதிவு செய்யப்பட்டபோது ‘ பகத்சிங் ’ என்று சிறு மாற்றத்துடன் பதிவாயிற்று.

    உலக இந்தியர்களிடையே புகழ்மிக்க விடுதலைப் போராட்டத்தலைவர்களாக விளங்கிய ராஷ் பிகாரி போஸ், ‘ காமகட்டமாரு ’ என்ற கப்பலில் கனடா சென்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் தலைமையேற்ற புரட்சிக்குழுத் தலைவர் பாபா குர்திர்சிங், பிற்காலத்தில் அந்தமான் சிறைச்சாலையில் பல்லாண்டு காலம் தனிமைச் சிறையிலிருந்து சித்ரவதைப்பட்ட பாய் பரமானந்தா, புரட்சியாளர் சசிந்திரநாத் சன்யால் போன்ற நாடு தழுவிய மிக முக்கியத்துவம் பெற்ற பல தலைவர்கள் பகத்சிங் குடும்பத்தாரின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும்தான் மாதக்கணக்காக இருந்திருக்கின்றனர்.

    பகத்சிங்கின் சித்தப்பா அஜித்சிங் நாடு விடுதலை பெறும்வரை தலைமறைவு வாழ்க்கை நடத்துபவராகவும் தொடர்ந்து நாடுகடத்தப்படுபவராகவுமே வாழ்ந்தார். இன்னொரு சித்தப்பா ஸ்வரன்சிங் சிறைச்சாலையிலேயே மரணமடைந்தார்.

    பகத்சிங்கிற்கு அமையப்பெற்ற வலுவான தேசபக்தக் குடும்பப் பின்னணியும் இவரது குழந்தைப் பருவத்திலிருந்தே தாத்தாவை, தந்தையை, சித்தப்பாக்களை சந்திக்க வந்து வீட்டில் தங்கியிருந்த கீர்த்திமிக்க தேசத் தலைவர்களைப் பார்த்தது, பழகியது; அவர்களிடையே நிகழ்ந்த விவாதங்களையும் உரையாடல்களையும் கேட்கும் வாய்ப்பைப் பெற்றது; அவரது குடும்பத்தில் ஆங்கிலேய ஆட்சியினரின் அடக்குமுறையால் நேர்ந்த அடுத்தடுத்த சோக நிகழ்வுகளால் ஏற்பட்ட அனுபவங்கள் போன்றவையே இவரது ஆளுமையின் அடித்தளங்களாக விளங்கின.

    பகத்சிங் தனது 12 வது வயதில் பூர்வீகக் கிராமத்திற்குச் சென்றிருந்த தனது தாத்தாவுக்கும் 13,14 ஆவது வயதுகளில் சிறையில் இறந்துபோன தனது சித்தப்பா ஸ்வரன்சிங்கின் மனைவியான சித்திக்கும் பல கடிதங்கள் எழுதியுள்ளார். அவற்றில் மூன்று கடிதங்கள் கிடைக்கப்பெற்று டெல்லி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சிறுவயதில் தனது பிஞ்சுக் கரங்களால் எழுதிய கடிதத்தில், தான் லயால்பூரில் நடைபெறவுள்ள ஒரு பொதுக்கூட்டத்திற்குப் போய் தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்க விரும்புவதாகவும் அதன் காரணமாகவே ஊருக்கு வர இயலாது எனவும், தான் ஒரு பழைய அரிய புத்தகத்தை மிகக்குறைந்த விலையில் வாங்கியுள்ளதாகவும் ரயில்வே தொழிலாளர்கள் தங்களின் வேலை நிறுத்தத்திற்குத் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் அப்போராட்டம் விரைவில் தொடங்கவிருப்பதாகத் தான் நம்புவதாகவும் எழுதியுள்ளார். சிறுவனாக இருக்கும்போது வீட்டுக்கு எழுதிய கடிதங்களில் கூட நாட்டு நிகழ்வுகளைப் பற்றி பக்குவமாக எழுதியுள்ள பாங்கு கவனிக்கத்தக்கதாகும்.

    பள்ளிப் பருவத்தில் தொடங்கிய கடிதம் எழுதும் பழக்கத்தை கடைசிவரை பகத்சிங் கைவிடவில்லை. மேலும் மேலும் இவரின் இப்பழக்கம் நன்கு செழுமைப்பட்டது. தூக்குமேடையேறிய கடைசி நாளில் கூட ஒரு கடிதத்தை  எழுதிவிட்டுத்தான் விடைபெற்றிருக்கிறார். இந்தியக் கடித இலக்கிய வரலாற்றில் பகத்சிங்கின் கடிதங்களுக்கு ஒருதனி இடம் எப்போதும் உண்டு.

    கொடியவன் டயரால் ஜாலியன் வாலாபாக் பூங்காவில் ரவுலட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகளின் அறைகூவலுக்கு இணைங்கித் திரண்ட நிராயுதபாணிகளான சத்தியாகிரகிகள் நூற்றுக்கணக்கில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்நிகழ்ச்சி நடந்தது 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி.

    ஜாலியன் வாலாபாக் சம்பவம் நடைபெற்ற அடுத்த நாளே பள்ளிக்குப் புறப்பட்ட பகத்சிங் ரயிலேறி அமிர்தசரஸ் நகரக்குச் சென்று ஜாலியன் வாலாபாக் பூங்காவில் மடிந்த சத்தியாகிரகிகளின் ரத்தம் தோய்ந்த மண்ணை ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து தனது பைஜாமா பாக்கெட்டில் போட்டு எடுத்துக் கொண்டு ஊருக்குத் திரும்பினார்.

    மாலை வழக்கமான நேரத்தில் பள்ளியை விட்டு வீட்டுக்கு பகத்சிங் வரவில்லை என்று குடும்பத்தார் பதற்றமடைந்தனர். இருள் சூழும் சமயத்தில் திரும்பிய பகத்சிங் தனது தங்கையிடம் தான் கொண்டுவந்த ரத்தம் தோய்ந்த மண்ணடங்கிய பாட்டிலைக் காட்டியதோடு அதனை வீட்டில் ஓர் இடத்தில் வைத்து தினமும் பூப்போட்டு வீர வணக்கம் செலுத்தியுள்ளார். அப்போது அவருக்கு வயது 12.

    ஏற்கனவே அதே ஜாலியன் வாலாபாக்கில் இச்சம்பவத்திற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பிருந்தே தேசபக்தர்களால் நடத்தப்பட்ட சில பொதுக்கூட்டங்களுக்கு தனது தந்தையாரோடு சென்ற அனுபவம் பகத்சிங்கிற்கு இருந்தது.

    விளையாடிக்கழிக்க வேண்டிய விடலைப் பருவத்தில் வீரத்தின் விளைநிலமாகத் திகழ்ந்ததோடு வயதிற்கு மீறிய பொறுப்புணர்ச்சியோடும் பக்குவத்தோடும் விளங்கியுள்ளார் பகத்சிங்.

    லாகூர் டி.ஏ.வி. பள்ளியில் 9 ஆம் வகுப்புப் படித்த பிறகு இன்னும் இரண்டாண்டுகள் பள்ளியில் படிக்க வேண்டியிருந்தும் 1921 இல் லாகூரிலுள்ள தேசியக் கல்லூரியில் எஃப். ஏ. படிப்பதற்கு பகத்சிங் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஒன்பதாம் வகுப்புப் படித்து முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் கழித்துக் கல்லூரியில் சேர்வதற்குப் பதிலாக அப்போதே சேரவிரும்பினால் அதற்கு இரண்டு மாதகால அவகாசம் தனித்தயாரிப்புக்காக வழங்கப்பட்ட பின்னர் நடைபெறுகிற போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும். அவ்வாறான போட்டித் தேர்வில் பகத்சிங்கும் அவரது நண்பரான ஜெய்தேவ் குப்தா என்பவரும் பங்கேற்று தேர்வெழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றுவிட்டனர். இதை பகத்சிங்கோடு பரிட்சை எழுதிய ஜெயதேவ் குப்தாவே தனது குறிப்பொன்றில் எழுதித் தெளிவுபடுத்தியுள்ளார்.

    அப்போதுதான் ஒத்துழையாமை இயக்கத்தின் தொடர்ச்சியாக இந்திய ஆங்கிலேய அரசுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் இந்திய மாணவர்கள் படிப்பதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்தது.

    ‘ தேசியக் கல்லூரி ’ என்ற பெயரில் நாடெங்கும் தன்னார்வத்துடன் தேசபக்தர்கள் ஒன்று சேர்ந்து ஆங்காங்கே கல்லூரிகளைத் தொடங்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் லாகூரில் தேசியக் கல்லூரி தொடங்கப்பட்டிருந்தது. இக்கல்லூரியை விடுதலைப் போராட்டத்தின் தேசியத் தலைவர்களின் ஒருவரான லாலா லஜபதிராய் முன்னின்று நிறுவினார்.

    ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று அரசுக் கல்லூரிகளைப் புறக்கணித்துவிட்டு வெளியே வந்த மாணவர்கள் இக்கல்லூரியில் முன்னுரிமை கொடுத்துச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதிலுள்ள பேராசிரியர்கள் தேசபக்த உணர்ச்சியும் பயிற்சியும் உள்ளவர்கள். வழக்கமான பாடப்புத்தகங்களோடு வரலாறு மற்றும் அரசியல் பாடங்களும் சேர்க்கப்பட்டு மாணவர்களுக்கு நாட்டுப்பற்றை ஏற்படுத்தி வந்தனர். நாட்டின்  முக்கியத் தலைவர்கள், தேசபக்திமிக்க பல்துறை அறிஞர்கள் போன்றோரை அழைத்து வந்து மாணவர்களுக்கு நல்ல சொற்பொழிவுகளைக் கேட்டும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

    லாகூர் தேசியக் கல்லூரியில் சேர்ந்த பகத்சிங்கிற்கு இக்கல்லூரி ஒரு பாடசாலையாக மட்டுமல்லாமல் பாசறையாகவும் திகழ்ந்தது. பள்ளிப் பருவத்திலிருந்தே புத்தக வாசிப்புக்கு நன்கு வசப்பட்டவர் பகத்சிங்.

    பகத்சிங்கின் உற்றதோழர் சிவவர்மா தனது கட்டுரையில் “ பகத்சிங் என் அறையில் நேரத்தை பெரும்பாலும் புத்தகம் படிப்பதிலேயே கழித்து வந்தார். விக்டர் ஹீயூகோ, ஹால்கேன், டால்ஸ்டாய், தாஸ்த்தோவஸ்கி, மார்க்சிம் கார்க்கி, பெர்னார்ட்ஷா, சார்லஸ் டிக்கன்ஸ் ஆகியோர் அவரது அபிமான எழுத்தாளர்கள். அவர் பெரும்பாலும் தான் படித்த புத்தகங்களைப் பற்றியே பிறரிடம் பேசுவார். அந்நூல்களைப் பற்றி விவரித்து, எங்களையும் அவற்றைப் படிக்கச் சொல்வார். சில சமயம் பழைய புரட்சிக்காரர்கள் பற்றிய வீரஞ்செறிந்த வரலாறுகளைக் கூறுவார்.  கூர்கா  எழுச்சி, ‘ கதார் ’ கட்சியின் வரலாறு, கர்தார்சிங், சூஃபி அம்பா பிரசாத், ‘ பபர் ’ அகாலிகளின் வீரக்கதைகள் போன்றவற்றை விவரிக்கும்போது அவர் தன்னை மறந்து விடுவார். அவருடைய வர்ணனையும், நடையும் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும் ” என்று கூறியுள்ளார்.

    அர்ஸ்டாட்டில், பிளேட்டோ, ரூசோ, டிராட்ஸ்கி, பெர்ட்ராண்ட்ச்ரசல், கார்ல்மார்க்ஸ், எங்கெல்ஸ், தாகூர், லஜபதிராய் போன்ற உலக அளவிலும் இந்திய அளவிலும் புகழ்மிக்க அறிஞர்களின் ஏராளமாக நூல்களை ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும்  தேடித்தேடி வாசித்துள்ளார் பகத்சிங். படிக்கப் படிக்க முக்கியத்துவம் உள்ள பகுதிகளையும் சந்தேகம் ஏற்படுகிற இடங்களையும் தனி நோட்டுப் புத்தகங்களில் எழுதிவைத்துக் கொண்டு அவை குறித்து நண்பர்களிடம் விரிவாக விவாதித்துள்ளார். அவரால் குறிப்பெடுக்கப்பட்ட நோட்டுப் புத்தகங்களெல்லாம் இப்போதும் ஆவணங்களாக உள்ளன.

    கான்பூரில் காங்கிரஸ் கட்சியின் புகழ்பூத்த தலைவராக விளங்கிய கணேஷ் சங்கர் வித்யார்த்தி என்பவர் நடத்தி வந்த ‘ பிரதாப் ’ என்ற ஆங்கில வார இதழில் பணியாற்றினார் பகத்சிங். கணேஷ் சங்கரிடம் கிடைத்த எழுத்து மற்றும் இதழியல் பயிற்சியை பகத்சிங் ஈடுபாட்டுடன் கூடிய அயராது உழைப்பின் மூலம் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்.

    பாபா சோகன்சிங் ஜோஷ் இந்தியப் புரட்சியாளர்களின் தலைவர்களில் மிகவும் முக்கியமானவர். 23 ஆண்டுகளுக்கும் மேல் சிறையிலிருந்தவர். இந்திய விடுதலைக்காக அமெரிக்காவிலுள்ள சீக்கியர்களை ஒன்றிணைத்து ‘ கதார் ’ என்ற புரட்சிகர அரசியல் கட்சியைத் தொடங்கியவர்களில் ஒருவராக விளங்கியதோடு அதன் தலைவராகவும் திகழ்ந்தவர். அத்தகைய பெரும் தலைவரை ஆசிரியராகக் கொண்டு 1926 இல் வெளிவந்த ‘ கீர்த்தி ’ என்ற இதழின் துணையாசிரியராக ‘ பகத்சிங் ’ பணியாற்றினார். கீர்த்தி என்றால் ‘ தொழிலாளி ’ என்று பொருள். டெல்லியிலிருந்தபோது ‘ அர்ஜீன் ’ என்ற உருது இதழின் ஆசிரியர்க்குழுவிலும் பணியாற்றினார்.

    பகத்சிங் ‘ ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுச் சங்கம் ’ என்ற அமைப்பில் இணைந்து முழுமூச்சோடு செயல்பட்டு வந்தார். அத்தோடு தான் படித்த லாகூர் தேசியக் கல்லூரியில் ‘ நவஜவான் பாரத் சபா ’ என்ற ஒரு புதிய இளைஞர் அமைப்பை தனது தோழர்களோடு சேர்ந்து நிறுவினார். இந்த அமைப்பு நிறுவப்பட்ட விதமும் இது வழி நடத்தப்பட்ட முறையும் தனித்த ஆய்வுக்கும் சிந்தனைக்கும் உரியவை. கல்லூரி முதல்வரிலிருந்து பேராசிரியர்கள் மாணவர்கள் என்று பலரையும் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே ஒரு அரங்கில் அமரவைத்து அனைவரையும் ஒன்றிணைக்கும் விரிந்த அமைப்பாகவும் அதே சமயத்தில் புரட்சிகரக் கருத்துகள் கொண்ட நாட்டு விடுதலைக்குக்குக் களப்பணியாற்றும் தேர்ந்த ஊழியர்களைக் கொண்ட அமைப்பாகவும் ஏக காலத்தில் இவ்வமைப்பு செயல்பட்டது. பகத்சிங் ஒரு மேம்போக்கான போராட்ட வீரராக அல்லாமல் ஒரு பக்குவப்பட்ட, பண்பட்ட அமைப்பாளர் என்பதை இவரது அமைப்பு சார்ந்த பணிகளை நுட்பமாக அலசுகிறபோது தெரியவருகிறது.

    பகத்சிங் நன்கு உரையாடுபவராகத் திகழ்ந்தார். கல்லூரி மாணவர்களிடத்தில், சகபுரட்சிக்காரர்களிடத்தில், நீதி மன்றத்தில் அவர் பேசியபோதெல்லாம் ஒரு தெளிவும் உறுதியும் வெளிப்பட்டுள்ளது.

    அவர் சிறையில் இருந்தபோது எழுதிய 3,4 புத்தகங்கள் ரகசியமாக வெளியில் கொடுத்தனுப்பப்பட்டு அது முறையாகப் பாதுகாக்கும் சூழல் இல்லாததால் அவை தொலைந்து போயின. இருப்பினும் எஞ்சியுள்ள ‘ நான் நாத்திகன்   ஏன் ? ’ என்ற சிறு நூலும் அவர் இதழ்களில் எழுதிய பல கட்டுரைகளும், துண்டறிக்கைகளும் கடிதங்களும் அவரது எழுத்தாற்றலைப் புலப்படுத்துகின்றன.

    ஆம்…

    பகத்சிங் பன்முக ஆளுமைமிக்க இளம்தலைவர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

    இன்று பகத்சிங் நினைவுநாள்.

    ( கட்டுரையாளர் : மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் )

    நன்றி ‘ தினமணி ’ – நாளிதழ்  23.03.2017

    Share