Tag: நாகினி

  • வடிவாய் கவிசெய்வோம் வா!

    நாகினி

     

    நடித்து மனத்தினுள் நஞ்சை மறைத்து
    கடிக்கும் உறவினி கானலாய் மாற
    வடிவாய் கவிசெய்வோம் வா!

    அடித்து எதையும் அபகரிக்கும் எண்ணம்
    மடிந்து புவியில் மனிதம் நிலைக்க
    வடிவாய் கவிசெய்வோம் வா!

    தடியை எடுத்து தவறைத் திருத்த
    படிகள் அமைக்கும் பதங்கள் இணைய
    வடிவாய் கவிசெய்வோம் வா!

    இடியாய் மனதில் இறங்கிடும் நஞ்சாய்
    தடிக்கும் உரையை தகர்த்தே எறிய
    வடிவாய் கவிசெய்வோம் வா!

    படித்த நலமிகு பாதை தவறும்
    துடிக்கும் இளமை துவண்டுவிழா தேற
    வடிவாய் கவிசெய்வோம் வா!

    படிக்கல் எடுத்தளவு பாதி கொடுத்து
    மடிக்கும் களவுநிலை மாற்றும் கருத்தில்
    வடிவாய் கவிசெய்வோம் வா!

    ஒடித்து மரத்தை ஒதுக்கி அடுக்கு
    மடிப்பில் மனைகளாக்கும் மாற்றம் எதிர்த்து
    வடிவாய் கவிசெய்வோம் வா!

    துடித்து பிறருறும் துன்பம் துடைத்தால்
    இடித்து நகைத்திடும் ஈனரைக் கிள்ளி
    வடிவாய் கவிசெய்வோம் வா!

    …. நாகினி

    Share
  • பலம் தரும் பகுத்தறிவு

    நாகினி 

     

    பணக்கட் டிலெழு துகோல் சொருகி
    .. பணத்தை இழுத்து சுருட்டும் செயலால்
    குணத்தி னுயர்மா னமுஞ்சிந் தனையும்
    … குறுகி பகுத்த றிவுமெல் லழியும்

    அழியும் பகுத்த றிவினால் மனிதர்
    .. அடையா ளமிழந் துநிற்க கயமை
    வழியும் தொடரு தலினால் உறவின்
    .. வலிமை யுமிங்கு நசுங்கு கிறது

    நசுங்கி கனவா கிடவாழ்வு வழிகளில்
    .. நடத்தி டலாகுங் கொடுந்து யரென
    அசுத்த நினைவுகள் தொடரா மழகு
    .. அரணாய்ப் பகுத்த றிவிலு யரலாம்

    உயர வழிவிட் டகலும் வெறுப்பு
    .. உமிழும் கயமை பிணக்கு விடுத்து
    நயமாய் அடங்கும் பகுத்த றிவினில்
    .. நடந்தி டயென்றும் பலப்ப டுமுள்ளம்!

     

    Share
  • மனம் வென்றிடும் நேர்

    நாகினி

     

    மனம் வென்றிடும் நேர்..
    (நொண்டிச்சிந்து)

    உண்மையில் அன்பினா லே .. இனி
    .. உள்ளொன்று வைக்காத பேச்சினி லே
    சண்டைகள் வந்தாலு மே .. உயர்
    .. சங்கட மேதுமி லாதோடு மே

    தங்கிடும் அன்புட னே.. உயர்
    .. தானங்கள் செய்கின்ற தொண்டுட னே
    மங்காத பேறுபெற் றோர்..வாழும்
    .. மண்ணிதை வாழ்த்திட ஆவலுற் றோர்

    வேண்டிடும் நல்வரம் வந்தினி தே.. பேர்
    ..வெற்றியை வாங்கிடும் காலமி தே
    தூண்டிய ஊக்கமும் தந்தநல் லோர்..வாக்கு
    .. துன்பத்தை நீக்கிட வந்தசான் றோர்

    சொல்லிய அன்புடன் வாழ்வது தான்.. மேன்மை
    .. சொந்தமும் பந்தமும் உற்சாகத் தேன்
    துல்லிய மாகவே பெற்றிடுந் தேர்.. என்றே
    ..தூயம னத்தாசை வென்றிடும் நேர்!

    … நாகினி

    Share
  • பாதங்களால் நிறையும் வீடு

    நாகினி

     

    பாதங்களால் நிறையும் வீடு..
    (அறுசீர் ஆசிரிய விருத்தம்)

     

    மோதலைத் தவிர்த்து மண்ணிலே உறவின்
    … மொழியென மலரும்
    காதலில் கலந்த நெஞ்சுரம் கொண்டோர்
    .. கால்களின் மென்மை
    பாதமும் நிறைந்து வலம்வரும் வீடு
    .. பாரினில் மேன்மை
    நாதமாய் ஒலிக்கும் இல்லற தர்மம்
    .. நலம்பெறத் தூணாம்

    தூய்மையாய் நாட்டில் உறவுகள் தழைத்து
    .. துலங்கிடச் செய்யும்
    வாய்மையின் அறமாய் அமைந்தநல் வீடு
    .. வருகையின் பாதம்
    தேய்ந்திடா வண்ணம் கூடியே வாழ்ந்தால்
    .. தேசமும் ஓங்கி
    சாய்ந்திடாப் புகழை என்றுமே பெற்று
    .. சரித்திரம் படைக்கும்

    ஒற்றுமை வலிமை நிலைத்திட நினைக்கும்
    .. ஒப்பிலா மாந்தர்
    உற்றுணர் எண்ணம் சிறப்புடன் வளரும்
    … உறுதியின் வாசல்
    கற்பனை கடந்த பாலமாய் மனையைக்
    .. காத்திடும் பாதம்
    பற்றுடன் என்றும் உறவினை நாடி
    .. பார்த்திடத் துடிக்கும்

    வணங்கிட மறுத்து மூத்தவர் நோக
    .. வாசலில் துரத்தும்
    பணமுடன் சொத்து பெரிதென நினைத்து
    .. பழகிடும் சொந்தம்
    இணக்கமும் இன்றித் தலைக்கனம் கொண்டு
    .. இயங்கிடும் வீடு
    மணமுறி வென்று பாதமும் வழக்கு
    .. மன்றிலில் நிற்கும்

    எண்ணமும் அன்பின் சின்னமாய் என்றும்
    .. எளிமையை விரும்பும்
    கண்ணியம் வளர்க்கும் உறுதியில் நடந்து
    .. கடமைகள் செய்யும்
    மண்ணிலே உறவின் கூட்டமாய் மதிப்பு
    .. மாந்தரின் வருகை
    பண்புடன் பாதம் நிறைந்திடும் இல்லம்
    .. பார்புகழ் பெறுமே!

    … நாகினி

    Share
  • ஊடு பயிர்…

     

    என்னவோ சாபமோ ஏனோ பிறப்பிங்கு
    நன்மக வாயென நாப்புலம்பும்… தன்மையில்
    பெண்ணென ஆணாகப் பேடு!

    பேடும் ஒருபிறவி பெற்றாரென் றெள்ளிநகை
    யாடும் நிலையறுக்கு மார்வமானப்.. பாடுதரும்
    ஊடு பயிராய் உறவு!

    உறவுடன் கூடும் உலகினில் பேடும்
    பிறப்பென உண்மை பிணைந்த… அறமும்
    மறவனுக் கேற்புடைய மாண்பு!

    … நாகினி

    Share
  • கண்ணதாசன்..

    நாகினி
    (சிந்தியல் வெண்பா)

     

    கண்ணெனத் தத்துவங்கள் காலமெல்லாம் நீண்டிருக்கப்
    பண்ணென ஏட்டில் படங்களில்.. கண்ணிமை
    வண்ணமானார் கண்ணதாசன் வாழ்ந்து!

    காவியம் ஆக்கிய கண்ணதாசன் என்றென்றும்
    ஓவியம் என்றே ஒயிலாகப் .. பாவிகளின்
    நாவிலும் பாட்டாவார் நம்பு!

    பாவங்கள் நீக்கியே பண்படுத்தும் தத்துவம்
    காவலாக எந்நாளும் கண்ணதாசன்.. பாவலம்
    ஏவலாகி வந்திடும் ஏற்பு!

    ஆவலுடன் பாடிட ஆனந்த கீதமென
    நாவரசு கண்ணதாசன் நற்றமிழ் .. நாவலும்
    பாவலரால் ஏற்றிடும் பாட்டு!

    … நாகினி

    Share
  • உதயம் காணா இதயம்

    நாகினி

     

    விதையாய் விழுந்து கதையாய் போனது
    அன்பின் பிம்பம் கன்றிட நோகுது
    தெம்பு தராமல் வம்பு வளர்ந்திட
    என்னதான் காரணம் சின்னதாய்ச் சண்டையோ!

    சண்டையும் இல்லையே மண்டையும் காயுதே
    பிணக்குகள் தொடர்ந்திடும் கணக்குகள் புரியாமல்
    ஒற்றுமை மனங்களில் வேற்றுமை வளர்வதேன்
    விடுகதை வாழ்வினில் நடு(ம்)கதை சாதியோ!

    சாதியோ மதமோ சாதித்து பிரிவினை
    நோய்தனைப் பரப்பியே பாய்தனில் விழச்செயும்
    பாதகப் படுகுழி வாதகம் சேர்வதால்
    நேசக் கரங்களும் பாசக் கயிற்றினில்!

    கயிற்றினில் தொங்கிட வயிற்றினில் அடித்திங்கு
    நசுக்கிடும் காதலை பொசுக்கிடும் நிலையால்
    உதயம் காணா இதயம் துடித்து
    வெந்து விழிநீருடன் நொந்து உலவுதே!

    … நாகினி

    Share
  • கவியரங்கக் கவிதை.. 1

    நாகினி

    சமூக முன்னேற்றத்திற்கு வேண்டியது….
    (நேர்மையான அரசு)

    மொழி வாழ்த்து

    சத்தியம் சொல்வதற்குச் சக்தியானச் செந்தமிழே
    வித்தென எங்கருத்தை வீம்பிலா வார்த்தைகளால்
    மத்தளமாய்க் கொட்டிநல் மன்றத்தில் சேர்ப்பதற்கு
    இத்தருணம் காப்பாய் இனிது!

    அவையடக்கம்

    எம்போன்றோர் நற்கவியை ஏற்று யினிதாய்த்
    தம்மன்பால் வாழ்த்தத் தவமென யாம்பெற்ற
    நம்பிக்கை ஊட்டும் நடுவர் அவையோர்முன்
    பம்பரநாச் சுற்றும் பணிந்து!

    நேர்மையான அரசு

    எட்டிவிட்டோம் பெண்கல்வி எட்டாத தூரத்தில்
    பட்டமுடன் ஆளும் பதவியும் பெற்றென்ன
    கிட்டியதா இன்னும் கிழியாத நல்லாடை
    அட்டிலென நேர்மை அரசு!

    நேர்மை அரசென நேசமிகு ஆட்சியின்
    பார்வை அமையாததால் பண்பு கெடுக்கின்ற
    பார்கள் எனயெங்கும் பாதைமாற்றும் போதையில்
    ஊர்கள் குடிபுகும் ஊறு!

    குடிபுகுந்து ஊறுசெய்துக் கூத்தடிக்கும் வஞ்சம்
    தடிபிடிக்கும் மூப்பிலும் தப்பான நெஞ்சம்
    படிந்தினிதாய் சட்டமெனும் பாதமுடன் கொஞ்சி
    நடிப்பதன்றோ வாழ்வுக்கு நஞ்சு!

    வாழ்வுக்கு நஞ்சாகும் வாக்குத் தவறியிங்கு
    தாழ்வுக்குப் பாலமாச்சே தப்பான ஆட்சியென
    ஊழ்வினையை நொந்திங்கே ஊர்கூடி மௌனித்தால்
    ஏழ்மையென்றும் மாறாத ஏறு!

    மாறாத ஏறுமுக மாசெனப் பொய்புரட்டே
    ஆறாதப் புண்ணாகி ஆட்சிபீடம் ஏறியிங்குத்
    தேறாத மக்களின் தேர்தல் இதுவெனச்
    சேறாகும் ஆளும் செழிப்பு!

    ஆளும் செழிப்பு அமைந்தரசு நேர்மையில்
    நாளும் மறையாத நம்பிக்கை ஊக்கவுறுதி
    வாளும் நிறைவான வாட்டமிலா நெஞ்சாகி
    மாளும் சமுதாய மாசு!

    சமுதாய மாசெனச் சாதிக் கொடுமை
    அமுதான மானிடத்தை ஆட்டிவைக்க நச்சுக்
    குமுதமாய் தேர்தலாட்சி கும்பிடு வாக்கும்
    சுமுகமான பேச்சும் சுணக்கு!

    பேச்சும் சுணங்கிவிட்டால் பெற்றிட லாகுமே
    கூச்சல் குழப்பம் குடியாட்சி எங்கிலும்
    ஏச்சும் குறையாத எந்திர வாழ்வெனப்
    பாய்ச்சிப் பரவும் பகை!

    பரவும் பகையொழிந்துப் பாசமுடன் நேர்மை
    வரவும் செயலாற்றும் வாக்கும் உளதாய்
    இரக்காக் குடியாட்சி ஈங்கு மலர்ந்தால்
    சரமாய் ஒளிருமாளும் சங்கு!

    ஒளிருமாளும் சங்குடன் ஒப்பிலாத மக்கள்
    இளித்திங்கு வேடமிட்டு இம்சிக்கு வோரைத்
    தளிர்க்கைகள் கோர்த்தென்றும் தண்டிக்கும் போக்கே
    களிப்புடன் முன்னேறும் காப்பு!

    முடிவுரை

    சட்டம் எனும்நற் சாட்டையால் நேர்மையுடன்
    ஆட்சி அமைக்கும் அதிகாரம் அன்புடனும்
    கட்சி குழப்பமின்றி கண்ணாய்க் குடிகாத்தால்
    உச்சி முகரும் உலகு!

    கவியரங்கு தந்தெமக்குக் கண்ணான நெஞ்சே
    நவிழ்ந்திடுவேன் நன்றி நலம்!

    … நாகினி

    Share
  • உணர்ந்து.. அகற்று

    நாகினி

     

    நாளும் விடியல் நலமாக்கும் ஆண்டவன்
    ஆளும் உலகத்தில் அமைதி கெடுத்திடும்
    கோளும் மறையாதக் கோடு!

    கோடு கிழித்திங்கு கொள்கை மறக்காமல்
    ஏடு படிப்பித்த ஏற்றமிகு போதனையை
    நாடு எனவோதும் நாடு!

    நாடு ஒருமை நலம்பெற வேண்டியே
    காடு மலைச்சுற்றி கற்பித்தோர் பட்டபெரும்
    பாடு தனையுணர்ந்துப் பார்!

    பார்முழுதும் போற்றிடும் பண்பான தேசத்தில்
    ஊர்முழுக்க சாதியும் ஊனமிகு கோள்களும்
    ஆர்ப்பரிக்கும் தீங்கை அகற்று!

     

    Share
  • விருந்தும் மருந்தும்..

    விருந்தும் மருந்தும்…(குறள் வெண்பா)

    வாராரோ என்றேதான் வாசலிற்க்கண் வைத்தீதல்
    சாராம்சம் பக்கமென்றும் சாய்!

    வந்தபின்னே இன்முகத்தில் வாவென்று வாசலில்நேர்
    சந்திப்பைக் காத்தலன்றோ சால்பு!

    வாசலிலே வந்தவரை வாயார வாழ்த்தியவர்
    பாசத்தின் ஊற்றென்றுப் பாடு!

    வந்தவரை ஆதரித்து வாழ்வுக்குப் பாலமாகி
    இந்தமண்ணில் சேர்ந்தொருமை ஈந்து!

    வாய்திறந்து கேட்டுநிற்கும் வாட்டமுடன் வாழுகின்ற
    சேய்களுக்கே பாலன்னம் சேர்!

    வாவென்று அன்பொழுக வாய்திறந்துக் கூப்பிடாமல்
    ஆவென்று நோக்காதீர் ஆழ்ந்து!

    வாவென்று உள்ளார்ந்து வாய்மொழியா இல்லத்தில்
    தாவென்று கேட்டிடாதீர் தாழ்ந்து!

    வாழ்த்துதலை நோக்கியெதிர் வாசலிலே நிற்காதோர்
    தாழ்விலுமே மானஸ்தர் தான்!

    வாஞ்சையாய் காப்போரின் வாசலைதான் எவரும்தம்
    ஊஞ்சலாய் ஏறிடுவார் ஊர்ந்து!

    வந்தாரை வாழ்விக்கும் வளமான வாழ்வதுதான்
    நொந்தாலும் ஈரநெஞ்சோர் நோக்கு!

    … நாகினி

    Share
  • நம்பிக்கை வாய்த்தும்பிக் கையோன்!

    நம்பிக்கை வாய்த்தும்பிக் கையோன்!…(வெண் செந்துறை)

     

    நாகினி

     

    உந்தி பெருத்து உலகை அளக்கவே
    சந்தி நடுவிலுறை சாந்தவேழ வார்ப்போனே!

    பந்தி நடுவிலும் பாச விருந்தாக
    முந்தி வருகின்ற முத்தமிழ் ஐங்கரனே!

    மோதகம் கையில் மொழியும் வாயிலிட்டு
    போதகம் செய்திடும் போற்றி அகவலோனே!

    பித்தம் தலையேறும் பிள்ளை கலங்கிடாது
    சித்தம் வழிநடத்தும் சித்தி விநாயகனே!

    தொடங்கும் செயலின் தொடக்கமாய்த் தொடர்ந்து
    படரும் அருளெனும் பராசக்தி மைந்தனே!

    முத்தமிழின் சாறாகி மூஞ்சுறு வாகனனாய்
    எத்திக்கும் வீற்றுள்ள ஏகம்பன் சீராளனே!

    தடைகள் இலாவாழ்வு தாரும்
    சடைகள் முடிகொண்ட சங்கரன் ஞானமகனே!

    பிணக்கு மறையாத பித்தம் தலைக்கேறா
    இணக்கு தரும்நல் இளந்தந்தச் சித்தியோனே!

    பெற்றோரே உலகெனப் பேசி வலம்வந்த
    வற்றாத நம்பிக்கை வாய்த்தும்பிக் கையோனே!

    யாண்டும் துயரறுக்க யாக்கைநல் முத்தியாக
    வேண்டும் வரந்தரும் வேழ முகத்தோனே!

    வினைதீர்த் தெமக்குநேர் வீடுபேறு தாருமய்யா
    நினைக்கும் சிந்தை நிறைந்தஉல கானவனே!

    … நாகினி

    Share
  • ஈழம்

    நாகினி

     

    இலங்கை தீவு
    தனி தமிழ் ஈழம் கேட்கும்
    தமிழர் நிறைந்த பாவு..

    இலக்கியத்திலும் தமிழரோடு
    பழங்காலத்தில் ஈழம் தொடர்பு
    அடையாளம் காட்டும் பட்டினப்பாலை
    சொல்லும் ஈழத்து உணவு..

    குருதியில் வரைந்த தமிழர் காவியம்
    முள்ளிவாய்க்கால் படுகொலை
    அரங்கேற்றம் நித்தம் இனவெறியர்களால்
    இலங்கை தமிழர் சாவு..

    தமிழீழ விடுதலைப்புலி தலைமையை
    தலைமேல் ஏற்று புரட்சிப்பாதை விடியலில்
    தனித் தமிழீழம் வேண்டுவதே
    தமிழ்மக்கள் எழுச்சி திணவு..

    ஊர் உறவு சுற்றம் நட்பு இழந்து
    நாடு விட்டு அகதியாய் உழலும்
    ஈழத்தமிழர் உரிமை நாடும் ஈழம் மலர
    வாழ்த்தும் மனதார உலகோர் நாவு!

     

    Share
  • மறக்க.. முடக்கு..கூவு!

    நாகினி

     

     

    குலத்தை அழித்துக் குடிதான் பேணும்
    நலத்தைச் சிதைத்து நல்மதிப்பு மாய்க்கும்
    குடியை ஒழித்திடக் கூவு!

    மதுவைக் குடித்து மதிமயங்கிச் சந்தை
    பதுக்கல் தொழிலென பாவப்பயன் ஈனும்
    மதுதான் வேண்டாம் மற!

    குடித்தே அடகாய்க் குடலும் கெட்டுப்
    படித்தும் முடங்கிநலன் பாழாதல் நோயாம்
    மதுவைத் தொடுதல் முடக்கு!

     

    Share
  • கானல் கனவு

    நாகினி

     

    உனக்கென ஒரு குடும்பம்
    எனக்கென இல்லற தர்மம்
    சுமக்கின்ற காலம்
    கதையொன்று காதலென கைநீட்டுவதேனோ!

    கடந்த இளமை பருவம்
    கசக்கிய காதல் உயிரை
    காலம் கடந்த பருவம்
    கண்களில் காட்டுதல் சரியென்றாகிடுமோ!

    மறக்கவில்லை உனையே
    துறக்காத இச்சைகளுடன்
    இறக்க விட்டதேன் வெட்கமதை
    வெறுத்துவிட்டேன் எனையே!

    கண்ணில் நின்ற கனவு
    உன்னில் உயிரென நான் கலந்த நினைவு
    என்னில் கானலென நீ ஒன்றிய பிணைப்பு
    மண்ணில் நிலவலாமோ இதுபோன்ற நனவு!

    அக்கம்பக்கம் பார்வைக் குத்தல் பொருட்டல்ல
    உள்ளின் மனசாட்சியைக் கொல்லுதல் முறையாமோ
    மனமே குத்தும் ஒழுக்கத் தவறு வாழ்வென்றாகா
    கொடுஞ்செயல் புதைத்திடத் தக்க வெறுங்கதையே!

    பொருந்தாக் காதல் கதையே
    இல்லறத்தர்மம் விழுங்கும் நகைப்புக்காதலே
    கண்ணுள் கலந்திட வரலாமோ இச்சைக்கவிவடிவே
    விட்டுவிலகிச் செல் கானல் கனவே!

    … நாகினி

    Share
  • மன்னிக்க வேண்டா மனம்

    நாகினி

     

     

    பிஞ்சு மலரைப் பிடுங்கிக் கனிவான

    நெஞ்சு கசக்கியே நோவாக்கும்.. வஞ்சத்தை
    மன்றாளும் வேந்தர் மறந்து பொறுத்தாலும்
    மன்னிக்க வேண்டா மனம்!
    ***
    மனதால் இணைந்த மணத்தை நசுக்கி
    இனபேதம் சார்ந்தே இதயம் – தனத்திற்குச்
    சன்னலென ஆகிவிட்ட சண்டாள ஈனரை
    மன்னிக்க வேண்டா மனம்!
    ***
    இளமை மெதுவாய் இறங்கி கடந்து
    வளமை அகற்றும் வரம்தான் – களமென்று
    கன்னமிட்டு வாழ்வோர் கயமை முகத்திரையை
    மன்னிக்க வேண்டா மனம்!
    ***
    பசியில் வதங்கும் பலரும் வளரும்
    வசிப்புப் பெறவே வருந்தி – கசிந்துருகி
    மன்றாடும் கோலம் மதிக்கு நகைப்பாதல்
    மன்னிக்க வேண்டா மனம்!
    ***
    படிப்பில் கவனமற்றுப் பார்வை சிதறி
    தடித்த கயிற்றினால் தன்னை – முடித்தலென
    உன்மத்தம் கைக்கொள் உறங்கிடும் மாணவரை
    மன்னிக்க வேண்டா மனம்!

    .. நாகினி

    Share