Month: July 2016

  • கவிதைப் புனைப்பில் கையாளும் காவிய நயங்கள்

    சி. ஜெயபாரதன், கனடா

    aj

    காவியப் படைப்புகளில் கவிதை ‘கலைத்துவ இளவரசி ‘ என்று புகழப்படுகிறது. எழுத்தாளர், ஓவியர், இசைஞர், நர்த்தகி, நடிகர், சிற்பிகள், சிந்தனா மேதைகள் யாவரும் கவிதைகளில் தமது மனதைப் பறி கொடுத்தவரே! கவிதைப் போதையில் மூழ்காத கலைஞரைக் காண்பது மிக அபூர்வம்! கவிதைகள், அவற்றின் கிளைப் படைப்பான பாடல்கள் ஆகிய இரண்டும் இசைக் கலைக்கு வடிவம் தருபவை. கலைகளில் சிறந்த நாட்டியக் கலைக்குப் புத்துயிர் அளிப்பவை, இசையும் பாடல்களும். கீதங்களைக் கேட்டு கற்கள் கூட உருகிவிடும் என்று பல உலக இலக்கியங்கள் மொழிகின்றன!

    கவிச்சக்ரவர்த்தி கம்பன் இராமாயணம் முழுவதையும் கவிதை மாலையில் கோர்த்துத் தமிழ் உலகுக்கு அளித்தான். அதுபோல் வில்லிப்புத்தூரார் மகாபாரதத்தை தமிழ் கவிதைகளில் வடித்தார். சிலப்பதிகாரத்தைக் காவியக் கவிதையில் எழுதி, சேர, சோழ, பாண்டிய நாடுகளில் நிகழ்ந்த கண்ணகியின் வரலாற்றைக் கூறினார், இளங்கோவடிகள். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் பல அரிய நாடகங்களைக் கவிதையில் புனைந்தார். மகாகவி காளிதாஸ் சகுந்தலையின் கதையைக் கவிதைக் காவியமாகப் படைத்தார். தமிழ் வேதஞானி திருவள்ளுவர் திருக்குறள் அறநூலைத் தமிழ் மக்களுக்கு ஈரடிக் கவிதைகளில் அளித்தார். அவரைப் போல் ஆத்திச்சூடி ஒளவையாரும், திருப்பாவை ஆண்டாளும் தமது காவியங்களைக் கவிதா வழியில் வடித்தார்கள். சுதந்திரச் சிற்பி சுப்ரமணிய பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் ஆகியோர் தமிழகம் பெற்றெடுத்த கவி மேதைகளில் சிறந்த காவியப் படைப்பாளிகள்.

    மரபுக் கவிதைகள் யாப்பிலக்கண அமைப்பாடில் உருவெடுப்பவை. விடுதலை வரிகளாக யாப்பிலக்கணத்தைப் புறக்கணித்து, புதுக்கவிதைகள் ஆக்கப்படுகின்றன. புதுக்கவிதை ஒரு டென்னிஸ் கன்னி! வலையில்லாமல், வரம்பில்லாமல் டென்னிஸ் பந்து விளையாடுவது போல் புதுக்கவிதை பின்னப் படுகிறது! கவித்துவம் மிளிரும் படைப்புகள், யாப்பிலக்கண நெறிகளில் படைத்தால் என்ன ? விடுதலை வசனத்தில் படைத்தால் என்ன ? அவற்றில் கவித்துவ மணம் வீசுகிறதா என்று நுகர்வதே ஞானமாகும்.

    கவிதைகளின் தனித்துவப்பண்பு சுருங்கச் சொல்லி சுவையை அளிப்பது. அவசியமற்ற சொற்களையோ பகுதிகளையோ நீக்குவது, தொளதொள வென்று அணியும் சட்டையை அளவாகக் கத்தரித்து, உடம்புக்கு ஏற்க கச்சிதமாய்த் தைப்பதை ஒத்தது! யாப்பிலக்கணப்பூர்த்திக்கு இடைச்செருகாக எப்போதாவது தேவையற்ற சில சொற்கள் பயன்படுத்த நேரலாம். அதே சமயத்தில் போதிய சொற்கள் பயன்படாமல் போனாலும், [துணி பற்றாமல் இறுக்கித் தைத்த சட்டையை அணிவது போல்], கவிதையைப் படிப்போருக்கு அருவருப்பு உண்டாக்கலாம்! சில புதுக்கவிதைகள் கற்பனை மிகுந்து, சிக்கலாகப் புதிராகப் படைக்கப்பட்டு, என்ன கருத்தைக் கூறுகின்றன என்பதே படிப்போருக்குப் புரியாமல் போகிறது!

    கவிதைப் புனைப்பு நான்கு தொகுப்பு நயங்களால் நளினம் பெறுகிறது. முதலாவது கவிதையின் அடிப்படை அதன் ‘கருத்தழகு ‘ [Theme]. கருத்தழகு இல்லாவிடின் கவிதை உயிரற்ற வெறும் உடலாகி விடுகிறது. ஒரு கவிதையின் ஆத்மாவே அதற்கு உள்ளொளியாய் இருந்து வெளியே சுடர்வீசும் அதன் ஆழ்ந்த கருத்துதான்! அக்கருத்துக்கு உருவம் தந்து கவிதையைக் கட்டுபவை, செங்கல் போன்ற அதன் சொற்கள். எதுகை, மோனை, மற்றும் சீர், தளை ஆகியவற்றைக் கொண்டு யாப்பிலக்கணத்தைப் பயன்படுத்திப் பாக்கள் அமைப்பதைச் ‘சொல்லழகு’ என்று குறிப்பிடுகிறேன். அவை வடிவம் பெற்ற பின், கவிஞனின் சிந்தனையில் உதயமான கருத்து எழுத்துருவில் பதிவாகிறது! அடுத்து வாசகர் நெஞ்சில் நடனமிட கவிதையின் உடலுக்கு வனப்பூட்டுவது, அதன் ‘நடையழகு ‘ [Style]. நான்காவது கவிதையின் இயற்கை மேனிக்கு ஒளி ஊட்டக் கவிஞர் கையாளும் ‘அணியழகு ‘ [Figure of Speech: Similie, Metaphor, Personification etc]. இவை நான்கையும் ஏற்ற அளவில் குழைத்துத் தூரிகையில் வரையக் கவிஞனின் கற்பனா சக்தியே, கவித்துவ ஆக்க சக்தியாகப் பயன்படுகிறது.

    ஒரு கவிதையில் கருத்தாட்சி, சொல்லாட்சி, நடையாட்சி, அணியாட்சி ஆகிய நான்கும் பொருத்தமான அளவில் கலந்து பின்னப்பட்டிருந்தால்தான், ஒருவர் அதைப் படித்துச் சுவைக்க முடிகிறது. எந்தக் கோணத்தில் கருத்தழகைக் காட்டுவது, மற்ற மூன்று நயங்களையும் எந்த அளவில் கலப்பது, எப்படிக் கையாளுவது என்பதில்தான், கவிஞனின் ‘கலைத்துவத் திறமையே ‘ [Artistic Talent] அடங்கி உள்ளது. பாரதியார், கவிதைக்கு இந்த நான்கு நயங்களுடன் திறமையாக ‘இசையழகும் ‘ கொடுத்து, சில கவிதைகளை காதுக்கினிய பாடல்களாக ஆக்கிவிட்டார். பாரதியாரின் சில பாட்டுகள் கண்ணுக்கினிய நாட்டியமாகப் பலமுறை அரங்கேற்றப்பட்டுள்ளன ! ஓடி விளையாடு பாப்பா, தீராத விளையாட்டுப் பிள்ளை, வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே போன்றவை இசைப்பாடல் வகையைச் சேர்ந்தவை.

    ஒரு கவிதை தனது கருத்தைத் தானாக எதிரொலிக்க வேண்டும். வாசகர் சிந்தனையைத் தூண்டிவிடும் ஒரு கவிதை தரத்தில் உயர்ந்தது. வாசகர் உணரப் போகும் உணர்ச்சியை, கவிதையே சொல்லி விடக்கூடாது! திரைப்படம் போன்று ஓர் அனுபவத்தைக் காட்ட வேண்டியது, கவிதையின் கடமை. வாசகரின் இதயத்தை வரிகள் பளிச்செனப் பற்றவேண்டும்! படிப்போரின் மனதில் கவிதை ஓர் உணர்ச்சியோ, எழுச்சியோ, புரட்சியோ, எதிரொலியோ, பூரிப்போ, சோகமோ ஏதாவது ஒன்றை எழுப்பினால், அது ஆக்கப்பட்டதின் பலன் நிறைவேறுகிறது.

    கவிதை சில சமயம் வெறும் ‘சொல்லாட்சியே’ மிகுந்து வாக்கியமாகக் காணப்படுகிறது. ஒருவரின் முதல் ஆக்கத்தில் உரைநடைபோல் அமையும் வாக்கியத்தை மடக்கிச், சொற்களை முன்னுக்குப்பின் இடம் மாற்றி அமைத்து, அவற்றை ஒருவிதக் கவிநடையாக்கலாம். அடுத்துத் தொகுக்கும் போது நளின நடையழகும், போதிய அணியழகும் கவிதைகளில் சேர்க்க முயல வேண்டும். கவிஞர் ஒருவரின் தனித்துவ நடையழகை அவர் ஒருவர்தான் படைக்க முடியும். ஒரு நாடகத்தைக் கவிஞன் ஒரு கவிதையில் காட்ட முடியும்! ஒரு கதையைக் கவிஞன் ஒரு கவிதையில் காட்ட முடியும்!

    பாரதியாரின் கவிதை: ‘வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே ‘. ‘உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்ச மில்லை! அச்ச மில்லை! அச்ச மென்ப தில்லையே ‘ நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை எழுதிய, ‘கத்தியின்றி, ரத்தமின்றி யுத்த மொன்று வருகுது ‘ இப்பாடல்களில் உள்ள வல்லினச் சொற்களின் ஓசையே நிகழ்ச்சியைப் பறைசாற்றுகின்றன. இதை ஆங்கிலத்தில் ‘The Sound echoing the Sense ‘ என்று கூறுவார்கள்.

    பாரதியார் எழுதிய ‘சோலை மலரொளியோ, உனது சுந்தரப் புன்னகைதான்! நீலக்கடல் அலையோ, உனது நெஞ்சின் அலைகளடா ‘ என்ற வரிகளில் ஓர் நளின ஒப்பணியைக் [Metaphor] காணலாம்! அதுபோல் ‘வீணையடி நீயெனக்கு, மேவும் விரல் நானுனக்கு! பூணும் வடம் நீயெனக்கு, புது வயிரம் நானுனக்கு! பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு! தோயுமது நீயெனக்கு, தும்பியடி நானுனக்கு! வானமழை நீயெனக்கு, வண்ண மயில் நானுனக்கு! பானமடி நீயெனக்கு, பாண்டமடி நானுனக்கு! ‘ போன்ற வரிகளிலும் பாரதியார் கையாண்ட ஒப்பணி நயங்களைச் சுவைக்கலாம்.

    திண்ணை.காம் இல் 1999-2000 ஆண்டுகளில் ‘ரேகா ராகவன் ‘ என்பவர் பல இனிய கவிதைகள் எழுதியுள்ளார். அவை யாவும் தரத்தில் உயர்ந்தவை. அவர் கையாளும் சொல்லாட்சி, கருத்தாட்சி, நடையாட்சி, அணியாட்சி யாவும் சுவைத்து இன்புறத் தக்கவை! அவரது ‘மரம் ‘ என்னும் புதுக் கவிதையில், ‘வெள்ளைச் சுவற்றில் கறுப்புக் கோலங்கலாய், அந்த இலையுதிர்ந்த மரத்தின் நிழல் அமாவாசை நாளின் விதவை வானம் போலப் பொலிவிழந்து நிற்கிறது! அந்த விருட்சம் இலையுதிர்ந்தாலும், பொலிவிழந்தாலும், வேரூன்றி, நாளை வரப்போகும் சூரிய உதயத்துக்காக உயிர் பிடித்து நிற்கிறது!’ மேலும் அவர் எழுதிய ‘மழை ‘, ‘கடவுள் ‘, ‘இருத்தல் ‘, ‘நீ ‘ யாவும் படித்து மகிழத்தக்கவை.

    ****************

    Share
  • யார் குழந்தை

    தமிழ்த்தேனீ

    2016ம் ஆண்டு பிறக்கிறது, இந்த வருடம் ஜனவரி மாதம் 1ம் தேதியிலிருந்து அவருக்கு 63 வயது முடிந்து 64 ம் வயது ஆரம்பமாகிறது  கதிரேசனுக்கு . புது வருட வாழ்த்துக்கள் அவருடைய தொலைபேசியிலும் இணையதள மடல்களிலும் நிரம்பி வழிகின்றன. அத்துடன்  அவருடைய பிறந்த நாளுக்கும்  சேர்த்து வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும்  வேலையிலிருந்து ஓய்வு பெற முடியவில்லை, அவர்   வியாபாரம் ஓஹோவென்று ஓடிக்கொண்டிருக்கிறது.

    வாழ்க்கையின் ஒவ்வொரு துளி ஸ்வாரஸ்யத்தையும் அனுபவிக்க முடியாமல் பணம் பணம் என்று அதன் பின்னால் அலைந்து குரங்கின் கையில் பிடித்த பாம்பாய்  விட முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர். விட்டால் வியாபாரம் என்னும் பாம்பு ஒரே போடாகப் போட்டுவிடும் அபாயம் இருக்கிறது.

    பேரக் குழந்தை பிறந்தவுடன் பார்த்தது. இப்போது அதற்கு மூன்று வயதாகிறது. பிறந்த  குழந்தையை இன்னும் வந்து பார்க்கவில்லை என்கிற குறை மகனுக்கும் மருமகளுக்கும்.

    இந்த முறையும் ஒரே நாள்தான் குழந்தையுடன் இருக்க முடியும். என்ன செய்யறது  அவர் வேலை அப்படி. மாதக் கணக்காய் வெளிநாடுகளில் சுற்றி சுற்றி இந்தியாவுக்கு வருவதே  அபூர்வமாகி இருக்கிறது.

    அவருக்கே வெறுப்பாய் இருந்தது, என்ன வாழ்க்கை இது நாமபாட்டுக்கு பேரப் பிள்ளைகளுடன் விளையாடினோமா,ராத்திரி பேரனின் பக்கத்திலே படுத்து அணைத்துக் கொண்டு தலையைக் கோதிவிட்டுக் கொண்டே கதை சொல்லி குழந்தை தூங்கியவுடன் நன்றாகப் போர்த்திவிட்டு,

    ஹூம்ம் இதெல்லாம் நமக்கு கிடைக்காத சொர்க்கங்கள், நினைத்துப் பெருமூச்சு விடத்தான் முடியும்   என்று நினைத்துக் கொண்டார். கதிரேசன்  மனிதர்களுக்கு எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சைதானே,

    ஒவ்வொருத்தர் ஒவ்வொன்றிற்கு அதுவும் கிடைக்காத மறு பக்கத்துக்கு ஏங்கிக் கொண்டேதான் வாழுகின்றனர் என்று நினைத்தவருக்கு சிரிப்பு வந்தது.  ஏதோ இப்போதாவது பேரனைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்ததே. இதோ ஆயிற்று இன்னும் சிறிது நேரத்தில் இந்தியாவில் தரையிறங்கி விடுவோம். விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேரப் பயணம்.

    இமிக்ரேஷன் முடிந்தவுடன் லக்கேஜை எடுத்துக் கொண்டு  வெளியே போக வேண்டும் . அடிக்கடி பயணம் செய்யும் அவரை அடையாளம் கண்டு ஹலொ சார் நலமா என்று விசாரிக்கும் இமிக்ரேஷன் அதிகாரியிடம் நாங்கள் நலமே நீங்க நல்லா இருக்கீங்களா என்று விசாரித்துவிட்டு

    வெளியே வந்தார். தூரத்தில் மகனும் மருமகளும் பேரனும் நின்று கையை ஆட்டுவது தெரிந்ததும் உற்சாகமானார்.  வாங்கப்பா ப்ரயாணமெல்லாம் சௌகர்யமா இருந்துதா என்றாள் மருமகள்

    நல்லா இருந்துதும்மா குட்  எப்பிடி இருக்கேம்மா , எப்பிடிப்பா இருக்கே டேய் குட்டிப் பையா  எப்பிடி இருக்கே என்றார். பதிலே சொல்லாமல் அவரையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது குழந்தை.

    என்னடா அப்பிடிப் பாக்கறே  நான் உன்னோட தாத்தாடா, என்கிட்ட வா  என்று அழைத்தார் வாஞ்சையுடன்  வரமாட்டேன்  எனக்கு உன்னைப் பிடிக்கலே   என்றது குழந்தை.

    அப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது தாத்தாவை என்றான் மகன்.

    அது குழந்தைடா  அதுக்கு என்ன தெரியும்   ஏதோ சொல்லுது அதைப் போயி பெரிசா எடுத்துக்க முடியுமா என்று வாய் கூறினாலும்  மனம் துணுக்கென்றது.

    என்னது இந்தக் குழந்தை இப்பிடிப் பேசுகிறது என்று எண்ணிக் கொண்டே காரில் உட்கார்ந்தவர்.  சரிப்பா   எப்பிடிப் போகுது உங்க ஆபீசெல்லாம்  என்றார்.  நல்லாப் போகுதுப்பா, ஆனா ரெஸ்டே இல்லே  எப்போ பாத்தாலும்   வேலை வேலைன்னு ஓடவேண்டி இருக்கு  ஓ அப்பிடியா  என்னம்மா   உனக்கு எப்பிடிப் போகுது வேலை  டீச்சர் வேலை போரடிக்குதா     என்றார்

    இல்லேப்பா  நல்லா போகுது    நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து எங்கேயும் வெளியே போக முடியலே.  சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமை கூட  டியூஷன் வெச்சிருக்கேன் நாற்பது பசங்க படிக்கறாங்க.

    இப்போ இருக்கற காலத்திலே ரெண்டு பேரும் வேலை செஞ்சு சம்பாதிச்சாதானேப்பா முடியுது  இருந்தாலும் எனக்கு நல்லாத்தான் பொழுது போகுது  என்றாள்.

    பின்னாடி இருக்கையிலிருந்து இவரையே பார்த்துக் கொண்டிருந்த பேரன்  நீங்க எப்போ ஊருக்குப் போவீங்க  என்றான்

    மீண்டும் துணுக்கென்றது அவருக்கு . சமாளித்து இதோ பாரு தாத்தா  உனக்கு  ரொம்பப் பிடிக்குமே   ஸ்பைடர் மேன் பொம்மை அது வாங்கிண்டு வந்திருக்கேன். வீட்டுக்குப் போனதும் பெட்டிலேருந்து எடுத்து தரேன்  என்றார்.

    எனக்கு ஒண்ணும் வேண்டாம்.  நீங்க எப்போ ஊருக்கு போவீங்க   என்று கேட்டுவிட்டு  அவரையே பார்த்துக் கொண்டிருந்த பேரனை எப்படி சமாளிக்கப் போகிறோம்  என்கிற கவலை அவருக்குள் புகை வளையமாய்ச் சுழன்றது.   வரும்போதே   எப்போ போகப் போறேன்னு கேக்குதே  இது .

    நினைத்துக் கொண்டிருக்கும் போதே பின்னாலிருந்து அவருடைய முடியைப் பிடித்து வேகமாய் இழுத்தது. வலி தாங்க முடியாமல் அப்பிடியெல்லாம் செய்யக் கூடாது  கையை எடு என்றார்.  அவருடைய பிள்ளை  காரோட்டிக் கொண்டே  அனிருத் கையை எடு என்றான்.

    பின்னாலிருந்து மருமகள் ஏன் அனிருத் இப்பிடி செய்யறே  தப்பும்மா  என்றபடி  அவருடைய  முடியிலிருந்து குழந்தையின் விரலைப் பிரித்து எடுத்தாள்.

    தாத்தாக்கு வலிக்கும்   தாத்தா கிட்டே சாரி சொல்லு என்றாள் , வலிக்கட்டும்  நன்னா வலிக்கட்டும்  சாரி சொல்லமாட்டேன்  என்றான் அனிருத்.

    சரி விடும்மா  அது குழந்தை அதுக்கு என்னா தெரியும் குழந்தையை திட்டாதே  என்றாலும்  அவருக்குள் ஒரு பயமே வந்தது.இந்தக் குழந்தையை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று.

    ஆயிற்று வீட்டுக்குப் போய் மருமகள் கையால் சமைத்த வீட்டுச் சாப்பாட்டை ஒரு கைபார்த்துவிட்டு முதலில் பெட்டியிலிருந்து  ஸ்பைடர் மேன் பொம்மையை எடுத்து  குழந்தை அனிருத்திடம் கொடுத்துவிட்டு ,எனக்கு  வேண்டாம்  என்று தூக்கிப் போட்டான்  அனிருத். தூக்கம் கண்களைச் சுழற்றவே அப்படியே  தூங்கிப் போனார்.

    திடீரென்று இரண்டு மணிக்கு சந்திரகாந்தை  தொடர்பு கொள்கிறேன் என்று கூறியது நினைவுக்கு வரவே,  திடுக்கிட்டு எழுந்து  செல்போனைத் தேடினார் கிடைக்கவில்லை.  எங்கே வைத்தோம். தூங்கும் போது தலைமாட்டிலேதானே வைத்துக் கொண்டு தூங்கினோம் என்று எல்லா இடத்திலேயும் தேட கிடைக்கவே இல்லை.

    சந்திர காந்தின் எண்ணும் நினைவில்லை . வர வர  மூளையில் ஒன்றுமே இல்லை   சொந்த மூளையை  தொலைபேசிக்குள்ளும்  கணிணிக்குள்ளும் அடமானம் வைத்தாயிற்று.  இப்போது என்ன செய்வது என்றே புரியவில்லை.

    டைரியை   கணிணியை உயிர்ப்பித்து அதில் சந்திரகாந்த் என்று தேட  அட நல்ல வேளை  இதில் பதிந்திருக்கிறோம் . எண்களைக் குறித்துக்கொண்டு  மகனின் தொலைபேசியில்  சந்திர காந்தை தொடர்பு கொண்டார்.

    ஆமாம் சந்திரா  நான் மூணு மணிக்கு அங்கே வந்துடறேன்.  நம்ம சந்திப்பு அரைமணி நேரம்தான்.  எனக்கு மாலை ஆறு மணிக்கு மறுபடியும் ஃப்ளைட் .  சரி நான் தாஜ் கோரமண்டலுக்கு  வந்துடறேன் என்றபடி  தொலைபேசியை மகனிடம் கொடுத்தார்.

    இப்போ என்னா செய்யறது என்னோட தொலைபேசியிலேதான் எல்லா எண்ணும் இருக்கு  என்று மறுபடியும் தேடிப் பார்க்கலாம் என்று மகன் மருமகள்  ஆளுக்கொரு மூலையில்  தேடி  ஒரு வழியாக  அவர் படுத்துக் கொண்டிருந்த சோபாவின் அடியிலே விழுந்து கிடந்த போனைக் கண்டு பிடித்தவுடன் அப்பாடா என்று இருந்தது  அவருக்கு.

    நாந்தான்  உங்க  போனை  ஒசிச்சு வெச்சேன்  என்றான் அனிருத் .

    அதிர்ந்து போனவர்   சமாளித்துக் கொண்டு  சரிப்பா நான் கிளம்பறேன்  நல்ல சாப்பாடும்மா   எல்லா நாட்டுக்கும் போயி உயர்தரமான எல்லா உணவகத்திலேயும் சாப்டுட்டேன்.

    ஆனாலும் உன் கையாலே சமைச்சு போடற இந்த உணவோட ருசி அதிலெல்லாம் இல்லேம்மா  என்று கூறிவிட்டு  சரி நான் கிளம்பறேன்  என்றார்.    தாத்தாவுக்கு ஒரு முத்தம் குடுடா  என்றார் பேரனிடம் ,  மாட்டேன் போ என்றது அனிருத்.

    டேய் அப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது  தாத்தா இப்போ கிளம்பறாரு  ஒரு முத்தா குடுத்துட்டு  பை பை சொல்லு என்றாள் மருமகள் கண்டிப்பான குரலில்…

    மாட்டேன் போ என்று சொல்லிவிட்டு  அறைக்குள் சென்று சோபாவில் படுத்துக்கொண்டு இவரையே பார்த்துக் கொண்டிருந்தது  அனிருத் .

    சரிம்மா குழந்தையை  தொந்தரவு செய்யாதே  நான் கிளம்பறேன் என்று ஏமாற்றத்துடன்  கிளம்பினார்.

    மகனும் மருமகனும் சரிப்பா ஜாக்கிறதையா போயிட்டு வாங்க

    என்றபடி வழியனுப்பினர்.

    இரண்டு அடி எடுத்து வைத்து காரிடம் சென்றவர்   அனிருத் பயங்கரமாக   அலறி அழும் குரல் கேட்டு அப்படியே நின்றார்.

    பதறிப் போய் உள்ளே ஓடினர் அனைவரும்.  தாத்தாவைப் போக வேணாம்னு   சொல்லு, இங்கேயே இருக்க சொல்லு அவரை எங்கூடவே இருக்கச் சொல்லு என்று உரத்த குரலில் அனிருத் அலறி அழுது கொண்டிருந்தான்.

    அவருக்குள் ஏதோ ஒன்று உடைந்தது.  ஓ நீ எப்போ போகப் போறேன்னு வந்த வுடனே கேட்டதுக்கு இதுதான் அர்த்தமா?..

    என் தலை முடியைப் பிடிச்சு இழுத்ததுக்கு இதான்     அர்த்தமா?..

    என்கிட்ட பேசாம இருந்ததுக்கு இதான் அர்த்தமா?..

    அவருக்குள் ஏதோ ஒன்று உடைந்து ப்ரவாகமாப் பெருகி வெள்ளமாய் சீறி வெடித்துக் கொண்டு கிளம்பியது.

    உள்ளே ஓடிப்போய் இல்லேடா கண்ணா  நான் உன்னை விட்டுட்டுப் போகலே, இங்கேயே இருக்கேன்  என்றபடி அனிருத்தை அணைத்துக் கொண்டார்.  அவர் கன்னத்தில் மெல்ல  ஒரு அடி அடித்துவிட்டு,

    எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும் தாத்தா  நீங்க  இனிமே என்னை விட்டுட்டு எங்கேயும் போகக் கூடாது  ப்ராமிஸ்  என்று உள்ளங்கையை நீட்டினான் அனிருத்.

    குழந்தையின் மழலையை மனதைப் புரிந்து கொள்ள இன்னும் எந்த நவீனக் கருவியும் வரவில்லை  என்கிற உண்மை உரைத்தது  அவருக்கு.

    அவர் அனிருத்தின் அணைப்பில் கரைந்து போனார்.

    Share
  • இரா.முருகனுக்கும் அடியேனுக்கும் ‘’வெண்பாஷணை’’…..

     

     

    அடியேனுக்கு பல் வலி வந்த போது…. (1)
    ———————————-
    மல்லாண்ட மாயவா வில்லாண்ட வித்தகா
    சொல்லாண்ட வாயிலே சொத்தையாய் -பல்லாண்டு
    பாடாய்ப் படுத்துது ஆடா(து) அசங்காது
    வாடா மருப்பொசித்த வா….()….15-12-2009….கிரேசி மோகன்….

    இரா.முருகன் பதில் வெண்பா….
    —————————————-
    பல்லவன் எந்நாளும் நாக்கைக் கடிக்காத
    நல்லவன் ஆயினும் ஐம்பதில் -தொல்லையாய்
    ஆடி அசைந்தவஸ்தை தந்தானை நேற்றுவே
    றோடு களைந்தாயோ சொல்….()….16-12-2009….கிரேசி மோகன்….

    அடியேன் பதில் வெண்பா….
    ————————————————
    பல்லெடுத்தால் வாய்வீங்கி பார்க்க சிரஞ்சீவி
    கல்லெடுத்தோன் ஆவேனாம் காட்சிக்கு -சொல்லுரைத்து
    நாடகம் இல்லாத நாளில்வா என்றான்பல்
    ஆடும்GUM வைத்தியன் ஆய்ந்து….()….16-12-2009….கிரேசி மோகன்….

     

    இரா.முருகன் அனுப்பிய கணினி சிஸ்டக்-கவசம் படித்து விட்டு….(மீண்டும் அனுப்புங்கள் ‘’சிஸ்டக்-கவசத்தை’’….சிஸ்டத்தில் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது இரா.மு. சார் ப்ளீஸ்….)
    ————————————————————————————- (2)
    MUSTடாய் முருகனின் SYSTEK கவசத்தை
    DESK-TOPப்பில் வைத்த தினமுதல் -BESTடாய்
    கணினி இயங்குது கன்னியைப் போலே
    இனியெனக்(கு) என்றும் இரவு….கிரேசி மோகன்
    ————————————————————————————————-

    உப்புமா wins 1st PRIZE 10000 DOLLARS IN GLOBAL CHEF CONTEST
    இதற்கு இரா,முருகன் எழுதிய வெண்பா….
    —————————————————————————————————–
    தள்ளிப்போ என்றாலும் துள்ளிவரும் தட்டின்றி
    அள்ளியுண்ண வாயில் பசையாய் -பள்ளிகொள்ளும்
    அப்புறமும் கிச்சடியாய் வேடமிடும் கண்றாவி
    உப்புமாவுக்(கு) உண்டோ இணை….(இரா.முருகன்)….22-06-2011

    இரா.முருகனின் உப்புமா வெண்பாவுக்கு எனது பதில் வெண்பா….
    ———————————————————————————-
    சப்புமா நாக்கில் SALAIVA சுரந்திட
    எப்பம்மா! என்றுநாம் ஏங்கிட -உப்புமா
    ஒன்றே நமக்கு உடனடியாய் வாய்த்திடும்
    தின்றே மகிழ்வாய் தினம்….(கிரேசி மோகன்)….22-06-2011

    நடேசன் பார்க்கில் வீற்றிருக்கும் கணபதியை
    இரா.முருகன் பாடிய வெண்பா….
    ———————————————————
    பூங்கா கணபதி பூசாரி எங்கேபார்
    ஓங்காரம் சொன்னபடி ஓரமாய் -சாய்ங்காலம்
    தும்பிக்கை சாமியை நம்பிடும் பக்தனுக்கு
    கம்பிக்குள் தீபம் நுழைத்து….(இரா.முருகன்)….30-06-2011

    பூங்கா கணபதி மீது அடியேன் எழுதியது….
    ——————————————————
    தம்பிக்குக் காதல் துணைபோன தந்திக்கு
    கம்பிக்குள் கற்பூரம் காட்டினாலும் -நம்பிக்கை
    கோர்க்கும் அடியார்க்கு கோரியன தந்திடுவார்
    PARKகில் கணபதி பார்….(கிரேசி மோகன்)….30-06-2011

    நடேசனார் பூங்கா நடேசன்தன் SONனை
    விடாது வலமாய் வருவோர் -அடாசு
    SUGAR-BP அண்டாது சவுக்கியமாய் வாழ்வார்
    நுகர்பூக்கள் வாசம் நிகர்த்து….(கிரேசி மோகன்)….30-06-2011

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    73b8298b-534a-4f9b-a5b0-b1a3d6fcc937

    நிறத்துக்கு நீலம், நினைப்புக்கு லீலை,
    கருத்துக்கு கொள்மனமே கீதை, -சிரத்துக்குள்
    சீர்மல்கும் சீதரனை ,சிந்திக்க ஜீவன்கண்
    ணீர்மல்க ஆன்மாவா கும்….

    Share
  • சிவபிரதோஷம்

     

    சிவசம்போ

    71a83413-c1ce-4cbe-bbed-a38b573d73b3
    மீ.விசுவநாதன்

    ஆத்தங் கரையுறை ஆதி சிவனிடம்
    அன்பு வைத்திருப்பேன் – மனம்
    அச்சம் தவிர்த்திருப்பேன் – அந்தக்
    கூத்தன் விழிதனில் கூடிய பின்னாலே
    கொஞ்சம் தனித்திருப்பேன்- கண்ணீர்
    கொட்டப் பனித்திருப்பேன் !

    கொத்துச் சடைமுடி கொண்ட பெருமகன்
    கூட நடந்திடுவேன் – தீபம்
    கொண்டு வழிபடுவேன்- இந்த
    வெத்து மனிதனை வேட்டை ஆடென
    விழுந்து கும்பிடுவேன்- சிவ
    வித்தை நம்பிடுவேன் !

    தும்பை மலரிலே தூய வெள்ளையாய்த்
    தோன்றும் உருவெடுப்பேன் – ஈசன்
    தோளை அரவணைப்பேன் – கங்கைச்
    சொம்பை கண்ணிலே கண்ட போதிலே
    சொக்கன் நினைவாவேன் – கயிலை
    சோதி பனியாவேன் !

    வெட்ட வெளியிலே விடையின் மீதிலே
    வீற்று அருள்கொடுக்கும் – உமை
    வேந்தன் அடிபணிவேன் – உயிர்
    விட்டு வெளியிலே செல்லும் போதிலே
    வேத ஒலியாவேன் – சிவ
    வீதி விளக்காவேன் !

    (இன்று பிரதோஷ தினம் : 17.07.2016)

    Share
  • சுழலும் பூமியைச் சுற்றி வரும் நிலவை முதன்முதல் சூரிய ஒளியில் படமெடுத்த நாசாவின் துணைக்கோள்

     

    aj

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
    ++++++++++++++++

    சுழலும் புவிக் கோளைச்
    சுற்றும் நிலவின் பின் முகத்தை
    நாசா துணைக்கோள்
    முதன்முதல் படமெடுக்கும் !
    இதுவரை தெரியாத பின்புறம்
    இப்போது கண்படும்  !
    சைனா  2020 இல் நிலவின்
    பின்புறம் காண விண்ணுளவி அனுப்பும்.
    அண்டவெளிப் பயணம் செய்து
    விண்வெளியில் நீந்தி
    வெற்றி மாலை சூடி மறுபடி
    மண்மீது கால் வைத்தார்
    சைன விண்வெளித் தீரர் !
    அமெரிக் காவின்
    விண்வெளி வீரர் போல்
    விண்சிமிழில் ஏறி
    வெண்ணிலவில் தடம் வைக்க
    முயற்சிகள் நடக்கும் !
    நிலவைச் சுற்றி வந்து
    மனிதரில்லா விண்சிமிழ் ஒன்று
    புவிக்கு மீண்டது .
    இன்னும்
    ஐந்தாறு ஆண்டுகளில்
    சாதனை யாகச் சைனத் தீரர்
    பாதம் பதிப்பர்
    நிலவின் களத்திலே
    நீல் ஆர்ம்ஸ் டிராங் போல !

    ++++++++++++++++++++

    Earth & Moon

    பூமியும், நிலவும் விண்வெளியில் சுற்றும் மெய்யான இந்தக் காட்சி ஓர் புல்லரிப்பை உண்டாக்குகிறது !

    கட்டுரை ஆசிரியர்

    நிலவு பூமிக்கும் துணைக்கோளுக்கும் இடையே நகர்ந்ததை டிஸ்கவர் விண்ணுளவி இரண்டாம் முறை 2016 ஜூலை 5 இல் கண்டது.  முதல் முறை புவி – நிலவுப் படமெடுப்பு [First Lunar Photobomb] சென்ற ஆண்டு [2015] ஜூலை 16 இல் நேர்ந்தது.  நிலவு குறுக்கிடும் சமயம், சூரிய ஒளி பூமி மீது படும் போது,  நாசாவின் டிஸ்கவர் துணைக்கோளின் [Deep Space Climate Observatory Satellite (DSCOVR)] காமிரா பிடித்த படம் இது.

    ஆடம் ஸ்போ [டிஸ்கவர் திட்ட விஞ்ஞானி, நாசா விண்வெளிப் பயண மையம்] 

    முதன்முறை நிலவின் பின்புறம் சூரிய ஒளியில் கண்டுபிடிப்பு. 

    பூமியும், நிலவும் விண்வெளியில் சுற்றும் மெய்யான இந்தக் காட்சி ஓர் புல்லரிப்பை உண்டாக்குகிறது !  இதுவரை எந்த நாடும் தொலைநோக்கி மூலமாகவோ, விண்ணுளவிக் காமிராவோ, சூரிய வெளிச்சத்தில் நிலவின் பின்முகத்தைக் கண்ட தில்லை.  காரணம் நிலவு தன்னச்சில் சுழலாமல், ஒரு முகம் காட்டியே பூமியைச் சுற்றி வருகிறது.  இதுவரை யாரும் பூமி தன்னச்சில் ஒருநாள் சுழல்வதையோ, நிலவு பூமியைச் சுற்றி வருவதையோ கண்டதில்லை. இதுவரை பூமியும், நிலவும் ஒரே சமயத்தில், சூரிய ஒளியில் சார்புநிலை வேகத்தில் சுற்றி வருவதை யாரும் கண்டதில்லை.  இப்போது நாசாவின் துணைக்கோள் “டிஸ்கவர்”  [DSCOVR] 2015 ஜூலை 16 & 2016 ஜூலை 5 ஆகிய இரண்டு தினங்களில் இருமுறை ஒரே சமயத்தில் பூமி, நிலவுக் கோள்களின் நேர்பார்வை கிடைத்துள்ளது.  அந்த இரண்டு நாட்களில் நிலவு பூமிக்கும் துணைக் கோளுக்கும் இடையே சூரிய ஒளிபட்டு நகர்ந்து சென்றிருக்கிறது.  அப்போது துணைக்கோள் பூமியிலிருந்து சுமார்  ஒரு மில்லியன்  தூரத்தில் சூரியனைச் சுற்றி வந்திருக்கிறது.

    Relative Size of Planets -2

    அந்த சுற்று வீதியில் சுற்றிய வண்ணம், டிஸ்கவர் துணைக்கோள் தேசீயக் கடல்நிலை & சூழ்நிலை ஆளுமைக் குழு [National Oceanic & Atmospheric Administration (NOAA)] சூரியப் புயல் கண்காணிப்பு ஆய்வுகள் செய்து வருகின்றன. துணைக்கோளில் விண்வெளிப் படங்களை எடுக்கும் நாசாவின் காமிரா எபிக் [EPIC – Earth Polychromatic Imaging Camera] எனப்படுவது.  நிலவின் இந்தக் குறுக்கீடு நிகழ்ச்சி [Lunar Photobomb] என்று குறுப்பிடப் படுகிறது.  சூரிய ஒளியில்சுழலும் பாதிப் பூமி தெளிவாய்த் தெரியும் போது ஓஸோன் திணிவு, தாவரப் பசுமை வளர்ச்சி [Vegetation], முகில் உயரம், சூழ்வெளி வாயுக் கலவைகள் [Aerosols]  கண்காணிக்கப் படுகின்றன.  டிஸ்கவர் துணைக்கோள் சூழ்வெளிக் கண்காணிப்புத் திட்டங்கள் நாசா, நோவா, அமெரிக்க விமானப் படையினர் [NASA, NOAA, U.S. AIR FORCE] கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.

    Far side of Moon

    சைனா 2020 ஆண்டுக்குள் முதன்முறையாக நிலவின் மறுபுறத்தில் தளவுளவியை இறக்கத் திட்டமிடுகிறது.

    நிலவின் மறுபுறம் இறங்கும் இந்த சைனா திட்டம் செஞ்சி -4 விண்ணுளவி மூலம் 2020 ஆண்டில் நிகழப் போகிறது.  சைன அரசாங்கம் திட்டத்தை விண்வெளி நிபுணர்கள் ஓராண்டுக்குள் ஆராய வேண்டும் என்று கட்டளை இட்டுள்ளது.  இத்திட்டம் நிறைவேறினால், சைனா தேசமே உலகில் முதன்மையாகச் சாதித்த  தேசமாகக் கருதப்படும்.  நிலவின் மறைமுகம் தூய்மையான மின்காந்த சூழ்வெளியைக் [Clean Electromagnetic Environment] கொண்டது. தணிந்த அதிர்வு மின்னலைத் தொடர்பு ஆய்வு செய்யத் [Low Frequency Radio Study] தகுதியுள்ளது.
    சோவ் யாங்கிலியாவோ  [சந்திரன் தேடல் நிறுவகம், சைனிஸ் விஞ்ஞானப் பேரவை]
    2017 இல் ஏவிச் சோதிக்கப்படும் தளவுளவி 5 [Chen’ge -5] முற்போக்கான உளவி.  அது சுய இயக்க முறையில் மாதிரி மண்ணைச் சோதிக்கும். சந்திர தளத்தில் தானாக இறங்கி மேலே ஏறும் திறம் உடையது.  400,000 கி.மீ. [240,000 மைல்] உயரத்தில் மனிதரற்ற இணைப்பைச் [Unmanned Docking] செய்யக் கூடிய ஆற்றல் உள்ளது.
    லி. சுன்லாய்  [செஞ்சி -4 தளவுளவி அமைப்பாளர்] 
    Probe Chang'e 4
    +++++++++++++++++
    2020 ஆண்டில் சைனா சாதிக்கப் போகும் முதன்முறை விண்வெளிச் சாதனை
    சந்திரனின் மறுபக்கத்தில் முதன்முறை புதிய தளவுளவி ஒன்றை இறக்கி சைனா சோதிக்கப் போவதாக சைன விஞ்ஞானி  சோவ் யாங்கிலியாவோ
    2015 செப்டம்பர் 10 ஆம் தேதியன்று அறிவிப்பு செய்துள்ளார்.  அத்திட்டம் 2020 ஆண்டில் செஞ்சி -4 தளவுளவி மூலம் நிகழும்.  இதைச் செய்து காட்டி சைனா முதன்முறை சாதித்த தேசமாகப் பெயரெடுக்கப் போகிறது.
    அமெரிக்க, ரஷ்ய விண்ணுளவிகள் நிலவின் மறுபக்கம் பயணம் செய்து பன்முறை சுற்றியிருந்தாலும், இதுவரை எந்த தேசமும் தளவுளவி இறக்கி ஆய்வுகள் நடத்தியதில்லை.  பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலவின் பின்புறம் இருள் சூழ்ந்த கருமுகம்.  சந்திரனின் மறைமுகம் தூய்மையான மின்காந்த சூழ்வெளியைக் [Clean Electromagnetic Environment] கொண்டது.
    தணிந்த அதிர்வு மின்னலைத் தொடர்பு ஆய்வு செய்யத் [Low Frequency Radio Study] தகுதியுள்ளது.  தளவுளவியைத் தெரியும் நிலவுத் தளத்தில்  அனுப்பிய அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடி மூன்றாவது தேசமாகச் சைனா கருதப்படுகிறது.  2013 இல் சைனா முதன்முறை தளவுளவி ஒன்றை நிலவின் நேர்முகப்பில் இறக்கிச் சோதனை செய்து வருகிறது.

    Return of Capsule

    “ராக்கெட் என்ன ஓர் உருளைக் கிழங்கைக் கூடச் சைனா விண்வெளியில் ஏவிட முடியாது.”

    மா சேதுங் (1957) – சைனாவின் விடுதலைப் பிதா (Mao Tse-Tung, China Liberator) (1893-1976)

    எட்டு நாட்களில் பயணம் செய்து நிலவைச் சுற்றி புவிக்கு மீண்ட சைன விண்சிமிழ்

    2014 அக்டோபர் 24 இல் சைனா ஏவிய மனிதரற்ற செஞ்சி -4 விண்சிமிழ் [Chang’e -4]  நிலவைப் பின்புறம் பாதி சுற்றித் தன்பணி முடித்துப் புவி நோக்கித் தானாய் மீண்டு பாதுகாப்பாய் இறங்கிப் புதியதோர் ஆசிய முதன்மைச் சாதனையாக செய்து கட்டியுள்ளது.   இந்த முக்கிய விண்வெளி நிலவுப் பயணத்தில் ஈடுபட்ட அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து, 50 ஆண்டுகளுக்குப் பின் சைனா மூன்றாவது நாடாகச் செய்து சாதித்துள்ளது.   மனிதரற்ற அந்தச் சோதனை விண்சிமிழ் சைனா திட்டமிட்ட மங்கோலியத் தளத்தில் பாராசூட் குடை உதவியில் பாதுகாப்பாய் வந்திறங்கியது.  140 கி.கிராம் எடையுள்ள விண்சிமிழ் பயணம் செய்த எட்டு நாட்களில் சுமார் 840,000 கி.மீ. [504,000 மைல்] தூரத்தைப் போக வரக் கடந்துள்ளது.  விண்சிமிழுக்குள் இருந்த தகவல் சிமிழை [Data Capsule] சைன ஆய்வாளர் எடுத்து, விண்ணூர்தி [Chang’e -5]  மீள்நுழைவுத் தகவல் பதிவுகளை ஆராய்ந்து  2017 இல் திட்டமிட்ட அடுத்த நிலவு மாதிரி மண் எடுப்புப் பயணத்துக்குப் பயன்மடுத்துவார்கள்.

    The Reurn Capsule

    1970 ஆண்டுகளில் நாசாவின் மனிதர் ஏறிச் சென்ற நிலவுப் பயணங்கள் யாவும் முடிவு அடைந்தன. 50 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது நாடாகச் சைனா இந்தச் சிக்கன நிலவுப் பயணத்தைச் சாதித்துள்ளது.  2013 டிசம்பரில் சைனா அனுப்பிய யூட்டு [Yutu Rover] தளவுளவி நிலவில் இறங்கித் தகவல் அனுப்பி வருகிறது.  சைனாவின் மாபெரும் விண்வெளி நிலவுப் பயணச் சாதனையாக இது கருதப் படுகிறது.   அத்துடன் சைனாவின் விண்வெளி நிலையப் [Chinese Space Station] பயிற்சிகள், அடுத்து செவ்வாய்க் கோளில் 2020 இல் சைன விண்வெளித் தீரர் தடம் வைக்க உதவும்.  2017 இல் 31 பவுண்ட் [14 கி.கி] விண்சிமிழ் செஞ்சி -5  [Chang’e -5] நிலவின் மண் மாதிரியை எடுத்துப் புவிக்குக் கொண்டுவர முக்கட்டச் சோதனைகளைத் [Three Stage of Lunar Test Run to bring Moon Samples] திட்டமிட இந்த விண்சிமிழ் மீள்நுழைவுப் பயிற்சி ஒரு கட்டமாகும்.  புவியீர்ப்பு உராய்வில் மின்சிமிழ் மீள்நுழைவு வேகம் 25,000 mph.  அந்த பயங்கர உராய்வு வேகத்தில் உண்டாகும் தீக்கனல் வெப்பத்தில் விண்சிமிழ் எரிந்து போகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது !  இந்தச் சோதனை ஆய்வுகள், அனுபவங்கள் அடுத்து 2017 இல் நிலவு மண் மாதிரியை எடுத்துப் புவிக்கு மீளும் மூன்றாம் கட்டத் திட்டத்துக்குப் பயன்படுத்தப் படும்.

    Chinese Moon Rover 2013

    “சைனா தேசத்தின் நிலவுத் தேடல் திட்டங்கள் ரஷ்ய, அமெரிக்கச் சாதனைகளுக்கு 40 ஆண்டுகள் பிந்தி இருப்பினும், மனித இனத்தின் விண்வெளித் தேடலில் அந்த முயற்சிகள் தேசப் பொறுப்புக்கு தேவையானவை.”

    கியான் வைபிங் (சைனாவின் இரண்டாம் விண்ணுளவி பிரதம டிசைனர்)

    “பூமியில் உள்ள எரிசக்தி ஹீலியம் -3 இன் கொள்ளளவு 15 டன் என்று மதிப்பிடும் போது, நிலவில் இருக்கும் ஹீலியம் -3 இன் மொத்த அளவு 1 முதல் 5 மில்லியன் டன் என்று கணக்கிடப் படுகிறது.  இதை பூமிக்கு எடுத்து வந்து மின்சக்தி ஆக்கினால், சைனாவுக்கு ஓராண்டுத் தேவை 10 டன் ஹீலியம் -3.  உலகத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 டன் போதும்.”  [கதிரியக்கம் அற்ற அணுப்பிணைவு மின்சக்தி உலைக்கு [Fusion Power Reactor] எரிக்கருவாக ஹீலியம்-3 மூலக்கூறு பயன்படுகிறது.

    ஔயாங் ஸியுவான் (Ouyang Ziyuan) Head of First Phase of Lunar Exploration

    “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன் தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் வேண்டும்.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு ஏராளமாய்க் கிடைக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை [ஜனவரி 26, 2008] (International Conference on Aerospace Science & Technologies)

    Lunar Module Returned

    ஆசிய முதல் சாதனையாக நிலவில் இறங்கிய சைனாவின் சந்திரத் தளவூர்தி

    2013 ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி சைன விண்கப்பல் செங்கி-3 [Chang’e -3]  சந்திரனை நோக்கிப் பயணம் செய்து, நிலவில் தளவுளவியை மெதுவாய் இறங்கித் தடம் வைத்தது.  பிறகு அந்த நிலைத்த சாதனத்திலிருந்து, நகரும் ஆறு சக்கர தளவூர்தி ஒன்று கிளம்பி உளவ ஆரம்பித்தது.   அது முதன்முதல் சைனா செய்த  ஆசிய தீரச் சாதனையாக உலக நாடுகள் கருதுகின்றன.   இந்த அரிய சாதனையைப் புரிந்த முதலிரண்டு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யாவுக்குப் பிறகு, 37 ஆண்டுகள் கழிந்து சைனா வெற்றிகரமாகச் செய்த மூன்றாவது நாடாக உலகுக்குக் காட்டியுள்ளது.  இந்த விண்வெளித் தேரைச் [Chang’e -3, செங்கி -3] சுமந்து நிலவை நோக்கிப் பயணம் செய்ய வைத்தது  சைன ஏவுகணை  மார்ச் -3பி [March -3B].   ஏவு கணை ஏவி 12 நாட்கள் கழித்து,  விண்ணூர்தி சந்திர தளத்தில் இறங்கியது.  பத்தாண்டு முன்பு முதன்முறையாகச் சைனா தன் விண்வெளித் தீரரை அண்டவெளியில் நீந்தச் செய்து பெயர் பெற்ற பிறகு இந்த அரிய சாதனையை வெகு சிறப்பாகப் புரிந்துள்ளது.   சைனா 2020 ஆண்டுக்குள் தன் விண்வெளித் தீரர் நிலவில் கால் வைக்கும் எதிர்காலத்  திட்டத்திற்கு இந்த வெற்றி அடிகோலி யுள்ளது.

    Moon Rover

    சைனாவின் சந்திரத் தளவுளவியும், தளவூர்தியும் வந்திறங்கிய பகுதி, 250 மைல் [400 கி.மீ.] அகலமான ஒரு மட்டத் தளப்பகுதி.   அதன் லாட்டின் பெயர் :  ஸைனஸ் இரிடம் [Latin Name, Sinus Iridum].  அதன் பொருள் : வானவில் வளைகுடா [Bay of Rainbows].  சைனத் தளவுளவி, தளவூர்தி இரண்டும் ஒன்றை ஒன்றைப் படமெடுத்துப் பூமிக்கு அனுப்பின.  தளவுளவி நிலவில் ஓராண்டு ஆய்வு செய்யும்.  தளவூர்தி மூன்று மாதங்கள் நகர்ந்து சென்று நிலவில் பணிபுரியும்.  தளவூர்தியின் நகர்ச்சி வேகம் :  மணிக்கு 200 மீ. தூரம் [660 அடி] பயணம் செய்யும்.  30 டிகிரிச் சரிவுத் தளத்தில் ஏறி இறங்க முடியும் தகுதியுள்ளது.

    செங்கி -3 குறிப்பணிப் பெயர் சந்திரத் தேவதைக்கு இடப்பட்ட சைன இதிகாசப் பெயர். அதுபோல் தளவூர்தியின் பெயர் :  யூடூ அல்லது . எளிய முயல் [Yutu or Jade Rabbit] . சைனா அனுப்பியுள்ள செங்கி -3  ஆறு சக்கரத் தளவூர்தி கடைசியில் சென்ற ரஷ்ய தளவூர்தியை விட மேம்பட்டது.   சைனத் தளவூர்தியில் முற்போக்கான தள ஊடுருவு ரேடார் [Ground Penetrating Radar] உள்ளது.   அது நிலவின் மண்ணையும், மேற் தட்டையும் ஆராயும் தகுதியுடையது.  யூடூ முயலின் எடை 120 கி.கி. [260 பவுண்டு] .  யூடூ தேரை இயக்குவது சூரிய மின்சக்தி தரும் தட்டுகள்.  அதனுள் புளுடோனியம் -238 கதிரியக்க மூலகம் இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.   அதன் வெப்பம் தளவூர்தியை இரவுக் குளிரில் சூடாக வைத்திருக்க  உதவும்.

    Yutu Rover

    சந்திரனை நோக்கிச் சைனா ஏவும் இரண்டாவது விண்ணுளவி

    2010 அக்டோபர் முதல் தேதி ஸிசாங் துணைக்கோள் ஏவு தளத்திலிருந்து (Xichang Satellite Launch Centre – XSLC) சைனாவின் “செங்கி -2” (Chang’e -2) என்னும் தனது இரண்டாவது விண்ணுளவியைச் சந்திரனை நோக்கி “நீண்ட மார்ச் CZ-3C” (Long-March CZ-3C) ராக்கெட்டில் ஏவியுள்ளது.  செங்கி -2 மிகத் தணிவாக 9 மைல் (15 கி.மீ) உயரத்தில் 6 மாதங்கள் நிலவைச் சுற்றிவந்து தள ஆராய்ச்சிகள் நடத்தும்.  முதலில் ஏவிய சந்திர விண்ணுளவி “செங்கி -1” 2007 அக்டோபரில் பயணத்தைத் துவக்கி 16 மாதங்கள் நிலவைச் சுற்றி முடிவில் தளத்தில் விழுந்து நொறுங்கியது.  வடிவத்தில் செங்கி-2 முதலில் பயணம் செய்த சாங்கி -1 விண்ணுளவியைப் போன்றதே !  செங்கி -1 நிலவை 120 மைல் (200 கி..மீ) உயரத்தில் சுற்றி வந்தது.  செங்கி -2 இன் முக்கியப் பணி : நிலவிலும் நிலவுக்கு அப்பாலும் சென்று புதிய விண்வெளிப் பயண நுணுக்கங்களைச் சோதிப்பது.  அடுத்து வரப் போகும் செங்கி -3 & செங்கி -4 விண்ணுளவிகள் இறக்கும் தளவூர்திகள் ஊர்ந்து நகரும் இடங்களைத் தீர்மானிப்பது.  தளங்களின் படங்களை புதிய காமிராக்கள் மூலம் கூர்ந்து விளக்கமாகக் காண்பது.  தற்போது செங்கி-2 சந்திரனை நெருங்கி 60 மைல் (100 கி.மீ.) உயரத்தில் அதனைச் சுற்ற ஆரம்பிக்கும்.  குறிப்பணித் திட்டப்படி சில தினங்களில் விண்ணுளவி மிகத் தணிவான 9 மைல் (15 கி.மீ) உயரத்தில் சுற்றத் துவங்கிச் சந்திர தளத்தைக் கூர்ந்து உளவு செய்யும்.

    இந்தியாவும், சைனாவும் 21 ஆம் நூற்றாண்டில் நிலவை நோக்கித் தேடிப் போவதின் உள் நோக்கம் ஹீலியம் -3 எரிசக்தியே. “பூமியில் உள்ள ஹீலியம் -3 இன் கொள்ளளவு 15 டன் என்று மதிப்பிடும் போது, நிலவில் இருக்கும் ஹீலியம் -3 இன் மொத்த அளவு 1 முதல் 5 மில்லியன் டன் என்று கணக்கிடப் படுகிறது.  இதை பூமிக்கு எடுத்து வந்து மின்சக்தி ஆக்கினால், சைனாவுக்கு ஓராண்டுத் தேவை 10 டன் ஹீலியம் -3.  உலகத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 டன் போதும்.” என்று ஔயாங் ஸியுவான் (Ouyang Ziyuan) (Head of First Phase of Lunar Exploration) கூறுகிறார்.  அணுப் பிணைவு முறையில் மின்சக்தி உண்டாக்கி னால் அமெரிக்காவுக்கு ஓராண்டுத் தேவை 25 டன் ஹீலியம் -3 !  அதாவது பல்லாயிரம் ஆண்டு உலக எரிசக்தி தேவையை நிலவின் ஹீலியம் -3 வாயு பூர்த்தி செய்ய முடியும்.

    Chinese spacecraft control center

    இரண்டாம் நிலவுப் பயணத் திட்டத்தின் வேறுபாடுகள்

    துணைக்கோளைத் தூக்கிச் சென்ற ராக்கெட், விண்ணுளவியை “நிலவைச் சுற்றும் மாற்றுப் பாதையில்” (Trans-Lunar Orbit) விட்டதும் அதன் சூரியத் தட்டுகள் விரிந்து மின்சக்தியை அளித்தன.  பூமியைச் சுற்றும் அப்பாதையின் மிகை நீளம் (Apogee) : 230,000 மைல் (380,000 கி.மீ.)  குறு நீளம் (Perigee) 120 மைல் (200 கி.மீ.)  இந்தப் பாதையில் விண்ணுளவி சென்று 5 நாட்களில் நிலவை அண்டிச் சுற்ற முடியும்.  முதலில் நிலவுக்குப் பயணம் செய்த சாங்கி -1 நிலவை நெருங்க 12 நாட்கள் எடுத்தன.  சாங்கி -2 காமிராவின் கூர்மை நோக்குத் திறன் : 33 அடி (10 மீடர்).  சாங்கி -1 கூர்மை நோக்குத் திறன் : 400 அடி (120 மீடர்).  180 அடி (54 மீடர்) உயரமுள்ள ராக்கெட் 345 டன் தூக்கு எடைத் தகுதி உள்ளது.  ராக்கெட் சுற்றுப் பாதையில் இடும் எடைத் தகுதி : 4 டன். விண்ணுளவியின் எடை : 2.5 டன்.  விண்ணுளவிக்கு இட்ட பெயரான “செங்கி” என்பது சைனாவின் இதிகாச நிலவுக் கடவுள் !

    சைனாவின் இரண்டாம் விண்ணுளவி வெண்ணிலவை 6 மாதங்கள் சுற்றி 2013 இல் ஏவப் போகும் சாங்கி -3 ஒரு தளவுளவியோடு இறங்கப் போவதற்கு வேண்டிய தகவலைச் சேமிக்கும்.  “சைனா வின் சாங்கி -2 துணைக்கோள் சந்திர தளத்தில் மெதுவாய் இறங்கும் பொறி நுணுக்கத்தையும், சந்திரனுக்கு அப்பால் செல்லும் பயண அனுபவத்தையும் பெற முனையும்,  விண்ணுளவி விரைவாய்ச் செல்லும் ! நிலவை மிகவும் நெருங்கி தணிவுப் பாதையில் சுற்றிவந்து தெளிவாக ஆராயும்.” என்று சைனாவின் சந்திரச் சுற்றியின் பிரதம டிசைன் அதிபர், உவு வைரன் (Wu Weiren, Chief Designer, China’s Lunar Orbiter Project) கூறினார்.  இந்த இரண்டாம் சாங்கி நிலவுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கு சுமார் 134 மில்லியன் டாலர் (2010 சைன நாணய மதிப்பு 900 மில்லியன் யுவான்).

    இதுவரைச் சைனா சாதித்த விண்வெளிச் சாதனைகள்

    1957 ஆம் ஆண்டு ரஷ்யா தனது ஸ்புட்னிக் விண்சிமிழை அண்டவெளியில் முதன் முதல் ஏவி உலகத்தாரைப் பெரு வியப்பில் ஆழ்த்தியது.  அது முதல் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவும் விண்வெளிச் சாதனைப் போட்டிகள் அடுத்தடுத்துத் தொடுத்தன.  அமெரிக் காவின் முதல் துணைக்கோள் 1958 இல் விண்வெளியில் ஏவப்பட்டது ! இரண்டு வல்லரசுகளும் தமது விஞ்ஞானப் பொறியியற் சாதனைகளைக் காட்டி விண்வெளித் தேடலில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளன !  1969 ஆண்டு ஜூலை 20 இல் அமெரிக்க விண்வெளித் தீரர் நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன்முதல் வெண்ணிலவில் தடம் வைத்து 20 ஆம் நூற்றாண்டின் அற்புதச் சாதனையாகச் செய்து காட்டினார். அதற்குப் பிறகு 1972 வரை 5 முறை சென்று அமெரிக்க விண்வெளி வீரர் நிலவில் நடந்து தளவூர்தியிலும் சென்று தகவல் சேமித்தார்.

    அண்டவெளித் தேடலில் ரஷ்ய, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பங்கீட்டுக்குப் பிறகுச் சைனா வெகு தாமதமாக முனைந்து விண்வெளிப் பயணங்களைத் துவங்கியது.  1958 ஆம் ஆண்டில் சைனா தனது விண்வெளி ஏவுகணைத் தளத்தைக் கோபி பாலை வனத்தில் நிறுவியது.  சைனா முதல் துணைக்கோளை அண்டவெளியில் வெற்றிகர மாக 1970 இல் ஏவியது.  1990-2002 ஆண்டுகளில் சைனா “செங்கி I, II, III & IV” (Chang’e -1, 2, 3, & 4) விண்சிமிழ் பொறித்துறை நுணுக்க விருத்தியை (Shenzhou I to IV Spacecraft Developments) மேற்கொண்டிருந்தது.

    2003 அக்டோபரில் சைனா முதல் மனித விண்சிமிழ்ப் பயணக் குறிப்பணியை (Manned Space Mission) மேற்கொண்டு செங்சோவ் -5 மூலம் (Shenzhou V) வெற்றிகரமாகச் செய்து உலகை வியக்க வைத்தது !  இரண்டு ஆண்டுகள் கழித்து 2005 அக்டோபரில் செங்சோவ் -6 மூலம் இரட்டை விமானிகள் ஓட்டும் விண்சிமிழ் ஏவப்பட்டு பூமியைச் சுற்றி வந்தது. அடுத்து 2007 அக்டோபரில் நிலவை நோக்கி செங்கி-1 மனிதரற்ற விண்ணூர்தி ஒன்று அனுப்பப் பட்டது !  2008 செப்டம்பரில் மூவர் அமர்ந்த விண்சிமிழை முதன்முதல் ஏவி சைன விண்வெளி விமானி அண்டவெளியில் 20 நிமிடங்கள் நீச்சல் புரிந்தது ஆசியா வின் முதல் விண்வெளி மைல் கல்லாக ஓங்கி நிற்கிறது.

    விண்வெளி நிலையம் அமைக்கச் சைனாவின் திட்டம்

    1998 இல் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து கண்காணித்துப் பராமரித்து வரும் அகில நாட்டு விண்வெளி நிலையத்தை (International Space Station) அமைத்துப் பூஜிய ஈர்ப்பு விசையில் புரளும் விண்வெளி விமானிகளை நீண்டகாலப் பயிற்சியில் ஈடுபடுத்தி வருகின்றன.  அதன் முக்கிய நோக்கம் 2020 ஆண்டுகளில் விண்வெளி விமானிகள் செவ்வாய்க் கோளுக்குப் பயணம் செய்யும் திட்டங்கள் உருவாகி வருகின்றன.  அதற்கு விண்வெளி விமானிகள் போய் மீளக் குறைந்தது 12 அல்லது 16 மாதங்கள் நீடிக்கலாம்.  சைனா தனது நீண்டகால விண்வெளிப் பயிற்சிக்குத் தனியா கவே ஒரு விண்வெளி நிலையத்தை (China Space Station) அமைக்கத் திட்டமிட்டுள்ளது.  அதன் “டியான்காங் -1 (Tiangong -1 Space Module) முதலரங்குச் சட்டத்தைச் சைனா 2011 ஆண்டில் ஏவ முடிவு செய்திருக் கிறது. டியான்காங் என்றால் “தெய்வீக அரண்மனை” (Tiangong = Heavenly Palace) என்று அர்த்தம்.  அதன் எடை 8.5 டன் இருக்கும்.  அந்த சுற்றும் அரண்மனையில் விவெளி விமானிகள் பூஜிய ஈர்ப்பு விசையில் நீண்ட காலப் பயிற்சியில் ஈடுபடுவார்.  சைன விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றி வரும் போது அதன் செங்சோவ் -8 (Shenzhov -8) விண்கப்பல் இணைப்பு / அவிழ்ப்புப் (Docking) பணிகளில் பயிற்சி செய்யும். செங்சோவ் என்றால் “தெய்வீகக் கப்பல்” (Divine Vessel) என்று பொருள் ! செங்சோவ் -9 & -10 விண்கப்பலில் இரண்டு அல்லது மூன்று விமானிகள் பயணம் செய்து புதுப் பயணிகள் நுழையவும், பழைய பயணிகள் மீளவும் திட்டங்கள் தயாராகி யுள்ளன.

    ஆசிய நாடுகள் மறைமுகமாகச் செய்யும் அண்டவெளிப் பந்தயம் !

    இந்தியா ஏவிய முதல் துணைக்கோள் ஆரியபட்டா 1975 இல் 300 மைல் உயரத்தில் பூமியை 90 நிமிடங்களுக்கு ஒருமுறைச் சுற்றியது.  சந்திரனைச் சுற்றப் போகும் இந்தியாவின் முதல் பேரிச்சைத் திட்டம் 2008 அக்டோபர் 19 ஆம் தேதி நிறைவேற சந்திராயன் -1 விண்சிமிழ்ச் (Chandrayaan-1) சோதனைகள் நடைபெற்றன.  அப்பயணத்தில் சந்திராயன் -1 விண்சிமிழ் நிலவுக்கு வெகு அருகில் நீள்வட்டச் சுற்றுவீதியில் சுற்றி வந்து உளவுகள் செய்தது !  அதே சமயம் இந்தியா தன் மூவர்ணக்கொடி வரைந்த சதுரப் பேழை ஒன்றை  சந்திர தளத்தில் இறக்கியது !  அந்த விண்வெளிப் பயணத்துக்கு இந்தியாவுக்கு ஆகும் செலவு 91 மில்லியன் டாலர் (4 பில்லியன் ரூபாய்) (2008  நாணய மதிப்பு) என்று தெரிகிறது !  2016 இல் இந்தியா மனிதர் ஓட்டிப் புவிச் சுற்றும் விண்வெளிப் பயிற்சிக்கு ஜப்பான் திரவ எரிசக்தி ராக்கெட்டை விருத்தி செய்து அதன் முதல் விண்வெளித் திட்டம் 1970 இல் ஆரம்பமானது.  2003 இல் செய்த விண்வெளித் தேடல் முயற்சியில் ராக்கெட் ஏவுதல் பழுதாகித் தோல்வி அடைந்தது !  இறுதியில் 2005 இல் ஜப்பான் அனுப்பிய முதல் துணைக்கோள் வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றியது.

    அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ஒருபுறம் மேம்பட்ட விண்வெளித் தேடல்களில் போட்டி இட்டுக் கொண்டுள்ள போது ஆசியாவில் சைனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகள் அண்டவெளிப் பந்தயங்களை மேற்கொண்டிருக் கின்றன.  இப்போது சைனா முதல் விண்வெளி நீச்சலைப் புரிந்து ஆசியாவில் தனது முற்போக்கு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் வல்லமையைக் காட்டியுள்ளது !

    2017 ஆண்டுக்குள் சைனா நிலவுத் தள மண் மாதிரியை எடுத்து பூமிக்கு மீளும் திட்டத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறது.  இறுதியாக 2020 ஆம் ஆண்டில் சைனா தனது பேரிச்சைத் திட்டமான நிலவுத் தளத்தைத் தொடும் மனிதப் பயணத்தை அமெரிக்கா வைப் போல் நிறைவேற்ற முற்பட்டுள்ளது.  அதே காலத்தில் அமெரிக்காவின் விண்வெளித் தீரர்கள் செவ்வாய்த் தளத்தில் தடம்வைக்கப் பயணம் செய்து அதைச் சுற்றி வருவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது !  ஆசியாவின் மகத்தான விண்வெளி வெற்றியின் போது முரண்பட்ட வாசகம் என்ன வென்றால் சைனாவின் விடுதலைப் பிதா மா சேதுங், “ஓர் உருளைக் கிழங்கைக் கூடச் சைனா விண்வெளியில் ஏவ முடியாது” என்று இகழ்ச்சியாகக் கூறியது !

    சைனாவின் விண்வெளி ராக்கெட் நுணுக்கத் தேர்ச்சி

    1956 இல் சைனா தனது முதல் ராக்கெட் ஏவுகணை ஆய்வுக் கூடத்தை நிறுவியது.  அடுத்து ரஷ்ய உதவியில் சாங்செங் [Changzheng (CZ)] முதல் ராக்கெட்டைச் செய்து முடித்தது.  1970 இல் சைனா தனது முதல் துணைக்கோளை அனுப்பிப் பூமியைச் சுற்ற வைத்து, அவ்விதம் செய்த ஐந்தாம் உலக நாடாகப் போற்றப் பட்டது.  1992 இல் மனிதன் இயக்கும் துணைக்கோளை ஏவி ரகசியமாய்ச் செய்தது.  1995 இல் ஏவும் போது CZ–2E ராக்கெட் ஒன்று வெடித்து 6 பேர் உயிழந்தனர்.  1999 நவம்பர் 20 இல் செங்ஸோவ் துணைக்கோள் ஒன்று ஏவப்பட்டு 14 தடவை சுற்றி வந்து பிரச்சனையில் பூமிக்கு மீண்டது !  2002 ஆம் ஆண்டில் செங்சோவ் -3 ஏவப் பட்டு 108 சுற்றுகள் செய்த பிறகு பூமிக்கு மீண்டது.  அதே ஆண்டு டிசம்பர் 29 இல் செங்ஸோவ் -4 ஏவப்பட்டு 2003 ஜனவரி 4 இல் திரும்பியது.  2003 அக்டோபர் 15 இல் செங்ஸோவ் -5 மனிதனோடு முதன்முதல் அனுப்பப் பட்டு 14 முறை பூமியை சுற்றி மீண்டது.  அடுத்து 2007 இல் சாங்கி-1 முதன்முதல் நிலவுக்குப் பயணம் செய்து சந்திர தளத்தின் தெளிவான படங்களை அனுப்பியது.  2008 இல் சைனாவின் விண்வெளி விமானிகள் அண்ட வெளி நீச்சலைப் புரிந்தனர்.  2010 அக்டோர் முதல் தேதி சாங்கி -2 சந்திரனை நோக்கிச் சென்று அதன் புவியீர்ப்பில் நுழைந்தது.  ஆசிய நாடுகள் சைனா, ஜப்பான், இந்தியா மூன்றுக்குள்ளும் விண்வெளித் தேடலில் ஓர் மறைமுகப் பந்தயம் உருவாகி வருவதில் பயன் அடையப் போவது ஆசிய மக்களே !

    (தொடரும்)

    தகவல்:

    Picture Credits:  Boston Globe, Christiamn Monitor, Xinhua News Agency & China Daily Reporter, BBC News, The Hindu.

    1. BBC News – Chinese Astronaut Walks in Space [Sep 27, 2008]
    2. BBC News – China Puts its First Man in Space [Sep 27, 2008]
    3. BBC News – China Astronauts Blast into Space [Sep 27, 2008]
    4. BBC News – Timeline Space Flights of the World Countries (2005)
    5. BBC News What’s Driving China Space Efforts By : Paul Rincon [Sep 27, 2008]
    6. BBC News – China Could Reach Moon By 2020 By : Paul Rincon [Sep 27, 2008]
    7. BBC News – China Spacecraft Returns to Earth [Sep 27, 2008]
    8. Boston Globe : China Stokes National Pride with Celebrated First Spacewalk – Maneuver Tests Nation’s Mastry of Technology, By : Barbara Demick  [Sep 28, 2008]
    9. Christian Monitors – China First Spacewalk : No Cold-War Race This Time By : Peter Spootts [Sep 25, 2008]
    10. The Times of India – India Space Program Will Put Rover on Moon [Sep 19, 2008]
    11. Christian Monitor – India Launched its First Satelite (Jan 11, 2007)
    12 The Economic Times – Chandrayaan All Set for Moon Mission (Sep 26, 2008]
    13. Asiaone – Singapore Firm Offers – Chinese Astronaut Completes Nation’s First Space Walk
    [Oct 1, 2008]
    14. China Daily Reporter – Shenzhou VII Spacecraft Lauched fir First Spacewalk By : Hu Yinan [Oct 1, 2008]
    14 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40810021&format=html
    அண்டவெளியில் நீந்திய சைனாவின் முதல் விண்வெளித் தீரர் !
    14 (b)https://jayabarathan.wordpress.com/2010/09/10/chandrayaan-2/ (இந்தியாவின் இரண்டாம் நிலவுப் பயணம்)
    15 Xinhua News Agency – Lunar Orbiter a Milestone for Space Agency (October 2007)
    16 The Hindu -Facts & Figures about China’s Second Lunar Probe Chang’e -2 (Oct 1, 2010)
    17 China Launches Second Lunar Probe – Xinhua News Agency (Oct 2, 2010)
    18 Daily Galaxy : China Launches Second Moon Mission (October 3, 2010)
    19 Four Chinese Lunar Launders Mooted – By : Morris Jones, Australia (Oct 6, 2010)
    20 China’s Chang’e-2 Heads for Moon – Xinhua News Agency (October 4, 2010)
    21 Beijing Chinese Space Centre- Xinhua News Agency – Lunar Probe & Space Exploration is Chaina’s Duty to Mankind (October 7, 2010)

    22.http://www.spacedaily.com/reports/Chinas_triple_jump_progress_in_lunar_probes_999.html  [December 1, 2013]

    23.  http://www.moondaily.com/reports/Silent_Orbit_for_Chinas_Moon_Lander_999.html  [December 9, 2013]

    24.  http://www.moondaily.com  [December 20, 2013]

    25.  http://www.space.com/23855-how-china-change3-moon-rover-works-infographic.html  [December 6, 2013]

    26.  http://www.space.com/23968-china-moon-rover-historic-lunar-landing.html   [December 14, 2013]

    27.   http://www.spacedaily.com/reports/Chinas_first_lunar_rover_lands_on_moon_State_TV_999.html [December 14, 2013]

    28.  http://news.yahoo.com/china-39-39-jade-rabbit-39-lunar-rover-220110008.html   [December 16, 2013]

    29.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/12/chinas-1st-moon-rover-begins-its-exploration-and-search-for-rare-resources.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+TheDailyGalaxyNewsFromPlanetEarthBeyond+%28The+Daily+Galaxy+–Great+Discoveries+Channel%3A+Sci%2C+Space%2C+Tech.%29 [December 19, 2013]

    30.  http://news.malaysia.msn.com/top-stories/chinas-jade-rabbit-lunar-rover-deployed-on-moon-xinhua-6  [december 14, 2013]

    31.  http://www.bbc.co.uk/news/world-asia-25393826  [December 15, 2013]

    32.  https://en.wikipedia.org/wiki/Chinese_space_program  [December 17, 2013]

    33.  http://www.ctvnews.ca/sci-tech/china-to-launch-rock-collecting-lunar-probe-in-2017-after-latest-successful-landing-1.1595128  [December 16, 2013]

    34. http://en.wikipedia.org/wiki/Chinese_Lunar_Exploration_Program  [November 2, 2014]

    35.  http://news.yahoo.com/china-readies-moon-mission-launch-next-week-154108595.html  [October 14, 2014]

    36. http://www.moondaily.com/reports/China_gears_up_for_lunar_mission_after_round_trip_success_999.html  [November 4, 2014]

    37. http://www.spacedaily.com/reports/Chinas_Lunar_Orbiter_Makes_Safe_Landing_First_in_40_Years_999.html [November 4, 2014]

    38.  http://www.space.com/27661-china-moon-mission-sample-return.html  [November 5, 2014]

    39.   http://www.sino-us.com/10/China-aims-to-land-Chang-e-4-probe-on-far-side-of-moon-before-2020.html  [September 9, 2015]

    40.  http://defence.pk/threads/china-aims-to-land-change-4-probe-on-far-side-of-moon.396642/  [September 8, 2015]

    41. http://www.dailygalaxy.com/my_weblog/2015/09/china-to-explore-far-side-of-the-moon-could-lead-to-a-radio-telescope-base.html?  [September 9, 2015]

    42. http://www.moondaily.com/reports/China_aims_to_land_Change_4_probe_on_far_side_of_moon_999.html  [September 10, 2015]

    43. http://www.nasa.gov/feature/goddard/2016/nasa-camera-shows-moon-crossing-face-of-earth-for-2nd-time-in-a-year [July 11, 2016]

    44. http://www.moondaily.com/reports/NASA_camera_catches_moon_photobombing_Earth_999.html  [July 14, 2016]

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) [July 15, 2016]
    https://jayabarathan.wordpress.com/

    Attachments area
    Preview YouTube video NASA Camera Catches Moon ‘Photobombing’ Earth

    NASA Camera Catches Moon ‘Photobombing’ Earth
    Share
  • உலகிலேயே மிகவும் நாகரீகம் அடைந்த நாடு!

    பவள சங்கரி

    முந்தைய காலத்தில் தமிழ், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளில் நூல் இல்லை. எபிரேயம் என்ற ஹீப்ரு மொழி மற்றும் சீன மொழியில் சில எழுத்துக்கள் இருந்திருக்கின்றன. பைபிளின் பழைய ஏற்பாடு தோன்றியதும்கூட கி. மு.1000 ஆண்டுகளில்தான். ஆனால் இதெல்லாம் தோன்றுவதற்கு வெகுகாலம் முன்பே அதாவது 3000 ஆண்டுகளுக்கு முன்னரே, கடோபநிததத்தில் குறிப்பிட்டுள்ளபடி, தோன்றிய நசிகேதன் எனும் சிறுவன் எமனை வாக்குவாதத்தில் வென்று மூன்று வரங்கள் வாங்கி வருகிறான். அதேபோல் கார்க்கி போன்ற சில இந்துப் பெண்மணிகளும் சாதித்துள்ளனர். புத்தர், மகாவீரர், கன்பூசியசு, லாவோட்சே போன்றோருக்கும் முன்னரே இவர்களின் புகழ் பரவியிருந்தது. அதாவது உலகிலேயே மிகவும் நாகரீகம் அடைந்த நாடு நம் இந்தியாதான் என்பதற்கு இதுபோன்று பல உதாரணங்கள் உள்ளன!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    1e1b0ea7-a842-4a8d-84d8-055dabc98f50

    ”நாமடைதல் சிற்றின்பம் நாமாதல் பேரின்பம்
    நாமாதல் நாமடைய நாடுவீர் -நாமா
    வளிசொல்லி வேணு வனவிஹாரி தாளில்
    களிகொள் கன்றாய்க் கிடந்து”….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    09b6a6cb-58bd-4b6e-91b2-a2516966a139

    “அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
    சந்திர வம்சத்து ஸ்ரீரங்கன்,-நந்தனின்,
    வீட்டுச்சேய் பால்வெளியில், வேந்தனாய் ஆவதைக்,
    காட்டிய கேசவ் கவி”….(1)
    —————————————————————————————————————–

    பழையன களைதலும், புதியன கொள்ளலும்….
    ———————————————————————————
    “ராம கிரணமாய் ,ராத்திரி வந்தவனுக்கு,
    நாம கரணம் நடக்கும்முன், -காமதேனு,
    பால்சுரக்கப் போச்சு, பழையரா மாயணங்கள்,
    மால்பிறப்பு பாகவத மாச்சு”….(2)
    ——————————————————————————————————————-

    “பால்கோலம் இட்டு பசுயிரெண்டு சுற்றிவர
    மால்கொள் கிறான்பார் மணிமகுடம்; – ஆள்கொல்ல,
    சிம்மமாய்த் தூணில் சிலிர்த்தெழுந்த கண்ணனுக்கு,
    சும்மாவே சிம்மா சனம்”….(3)

    ஆள்-இரணியன்….
    ————————————————————————————————————

    “பாலா பிஷேகமே பட்டா பிஷேகமாய்
    கோலோ கலமாகக் கொண்டாடும் -மாலோலன்;
    ஆவிந்தன் பாலில் அபிஷேக நீராடி
    கோவிந்தன் கொற்றவைக் கூத்து”….(4)….கிரேசி மோகன்….
    ———————————————————————————————————————

    Share
  • “கட்டகழ கானதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா”


    விவேக்பாரதி

    கவியரசு கண்ணதாசன் அவர்களது “கட்டகழ கானதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா” என்கிற வண்ண மெட்டிற்கு திரு. கிரேஸி மோகன் எழுதச் சொல்லி நான் எழுதிய கவிதை.

     

    கன்னங் கரிதெனத் தோன்றும் இரவினில்
    …..கண்கள் விழித்திருப்பேன் – கவிப்
    …..பண்கள் படித்திருப்பேன் ! அடி
    கன்னி அழகினைக் காண அனுதினம்
    …..காற்றில் அலைந்திருப்பேன் – அடர்க்
    …..காட்டில் விழுந்திருப்பேன் !!

    எந்தத் திசையிலும் எங்கெங்கு காணிலும்
    …..உன்றன் திருமுகமே – எழில்
    …..கொஞ்சும் கலைமுகமே ! நிதம்
    சிந்தனை செய்கையில் கத்திக் கதறிடும்
    …..ஆசையில் நெஞ்சமடி – சுகம்
    …..ஆற்றிடப் பஞ்சமடி !

    கண்ணுக்கு முன்னொரு மாயை தெரியுது
    …..கைகளை நீட்டுகிறேன் ! – கனவின்
    …..பொய்களைக் காட்டுகிறாய் ! அடி
    பெண்மை இனத்தவர் காதல் மிகுத்திடும்
    …..பெட்டை மயிலினமே – இசை
    …..பெற்ற குயிலினமே

    எத்தனை நாளின்னும் ஏற்க பிரிவினை ?
    …..சொல்லடி கண்மணியே – எதிர்
    …..நில்லடி பெண்ணழகே ! இதழ்
    முத்தம் கொடுத்துயிர் மோட்சம் அடைந்திட
    …..முல்லை மலர்ச்சரமே – ஒரு
    …..சொல்லை உதிர்த்துவிடே !!!

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (4)

    இசைக்கவி ரமணன்

    kural-2

    திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! – பகுதி 3

    கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின் (2)

    தூய அறிவினை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவர்க்குக் கற்ற கல்வியினால் உண்டான பயன் என்ன?

    ஆய = ஆகிய, ஆன, இறந்த காலம், பெயரெச்சம்

    வாலறிவன் = எங்குமுளான் யாவும்வலான் யாவுமறிவான் என்று தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே என்பான் பாரதி. இங்கே வாலியோன் அறிவன் (Omnisicient)

    ஆசிரியர் சொல்வார். `கொள்கை வேறு, கோட்பாடு வேறு. நாம் கொள்வது கொள்கை. நம்மைக் கொள்வது கோட்பாடு.` பாரத நாட்டில், இறை அல்லது இறைநம்பிக்கை என்பது கொள்கை அல்ல, கோட்பாடு. அவனே தலைவன் என்பது அடிப்படை அறிவு, நம்பிக்கை, மற்றும் பிரகடனம்.

    இப்படி இருக்க, கற்று முடித்தேன் என்று நினைத்துக்கொள்ளலாமா, எல்லாவற்றுக்கும் காரணமான, வேரான, முதலான, மூலமான அவன்தாள் பணியாமல்? `பிலக்கணம் பாடும் நேரத்தில் இலக்கணம் துணைவருமா?` என்று கேட்கிறாரே சங்கரர்?

    தாள் தொழுதல் என்பதைச் சிலர் வள்ளுவர் உருவ வழிபாட்டைச் சுட்டுவதாகவும், சிலர் அது ஒரு குறியீடு என்றும் கொள்வர். `தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே` என்ற அப்பர் வாக்கும் இங்கு நினைந்தோரத் தக்கது.

    கற்றதனால் என்ன பயன் என்று கேட்கிறவர்தான் இன்னோரிடத்தில் கற்க என்கிறார். எனில், கல்வி என்பது எதற்காக? நம் கசடுகள் நீங்குவதற்காக. இதைத்தான் சித்த சுத்தி என்பார்கள் பெரியோர். சித்த சுத்தி எதற்காக? இறைவனை அடைவது, உண்மையை உணர்வது, தன்னை அறிவது என்பதெல்லாம் சித்த சுத்தி இல்லாமல் சாத்தியமே இல்லை. எல்லாவற்றுக்கும் மூலம் `ஆதிபகவன்` என்ற உணர்வுதான் மனிதனுக்கு மிகப்பெரும் தன்மையாகிய பணிவு என்பதைத் தரும். பணிவற்ற மனிதன், இரக்கம் நீங்கி, அரக்கனாக மாறும் அபாயம் இருக்கிறது. பணிவு என்பது என்ன? `யாரையும் சமமாகக் கருதுதல்; ஐயம் வந்தால், எவரையும் நம்மைவிட உயர்வாகக் கருதுதல்,` என்பார் என் குருநாதர்! இதனால்தான், ஞானத்திற்குப் பிறகு யோகம் பயில்வதே பாதுகாப்பானது என்பார்கள். ஞானம்தான் குருநாதர் சொன்ன பணிவு என்னும் மனப்பான்மையை நல்கும். பணிவின்மை, உயர்த்துவதுபோல் உயர்த்தி, மனிதனை வீழ்த்திவிடும். பணிவற்ற வித்தை படிகாட்டி, மாலை அணிவித்துக் கீழுருட்டுமாம்.’ பணிவுள்ள மனிதன், மனிதருள் தெய்வமாக மதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. அடக்கம் என்பது, மனிதப் பண்புகளின் ஆதாரம். பணிவு என்பது, மனிதப் பண்புகளின் சிகரம். ஏன்? அதுதான் வாழ்வின் இலக்கான இறைவனிடம் நம்மைச் சேர்ப்பிக்கும். யார் உயிர்களின் தலைவனான ஆதி பகவனோ, அவனைப் பணியாமல் கல்வி ஒருவனைப் பண்புள்ளவனாக ஆக்காது.

    எங்கள் ஆசிரியர் ஒரு கதை சொல்வார். ஒரு பெரிய செல்வந்தர் இருக்கிறார். கொடைவள்ளலாகவும் இருக்கிறார். அவரிடம் ஏராளமான பசுமாடுகள் இருக்கின்றன. ஒருவர் அவரிடம் சென்று, `ஐயா! எனக்கு தினமும் பால் தேவைப்படுகிறது. ஒரு பசுவைத் தருகிறீர்களா?` என்று இறைஞ்சுகிறார். வள்ளல், `ஒன்றென்ன, இரண்டு பசுக்களை எடுத்துக்கொள்ளுங்களேன்,` என்கிறார். கேட்டவருக்கு மகிழ்ச்சி. ஆனால் அந்த மகிழ்ச்சி அத்தோடு முடிகிறது அது என்பதை அப்போது அவர் உணரவில்லை. என்ன? பசுவைக் கட்டிக் காப்பாற்றுவதென்பது எளிதான காரியமா என்ன? இருபத்து நான்கு மணிநேர வேலையாகிவிடுகிறது. நிம்மதியாய் உறங்கவும் முடியாது போகிறது.

    இன்னொருவர், அதே வள்ளலிடம் சென்று, `ஐயா! எனக்கு தினமும் பால் தேவைப்படுகிறது,` என்கிறார். வள்ளல், `இரண்டு பசுக்களை எடுத்துக்கொள்ளுங்களேன்,` என்கிறார். கேட்டவர், `வேண்டாம் ஐயா, தினமும் எனக்கு இரண்டு லிட்டர் பாலை நீங்கள் வீட்டுக்கு அனுப்பிவைத்தால் மகிழ்வேன்,` என்றார். வள்ளலும் புன்னகையுடன் சம்மக்கிறார்!

    திருஞானசம்பந்தர் தந்தையைக் காணாமல் குளக்கரையில் அழுதார். தந்தையும் தாயுமான அம்மையப்பனைக் கண்டார். அம்மையிடமிருந்து பாலருந்தினார். ஞானமாகிய பாலை அருந்தி ஞானமயமான பாடல்களைப் பாடினார். என்ன குறிப்பு? இறைவனைப் பணிந்து பெறக்கூடிய கல்வி, கலைகள், திறமைகள் எல்லாமும் ஞானமயமாக இருக்கும். மற்றவர்க்கு நலம்சேர்க்கும் விதமாக அமையும். `தந்தது உன்றனை; கொண்டது என்றனை,` என்னும் மாணிக்க வாசகரின் பாடல் இங்கே நினைவுகூரத்தக்கது. நாம் பணியாமல், நம்மைக் கொடுக்காமல் அவனைப் பெறமுடியாது. நம்மைத் தந்தால் தன்னைத் தருவதே அவனியல்பு.

    பணிவு என்ற சொல்லின் முழுவடிவம் அனுமன். ராமபிரானை அனுமன் சந்திக்கும்போது அனுமன் என்னவாக இருந்தான்? யோகி, ஞானி, மாவீரன், நவ வியாக்கிரண வேத்தா அட இழுப்பானேன், ருத்திரனல்லவா அனுமன்? எனில், ராமனை அனுமன் சந்திக்கிறபோது, ராமனிடமிருந்து எதையும் பெறவேண்டிய தேவை அனுமனுக்கு இல்லை. இருப்பினும் அவனே தன் தலைவன், தான் என்றும் அவனுடைய தொண்டன் என்றல்லவா கருதுகிறான்! இதைத்தான் என் குருநாதர், ‘Goalless faith,’ என்பார். இலக்கற்ற, எதிர்பார்ப்பில்லாத நம்பிக்கை.

    பணிவாலன்றிப் பரமனை அடைய முடியாது. இறைவனைப் பணியாமல் பணிவும் வராது! இறைவனைப் பணிந்தவன் எல்லா உயிரிடத்தும் இறைவனைக் காணும் நிலையை எய்துகிறான். எல்லார்க்கும் இனியனாகிறான்.

    மனித வடிவம் மட்டுமே ஒருவனை மனிதனாக்கிவிடாது. மனிதனுக்கென்று சில பண்புகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பேணி வளர்ப்பதன் மூலமே ஒருவன் மனிதனாகிறான். அந்தப் பண்புகளை அடைய ஒருவனுக்குக் கல்வி, செல்வம், அழகு, திறமை போன்றவை இருக்கவேண்டும் என்பதில்லை. இவையேதும் இல்லாமலே ஒருவன் பண்பாளனாகத் திகழ முடியும். சொல்லப்போனால், இவற்றையெல்லாம் மீறித்தான் ஒருவன் பண்பாளனாக இருக்க வேண்டியுள்ளது! அந்தப் பண்புகளில் தலையாயது பணிவு.

    எவன் இறைவனைப் பணிகிறானோ அவனுக்குப் பணிவு இயல்பாக வருகிறது. அந்தப் பணிவே அவனை முழு மனிதனாக்குகிறது. அவனுடைய கல்வி, செல்வம், திறமை, அழகு, பதவி அனைத்திற்கும் கெளரவம் தருகிறது. `எல்லோரையும் நம்மைப்போலே கருதுதல், அல்லது நமக்கு உயர்வாய் நினைத்தல்,` என்னும் பணிவு, இறைவனைத் தொழுதல் மூலமே வருகிறது.

    நலமே விளைவிக்கும் தாள் என்பதால் நற்றாள். தலையும் அடியும் சேர்வது சமயக் கோட்பாடு. தலை என்பது தலைமை. அடியிலிருந்துதான் அடிமை. ஆனால், இங்கே சுவாரசியம் என்னவென்றால், இறைவனுடைய நற்றாளாகிய அடிதான் தலைமை! அதை நம் தலை அடிமையாகிப் பணிவதில்தான் நமக்கு விடுதலை!

    இறைவனைத் தொழுதுதான் இறைவனை அடைய முடியும். பகவனைத் தொழுதே ஆதியில் கலக்க முடியும். அதுவே வாழ்வின் இலக்கு. அதற்காக வாய்த்ததுவே மனிதப் பிறவி.

    பரம்பொருளே பேரறிவு. அதற்கே உயிர்களையும் உலகையும் அறியவல்ல வாலறிவு உண்டு என்கிறது உபநிடதம்.

    ஆக, கற்றது கழலடி தொழவே! அதற்கே அப்பர் சொல்லும் இந்த `மனித்தப் பிறவி.`

    இறைவன்தான் தலைவன் என்று சொன்ன வள்ளுவர், அவன் எங்குமுளான், யாவும் வல்லான் என்று விளக்கவில்லை. ஆனால், அவன் யாவுமறிந்தவன், அதாவது வாலிய அறிவுடையவன் என்பதில் மட்டுமே நிற்கிறார். இறைவன் தூய அறிவுடையோன். இதைத்தான் சத்-சித்-ஆனந்தம் என்போம். சத் என்பது மாற்றம் வளர்ச்சி இவற்றுக்கு உட்படாத சத்தியம் அல்லது இருப்பு. சித் என்பது அந்த இருப்பின் விகசிப்பு, அல்லது, அறிவின் விரிவு. சித் என்பது aura அதாவது ஒளிவட்டம் அல்ல! அது கல்லுக்கும் மரத்திற்கும்கூட உண்டு. மரத்தின் ஒளிவட்டம் aura. முனிவனின் ஒளிவட்டம் சித் என்று புரிந்துகொள்ளலாம். ஆனந்தம் என்பது ecstasy மட்டுமல்ல. அது அமைதியின் வெளிப்பாடு. அமைதி, நிறைவால் வருவது.

    ஆன்மாவுக்கு, குணம் கிடையாது. ஆனால், அதற்கு ஒரு தன்மை உண்டென்று கருதினால் அது அமைதிதான். சீரான, தொடர்ந்த அமைதி. மனத்துக்கு அமைதி கிடையாது, தெரியாது. சஞ்சலம், அதாவது அசைவு என்பது மனதின் இயல்பு. ஆன்மாவின் அமைதி, சித்தம் என்னும் திரையில் பிரதிபலிக்கும்போது, மனம், அதனை ஆனந்தம் என்றே புரிந்துகொள்கிறது. இப்போது சித் நமக்கு நன்றாக விளங்குகிறதல்லவா. இதுதான் வாலிய அறிவு, அல்லது pure intelligence.

    தொடருவோம்

    Share
  • சுந்தரரால் ‘பொய்யடிமையில்லா புலவர்’ எனப்பாடப்பட்டவர் மாணிக்கவாசகரே (பகுதி-1)

    பேராசிரியர். முனைவர். கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம்.

    சைவசமயிகளிடம் பரவலாக இருந்துவரும் ஐயம் ஒன்று உண்டு; அது, மாணிக்கவாசகப் பெருமான் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரா? இல்லையா? என்பதே. திருத்தொண்டர்தொகைபதிகத்தில் சைவசமய நாயன்மார்களான ஞானியர் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு  அவர்தம் அடியவர்க்கு தாம் அடியேன் என்று பாமாலை சாசனமிட்டுப் பரவிப் பாடியுள்ளார் எம்பெருமான் தம்பிரான்தோழர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். திருத்தொண்டர்தொகையை அடியொற்றி திருத்தொண்டர் திருவந்தாதியை அருளினார் சைவத் திருமுறைகளைத் தொகுத்து அருளிய நம்பியாண்டார் நம்பிகள். தெய்வச் சேக்கிழார் பெருமான், தம்பிரான்தோழர் அருளிய திருத்தொண்டர்தொகையினை முதல் நூலாகவும், நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியை சார்பு நூலாகவும் கொண்டு பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்தை அருளினார்.  திருத்தொண்டர்தொகை பதிகத்தில் மாணிக்கவாசகப் பெருமானை சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிட்டுள்ளாரா என்பதில் எழுந்த ஐயமே மாணிக்கவாசகப் பெருமான் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரா என்ற ஐயத்திற்குத் தொடக்கப் புள்ளியாக இருக்கிறது. திருத்தொண்டர்தொகை பதிகத்தில் மாணிக்கவாசகப் பெருமான் பெயர் வெளிப்படையாக இடம்பெறவில்லை; ஆகவே, மணிவாசகரை சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டர்தொகையில் குறிக்கவில்லைஎன்ற கருதுகோளை அடிப்படையாகக் கொண்டே பெரும்பான்மையான தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் மாணிக்கவாசகரின் காலம் சுந்தரமூர்த்தி நாயனாரின் காலத்திற்குப் பிற்பட்டதெனவும், அறுபத்து மூவரில் மாணிக்கவாசகர் ஒருவரல்லர் என்று கொள்கின்றனர். இந்தக் கருதுகோள் குறித்து சைவசமயநெறிக்கு உட்பட்ட ஆய்வு முறையில் வரலாற்றுப் பார்வையுடன் ஆராயலாம்.

     

    சைவ மெய்யியல் இலக்கிய வரலாறுகளின் சிக்கல்கள்

    மொழி இலக்கிய மற்றும் மெய்யியல் இலக்கிய வரலாறு எழுத முயல்வோர், தொல் இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுகள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் என்ற முப்பரிமாணங்களையும் சீர்தூக்கிக் கணக்கில் கொண்டால் மட்டுமே சரியான முடிவுகளை அடைய இயலும். நம் கெட்டகாலமோ என்னவோ, தமிழ் இலக்கிய மற்றும் தமிழ் மெய்யியல் இலக்கிய வரலாறுகள் படைத்தவர்கள் முடிவெடுத்து எழுதியுள்ளமையைக் காணும் எவருக்கும், அம்முடிவுகள் இம்மூன்று பரிமாணங்களும் ஒன்றுக்கொன்று முரண்படும் வகையிலே முடிவெடுத்து எழுதியுள்ளமை புலப்படும். அத்தகைய முரண் ஆய்வுகள் தமிழ் இலக்கிய வரலாற்றின் நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

     

    சைவ மெய்யியல் இலக்கிய வரலாறு ஆய்வுநெறிகள்

    மெய்யியல் ஞானியர்தம் இலக்கிய வரலாற்றையோ அல்லது  காலவரலாற்றையோ கணிப்பதைப் பொருத்தமட்டில், இலக்கியச் சான்றுகளில் முதலாவதாக அதிக முக்கியத்துவத்துடன் கணக்கில் கொள்ளப்படவேண்டியது அவர்தம் அகச்சான்றுகள், (அதாவது, ஒரு ஞானியே அவரைக் குறித்து அவர் படைத்த இலக்கியத்தில் கூறும் நிகழ்வுகளின் பதிவுகள்); இரண்டாவதாக, அவ்ஞானியர்தம் பிற்கால மற்றும் சமகால இலக்கியச் சான்றுகள் அடுத்தநிலை முக்கியத்துவமும் பெறுகின்றன. அடுத்ததாகவே, வரலாற்றுச் சான்றுகளும், கல்வெட்டுச் சான்றுகளும் கணக்கில் கொள்ளப்படவேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை, கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சி மட்டுமே இருந்த காலத்தில். வரலாற்றுப்பதிவு ஆவணங்களாக இலக்கியங்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படவேண்டும்; ஏனெனில். அக்காலத்தில், போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு மட்டுமே அவர்தம் மெய்கீர்த்திஎன்னும் புகழ்குறித்து கல்வெட்டுகளில் பொறிக்கும் நடுகல்அல்லது பள்ளிப்படைஎடுக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை அரசாண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் புலவர்களின் பாடல்களையே தத்தம் காலச்சுவடுகளாக, ஆட்சியின் மாண்புரைக்கும் அளவுகோலாகக் கொண்டிருந்தனர். காட்டாக, “மாங்குடி மருதன் தலைவனாகப் புலவர் பாடாது ஒழிக என் நிலவரை (புறநானூறு 72)” என்று நெடுஞ்செழியன் வஞ்சினம் கூறும் புறநானூற்றுப் பாடலில்,  பாண்டியன் அவையில் புலவர் ஒருவர் தலைமையில் பல புலவர்கள் கூடிக் கவிபாடினர் என்னும் செய்தியை அறியலாம்.

     

    தமிழகத்தைத் தமிழ் மன்னர்கள் மட்டுமே ஆண்ட காலம் அறத்தின் காலம்

    தமிழ் மன்னர்கள் மட்டுமே தமிழகத்தை ஆண்ட காலங்களில், யார் ஆண்டாலும், தமிழ்புலவர்களைப் புரத்தல் (தமிழைக் காத்தல்) என்பதில் ஒரே நிலைப்பாட்டை அவர்கள் கொண்டிருந்தமையால், புலவர்கள் நடுவுநிலையோடு காலச்சுவடுகளைக் கவிதைகளில் பதித்தனர். சங்ககாலத் தமிழ்ப் புலவர்கள் மூவேந்தர்களையும்குறுநில மன்னர்களையும்,வள்ளல்களையும் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்தோரே ஆயினும்ஆட்சியாளர்களின் குறைகளை இடித்துரைத்தும்அறிவுரை கூறித்  திருத்தும் வல்லமையையும் கொண்டிருந்தனர். அக்கால அரசர்கள் புலவர்களை நண்பர்களாகவும்மதிகூறும் அமைச்சர்களாகவும் போற்றி வாழ்ந்ததால்பகையரசர் தம்மில் நட்பும் அறமும் செழிக்கப் புலவர்கள் உறுதுணையாக இருந்தமை புறநானூற்றுப் பாடல்களில் காணக் கிடக்கின்றன. காட்டாக,  கிள்ளிவளவனிடமிருந்து சேரனின் கருவூரைப் போரினின்று காத்த ஆலந்தூர் கிழார்அதியனுக்கும் தொண்டைமானுக்கும் நிகழவிருந்த போரைத் தவிர்த்த ஔவையார்,  உறையூர் சோழன் முடித்தலை கோப்பெருநற்கிள்ளிக்கும்கருவூர் சேரன் அந்துவஞ்சேரல் இரும்பொறைக்கும் நிகழவிருந்த போரைத்தவிர்த்த உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்,  கோப்பெருஞ்சோழன் தம் புதல்வர்களுடன் நிகழ்த்தவிருந்த போரைத் தடுத்த புல்லாற்றூர் எயிற்றியனார் எனப்பலர். இக்கால கட்டங்களில் வரலாற்றுக் காலச்சுவடுகளை இலக்கியங்களே பெரிதும் கொண்டிருந்தன.

    தமிழர்கள் அல்லாத ஆட்சியாளர்கள் (களப்பிரர் மற்றும் பல்லவர்) தோன்றிய பின், புலவர்களைப் புரக்காத நிலை தமிழ் மண்ணில் நிலவியது காரணமாக தமிழுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் பெரும் பின்னடைவு நேர்ந்தது; அவர்தம் காலங்களிலும், அவர்க்குப் பின்னரும் தோன்றிய ஆட்சியாளர்கள் காலத்தில்தான் கல்வெட்டுகள் பெருமளவு தோன்றின என்பதை அறிதல் நலம். எனவே,  கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னுள்ள சான்றாவணங்கள் வேண்டி கல்வெட்டுச் சான்று தேடியலைந்தோ, வரலாற்றுச் சான்று நோக்குவதோ தராத பலனை, அக்கால இலக்கியத் தரவுகளிலிருந்து எளிதில் பெற முடியும். இந்நுணுக்கங்களையெல்லாம் நோக்காமல், தமிழ்இலக்கிய வரலாறுகள் சில புகழ்பெற்ற அறிஞர்களால் படைக்கப்பட்டமையாலேயே, சைவசமய இலக்கிய வரலாறு, குறிப்பாக, ‘சமயாசிரியர் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகப் பெருமான் அறுபத்துமூவரில் ஒருவராக இடம் பெறுகின்றாராஎன்பது குறித்த பெருங்குழப்பம் இன்றுவரை நிலவிவருகின்றது. அதை நேர்செய்யுமுகத்தானே இவ்வாய்வுக்கட்டுரை எழுதப்படுகின்றது.

     

    திருத்தொண்டர்தொகை பதிக அமைப்பு முறை

    திருத்தொண்டர்தொகை பதிகம் தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்என ஆரூர்த் தியாகேசப் பெருமானே அன்பு கூர்ந்து எடுத்துக் கொடுத்த அமுத வாக்கைத் தொடக்கமாக வைத்து, முதல் ஒன்பது திருப்பாட்டுக்களில் ஐம்பத்தியாறு தனியடியார்களையும், பத்தாவது திருப்பாட்டில் ஏழுதொகையடியார்களையும், பதினொன்றாவது கடைக்காப்புத் திருப்பாட்டில், ஐந்து தனியடியார்களைப் பாடிய பின்,  அரனடியே அடைந்திட்ட சடையனார் இசைஞானியம்மையார்பால்  பேரன்பு பூண்ட திருநாவலூர்க்கோன் அன்ன ஆரூரன் பாடிய அடியவர் அடிமை திருப்பாட்டைக் கேட்டுவுவப்பார் திருவாரூர் அம்மானுக்கு அன்பராவார்”, என்று இப் பதிகத்தைப் பாடுவோர் பெரும் பலனைப் பாடி நிறைவு செய்கின்றார் சுந்தரமூர்த்தி பெருமான். பதிகம் என்பது பத்துப் பாடல்கள் கொண்ட தொகுப்பு என்ற இலக்கணத்தின் அடியொற்றி, முதல் ஒன்பது திருப்பாட்டுக்களைத் தனியடியாருக்கும், பத்தாவது திருப்பாட்டைத் தொகையடியாருக்கும் பாமாலையிட்டு, பதிகபலன் கூறும் பதினொன்றாம் திருப்பாட்டைப் பாடி பதிகத்தை நிறைவு செய்கின்றார்.

     

    சடையனார், இசைஞானியாரை  நாயன்மாராக சுந்தரர் கொள்ளவில்லை

    மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்

    வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்

    தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்

    திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்

    என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்

    இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்

    அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்

    ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே.

     

    பதினோராவது திருப்பாட்டில் ஐந்து தனியடியார்களுக்கு மட்டுமே அடியார்க்கும் அடியேன்என்று அடைகொடுத்துப் பாடிய பெருமான், சடையனார் இசைஞானியம்மையார் ஆகியோரைப் பெருமானின் பெற்றோர் என்ற முறையிலேயே பாடியதல்லாது, அவர் தம்மைத் தனியடியாரெனக் கொள்வது சுந்தரமூர்த்தி பெருமானின் கருத்தன்று என்பது இங்கு வெளிப்படை. (சடையனார் இசைஞானியம்மையார் ஆகியோருக்கு அடியேன்என்ற அடைகொடுத்துப் பாடவில்லை என்பது மிக முக்கியமான செய்தி). பெருமான் முதல் ஒன்பது மற்றும் பதினொன்றாம் திருப்பாட்டு ஆக பத்துத் திருப்பாட்டுக்களில் அறுபத்தொன்று தனியடியார்களையும், பத்தாம் திருப்பாட்டில் கூறிய ஏழு தொகையடியார்களுடன், இறைவன் அடிஎடுத்துக் கொடுத்த தில்லைவாழ் அந்தணராம் தொகையடியார்களுடன் சேர்த்த எட்டுத் தொகையடியார்களுடன் கூட்ட, அறுபத்தொன்பது அடியார்களே சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டர்தொகையில் பேசப்பெறுகின்றனர். (பின்பு, நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியில்,  திருத்தொண்டர் தொகை பாடிய சுந்தரர், அவரை ஈன்ற சடையனார், இசைஞானியார் ஆக மூவரையும் சேர்த்து எழுபத்திரண்டு என்று அமைத்து வைத்தார்). எனவே, தனியடியார்களாக சுந்தரர் பாடியருளியது அறுபத்தொன்று நாயன்மார்களே என்று தெளிவோம்.

     

    ‘பொய்யடிமையில்லாப் புலவர்’ தனியடியாரே.

    மேற்கூறிய காரணங்களால், தனியடியாரைப் பாடும் ஏழாவது திருப்பாட்டில் வரும் பொய்யடிமையில்லாத புலவர்க்கும் அடியேன்என்ற வரி தனியடியாரைக் குறிப்பதே ஆகும். அதைத் தொகையடியாராகக் கொண்டு விளக்கப் பாட்டு எழுதியவர் திருத்தொண்டர்தொகைக்கு சார்பு நூலாம் திருத்தொண்டர் திருவந்தாதியை அருளிய  நம்பியாண்டார் நம்பிகள். அவ்விளக்கப் பாட்டும் அதற்கு யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர் எழுதிய பொழிப்புரையும் பின்வருமாறு:

     

    பொய்யறியாக் கபிலரொடு பரண ராதிப்

    புலவோர்பொற் பார்கலைகள் பொருந்த வோதிச்

    செய்யுளிடை வளராக மதுர நல்ல

    சித்திரம்வித் தாரமெனத் தெரிக்குஞ் செம்மை

    மெய்யுடைய தொடைகளெல்லா மன்று ளாடன்

    மேவியகோ னிருதாளில் விரவச் சாத்திக்

    கையுடையஞ் சலியினரா யருளான் மேலைக்

    கருதரிய வமருலகங் கைக்கொண் டாரே.

    –     ‘திருத்தொண்டர் திருவந்தாதி’:நம்பியாண்டார் நம்பிகள்.

     

    பாண்டிநாட்டிலே சிறந்து விளங்குகின்ற துவாதசாந்தபுரமாகிய மதுராபுரியிலேசோமசுந்தரக்கடவுளிடத்திலேசதுரமாய் இரண்டு சாணளவினதாகி மெய்ப்புலவர்களுக்கெல்லாம் முழம் வளர்ந்து இருத்தற்கு இடங்கொடுக்கின்ற சங்கப்பலகையைப் பெற்றுஅதனில் இருந்துகொண்டு தமிழ் மொழியை வளர்த்த கடைச்சங்கப்புலவர்கள் கபிலர்பரணர்நக்கீரர் முதலாக நாற்பத்தொன்பதின்மர்.  அவர்கள் விபூதி ருத்திராக்ஷதரர்களாய்ஸ்ரீ பஞ்சாக்ஷர ஜபபரர்களாகிஅகத்தியம் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல்களின்படிஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என்னு நாற்கவிகளினாலும் மெய்யன்போடு பரமசிவனையே பாடிபொய்யடிமையில்லாத புலவர்கள் எனப் பெயர்பெற்றுச் சிவபதம் அடைந்தார்கள்.

    – யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர் விளக்கம்

     

    திருத்தொண்டர்தொகையினை முதல் நூலாகவும், திருத்தொண்டர் திருவந்தாதியை சார்பு நூலாகவும் கொண்டு பெரியபுராணம் என்னும் விரிநூலாகிய திருத்தொண்டர் புராணத்தை அருளிய சேக்கிழார் பெருமான், சார்புநூலாசிரியர் நம்பியாண்டார் நம்பிகள் கூறும்    பொய்யறியாக் கபிலரொடு பரண ராதிப் புலவோர் என்ற கருத்தில் முற்றிலும் மாறுபட்டு, ‘‘பொய்யடிமையில்லாத புலவர்க்கும் அடியேன்என்ற வரிக்குப் பின்வருமாறு கருத்துரைக்கின்றார்:

     

    பொய்யடிமை யில்லாத புலவர் புராணம்

    1. செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பல நோக்கும் 

             மெய் உணர்வின் பயன் இதுவே எனத் துணிந்து விளங்கி ஒளிர்

             மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆளானார்      

             பொய் அடிமை இல்லாத புலவர் எனப் புகழ் மிக்கார்        

     

    1. பொற்பு அமைந்த அரவாரும் புரிசடையார் தமை அல்லால்

             சொற்பதங்கள் வாய் திறவாத் தொண்டு நெறித் தலைநின்ற   

            பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர் 

            மற்றவர் தம் பெருமையார் அறிந்து உரைக்க வல்லார்கள்

                                                                                             –     சேக்கிழார் பெருமான்

     

    முதற் செய்யுளின் பொருள்: பொய் அடிமை இல்லாத புலவர் எனப் புகழ் மிக்கார் யார் என்றால், தாம் அருளிய செய்யுளில் தோன்றும் ஒவ்வொரு சொல்லும் (நிகழ் சொல்) பொருள் தெளிவுடன் (சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து) உரைப்பவரும், செவ்விய நூற்கள் பலவும் உணர்த்த முயலும் பயன் சிவபெருமான் திருவடிப்பேறே என்று விளங்கி உணர்ந்து, அம் மைஅணியும் கண்டத்தார் மலரடிக்கே ஆளானவர் அவர் ஆவார்.

     

    இரண்டாம் செய்யுளின் பொருள்: அப்பொய்யடிமை இல்லாத புலவர், பொற்பமைந்த புரிசடை வள்ளல் சிவபெருமானின் புகழைப் பாடுவதை அல்லால் வேறெதெற்கும் சொற்பதங்கள் வாய்திறவாத தொண்டுநெறிவாழ்வோரில் முதன்மையானவராம் பேறுபெற்றதால், மெய் அடிமை உடைய பெரும் புலவர் ஆவார்; அன்னாரின் பெருமையை அறிந்து உரைக்க யாரால் இயலும்?’ என வியந்து போற்றுகின்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

     

    சுந்தரமூர்த்தி நாயனாரின் பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்என்ற திருவாக்குக்கு, ‘கபிலர், பரணர் போன்ற தொகையடியாராம் கடைச் சங்கப் புலவர்கள்என்று பொருள் உரைத்த நம்பியாண்டார் நம்பிகளின் பாடலை ஏற்றுக் கொள்ளாத சேக்கிழார் பெருமான், அவர்தம் நிலைப்பாட்டினைத் தெளிவுபட, ‘புரிசடையார் தமை அல்லால் சொற்பதங்கள் வாய் திறவாத் தொண்டு நெறித் தலைநின்ற பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர் என்று தம் சொற்பதங்களால் பரமனைப் பாடுவதற்கல்லால் வாய்திறவா தொண்டுநெறி வாழ்வோரில் முதன்மையானவர் அம் மெய்யடிமை உடைய பெரும்புலவர் என்று உறுதிபடக் கூறியதால், ‘பொய்யடிமை இல்லாத புலவர்’ தனியடியாரே என்று திண்ணமாகக் கூறிவிட்டார் சேக்கிழார் பெருமான்.

     

    இயற்பெயரைக் குறிக்காது,  பொய்யடிமை இல்லாத புலவர்என்ற சிறப்புப் பெயரால் சுந்தரமூர்த்தி நாயனார், ‘திருத்தொண்டர் தொகையில்  சிறப்பித்துப் பாடியது ஒரு தனியடியாரையே என நிறுவிய சேக்கிழார் பெருமான், அப்பொய்யடிமையில்லாப் புலவரின் சிறப்புத் தகுதிகளை விரித்தும் விளக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி நாயனார் தம் திருத்தொண்டர் தொகையில் பொய்யடிமை இல்லாத புலவர்போல் வேறு தனியடியார்களை இயற்பெயர் குறிக்காது சிறப்புப் பெயரால் குறித்துள்ளாரா என்ற இயல்பான கேள்விக்கான விடைகளே சேக்கிழாரின் கூற்றுக்கு மேலும் வலுச்சேர்க்கும் செய்திகளாம். நாம் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டர் தொகையிலேயே இக்கேள்விக்கான விடையைத் தேடலாம்.

     

    திருத்தொண்டர் தொகையை உற்றுநோக்கினால், இயற்பகை, மெய்ப்பொருள், அமர்நீதி, எறிபத்தர், கண்ணப்பர், திருநாளைப் போவார், திருக்குறிப்புத் தொண்டர், பேயார், சிறுத்தொண்டர், கழறிற்று அறிவார் என்று அந்நாயன்மார்களின் அரும்பெரும் செயல்கள், இயல்புகளால் ஏற்பட்ட சிறப்புப் பெயர்களால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டர்தொகையில் குறித்துள்ளதைக் காணக் கிடைக்கின்றன. இங்ஙனம் தனியடியார்கள் பலரையும் இயற்பெயரால் குறிக்காமல் அவர்தம் சிறப்புப் பெயர்களால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடப்பட்டுள்ளார் என்பது முக்கியமான செய்தியாகும்.

     

    இயற்பகை, மெய்ப்பொருள், அமர்நீதி, எறிபத்தர், கண்ணப்பர், திருநாளைப் போவார், திருக்குறிப்புத் தொண்டர், பேயார், சிறுத்தொண்டர், கழறிற்று அறிவார் போன்ற தனியடியார்களைப் போலவே, ‘பொய்யடிமையில்லாத புலவர்என்ற சிறப்புப் பெயரால் அறியப்படுபவரும்  ஒரு தனியடியாரேஎன்பது தெளிவு. மேலும், அத்தனியடியார் ‘புரிசடையார் தமையல்லால் சொற்பதங்கள் வாய்திறவா தொண்டுநெறி’ பூண்டோரில் ‘தலைநின்ற’ காரணம் பற்றியே, அவரல்லாத ஏனைய‘புரிசடையார் தமையல்லால் சொற்பதங்கள் வாய்திறவா தொண்டுநெறி’ பூண்டு வாழும் தொகையடியார்களைப் பெருமைப்படுத்தவே  ‘பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்’ என்று சுந்தர் மீண்டும் குறிப்பிட்டபாங்கை தெளிந்துரைக்க சேக்கிழாரையன்றி வேறு யாரால் இயலும்?

     

    அவ்வாறு தெளிந்துரைத்தாரே ஆயினும், நம்பியாண்டார் நம்பிகளின் கருத்தைப் பற்றி மறுப்பேதும் கூறாது அமைந்தமை, அவர்பால் சேக்கிழார் கொண்டிருந்த பெருமதிப்பின் காரணம் பற்றியே என்பதை நாம் அறியவேண்டும். நம்பியாண்டார் நம்பிகளின் கருத்தில் உடன்படாமையைப் பதிவு செய்யாமல், சேக்கிழார் பெருமான் சரியான விளக்கத்தைப் பாடிச்சென்றமை அவர்தம் பண்புக்கும் சான்றாக விளங்குகின்றது.

     

    மேலும், ‘கபிலர், பரணர் போன்ற தொகையடியாராம் கடைச் சங்கப் புலவர்கள்என்று பொருள் உரைத்த நம்பியாண்டார் நம்பிகளின் கருத்து ஏன் ஏற்புடையது அன்று எனச் சற்று ஆழ்ந்து சிந்திக்கலாம். நம்பியாண்டார் நம்பிகள் குறிப்பிடும் சங்கப் புலவர்களில் ஒருவரான நக்கீரர், இறைவன் சங்கம் போந்து நெற்றிக்கண் காட்டித் தன்னை வெளிப்படுத்திய போதும் இறைவனை எதிர்த்தார் என திருக்காளத்திப் புராணம் பின்வருமாறு கூறுகின்றது:

     

    ‘ஏற்றினான் நெற்றிக் கண்ணும் எரிமருள் சடையும் காட்ட

    மாற்றரும் மருட்சியான்கண்  வடிவெலாம் காட்டி னாலும்

    சாற்றிய செய்யுள் குற்றம் சடைகொண்டு வெருட்டல் வேண்டா

    தோற்றிலன் இதனுக்கு என்றான் தொலைவிலான் வெகுண்டு சொல்வான்

     

    இவ்வாறு, ‘நான்என்னும் ஆணவமலத்தின் முழுஆதிக்கத்தின் வசப்பட்டு தான் கூறியதே சரியானது என்று இறைவனையே  எதிர்த்துப் பேசும் நக்கீரர் உள்ளிட்டோர் பொய்யடிமையில்லாப் புலவர்ஆக மாட்டார்.

    பதினொன்றாம் திருமுறையில் திருமுருகாற்றுப்படை தவிர்ந்த ஏனைய நூல்கள் சொல் வழக்கு முதலியவற்றாலும் பொருள் அமைதியாலும் தேவார திருவாசகக் கருத்துக்கள் சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாலும் இந்நக்கீரதேவர் தேவார திருவாசக ஆசிரியர்களின் காலத்திற்குப்பின் கி.பி. 9-ஆம் நூற்றாண் டில் வாழ்ந்தவர் ஆகலாம் எனப் பேராசிரியர் திரு.க. வெள்ளை வாரணனார் பன்னிரு திருமுறை வரலாற்றில் ஆராய்ந்து நிறுவியுள்ளார்.

    நக்கீரர் பற்றிய கதை வழக்கிற்குக் காரணமாகக் கூறும் சான்றுநக்கீரர் பாடிய பெருந்தேவபாணியில்

     

    சொலற்கருந் தொன்மைத் தொல்லோய் நீயே – அதனால்

    கூடல் ஆலவாய்க் குழகன் ஆவது

    அறியாது அருந்தமிழ் பழிச்சினன் அடியேன்

    ஈண்டிய சிறப்பின் இணையடி சிந்தித்து

    வேண்டும் அதுஇனி வேண்டுவன் விரைந்தே

     என்பதாகும்.

     

    கபிலதேவ நாயனார் பதினொன்றாம் திருமுறையில் மூத்தநாயனார் திரு இரட்டை மணிமாலைசிவபெருமான் திரு இரட்டை மணிமாலைசிவபெருமான் திரு அந்தாதி ஆகிய மூன்று பிரபந்தங்களை அருளியவர். கடைச்சங்கப் புலவராகிய கபிலரும் இவரும் ஒருவரே எனக் கருதுவோரும் உளர். இவர் அருளிய யாப்பு வகைகள் பிற்காலத்தன ஆதலினானும் இவர்தம் நூல்களின் சொல்லாட்சிகள் பிற்காலத்தனவாய் இருத்தலானும் இவரும் கி.பி. 9-ஆம் நூற்றாண்டினை அடுத்து வாழ்ந்தவர் ஆதல் கூடும் எனப் பேராசிரியர் திரு. க வெள்ளைவாரணனார் ஆராய்ந்து நிறுவியுள்ளார். இளம்பூரணர் தொல்காப்பியப் பொருள் அதிகாரச் செய்யுளி யலில்கபிலர் இயற்றிய இரண்டு செய்யுட்களை மேற்கோள் காட்டியிருத்தலின் இக்கபிலர் இளம்பூரணர்க்கு முற்பட்டவர் எனக் கொள்ளலாம்.

     

    சங்கப்புலவராகிய கபிலர் வேள்பாரியின் இனிய நண்பர். அந்தணர், `பொய்யா நாவிற் கபிலன்எனப் போற்றப்பட்டவர். ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்திக் குறிஞ்சிப்பாட்டுப் பாடியவர். செல்வக்கடுங்கோ வாழியாதன் மீது பதிற்றுப் பத்துள் ஒரு பத்துப் பாடிப் பரிசில் பெற்றவர். கலித்தொகையில் குறிஞ்சித்திணை பாடிக் `குறிஞ்சிக் கபிலன்என்ற பெயரைப் பெற்றவர்.

     

    பரணர் பதினொன்றாம் திருமுறையில் இருபத்துமூன்றாவது பிரபந்தமாக இலங்கும் சிவபெருமான் திருஅந்தாதியை அருளியவர்.

     

    ஒன்றைப் பரணர் உரைத்தஅந் தாதிபல

    ஒன்றைப் பகரில் ஒருகோடி – ஒன்றைத்

    தவிரா துரைப்பார் தளரார் உலகில்

    தவிரார் சிவலோகம் தான்

     

    என்று இந்நூலின் இறுதியில் கூறப்பட்டுள்ள வெண்பாவால் இந்நூலை அருளியவர் பரணர் என்பதையும்இந்நூல் மிக்க அருள் நலம் உடையது என்பதையும் அறியலாம்.

     

    கபிலபரணர்

    சங்ககாலப் பரணர்கபிலரோடு கொண்டிருந்த நட்பின் சிறப்பால் கபில பரணர் என இருவர் பெயரையும் இணைத்து வழங்குவதால் அறியலாம். சங்க காலத்தில் வாழ்ந்த இப்பரணர் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் மீது பதிற்றுப் பத்துள் ஒரு பத்துப் பாடியவர் ஆவார். இவர் மற்றும் பல அரசர்கள் மீது பாடல்கள் பாடியுள்ளார். சங்காலப் புலவர்களில் பரணரும் வன்பரணரும் வேறு வேறானவர்கள். இச் சங்கப்புலவர் பெயர் தாங்கிய பதினொன்றாம் திருமுறை ஆசிரியராகிய பரணதேவர் பிற்காலத்து அருட்கவிஞர் ஆவார்.

    மேலும், சங்கப்புலவரில் சமண, பௌத்த சமயத்தவரும், வைணவரும் இருந்தனர்; ஆகவே, பொத்தாம் பொதுவாக, நாற்பத்தொன்பது சங்கப் புலவர்களே பொய்யடிமையில்லாப் புலவர்என்ற கூற்று முற்றிலும் பொருந்தாக் கூற்று ஆகும். எனவே, ‘பொய்யடிமையில்லாப் புலவர்ஒரு தனியடியாரே என்பது திண்ணம்.

    நம்பியாண்டார் நம்பிகளின் கருத்துடன் சேக்கிழார் பெருமான் கருத்து மாறுபடும் இன்னொன்றையும் இங்கு குறிப்பிடுவது நம் பார்வையைத் தெளிவாக்கும்.

     

    ‘பொய்யடிமையில்லாப் புலவர்’ – மணிவாசகர்

    உலகோர் வழக்கில் பொய்’ (False) என்ற சொல்லுக்கு மெய்அல்லது உண்மை (True) என்ற சொல் இனவகை எதிர்ச்சொல். ஆனால், இறையியலாகிய  மெய்ப்பொருளியலில் இவை பின்வருமாறு வரையறுக்கப்படுகின்றன:

    மெய் (சத்து): எக்காலத்தும் நிலை பெற்றுள்ள தன்னியல்பே மெய் எனப்படும்.

    பொய் (அசத்து): இடையில் தோன்றி மறையும் பொதுவியல்பே பொய் எனப்படும்.

    கருவி, கரணங்களுடன் கூடிய மனித உடல் உள்ளிட்ட இவ்வுலத்தில் தோன்றும் அனைத்துப் பொருட்களுமே இடையில் தோன்றி மறையும் பொதுவியல்பு கொண்டவையே. உடல் உட்பட இவ்வுலகப் பொருட்கள் எதிலும் பற்று வைக்காது, அடிமைப்படாது தேடும் பொருளும் சிவன் கழலேஎனச் சிந்தித்துப் பொற்பமைந்த புரிசடை வள்ளல் சிவபெருமானின் புகழைப் பாடுவதை அல்லால் வேறெதெற்கும் சொற்பதங்கள் வாய்திறவாத தொண்டுநெறிபூண்டு, இமைப்பொழுதும் அரன்தாள் நெஞ்சில் நீங்காது வாழ்வோரே பொய்யடிமையில்லாப் புலவர்கள் ஆவார். அன்னோரன்ன புலவர்களில் தலையாயவராம் மனிவாசகப்பெருமானே  சுந்தரமூர்த்தி நாயனாரால் தனியடியாரில் குறிக்கப்படும் பேறுபெற்றுச் சேக்கிழார் பெருமானால் சிறப்பிக்கப்பட்டார் என்பதை இங்கு விரிவாகக் காணலாம்.

     

    பரமனையே பாடுவோரும் பொய்யடிமையில்லாப் புலவர்களும்

    ‘சிவபெருமானின் புகழைப் பாடுவதை அல்லால் வேறெதெற்கும் சொற்பதங்கள் வாய்திறவாத தொண்டுநெறி’ பூண்டோர் அனைவரும் ‘பரமனையே பாடுவோர்’ ஆவார். பரமனையே பாடும் ஞானியரில் சிலர், இறைவனின் அழகிய திருவுருவத்தின் அழகில் ஆழங்கால்பட்டு, இறைவனைக் காண்பதற்காகவே இம்மனிதப் பிறவியும்  வேண்டுவர்; தில்லை நடராஜப் பெருமானிடம்

     

    குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பும்,

    பனித்தசடையும், பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்,

    இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப்பட்டால்,

    மனித்தபிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே

     

    என்று கூத்தப்பெருமானின்  இவ்வழகிய நிருத்தத் திருக்காட்சியைக் காணும்பேறு பெற்றால், இம் மனிதப் பிறவியையே வேண்டுகின்றேன் என விண்ணப்பிக்கும் அப்பர் பெருமானும்,

     

    பச்சைமாமலைபோல் மேனி, பவளவாய் கமலச்செங்கண்,

    அச்சுதா அமரர் ஏறே, ஆயர்தம் கொழுந்தே என்னும்

    இச்சுவைத்தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்

    அச்சுவைப் பெறினும் வேண்டேன் அரங்கமா நகர் உளானே

     

    என்று இந்திரலோகம் ஆளும் சுவை வேண்டாது, அரங்கனின் அழகிய திருவுருவைக் காணும் சுவையையே தந்தருள்க என்று திருவரங்கப் பெருமாளிடம் விண்ணப்பிக்கும் திருமங்கையாழ்வாரும் இத்தகையோர்.

     

    சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய ஞானியர் அனைவருமே கணந்தோறும் மாறிக்கொண்டேவரும் பொய்யாலான (மாயையால் ஆன) இவ்வுலக இன்பங்களை விரும்புபவர் அல்லர்; இவர்களும் பொய்யடிமையில்லாத தன்மையினரே ஆவர். ஆயினும் அம்மூவருமே திருத்தொண்டிற்காக இறைவனிடமிருந்து பொன் வேண்டிப் பெற்ற வரலாறு அவர்தம் பதிகங்களில் அகச்சான்றாகக் காணப்படுகின்றன. ‘பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை’ என்று சுந்தரர் சிவபெருமானைப் பாடிய பாடல் உலகியலோடு மெய்ப்பொருளை வேண்டிப்பெரும் திரோதானம்என்னும் உலகியல்வழி மெய்யியல் அடையும் வழியை விளக்கும்.

     

    மாணிக்கவாசகப் பெருமானோ சிவத்திடம் சிவத்தை (திருவடிப்பேறு) அல்லாது வேறு எதையும் வேண்டி விண்ணப்பம் செய்தவர் அல்லர். இத்தனிப்பண்பு சுந்தரமூர்த்தி நாயனாரின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டிருக்கவேண்டும். எனவேதான், தனியடியார்களைப் பாடிய ஏழாவது பாடலின் முதலடியில் பொய்யடிமை இல்லாப் புலவர்க்கும் அடியேன்என்று குறித்துவிட்டு, தொகையடியார்களைமட்டும் பாடிய பத்தாவது பாடலில், ‘பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்என்று தனியாகக் குறித்தார்.   எனவேதான், இவரை, ‘புரிசடையார் தமை அல்லால் சொற்பதங்கள் வாய் திறவாத் தொண்டு நெறித் தலைநின்ற பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர் என்று பொய்யடிமையில்லாதோரில் தலைநின்ற பேறுபெற்றவர் அம்மெய்யடிமை உடைய பெரும்புலவர் என்று மாணிக்கவாசகரைச் சிறப்பிக்கின்றார் சேக்கிழார் பெருமான்.

     

    மேலும், ‘பொய்என்ற பதத்திற்குத் திருவாசகமொழியினால் தெளிவான மெய்யியல் இலக்கணம் வகுத்தவர் மணிவாசகப் பெருமான். அம்மெய்யியல் இலக்கண வரையறை சுந்தரமூர்த்தி நாயனாரின் உள்ளத்தை மட்டுமல்ல, அவர் காலச் சைவசமயிகளின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டிருக்க வேண்டும்; அதன் வெளிப்பாடாகவே அவர் மணிவாசகருக்கு பொய்யடிமையில்லாப் புலவர்என்ற அடை தருவதற்கு தூண்டுதலாக இருந்திருக்கவேண்டும்; மற்றவர் இந்த வேறுபாட்டினை உணரவேண்டும் என்பதற்கே ‘பரமனையே பாடுவோர் அடியார்க்கும் அடியேன்’ என்பதைத் தொகையடியாரில் கவனமாகச் சேர்த்து இருக்கவேண்டும் என்று கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. இந்தக் கருதுகோளை உறுதி செய்யும் பொய்’-என்பதற்கான திருவாசக மெய்யியல் வரையறைகளைக் இப்போது காணலாம்:

     

    ‘பொய்’ – திருவாசகத் தலையாய மெய்யியல் வரையறை–1

    ‘மெய்யர்’ என்போர் சிவபெருமானின் திருவடிகளைக் கண்டோரே ஆவார்; ‘பொய்யர்’ என்போர்  சிவபெருமானின் திருவடிகளைக் காணாதோரே ஆவார்; மெய்யராவதே மனித வாழ்வின் குறிக்கோள்.

    திருப்பெருந்துறையில் தன் பழ அடியார் கூட்டத்தோடு மறைபயில் அந்தணனாக வந்து மணிவாசகரை ஆட்கொண்ட சிவபெருமான், அடியார்களோடு தானும் உருக்கரந்து மறையக் கண்ட மணிவாசகப் பெருமான் மனமுருகி அருளிச் செய்தது நூறு பாடல்கள் கொண்ட திருச்சதகம்பதிகத்தின் ஐம்பத்தியிரண்டாம் திருவாசகப் பாடல் பொய்யர் என்பவர் யார்?’ என்று வரையறை தருகின்றது.

     

    செய்வது அறியாச் சிறுநாயேன் செம்பொன் பாதமலர் காணாப்

    பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன் பொய்யிலா

    மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டும் கேட்டிருந்தும்

    பொய்யனேன் நான் உண்டு உடுத்தி இங்கு இருப்பது ஆனேன் போர் ஏறே.    – திருவாசகம்:திருச்சதகம்:52

     

    மனிதப்பிறவியின் நோக்கம் மூலமலமாம் அறியாமை என்னும் ஆணவ இருள் நீங்க, வினைப்பயனால் கிடைத்த, கணந்தோறும் மாறும் மாயா உலகின் ஐம்பூதக் கலவையினால் ஆன பொறி, புலன்களுடன் கூடிய பொய்யுடல் வாழ்வின் வழியே, என்றும் மாறாத  மாக்கருணைவெள்ளச் சிவபெருமானின் திருவடிகளே அடையத்தக்க செம்பொருளாம் மெய் என்று உணர்ந்து, அவனருளாலே அவன் தாள் அடைவதே ஆகும்.

    Share
  • வாயில்லாப்பிராணி

    மீ.விசுவநாதன் 

     

    எங்கெங்கோ பறந்தோடி எடுத்த சுள்ளி

    இப்படியும் அப்படியும் அடுக்கி வைத்து

    தங்குவதற் கானகூடு பறவை செய்யும் !

    தகிக்கின்ற நல்வெயிலும் மழையும் கண்டும்

    தங்களது உறவுகளை நன்றாய்ப் பேணும் !

    தவிக்கின்ற தன்குஞ்சு வாயில் ஊட்டி

    உங்களுக்கு நானிருக்கேன் என்று சொல்லி

    உடல்முழுதும் அலகாலே வருடிக் கொஞ்சும் ! 

     

    வாசலிலே போடுகிற அரிசிச் சோறு

    வாய்க்குள்ளே வைத்தபடி காதல் பேசும்

    பாசமுள்ள குருவிகளைப் பார்க்கும் போது

    பாசத்தைப் பணத்திற்காய்க் கொன்று போடும்

    தூசுபெறா மனிதகுணம் வெட்கிப் போகும் !

    துன்பத்தில் தன்னினத்தைத் தழுவிக் கொண்டு

    மாசுவராக் கருணையாலே இணைந்து வாழும்

    வாயில்லாப் பிராணிகளை வணங்கு கின்றேன் !

    Share
  • மன்னிப்பு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அண்மையில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்கக் கார்டினல் தன் பால் ஈர்ப்பு உடையவர்களை ஈடுபடுபவர்களை இதுவரை கத்தோலிக்க மதம் ஒதுக்கி வைத்து உரிமைகளை மறுத்ததற்கு அவர்களிடம் மதம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறினார். எப்போதுமே இம்மாதிரி சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டவர்கள், எளியவர்கள், வறியவர்கள் ஆகியோர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறிவரும் பிரான்ஸிஸ் போப் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு மேலே குறிப்பிட்டவர்களிடம் மட்டுமல்ல பெண்கள், இள வயதிலேயே நாம் வேலைவாங்கிய சிறார்கள் ஆகியோரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

    இந்தச் செய்தியைப் படித்ததும் எனக்கு நம் நாட்டில் நாம் தலித்துகளை எவ்வளவு சிறுமைப்படுத்தியிருக்கிறோம் என்பது நினைவுக்கு வந்தது. அவர்களிடம் நாம் எவ்வளவு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது உறைத்தது. நான் சிறுமியாக வளர்ந்துவந்தபோது மனிதக் கழிவுகளை வீட்டிற்கு வெளியே எடுத்துச் சென்று கழிப்பறையை சுத்தம் செய்த பெண்ணின் ஞாபகம் வருகிறது. ஒரு மாதம் முழுவதும் கழிவுகளைச் சுமந்து சென்ற பெண்ணிற்கு சம்பளம் ஐந்து ரூபாய். லட்ச ரூபாய் சம்பளமாகக் கொடுத்திருந்தாலும் இந்த வேலையை நான் செய்திருப்பேனா என்ற எண்ணம் எழுந்தது. அப்படி இருக்கும்போது கீழ் ஜாதியில் பிறந்த ஒரே காரணத்திற்காக அந்தப் பென் அந்த வேலையை ஏன் செய்தாள். ஏன் தன்னால் அந்த வேலையைச் செய்ய முடியாது என்று அவள் மறுக்கவில்லை. அவளுடைய வாழ்வாதாரத்திற்கு அவளுக்கு அந்த ஒரு வழிதான் இருந்தது. இப்போது எண்ணிப் பார்த்தால் மனது குமுறுகிறது.

    இந்த ஐந்து ரூபாய் சம்பளத்திற்கு மேல் சில வீடுகளில் உணவு கொடுப்பதுண்டு. அதுவும் எல்லோர் வீடுகளிலும் கொடுப்பதில்லை. உணவு கொடுக்கும் வீடுகளிலும் வாழை இலை விரித்து பாயசத்தோடு விருந்தா பரிமாறினார்கள்? பழைய சாதம், அதற்குத் தொட்டுக்கொள்ள ஏதாவது வற்றல் அல்லது மிஞ்சிப்போன குழம்பு. எங்கள் வீட்டில் வேலைசெய்த பெண்ணிற்கு தினமும் பழைய சாதம் கிடைக்கும். சில சமயங்களில் அடுப்பில் வெந்துகொண்டிருக்கும் கறிக்குழம்பில் கொஞ்சம் நான் கொடுப்பேன். எண்ணெயில் பொரித்த மோர் மிளகாய் என்றால் அவளுக்குக் கொள்ளை ஆசை. நாங்கள் கொடுக்கும் மோர் மிளகாயில் பாதியைப் பழைய சாதத்தோடு சாப்பிட்டுவிட்டு மீதியை வீட்டிற்கு எடுத்துச் செல்வாள். இந்த மோர் மிளகாயை அவள் ஏன் வீட்டிலேயே செய்துகொள்ளவில்லை என்று நான் அடிக்கடி இப்போது நினைக்கிறேன். மிளகாயை மோரில் ஊறவைத்து வெயிலில் காயவைப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை. ஆனால் வீட்டில் இருந்து அதைச் செய்துகொள்வதற்கு அவளுக்கு நேரம் இருந்ததா என்று தெரியவில்லை. அதற்குப் பிறகு அதை எண்ணெயில் வறுத்து எடுக்க வேண்டுமே. அவள் எண்ணெய்க்கு எங்கே போவாள்? அவளுடைய தினசரி உணவெல்லாம் காலையில் முந்தின தினம் இரவு சமைத்த அரிசிச் சோற்றில் மிஞ்சியதைத் தண்ணீர் ஊற்றி வைத்த பழைய சாதம்தான். அதிலும் வீட்டில் உள்ள மற்ற அங்கத்தினர்களுக்குப் போக மிச்சம் இருந்தால்தான். மதியமும் அதே பழைய சாதம்தான். இரவு மட்டும் சூடாக ஆக்கிய சோறு.

    அவளுக்கு நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளி வேலை. ஊர் முழுக்க நகராட்சிக்குச் சொந்தமான கழிப்பறைகளிலுள்ள மனிதக் கழிவுகளை சேகரித்துச் செல்வதுதான் அந்த வேலை. அந்த வேலையை ஆரம்பிக்கும் முன் 50 மில்லி டீயை கடையிலிருந்து வாங்கிக் குடித்துக்கொள்வாள். மதியமும் இதே மாதிரி ஏதாவது குடித்துக்கொள்வாள். இரவு வீட்டிற்குச் சென்றவுடன் சுடச் சுட சோறு ஆக்கி கருவாட்டுக் குழம்பு வைப்பாள். எங்கள் ஊரில் கருவாடு மிகவும் பிரபலம். அசைவம் சாப்பிடும் பலர் வீடுகளிலும் அடிக்கடி கருவாட்டுக் குழம்பு சமைப்பார்கள். எங்கள் துப்புரவுத் தொழிலாளி வாங்கும் கருவாடு விலையில் மலிவானது. குழம்பு நிரக்க வேண்டும் என்பதற்காகக் கருவாட்டோடு கத்திரிக்காயைச் சேர்த்துக்கொள்வாள். இரவு ஆக்கிய சோற்றில் மிஞ்சியதைத் தண்ணீர் ஊற்றி மறு நாளைக்கு காலை உணவு, மதிய உணவிற்கு வைத்துக்கொள்வாள். சில சமயங்களில் விருந்தினர் வந்துவிட்டால் இரவு சமைத்த சாதம் மிஞ்சாது. ‘நேற்று விருந்தாடி வந்துவிட்டது. சோறு மிஞ்சவில்லை’ என்பாள்.

    இவளுக்குத் தேவையான ஊட்டச் சத்து எங்கிருந்து கிடைத்தது? அமெரிக்க நண்பர் ஒருவரிடம் இந்தியர்களாகிய நாங்கள் சாதத்தோடு உருளைக்கிழங்கு பொரியலும் வைத்துக்கொள்வோம் என்றேன். உருளைக் கிழங்கும் கார்போஹைட்ரேட், சாதமும் கார்போஹைட்ரேட் அது எப்படி போதும், புரோட்டீனுக்கு என்ன செய்வீர்கள் என்றார். அமெரிக்கர்கள் தினமும் இவ்வளவு கார்போஹைட்ரேட், இவ்வளவு புரோட்டீன் என்று பார்த்துப் பார்த்துச் சாப்பிடுவார்கள். அமெரிக்க ஊட்டச்சத்து நிபுணர் ஒருவரிடம் எங்கள் துப்புரவுத் தொழிலாளிக்கு எப்படி அவள் சாப்பிடும் எளிய உணவில் எல்லா ஊட்டச் சத்துக்களும் கிடைத்தன என்று கேட்க வேண்டும் என்று ஆசை. இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஊட்டச்சத்து சரியாகக் கிடைக்கவில்லை என்றால் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் என்பார்கள். அவள் பள்ளிக்குச் செல்லாததால் நம்மைப்போல் விபரமாகப் பேசத் தெரியாது. ஆனால் அதை விடுத்து உடல்நலத்திலோ மனநலத்திலோ ஆரோக்கியமாகவே இருந்தாள்.

    அடுத்ததாக, எங்கள் அழுக்குத் துணிகளை வீட்டிற்கு வந்து எடுத்துக்கொண்டுபோய்த் துவைத்துக்கொண்டு வரும் சலவைத் தொழிலாளி. நம் அழுக்குத் துணிகளைத் தொடுவதற்கு நாமே தயக்கம் காட்டும்போது அவள் எப்படி எங்கள் அழுக்குத் துணிகளைத் தொட்டு மூட்டை கட்டி வீட்டிற்கு எடுத்துச் சென்று துவைத்துக் கொண்டுவந்தாள்? துவைத்து இஸ்திரி போட்டுக் கொண்டுவந்த வேலைக்குக் கூலி மிகவும் குறைவு.

    இந்த வேலைகளை எல்லாம் ஏன் அவர்கள் செய்தார்கள் என்று நினைத்தால் ஆயாசமாக இருக்கிறது. அதற்குப் பெரிய பரிகாரம் தேட வேண்டும் என்று மனம் துடிக்கிறது. நம் நாட்டில் இவர்களுக்குச் சமூகம் செய்த அநியாயத்திற்குப் பரிகாரம் தேடுவதற்கு அரசு, அரசு அலுவலகங்களிலும் கல்வி நிலையங்களிலும் இடஒதுக்கீடு செய்திருக்கிறது. இது போதுமா? இந்த சலுகைகளையும் அங்கு மேல்மட்டத்தில் இருப்பவர்கள் அபகரித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்குச் செய்த அநியாயத்திற்குப் பரிகாரம் தேடுவதற்கு மேல் இன்னும் ஏதாவது செய்ய வேண்டாமா?

    போப் பிரான்ஸிஸ் சொல்வதுபோல் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். நாட்டின் பிரதிநிதியான பிரதம மந்திரியும் மாநில பிரதிநிதியான முதல் மந்திரியும் ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். தனிப்பட்ட மனிதர்களும் எல்லோரிடமும் ஜாதித் துவேஷமின்றி நடந்துகொள்ள வேண்டும். எந்த உறவிலும் திருமண உறவானாலும் சமமாக நடத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுக்கும் வேட்பாளர்கள் இவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டும்.

    Share
  • மீண்டும் மீண்டு …

    பால நிவேதிதா

     

    “நீங்க மனசு வச்சா என்னையும் வேணியையும் சேர்த்து வைக்க கண்டிப்பா முடியும்மா”

    “நீ நல்லா யோசிச்சு தான் பேசுறியா குமார்… வேணி ஏற்கனவே திருமணமானவள், ஒரு குழந்தைக்கு தாய்….”-சித்ரா ஆச்சர்ய குரலில் .
    “எல்லாம் தெரியும்மா… அந்த குடிகாரனோட அவ பட்டபாடு எனக்கு தெரியாதாயென்ன… ஒவ்வொரு நாளும் இரத்த கண்ணீர் தாம்மா விட்டுது… சாகுறமட்டும் அந்த பாவி வேணியை சந்தோஷமா வைக்கலைம்மா….!”

    “ம்…எல்லாம் தெரிஞ்சுமா நீ அவளை திருமணம் செய்ய நினைக்கிற…?”

    “எனக்கு படிக்கிற காலத்தில்  இருந்தே வேணி உசுரும்மா….என்னமோ காலம் திசைமாறி  ஒரு குடிகாரனைக் கட்டி அவளும் பட்டுட்டா….இனியாவது அவ சிரிக்கணும்….அவளுக்கும் நான் என்ன நினைக்கிறேன்னு தெரியும். .மனதுக்கு பிடிச்சு இருந்தும் பிடி கொடுக்காம பேசுறா…நீங்க தான்  எப்படியாவது சேர்த்து வைக்கணும் “..கூறிய குமாரின் குரலில்  நேசம் மிகுந்து இருப்பதை மறுக்க முடியாது.

    “உன் நல்ல மனசுக்கு நல்லபடியா முடியும் குமார்… நான் ஊருக்கு கிளம்புவதற்குள் உனக்கு நல்ல செய்தி சொல்றேன்…” சந்தோஷமாய் பறந்தான் குமார். வேணியும் குமாரும் நல்ல பொருத்தம் தான் என மனதிற்குள் நினைத்த படியே உள்ளே செல்லவும்  அவள் கைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது.

    “சொல்லுங்க ராஜ் ..?”

    “என்ன மேடம் சொந்த ஊருக்கு போய்ட்டா புருஷன் புள்ளையெல்லாம் நினைப்புக்கு வராது போல…. ஒரே மலரும் நினைவுகளா.?”
    மலரும் நினைவுக்கு அவன் கொடுத்த அழுத்தம் சித்ராவை எரிச்சல் படுத்தியது.

    சமாளித்தபடியே” நாளை மறுநாள் புரோக்கர் அவங்களோட வந்துட்டா வெள்ளிக்கிழமை ரிஜிஸ்டர் பண்ணிடுவோம்.  அப்புறம் எனக்கு  இங்க  என்ன வேலை. ….?”

    “ஆமா…அப்புறம்  இங்க வந்து பர்கர், பீஸா தான். ..ஹா..ஹா..பெரிதாய் சிரித்த ராஜன். ..சரி..என்ஜாய். .திங்கள்கிழமை மதுரையில் இருந்து உனக்கு பிளைட் …மறந்துடாதே..வேகப்படுத்து அந்த தரகனை..சரியா. .?”

    “ம்ம்….சரியென கூறி, தொடர்பு துண்டிக்கப்பட்டப் பின் அயர்ச்சியாய் சாய்ந்தாள்.

    தான் பிறந்துவளர்ந்த வீட்டை சற்று  அண்ணாந்து பார்த்தாள்.  இதே வீடு பதினெட்டு வருடத்துக்கு முன்பு அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, பெரியம்மா, பெரியப்பா, மேலதெரு அக்கா, கீழத்தெரு அத்தை மாமா என கலகலவென  இருந்தது. காலம் மாற மாற ஒவ்வொருவராக மறைந்து,  எஞ்சிய  உறவுகளும் இப்போது பட்டினக்கூட்டுக்குள் சென்று விட யாரும் இல்லாத கேள்வி கேட்பாரற்ற நிலையில் இதனை விலைக்கு கேட்பதாக குமாரிடம்  இருந்து தகவல் வர, இதை விட்டால் வேறு வழியில்லை.  இல்லையெனில் பராமரிப்பு இன்றி அழிந்தேவிடும்.அதற்கு தான் சித்ரா கிளம்பி வந்தாள். இத்தனை வருடங்கள் கழித்து வந்த போது ஓடி வந்து அழுதவள் வேணி தான். சித்ரா குமரியாக நடமாடிய போது பச்சிளம் குழந்தையாக இருந்தவள்.  இப்படி  எத்தனையோ மாற்றங்கள்  ஊரில் அன்பை தவிர. .

    சித்ராவின் தாத்தா அவளை அவ்வூரிலேயே கட்டி கொடுத்து அருகிலேயே வைத்திருக்க கனவு கண்டு , அவ்வூர் சின்னப்பண்ணை மகனை பேசி முடிக்க, ஆனால் அவனோ திடுதிப்பென்று  அவன் நண்பனின் தங்கையை மணம் முடித்து வந்து நிற்க ,  சித்ராவின் திருமணம் நின்றது. சித்ராவை தவிர வீட்டில் அத்தனை பேரும்  இடிந்து போயினர்.

    அதிலிருந்து ஆறு மாதத்திற்குள் ராஜனின் குடும்பம் ஒரு திருமண விழாவில் அறிமுகமாகி பெரியவர்களுக்குள் ஏற்பட்ட மனப்பொருத்தத்தால் இணைந்தது ராஜன் -சித்ரா வாழ்க்கை. இப்படியாக பழைய நினைவுகளை அசைப்போட்ட படியே சிறிது நேரத்தில் உறங்கி போனாள் சித்ரா .

    மறுநாள் நினைத்தபடி தரகர் ஆட்களோடு வர பேசிய சித்ரா குறிப்பிட்ட தினத்திலேயே ரிஜிஸ்டரேசனையும் முடித்தாள்.இனி கிளம்ப வேண்டியது தான்.  இனி சொந்த மண் எப்போதும் பசுமையாய் மனதிற்குள் மட்டுமே.

    மதிய வேளையில் தனது துணிமணிகளை எடுத்து வைத்து கொண்டு இருந்தாள் சித்ரா. சற்று தருணத்தில் வேணி தன் இரண்டு வயது மகனை ஒரு கையிலும், மற்றொரு கையில் கவருமாக வேர்க்க  விறுவிறுக்க வந்தாள்.    “அக்கா. ..கிளம்பிட்டீங்களா..உங்களுக்கு உதவனும்னு தான் ஸ்கூல்ல இருந்து வேகமா  ஓடி வந்தேன்”.

    “அதுக்குள்ள பையன ஸ்கூல்ல சேர்க்க போறீயா…?”

    “இல்லக்கா…எங்க அம்மா பார்த்த சத்துணவு வேலையை என்னையப் பார்க்கச் சொல்லி ஹெட்மாஸ்டர் ஐயா சொன்னாங்க… இது நான் மேலே படிக்க அப்ளிகேஷன். …!!”

    “அட சூப்பர் வேணி…நான் நினைச்சதைவிட வேகமா இருக்கியே… வேலையும் பார்த்துக்கிட்டு அப்படியே படிக்கவும் போற….!”

    “ஆமாக்கா….!”

    “அப்படியே உன் மனசுக்கு பிடிச்சவனை மணமும் முடிச்சீன்னா இன்னும்  உன் வாழ்க்கை நல்லா இருக்கும். …!” முறுவலித்த வேணி,”சத்தியமா அது மட்டும் மாட்டேன்கா…”யோசிக்காமல் சொன்னாள்.

    ஆச்சரியமும் அதிர்வும் கலந்த முகமாக ,”என்ன வேணி இப்படி பட்னு சொல்லிட்ட… நான் யாரை சொல்ல போறேன்னு தெரிஞ்சா இப்படி சொல்ல மாட்ட. ..!”

    “தெரியும்கா…ஆனா நீங்க யாரச்சொன்னாலும் என் பதில்  இதுதான்கா..மன்னிச்சுடுங்க. ..!”

    “எத்தனை காலத்திற்கு  இப்படி தனியா    இருக்க போற ,…உன் புருஷனோடு நீபட்ட கொடுமைக்கு மருந்தா நல்ல வாழ்க்கை கிடைக்கும் போது இப்படி முடிவெடுக்கிறயே வேணி…….!!” குரல் கம்மியது சித்ராவிற்கு.

    “எல்லாரும் அப்டித்தான்கா சொல்றாங்க….என்  கணவர் துன்பம் கொடுத்தது உண்மை தான்,ஆனால் துன்பம் மட்டுமே கொடுத்தார்ன்னு எப்டிக்கா சொல்ல முடியும். அவரோடு நான் சந்தோஷமாய் வாழ்ந்ததற்கான அடையாளம் தானே இன்றைய என்  வாழ்வின் அர்த்தம்  என் மகன்….அவனை வளர்க்க இதோ கையில் வேலை…இன்னும் ஊன்றி நிற்க படிப்பு…இன்னும் எதற்குக்கா கல்யாணம்…?..சற்று மௌனத்திற்கு பின் பெருமூச்சு விட்டபடியே…என் முதல் வாழ்க்கையை என்னதான் இருந்தாலும் மறக்கவும் முடியாது மறைக்கவும் முடியாதுக்கா….ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அது சொல்லி காட்டப்பட்டால் அதை தாங்கும் சக்தி  எனக்கில்லைகா . ….”!

    அதிர்ந்த சித்ரா, “குமார் மேல  உனக்கு நம்பிக்கை இல்லையா. .?”

    “ஐயோ  அக்கா. ..அப்படி  இல்லை பிரிவின் வலியை விட சொல் வலி கொடியதுக்கா. …”குளமாகியது அவள் கண்கள்.

    பார்த்தேயிராத சின்னப்பண்ணை மகனை இன்னும் கிண்டலுக்கு கூறுவதாக சித்ராவுடன் இணைத்து ராஜ் கூறும் போது தானும் சேர்ந்து சிரித்தாலும் உள்ளுக்குள் தனக்கு ஏற்படும் கசப்பு  உணர்வு  ஏனோ இப்போது நினைவிற்கு வந்தது  சித்ராவிற்கு.

    சிந்தனையாய் தன்னைப் பார்க்கும் சித்ராவை பார்த்த வேணி,”என் பிடிவாதம் உங்களை கஷ்டப்படுத்துன்னு நினைக்கிறேன்கா. …ஆனா  என் முடிவு இது தான். ..நான் நிறைய படிக்கனும்…கடவுளை நம்புறேன் நான். ..வேணி முடிக்கும் முன்பே “நல்லவைகளுக்கு பிடிவாதம் தேவைதான் வேணி…”என முடித்தாள் சித்ரா .

    மலர்ந்த முகத்துடன் விடைகொடுத்தாள் வேணி.சிறு பெண்ணின் தெளிவால் தெளிவான சித்ரா பெட்டி சாமான்களுடன் வெளியே வர ,கலங்கிய கண்களுடன் எதிர்ப்பட்ட குமாரை பார்த்து ,” அவள் வாழட்டும். …” என்றாள்  ஒற்றையாய்.

    சித்ராவின் இந்த பதில் குமாரின் மனதிற்கு  என்றாவது புரியும்.

    Share