துர்க்கை இங்கே உருவாகிறாள்

0

விசாலம்

durgaநவராத்திரி என்றாலே வட நாட்டில் கல்லூரிச் சிட்டுகள் சுருக்கமாக ‘எல் எஸ் டி பூஜை’ என்பார்கள். அதாவது லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை என்ற முத்தேவிகளின் பூஜை என்று அர்த்தமாம்.

புகழ் பெற்ற சில கோயில்களுக்குப் போனால், அந்த மூலவரைப் பார்க்க, வரிசையில் சில மணி நேரம் நிற்க வேண்டியிருக்கிறது. அதற்கே பொறுமையை இழக்கிறோம். ஆனால் நவராத்திரியின் போது, நம்மிடம் கொலு இருக்கப்போகும் நம் துர்க்கைக்கோ, பல மாதங்கள் பொறுமையாக வரிசையில் இருக்கும் நிலைமை வருகிறது. புரியவில்லையா?

அதுதான் பெங்காலிகளின் நவராத்திரிக்குத் தயாராகும் துர்க்கை பொம்மை.

இந்தத் துர்க்கை பொம்மைகளைச் செய்து கொடுப்பது, “பால்” என்ற குடும்பப் பெயர் கொண்ட வகுப்பினர். நூற்றுக்கணக்கான ஆர்டர்கள் அவர்களுக்கு வர,  அந்தப் பொம்மையை ஆரம்பிக்கவும் நல்ல நாள் பார்க்கப்படுகிறது. அதாவது பூரி ஜகன்நாத்தின் ரத யாத்திரை அன்று “கதமோ பூஜா” என்று மூங்கில்களை வைத்துப் பூஜையைப் பால்  வம்சத்தினர் ஆரம்பிக்கிறார்கள்.

கதாமோ என்றால் மூங்கில் என்று பெங்காலியில் பொருள். இந்தத் துர்க்கை செய்ய மூங்கில்கள் காய்ந்த வைக்கோல் சணல் கயிறு,  களிமண் போன்றவற்றை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

துர்க்கை பொம்மை செய்பவர்கள், கெட்ட பழக்கங்கள் இல்லாமல், அகத் தூய்மை புறத் தூய்மையுடன் மனத்தை ஒருமைப்படுத்தி அதில் லயிக்க வேண்டும். இது அவர்களுக்கு ஒரு யோகம்தான்.

மும்பையில் துர்க்கை செய்யும் சில இடங்களுக்கு நான் போயிருக்கிறேன். அந்த இடத்தில் பொம்மை செய்ய, நான்கு பிரிவாகக் கலைஞர்களைப் பிரிக்கிறார்கள். முதல் குழுவிற்கு  மூங்கில்களை வேண்டிய அளவு அகலம் நீளமாக வெட்டி, ஒரு எலும்புக்கூடு போன்ற உருவம் தயாரிக்க வேண்டும். இது முடிந்த பின் அந்தத் துர்க்கைக்குக் காய்ந்த சருகுகள், வைக்கோல் தேவைப்பட்டால் பஞ்சு போன்றவைகளை அடைத்து, மேலும் ஒரு உருவம் போல் கொடுப்பது இரண்டாவது குழு. இதற்குச் சிறு வயதினரும் உதவுகின்றனர். சணல் கயிற்றினால் நன்றாக இழுத்துக் கட்டப்பட்ட    துர்க்கை, முதல் கட்டத்தில் வந்து, அடுத்த கட்டத்திற்குக் காத்திருக்கிறாள்.

அதன் பின் வருவது தான், மிக முக்கியமான கட்டம். இந்த மூங்கில் அஸ்திவாரம் சரியாக இருக்கிறதா என்று பரிசோதித்த பின் கங்கைக்    கரையிலிருந்து களிமண் வரவழைக்கப்படுகிறது. இந்தக் களிமண்ணைப் பிசைந்து கால், பாதம், வயிறு, இரு கைகள் போன்றவற்றைச் சிலர் செய்வார்கள். பின் கழுத்து, தலை, முகம், கீழே இருக்கும் சிங்கம், நீண்ட விரல்கள் போன்றவை செய்ய, நன்கு அனுபவப்பட்ட, பக்குவப்பட்ட   கைத்தேர்ந்த முதல் தரமான கலைஞர் முன்வருவார்.

கொல்கத்தாவில் கார்த்திக்பால் என்பவர், சுமார் மூன்று தலைமுறையாக இந்தத் துர்க்கா மாதாவைச் செய்து தருகிறார். வெளியூர்களுக்கும் அனுப்பி வருகிறார். குமார்துலி என்ற இடம் இதற்குப் பெயர் பெற்றது. தற்போது அவரின் மகன் விக்ரம் பால் இந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டுள்ளார். 1950இலிருந்து இவர்கள் இந்த வியாபாரத்தில் சிறந்து விளங்குகின்றனர்.

கார்த்திக்பால் துர்க்கையைச் செய்யும் போது, தன் தாயை நினைத்து, அதே பாசத்துடனும் அன்புடனும் செய்வாராம். பசி, தூக்கம் ஒன்றுமே தெரியாமல் அதிலேயே ஈடுபட்டு, அந்தத் துர்க்கைக்கு உயிர் அளிப்பார். அத்தனைத் தத்ரூபமாக, பெரிய தாமரைக் கண்களுடன், குங்குமச் சிவப்புடன், கையில் சூலத்துடன், நீண்ட முடி முழங்காலுக்கும் கீழ் வரை தொங்க, ’அப்பப்பா, எத்தனை அழகு’ என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

துர்கை நாம் எங்குத்  திரும்பினாலும் நம்மையே பார்ப்பது போல இருக்கும். இப்படிச் செய்யும் போது அவர் தன் கவலைகள் எல்லாம் மறந்து, மனத்தில் ஒரு தனி ஆனந்தம் கிடைத்து மகிழ்கிறார்.

durga_ganeshமும்பையில் பல வருடங்களாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருபவர், விஸ்வநாத் பால். இவர் கையில் அப்படி ஒரு மாஜிக். 24 கைகள் வைத்து   ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு ஆயுதம் இருக்க, முகத்தில் ஒரு புன்னகையுடன், நீண்ட பெரிய கண்களுடன் அவர் செய்யும் துர்க்கை, பார்ப்பவரைச் சுண்டி இழுக்கும். கீழே இருக்கும் மேடையும் அதில் அமர்ந்திருக்கும் சிங்கமும் அத்தனை கைவண்ணம். சிங்கம்  உயிருடன் படுத்திருப்பது போன்ற ஒரு பிரமை.

பல துர்க்கை பொம்மைகள், பாதி செய்தபடி வரிசையாக இருக்க, இவர்தான் அதை முழு ரூபம் கொடுத்து உயிர்ப்பிக்கிறார். இவர் கீழே சுமார் இருபது பேர்கள் வேலை செய்கிறார்கள். இவர் சுமார் பதினேழு வருடங்களாக இந்த வேலையில் ஈடுபட்டு வருகிறார். இவர் சின்னப் பையனாக இருக்கும் போதே இதில் ஆர்வம் கொண்டு, தன் தந்தையிடம் எல்லா நுணுக்கங்களும் கற்றுக்கொண்டார். இந்தத் துர்க்கையைச் செய்பவர்கள்  காலையில் ஸ்னானம் செய்து, பின் அம்பாளைப் பிரார்த்தித்துக்கொண்டு, மனம் ஒன்றி அதில் லயிப்பார்கள். இந்தப் பொமைகள் முடியும் வரை சைவம் தான். தவிர, மது, மாமிசம், சூதாட்டம் போன்றவற்றைத் தவிர்த்து, தன் அம்மாவிடம் அமர்ந்து பேசுவது போல், பாசத்துடன் செய்வார்கள். நடுநடுவில் துர்க்கையிடம் பேசிக்கொண்டே செய்வார்கள். இதுவே அவர்களுக்கு ஒரு தவம் தான்.

இவர்கள் செய்யும் பொம்மைக்குக் களி மண் கங்கைக் கரையிலிருந்து  வரவழைக்கப்படுகிறது. இந்த மண்ணில் செய்தால்தான் துர்க்கை என்பது அவர்களது நம்பிக்கை. எல்லாவற்றையும் விட மிகக் கஷ்டமான வேலை, முகம், கண்கள், புன்னகை புரியும் அதரம் செய்வது. அத்துடன்
விரல்களில் ஏந்தும் ஆயுதங்கள், கீழே அமரும் மேடை, சிங்கம் போன்றவை.

இவற்றைச் செய்ய மிகத் தேர்ச்சிப் பெற்றவர்கள் தான் வேண்டும். நீண்ட கண்கள், நீண்ட முடியுடன்  பெங்காலிகளின் துர்க்கை உருவம் மிகப் பிரமாதமாக இருக்கும். உடலுக்கு வெளி ரோஸ் நிறம் குழைத்து அடித்து, பின் முகத்திற்கு நல்ல சிவப்பு நிறம் ஒத்தாற்போல் பூசுவார்கள்.
கூடிய வரை மந்தஹாஸ வதனியாகத் துர்க்கையைச் செய்ய முற்பட்டாலும் சிலசமயம் அவள் ருத்ர ரூபிணியாக அமைந்து விடுவாள். இதைப் பற்றிக்
கேட்டதில்  எந்த ஏரியாவிற்கு அந்தப் பொம்மை போகுமோ அந்த இடத்தில் அந்த வருடம் சுமாராகத்தான் செல்லும். சில பிரச்சனைகள் இருக்கலாம் என்ற நம்பிக்கையாம். நம் பொங்கலின் போது, பால் எந்தப் பக்கம் பொங்குகிறது என்று பார்ப்பதைப்போல் என நினைக்கிறேன்.
கைகளின் கூர்மையான நகமும் கூட பால் வம்சத்தினர் பார்த்துப் பார்த்து செய்கிறார்கள். அப்பப்பா, என்ன சிரத்தை. மிகவும் வியப்பாக இருக்கிறது.

எல்லாத் தொழில்களிலும் முன்னிலையில் நிற்கும் பெண்கள் இதை விடுவார்களா? இதைச் செய்யவும் ஒரு பெண் வந்தாள். சின்னாபால் என்ற பெயர். அவள் தந்தை துர்க்கை பொம்மை செய்து வருபவர். இவளோ அழகு நிலையம் வைத்துச் சம்பாதித்து வந்தாள். அவள் தந்தை எதிர்பாராமல் இறந்து போக, இவள் இந்தத் தொழிலை ஏற்றாள்.

அவள் இருந்த இடத்தில் இதற்கு மிகவும் எதிர்ப்பு இருந்ததாம். பல பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்ததாம். ஆனாலும் மனம் தளராமல் பன்னிரண்டு வருடங்கள் பாடுபட்டு, பின் லைசன்ஸ்  வாங்கி, தற்போது மிகவும் பிரமாதமாகத் துர்க்கை பொம்மை செய்து, வியாபாரத்தில் கொடி கட்டிப்   பறக்கிறாள். கேட்கவே மிகவும் பெருமையாக இருக்கிறது.

இத்தனை பாடுபட்டு வரும் துர்க்கை, தசராவின் போது கடலில் போய்க் கலந்துவிடுகிறாள். தன் மகன் கணபதி “கண்பதி பப்பா மோரியா” என்ற கோஷத்துடன் கடலில் கலந்து விடுவதைப் பார்க்க முடியாமல் அன்னையும் கலந்து விடுகிறாளோ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *