பகுதி 10-ஊ : அதுவா? இதுவா? இரண்டுமா?

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ

அப்பாடா…

ஒரு வழியாக, இத்துடன் இப்பகுதியை மூட்டை கட்டி விடலாம்.
பலரும் பெரு மூச்சு விடுவது கேட்கிறது….

சிலர் சுறுசுறுப்பாக (சுருசுருப்பாக?) விடுவது மகிழ்ச்சிப் பெருமூச்சு!(அப்பாடா, ஆளை விடுங்க!)

சிலர் விறுவிறுப்பாக (விருவிருப்பாக ) விடுவது ஏக்கப் பெரு மூச்சு (ஐயோ, இனி தொடராதா?)

இத்தொடரைத் தொடங்கியதின் நோக்கம் : இணையதளத்தில் பரவலாகப் பெருகிக்கிடக்கும் பிழைகளைச் சுட்டிக்காட்டி விளக்கலாமே என்ற பேரவாதான்! வேணவாதான் – வீணவா இல்லை!

படிப்பவர் தெளிவு பெறுவர் ; பிழை களையும் நிலை உறுவர் என்னும் எதிர்பார்ப்பு. வீண் போகவில்லை என் உழைப்பு !
முன்பெல்லாம் மளமளவென எழுதி வந்தவர்கள் இப்போது எண்ணிப் பார்த்து எழுதுகிறார்கள்!

உள்ளுக்குள் ஐயம் முளை விடுகிறது ; இப்படி எழுதுவது சரியா? தவறாகிவிடுமோ..?.என்ற அச்சம். ‘இப்பகுதி ‘ சரியா? ‘இந்தப் பகுதி’ சரியா?’ இங்கே ‘ப்’ வரணுமா ? கூடாதா?…குழப்பம் தலை தூக்குகிறது. தடுப்பூசி போட்ட பிறகு காய்ச்சல் சிறிது எழும் ; எழவேண்டும். தடுப்பூசி வேலை செய்கிறது என்பதற்கு அதுவே அடையாளம். அது போலத்தான் இதுவும். குழம்பினால்தான் (குழப்பினால்தான்) தெளிவு கிடைக்கும்.

சிலர் தத்தம் ஐயங்களை நேரடியாக எனக்குத் தனிமடல் அனுப்பிக் கேட்கின்றனர். மடல் குழுவில் கேட்பவர்களும் உளர். கற்றலின் கேட்டல் நன்று! வள்ளுவர் வழிப்படி நிற்பவர்கள் இவர்கள்.

‘கேளுங்கள் கொடுக்கப்படும் ‘

தவறாகத் தமிழ் எழுதக் காரணம் : இலக்கண அறிவின்மையே.
தமிழ் இலக்கணத்தைச் சிறு வயது முதலே புறக்கணிப்பதால் வரும் இடர்ப்பாடு இது.

ஒருவர் எழுதினர் :’ ஐம்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தமிழ் இலக்கணத்தைக் கற்பது எளிதாக இல்லையே’.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது ‘ – பழமொழி உண்மைதான்.

இலக்கணக் கல்விக்கும் இது பொருந்தும். தமிழ் இலக்கியம் போன்றே தமிழ் இலக்கணமும் தனிப்பெருங் கடல். அதில் நீந்திக் கரை சேர்வது எளிதில்லைதான் .

பள்ளித் தமிழ் ஆசிரியர்களுக்குத் தனிப்பொறுப்பு உண்டு.
தமிழைச் சரியாக ஒலிக்கக் கற்றுத்தரவேண்டும்.(ந, ண, ன ; ழ, ல, ள ; ர, ற…ஒலிப்பு வேறுபாட்டினை விளக்குதல் இன்றியமையாதது )

தமிழ் இலக்கணத்தை முறையாகச் சுவையாகக் கற்றுத்தரவேண்டும்.

தமிழை வாய்விட்டுப் படிக்கச் செய்தல் வேண்டும் (செந்தமிழும் நாப்பழக்கம் ) தமிழில் சொல்வதெழுதல் அகத்தியம் தேவை.
தமிழறிந்த பெற்றோர்கள் இப்பொறுப்பை ஏற்கலாம்.

சரி நம் தலைப்புக்கு வருவோம் :

இதுவரை நாம் பார்த்தவற்றில் எது சரியான சொல், எது தவறானது; அது ஏன் , எப்படி என்றெல்லாம் இலக்கண இலக்கிய வழி நின்று பார்த்தோம். இதோ சில சொற்கள் :

இழிவு – இளிவு ; குழறு – குளறு, சுழித்தார் – சுளித்தார் ; துழாய் – துளாய் ; பவழம் – பவளம்

காரல் – காறல் ; சுரண்டு – சுறண்டு, சுறுசுறுப்பு – சுருசுருப்பு, அருவெறுப்பு – அருவெருப்பு, சுறுக்கென்று-சுருக்கென்று, முரிதல்-முறிதல், தறை -தரை, வறட்சி , வரட்சி ; வரட்டி, வறட்டி ….

இவற்றுள் எது சரியான சொல் எது தவறான சொல்? சொல்லுங்கள் பார்ப்போம்!

இப்போது ‘தரை’ என எழுதுகிறோம். கவிச்சக்கரவர்த்தி கம்பன், ‘தறை’ என்றுதான் எழுதி இருக்கிறான். பாலகாண்டம் அவையடக்கம் பகுதியில் காண்க:

‘அறையும் ஆடரங்கும் பட பிள்ளைகள்
தறையில் கீறிடத் தச்சரும் கைவரோ
இறையும் ஞானம் இலாதஎன் புன்கவி
முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ’

‘தறையில் ‘ என்பது பாட பேதம் என்பதற்கும் வழி இல்லை ; அடுத்து வரும் எதுகைகள் ‘தறை’க்கு ஈடாகவே உள்ளன.

‘வரட்சி’ சரியே எனப் புரட்சிக் கொடி பிடிப்பவரும் உண்டு ; ‘வற்’ என்னும் வேர்ச்சொல்லில் இருந்து வருவதுதான் ‘வற்று’ வறுமை’ போன்ற சொற்கள்.

ஆகவே , ‘வறட்சி’ என்று எழுதுவதே முறை என்பவரும் உளர்! இப்படிப்பட்ட சொற்களில் தமிழ் இலக்கணம் தலை இடுவதில்லை ; மாறாக இருவகைச் சொல்லாட்சிகளும் செல்லும் என்று வழி விடுகிறது. இதற்காகவே ‘இலக்கணப் போலி’ என்ற பகுதி தமிழ் இலக்கணத்தில் உள்ளது.

‘போலி’ என்ற சொல்லைக் கண்டதும் நம்மவர்கள் ‘தரக்குறைவு’ என்று பொருள் கொண்டுவிடுகிறனர். அண்மையில் கூட மடற் குழுவில் ஒருவர், ”இலக்கணப் போலிகள்’ புற்று நோய்கள் ; அவற்றை ஒழிக்கவேண்டும்” என்ற கருத்துப்பட எழுதி இருந்தார்.

‘இலக்கணப் போலி’ என்பது ‘புற்று நோய்’ அன்று!

இலக்கணத்தில் இடம் பெரும நாணயமான பகுதி. ‘போலி’ என்ற சொல்லுக்கு ‘counterfeit’ ‘fraud’ போன்ற ‘pejorative’ பொருள் இல்லை. போல இருப்பது போலி. ஆனால் அசலும் போலியும் ஒன்றல்ல. அசலுக்குப் பகரமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய சொல்.

தமிழுக்கே சிறப்பெழுத்தான ‘ழகர’த்தை (தமிழைப் போலவே மலையாளத்திலும், சற்றே வேறுபட்ட ஒலிப்போடு – ‘ழ’, ‘ழி’ – பிரஞ்சு மொழியிலும் – ‘இவ்வெழுத்து உண்டு)

ஒழுங்காகப் பலுக்க இயலாதவர்கள் ‘பவளம்’ எனப் ‘பவழத்தை’ ஒலிக்கிறார்களே… அதனைத்தான் போலி என்கிறது தமிழ் இலக்கணம். ‘பவழம் என்னும் சொல்லை ஒலிக்க இயலாதவர்கள் ‘பவளம்’ என ஒலிக்கட்டும், எழுதட்டும் எனப் பெருந்தன்மையாக வழி விடுகிறது தமிழ் இலக்கணம் – இலக்கணப் போலி என்னும் பகுதியை – வழுவமைதியை அமைத்து.

மேலே சொன்ன சொற்களோடு, நண்டு- ஞண்டு, கால்வாய்-வாய்க்கால், சதை-தசை, இல்முன்-முன்றில், நகர்ப்புறம் – புறநகர் … போன்றவற்றைச் சேர்த்தப் பாருங்கள்.

போலிகளுக்கு இவை எடுத்துக் காட்டுகள். மொழி இறுதிப் போலி, முதற் போலி, இடைப் போலி எனப் போலியை மூவகைப்படுத்திக் காட்டுவார் பவணந்தி முனிவர்.
(நன்னூலாசிரியர் – எழுத்ததிகாரம் நூற்பாக்கள் :122 முதல் 124 வரை).

‘போலி எழுத்தைப் போற்றுதல் கடனே’ என்று இலக்கணக்கொத்து கூறும்.

‘விற்கும் பண்டங்களில்தான் போலிகளைத் தள்ளவேண்டும். ஆனால் எழுத்துப் போலிகளைப் போற்றிக் கொள்ளவேண்டும்’ என்கிறார் ‘இலக்கணம் இனிக்கிறது’ ஆசிரியர் முனைவர் இரா.திருமுருகனார். இவர் புதுச்சேரியின் தலை சிறந்த இலக்கண அறிஞர். சில ஆண்டுகளுக்கு முன்புதான் அமரர் ஆனார்.

எனவே தமிழிலக்கணம் அறியாதார்தாம் இலக்கணப் போலிகளைப் புறந்தள்ளுவர். தமிழ் இலக்கணமும் தமிழ் அறிஞர்களும் ஏற்றுக்கொள்ளும் ‘இலக்கணப் போலியைப் புற்று நோய் என்று சொல்வது தவறு.

எனவே, இருவகையாகவும் எழுதப்படும் சொற்கள் உண்டு ; ஒன்று அசலானால் மற்றது போலி! ஒன்றுக்கு மாற்றாக மற்றதைப் பயன்படுத்தலாம். ஏனெனில் இரண்டுக்கும் பொருள் ஒன்றே! ஆகவே, அதுவா? இதுவா? என்னும் கேள்விக்கே இடம் இல்லை இங்கே.

பொருளைத் தெளிவு படுத்துவதற்குத்தான் இலக்கணம் இருக்கிறது. சில சமயங்களில் இலக்கணக் குறிப்பைப் பொருத்தே பொருள் பெறப்படும்.

காட்டாக, ‘வாழை பழம்’ என எழுதலாமா? கூடாது அது தவறு, ‘வாழைப் பழம்’ என்றுதான் எழுத வேண்டும் ; ஏனென்றால் வாழை சிறப்புப் பெயர், பழம் பொதுப் பெயர். ஆகவே அது இருபெயரொட்டுப் பண்புத் தொகை. இந்தப் பண்புத் தொகையில் ஒற்று மிகும், என்றே பலரும் சொல்வார்கள்.

ஆனால், தமிழ் இலக்கணம் நன்கு அறிந்தவர்க்கு, அது தவறாகத் தெரியாது. எந்த இலக்கணக் கொள்கைப்படி அது சரி எனக் கேட்டால், பதில் இப்படி வரும் :

‘வாழை பழம்’ எனபது உம்மைத் தொகை அதாவது ‘வாழையும் பழமும்’ (வாழைக் கனியுடன் வேறு வகைப் பழங்களும்…) எனப் பொருள் தரும். உம்மைத் தொகையில் ஒற்று மிகாது. ஆகவே ‘வாழை பழம்’ என எழுதுவது தவறு ஆகாது.

இவ்விருவர் கூற்றும் உண்மையே. இலக்கண ஒளியில் பொருளை விளக்கலாம். பொருள் கொள்வதில் சிக்கல் எழுமானால் அதனைத் தீர்க்க இலக்கண அறிவு மிகத்தேவை. எனவே இலக்கண அறிவைப் பெறவும் வளர்த்துக் கொள்ளவும் முயல்வோம் என்று சொல்லி இந்தப் பகுதியை நிறைவு செய்கிறேன்.

இனி வரும் திங்களகளில் கிரிசுமசு, புத்தாண்டுப்பெருவிழாக்கள், பொங்கல்… முதலிய திருவிழாக்கள் , வேறு பலப் பலப் பணிகள்… (அடுத்த ஆண்டு அடியேன் தலைமையில் ‘தமிழ் இலக்கிய உலக மாநாடு’ பிரான்சில் நடத்த முடிவு செய்துள்ளோம்) வரிசைகட்டி நிற்பதால், தற்காலிகமாக விடைபெறுகிறேன்.

இந்தப் பத்துப் பகுதிகளையும் வாரம் இருமுறை வெளியிட்டதோடு அமையாமல், ஒவ்வொரு கட்டுரைக்கும் பின்பு, பாராட்டிச் சீராட்டி ஊக்கம் தந்து மின்னஞ்சல் அனுப்பி வைத்த என்னருமைச் சகோதரி, ‘வல்லமை’ இதழின் ஆசிரியர் திருமதி பவள சங்கரி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இந்தப் பத்துப் பகுதிகளையும் தொடர்ந்து படித்து அவ்வப்போது பாராட்டியும் வினாக்கள் எழுப்பியும் என்னை ‘வேலை’வாங்கிய என் இனிய (இணையதள) நண்பர்கள் செம்மல் (கோவிந்தன்), அமுதம் சிவம்அமுதம் , தேவன், பழமைபேசி… இன்ன பிற அன்பர்கள் அனைவருக்கும் உளம் தோய்ந்த நனறிகள்.

பாராட்டி ஊக்கமூட்டிய அன்பிற்கினிய நண்பர்கள் பேராசிரியர் மறைமலை இலக்குவனார், அவர் சகோதரர் திருவள்ளுவன் இலக்குவனார், அமீரக நண்பர் நாக. இளங்கோவன், உடன்பணியாற்றிய அன்பை என்றும் மறவா புதுச்சேரிப் பேராசிரியர் அ. பசுபதி (தேவமைந்தன்), அமெரிக்கத் தம்பி ஆல்பர்ட், சிங்கை நண்பர்கள் பழனி, கிருட்டிணன்… பின்னூட்டம் இட்ட அன்பர்கள்… என அனைவருக்கும் அகங்கனிந்த நன்றிகள்.

மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுபவன்

பெஞ்சமின் லெபோ.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *