சிவப்புச் சமிக்ஞை
குமரி எஸ்.நீலகண்டன்
சிவப்பு, பச்சை, மஞ்சளென
கண்களைச் சிமிட்டி,
போக்குவரத்தை
ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தது
சமிக்ஞை விளக்கு.
சிமிட்டும் வண்ணங்களை
எப்போதுமே
சிதறடித்துச் செல்லும்
அவனது குதிரை.
விதிகளுக்குக் கட்டுப்படாத
அவனது விதி
அன்று வீதியில்.
கழன்ற காலணி
அவனது கன்னத்தில்.
அவனது கடிகார நேரம்
நின்று விட்டது.
அவனது பச்சை உடம்பில்
கிழிந்த போர்வையாய்
சிவப்பு வண்ணங்கள்.
உடலை உதைத்து
அவன் உயிரும்
எங்கோ போயிருக்க வேண்டும்.
சிவப்பு, பச்சை, மஞ்சளென
கண்களைச் சிமிட்டி,
போக்குவரத்தை
ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தது
சமிக்ஞை விளக்கு.