நிலவொளியில் ஒரு குளியல் – 9

8

ஸ்ரீஜா வெங்கடேஷ்

Srija_venkateshநாடகம் போட்டுப் பார் என்று பழைய எழுத்தாளர் மெரீனா ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் நாடகத்தின் மேல் மோஹம் கொண்ட கதாநாயகன், நாடகம் போடுவதற்குப் படும் அல்லல்களை நகைச்சுவையாகவும் அழுத்தமாகவும் சொல்லியிருப்பார். அதே போன்று நாங்களும் நாடகம் போட்ட அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அது நகைச்சுவையா, இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். நாங்கள் முதன்முதலில் நாடகம் போட்டது, எங்களுடைய பத்தாவது வயதில். இங்கே நாங்கள் என்று நான் குறிப்பிடுவது என் தோழியரைச் சேர்த்துத்தான். எங்கள் கிராமத்தில், எங்கள் தெருவில்தான் நாடகம் போட்டோம்(?). உடனே நீங்கள் பத்து வயதிலேயே இதெல்லாம் செய்திருக்கிறீர்களே என்று எங்களை மழலை மேதை அளவுக்கு உயர்த்திக் கற்பனை செய்து விடாதீர்கள். நாங்கள் போட்ட நாடகங்கள் எல்லாம் பக்தி மயமானவை. எங்கள் பாட்டிமார் சொல்லும் கதையிலிருந்து எடுத்துப் போடுவோம்.

ஒவ்வொரு வருடமும் எங்களுடைய கோடை விடுமுறை நீண்டுகொண்டே போகும். இரண்டு மாதங்கள் உறவினர் வீட்டில் சென்று தங்குமளவு அவ்வளவு நெருக்கமான உறவினர் யாருமில்லை. அப்படியே இருந்தாலும் ஒன்று பக்கத்து ஊரிலோ, அல்லது பக்கத்துத் தெருவிலோ இருந்தார்கள். இதுபோன்ற காரனங்களால் எங்களில் பலர் ஏன் எல்லோரும் என்று கூடச் சொல்லலாம் , கோடை விடுமுறையில் வீட்டில்தான் இருப்போம். படிப்பு, படிப்பு என்று பெற்றோர் தொணதொணக்காததால் வெயிலும் வெக்கையும் மிகுந்த அந்த வேனில் காலம் கூட எங்களுக்கு வசந்த காலமாகத் தோன்றியது. எங்களுடைய கலைத்தாகமும் அப்போதுதான் ஊற்றெடுக்கும். டிவி அதிகம் இல்லாததால் நேரம் எல்லாம் எங்களுக்கே சொந்தம். வீட்டிற்குச் சரியாக சாப்பாட்டு நேரத்திற்குப் போனால் போதும். அப்படியிருக்க எவ்வளவு நேரம்தான் பாண்டியாடுவது? எவ்வளவு நேரம் தான் தாயம் ஆடுவது?

ஜோசியர் வீட்டுப் புளிய மரத்தில் உட்கார்ந்திருந்த போது முதலில் லட்சுமிக்குத்தான் ஞானோதயம் ஏற்பட்டது. “நம்ம சும்மா இப்படி வெட்டிப் பொழுது போக்கறதுக்கு நல்ல டிராமாவா போட்டா என்ன?” என்றாள். அவள் சொன்ன யோசனையை உடனே அப்படியே ஏற்றவர்கள் நானும் வனிதாவும்தான். மற்றவர்களுக்குச் சற்று சந்தேகமாகவே இருந்தது. “ஆமா டிராமான்னா ஸ்டேஜ் வேணுமே?” என்ற கேள்விக்கு எங்கள் ஊர் பெருமாள் கோயில் மண்டபம் பதிலானது. திரைக்கு எங்கள் அம்மாக்களின் புடவைகள், பார்வையாளர்கள் இருக்கவே இருக்கிறார்கள் எங்கள் தெரு மக்கள். இப்படி எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிட்டது, ஒரே ஒரு கேள்வி தவிர. அது, “என்ன டிராமா போடுவது?” என்ற முக்கியமான கேள்வி.

எங்களுக்கு இருந்த உற்சாகத்தில் அதை நாங்கள் சுத்தமாக மறந்து போய் விட்டோம். அன்று இரவு, அம்மாவின் சேலைகளை நாடகத்திற்காக முன் பதிவு செய்யும் போது அவர்கள் அந்தக் கேள்விகளைக் கேட்டார்கள். அப்போது தான் உறைத்தது. நான் முழிப்பதைப் பார்த்து என் அம்மா சிரித்தபடியே “என்ன நாடகம்? யார் எழுதப் போறது? எப்போ போடப் போறீங்க? இதெல்லாம் முடிவு பண்ணிட்டுல்ல பொடவயக் கேக்கணும்?” என்று சொல்லிச் சிரித்துவிட்டு வேலையில் மும்முரம் ஆகிவிட்டார்கள்.

கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் அந்தக் கேள்வி இடம் பெற்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனென்றால் மறு நாள் நாங்கள் கூடிய போது நாங்கள் எல்லாரும் அதையேதான் முதலில் சொன்னோம். வரிசையாக எங்களுக்குத் தெரிந்த சாமி கதைகள் எல்லாவற்றையும் நினைவில் ஓட்டினோம். “பக்த பிரஹ்லாதா” போடலாம் என்றால் நரசிம்மாவதார முகமூடி வேண்டும் அது போன்ற பண்டங்கள் எங்கள் ஊரில் இருந்த ஒரே கடையான காசா கடையில் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அதை வாங்கக் காசு கிடைக்காது என்ற காரணத்தால் தள்ளப்பட்டது.

“நல்ல தங்காள்” போடலாம் என்றாலோ ஏழு குழந்தைகளுக்கு நாங்கள் எங்கே போவது? இருந்ததே நாங்கள் ஆறு பேர் தான். அப்படியும் நாங்களே குழந்தை வேஷம் போட்டால் மற்ற பாத்திரங்களில் யார் நடிப்பார்கள்? என்ற காரணத்தால் அதுவும் வேண்டாம் என்றாகியது. இப்படி பல கதைகளையும் தள்ளுபடி செய்து, கடைசியில் பாஞ்சாலி சபதத்தில் வந்து நின்றோம். அது கொஞ்சம் சரிப்பட்டு வரும் போலத் தோன்றியது. கிரீடம், புல்லாங்குழல், சிம்மாசனம் போன்றவைகளுக்காக எங்கள் அண்ணன்மார்களின் உதவியை நாடினோம் (வேறு வழியில்லாமல்). முதலில் ரொம்பவும் பிகு செய்து கொண்டவர்கள், ஒருவழியாக ஒப்புக்கொண்டார்கள், ஒரு நிபந்தனையோடு. அவர்கள் முதலில் ஒரு நாடகம் போடுவார்கள், அதற்குப் பிறகுதான் எங்கள் நாடகம் என்பதுதான் அது. கொஞ்சமும் நியாயமில்லாத இந்த நிபந்தனையை வேறு வழியின்றி நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.

நோட்டுப் புத்தக அட்டைகளை வெட்டி கிரீடம் முதலியன செய்வதில் அவர்கள் ஈடுபட்டார்கள் என்றால், நாங்கள் எங்களுடைய ஒத்திகையில் படு பிசியாக இருந்தோம். நாங்களே எழுதிய அந்த நாடகத்தில் ரெண்டே சீன். தேரோட்டி சென்று திரௌபதியை அழைப்பது ஒன்று. துச்சாதனன் அவைக்கு இழுத்து வந்த பிறகு துகிலுரியும் காட்சி. தொடர்ந்து திரௌபதி சப்தம் போடும் காட்சி அவ்வளவே. துகிலுரியும் காட்சிக்கு ஒரு சேலை மேல் மற்றொரு சேலையாக ஐந்தாறு சேலைகளைச் சுற்றிக்கொள்ளலாம் என்று என் அம்மாதான் ஐடியா கொடுத்தார்கள். அதன்படியே செய்யலாம் என்று முடிவு செய்து ஒத்திகைகளை ஆரம்பித்தோம்.

எங்கள் கூட்டத்திலேயே வனிதாதான் மிக அழகாகவும் சிவப்பாகவும் இருப்பாள். அதனால் அவளுக்கே திரௌபதி வேடம் கொடுக்கப்பட்டது. லட்சுமி சற்று மாநிறமாக இருந்தாலும் களையாக இருப்பாள். அதனால் அவள் கிருஷ்ணர் வேஷம் போடுவதே பொருத்தம் என்று தீர்மானம் செய்யப்பட்டது. மற்றவர்களுக்கு அர்ஜுனன், பீமன், மற்றும் துச்சாதனன் வேஷம் கொடுக்கப்பட்டது. (நான்தான் அர்ஜுனன்). ஆள் பற்றாக்குறை காரணமாக கிருஷ்ணர் வேஷம் போடும் லட்சுமியே, தேரோட்டியாகவும் வர வேண்டிய நிலை. எங்கள் அண்ணன்கள் மட்டும் தாங்கள் போடும் நாடகத்தை இரகசியமாக வைத்திருந்தனர். எங்களிடம் எதுவுமே சொல்லவில்லை.

எங்களுடைய நாடகப் பொருட்கள் எல்லாம் தயாராகிவிட்டன. ஜிகு ஜிகுவென தங்கச் சரிகைப் பேப்பர் ஒட்டிய கிரீடங்கள் ஜொலித்தன. கைகளில் கட்டிக்கொள்ள வேறு ஏதோ ஆபரணங்கள் போல செய்து தந்தார்கள். அவற்றை அணிந்து பார்ப்பதற்காகவே சீக்கிரம் அரங்கேற்ற தினம் வராதா? என்று இருந்தது. எங்களுடைய பெற்றோர்களும் எங்களை மிகவும் உற்சாகப்படுத்தினார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது. ஆயிற்று அந்த நாளும் வந்தது. அம்மாக்களின் புடவைகள் திரைச் சீலைகளாகத் தொங்கின. ஒவ்வொருவரும் இது எங்க அம்மாவோட சேலை என்று காட்டிக் காட்டி மகிழ்ந்தோம். இருக்கும் இரண்டு சீன்களில் ஒரு சீனுக்கும் மற்றொரு சீனுக்கும் நடுவே திரை போடக்கூட அங்கள் அண்ணன்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.அதையெல்லாம் பார்க்கப் பார்க்க எங்களுக்கு வயிற்றில் அல்சர் வருமளவு புளியைக் கரைத்தது. பேசாமல் அவர்கள் மட்டும் நாடகம் போடட்டும், நாம் வாபஸ் வாங்கி விடுவோமா? என்ற யோசணை கூடத் தோன்றியது. ஒரு பக்கம் ஆர்வமாகவும் இருந்தது,

நாங்கள் கையால் எழுதிக் கொடுத்த அழைப்பிதழுக்கு மதிப்புக் கொடுத்து பார்வையாளர்கள் (வேறு யார் எங்கள் தெருக்கரர்கள் தான்) மாலை ஐந்து மணி நாடகத்துக்கு சரியான நேரத்தில் வரத்தொடங்கி விட்டர்கள். அக்காக்கள் எங்களுக்கு மேக்கப் போட (பௌடரும் குங்குமத்தை எண்ணயில் குழைத்த லிப்ஸ்டிக்கும்) அம்மாக்கள் எங்களுக்கு உடை அணிவிக்கவென்று பரபரவென இயங்கினார்கள். அவர்கள்  ஆர்வத்தைப் பார்த்து மேலும் பயம்தான் வந்தது எங்களுக்கு. நாந்தான் ஏறக்குறைய இயக்குநர் பதவி ஏற்றிருந்ததால் என்னிடம் நிறையக் கேள்விகள் கேட்டார்கள். எனக்கிருந்த பயத்தில் எல்லாவற்றிற்கும் மண்டையை ஆட்டி வைத்தேன்.

என் அண்ணன் மண்டபத்தின் மேல் ஏறி, அவர்களுடைய நாடகம் தொடங்கப் போவதாக அறிவித்தான். எல்லாவற்றையும் கழற்றிப் போட்டுவிட்டு கடையம் செல்வதற்குப் பேருந்து பிடித்து விடலாமா என்று தொன்றிய எண்ணத்தை வலுக் கட்டாயமாக உதறினேன். என்னைப் போலவே என் தோழிகளுக்கும் தோன்றியது என்று அவர்கள் முகம் சொல்லியது. எங்களுக்கு இருந்த டென்ஷனில் அண்ணன்கள் போட்ட நாடகம் எங்கள் மூளை வரை எட்டவேயில்லை. ஒரு இயக்குநரிடம் பல சிச்சுவேஷன்களை நகைச்சுவையாக நடித்துக் காண்பித்தார்கள் என நினைவு. அவர்கள் நாடகம் முடிந்து, கை தட்டல் ஒலி நன்றாகக் கேட்டது.

எங்கள் நாடகம் அறிவிக்கப்பட்டது. கிருஷ்ணர் அப்போதுதான் பாத்ரூமைத் தேடினார். சமாளித்து மேடையேறினோம். உயரத்திலிருந்து பார்க்கும் போது பார்வையாளர்கள்  எல்லாரும் சின்னதாகத் தெரிந்தார்கள். நடுங்கிய கால்களை சமாளித்துக்கொண்டு முதல் சீன் முடித்தோம். கொஞ்சம் தைரியம் வந்தது. அடுத்த சீனை அச்சமின்றி எதிர்கொண்டோம். துகிலுரியும் நேரம் வந்தது. துச்சாதனன், அதுதான் ரமா, சேலையைப் பிடித்து இழுக்க, அது வரவில்லை. அவள் கொஞ்சமும் யோசிக்காமல் அர்ஜுனனாகிய என்னைப் பார்த்து “ஐயோ வரலையே இப்ப என்னடி பண்றது?”என்று கத்தி விட்டாள். பார்வையாளர்களிடம் சிரிப்பொலி. கையால் மறைத்துக்கொண்டு “கொஞ்சம் பலமா புடிச்சு இழேண்டி” என்று சொன்னேன். அது அவளுக்குக் கேட்டதோ இல்லையோ , பார்வையாளர்களுக்குக் கேட்டுவிட்டது. சிரிப்புச் சத்தம் ஓங்கிக் கேட்டது. நான் சொன்னபடி ரமா பலமாக பிடித்து இழுக்க , மொத்த சேலையும் சேஃப்டி பின்னோடு சேர்த்து வந்து விட்டது.பார்வையாளர்களில் சிலர் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தனர். எங்கள் அண்ணன்கள் ‘கீழே இறங்குங்க’ என்று கத்த, பார்வையாளர்கள் மேலும் சிரிக்க, அந்தக் களேபரத்திலும் திரௌபதி வசனத்தைப் பேசாமல் வர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து வனிதா பாட்டுக்குச் சபதத்தை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தாள். சிரிப்புச் சத்தம் நாங்கள் கீழிறங்கி உடை மாற்றும் வரை கேட்டுக்கொண்டிருந்தது. அவமானம் தாங்காமல் நாங்கள் ஓவென அழ, அது மேலும் சிரிப்பை மூட்டியது சிலருக்கு.

இப்படியாக ஒரு வரலாற்று நாடகத்தை நகைச்சுவை நாடகமாக மாற்றிய பெருமையோடு எங்கள் நாடக தாகத்தை மூட்டை கட்டினோம். பல வருடங்களுக்குப்  பிறகு ஒரிஸ்ஸா மண்ணில் நான் எங்கள் குழுவோடு ஐந்து நாடகங்கள் மேடையேற்றி, ஆளுநரிடம் பாராட்டு வாங்குமளவு முன்னேறினாலும் ஒவ்வொரு முறையும் இந்த நினைவுகள் வராமல் இருந்ததில்லை. அந்த சந்தோஷத்தோடு நிலவொளியில் ஒரு குளியல்.

(மேலும் நனைவோம்….

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “நிலவொளியில் ஒரு குளியல் – 9

 1. எப்பொழுதுமே சிலர் படும் அவஸ்தைகள்தான் பலருக்கு நகைச்சுவையாக மலர்கிறது

  சரியான நேரத்தில் இழுத்தும் புடவை வராததை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

  அடடா மஹா பாரதக் கதையே இல்லாமல் போயிருக்குமே
  புடவை மட்டும் வராமலிருந்தால்

  நல்ல அனுபவம், உங்கள் நகைச்சுவையான எழுத்து என்னுடைய நாடக அனுபவங்களையும் புதுப்பித்திருக்கிறது

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

 2. மேடை நாடகம் போடுவது என்பது மிகவும் கடினமான காரியம். பக்கம் பக்கமாகக் கட்சிகளைப் (Screen) பிரிக்க வேண்டும். பின்னர் நடிகர்களை வைத்து ஒத்திகை (Rehersal) செய்ய வேண்டும். ஒலி முற்றும் ஒளி மேடையில் (Stage ) நன்றாக அமைய வேண்டும். நாடகம் போடுபவர்களுக்கு தான் அந்தச் சிரமம் தெரியும்.

  மிகவும் நன்றாக, நகைச்சுவை உணர்வுடன் எழுதியதற்கு வாழ்த்துகள்.

 3. சின்ன வயதில் நாங்கள் பள்ளி நாட்களில் நாடகம் போட்டது ஞாபகத்திற்கு வருகிறது. ரொம்ப நன்றாக எழுதிய Srija Venkatesh அவர்களுக்கு பாராட்டுகள்.

 4. எனது சிறு வயதில் நாடகம் போட்ட நிகழ்ச்சி என் கண் முன்னே தோன்றுகிறது. கோவில் திருவிழாவை ஒட்டி எங்கள் தெருவில் எங்கள் amateur குழுவினர் ஒரு சரித்திர நாடகம் ஒன்று போட்டோம். மிகவும் சுமாராக இருந்தாலும் பெரியவர்கள் கை தட்டி எங்களை உற்சாகப்படுத்தினர். எங்களது குழுவில் நிறைய சிறுவர்கள் வசனங்களை மறந்தனர். இருத்தாலும் எங்களுக்கு வெற்றி கிடைத்ததாக நினைத்தோம்.

  இப்பொழுது இது போன்ற நிகழ்ச்சிகளில் சிறுவர்களுக்கு ஈடுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.

 5. நாடகத் துறையே இப்பொழுது நலிந்துகொண்டு வருகிறது. காரணம் தொலைக்காட்சியில் வரும் எண்ணற்ற தனியார் சேனல்களின் சீரியல்களே. மேடையில் பார்வையாளர்கள் முன் நடிப்பதில்தான் திறமை உள்ளது. சீரியல்களில் நிறைய retake வாங்கி நடிப்பது மக்களுக்குத் தெரியாமல் போகிறது.

  மிகவும் அருமையாக எழுதியதற்கு வாழ்த்துகள்.

 6. அட சின்ன பசங்க நாடகம் போட்ட சம்பவத்தை ரொம்ப அற்புதமாக சொல்லிருக்கீங்க……… பாராட்டுக்கள்

 7. Thank you for reminding the sweet memories.Very nice.When i read this i have gone 20 years back and enjoyed those hours for some moment.Mentally refreshed.keep it up.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *