நிலவொளியில் ஒரு குளியல் – 12

6

ஸ்ரீஜா வெங்கடேஷ்

Srija_venkateshஒவ்வொரு முறையும் இந்தப் பத்தி நான் என்னுடைய பள்ளி நாள் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கான ஊடகமாக விளங்கி வருகிறது. இம்முறை வித்தியாசமாக நாங்கள் ஒடிஸா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் என் தோழிகளோடு பொங்கல் கொண்டாடிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன். அதற்கு முன்னால் நாங்கள் கிராமத்தில் பொங்கல் கொண்டாடும் விதத்தைச் சொல்லியாக வேண்டும். ஏனெனில் அதை முன்மாதிரியாக வைத்துத்தான் ஒடிஸாவில் நாங்கள் கொண்டாடினோம்.

எங்கள் கிராமத்தில் விவசாயத்தை நம்பி வாழும் குடும்பங்கள்தான் பெரும்பான்மையானவை. அதனால் தீபாவளியை விட பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்படும். தீபாவளிக்குப் புதுத் துணி எடுக்காதவர்கள் கூட பொங்கலுக்குக் கண்டிப்பாகப் புதுத் துணி எடுப்பார்கள். மிகவும் வறுமைப்பட்ட குடும்பங்கள் கூட குழந்தைகளுக்கு பள்ளிச் சீருடையாவது வாங்கி விடுவார்கள். புது நெல் வந்திருக்கும் ஆதலால் அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை. அறுப்புக் களத்தில் அறுத்த நெற்கதிர்களில் சிலவற்றை அழகாகப் பின்னி ஒரு அலங்காரம் போல் செய்து (அதிலிருக்கும் நெல் மணிகளுக்கு கொஞ்சமும் சேதம் வராமல்) அதை வீட்டு முன் வாசலில் தொங்க விடுவார்கள்.

சிறு சிட்டுக் குருவிகள் அந்த நெற்கதிர்களை அவற்றின் மேலேயே அமர்ந்து கொத்தித் தின்னும். அப்போது அந்த நெற்கதிர்ப் பின்னல் ஆடுவது பார்க்க அந்தக் குருவி ஊஞ்சலாடுவது போல அவ்வளவு அழகாக இருக்கும். குருவிகளுக்காகவேதான் அவற்றைப் பின்னுவார்கள். தனக்குக் கிடைத்த உணவை மற்ற உயிரினங்களோடும் பகிர்ந்துண்ணும் தமிழனின் பெருந்தன்மை அதில் தெரியும். உணவுச் சுழற்சி பற்றியும் சுற்றுச் சூழல் சமன்பாடு பற்றியும் அதிகம் பேசத் தெரியாத எங்கள் ஊர் விவசாயிகளின் இயற்கையைப் பற்றிய பட்டறிவு அதில் தெரியும். அதைப் பார்த்துத்தான் பாரதி காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடியிருக்க வேண்டும்.

பொங்கல் நெருங்க நெருங்க, எங்கள் ஊர்க் குளத்துக்குக் கூட்டம் அதிகமாக வரத் தொடங்கும். பாய் தலையணை உறை முதல், சட்டி, பானை இன்னும் என்னென்ன பொருட்கள் உண்டோ அத்தனையும் எடுத்து வந்து கழுவுவார்கள். சுண்ணாம்பு வாங்கி அவர்களே வீட்டுக்கு வெள்ளையடித்துக் கொள்வார்கள். வேலைக்கு ஆள் கிடைப்பது, அந்தப் பருவத்தில் சற்று சிரமான காரியம். அதனால் அவரவர் வீடுகளுக்கு அவரவர்களே வெள்ளை அடித்துக்கொள்ள வேண்டியது.

பொங்கலுக்கு முந்தைய நாள் வீட்டை நன்றாகக் கழுவி விட்டு மாவினாலும் சுண்ணாம்பாலும் கோலம் போடுவார்கள். திண்ணை வரை கூட கோலங்கள் அலங்கரிக்கும். புதுப் பானை, அகப்பை, காய்கறிகள், கிழங்குகள் முதலியவை முறத்தில் எடுத்து வைக்கப்படும். நெல்லை மாவட்டம் என்பதால் எங்களுக்குப் பனங்கிழங்கு மிகவும் முக்கியம். அதே போல் சிறு கிழங்கும். பனங்கிழங்காவது ஒரு சில இடங்களில் பார்த்திருக்கிறேன் ஆனால் சிறு கிழங்கு இது வரை வேறு எங்கும் என் கண்ணில் பட்டதில்லை. சிறு கிழங்கு என்பது வயல்களில் ஊடுபயிராக விளையும் ஒரு வகைக் கிழங்கு. உருளைக் கிழங்கு போலவே இருக்கும் ஆனால் மிகவும் சிறிதாக இருக்கும். ஒரு பையில் அவற்றைப் போட்டுக் கட்டி, சுவரில் லேசாக அடித்து அல்லது தேய்த்து அதன் தோலை உரிப்பார்கள். மிகவும் சுவையான இந்தக் கிழங்கு, பொரியல் செய்ய ஏற்றது.

Pongalபொங்கல் செய்வதற்கான அடுப்பும் சிலர் வீடுகளில் தயார் செய்வார்கள். மண்ணைக் குழைத்து நல்ல தடிமனான உருளைகளாக மூன்று செய்து, காய வைத்து, வெள்ளையடித்து வைத்திருப்பார்கள். அவைதாம் அடுப்புகள். அவற்றிற்குப் பொட்டு வைத்து, மஞ்சள் பூசிச் சூடம் காட்டிய பின் தான் ஏற்றுவார்கள். விறகடுப்பில்தான் பொங்கலிடுவார்கள்.

இந்தக் கிராமத்து நினைவுகளைப் பசுமையாக ஏந்திக்கொண்டு, என் கணவர் பின் ஒடிஸா சென்றேன். அவர்கள் மொழி, உணவு எதுவும் புரியாமல் கஷ்டப்பட்டாலும் அவர்கள் அன்பு புரிந்தது. புவனேஸ்வரில் சில தமிழ்க் குடும்பங்கள் இருந்தன. அதில் ஒரு சிலர், மிக உயர்ந்த அரசுப் பணிகளில் இருந்ததால் எங்களோடு நெருக்கமாக பழக முடியாத சூழ்நிலை. ஆனால் மற்றவர்கள் ஒருக்கொருவர் நெருங்கிய தோழர்களாய் இருந்தோம். அவர்களில் ஒரு அக்காதான், கோமதி அக்கா. அவள் கணவரும் என் கணவரும் நண்பர்களாக இருந்தது எங்களுக்கு உதவியாக இருந்தது.

அப்போது ஒரு முறை பொங்கல் நெருங்கி வரும் சமயத்தில் எனக்கு ஒரு (விபரீத?) ஆசை தோன்றியது. ஏன் கிராமத்தில் கொண்டாடுவது போல இங்கே பொங்கல் கொண்டாடக் கூடாது என்பதே அது. இந்த யோசனைக்கு என் கணவரிடமிருந்தும், கோமதி அக்காவிடமிருந்தும் பலமான வரவேற்பு. எனவே வரும் பொங்கல் தினத்தன்று எங்கள் வீட்டில் கிராமீய முறைப்படி கொண்டாடுவது என்று தீர்மானித்துப் பிரிந்தோம்.ஒடிஸாவில் பொங்கல் தான் கிடையாதே தவிர அந்த நாளை அவர்கள் மகர சங்கராந்தி என்று கொண்டாடுவார்கள். அங்கேயும் அப்போது தான் அறுவடை சமயம். அந்தத் தைரியத்தில்தான் நான் அந்த யோசனையே சொன்னேன்.

பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னேயே தேவையான பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கினேன். கிழங்குகள், காய்கறிகள் எல்லாம் எளிதாகக் கிடைத்துவிட்டன (சிறுகிழங்கையும் பனங்கிழங்கையும் தவிர). அடுத்து விறகு வாங்க வேண்டும். விறகுக்கு ஒடியாவில் என்ன சொல்வார்கள் என்று எங்கள் வீட்டில் வேலை செய்பவரோடு அரை மணி நேரம் சைகை மொழியில் போராடி அதைத் தெரிந்துகொண்டேன். “காட்டோ” என்பது தான் அந்த வார்த்தை. எனக்கு அது கட்டை என்ற தமிழ் வார்த்தை போலத் தோன்றியது. ஒடிய மொழியில் இது போல பல வார்த்தைகள் தமிழ் போல தொனிக்கும். இது குறித்து மேலும் உங்களுக்கு விவரம் வேண்டுமானால் ஒரிஸ்ஸா பாலு அவர்களைக் கேட்டால் நிறைய விவரங்கள் சொல்வார். நாம் நம் கதைக்கு வருவோம்.

விறகு எங்கே கிடைக்கும் என்று தெரிந்துகொண்டு (அதற்கு ஒரு அரை மணி போராட்டம்) அங்கே போனால், நம் ஊர் விறகுகளைப் பாதியாக வெட்டினால் எப்படியிருக்கும்? அது போல எல்லாம் வாமன விறகுகளாய் இருந்தன. அவற்றை எந்த அளவு வாங்குவது என்று தெரியாமல் திரு திருவென விழித்தேன். அந்தக் கடைக்காரரே உத்தேசமாக ஒரு நாலைந்து விறகைச் சணலில் சுற்றிக் கொடுத்தார். பின்னர் நெற்கதிர் வேட்டையில் இறங்கினேன். அதிருஷ்டவசமாக சட்டி பானைக் கடைக்குப் பக்கத்திலேயே நெற்கதிர்கள் அழகாகப் பின்னப்பட்டுக் கிடைத்தன. எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. கேட்ட விலையைக் கொடுத்து அதை வாங்கிக்கொண்டு பானையையும் தூக்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

பொங்கல் தினமும் வந்தது. கோமதி அக்காவும் அவர்கள் வீட்டுக்காரரும் அதிகாலையிலேயே மகளோடு எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். போதாக் குறைக்கு நாங்கள் பொங்கலிடும் அழகைப் பார்க்க அவர்கள் நண்பர் குடும்பம் விருப்பப்பட்டது என்று அவர்களையும் அழைத்து வந்திருந்தனர். அவர்கள் ஒடியாக்காரர்கள். நாங்களும் தயாராகக் காத்திருந்தோம். எனக்கு கொஞ்சம் உதறலாக இருந்தது. ஏனென்றால் எனக்கு விறகடுப்பு பற்ற வைக்கவே தெரியாது. ஆனால் அக்கா தைரியமாக இருந்ததைப் பார்த்து அவர்களுக்குத் தெரியும் என்று நினைத்தேன். இல்லை அவர்களுக்கும் தெரியவில்லை.

மண்ணெண்ணெய் ஊற்றினோம், பேப்பர் கொளுத்திப் பார்த்தோம், ம்ஹூம்! கொஞ்ச நேரம் எரியும் பிறகு புகையைக் கக்கும், ஆனால் எரியாது. பற்ற வைத்தோமோ! இல்லையோ! ஜம்பமாக பானையைத் தூக்கி வைத்து விட்டோம். எங்கள் போராட்டத்தைப் பார்த்து தெருவில் போவோர் வருவோரெல்லாம் எங்களைப் பார்த்து சிரித்தபடி கடந்து சென்றனர். சொல்ல மறந்து விட்டேனே! நாங்கள் பொங்கல் பானையை வீட்டு வாசலில் வைத்திருந்தோம். எங்களுக்கு அவமானமாக இருந்தது. என் கணவரும் அக்காவின் வீட்டுக் காரரும் தாங்கள் உதவுகிறோம் பேர்வழியென்று என்று மண்ணெண்ணெயைக் காலி செய்து விட்டார்கள். ஏதோ அவர்களால் முடிந்த உதவி.

என் மகளையும், அக்காவின் மகளையும் அனுப்பி, மண்ணெண்ணெய் வாங்கி வரச் சொன்னோம். அவர்களுக்கு ஒரே உற்சாகம். வாங்கி வந்த உடனே எப்போது “பொங்கலோ பொங்கல்” என்று கத்த வேண்டும் என்று கேட்டு நச்சரித்தனர். பானை போங்கும் போது “பொங்கலோ பொங்கல்” என்று சொல்ல வேண்டும் என்று சொன்னதை இருவரும் அப்படியே பிடித்துக்கொண்டு விட்டனர். எங்களுக்கு இருந்த ஆத்திரத்தில் ஆளுக்கு இரண்டு ரூபாய் கொடுத்து சாக்லேட் வாங்கிக்கொள்ளும்படி சொன்னோம். வேறு என்ன செய்ய?

Pongal

ஒரு வழியாக விறகு பிடித்துக்கொண்டது என்று நாங்கள் சந்தோஷப் படுமுன் விறகு மளமளவெனத் தீர ஆரம்பித்தது. பொங்கல் பொங்கியாக வேண்டுமே. அதனால் மறுபடி குழந்தைகளை அழைத்து, கொஞ்சம் காய்ந்த குச்சிகளைப் பொறுக்கி வரச் சொன்னோம். நாங்கள் குடியிருந்தது மரங்கள் அடர்ந்த புறநகர்ப் பகுதி. அதனால் காய்ந்த குச்சிகளுக்குப் பஞ்சமில்லை. குழந்தைகள் போட்டி போட்டுக்கொண்டு சுள்ளிகளைத் தேடி எடுத்து வந்தார்கள். என் கணவரும் அக்காவின் கணவரும் தலையில் அடித்துக்கொண்டார்கள். ஆன வரை போதும் பேசாமல் கேஸ் அடுப்பில் வைத்து விடுங்கள் என்று எங்களிடம் அழாத குறையாகக் கெஞ்சினார்கள். நாங்கள் முன் வைத்த காலை, பின் வைப்பதாய் இல்லை.

இதற்கு இடையிடையே பொங்கல் பார்க்க வந்திருந்த ஒடிய நண்பர்களிடம் விளக்கங்கள் வேறு அளித்தோம். ஏன், விறகுக்குப் பதிலாக காய்ந்த குச்சிகளை வைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு என்னை முந்திக்கொண்டு அக்கா, “பொங்கல் அப்போ நம்ம வீடு மட்டுமில்ல, நாம இருக்கற சுற்றுச் சூழலும் சுத்தமா இருக்கணும், அதனால தான்” என்று ஒரே போடாகப் போட்டார்கள். நாங்கள் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு “ஆமாம் சாமி” போட்டோம்.

கடைசியாக, பகல் ஒரு மணியளவில் பொங்கல் தயாரானது. நாங்கள் கேஸ் அடுப்பில் குழம்பு, பொரியல் முதலியவற்றைச் செய்திருந்ததால் நல்ல வேளை மதியச் சாப்பாட்டுக்கு இலை போட முடிந்தது. முதலில் விருந்தினர்களையும் குழந்தைகளையும் சாப்பிடச் செய்தோம். அவர்கள் பொங்கலைச் சுவைக்கும் போது எனக்குச் சங்கடமாக இருந்தது. ஆனால் ஆச்சரியமான ஆச்சரியம், அவர்கள் அதை மிகவும் ரசித்து உண்டனர். எங்களுக்காக அப்படிச் செய்கிறார்களோவென நினைத்து நான் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுப் பார்த்தேன். உண்மையிலேயே நன்றாக இருந்தது. அப்போதுதான் எனக்கு உறைத்து, நாங்கள் எதையும் சாமிக்குப் படைக்கவேயில்லை என்று. அவர்களோ சாப்பிட்டாகி விட்டது. இனி என்ன செய்ய? திருடனுக்குத் தேள் கொட்டியது போல அமைதியாக இருந்துவிட்டோம் நானும் அக்காவும்.

அதன் பிறகு எத்தனையோ பொங்கல்கள் வந்து போய்விட்டன. ஆனால்  விறகு அடுப்பில் பொங்கல் செய்யும் முயற்சியில் நான் இறங்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் என் கணவர் என்னை இறங்க விடவில்லை. ஆனாலும், ஒவ்வொரு பொங்கலின் போதும் இந்த நினைவுகள் அலை மோதுவதைத் தவிர்க்க முடியவில்லை. அக்காவின் கணவரின் வேலை காரணமாக அவர்கள் புவனேஸ்வரை விட்டு நீங்கினார்கள். நாங்களும் வேறு ஊர்களுக்குச் சென்று விட்டோம். அவர்களோடு தொடர்பு விட்டுப் போய்விட்டது. அவர்களும் என்னைப் போலவே கண்டிப்பாக நாங்கள் சேர்ந்து கொண்டாடிய பொங்கலை நினைவு கூர்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நகரங்களில் வாழும் குழந்தைகளுக்கு நம் பாரம்பரிய முறை பொங்கல் கொண்டாட்டங்கள் தெரியவேயில்லை. பொங்கல் என்பது இப்போது மற்றுமொரு தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான நாளாக மாறி வருகிறது. அந்த எண்ணத்தை மாற்ற, ஒவ்வொரு பெற்றோரும் முயல வேண்டும். அது அவர்களது கடமை. இந்த முறை தமிழ்நாட்டில் நாங்கள் பொங்கல் கொண்டாடப் போவதால் அடுப்புக் கூட்டி பொங்கலிட நினைத்துள்ளேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் கேஸ் அடுப்பில் செய்யவா? விறகடுப்பில் செய்யவா என்ற கேள்வியை உங்கள் முன் நிறுத்தி விட்டு, நிலவொளியில் ஒரு குளியல் போடப் போகிறேன்.

(மேலும் நனைவோம்…

==========================

படங்களுக்கு நன்றி : விக்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “நிலவொளியில் ஒரு குளியல் – 12

  1. நெல்லை மாவட்டத்தில் பொங்கலைச் சிறப்பாக எப்படி கொண்டாடுகிறார்கள் என்று அழகாக எடுத்து உரைத்ததற்கு நன்றி. வாழ்த்துகள்.

  2. பொங்கல் பண்டிகை பற்றி நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள். புவநேஸ்வரில் பொங்கல் பண்டிகை கொண்டாடியது மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது.

  3. Very interesting article. Really enjoyed reading the same. My best wishes for continued writing

  4. அட.. பொங்கல் கொண்டாடியதை மிக அழகாகச் சொல்லியிருக்கீங்க. அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.