கடவுளும் சில சந்தேகங்களும்
குமரி எஸ். நீலகண்டன்
‘கடவுள் என்று
ஒருவர் இருக்கிறாரா?’
கேட்டேன் நண்பனிடம்.
‘இல்லவே இல்லை’
என்றான் அழுத்தமாக…
அடுத்து நான்
தொடர்ந்தேன்
சில கேள்விகளோடு…
உலகில் எறும்புகளின்
வாயில் தேள்
கொடுக்கு இருந்தால்..
‘வானில் பறவைகளாக
முதலைகள் பறந்தால்..
கொசுக்கள் மூலமாக
எய்ட்ஸ் பரவும் என்றால்…
காற்றின் வழியாக
மின்சாரம் கடந்து செல்லுமானால்…
பல்லிகளின் வாயில்
பாம்பின் விஷமிருந்தால்…
நாம் நினைப்பதெல்லாம்
மற்றவர்களின் காதில்
கேட்குமென்றால்…
நிலத்தினடியில்
நீருக்குப் பதில்
பெட்ரோலே இருந்தால்..
இப்படி நான்
கேள்விகளைத்
தொடரத் தொடர அவர்,
‘விடுங்க சாமி…
கடவுள் இருக்கிறார்
இருக்கிறார்’ என்று
கூறிவிட்டு ஓடிவிட்டார்.
எனது கேள்வி
‘அவரது பதிலினுள்
கடவுள் இருக்கிறாரா?’
என்பதுதான்.
நல்ல கவிதை