ரசனையும், சொல் நயமும் தோய்ந்த பாடல்களில் எந்நாளும் வாழ்பவர்

0

அஞ்சலி: கவிஞர் வாலி

ரசனையும், சொல் நயமும் தோய்ந்த பாடல்களில் எந்நாளும் வாழ்பவர்

vaali 2

எஸ் வி வேணுகோபாலன்

ஆனைக்கட்டித் தெரு ரவி தான் எனக்கு முதன்முதலில் கவிஞர் வாலியின் கவிதை ஒன்றை ரசனையுடன் வாசித்துக் காட்டியது. கண்ணதாசனையும், வாலியையும் திரைப்படப் பாடல்கள் மூலமாக மட்டுமே அறிந்திருந்த எனக்கு, ரவி தான் அவர்களைக் கவிஞர்களாக அடையாள படுத்தியது. என் அண்ணனுடைய கல்லூரித் தோழர் அவர் (இப்போது எங்கே இருக்கிறீர்கள் ரவி ?). எட்டாம் வகுப்பு படிக்க நான் காஞ்சிபுரம் செல்ல நேர்ந்த அந்தக் காலம் எனக்கு நிறைய இலக்கிய வாசல்களைத் திறந்து வைக்கத் தொடங்கியது. எழுபதுகளில் குமுதம் இதழில் வாராவாரம் கண்ணதாசனும், அதே நேரத்தில் ஆனந்த விகடனில் வாலியும் கவிதை எழுதிக் கொண்டிருந்தனர். முச்சங்கப் புலவர் முதல் முந்தா நாள் புலவர் வரை என்று தொடங்கிய வாலியின் நான் என்ற தலைப்பிலான கவிதை ஓர் அருமையான அறுசீர் விருத்தம். கிளிப் பொருத்திய அட்டை ஒன்றைக் கையில் வைத்தபடி சிந்தனை முகமாக உட்கார்ந்திருக்கும் வாலியின் புகைப்படம் இன்றும் என்னுள்ளத்தில் பொருந்தியிருக்கிறது. .ஆனால், வாலி, மக்கள் மத்தியில் திரைப்படப் பாடல்களால் தான் பிரபலமாக அறியப்பட்டிருந்தார். வாலியின் மறைவு சாதாரண மக்களையும் பேச வைப்பது அதனால் தான்..

ஐந்து பத்தாண்டுகள். பத்தாயிரத்திற்கு அதிகமான பாடல்கள். எத்தனையோ நடிக நடிகையருக்காக, எத்தனையோ இசையமைப்பாளர்களுடன் அமர்ந்து எத்தனையோ பாடகர்கள் குரல் வழி தமது அனுபவத்திலிருந்தும், கற்பனையின் வெளிப்பாடாகவும் விரிந்த அவரது பாடல் உலகம் திரை இசைப் பாடல்கள் குறித்த ஆய்வுகளில் தவிர்க்க முடியாத இடத்தில் .இருக்கிறது. குறும்பும், நையாண்டியும் நிறைந்த பாடல் வரிகள் முதற்கொண்டு காதல், கொண்டாட்டம், சோகம், தனிமை என பல வித உணர்வுகளையும் தத்தகாரம் என்று சொல்லப்படும் திரை இசை மெட்டுக்குள் கொண்டு வந்தவர் அவர். இனிமையும், உருக்கமும், வேகமும், எழுச்சியும் இசையமைப்பாளரின் திறமை, கற்பனை, இசைக் கலைஞர்களின் உழைப்பு என்றிருந்தாலும் பாடல்களைக் காலம் கடந்து நிற்கச் செய்வதில் பாடல் வரிகளுக்கு முக்கிய இடம் இருக்கிறது. சாதாரண மக்கள் மனத்தில் நிலைத்து நிற்க வேண்டுமானால் அசாத்திய எளிமையும் வேண்டியிருக்கிறது. கருத்தும் பளிச்சென்று வந்து விழுந்தாக வேண்டும். இந்தத் திறன் பெற்றவர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்க முடிகிறது. இதில் வாலிக்கு தவிர்க்க முடியாத தனியிடம் இருக்கவே செய்கிறது. தான் இயற்கை எய்தும் காலம் வரை அவருக்கு அந்த ஆற்றல், ஒருங்கிணைப்பு, ஒத்திசைவான உளவியல் வாய்த்திருந்தது என்பது முக்கியமானது.

எம் ஜி ஆரின் ஒரு முழு படத்திற்கு அத்தனை பாடல்களையும் எழுதி அவை வெற்றி பெற்றது வாலியை முக்கிய கவிஞராக அடையாளப்படுத்தியது. அந்தப் படம் படகோட்டி. ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார், ஒவ்வொரு நாளும் துயரம், ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் என்ற வரிகளின் நுட்பம் அசாத்தியமானது. எம் ஜி ஆர் தனது படங்களில் பாடலுக்கு தனி கவனத்தை எடுத்துக் கொள்வார் என்பது எல்லோரும் அறிந்தது. இந்த சமூக தாக்கத்தை அவர் வாலியிடம் கண்டெடுத்ததை அடுத்தடுத்து தமது படங்களில் இடம் பெறச் செய்து கொண்டார். சிவாஜி நடித்த பாபு படத்தின் புகழ் பெற்ற இதோ எந்தன் தெய்வம் என்பது வாலியின் அருமையான பாடல்களில் ஒன்று. அதிலும் அவர் தி மு க வின் ஏழையின் சிரிப்பில் இறைவன் என்ற முழக்கத்தை கடைசி சரணத்தில் கொண்டு வந்திருப்பார்.

அதே பாபு படத்தில் இன்னொரு பாட்டு. வரதப்பா கஞ்சி வரதப்பா என்பது பழைய காலத்து மடக்கணி சரக்கு..அதைப் பல்லவியாகக் கொண்டு சிவாஜி நடித்த பாபு திரைப்படப் பாடல் ஒன்றை எழுதியிருப்பார் வாலி. அந்தக் காலத்தில் கூடையில் கேரியர்களை (பம்பாய் டப்பாவாலா போல) எடுத்து வரும் பெண் பாத்திரத்தை முன்வைத்து அந்த வீதி நடனப் பாடல். கஞ்சி கலயம் தன்னைத் தலையில் தாங்கி வஞ்சி வரதப்பா என்று தொடரும் பல்லவி.

அதன் ஒரு சரணத்தில் இப்படி வரும்:

குலாம் காதர் புலாவிலே கறி கெடக்குது – அது
அனுமந்தராவ் அவியலிலே கலந்திருக்குது
மேரியம்மா கேரியரில் எறா இருக்குது – அது
பத்மநாப அய்யர் வீட்டுக் குழம்பில் மிதக்குது

சமையல் எல்லாம் கலக்குது – அது
சமத்துவத்தை வளர்க்குது

சாதி சமய பேதமெல்லாம்
சோத்தைக் கண்டா பறக்குது – ஆமாம்
சோத்தைக் கண்டா பறக்குது

பல வித்தியாசமான பாடல்களை திரைப்படங்களுக்காக எழுதியவர் வாலி. புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ( இரு கோடுகள் ) பாடல் ஓர் ஆணின் வாழ்வில் ஒருவர் அறியாமல் மற்றவர் இடம் பெற்றுவிடும் இரு பெண்களின் குரலாக ஒலித்தது. சக்கை போடு போடு ராஜா (பாரத விலாஸ்) மனசாட்சியோடு பேசித் திண்டாடும் நாயகனின் பாடல். மௌன ராகம் படத்தின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு தன்மையில் அமைந்திருந்தது. மணமுடித்தவனோடு மனம் பொருந்தி இல்லறம் காண முடியாது தவிக்கும் பெண்ணும், அவளைப் புரிந்து கொள்ள இயலாது தத்தளிக்கும் ஆணுமான பாத்திரப் படைப்புக்கு (மன்றம் வந்த தென்றலுக்கு, நிலாவே வா ) வாலியின் பாடல்கள் மிகப் பெரிய அளவில் மதிப்பு கூட்டியிருந்தன. அபூர்வ சகோதரர்கள் படத்தின் பாடல்கள் அனைத்துமே வேகம் பொருந்திய ரசனையில் வெற்றி பெற்றவை என்றாலும், உன்ன நெனச்சு பாட்டப் படிச்சேன் என்ற சுய கழிவிரக்கப் பாடல் தனித்துவம் வாய்ந்தது.

திரைப்படப் பாடல்களில் பல்லவி சரியாக அமைவது மிக மிக முக்கியமான அம்சம். கண்ணதாசன், வாலி இருவரின் பெருமைக்குரிய விஷயம் இந்தப் பல்லவி. பத்ரகாளி படத்தில் ஜேசுதாஸ், பி சுசீலா குரல்வழி சிறப்பு பெற்ற வாலியின் “கண்ணன் ஒரு கைக் குழந்தை” பாடலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அந்த மெட்டு அப்படி. எல்லா வரிகளையும் இந்த முதல் வரியில் வரும் சொற்களைக் கொண்டே தாள லயத்திற்குப் பிசகின்றிப் பாடிவிட முடியும். பூக்காரி படத்தில் முப்பது பைசா மூணு முழம் என்று ஒரு பல்லவி வரும். பத்து பைசா ஒரு முழம் என்று பாடிப் பாருங்கள். கணக்கு தான் சரியாக வரும். மெட்டு ஓடிவிடும். அதே போல் பூக்காரப் பெண்கள் விரைந்து விற்றுத் தீர்க்க எப்படி சொல்லி வாடிக்கையாளரை அழைப்பார்களோ அந்த சங்கதியும் இந்தப் பல்லவியில் இருக்கிறது. பூக்காரப் பெண்ணிடம் வம்பு செய்ய ஆட்கள் இருப்பதும், அவள் அதற்கு சரியான பதிலடி கொடுப்பதும் அந்தப் பாடலில் உண்டு. அதன் கடைசி சரணத்தில் அரசியலும் இருக்கிறது (இந்தா தம்பி செந்தாமரைப் பூ, இருக்கிற துட்டை நீ போடு. நம் கண்ணாயிருந்து நெஞ்சில் நிறைந்த அண்ணா சிலைக்குப் பூ போடு என்ற வரிகளின் சந்தமும், எளிமையும் கவனிக்கத் தக்கது).

எம் ஜி ஆர் தனிக்கட்சி தொடங்கிய நேரத்தில், மு க முத்து திரையுலகில் நுழைந்தபோது அதை மனத்தில் வைத்து அவருக்காக எழுதப் பட்ட வரிகள் உள்ளிட்டு வாலியின் பாடல்கள் பலவற்றில் அரசியல் வாடை வீசும். ஜெயசங்கர் படத்தின் பாடல் ஒன்றில், ராமரை வருணிப்பது போல், முழுக்க முழுக்க எம் ஜி ஆர் புகழ் பாடும் ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா என்ற பாடலும் வாலி தான் எழுதியிருக்க முடியும். திரைப்படங்கள் சிலவற்றிற்கு வசனமும் எழுதியிருக்கும் வாலி, கலியுகக் கண்ணன் படத்தில் தேங்காய் சீனிவாசன் கடவுளைப் பார்த்துக் கேள்வியாகக் கேட்கும் ஓரிடத்தில் “ஓய் உமக்கு கருணாநிதின்னு பேரு வச்சது சரிங்காணும், எல்லாக் கேள்விகளுக்கும் ரெடிமேடா பதில் வச்சிருக்கீர் என்று எழுதியிருப்பார். மேடை நாடகங்களும் எழுதியிருக்கிறார் வாலி. அவரது சம்பூர்ண ராமாயணம் என்ற சமூக நாடகத்தில், புராண பாத்திரங்களும் வருவார்கள். அனுமன், ராமனைப் பார்த்து ஏ டி எம் கே ராமச்சந்திரா என்று அழைப்பார். ராமன் அதிர்ந்து போய் என்ன இது அரசியல் என்பார். அதில்லை, நீங்கள் அயோத்தியாவின் தசரத மகாராஜாவுக்கும் கவுசல்யாவிற்கும் பிறந்தவர் தானே, உங்கள் இனிஷியலைத் தான் அப்படி சொன்னேன் என்பார். அரங்கம் அதிரும். கவியரங்க மேடைகளிலும் அவரது அரசியல் வெடிகள் பிரசித்தம்.

திரையுலகில் கண்ணதாசன், வாலி இருவருக்குமான பொற்காலம் ஒன்று பகிர்ந்து கொள்ளப் பட்டிருந்தது. தொலைக்காட்சிப் பெட்டியோ, கணினியோ வந்து சேராத – ரசிகர்கள் வானொலிக்கு மிகவும் கடன்பட்டிருந்த அந்த காலத்தில், சிவாஜி-எம் ஜி ஆர் படங்களை வைத்து விவாதங்களும், முரண்பாடுகளும், விளையாட்டுச் சண்டைகளும் நடந்தது போலவே, இந்த இரு கவிஞர்களின் பாடல்களை வைத்தும் ஒரு தளத்தில் அப்படியான சர்ச்சைகள் நடப்பதுண்டு. யார் எந்தப் பாடல் எழுதியது என்பதில் கருத்து மாறுபாடுகளும் தோன்றிவிடும். இதயத்தில் நீ படத்தில் வாலி எழுதிய உறவு என்றொரு சொல் இருந்தால் பிரிவு என்றொரு பொருள் இருக்கும் என்ற பாடலும் (பழகி வந்த புதிய சுகம் பாதியிலே மறைந்தாலும் என்று தொடங்கும் அதன் தொகையறா (?) சிறப்பாக இருக்கும்), கண்ணதாசன் எழுதிய ஆனந்த ஜோதி படத்தின் நினைக்கத் தெரிந்த மனமே என்ற பாடலும் ஒன்றே போல் மயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய உணர்வுகளை உள்ளடக்கியவை.

வாணி ஜெயராம் என்ற அற்புதமான பாடகியை தமிழ்த் திரை இசையில் எம் எஸ் வி அறிமுகம் செய்த மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ பாடல் வாலியின் இனிய பாடல்களில் ஒன்று. நானே நானா யாரோ தானா (அழகே உன்னை ஆராதிக்கிறேன்), என் கல்யாண வைபோகம் உன்னோடுதான், மல்லிகை முல்லை பூப்பந்தல் (அன்பே ஆருயிரே) போன்ற பல பாடல்களை வாணி பாடினார். இசை ராகங்கள் குறித்து வாலிக்கு ஞானம் இருந்தது அவரது பாடல்களில் அப்படியே வந்திறங்குவதைப் பார்க்க முடியும். நீ ஒரு ராக மாலிகை என்ற பாடலில் பல ராகங்களின் பெயரை அத்தனை ரசமாக வருணிப்பின் வரிகளுக்குள் வாலி.

எப்போதும் சத்தமாகப் பாடும் எல் ஆர் ஈஸ்வரி, ‘காதோடு தான் நான் பாடுவேன்’ என்று மெல்லிய குரலில் பாடிய அந்தப் பாடல் வாலி எழுதியது. அது இடம் பெற்ற வெள்ளிவிழா படத்தில் அதன் இசை அமைப்பாளர் இன்னொரு சாதனையும் செய்தார். தனது இசையமைப்பில் வேறு ஓர் இசை அமைப்பாளரான எம் எஸ் விஸ்வநாதனைப் பாடவைத்தார். எம் எஸ் வி பாடிய உனக்கென்ன குறைச்சல் என்ற அந்த அருமையான பாடலில், தனிமையை இப்படி விவரிப்பார் வாலி: கடந்த காலமோ திரும்புவதில்லை. நிகழ் காலமோ விரும்புவதில்லை. எதிர்காலமோ அரும்புவதில்லை. இது தானே அறுபதின் நிலை. ஆனால் இளமை நம்பிக்கை துள்ளும் மடை திறந்து பாடலில் (நிழல்கள் – எஸ் பி பாலசுப்பிரமணியன்) நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம், இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம், வருங்காலம் வசந்த காலம் என்று எழுதியிருப்பார் அவர்.

திரைக்கதையை பாடல்களில் சொல்லிவிடுவது வேறெங்கும் கிடையாது என்று ஒரு முறை எழுத்தாளர் அசோகமித்திரன் குறிப்பிட்டார். அதை அத்தனை கச்சிதமாகச் செய்ததில் வாலியும் ஒருவர். தசாவதாரம் படத்தின் ‘கல்லை மட்டும் கண்டால்’ பாடலில் சைவ வைணவ முரண்பாடுகளைக் கருவாகக் கொண்ட அடிப்படை விஷயத்தைக் கொண்டு வந்திருப்பார். ஆனால் மதங்களைக் கடந்து நேசிக்கும் மனம் அவருக்கு இருந்ததை அவரது எழுத்துக்களிலும், பேச்சுக்களிலும் அவர் வெளிப்படுத்தி வந்ததுண்டு. நீ இல்லாத இடமே இல்லை என்று தொடங்கும் அல்லா அல்லா என்ற பிரபல பாடல் அவர் எழுதியது தான்.

அவரது “அம்மா” என்ற கவிதை தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் கி வா ஜகந்நாதன், சிருங்கார ரசம் என்பது கத்தியில் நடப்பதைப் போன்றது, பாரதி எழுதியதையே வ ரா விமர்சித்திருப்பார். அவர் இந்த தொகுப்பைப் பார்த்தால் வாலியின் சில கவிதை வரிகளை என்ன சொல்வார் என்று எழுதியிருந்ததாக நினைவு. கவிதையை விடவும், திரைப்படப் பாடல்களில் வாலி எத்தனை விரசமாகவும் எழுதித் தர சித்தமாக இருந்தார். கொச்சையான ரசனை தூண்டும் வரிகளையும், வலிய எழுதித் தள்ளிய வெற்று அடுக்குமொழி சொற்கள் நிரம்பிய கவிதைகளையும் வாலி மிக இலகுவாக தவிர்த்திருக்க முடியும். அத்தனை அனுபவ மொழியும், சொல் வளமும் அவருக்கு வாய்த்திருக்கவே செய்தது. தாள லயமும், சந்தமும், சொல் நயமும், இலக்கிய வாசிப்பும் அவருக்குக் கை கூடியிருந்தது. ஆனாலும் அவர் அப்படியான பாடல்களில் ஒரு போதை உருவாக்கிக் கொண்டார்.

நான் என்ற அவரது கவிதையில் ஓரிடத்தில், உள்ள வயல் நெடுக உணர்வென்னும் ஏர் கொண்டு/ மெல்ல உழுதுவிட்டு மேவுகின்ற கற்பனையாம்/ நல்ல விதை தூவி நற்கவிதை பயிராக்க/ வல்ல புலவர்தம் வரிசையிலோர் உழவன் நான் என்று சொல்லியிருப்பார். 82 வயதில் அவர் மரணமுற்ற போது, இன்றைய தலைமுறையினர் அவரை அறிந்திருக்கும் வியப்புக்குரிய விஷயம், அவரது தொடர்ச்சியான எழுத்தினால் மட்டும் சாத்தியமானது அல்ல, மறக்க முடியாத வரிகளில் இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் அவரது பழைய பாடல்களில் அவரது திறமையின் வேர்கள் ஊடோடி இருப்பது தான் காரணம். அதைவிடவும் முக்கியமானது, தமது வாழ்நாள் முழுக்க தமக்குப் பேரும் புகழும் வாய்த்திருந்தாலும், கர்வம் ஓங்கிவிடாது மற்றவர்களைப் பற்றி உன்னதமாகவும், மேலான சொற்களிலும் மதித்துப் பேசிவந்த அவரது வாழ்க்கை அறமும் கவனிக்கத் தக்கது. ரசனையும், சொல் நயமும் மிக்க பல வித்தியாசமான பாடல்களை திரை உலகுக்குத் தந்த வாலியின் நினைவுகள் நலம் வாழ எந்நாளும் நல்வாழ்த்துக்கள் (மறுபடியும்) !

***************
நன்றி வண்ணக்கதிர் ஆகஸ்ட் 4, 2013

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *