‘அப்பச்சி’ முப்பது / காமராசருக்கு ஒரு வெண்பா மாலை- பாகம் 2

0

காமாராஜ்

இலவசக் கல்வி :

கல்வித் தரமுயர்த்தி ’எல்லோர்க்கும் பள்ளியில்

கல்வி இலவசம்’ என்றாக்கும் சட்டத்தால்

கல்லாமை என்பதை இல்லாமல் ஆக்கிட

நல்லதாய்க் கண்டார் கனவு.                          (11)

 

கல்வித் தந்தை :

போதிய நூலகம் ஆய்வகம் பள்ளிக்கும்,

ஊதியம் கூடுதல் ஆசிரியர்க் கும்கொடுத்தார்;

கல்லூரி கள்பலவும் தந்தார்; தமிழகக்

கல்வியின் தந்தை அவர்.                             (12)

 

அறிவொளி இயக்கத்தின் முன்னோடி :

படிப்பறிந்த ஒவ்வொரு மாணவரும் நாட்டில்

படிக்காத மூத்தவர் ஐவரைத் தேர்ந்து

படிப்பறிவுக் கற்றுத் தரவேண்டும் என்றார்;

படிக்காத மேதை அவர்.                               (13)

 

கிங் மேக்கர் :

பிரதமர் ஆகும் பெரும்வாய்ப்பு வந்த

இருமுறையும் மற்றவரை அப்பதவி ஏற்கவைத்த

எங்கள் தலைவருக்கு மட்டும் பொருந்துமாம்

’கிங்மேக்கர்’ என்ற பெயர்.                            (14)

 

அப்பச்சி :

விருதுநகர் சொந்தங்கள் வீழ்த்தியது அம்பால்;

குமரியின் பந்தங்கள் வாழ்த்தியது தம்அன்பால்;

’அப்பச்சி’ என்றழைத்து தில்லிக்(கு) அனுப்பினர்

கட்சிப் பிரிவை மறந்து.                               (15)

 

தலைமையின் பெருமை :

காலில் விழுந்தால் கடும்கோபம் தான்கொள்வார்;

பாலில் விழுமோர்த் துளிவிசம் என்பார்;

உறவுக்கும் கூடப் பரிந்துரைக்க மாட்டார்;

அரிய மனிதர் அவர்.                                  (16)

 

துறவி :

முதலில் ’விடுதலை தான்வரட்டும்’ என்றார்;

’முதிர்கன்னி யர்கரை சேரட்டும்’ என்றார்;

திருநாட்டை முன்னேற்ற முன்நின்(று) உழைத்தார்

திருமண வாழ்வைத் துறந்து.                          (17)

 

குழந்தை மனம் கொண்டவர் :

சற்றேனும் ஓய்விருந்தால் நள்ளிரவு என்றாலும்

குற்றாலக் கொட்டும் அருவியில் நின்றிடும்;

நீச்சத்தண் ணீர் தா எனக்கேட்டு வாங்கிடும்;

கூச்சமில்லாப் பிள்ளை அவர்.                         (18)

 

படிக்காத மேதை :

ஆறாம் வகுப்பளவு தான்படிப்பு; ஆனாலும்

ஆறாய்ப் பெருகிடும் ஆங்கிலத்தில் வாதங்கள்;

எள்ளி நகைப்போரும் ஏமாற; அற்புதமாய்த்

துள்ளி விளையாடும் நாக்கு.                          (19)

 

தலைவர் வாக்கு :

’கிராமத்தின் முன்னேற்றம் நாட்டின்முன் னேற்றம்;

கிராமத்தை முன்னேற்ற காந்தியைப்பின் பற்று;

பகட்டகற்று; ஏழ்மை விரட்டிவிடு; பண்பைப்

புகட்டு!’;இது அப்பச்சி வாக்கு.                         (20)

 

தொடரும் ………………..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *