இந்த வார வல்லமையாளர் !

திவாகர்

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுபதினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம்’.

என்றொரு அழகான அர்த்தமுள்ள பாடலை சீர்காழியின் கணீர் குரலில் கேட்டிருப்பீர்கள். அடுத்தவர் நலமாக வாழவேண்டும் என்று எத்தனை பேர் நினைக்கிறோமோ, அந்த நினைப்பிலேயே ஒரு தனி இன்பம் கிடைப்பதை அப்படி நினைப்பவர்கள் அறிவார் என நினைக்கிறேன்.

சுயநலம் இந்த உலகைப் பெரிதும் புகைமண்டி சூழ்ந்துள்ள இந்தக் கால கட்டத்தில் அதைக் குழலெடுத்து ஊதிக் குறைப்பது என்பது சாதாரணமல்ல. சுயநலப் போக்கு இந்த உலகை விட்டு அவ்வளவு சீக்கிரத்தில் விரட்டமுடியாது. அப்படித்தான் நினைக்கிறேன். அதே வேளையில் இந்த நகராத பிசாசை எப்போதும் நகர்த்திக்கொண்டே இருக்க நாம் முயலவேண்டும். சுயநலம் நீக்கி பொது நலம் பார்க்க முதலில் மனதில் உறுதி வேண்டும். அந்த உறுதி நிலைத்து நிற்க வேண்டும். முடிவே இல்லாத நிலையில் இந்த முயற்சி இருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும் அந்த முயற்சியின் நன்மை நாளாக நாளாகப் பலரைச் சென்றடையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லைதான்.

இப்படி பொதுநலனுக்காக எதைத் தேர்ந்தெடுத்துச் செய்வது என்பதில் கூட சிலருக்குக் குழப்பம் வரலாம். ஏற்கனவே மேற்கண்ட பாட்டில் சொன்னது போல ‘அடுத்தவர் நலத்தை நினைத்தாலே போதும்’ இதுவும் கூட பெரிய பொதுநலம்தானே. இப்படி அடுத்தவர் நலத்தை நினைப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்தவர் நலத்துக்காக நாளும் தியானம் செய்து அந்த தியானத்தை செய்தி மூலமாக பரப்பி வருகிறார் ஈரோட்டைச் சேர்ந்த திரு முத்துசுவாமி அவர்கள். இவர் இந்திய ஆட்சித்துறையில் ரெவின்யூ துறையில் ஆணையராகப் பணி புரிந்துகொண்டே மற்றவர்கள் நலத்துக்காக தினம் சில மணித் துளிகள் ஒதுக்கி பிரார்த்தனை செய்கிறார். அவர் தினம் தரும் செய்தி என்ன தெரியுமா?

“வாழ்க வளமுடன், வாழ்க வையகம்!” உங்களுக்கு எல்லா வகைச் செல்வங்களும் வளங்களும் வந்து சேரவேண்டும், உங்கள் வாழ்வு எல்லோருக்கும் வழிகாட்டும் வகையில் ஒளி மிகுந்ததாக இருக்கவேண்டும். இதுவே எங்கள் பிரார்த்தனை”

இந்தப் பொதுநலப் பிரார்த்தனையை இன்று நேற்றல்ல, பல்லாண்டுகளாக செய்து வருபவர் திரு முத்துசாமி அவர்கள். எனக்காகவும் உங்களுக்காகவும் பிரார்த்தனை செய்யும் இவர் போன்றவர்களின் பிரார்த்தனையில் நமக்கு நல்லதே விளைகிறது. மேற்கண்ட பாடல் சொல்வது போல திரு முத்துசாமி அவர்களுக்கு என்றும் (நித்தியம்) சுபதினம்தான். மற்றவர் நலத்தை நாடும் திரு முத்துசாமி அவர்கள் வல்லமைக் குழுவினர் சார்பாக இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். என்றும் சுபதினத்தைக் கொண்டாடும் திரு முத்துசாமியின் வழியில் நாமும் செல்வோம். திரு முத்துசாமி அவர்களுக்கு நாமும் சொல்லிக்கொள்வது “வாழ்க வளமுடன்”

கடைசி பாரா: இன்னம்பூராரின் செல்லக் காதல் கடிதத்தில் முகவுரை

அன்பே, ஆரமுதே,
ஆயிரம் அடைமொழி மணிமொழியே,
பிரியமானவளே, காதலியே,
தலைவியே, செல்லமே,
என் கண்ணின் கருமணியே,
ஸலபஞ்சிகே! கழுதே !

1 thought on “இந்த வார வல்லமையாளர் !

  1. ஸலபஞ்சிகே}  என்ன் பொருள் திவாஜி. பெரியவரின் வார்த்தைகள் ஜாலம் வியப்புற வைக்கிறது

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க