மீ.விசுவநாதன்

vallamai111-300x150111111111

கையேந்தும் கீழ்மை கடவுளே ஆனாலும்
மெய்சுருங்கச் செய்யும் ! மிகவுமே பொய்கூறத்
தூண்டும் ! எளிமை துலங்க இருந்தாலே
வேண்டும் வழிதிறக்கு மே. (171) 19.06.2015

பிறர்குறையைக் கூறும் பிழையை மனமே
மறந்தும் புரியாதே மாற்றாய் நிறையைப்பார்!
நிச்சயம் நட்புவரும் நீங்காத அன்புவரும்!
நச்சிலா நாட்கள் நலம். (172) 20.06.2015

சத்குரு நாதர் சரணமே சாந்திக்கு
வித்திடும்! பெற்ற வினைகளை மொத்தமாய்
ஞானச் சுடரால் நசுக்கிடும் கண்களே
போனஜென்ம புண்ணியப் பூ. (173) 21.06.2015

பூவாய் மணம்பரப்பி பூமியில் வந்ததற்கு
நா,வாய் மணம்பரப்ப நல்லதாம் தேனாய்
மொழிபேசி சுற்றம் முழுதும் களிப்போம்!
விழியே கருணையின் வேர். (174) 22.06.2015

நல்லதும் கெட்டதும் நம்முடைய நெஞ்சத்தை
சல்லடை போட்டுச் சலிக்கிற வல்லோன்
விளையாட்டு ! அந்த விளையாட்டே நல்ல
தளைதட்டா வெண்பா தரம். (175) 23.06.2015

பிறரையே நிந்தனை பேசுகிற நேரம்
இறையையே வந்தனை என்னும் முறையாய்
இனிய பொழுதாக இப்பொழுதே மாற்று ;
இனிவரும் காலம் இதம். (176) 24.06.2015

அப்பாவாய் அம்மாவாய் ஆனந்த மானவளை
எப்போதும் என்துணை என்றாலும் தப்புண்டோ ?
நித்தமும் நல்ல நிறைவோடு வாழட்டும்
அத்தனை நல்லா(ள்) அவள். (177) 25.06.2015

கண்டேன் குருவை கருணைக் கடலைத்தான் !
கொண்டேன் அவருருவும் , குணத்தையும் உண்டே
உயிரினில் வைத்தேன் ! ஒருபொழு தேனும்
பயிர்வைப்பேன் ஞானப் பழம். (178) 26.06.2015

(பெங்களூரில் முகாமிட்டிருந்த
“சிருங்கேரி ஜகத்குரு நாதர்களை”
தரிசனம் செய்து விட்டு வந்து எழுதியது)

காடும் மலையும் கடலும் நதியுமுடன்
வீடும் வசதியும் வீதியி(ல்) ஆடும்
கலையும் பெருமையா ? கட்டாய(ம்) இல்லை ;
விலையிலா தேசபக்தி மேல். (179) 27.06.2015

ஆற்றிலே நீராடி அச்சாக நீரிட்டு
போற்றுகின்ற பாடல்கள் பூராவும் நோற்றாலும்
சீற்றத்தால் கொஞ்சூண்டு சீறினாலே தெய்வாம்சம்
காற்றாலே வீசிவிட்ட கல். (180) 28.06.2015

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *