வீசு தென்றலே வீசு …
— கவிஞர் காவிரிமைந்தன்.
கே.வி. மகாதேவன் அவர்களின் இசையில் உருவான கானங்கள் தேவாமிர்தம் வகையைச் சார்ந்தவை! பொன்னித் திருநாள் திரைப்படத்தில் இடம்பெறும் இப்பாடலை எழுதியவர் புத்தனேரி சுப்பிரமணியம். பி.பி.ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா இணைந்து பாடும் இன்பகீதம்.
ஏழு ஸ்வரங்களுக்குள் இத்தனைப் பாடல்களா என்று வியக்க வைக்கும் இசை.
ஆண் முகம் காணும் பெண்
மனம் நாணம் அடைவதும் ஏனோ
அதிசயம் தானோ
ஆண்மையை வெல்லும் நாணமே
எங்கள் அணிகலம் அதுவே
துணை பலம் அன்றோ
பெண்ணின் மாண்பைக் காட்டும் குணங்களைத் தொட்டுக்காட்டி, கவி வண்ணம் தந்திருக்கும் கவிஞரும் அதற்கேற்ற இசையமைத்து நம் நெஞ்சங்களை அள்ளும் இசை அமைப்பாளர், காதில் தேனைக் கொண்டு வந்து சேர்க்கும் குரல்களும் இப்பிறவியில் நாம் பெற்ற இன்ப வரங்கள்!
திரையில் தோன்றும் முகத்தில் ராஜ சுலோச்சனா அவர்களை அறிய முடிகிறது. அது யார் உடன் தோன்றும் நாயகன்? விடை தருகிறார் வேம்பர் மணிவண்ணன்… வளையாபதி முத்துக்கிருஷ்ணன் என்பவராம்.
பாடலில் இன்பம் வழிகிறது. இதயம் நிறைகிறது. அன்புத் தேனாகிப் பெருகும்போது இருவரின் உள்ளங்கள் சொல்கின்ற சொற்கள் மட்டுமே பாடலை உருப்பெற, உருவாகி இருக்கிறது இப்பாடல். அதிகம் அறியப் படாத கவிஞர் என்றாலும் அழகிய தமிழில் எளிமையாக எழுதியிருக்கிறார்.
பாடலைக் கேளுங்கள், பரவசம் எய்திடலாம்.
பாடல்: வீசு தென்றலே வீசு
படம்: பொன்னித் திருநாள் (1960)
பாடியவர்கள் : பி. சுசீலா, பி.பி. ஸ்ரீநிவாஸ்
இசை: கே.வி. மகாதேவன்
நடித்தவர்கள்:வளையாபதி முத்துக்கிருஷ்ணன் & ராஜசுலோச்சனா
________________________________________________________
வீசு தென்றலே வீசு… வேட்கை தீரவே வீசு
மாசில்லாத என் ஆசைக் காதலன்
வந்து செந்தமிழில் சிந்து பாடவே…
பாடு கோகிலம் பாடு … பாசமாக நீ பாடு
தேடும் காதலன் ஓடி வந்தனன்
சிந்து பாடிட நீ சேர்ந்து பாடுவாய்…
ஆண் முகம் காணும் பெண்
மனம் நாணம் அடைவதும் ஏனோ
அதிசயம் தானோ
ஆண் முகம் காணும் பெண்
மனம் நாணம் அடைவதும் ஏனோ
அதிசயம் தானோ
ஆண்மையை வெல்லும் நாணமே
எங்கள் அணிகலம் அதுவே
துணை பலம் அன்றோ
ஆண்மையை வெல்லும் நாணமே
எங்கள் அணிகலம் அதுவே
துணை பலம் அன்றோ
பாடு கோகிலம் பாடு … பாசமாக நீ பாடு
தேடும் காதலன் ஓடி வந்தனன்
சிந்து பாடிட நீ சேர்ந்து பாடுவாய்…
நிலவினை எங்கே காணோம்
இந்த நேரத்திலே தனியாக ஆனோம்
நிலவினை எங்கே காணோம்
இந்த நேரத்திலே தனியாக ஆனோம்
தலை மறைவாகவே கலை மதி முகமே
தலை மறைவாகவே கலை மதி முகமே
சாகசம் செய்வதில் தான் என்ன சுகமே
தொட்டால் குளிரும் விட்டு விலகினால்
சுடுமே காதல் நெருப்பு
தொட்டால் குளிரும் விட்டு விலகினால்
சுடுமே காதல் நெருப்பு
விட்டு விலகுதல் இனி ஏது
விட்டு விலகுதல் இனி ஏது
எந்த வெப்பமும் நம்மை அணுகாது
வீசு தென்றலே வீசு… வேட்கை தீரவே வீசு
மாசில்லாத என் ஆசைக் காதலன்
வந்து செந்தமிழில் சிந்து பாடவே…
வீசு தென்றலே வீசு…
வேட்கை தீரவே வீசு…
காணொளி: https://youtu.be/cjRfjtJ2cd4
புத்தனேரி சுப்பிரமணியம் அவர்களின் இப்பாடலை நினைவூட்டிய நண்பர் சுந்தர் (ராகப்ரவாகம்) மற்றும் நடித்தவர்கள் வரையில் விவரங்கள் தந்து உதவிய வேம்பர் மணிவண்ணன் அவர்களுக்கும் நன்றி.