கிரேசி மோகன்
keshav
”நவையூறும் நாவில் சுவையூறச் செய்து
அவையேறும் வாழ்வை அளிப்பாய் -இவையாவும்
பெற்றிட வெண்பாக்கள் குற்றம் குறையின்றி
சொற்றுளியால் சீராய் செதுக்கு”….(1)….

 
”நாணல் இடையாளாம் ,நாவன்மை உடையாளாம்
பூணல் அயன்மணந்த புண்ணியளாம்-வீணில்
அலையாதெ நெஞ்சே அறுபத்தி நான்கு
கலையாளை சேரக் கவி….(2)

”நாக்கில் நரம்பின்றி நாளும் வசைபாடி
தீக்குள் குளிர்காயா தேநெஞ்சே -வாக்கில்
கலைவாணி வந்து குடியேறும் வண்ணம்
அலைபாய்ந் திடா(து) அடங்கு….(3)

”ரவியுடன் சுற்றி ரகசியங்கள் கற்ற
கவிஅனுமன் கானம் குளிரப் -புவிமிசை
பாயப் பொழிவாள் படிக நிறத்தாள்
ஆய கலையாள் அருள்….(4)

”வந்தனம் செய்ய வரமளிக்கும் வாணியால்
மந்தனும் ஆவானே மாகவி -சிந்தையும்
வாக்கும் செயலுமவள் போக்கே துதித்திட
தேக்கும் வடிக்குமே தேன்….(5)

”பலகலைக்கு ஞானி பயில்வோர்க்கு தோணி
தளைதப்பா தீந்தமிழின் தேனி -நிலைகுலைந்து
நான்நீ எனப்பேசும் நாநீ நுழையாயே
வாணி வரமருளநீ வா”….(6)

”தேஜ சொரூபிணீ தேவி சரஸ்வதி
ராஜ ஷியாமளா ரக்ஷிநீ -பூஜை
புனஸ்காரம் எந்தன் நமஸ்காரம் தாயே
மனக்கிலேச யாழினை மீட்டு….(7)….

”வேதங்கள் நான்குமவள் காதணியும் குண்டலம்
நாதப் பரப்பிரமம் நாசிக்காற்று -ஓதும்
புராணங்கள் மேகலை பாதச் சிலம்பு
சராசரங்கள் சேரும் சபை”….(8)….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *