கற்றல் ஒரு ஆற்றல் 53
க. பாலசுப்பிரமணியன்
வீட்டுச் சூழ்நிலைகளும் கற்றலும்
ஒரு மனிதனுடைய சூழ்நிலைகள் அவனுடைய கல்வியின் போக்கையும் திறனையும் தரத்தையும் நிர்ணயிக்கின்றன கல்வியைப் பற்றிய பல ஆராய்ச்சிகளின் மூலம் சூழ்நிலைகள் எவ்வாறு கல்வியின் தரத்தை பாதிக்கின்றன என்பதையும் எவ்வாறு அதன் திசையை மாற்றுகின்றன என்பதையும் கல்வியாளர்கள் அறிந்துள்ளனர்.
இந்த சூழ்நிலைகளை உருவாக்குவதிலும் அதன் பலன்களை சரியான முறையில் வளர்த்து தக்க வைத்துக்கொள்வதில் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சமுதாயத்திற்கும் முக்கிய பொறுப்பு உண்டு.
ஒரு வீட்டைப் பொறுத்தவரை படிப்பதற்கான மற்றும் கற்றலுக்கான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கு தேவையானவை :
- அமைதி
- தெளிவான கருத்துக்கள்
- நேர்மறை சிந்தனை
- ஊடல்கள் இல்லாத குடும்ப நிலை
- பெற்றோர்களின் ஒருங்கிணைந்த மனநிலை
இப்படிப்பட்ட சூழ்நிலைகள் இருக்கும்பொழுது பெற்றோர்களின் ஆதரவும் தூண்டுதலும் இருக்குமானால் குழந்தைகளுக்கு படிப்பதில் ஆர்வமும் நம்பிக்கையும் வளர்ச்சி மற்றும் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கான தூண்டுதலும் கிடைக்கும். இந்தச் சூழ்நிலைகளில் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை பெற்றோர்கள் கொடுக்கும் பட்சத்தில் அவர்கள் வாழ்க்கையிலும் கல்வியிலும் சாதனைகளை படைப்பதில் உதவியாக இருக்கும் . இப்படிப்பட்ட சூழ்நிலைகள் வீடுகளில் இருக்கும் பட்சத்தில் குழந்தைகள் எந்த விதமான பள்ளிக்கூடத்தில் படித்தாலும் சாதனைப்பாதையில் முன்னேற வாய்ப்புக்கள் உண்டு. இதற்கான பல உதாரணங்களை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.
சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்தும் வாழ்க்கையில் சாதனை படித்து இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் அப்துல் கலாம் போன்ற பல பேர் அரசுப் பள்ளிகளில் படித்தாலும் வீடுகளில் இருந்த நல்ல சூழ்நிலைகளின் காரணமாக கற்றலிலும் வாழ்க்கையிலும் சாதனை புரிந்தது எல்லோருக்கும் தெரிந்ததே. இதே போன்று ஏழைக்குடும்பத்தில் பிறந்த எத்தனை பேர் பொறியியல் வல்லுனர்களாகவும் I A S அதிகாரிகளாகவும் ஆனதற்கு அவர்கள் குடும்பத்தின் சூழ்நிலைகள் காரணமாய் இருந்துள்ளனர்.
பொதுவாக, குழந்தைகளின் பிற்காலத்தைப் பற்றி சிந்திக்கும் பெற்றோர்கள் அவர்கள் வாழ்வில் ஒரு முழு மனிதனாக வளர வேண்டும் என்ற கருத்தை மனதில் கொள்ளவேண்டியது அவசியம். பெற்றோர்களுடைய செயல்கள் குழந்தைகளின் மனஅழுத்தத்தைத் தூண்டுவதாக அமைத்தல் கூடாது. அதே போல் அவர்களுடைய கற்றலைப் பற்றிய கருத்துக் பரிமாற்றங்கள் குழந்தைகளின் தாழ்வு மனப்பான்மையை வளர்ப்பதாகவோ அல்லது அவர்களுடைய ஆற்றலையும் திறனையும் கொச்சப்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது. அவர்களுடைய செயல்களையும் திறன்களையும் சற்றே பாராட்டுவதாகவும் மேன்மைப் படுத்துவதாகவும் இருத்தல் அவசியம். மற்றும் அவர்களை மற்றவர்களுடன் திறன்களிலும் கற்றலிலும் துலாபாரம் செய்தல் அவர்களுடைய தனித்தன்மையை பாதிப்பதாகவும் உண்மையான வளர்ச்சியை தடைசெய்வதற்கு ஏதுவாகவும் அமையும்.
பொதுவாக குழந்தைகளின் கல்வியின் வழித்தடங்களை நிர்ணயிப்பதில் பெற்றோர்கள் தங்களுடைய நிறைவேறாத கனவுகளையும் கற்பனைகளையும் ஊட்டி வளர்ப்பதாக ஒரு கருத்து நிலவுகின்றது. இதைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் குழந்தைகளின் தனிப்பட்ட வளர்ச்சியை மனதில் கொண்டு அவர்களுடைய ஆர்வத்தை வளப்படுத்த தேவையான சூழ்நிலைகளை உருவாக்குதல் அவசியம். இந்தச் சூழ்நிலை பொதுவாக குழந்தைகளுக்கு கற்றலில் சுதந்திரத்தையும் வீட்டில் அன்பான சூழ்நிலையையும் கொடுப்பதன் மூலம் அடையமுடியும்.
வீட்டின் பொருளாதாரச் சூழ்நிலைகள் குழந்தைகளின் கல்வியின் வழித்தடங்களையும் வளத்தையும் பாதிப்பதற்கான ஆதாரங்கள் நிச்சயமாக உள்ளன. அனால் அதை சரியான முறையில் கையாளும் பட்சத்தில் அதை ஒரு மிகப்பெரிய தடையாகக் கருதவேண்டிய அவசியம் இல்லை. பல நேரங்களில் நம்முடைய தடைகளே நமக்கு வலிமையையும் முன்னேற்றத்திற்குத் தேவையான சக்தியையும் கொடுப்பதற்கு சாத்தியமாக அமையும். ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேசும்பொழுதும் கருத்து பரிமாறும்பொழுதும் அந்தத் தடைகளை முன்னேற்றத்திற்கான படிக்கற்களாக மாற்ற முயற்சிக்க வழிகளை உருவாக்க உதவி செய்ய வேண்டும்.
தொடரும்