கணியன்பாலன்

 

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழி-கா.இராசன்:

20 வருடங்களாக ஏழு தடவை கொடுமணலில் அகழாய்வு நடந்துள்ளது என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் சுப்புராயலு அவர்கள். அந்த 20 வருட அகழாய்வுகளில் கிடைத்த 500க்கும் மேற்பட்ட தமிழி(தமிழ் பிராமி) எழுத்துப்பொறிப்புகளை விரிவாக ஆய்வு செய்த கா.இராசன் அவர்கள் அவற்றின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 6ஆம் நூற்றாண்டு  வரை எனவும் அவை மிகவும் நன்கு வளர்ந்த நிலையில் இருப்பதால் அதன் தொடக்க காலம் இதற்குச் சில நூற்றாண்டுகள் முந்தையதாக இருக்கலாம் எனவும்  தனது ‘பண்டைய எழுத்துமுறை, குறியீடுகளில் இருந்து பிராமிக்கு ஒரு பயணம்’(EARLY WRITING SYSTEM, A Journey from graffiti to Brahmi) என்ற ஆங்கில நூலில் தெரிவித்துள்ளார். அந்த நூலில் கொடுமணலில் கிடைத்த 500க்கு மேற்பட்ட தமிழி எழுத்துப்பொறிப்புகள் குறித்தும், கிட்டத்தட்ட 600 குறியீடுகள் குறித்தும் விரிவான விளக்கங்களும், வரைபடங்களும், புகைப்படங்களும், தரப்பட்டுள்ளன. இவைகளைப்பற்றிய ஆய்வுகளில் இருந்து, கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்குச் சில நூற்றாண்டுகள் முந்தையதாகத் தமிழி எழுத்தின் தொடக்க காலம் இருக்கலாம் என முனைவர் கா.இராசன் அவர்கள் கூறுகிறார்(17). ஆகவே தமிழி எழுத்தின் தொடக்க காலத்தைக் கி.மு.8ஆம் நூற்றாண்டு என உறுதிபடக்கூறலாம். கொடுமணலில் நடந்த இவ்வாய்வு குறித்தச் சிறுவிளக்கத்தைக்காண்போம்.

கொடுமணலில் 2012, 2013ஆம் ஆண்டுகளில் 5 அகழாய்வுகள் முறையே 15செ.மீ, 60செ.மீ, 65செ.மீ, 85செ.மீ, 120செ.மீ ஆகிய ஆழங்களில் நடத்தப்பட்டன. அந்த ஆழங்களில் கிடைத்தத் தமிழி எழுத்துப்பொறிப்புகளைக்கொண்ட பண்பாட்டு பொருட்களின் பழையமுறையிலான ஆண்டுகளும்(UNCALIBRATED), முறையாகக் கணிக்கப்பட்ட ஆண்டுகளும்(CALIBRATED) கண்டறியப்பட்டன. அவை முறையே கி.மு.200-408 வரையிலும், கி.மு.200-480 வரையிலும் இருந்தன. அதாவது 120செ.மீ ஆழத்தில் இருந்த எழுத்துப்பொறிப்புகளின் பழைய முறையிலான ஆண்டு கி.மு.408 ஆகவும், கணிக்கப்பட்ட ஆண்டு கி.மு. 480 ஆகவும் இருந்தது. ஆனால் அதற்குப்பின்னரும் 65செ.மீ ஆழம்வரை, அதாவது 185செ.மீ ஆழம் வரையில் மொத்தம் 500க்கு மேற்பட்ட தமிழி எழுத்துப்பொறிப்புப் பொருட்கள் கிடைத்துள்ளன. இப்பகுதியில் கிடைத்த தமிழி எழுத்துப்பொறிப்புப் பொருட்களுக்கு சராசரியாக ஒரு செ.மீ ஆழத்திற்கு 2ஆண்டுகள் கணக்கிடலாம் எனக்கொண்டு 65செ.மீ ஆழத்திற்கு 130 ஆண்டுகள் எனக்கணக்கிடப்பட்டது. அதன்படி, 120செ.மீ ஆழத்திற்கு கி.மு.408 ஆண்டுகள் எனில், 185 செ.மீ ஆழத்திற்கு கி.மு. 6ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் எனக்கணக்கிடலாம் எனக்குறிப்பிட்டுள்ளார் முனைவர் கா.இராசன் அவர்கள். முறையாகக் கணிக்கப்பட்ட ஆண்டுகளை(CALIBRATED) அவர் கணக்கில் கொள்ளவில்லை. அதனைக்கணக்கில்கொண்டால் கி.மு. 480 என்பது கி.மு.610 என ஆகி 7ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலம்வரை என இந்தத் தமிழி எழுத்துக்களின் காலத்தைக் கணிக்கலாம். எனினும் இவை அனைத்தையும் கொண்டு இந்தத் தமிழி எழுத்துக்களின் காலத்தைக் குறைந்தபட்சம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு என உறுதிபடக்கூறலாம். இந்த 6ஆம் நூற்றாண்டு தமிழி எழுத்துக்கள் மிகவும் நன்கு வளர்ந்த நிலையில் இருப்பதால், தமிழி எழுத்துக்களின் தொடக்க காலம் என்பது கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்குச் சில நூற்றாண்டுகள் முந்தையதாக இருக்கவேண்டும் எனவும் கா.இராசன் அவர்கள் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, தமிழி எழுத்தின் தொடக்ககாலம் குறைந்தபட்சம் கி.மு. 8ஆம் நூற்றாண்டு என்பது உறுதியாகிறது.

கொடுமணலில் இவைபோக 1456 குறியீடு(GRAFFITI) பொறித்தப் பொருட்களும் கிடைத்துள்ளன. இதில் 858 குறியீடு பொறித்த பொருட்களில் உள்ள குறியீடுகள் முழுமையற்றுப் புரிந்துகொள்ளமுடியாத நிலையில் இருக்கிறது. ஆகவே 598 குறியீடு பொறித்தப் பொருட்களை மட்டுமே கணக்கில் கொள்ளமுடியும். ஆக 500க்கும்மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்புகளும், கிட்டத்தட்ட 600 குறியீடு பொறிப்புகளும் கொடுமணலில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒரு விழுக்காட்டு ஆய்வில் கிடைத்துள்ளன(18). “தமிழ் பிராமி (தமிழி) வரி வடிவம் தமிழகத்தில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக இக்குறியீடுகள் சங்ககால மக்களின் எண்ணங்கள் அல்லது கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வரிவடிவமே என எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது” என முனைவர் கா.இராசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை முன்பே சொல்லியுள்ளோம். இக்குறியீடுகள் அக்கருத்தை வலியுறுத்துவதாக இருக்கின்றன எனலாம்

கொடுமணல் பகுதியில் உள்ள தமிழி எழுத்துக்களில் பிராகிருதச் சொற்களும் இருக்கின்றன என கா. இராசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவை பெயர்சொற்கள் மட்டுமே எனவும், அதுவும் அவைகள் தமிழாக்கம் செய்யப்பட்டவை எனவும், இப்பெயர்ச் சொற்கள் தமிழ், பிராகிருதம் ஆகிய இரண்டும் இணைந்து உருவான புதுமுறையிலான சொற்களாக(HYBRID FORM) உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்(19). அவைகளைக்கொண்டு பிராகிருதத்தின் செல்வாக்கு தமிழ் மொழியில் இருந்தது என்று கூற முடியாது. ஒரு மொழியின் இலக்கணத்தில் பிறமொழியின் செல்வாக்கால் ஏற்படும் மாற்றத்தைத்தான் அம்மொழியின் செல்வாக்கு எனலாம். பெயர்சொற்கள் இருப்பதைக்கொண்டு அதைப் பிற மொழியின் செல்வாக்கால் ஏற்பட்டது எனக்கூற முடியாது. ‘இது போன்ற பெயர்சொற்கள், நிறுவனப்பெயர்கள், மதச்சொற்கள் முதலியன இருப்பதைக்கொண்டு அவை ஒரு மொழியின் எழுத்தை முடிவு செய்யும் எனக்கொள்ள முடியாது” என திரு இரங்கன் என்பவர் 2004இல் சொல்லியிருப்பதை இராசன் அவர்கள் குறிப்பிட்டதோடு, குகைக் கல்வெட்டுகளில்கூட தமிழி எழுத்துக்கள் வினைச்சொற்கள், பண்புப்பெயர்கள்  முதலியனவற்றைக் கடன் வாங்கவில்லை எனக் கூறியுள்ளார்(20). அங்கும் வடபெயர்சொற்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே பிராகிருதத்தின் செல்வாக்கு தமிழியில் இருக்கவில்லை எனலாம். முக்கியமாகக் கொடுமணல் தமிழி எழுத்துக்களில் பிராகிருதத்தின் செல்வாக்கு இருக்கவில்லை என்பதே இவைகளில் இருந்து நாம் பெரும் முடிவாகும். இருந்த போதிலும் இந்தப் பிராகிருதப் பெயர்ச்சொற்கள் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் இருந்தே கொடுமணல் தமிழி எழுத்துக்களில் இருப்பதற்கான காரணத்தை நாம் கண்டறிந்தாக வேண்டும்.

வட இந்திய வணிகர்கள் வணிகத்துக்காகக் கொடுமணலில் வந்து பல ஆண்டுகள் தங்கி வணிகம் செய்து வந்ததன் விளவாகவும், அவர்களின்பெயர்கள் பிராகிருதத்தில் இருப்பதாலும் அவர்களைக்குறிப்பிட இந்தப் பிராகிருதப் பெயர்ச்சொற்கள் தமிழி எழுத்துக்களில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது எனலாம். கி.மு. ஆறாம் நூற்றாண்டுகாலத் தமிழி எழுத்திலேயே பிராகிருதச்சொற்கள் இருப்பதால் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வட வணிகர்கள் தமிழகத்தில் வந்து தங்கி வணிகம் செய்து வந்திருக்கவேண்டும் எனலாம். இவை குறித்துத் தொடர்ந்து செய்யப்படும் ஆய்வுகளே இவ்விடயங்கள் குறித்தத் தெளிவை வழங்கும். அதேசமயம் வட இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் மிக நீண்டகாலமாக வணிகத் தொடர்பு இருந்துள்ளது என்பதை இச்செய்திகள் உறுதிப்படுத்துகின்றன எனலாம்.

தொல்லியல் ஆய்வாளர் சுப்புராயலு அவர்கள், வட இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான அகழாய்வுகள் பல நடந்த பின்னரும் கூட, இன்றைய பாக்கிசுத்தானின் வடமேற்குப்பகுதியில் இருந்த அராமிக்(ARAMAIC) எழுத்துக்களைத்தவிர வேறு எந்த எழுத்துக்களும் அசோகன்பிராமிக்கு முன்பு வட இந்தியாவில் இருக்கவில்லை எனக்குறிப்பிட்டுள்ளார்(21). அதாவது கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பு பிராமி எழுத்து வட இந்தியாவில் இருக்கவில்லை என்பதை அவர் இதன் மூலம் உறுதிப்படுத்துகிறார். ஆனால் தமிழகத்தில் கி.மு. 6ஆம் நூற்றாண்டு அளவிலேயே தமிழி எழுத்து(தமிழ் பிராமி) இருந்துள்ளது என்பதும் இதன் தொடக்ககாலம் அதற்குச் சில நூற்றாண்டுகள் முந்தையது என்பதும் முனைவர் கா.இராசன் அவர்களின் ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.

இவ்விரண்டு செய்திகளின் மூலம் அசோகன் பிராமியில் இருந்து தமிழி எழுத்து உருவாகவில்லை என்பது உறுதியாகிறது. அதேசமயம் தமிழியில் இருந்து அசோகன் பிராமி உருவாகியிருக்க வாய்ப்புள்ளது. சமற்கிருதத்துக்கான கிரந்த எழுத்துக்கள், தமிழகத்தில், தமிழி எழுத்தில் இருந்துதான் உருவாகியது. இவ்விடயத்தை பெஞ்சமின் கை பாயிங்டன் என்பவர் கி.பி. 1830வாக்கிலேயே சொல்லியுள்ளார்(22). ஆதலால் அசோகன் பிராமியும்(பிராகிருத பிராமி) தமிழியில் இருந்து உருவாகியிருக்க வாய்ப்புள்ளது எனலாம். முதலில் பிராகிருதப் பெயர் சொற்களுக்கு தமிழி எழுத்து கொண்டு எழுதப்பட்டது. அதன் பின் அந்நிலை வளர்ந்து சமற்கிருதத்துக்கான கிரந்த எழுத்து தமிழி எழுத்தில் இருந்து உருவாகியது போல, பிராகிருத மொழிக்குத் தமிழியில் இருந்து அசோகன் பிராமி எழுத்து உருவாகியது எனலாம்.

 

மயிலாடுதுறை கைக்கோடாலி :

மயிலாடுதுறையில் உள்ள செம்பியன் கண்டியூர் (SEMBIAN KANDIYUR)  என்னும் இடத்தில், கல்லால் ஆன புதிய கற்காலத்தைச் சார்ந்த கைக்கோடாலி ஒன்று கிடைத்துள்ளது. அதில் நான்கு குறியீடுகள் உள்ளன. அந்த நான்கு குறியீடுகளும் சிந்துவெளிக் குறியீடுகளுக்கு ஒப்புமை உடையனவாக உள்ளன. தொல்பொருள் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள், அக்குறியீடுகளை நன்கு ஆய்வு செய்து ‘முருகன்’ எனப் படித்தறிந்துள்ளார். மேலும் அவர், இக்குறியீடுகள் சிந்துவெளி குறியீட்டு எண்கள் 48, 342, 367, 301 ஆகியவற்றோடு முழுமையாக ஒப்புமை கொண்டுள்ளன எனவும், இதன் காலம் கி.மு.1500 முதல் கி.மு.2000 எனவும் நிர்ணயித்துள்ளார். இந்தக் கல்கோடாலி தமிழகப் பகுதியில் உள்ள கல்வகையினைச் சார்ந்தது எனவும், அதனால் இந்தக் கல்கோடாலி வட இந்தியாவிலிருந்து வந்திருக்க முடியாது எனவும் குறிப்பிடுகிறார். மேற்கண்ட காரணங்களால் தமிழக மக்களும் சிந்துவெளி மக்களும் ஒரே மொழியைப் பயன் படுத்தியவர்களே எனச் சொல்லும் அவர், இதனை இந்த நூற்றாண்டுக்கான மிகச் சிறந்த கண்டுபிடிப்பு என்கிறார்-(23).

மயிலாடுதுறை கைக்கோடாலி குறித்த ஐராவதம் மகாதேவன் அவர்களின் கருத்தையும், கா.இராசன், பவுன்துரை ஆகியவர்களின் குறியீடுகள் குறித்த கருத்தையும் இணைத்துப் பார்க்கும் பொழுது கீழ்கண்ட முடிவுக்கு நாம் வந்து சேரமுடியும். அதாவது, கி.மு.1500 வாக்கில், தமிழர்கள், குறியீடுகளைக் கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு வகை வரிவடிவமாக, ஒரு வகை எழுத்தாகப் பயன்படுத்தத் தொடங்கினர்  எனவும், சில நூற்றாண்டு களுக்குப் பின், கி.மு.1000 வாக்கில் அக்குறியீடுகளைப் பயன்படுத்தும் நிலை, பரவலாகத் தமிழகமெங்கும் பரவியிருந்துள்ளது எனவும் கருதலாம். தமிழர்கள் குறியீடுகளை ஒரு எழுத்து வடிவமாகக் கி.மு. 1000 வாக்கில்  பரவலாகப் பயன்படுத்திக் கொண்டிருந்ததால், தமிழ் இலக்கியத்தின் தொடக்ககாலம் கி.மு. 750இல் தொடங்கிவிட்டது எனலாம். சங்ககால மக்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் குறியீடுகள் கிடைப்பதால், ஆய்வாளர்கள் இவைகளைச் சேகரித்துப் பதிவு செய்வதும், அவைகளைப் படித்தறிந்து பொருள் காண்பதும் அவசியமாகிறது. அதன்மூலம் பண்டைய தமிழர்களின் வாழ்க்கையை மேலும் நன்கு புரிந்து  கொள்ள முடியும் என்பதோடு, தமிழர்களின் வரலாற்றைப் பல நூற்றாண்டுகள் மேலும் பின்னோக்கிக் கொண்டு செல்லமுடியும். குறைந்தபட்சம் கி.மு. 1000 வரை  கொண்டுசெல்ல முடியும் எனலாம்.

தமிழகமும் அகழாய்வும்:

சங்ககால நூலான பதிற்றுப்பத்துக் குறிப்பிடும் கொடுமணல் குறித்துப் பல தரவுகள் வெளிவந்துள்ளது.   கொடுமணம்(கொடுமணல்) அகழாய்வில் இருநூற்றிற்கும் மேற்பட்ட எழுத்துப்பொறிப்புப் பெற்ற பானை ஓடுகளும், வெள்ளி முத்திரை நாணயங்களும், இரும்பு, எஃகு செய்வதற்கான உலைக்கலங்களும், இரும்பு ஆயுதங்களும், வைடூரியம், சூதுபவளம், பளிங்கு, நீலக்கல், பச்சைக்கல் போன்ற அரியமணிக்கற்களில் செய்யப்பட்ட ஏராளமான மணிகளும், குறியீடுகளும், நெய்யப்பட்ட துணியும், அவை நெய்வதற்கு பயன்படுத்தப்பட்ட தக்களிகளும் என ஏராளமானத் தரவுகள் வெளிக்கொணரப் பட்டுள்ளன. கொடுமணலில் உள்ள 70 ஏக்கர் பரப்பில் ஒரு ஏக்கருக்கும் குறைவான பகுதியில் மட்டுமே அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள நூற்றுக்கணக்கான பெருங்கற்படைச் சின்னங்களில் 13 மட்டுமே தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையால் அகழ் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த அகழாய்வின்அளவு என்பது ஒரு விழுக்காட்டிற்கும் குறைவானது.

ஒரு விழுக்காட்டு அகழாய்வில் மேலே குறிப்பிட்ட பல்வேறு வகையான தரவுகள் அதிக அளவில் கிடைக்கின்றன எனில் மீதமுள்ள 99 விழுக்காட்டுப் பகுதிகளை அகழாய்வு செய்யும்பொழுது மேலும் பன்மடங்கு செய்திகள் அல்லது தொல்பொருட்கள் வெளிவரும் என்பது உறுதி.  சங்ககாலப் புலவர்களால் பெரிதும் பேசப்படாத சங்ககால ஊரான கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு விழுக்காடு அகழாய்வில் மட்டுமே இவ்வளவு தொல்பொருட்கள் கிடைக்கின்றன எனில் சங்க இலக்கியங்களில் வியந்து பேசப்படுகின்ற மதுரை, கொற்கை, பூம்புகார், முசிறி,  கரூர், உறையூர் போன்ற இடங்களில் அகழாய்வு செய்யப்படும் பொழுது மிக அதிக அளவு தொல்பொருட்களும் தரவுகளும் வெளிவரும் என்பதை நினைக்கும் பொழுது அது  பெருவியப்பைத் தோற்றுவிக்கிறது எனலாம்.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மேற்கொண்ட கள ஆய்வில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட சங்ககால எச்சங்கள் கொண்ட ஊர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மீதமுள்ள மாவட்டங்களில் கள ஆய்வு செய்யப்படும்பொழுது இந்த எண்ணிக்கை அதிகளவு பெருகும் எனவும், இந்த ஊர்கள் அனைத்தையும் முழுமையாக அகழாய்வு செய்யப்படும்பொழுது மட்டுமே சங்ககாலத் தமிழர்களின் பண்பாட்டை முழுமையாக அறியவும், அவர்கள் குறித்த ஒரு தெளிவான  முடிவுக்கு வரவும் முடியும் என்கிறார் முனைவர் கா.இராசன்-(24).

மனிதனின் கடந்த காலத்தைப்பற்றி எழுதப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு அமைவது வரலாறு. ஆனால் தொல்லியல் என்பது எழுதப்பட்ட ஆவணங்களின் தரவுகளை உறுதிப்படுத்தவும் நெறிப்படுத்தவும் பயன்படும் என்பதோடு, எழுதப்பட்ட வரலாற்றுக் காலத்தையும் தாண்டி, வரலாற்றிற்கு முந்தைய காலத்தைப் பற்றியும் இருப்பதை இருப்பது போலவே அறிவிப்பதாகும். இவை பற்றி கார்டன் சைல்டு(Gordon Childe) என்கிற அறிஞர், “புவியின் வரலாற்றில் எழுதப்பட்ட ஆவணங்களால் நிரப்பப்படும் வரலாற்றைவிட தொல்லியல் சான்றுகளால் நிரப்பப்படும் வரலாறு நூறு மடங்கு அதிகமாகும்” என்கிறார். இன்னொரு அறிஞரோ, “வரலாற்றில் ஒரு சதவிகிதத்தைபற்றி மட்டுமே எழுதப்பட்ட ஆவணங்களின் மூலம் அறிய இயலும். ஆனால் மீதமுள்ள தொன்னூற்று ஒன்பது சதவிகித வரலாற்றை அறிய தொல்லியல் மட்டுமே உதவுகிறது” என்கிறார்-(25). ஆகவே நமது அகழாய்வுகளை அதிகப்படுத்தி, விரைவுபடுத்தி செயல்படுத்துவதன் மூலமும், வெளிக்கொண்டுவரப்படும் தரவுகளை முறையாக ஆவணப் படுத்துவதன் மூலமும் மட்டுமே நமது வரலாற்றை நன்கு அறிந்து கொள்ள இயலும். 99 விழுக்காட்டு வரலாற்றை அகழாய்வின் மூலம் மட்டுமே அறிய முடியும் என்பது தமிழகத்தின் வரலாற்றுக்கு மிகமிக பொருந்தும் எனலாம்.

தம்பப்பண்ணி:

தமிழக வரலாற்றின் தொடக்க காலத்தில், தமிழகத்திலிருந்து ஆதிகால இரும்புப் பண்பாடு இலங்கையின் வடமேற்குப் பகுதியில் பரவத்தொடங்கி, அங்கு தம்பப்பண்ணி  என்ற இரும்புக்காலப் பண்பாட்டுக் குடியிருப்பு உருவாகியது. அதன் இடத்தில்தான் இன்றைய பொம்பரிப்பு என்கிற அகழ்வாராய்ச்சி இடம் உள்ளது. பொம்பரிப்புப் பகுதியில் இருந்து தான் இந்த இரும்புக்காலப் பண்பாடு அநுராதபுரத்திற்கு பரவியது. ஆதலால் பொம்பரிப்புக் குடியிருப்பின் காலம் அநுராதபுரக் குடியிருப்புக்கு ஓரிரு நூற்றாண்டுகள் முந்தியது எனக் கணிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரக் குடியிருப்பின் காலம் முதலில் கி.மு.900 என கரிமப் பகுப்பாய்வுப்படி கணிக்கப்பட்டது. அதனைப் பிரித்தானியத் தொல்லியல் குழுவும் உறுதிப்படுத்தியது. அதற்குப் பிந்தைய கணிப்புகளின் படி அதன் காலம் ஏறத்தாழ கி.மு.1000 என இலங்கைத் தொல்லியல் ஆய்வாளர் சிரான் தரணியகல(DERANIYAGALA) கருதுகிறார்(26).

ஆகவே பொம்பரிப்புக் குடியிருப்பின் காலம் கி.மு. 1200 வரை இருக்கலாம் எனலாம். தம்பப்பண்ணி கி.மு. 500 வாக்கில் ஒரு புகழ் பெற்ற நகராக  இருந்தது எனவும் தமிழகத்துப் பாண்டியர்(பண்டு) வழி வந்தவர்கள் அதை ஆண்டனர் எனவும் பாலி நூல்கள் தெரிவிக்கின்றன. கி.மு. 500க்குப் பின் ஆதி இரும்புக்காலம் முடிவடைந்த கட்டத்தில் தம்பப்பண்ணியில் இருந்த அதிகார பீடம் உள்நாட்டில் உள்ள அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பின் எழுச்சி பெற்ற அநுராதபுர நகரம், கி.மு. 3ஆம் நூற்றாண்டு வாக்கில் ஒரு புகழ் பெற்ற நகராக ஆகியது. பாலி நூல்களின் மரபுக் கதைகளின்படி அநுராதபுரம் எழுச்சி பெறுவதற்குமுன் தம்பப்பண்ணி ஒரு துறைமுக நகராகவும் ஓர் ஆட்சிபீடமாகவும் இருந்துள்ளது. இந்தத் தம்பப்பண்ணியின் சமற்கிருதப் பெயர் தாம்ரபர்ணி ஆகும். ஆகவே தமிழகத்தில் உள்ள (இலங்கையின் எதிர்க்கரையில் அமைந்துள்ள) தாமிரபரணி ஆற்றின் பெயரால் தான் இந்நருக்கு இப்பெயர் வந்தது எனலாம்.  ஆகவே அன்று தம்பப்பண்ணி நகரம் தமிழர்களின் நகராகவும், வட இலங்கையின் ஆட்சிப் பகுதியாகவும் இருந்துள்ளது-(27).

தமிழகத்தில் ஓடும் தாமிரபரணி ஆறுதான், தம்பப்பண்ணி என்கிற பெயர் இலங்கையின் வடமேற்கு நகரத்துக்கு வரக் காரணம் என முன்பே குறிப்பிட்டோம். பொம்பரிப்பு என்கிற இந்தத் தம்பப்பண்ணி நகருக்கு அருகிலுள்ள அகழாய்வு இடம் தாமிரபரணி ஆற்றின் எதிர்பக்கத்தில்தான் அமைந்துள்ளது. இந்தப் பொம்பரிப்புக் கால இரும்புப் பண்பாடு குறித்துத் தென் இந்தியாவிலும், இலங்கையிலும் ஆய்வுகளை மேற்கொண்ட சுதர்சன் செனவிரத்னே (SENEVIRATNE) அதன் முக்கியக் கூறுகளைப் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளார், “அடிப்படை உலோகத்தொழில்நுட்பம், இரும்பின் உபயோகம், மட்பாண்டச்செய்கை உபகரணங்கள், நெற்பயிர்ச்செய்கை உபகரணங்கள், நீர்ப்பாசன முறைகள், சிறுகைத்தொழில், புதிய நிலையான குடியிருப்புகள், பண்டமாற்று வர்த்தகமையங்கள், குறுநிலஅரசுகளின் தோற்றம், குதிரையின் அறிமுகம், புதிய சவஅடக்க முறை என்பனவாகும்” -(28). இந்த பொம்பரிப்புக் கால இரும்புப் பண்பாடு என்பது தமிழகத்தில் இருந்து பரவிய தமிழர்களின் பெருங்கற்காலப் பண்பாடாகும்.

இந்தப் பொம்பரிப்புக் குடியிருப்புத் தோன்றுவதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தில் ஆதிகால இரும்புப் பண்பாட்டுக் குடியிருப்புகள் தோன்றி இருக்கவேண்டும். ஆதிச்சநல்லூர் அத்தகைய குடியிருப்புகளில் ஒன்றாகும். இந்த ஆதிச்சநல்லூர், தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இதுவரையான ஆய்வுகள் அதன் காலத்தை கி.மு. 2000 வரை என உறுதிப்படுத்தியுள்ளது-(29). இலங்கையில் நடைபெற்ற அகழாய்வு கி.மு 1200க்கு வெகுகாலம் முன்பே தமிழகத்தில் இரும்புக்காலப்பண்பாடு வேரூன்றி விட்டது என்பதை உறுதிப் படுத்துகிறது. முனைவர் கா.இராசன் அவர்களின் ஆய்வு முடிவை இந்திரபாலா, சுதர்சன செனவரத்னே ஆகியவர்கள் தரும் தகவல்கள் மேலும் வலுப்படுத்துகின்றன. மேலும் தமிழகத்தில் இருந்த மதுரை, கொற்கை, உறையூர், புகார், வஞ்சி, முசிறி போன்ற நகரங்களும், இலங்கையில் இருந்த தம்பப்பண்ணி என்ற நகரமும் கி.மு 5ஆம் நூற்றாண்டு அளவில் பண்டையத் தமிழர்களின் நன்கு வளர்ச்சி பெற்ற பெருநகரங்களாக இருந்திருக்க வேண்டும் எனலாம்.

தமிழ் மொழியின் ஆரம்பகால எழுத்தானத் தமிழியின்(தமிழ் பிராமி) தொடக்க காலம் சுமார் கி.மு. 8ஆம் நூற்றாண்டு எனவும், தமிழகத்தில் சுமார் கி.மு. 1500 வாக்கிலேயே இரும்புப் பண்பாடு தொடங்கிவிட்டது எனவும், தமிழி எழுத்துக்கு முன்பு தமிழர்கள் குறியீடுகளை ஒருவகை எழுத்து வடிவமாக கி.மு. 1500 வாக்கிலேயே பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர் எனவும், கி.மு. 1000 வாக்கில் தமிழர்கள் குறியீடுகளை கருத்துப் பரிமாற்றத்திற்கான எழுத்து வடிவமாகப் பரவலாகப் பயன் படுத்தினர் எனவும், தமிழ் இலக்கியத்தின் தொடக்க காலம் கி.மு. 750 எனவும், தமிழகத்தில் அகழாய்வுகள் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே நடந்துள்ளது எனவும், தமிழகத்தில் இருந்துதான் இலங்கைக்கு இரும்புப் பண்பாடு பரவியது எனவும், அது தமிழர்களின் பண்பாடாகவே இருந்தது எனவும் இதுவரை பார்த்தோம். தமிழ் சமுதாயத்தின் பழமை கி.மு. 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை இவைகள் உறுதிப்படுத்துகின்றன.

குமரி நிலப்பரப்பு: மதிரை நகர்:    

இறையனார் அகப்பொருள் உரையிலும், இலங்கையின் பாலி வரலாற்று நூலாகிய மகாவம்சத்திலும் மதுரை நகரம் குறித்த சில தகவல்கள் உள்ளன. அதன்படி பாண்டியருடைய ஆட்சிபீடமான மதிரை நகரம் கடலருகே இருந்ததாகவும், கடல்கோளால் அந்நகரம் அழிந்து போனதால், அதன்பின் கபாடபுரம்(பெருவாயில் உடைய நகரம்) என்ற சமற்கிருத பெயர் பெற்ற கடலருகே இருந்த இன்னொரு நகரத்திற்கு தங்கள் ஆட்சிபீடத்தை பாண்டியர்கள் மாற்றிக்கொண்டனர் எனவும் தகவல்கள் உள்ளன. சமற்கிருத நூல்களாகிய மகாபாரதமும், அர்த்த சாத்திரமும் இக்கபாடபுரம் குறித்த குறிப்புகளைக் கொண்டுள்ளன. இந்த இரண்டாவது நகரமும் கடல் கோளால் அழிந்துபோன பின், பாண்டியர்கள் உள்நாட்டில் வைகை நதியில் உள்ள மதிரை என்ற நகரத்தைத் தங்கள் தலைநகராக ஆக்கிக்கொண்டனர். மறைந்துபோன முதலாவது மதிரை நகரை அவர்கள் “தென்மதிரை” என அழைத்தனர். பாலி மரபுக் கதைகளில் இந்நகர் ‘தக்கிண மதுரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது-(30)

குமரி நிலம்:

வால்மீகி இராமாயணத்தில் பாண்டியர்களின் தலைநகர் கபாடபுரம் எனவும், வியாசரின் மகாபாரதத்தில் கபாடா எனவும் சொல்லப்பட்டுள்ளது. கி.பி. 6ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட ஆகமங்கள் குமரி நிலப்பரப்பு குறித்து விரிவாகப் பேசுகின்றன. கிரான ஆகமம் ஞானபாதத்தில் எட்டாம் இயலில், 69-74 வரையிலுள்ள பாடல் அடிகளும், சுப்ரபேத ஆகமம் ஞானபாதத்தில் மூன்றாம் இயலில் 125-135 வரையிலுள்ள பாடல் அடிகளும், மிருகேந்திர ஆகமம் ஞானபாதத்தில் பதிமூன்றாம் இயலில் 93-97 வரையிலுள்ள பாடல் அடிகளும் குமரி நிலப்பரப்பு குறித்துப் பேசுகின்றன. ஆனால் சந்திர ஞான ஆகமம் தனது 14ஆவது இயலில், 165-272 வரையிலுள்ள பாடல் அடிகளில் புவனத்துவ பாலா என்கிற தலைப்பில் குமரி நிலப்பரப்பு குறித்து விரிவாகப் பேசுகிறது. 28 முதன்மை ஆகமங்களில் சந்திர ஞான ஆகமம் 19ஆவது ஆகமம் ஆகும். அதன் 14ஆவது இயல் மொத்தம் 298 பாடல் அடிகளைக்கொண்டது ஆகும். அதில் 108 பாடல் அடிகள் குமரி நிலப்பரப்பு குறித்துப் பேசுகின்றன.

குமரி நிலம், குப்சா, கேதா, கார்வதா, பட்டணா என்கிற நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. குப்சா பகுதியின் தெற்கே குமரி ஆறும், வடக்கே பஃறுளி ஆறும் ஓடிக்கொண்டிருந்தன. தென்கிழக்கே குமரிக்கடலின் அலைகள் குமரி மலை அடிவாரத்தைத் தழுவிச் செல்லும் இடத்தில் தலைநகர் கபாடபுரம் அமைந்திருந்தது. அங்கே ஒரு துறைமுகமும் மறைவான போர்க்கருவிகள் வைக்கப்பட்டிருந்த நீர்க்கோட்டையும் இருந்தன. விண்ணைத்தொடும் குமரிமலையின் உச்சியில் சிகரக்கோட்டையும், பள்ளத்தாக்கில் துரோனிக்கோட்டையும், தெற்குச்சரிவில் கடகக் கோட்டையும் இருந்தன. கேதாப்பிரிவில், சப்த நாளிகா, சப்த தளா, சப்த கைரிகா, சப்த மதுரா, சப்த பூர்வசாலா, சப்த அபாரசாலா, சப்த பிரசித்திரா  ஆகிய ஏழு நகரங்கள் இருந்தன. குப்சா பிரிவின் மேற்கில் கார்வதா பிரிவும், குமரி நிலப்பரப்பின் வடக்கில் பட்டணா பிரிவும் இருந்தன. கேதாப்பிரிவின் நடுவில் மேற்கு நோக்கிக் கந்தன் கோயிலும், கார்வதாப் பிரிவின் நடுவில் கிழக்கு நோக்கித் திருமால் கோயிலும் கட்டப்பட்டிருந்தது. இவை அனைத்தும் சந்திர ஞான ஆகமத்தில் சொல்லப்பட்ட தகவல்களாகும். இக்குமரி நிலத்தில் இருந்த நகர அமைப்புகள் குறித்தும் இந்த ஆகமம் விரிவாகப் பேசுகிறது-(31).

சங்க இலக்கியத்தில் முதுகுடுமிப் பெருவழுதி குறித்துப்பாடிய நெட்டிமையார், நிலந்தரு திருவிற் பாண்டியன் என்கிற நெடியோன் குறித்தும் அவனது நாட்டில் இருந்த பஃறுளி ஆறு குறித்தும் பாடியுள்ளார்(புறம்-9). இந்தப் பாண்டியன் நெடியோன் குறித்து 2ஆம் பதிற்றுப்பத்தில் குமட்டூர் கண்ணனாரும், மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனாரும் பாடியுள்ளனர். சங்ககால ஆதார இலக்கிய நூல்களில் இவைகளைத்தவிர வேறு தரவுகள் இல்லை. பஃறுளி ஆறும், குமரி மலைத்தொடரும் கடலில் மூழ்கியது குறித்துச் சிலப்பதிகாரம் குறிப்பிட்டுள்ளது.

சா. குருமூர்த்தி அவர்கள் நிலவியல் அறிவியலாளர்கள் கருத்துப்படி கி.மு. 9500, கி.மு. 3000, கி.மு. 1500 ஆகிய மூன்று காலகட்டங்களில் கடற்கோள் பேரழிவுகள் நடந்துள்ளன என்கிறார். இடோப்பா(ETOPO) செயற்கைக்கோள், குமரி நிலப்பரப்பானது தமிழகத்தின் தென் பகுதியில் கி.மு. 15000 வாக்கில் சுமார் 25000 ச.கி.மீ பரப்பும், கி.மு. 8000 வாக்கில் சுமார் 5000 ச.கி.மீ பரப்பும் கி.மு. 2000 வாக்கில் சுமார் 1000 ச.கி.மீ பரப்பும் கொண்டதாக இருந்துள்ளது எனக்காட்டுகிறது. ஆதலால் சா.குருமூர்த்தி அவர்களின் நிலவியல் அறிவியலாளர்கள் கருத்தையும், நவீன இடோப்பா(ETOPO) செயற்கைக்கோள் கணக்கீட்டையும், இறையனார் அகப்பொருள் உரையையும் ஒருங்கிணைத்து, கி.மு. 3000 வாக்கில் தென்மதுரையும், அதன்பின் கி.மு. 1500 வாக்கில் கபாடபுரமும் கடற்கோள்களால் அழிந்து போயின எனக் கருதலாம் என்கிறார் முனைவர் இராமசாமி அவர்கள்(32).

இன்றைய தமிழகத்தின் பரப்பு 1,30,000 ச.கி.மீ, பண்டைய தமிழகத்தின் பரப்போ இதைவிட மூன்று மடங்கு அதிகம்(4,00,000 ச.கி.மீ). ஆனால் தென்மதுரை கடற்கோளால் அழியும்முன் கி.மு. 3000 வரை, 5000 ச.கி.மீ. பரப்பு குமரி நிலப்பரப்பாக இருந்துள்ளது. கி.மு. 3000க்குப்பின் அது 1000 ச.கி.மீ. பரப்பாகக் குறைந்து போயுள்ளது. கிரீசு வாழ்ந்த வரலாறு என்கிற தனது நூலில், பண்டைய ஏதென்சு நகர அரசின் பரப்பளவு என்பது சுமார் 1000 ச,கி.மீ. தான் என்கிறார் வெ. சாமிநாத சர்மா அவர்கள். ஆதலால் கடல்கோள்களால் அழிந்துபோன பகுதி மிகச்சிறிய பரப்புதான் எனினும் அங்கு தென்மதுரை, கபாடபுரம் போன்ற தலைநகரங்களும், பிற முக்கிய நகரங்களும் இருந்து நாகரிக வளர்ச்சியும் அங்கு அதிகமாக இருந்ததால் அவைகளின் இழப்பு பெரிதுபடுத்தப் பட்டிருக்கவேண்டும். கடற்கோள்களால் பாண்டிய வேந்தன் தென்மதுரையில் இருந்து கபாடபுரத்திற்கும், கபாடபுரத்திலிருந்து மதுரைக்கும் தனது வேந்தர் ஆட்சியை மாற்றிகொண்டு வந்திருக்கவேண்டும். ஆனால் ஆரம்ப காலத்தில் இருந்தே மதுரை, கொற்கை முதலியன பிற பாண்டியக் கிளை அரசுகளால் ஆளப்பட்டு வந்திருக்க வேண்டும். இவை குறித்து மேலும் ஆய்வுகள் தேவை.

தமிழ்ச் சமூகத்தின், தமிழ் மொழியின் பழமை குறித்து இறுதியாகச் சங்கப்பாடல்களில் இருந்து இரு சான்றினை வழங்க விரும்புகிறேன். கி.மு. 3ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த ஒல்லையூர் தந்தப் பூதப்பாண்டியன் ஒரு பாண்டியக் கிளை அரசன் ஆவான். அவன் தனது புறம் 71ஆம் பாடலில் தனது பாண்டியர்குடியை நீண்டகாலமாக இருந்துவரும் குடி என்று பாடுகிறான். அது போன்றே  கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககாலச் சோழர்பகுதிப் புலவனான காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்பவர் தனது புறம் 58ஆம் பாடலில் சோழ, பாண்டிய வேந்தர்கள் ஒன்றாக இருந்த அவையில் பாண்டியர் குடியை “நல்லிசை முதுகுடி”  எனப் பாடியுள்ளார். ஆகவே 2000 வருடங்களுக்கு முந்தைய சங்க காலத்திலேயே பாண்டியர் குடி ஒரு முதுகுடியாக, ஒரு மிகப்பழமையான புகழ்பெற்ற குடியாகத் தமிழ் மக்களால் கருதப்பட்டு வந்துள்ளது. பாண்டியர்குடியின் பழமை என்பது தமிழ்ச் சமூகத்தின், தமிழ் மொழியின் பழமையைச் சுட்டிக்காட்டுகிறது.

 

பார்வை:

17.EARLY WRITING SYSTEM, A Journey from graffiti to Brahmi, K.RAJAN, PANDYA NADU CENTRE FOR HISTORICAL RESEARCH,  MADURAI-10,  2015.   PAGE: 405.

  1. “                              “             PAGE: 87.
  2.  “                                                                               “                                    PAGE: 421
  3. “                                                                             “                                      PAGE: 422
  4. “                                                                             “                                      PAGE: FOREWORD, VI.
  5. Benjamin Guy Baprngton(1830),An account of the sculptures and inscriptions at Mahamalaipur. TRANSACTIONS OF THE ROYAL ASIATIC SOCIETY. VOL 2.(paper  read on 12.07.1828) & உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ்-பி.இராமநாதன். பக்: 8, 9.
  6. “Significance of Mayilaaduthurai Find” and “Discovery of a century” in Tamil Nadu, THE HINDU    Newspaper Dated 1.5.2006 and 21.5.2008 24.முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 16, 17.

25.தொல்லியல், முனைவர் நா. மாரிசாமி, ஜூன்-2010, பக்: 43.

26.இலங்கையில் தமிழர்-கா. இந்திரபாலா, குமரன் புத்தக இல்லம், அக்டோபர் 2006, பக்:113

  1. “ “ பக்:121, 126, 127.

28.இலங்கையில் தமிழர்-ஒரு முழுமையான வரலாறு(கி.மு. 300-கி.பி. 2000), கலாநிதி முருகர் குணசிங்கம், எம்.வி வெளியீடு, 2008, பக்: 34.

29.அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி, தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்: 61, 62.

30.இலங்கையில் தமிழர்-கா. இந்திரபாலா, குமரன் புத்தக இல்லம், அக்டோபர் 2006, பக்:120.

31, 32.அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி, தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்:11-22.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.