இந்த வார வல்லமையாளர் (275)
முனைவர் நா.கணேசன்
இந்த வார வல்லமையாளராக பாரத ரத்தினம் அடல் பிகாரி வாய்பாய் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.
அடல் பிகாரி வாஜ்பாய் (டிசம்பர் 25, 1924 – ஆகஸ்டு 16, 2018) 1996ம் ஆண்டு சில காலமும், 1998ல் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் பிறந்த இவர் திருமணம் செய்து கொள்ளாதவர். 50 வருட பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 4 முறை வெவ்வேறு மாநிலங்களில் (உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் ஆவார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
வாஜ்பேயி
தூய்மைக்குப் பெயர்பெற்ற தலைவர், வெற்றி
தோல்விகளை ஒருநிலையாய்க் கொண்ட மேதை
வாய்மையிலே வழுவாதார், மோசம் என்றே
வாய்வார்த்தை கூடயிவர் பற்றி நெஞ்சில்
நோய்தவழும் மனத்தோரும் பேச மாட்டார்
நுட்பமுடன் பேசுகிற ஆற்றல் மிக்கார்
தாய்மனத்தர், சுதந்திரப்போர் தன்னில் முன்னர்த்
தடியடியடியும் சிறைவாழ்வும் பெற்ற வீரர்.
கவிஞரிவர், எழுத்தாளர், பிரம்மச் சாரி
கண்ணியவான் , அவர்பேச எழுந்து விட்டால்
அவையிலுள்ள எதிர்க்கட்சிக் காரர் கூட
ஆர்வமுடன் கேட்பார்கள், இன்று நாட்டில்
உவகையுடன் இடங்களுக்குச் சாலை மூலம்
உலாச்செல்ல முடியுமென்றால் அரிய திட்டம்
நவையிலதாய் அளித்ததுதான், ஆமாம் தங்க
நாற்கரமாம் திட்டம்மிகப் பெரிய வெற்றி!
போக்ரானில் அணுத்திட்டம் செயல்படுத்தி
புவியறிய வைத்தார் நம் நாட்டின் மேன்மை
தாக்கத்தான் பாக்கிஸ்தான் முனையக் கார்க்கில்
சாதனையைச் சரித்திரமாய் மாற்றித் தந்தார்
வாக்குக்கும் செய்கைக்கும் மாறு பாடு
வழங்காத நேர்மைக்குச் சொந்தக் காரர்
தேக்குபுகழ் நம் அப்துல் கலாமை ஏற்றுச்
சிறப்புடனே ஜனாதிபதி ஆக்கிவைத்தார்.
இனிமேலே வாஜ்பேயி போலே இங்கே
எவரைத்தான் பார்க்கிறது? வாழ்வு முற்றும்
தனியில்லாத் தனிமனிதன், சமர்த்தர், வெற்றிச்
சாதனைகள் செய்தமகான் இன்றைக் கில்லை
நனைகின்ற நம்கண்கள் அன்னார் வாழ்வின்
நாணயத்தை இங்கெடுத்துச் சொல்லும், என்றும்
நினைத்திடுவோம் வாஜ்பேயி நாமம் வாழ்க!
நீநிலத்தில் வரலாறாய் வாழ்க வாழ்க!
– இலந்தை இராமசாமி
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )