Tag: முகில் தினகரன்

  • சரிங்க…நீங்க சொல்றபடியே செஞ்சிடலாம்ங்க!

    முகில் தினகரன்

    வழக்கமாக மனைவி என்பவளின் வாயிலிருந்து அந்தத் தகவல் வரும் போது கேட்கும் அனைத்துக் கணவன்மார்களும் உற்சாகத்தின் உச்சிக்குப் போய்…உவகைக் கொந்தளிப்பில் உல்லாச ஊஞ்சலாடி…மகிழ்வர். ஆனால் திவாகர் மட்டும் அதற்கு நேர்மாறாயிருந்தான்.

    ‘என்ன…என்ன பாக்யம் சொல்றே?..நீ சொல்றது நெஜமா?’

    பாக்யலட்சுமி தலையை மேலும் கீழுமாய் ஆட்ட,

    ‘பச்…ச்சே…’ என்று சலித்தவாறே தலையில் கையை வைத்துக் கொண்டு நாற்காலியில் சென்றமர்ந்தான் திவாகர்.

    அவனின் அந்தச் செயலுக்கான காரணம் புரியாத பாக்யலட்சுமி ‘ஏங்க..நான் எவ்வளவு சந்தோஷமான வியத்தைச் சொன்னேன்..அதைக் கேட்டு…சந்தோஷப்படா விட்டாலும் அட்லீஸ்ட்…சங்கடப் படாமலாவது இருக்கலாமல்ல?…ஏன்?…என்னாச்சு உங்களுக்கு?’

    அவளை நேருக்கு நேர் பார்த்த திவாகர் ‘பாக்யம்…நான் ஒரு சின்னக் கம்பெனில…சாதாரண கிளார்க்கா வேலை பார்க்கறேன்…இன்னமும் அந்த வேலை கூட நிரந்தரமாகலை..அத்தோட எனக்கு இப்ப வர்ற வருமானம்…நம்ம ரெண்டு பேரோட செலவுக்கே சரியாப் போய்டுது..இதுல குழந்தையும் வந்திட்டா….ம்ஹூம் என்னால சமாளிக்க முடியாது சாமி……துணிமணி…பால் பவுடர்…மருந்து மாத்திரை…டாக்டர் செலவு…ன்னு என்னோட மென்னியைத் திருகிடும் செலவு…அதனால…அதனால…’

    ‘அதனால?’

    ‘நீ…இந்தக்….கருவைக் கலைச்சிடு….பின்னாடி எனக்கு வேலை நிரந்தரமாகி….நான் கை நெறையச் சம்பாதிக்கும் போது பெத்துக்கலாம்’

    ‘விருட்’டென்று தலையைத் தூக்கி அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள் பாக்யலட்சுமி. அவளுள் கோபம்…ஆவேசம்…எரிச்சல்..எல்லாம் கலவையாய்ப் பொங்கியது. தொண்டை வரை வந்துவிட்ட சொற்களைக் கஷ்டப்பட்டு விழுங்கிக் கொண்டு யோசித்தாள். ‘இவர் சொல்வது…இவரோட கோணத்திலிருந்து பார்க்கும் போது சரிதான்…ஆனா…இப்படி எல்லோரும் நெனச்சிருந்தா இந்த நாட்டுல எப்பவுமே…யாருமே..குழந்தை பெத்துக்கவே முடியாதே..ஏழ்மையும்..கஷ்டங்களும் எப்போதும் இருந்திட்டுத்தான் இருக்கும். அதற்காக நடக்க வேண்டியவற்றை நாம் நிறுத்தி வைக்க முடியுமா?…இல்லை தள்ளித்தான் போட முடியுமா?….அதும் பாட்டுக்கு அது இருந்திட்டே இருக்கட்டும்……இதும் பாட்டுக்கு இது நடந்திட்டே இருக்க வேண்டாமா?…அதுதானே வாழ்க்கை?…இதை எப்படி இந்த மனுசூனுக்குப் புரிய வைக்கறது?’

    அப்போதைக்கு அப்பிரச்சினையை ஆறப் போட நினைத்தவள் ‘சரிங்க…நீங்க சொல்றபடியே செஞ்சிடலாம்ங்க’ என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

    இரண்டு நாட்களுக்குப் பிறகு காலை பதினோரு மணியிருக்கும். பவர்கட் காரணமாக அன்று திவாகரின் கம்பெனிக்கு லீவு விட்டிருந்தார்கள்.

    பொழுது போகாமல் படுக்கையில் படுத்துக் கொண்டு ஏதோ ஒரு புத்தகத்தை அசுவாரஸியமாய் வாசித்துக் கொண்டிருந்தான். வெளியே பாக்யலட்சுமி யாருடனோ பேசிக் கொண்டிருக்கும் குரல் கேட்க மெல்ல எழுந்து ஜன்னலருகே சென்று பார்த்தான்.

    ஒடிசலான உடல்வாகுடன் நைந்து போன சேலையில் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணின் மேடான வயிற்றுப் பகுதி அவள் ஒரு நிறைமாத கர்ப்பிணி என்பதை அறிவித்துக் கொண்டிருந்தது.

    ‘யாரிவள்?…இவளோட எதுக்கு பாக்யம் பேசிட்டிருக்கா?’

    ‘த பாரு விஜயா…என் வீட்டுல…நான்…எங்க வீட்டுக்காரர்…ரெண்டு பேர்தான் இருக்கோம்…அதனால இப்போதைக்கு என் வீட்டு வேலைகளை என்னாலேயே செஞ்சுக்க முடியும்…பின்னாடி…எப்பவாது தேவைப் படும் போது உன்னைக் கூப்பிட்டுக்கறேன்…இப்ப வேண்டாம்…சரியா?’

    ‘பரவாயில்லைம்மா…இங்க…பக்கத்துல ரெண்டு வீட்டுல வேலை பார்த்திட்டிருக்கேன்…உங்க வீடும் கிடைச்சதுன்னா…மூணு வீடாய்டும்…கொஞ்சம் காசும் கூட வரும்…ஏன்னா…இன்னும் கொஞ்ச நாள்ல எனக்கு அடுத்த குழந்தையும் பொறந்திடும்…அப்புறம் இப்ப வர்ற வருமானம் பத்தாது…அதான்…கேட்டேன்’ அவள் படு யதார்த்தமாய்ச் சொல்ல,

    ‘ஏன்? உன் வீட்டுக்காரர் சம்பாதிக்கிறார்தானே?’ பாக்யலட்சுமியும் விடாமல் கேட்டாள்.

    ‘ம்ம்…சம்பாதிக்கிறார்…ஆனா…தள்ளு வண்டில பலகார வியாபாரம் பண்ணி…எவ்வளவு சம்பாதிச்சுட முடியும்?…இப்பவே அவரு சம்பாதிக்கறதையும்…நான் சம்பாதிக்கறதையும் சேர்த்துப் போட்டு செலவு பண்ணியுமே ‘அடிச்சுக்கோ…புடிச்சுக்கோ’ன்னுதான் இருக்கு…’

    ‘சரி…இப்ப உனக்கு எத்தனை குழந்தைக?’

    ‘ரெண்டு…ரெண்டும் பொட்டைப் புள்ளைக’

    ‘அப்படியிருக்கும் போது….இந்தக் கரு உண்டானப்பவே கலைச்சிருக்கணுமல்ல?…இப்பத்தான் அதையெல்லாம் வெகு ஈஸியாப் பண்ணிடறாங்களே’

    ‘எதுக்கு?….எதுக்கு கலைக்கணும்?’ அந்த விஜயாவின் குரலில் கோபம் தெறித்தது.

    ‘இதென்ன கேள்வி?….நமக்கே பற்றாக்குறை வருமானம்… அப்புறம் எதுக்கு அடுத்த குழந்தை?’ பாக்யலட்சுமி குறுஞ்சிரிப்படன் கேட்க,

    ‘என்னம்மா நீ?….பாத்தா படிச்சவளாட்டம் இருக்கே…இப்படிப் புரியாமப் பேசறே…ஏம்மா வருமானத்துக்கும் கொழந்தை பெத்துக்கறதுக்கும் என்னம்மா சம்மந்தம்?…வருமானத்தைக் கணக்கு வெச்சுத்தான் கொழந்தை பெத்துக்கணும்னா…டாட்டாவும்…பிர்லாவும்…ஆளுக்கு அம்பதாயிரம் கொழந்தைகளைப் பெத்துப் போட்டிருக்கணும்…அதேமாதிரி…ரோட்டோரத்துல…பிளாட்பாரத்துல வாழுறவங்க யாருமே கொழந்தையே பெத்துக்க கூடாது…அப்படியா இருக்கு?…ம்ஹூம்…அங்க போய்ப் பாருங்க…பணக்காரங்கெல்லாம்…அளவா…ஒண்ணும்…ரெண்டும்…இங்க பிளாட்பாரத்துக்காரங்க…கணக்கு வழக்கே இல்லாம ஏழெட்டு பெத்துக்கறாங்க’

    அவளது பேச்சில் வாயடைத்துப் போய் சிலையாய்ச் சமைந்தாள் பாக்யலட்சுமி.

    ‘த பாரும்மா…எங்களுக்கு ஒடம்பிலேயும் …மனசிலேயும் தெம்பிருக்கு…அதை வெச்சு கொழந்தைகளைப் பெத்துக்கறோம்…கையிலேயும்…காலிலேயும் தெம்பிருக்கு…அதை வெச்சு அதுகளை வளர்த்தறோம்…..அடுத்ததா ஒரு கொழந்தை பொறக்கப் போகுதுன்னா அதை வளர்க்கறதுக்காக இனி நாம எவ்வளவு அதிகம் சம்பாதிக்கறது?…அதை எப்பிடிச் சம்பாதிக்கறது? ன்னுதான் யோசிக்கணும்…அதை விட்டுட்டு அதைக் கலைக்கறதைப் பத்தி யோசிக்கக் கூடாது..ஏம்மா…ஒண்ணை யோசிச்சுப் பாரு…அதுவும் ஒரு உசுருதானே?…அது தானாவா உருவாச்சு?…நாமதானே உருவாக்கினோம்…ஆக செய்யுற தப்பையெல்லாம் நாம செஞ்சிட்டு அதைப் பலி குடுக்கறது எந்த விதத்திலேம்மா நியாயம்?’

    ‘ஆக…பொறக்கப் போற கொழந்தைக்காக வருமானத்தை அதிகப் படுத்தற முயற்சில நீ இறங்கியிருக்கே….அப்படித்தானே?’

    ‘ஆமாம்…அதுக்காகத்தானே உன் கிட்ட வேலையே கேட்டேன்?…நான் மட்டுமல்ல என் வீட்டுக்காரரும் அவரோட வருமானத்தை அதிகப்படுத்தறதுக்காக வேற ஏதோ ஒரு புது யாவாரம் பண்ண யோசிச்சிட்டிருக்கார்’

    ஜன்னலருகே நின்று கேட்டுக் கொண்டிருந்த திவாகருக்கு அந்த விஜயாவின் பேச்சு ஒவ்வொன்றும் தன்னைக் குறித்தே பேசப்படுவது போலிருந்தது.

    அவள் அங்கிருந்து நீங்கிச் சென்ற பின்னும் நீண்ட நேரம் அவள் குரல் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

    ‘பாக்யம்…பாக்யம்’ திடீரென்று மனைவியை அழைத்தான்.

    ‘ஏங்க?’ கேட்டபடியே வந்தவளிடம,;

    ‘வந்து…நீ…கருவைக் கலைக்க வேண்டாம் பாக்யம்…நாம நம்ம குழந்தைய நல்ல முறைல பெத்து…நல்ல முறைல வளர்ப்போம் பாக்யம்’

    அமைதியாய் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவள் ‘சரிங்க…நீங்க சொல்றபடியே செஞ்சிடலாம்ங்க’ என்றாள்.

    மறுநாள் காலை.

    திவாகர் அலுவலகத்திற்குச் சென்ற பின் வந்திருந்தாள் அந்த விஜயா.

    ‘ரொம்ப நன்றி விஜயா….நான் சொன்ன மாதிரியே பேசி…என் வீட்டுக்காரர் மனசை மாத்திட்டே….இல்லேன்னா இன்னேரம் என்னைக் கருவைக் கலைக்க வெச்சிருப்பார் அந்த மனுஷன்’

    ‘இதுக்கெதுக்கும்மா நன்றி?…இது ஒரு பொண்ணு…இன்னொரு பொண்ணுக்கு செய்யற கடமைம்மா.’

    அவள் வயிற்றிலிருக்கும் அந்தச் சிசுவும் பிறக்கும் முன்பே இன்னொரு சிசுவைக் காப்பாற்றிய புண்ணியத்தைக் கட்டிக் கொண்டது. 

    Share
  • மாத்தி யோசி

     

    முகில் தினகரன்
     

    ‘ஏங்க…ஒரு நிமிஷம் இருங்க…உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”

    குனிந்து காலில் ஷூவை மாட்டிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் திவாகரன் தலையைத் தூக்கி ‘சாவித்திரி….நான் ரொம்ப அவசரமாக் கிளம்பிட்டிருக்கேன்…சாயந்திரம் சொல்லக் கூடாதா உன்னோட அந்த முக்கியமான விஷயத்தை…?”

    ‘ப்ச்…இது நம்ம பொண்ணு கலைவாணி சம்மந்தப்பட்ட விஷயம்ங்க” என்று அவள் சொன்னதும் பரபரப்பானார் அவர்..

    ‘என்னது…கலைவாணி சம்மந்தப்பட்ட விஷயமா?…என்ன சொல்லு…சொல்லு”

    ‘நம்ம பொண்ணு மொட்டை மாடில உட்கார்ந்து படிச்சிட்டிருக்கும் போது….எதிர்த்த வீட்டுப் பையன்….”

    இன்ஸ்பெக்டர் நெற்றியைச் சுருக்க,

    ‘அதாங்க..எப்பப் பாரு மோட்டார; பைக்குல ‘டர்;..டர்;”ன்னு போயிட்டு வந்திட்டிருப்பானே?….அவன்தான்… அவங்க வீட்டு மாடில நின்னுட்டு இவளையே நோட்டம் விட்டுக்கிட்டு….அப்பப்ப கை காட்டிட்டு…சேட்டை பண்ணிட்டே இருக்கானாம்…நேத்திக்கு…. நேத்திக்கு….” அவள் தயங்க,

    ‘என்ன நேத்திக்கு?” கத்தலாய்க் கேட்டார் இன்ஸ்பெக்டர்;.

    ‘ஃப்ளையிங் கிஸ் குடுக்கறானாம்…பாவம் இவ…இப்ப மொட்டை மாடிக்குப் போகவே பயப்படறா..”

    ரத்தம் கொதித்தது இன்ஸ்பெக்டருக்கு ‘ராஸ்கல்…என்ன தைரியமிருந்தா ஒரு இன்ஸ்பெக்டரோட மகள்கிட்டேயே உன் வேலையைக் காட்டுவே?” ஆவேசமாய் எழுந்து தெருவில் இறங்கி எதிர் வீட்டை நோக்கி நடந்த கணவனை ஓடி வந்து தடுத்தாள் சாவித்திரி.

    ‘எங்க போறீங்க,…கொஞ்சம் பொறுமையா இருங்க…இது நம்ம பொண்ணு சம்மந்தப்பட்ட விஷயம் கொஞ்சம் நிதானமாத்தான் கையாளணும்”

    அவள் பேச்சை சிறிதும் சட்டை செய்யாமல் எதிர்; வீட்டு கேட்டிலிருந்த காலிங் பெல்லை தன் கோபத்திற்கு வடிகாலாக்கி அழுத்தினார்.

    கர்ண கடூரமாய் அலறிய அந்த காலிங் பெல்லின் ஒலி எதிர் வீட்டு இளைஞனின் தந்தையை உடனே வாசலுக்குக் கொண்டு வந்தது.

    வந்தவரிடம் அவரது அருமைப் புத்திரனின்  சேட்டைகளைச் சொல்லி ‘பார்த்து அடக்கி வைங்க…இல்லைன்னா நான் என் போலீஸ் வேலையைக் காட்ட வேண்டி வந்துடும்…” எச்சரித்தார் இன்ஸ்பெக்டர்..

    அந்த நபரோ இன்ஸ்பெக்டரின் அதட்டலுக்கும் மிரட்டலுக்கும் சிறிதும் அஞ்சாதவராய் ‘ஹல்லோ…மிஸ்டர் இன்ஸ்பெக்டர்… இது ரெண்டு பேர் சம்மந்தப்பட்ட விஷயம்…. அப்படியிருக்க என் பையனை மட்டும் எப்படித் தப்பு சொல்ல முடியும்?….உங்க பொண்ணை விசாரிச்சீங்களா?…விசாரிங.க..அதுகிட்டேயும் ஏதாவது தப்பிருக்கும்…ஏன்னா பொண்ணுக சைடுல இருந்து வரவேற்பு இல்லாம பசங்க எதுவும் செய்ய மாட்டாங்க”

    சற்றும் தயக்கமின்றி அவர் தன் மகளின் மேல் அபாண்டத்தை வீச ஆக்ரோஷமானார் இன்ஸ்பெக்டர் திவாகரன்.

    ‘யோவ்..ஏதோ வயசுல பெரியவரா இருக்கியேன்னு மரியாதை குடுத்துப் பேசினா ரொம்ப ராங்கா பேசறியே… உன்னையும்…உன் பையனையும் ஏதாவதொரு கேஸ்ல புக் பண்ணி… ஸ்டெஷனுக்குக் கொண்டு போய் லாடம் கட்டினாத்தான் திருந்துவீங்க போலிருக்கு”

    ‘அதுக்கெல்லாம் வேற ஆளைப் பாருங்க இன்ஸ்பெக்டர்.….உன்னைய விடப் பெரிய ஆளுங்கெல்லாம் என் கைக்குள்ளார இருக்காங்க….நான் நெனைச்சா..உன்னையே தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திடுவேன் தெரியுமா?”

    மீசை துடித்தது இன்ஸ்பெக்டருக்கு.  ‘ராஸ்கல்…என்னவொரு தெனாவெட்டு”

    ‘த பாருய்யா…கடைசியாக் கேட்கறேன்….உன் பையனை நீ கண்டிச்சு வைக்கறியா?..இல்லை நானே கண்டிக்கட்டுமா?”

    ‘வேண்டாம் இன்ஸ்பெக்டா;…அவன் என்னைய மாதிரி சாது இல்லை…இன்ஸ்பெக்டர்ன்னு கூடப் பார்க்காம எடுத்த எடுப்புல வீசிடுவான்”

    ‘நாயே…உன்னைய….” பற்களைக் கடித்துக் கொண்டு இன்ஸ்பெக்டர் அந்த நபரை நோக்கிப் பாய ஓடி வந்து தடுத்தாள் சாவித்திரி.

    ‘விட மாட்டேண்டி இவனுகளை… பார்த்துடறேன் ஒரு கை…” திமிறியவருடன் மல்லுக் கட்டினாள்.

    சில நிமிட போராட்டத்திற்குப் பிறகு கணவனை அங்கிருந்து நகர்த்தி வீட்டிற்குள் கொண்டு வந்தாள்.

    அடுத்த வாரத்தில் ஒரு நாள்,

    புறநகர்ப் பகுதியிலிருந்த அந்த லாட்ஜில் திடுமெனப் புகுந்த காவல் துறை ஒவ்வொரு அறையாய் அலசியது.

    கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட அழகிகளும்…பணக்கார வீட்டு இளைஞர்களும் அரைகுறை ஆடையுடன் சிக்க எல்லோரையும் வரிசையாய் ஜீப்பில் ஏற்றினார் இன்ஸ்பெக்டர் திவாகரன்.

    கடைசியாய் ஏறிய இளைஞனைக் கூர்ந்து பார்த்த இன்ஸ்பெக்டர் ‘தம்பீ….நீ? ”

    ‘யெஸ்… உங்க எதிர்; வீட்ல குடியிருக்கற பையன்தான்” என்றான் வெகு அலட்சியமாய்

    ‘ஆஹா…கெடைச்சுதுடா சான்ஸ்…இது போதும் இவனையும் இவன் அப்பனையும் மானம் கெட வைக்க” மனம் குதூகலித்தது இன்ஸ்பெக்டர் திவாகரனுக்கு.

    அதே நேரம் மனதின் இன்னொரு மூலையிலிருந்து இன்னொரு குரல் எழும்பியது ‘பழி வாங்கும் குணம் என்பது ஒரு அநாகரீகமான குணம்…அது உனக்கு இருக்கலாமா?…இவனைப் பெத்தவன்தான் ஒரு மூடன்…முட்டாள்…மகனை வளர்க்கத் தெரியாமல் வளர்த்து அவனுடைய எதிர்காலத்தையே பாழாக்கிக் கொண்டிருக்கற ஒரு பைத்தியக்காரன்… அவனைப் பழி வாங்குவதாய் நினைத்து ஒரு இளைஞனின் எதிர்காலச் சூன்யத்திற்கு நீயும் காரணமாகலாமா?…யோசி திவாகர்…எதையும் மாத்தி யோசி..மாத்தி யோசி”

    சில விநாடிகள் குழப்பத்தில் உழன்றவர்; சட்டென்று தெளிந்து ‘தம்பி…நீ வண்டில ஏற வேண்டாம்…என் கூட வா”

    ‘ஏன் இன்ஸ்பெக்டர்?…எதுக்கு என்னையத் தனியா கூப்படறீங்க?”

    அவன் அப்படிக் கேட்டது பக்கத்தில் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிளுக்கு எரிச்சலை உண்டு பண்ணி விட ‘டேய்…அய்யா கூப்பிட்டா போகாம…கேள்வியா கேட்கறே?” லத்தியால் அவனை விளாசினார;.

    அடுத்த நிமிடமே இன்ஸ்பெக்டரைப் பின் தொடர்ந்தான்.

    லாட்ஜின் ரிசப்ஷன் ஷோபாவில் அவனை அமர வைத்து ‘கூப்படு தம்பி உங்கப்பாவை…கூப்பிட்டு உடனே இங்க வரச் சொல்லு”

    தயங்கியபடியே கூப்பிட்டவன் தலை குனிந்து அமர;ந்தான். உள்ளுக்குள் தாறுமாறான எண்ணங்கள் தறிகெட்டு ஓடின. ‘என்ன பண்ணப் போறான் இந்த ஆளு?… நான் இவன் பொண்ணைப் பார்த்து செஞ்ச சேட்டைக்கெல்லாம் பழி வாங்கும் விதமா என்னையும் எங்கப்பாவையும் போட்டோ எடுத்து நாளைக்கு எல்லாப் பத்திரிக்கையிலும் போட்டு…மானத்தை வாங்கப் போறான் போலிருக்கு”

    இருபதே நிமிடத்தில் அலறியடித்துக் கொண்டு வந்த அவன் தகப்பனிடம் கான்ஸ்டபிள் விபரத்தைக் கூறி இன்ஸ்பெக்டரிடம் அழைத்து வர,

    திவாகரனைக் கண்டதும முகம் மாறினார் அவர் ‘அய்யய்யோ…இவனா?”

    ஆனால் இன்ஸ்பெக்டர் திவாகரனோ ஒரு சிறிய புன்னகையுடன் அவரை நெருங்கி அவர்; தோளில் கையைப் போட்டு ‘பயப்படாதீங்க மிஸ்டர்…பயப்படாதீங்க…. நான் உங்களை மாதிரியில்லை…காக்கி உடுப்பையும்…சல்யூட்டையும் மட்டும்தான் விறைப்பாய் வைத்திருப்பேன்…மனசை அல்ல”

    அந்த நபர் குழப்பமாய் இன்ஸ்பெக்டரையே பார்க்க,

    ‘சார;…இந்தக் காலம் நம்ம காலம் மாதிரியில்லை…இளவயசுப் பசங்க கெட்டுப் போறதுக்கான சாத்தியக் கூறுகள் இப்ப ஏராளம்…நாம்தான் அவர்களை அப்படியெல்லாம் கெட்டுப் போகாத மாதிரி வழி நடத்திக் கூட்டிட்டுப் போகணும்…நாம அதைச் செய்யாம பசங்களுக்கு சுதந்திரம் குடுக்கறதா நெனைச்சுக்கிட்டு அவங்க எதிர;காலத்தைக் கோணலாக்கிட்டிருக்கோம்…அன்னிக்கு கொஞ்சமும் யோசிக்காம என் பொண்ணு மேல எப்பேர்ப்பட்ட ஒரு அபாண்டத்தை வீசினீங்க?…அதை நான் மனசுல வெச்சுக்கிட்டு எனக்குக் கெடைச்ச இந்த சான்ஸை வேற மாதிரி உபயோகிச்சா உங்க மகனோட எதிர்காலம் என்னவாகும்னு யோசிச்சுப் பாருங்க…”

    ‘சார்…அது…வந்து…அன்னிக்கு….”

    ‘த பாருங்க…பழி வாங்க கெடைச்ச சந்தர்ப்பத்தை ஏன் அவங்களைத் திருத்தறதுக்கு கெடைச்ச சந்தர்ப்பமா ஆக்கினா என்னன்னு மாத்தி யோசிச்சேன்…அதனாலதான்… மத்தவங்களையெல்லாம் ஸ்டேஷனுக்கு அனுப்பிட்டு உங்க பையனை மடடும் தனியா வெய்ட் பண்ண வெச்சேன்!”

    பேசிக் கொண்டிருக்கும் போதே ‘தடால் ” என தன் காலில் விழுந்த தந்தையையும் மகனையும் தொட்டுத் தூக்கிய இன்ஸ்பெக்டர் ‘பரவாயில்லை…என் எண்ணம் ஜெயிச்சிடுச்சு…நீங்க உணர்ந்துட்டீங்க…இது போதும் எனக்கு” என்று சொல்லிவிட்டு  வேக வேகமாய் நடந்து ஜீப்பில் ஏறினார்..

    (முற்றும்)

     

    Share
  • தீக்கொழுந்தில் பனித்துளி (17)

     

    முகில் தினகரன்

    அத்தியாயம்  – 17

    தேவி அவ்வாறு கேட்டதும்,

    சுந்தர் தவித்தான்….துடித்தான்…அந்த விநாடியே தன் உயிர் போய், தன்னை ஒரு மாபெரும் இக்கட்டிலிருந்து காப்பாற்றி விடாதா? என எண்ணி எண்ணி மாய்ந்தான்.

    ‘ஏற்கனவே இவ கல்யாணத்துக்காக நான் ஒரு கிட்னிய வித்துட்ட விபரத்தை யாருக்கும் தெரியாம மறைச்சு வெச்சிருக்கேன்… இப்ப திருடனுக்குத் தேள் கொட்டின கதையா இவளே தன் புருஷனுக்காக என்கிட்ட கிட்னி தானம் கேட்கிறாளே!…நான் என்ன பண்ணுவேன்?…எப்படி அந்த உண்மையைச் சொல்வேன்.?”

    முகம் வெளிறிப் போய் நின்ற சுந்தரை ஊடுருவிப் பார்த்த தேவி, ‘என்னண்ணே..நான் கேட்டுட்டே இருக்கேன்…நீ பதிலே பேசாம வேற எங்கியோ யோசனை பண்ணிட்டிருக்கே?”

    ‘இல்லம்மா…அது…வந்து….இப்ப…இப்ப…நான்…மா;ப்பிள்ளைக்கு கிட்னி தானம் குடுக்க முடியாத நிலைல இருக்கேன்மா… அதான்..அதைப் பத்தித்தான்…யோசனை..” தட்டுத் தடுமாறி அவன் சொல்லி முடிக்கையில், அவனே கண் கலங்கி விட்டிருந்தான்.

    ‘விருட்‘டென்று அவனை நிமிர்ந்து பார்த்த, ‘என்னண்ணா…என்ன சொல்றே?… முடியாதுன்னா சொல்றே?” கொஞ்சமும் நம்ப முடியாதவளாய்க் கேட்டாள்.

    அவன் மௌனம் சாதிக்க,

    ‘அண்ணா…ஒரு காலத்துல நான் எது கேட்டாலும் தட்டாமச் செய்வே!…எனக்காக எதையும் விட்டுக் குடுப்பே!….உனக்கு ஞாபகம் இருக்கா?..பள்ளிக் கூடத்துல டீச்சர் வீட்டுப்பாடம் செய்யாமப் போனா அடிப்பாங்கன்னு ராத்திரி பூராவும் உட்கார்ந்து என்னோட வீட்டுப்பாடங்களை கையொடிய எழுதிக் குடுத்திட்டு…காலைல உன்னோட டீச்சர்கிட்டப் போய் உன் வீட்டுப்பாடத்தை எழுதாதற்காக நீ அடி வாங்கிக்குவியே!…அந்த அண்ணனா? இப்ப நான் கேட்டும் மறுப்பது?”

    ‘அய்யோ…தேவி…இப்படியெல்லாம் பேசாதம்மா!”

    ‘அண்ணா…நான் உன்னை விட்டா வேற யாருகிட்டண்ணா போய்க் கேட்பேன்?… எனக்கு உன்னையத் தவிர வேற யாரைண்ணா தெரியும்?”

    அவள் அழுவதையும், அவன் சமாதானப்படுத்த முடியாமல் திண்டாடுவதையும்  அந்த வழியே நடந்து சென்ற இருவர; வித்தியாசமாய்ப் பார்த்தபடியே சென்றனர்.

    ‘ஆண்டவா…நான் என்ன சொல்லி இவளுக்குப் புரிய வைப்பேன்?…என் தங்கமே….உன் புருஷனுக்கு கிட்னி குடுக்க எனக்கு மனசு இருக்கும்மா… ஆனா…கிட்னிதாம்மா இல்லை!” மனசுக்குள் கதறினான்.

    புத்து நிமிடம் அழுது ஓய்ந்தவள், ‘சரிண்ணா பரவாயில்லைண்ணா… எனக்கு வேணா என் புருஷன் உயிர் பெரிசா இருக்கலாம்…உனக்கு உன் உயிர்தானே பெரிசு!… ஹூம்…என் கிட்னி வேற பொருந்தாமப் போச்சு… இல்லேன்னா…நானே கொடுத்திருப்பேன்… இப்படி கண்டவங்க கிட்டக் கெஞ்சிட்டிருக்கற நிலைமையே வந்திருக்காது!”

    ‘தே…வீ…” அவன் கத்திய கத்தலில் அந்த வராண்டாவில் ஆங்காங்கு நின்று கொண்டிருந்தவர;கள் திடுக்கிட்டுக் திரும்பினர;.

    ‘என்ன…என்ன வார;த்தை சொல்லிட்டே தேவி…என்னையா கண்டவங்கன்னு சொல்றே?..நான் உன்னோட அண்ணன்மா!…உனக்காக உடல்…பொருள்…ஆவி…அத்தனையையும் குடுக்கத் தயங்காத அண்ணன்மா!”

    ‘ஆனா..கிட்னி மட்டும் தரமாட்டே!….அப்படித்தானே?”

    சுந்தர; நொந்து போனான். ‘நான் என்ன செய்வேன்?…எப்படி இவகிட்ட என்னோட நிலைமைச் சொல்வேன்?” தவித்தான்.

    சில நிமிட அமைதிக்குப் பின், நீண்ட பெருமூச்சு விட்ட தேவி, ‘எனக்கு ஏண்ணா கல்யாணம் பண்ணி வெச்சே?…நானா வந்து உன்கிட்ட ‘எனக்குக் கல்யாணம் பண்ணி வை”ன்னு கேட்டேன்?…நீயே பாத்து இப்படியொரு நோயாளிப் புருஷனை என் தலைல கட்டி வெச்சிட்டு…இப்ப ‘எனக்கென்ன?…நீயாச்சு…உன் புருஷனாச்சு”ன்னுட்டு திரும்பிக்கிட்டுப் போறியே…இது நியாயமா?”

    ‘தேவி…வேண்டாம்மா…இப்படி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசாதம்மா”

    ‘பேசுவேன்..நான் பேசுவேன்…என்னால பொறுக்க முடியலை…அதான் பேசறேன்…எல்லோரோட சுயரூபமும் இப்பத்தான் தெரியுது!…’தங்கச்சி…தங்கச்சி”ன்னு தேனொழுகப் பேச மட்டும் தெரியும்!…அதே அவளோட தாலிக்கு ஒரு ஆபத்துன்னு வரும் போது உதவ மனசு வராது!…பாசமாவது மண்ணாங்கட்டியாவது…எல்லாம் வேஷம்…மோசம்…”

    தன் கணவன் உயிருக்கு ஆபத்து என்கிற நிலையில் எந்தப் பெண்ணுமே இப்படித்தான் பேசுவாள்!…அதற்கு தேவி ஒன்றும் விதி விலக்கல்ல, என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டதால் சுந்தருக்கு அவள் மேல் போபமே சிறிதும் தோன்றவில்லை…மாறாய் பரிதாபம்தான் ஏற்பட்டது.  இந்தச் சூழ்நிலையில் அவளுடன் மேலும் மேலும் பேசுவது அவள் கோபத்தை இன்னும் அதிகரித்து இதை விடத் தாறுமாறாய்ப் பேச வைத்துவிடும் என்பதை உணர;ந்து அமைதியாய் அந்த இடத்தை விட்டு அகன்றான்.

    ‘போறான் பாரு!…நான் பேசிக்கிட்டேயிருக்கேன் போறான் பாரு!…நான் எக்கேடு கெட்டா இவனுக்கென்ன?…நாளைக்கு நான் புருஷனைத் தொலைச்சிட்டு நின்னா பொறந்த வீட்டுக் கோடி போடவாது வருவியா?…இல்ல அதுவும் இல்லையா?”

    பீறிட்டு வந்த அழுகையை பல்லைக் கடித்துக் கொண்டு அடக்கியவாறே ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினான் சுந்தர;.

    தொடரும்

    Share
  • மாற்று(ம்) திறனாளி

    முகில் தினகரன்

    மாலை ஏழு மணிவாக்கில் வீடு திரும்பிய குணசேகர் உள்ளே வரும் போதே ‘செல்விக்குட்டி….அப்பா உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் கண்டுபிடி’ என்று கூவிக்கொண்டே வந்தார். இரண்டு கைகளும் பின்புறம் எதையோ மறைத்துக் கொண்டிருந்தன. ஆனால் சோக முகத்துடன் சோபாவில் அமர்ந்திருந்த எட்டு வயது செல்வியின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை.

    ‘அடடே…என் ராசாத்திக்கு ஏதோ கோவம் போலிருக்கே..’ என்றபடி அவள் அருகில் அமர்ந்து அவள் தாடையைத் தொட்டு;த் தூக்கி ‘ஏண்டா செல்லம்…அம்மா திட்டிட்டாளா?’

    அது இட, வலமாய்த் தலையாட்டியது.

    ‘இல்லையா?…அப்ப ஸ்கூல்ல…டீச்சர் திட்டினாளா?’

    ‘ம்ஹூம்’ என்றவாறு உள் அறையில் தரையில் அமர்ந்து எதையோ வரைந்து கொண்டிருந்த தங்கை நிர்;மலாவைக் காட்டினாள்.

    செல்வியும் நிர்மலாவும் இரட்டைகள். ஓரே அச்சில் வார்த்தாற் போல் ஒரே நிறத்தில்….ஒரே பருமனில்….ஒரே உயரத்தில் இருக்கும் அவர்களிடத்தில் ஒரே வித்தியாசம் சின்னவள் நிர்மலாவின் வலது கால் கணுக்கால் பகுதி சற்று வளைந்திருப்பதும்….அதன் காரணமாய் அவள் நடக்கும் போது சற்று விந்தி விந்தி நடப்பதும்தான். பாவம் சிக்கலான ஆயுதப் பிரசவ போராட்டத்தின் விளைவு அது.

    சின்னவளை அவள் சுட்டிக் காட்டியதன் மூலம் நிலைமையை ஓரளவு யூகித்துக் கொண்ட குணசேகர் ‘ஓ….தங்கச்சிப் பாப்பா உன் கூட சண்டை போட்டுட்டாளா?’

    மறுபடியும் செல்வி இட, வலமாய்த் தலையாட்ட,

    ‘அய்யய்யோ…ஒண்ணும் புரிய மாட்டேங்குதே!’ என்று தலையைப் பிய்த்துக் கொண்டவர் சமையலறைப் பக்கம் திரும்பி ‘கலா…ஏய் கலா…’ மனைவியை அழைத்தார்.

    ‘என்னங்க…?’

    கையைத் துடைத்தபடி வந்தவளிடம் கேட்டார் ‘ஏண்டா செல்விக்குட்டி சோகமா இருக்கா?’

    ‘அதையேன் என்கிட்டக் கேட்கறீங்க…அவகிட்டவே கேளுங்க…’

    ‘அதுதான் வாயைத் திறந்து பேசவே மாட்டேங்குதே..’

    ‘என்ன?…பேச மாட்டேங்குதா?….அது செரி..இத்தனை நேரம் என்கிட்ட சரிக்கு சரி பேசி சண்டை போட்டாளில்ல…அதுல வாய் வலி கண்டிருக்கும்..’

    ‘ஓ…அப்ப நீதான் சண்டை போட்டிருக்க…’

    ‘அய்யய்யோ…சாமி…என்னை ஆளை விடுங்க..எனக்கு வேலையிருக்கு’ சொல்லிவிட்டு சமையலறையை நோக்கி அவள் ஓட்டமாய் ஓடி விட, உள் அறையிலிருந்து விந்தி விந்தி நடந்து வந்த சின்னவள் நிர்மலா குணசேகரின் தோளைத் தொட்டு ‘டாடி..நான் சொல்றேன்…’ என்றாள்.

    ‘சொல்லுடா…என் தங்கம்’

    ‘வந்து…வந்து….ஸ்கூல்ல பரத நாட்டியம் சொல்லித் தர்றாங்க…மாசம் ஐநூறு ரூபா ஃபீஸ்…’

    ‘அவ்வளவுதானே?…நான் சொல்றேன் நீ சேர்ந்துக்கடா செல்லம்…’ என்றான் குணசேகர் செல்வியைப் பார்த்து,

    அதுவரை அமைதி காத்து அமர்ந்திருந்த செல்வி திடீரென்று ஆவேசமாகி ‘நீ என்னைச் சேரச் சொல்லுறே…ஆனா இந்த அம்மா….என்னைய சேர வேண்டாம்…தங்கச்சி மட்டும் சேரட்டும்னு சொல்லுறா…’

    ‘சரி…சரி…ரெண்டு பேருமே சேருங்க…’

    ‘அது செரி…ரெண்டு பேருக்கு மாசம் ஆயிரம் ரூபாயை டான்ஸ் க்ளாஸூக்குக் குடுத்துட்டு…பற்றாக்குறைக்கு எங்க போறது?..ம்ஹூம்…அதெல்லாம் சரிப்பட்டு வராது…ஏதோ ஒருத்திக்குன்னா…கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணலாம்…’

    ‘அப்படின்னா பெரியவளைச் சேர்த்து விடலாமே…’

    ‘த பாருங்க…இந்த விஷயத்துல நான் எடுக்கறதுதான் முடிவு….சின்னவதான் சேர்றா…அவ்வளவுதான்…மேற்கொண்டு இதைப் பத்தி பேச வேண்டாம.;’ கறாராய்ச் சொல்லி விட்டு கணவன் அழைப்பதையும் செல்வி வாய் விட்டு அழுவதையம் சிறிதும் சட்டை செய்யாது சமையலறை நோக்கி நடந்தாள் கலா.

    ‘அன்னிக்கும் இப்படித்தான் டிராயிங் க்ளாஸூக்கு என்னை வேண்டாம்னுட்டு தங்கச்சிய சேர்த்து விட்டுச்சு….இப்ப டான்ஸ் க்ளாஸூக்கும் அதே மாதிரி செய்யுது இந்த அம்மா..’ அழுது ஆர்ப்பாட்டம் செய்த மூத்தவள் செல்வியை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது குணசேகருக்கு.

    ‘ச்சே…ஏன்தான் இந்தக் கலா இப்படிப் பிடிவாதம் பிடிக்கறாளோ?’

    இரவு. குழந்தைகள் இரண்டும் உறங்கியபின் தன்னிடம் வந்த கணவர் முகத்தை உற்று நோக்கினாள் கலா. அதில் வாட்டம் தெரிய அதற்கான காரணத்தை யூகித்துக் கொண்டவள் ‘என்னங்க…என் மேல் கோபமா?’ கேட்டாள்.

    ‘ம்ம்ம்…கோபம்னு இல்லை…ஒரு வருத்தம்…அவ்வளவுதான்..’

    ‘எனக்குத் தெரியும்…நான் பெரியவளை விட்டுட்டு சின்னவளை மட்டும் டான்ஸ் க்ளாஸ்ல சேர்த்து விடறேனே…அதுதான் உங்க வருத்தத்திற்குக் காரணம்….சரிதானே?’

    ‘ஆமாம்…அன்னிக்கு டிராயிங் க்ளாஸூக்கும் இப்படித்தான் செய்தே…ஏன்?…என்னாச்சு உனக்கு?’

    பதிலேதும் சொல்லாமல் மெலிதாய்ச் சிரித்தாள் கலா.

    அவளின் அச்சிரிப்பு அவனுள் கோபத்தை மூட்டி விட ‘ஏண்டி…சின்னவளே ஊனக்காலை வெச்சுக்கிட்டு…விந்தி விந்தி…நடந்திட்டிருக்கா…அவளுக்கு பரத நாட்டியம் ரொம்ப முக்கியமா?’ கத்தலாய்க் கேட்டான்.

    ‘ஆமாங்க…சொன்னாலும் சொல்லாட்டியும் அவளுக்குத்தாங்க அது ரொம்ப முக்கியம்…’ அவளும் கத்தலாகவே பதில் சொல்ல, வாயடைத்துப் போனார் குணசேகர்.

    சில அவஸ்தையான நிமிடங்களுக்குப் பிறகு ‘என்ன கலா…என்ன சொல்ற நீ?..கொஞ்சம் புரியம்படிதான் சொல்லேன்…’ தணிவாய்க் கேட்டார் குணசேகர்.

    ‘இங்க பாருங்க…நான் சொல்றதை நல்லாக் கேட்டுக்கங்க….பெரியவ செல்வியைப் பற்றிப் பிரச்சினையே இல்லைங்க…அவ நார்மலா இருக்கா…சுமாராப் படிச்சு..எதிர்காலத்துல ஒரு சுமார் லெவலுக்கே வந்தாலும் யாரும் அவளை ஏதும் குறை சொல்ல முடியாது…அவ கல்யாணம் கூட ஈஸியா நடந்திடும்…ஆக…ஒரு இயல்பான வாழ்க்கைங்கறது அவளுக்கு உத்தரவாதமாயிருக்கு..என்ன நான் சொல்றது சரிதானே?’

    ‘சரிதான்…’

    ‘ஆனா சின்னவளைப் பொறுத்தவரை அப்படியில்லை….அவ உடல்ல ஆண்டவன் ஒரு குறையை வெச்சிட்டான்…இப்ப….பெரியவ மாதிரியே இவளும் ஒரு சுமார் லெவல்ல இருந்தான்னு வெச்சுக்கங்க….அப்ப அவளோட குறை அவளுக்கும் சரி…மத்தவங்களுக்கும் சரி ஒரு பெரிய விஷயமாத் தெரியும்…அது அப்படித் தெரியக் கூடாதுன்னா…அவ படிப்பு தாண்டிய சில விஷயங்கள்ல திறமைசாலியா இருக்கணும்…’

    நெற்றியைச் சுருக்கியவாறே கேட்டுக் கொண்டிருந்த குணசேகருக்கு லேசாய்ப் புரிய ஆரம்பித்தது.

    ‘இப்பவே அவளுக்கு ஓவியம் நல்லா வருது….இன்னும் டிராயிங் க்ளாஸ்ல சேர்த்து அதை அவ டெவலப் பண்ணினா நிச்சயம் ஓவியத்துல ஒரு சாதனையைப் படைப்பா…அதே மாதிரிதான் பரத நாட்டியம்…இப்ப இருந்தே பயிற்சியில் ஈடுபட்டா நாட்டியத்துல ஒரு சாதனையாளரா அவ வர முடியும்…அது மாதிரியான சாதனைகளை அவ நிகழ்த்தும் போது அவ மாற்றுத் திறனாளியா மத்தவங்க கண்ணுக்குத் தெரிய மாட்டா…குறைகளை மாற்றும் திறனாளியாத்தான் தெரிவா…அதனாலதான்….’

    தன் மனைவியின் அற்புதமான தொலை நோக்குப் பார்வையில் மெய் சிலிர்த்துப் போன குணசேகர் அவளை பெருமையாய்ப் பார்த்து பொறுமையாய் அணைத்தார்.

    (முற்றும்)

    Share
  • புதிய கலப்பைகள்

    முகில் தினகரன்

    மூட நம்பிக்கை
    முட்புதர்களுக்கு
    முடிவுரை எழுதிடுவோம்!
    முகத் தடாகத்தில்
    முல்லைச் சிரிப்பால்
    முன்னுரை வரைவோம்!

    பழமைப் பதர்களை
    புதிய சிந்தனையால்
    பளபளப் பாக்கிடுவோம்!
    புதுமைப் பூகோளத்தைப்
    புரவியேற்றி
    பூரித்துப் புடைப்போம்!

    வறுமை வியாதிக்கு
    வயல்வெளி மருந்திட்டு
    விரட்டி வீழ்த்திடுவோம்!
    வெறுமை வானத்தை
    வெண்புறா கூட்டத்திற்கு
    விலைபேசி விற்றிடுவோம்!

    தடுக்கும் தளைகளை
    தகிக்கும் விரல்களால்
    தெறிக்கச் செய்திடுவோம்!
    கெடுக்கும் கயமையை
    கருணைக் கோடாரியால்
    கிழித்துத் துடைப்போம்!

    உழைப்புக் களத்தில்
    உயர்வுக் குணத்தை
    உரமாய்த் தெளிப்போம்!
    கலப்பைக் கூரில்
    கையேந்து குணத்தை
    காணாது போக்கிடுவோம்!

     

    http://india.blogs.nytimes.com/2012/03/16/budget-2012-13-infrastructure-industry-and-agriculture/

    படத்துக்கு நன்றி

    Share
  • தீக்கொழுந்தில் பனித்துளி (16)

     

    முகில் தினகரன்

    அத்தியாயம்  – 16

         அன்று காலை பதினோரு மணியிருக்கும். தறியின் முன் நின்றபடி அறுந்து போன நூலை நாடாவிற்குள் நுழைத்து, வாயால் உறிஞ்சிக் கொண்டிருந்த சுந்தரிடம் வந்த ரைட்டர; கதிர;வேல், ‘உன்னைப் பார;க்க உன் தங்கச்சி வந்திருக்காப்பா!”

     

         ‘தேவியா?….எதுக்கு இந்த நேரத்துல?” குழப்பத்துடன் தறிக்கூடத்தை விட்டு வெளியே வந்தான்.

     

         ஆபீஸ் ரூமிற்கு முன் நின்று கொண்டிருந்த தேவி இவனைப் பார;த்ததும் கண் கலங்கினாள்.

     

         ‘என்ன தேவி?…என்ன பிரச்சினை?”

     

         ‘அண்ணா!…கொஞ்சம் என் கூட வர முடியுமா?”

     

         ‘எங்கேம்மா?”

     

         ‘ஆஸ்பத்திரிக்கு!”

     

         ‘என்னது?…ஆஸ்பத்திரிக்கா?…என்னம்மா..யாருக்கு என்னாச்சு?” படபடப்பாகிக் கேட்டான்.

     

         ‘அவருக்குத்தான்”

     

         ‘மாப்பிள்ளைக்கா?…என்னாச்சு?”

     

         ‘மொதல்ல என் கூடக் கிளம்பி வாண்ணே!”

     

         உள்ளே சென்று ரைட்டரிடம் சொல்லிக் கொண்டு, அவன் கொடுத்த அர;ச்சனைகளை சத்தமில்லாமல் பெற்றுக் கொண்டு, அதன் தாக்கம் சிறிதும் முகத்தில் தெரியாதபடி பாவத்தை மாற்றிக் கொண்டு தேவியுடன கிளம்பினான் சுந்தர;.

     

    ——

    அந்தத் தனியார; மருத்துவமனை பளிங்கு மேடை போல் ‘பளிச்”சென்று படு சுத்தமாயிருந்தது.  கூட்டமும் கூட அவ்வளவாக இல்லை.

     

         தேவியுடன் வராண்டாவில் நடந்தவன், ‘ஏம்மா…நாலஞ்சு நாளாவே வாந்தி எடுத்திட்டிருக்கார;ன்னு சொல்றே!…ஏன் எனக்கு தகவலே சொல்லியனுப்பலை?”

     

         ‘அது…வந்து….சாதாரண அஜீரணக் கோளாறாத்தான் இருக்கும்னு நெனச்சோம்!…கடைசில இங்க வந்து எல்லா டெஸ்டும் எடுத்த பிற்பாடுதான் தெரிஞ்சுது…இது…வேறயாம்!” தேவியின் குரலில் லேசாய் கர..கரப்புத் தட்டியது.

     

    ‘வேறேன்னா?…என்னவாம்?” சுந்தர; சற்று அதட்டலாகவே கேட்டான்.

     

    ‘அது…அது…அப்புறம் சொல்றேண்ணா!” என்றவள் ‘டாக்டர;.மு.பே.ராமலிங்கம்‘ என்ற எழுத்துக்கள் பொருத்தப் பட்ட அறையின் முன் நின்று, மெல்லக் கதவைத் தட்டினாள்.

     

    ‘யெஸ்…கம் இன்!” உள்ளேயிருந்து கம்பீரமான குரல் வர,

     

    இருவரும் உள்ளே நுழைந்தார;கள்.

     

    ‘டாக்டர;…இவரு என்னோட அண்ணன்…இவரோடது பொருந்துமான்னு டெஸ்ட் பண்ணிப் பாருங்க டாக்டர;.”

     

    சுந்தரை மேலிருந்து கீழ் வரை பார;த்த டாக்டர;, ‘என்ன மிஸ்டர; உங்க சிஸ்டர; எல்லா விவரத்தையும் சொல்லிட்டாங்கல்ல?”

     

    ‘ஆம்” என்று சொல்லவும் முடியாமல் ‘இல்லை” என்று சொல்லவும் முடியாமல், திணறினான் அவன். ‘இங்க என்ன நடக்குது? இவ எதுக்கு என்னைய டெஸ்ட் பண்ணச் சொல்றா?” குழம்பினான்.

     

    ‘டாக்டர; அவரெல்லாம் ‘ஓ.கே!” சொல்லிட்டார;…நீங்க டெஸ்ட் பண்ணிடுங்க!” தேவி அவசரப்பட்டாள்.

     

    சுந்தருக்கு தலையும் புரியவில்லை…வாலும் புரியவில்லை. ‘நான் எதுக்கு ஓ.கே! சொன்னேன்?…”

     

    ‘சரிம்மா…நீங்க ரெண்டு பேரும் வெளில வெய்ட் பண்ணுங்க!…நான் டியு+ட்டி டாக்டரை அனுப்பறேன்!”

     

    தேவியும், சுந்தரும் அந்த அறையை விட்டு வெளியேறி வராண்டா சோபாவில் வந்தமர;ந்தனர;.

     

    இன்னும் குழப்பத்திலிருந்து மீளாத சுந்தர;, மெல்லக் கேட்டான். ‘தேவி…இங்க என்ன நடக்குதுன்னே எனக்குப் புரியலை…எனக்கு என்ன டெஸ்ட் பண்ணனும்கறே?…நான் நல்லாத்தானே இருக்கேன்?”

     

    எங்கே டெஸ்ட்…அது..இது..என்று ஆரம்பித்து அந்த வயிற்றுத் தழும்பிற்கான உண்மையான காரணத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து விடுவார;களோ…என்று அவன் உள்ளுர அஞ்சினான்.

     

    ‘அண்ணா…அது..வந்து…அவருக்கு வாந்தி தொடர;ந்து வந்ததுக்கு டெஸ்ட் பண்ணிணப்பத்தான் தெரிஞ்சது…அவருக்கு…அவருக்கு..”

     

    ‘சொல்லும்மா…அவருக்கு என்ன?”

     

    ‘கிட்னி ஃபெயிலியராம்!” சொல்லி விட்டு கதறினாள் தேவி.

     

    ஆடிப் போனான் சுந்தர;.

     

    ‘கடவுளே…உன் விளையாட்டை என் வாழ்க்கையில் காட்டியது போதாதுன்னு…இப்ப என் தங்கை வாழ்க்கையிலும் காட்ட ஆரம்பிச்சிட்டியா?”

     

    ‘அதாண்ணா…அவருக்கு உன்னோட கிட்னியைத் தானம் தர;றதுக்காக…உன்னைய அழைச்சிட்டு வந்தேன்!…அது பொருந்துதான்னு பார;க்கறதுக்காகத்தான் உனக்கும் டெஸ்ட்”

     

    சம்மட்டியால் யாரோ நடு மண்டையில் ஓங்கி அடித்தாற் போலிருந்தது சுந்தருக்கு. காலடியில் பு+மி நழுவிப் போய்க் கொண்டேயிருக்க,  தலை ‘விர;” ரென்று ராட்டினம் போல் சுழன்றது.

     

    ‘என்னம்மா…நீ என்ன சொல்றே?” குழறலாய்க் கேட்டான்.

     

    ‘ஏண்ணா…உன்னோட மாப்பிள்ளைக்காக நீ இது கூடச் செய்ய மாட்டியா?…அட…அவருக்காக இல்லாட்டியும்..உன் அன்புத் தங்கைக்காகவாது செய்வாய் இல்ல?”

     தொடரும்

    Share
  • இது என் சொத்து

    முகில் தினகரன்

    அவள்….ஸ்ருதி!

    ‘இயற் பெயரா?’ என்று கேட்டால், பதில் சொல்லாமல் அழகாய்ப் புன்னகைப்பாள். காரணம் அவள் தொழிலுக்கு அதெல்லாம் தேவையில்லாத கேள்வி.

    ‘பணம் கொடுத்து..சுகம் வாங்கிப் போக வந்தவனுக்கு…பெயர் எதற்கு?…அப்படித்தான் அவசியமென்றால்…எந்தப் பெயர் பிடிக்குமோ அதை வைத்துக் கொள்ள வேண்டியதுதானே?…’ என்பாள். அதே நேரம், அவளை யாராவது கொச்சையாக விபச்சாரி என்றோ…வேசி என்றோ குறிப்பிட்டு விட்டால் அவ்வளவுதான், கொதித்தெழுவாள்.

    ‘நோ…இத்தோட சரி…இனிமே…இந்த மாதிரியெல்லாம் என்னைக் கூப்பிடுற வேலை வெச்சுக்காதீங்க…அப்புறம் மரியாதை கெட்டுடும்…!…வேணும்ணா…சி.ஜி ன்னு சொல்லுங்க…சி.ஜின்னா…கால் கேர்ள்…ஓ.கே.வா?’ என்பாள்.

    அந்த சி.ஜி.யின் இன்றைய புரோக்ராம் கோவையைச் சேர்ந்த இளம் தொழிலதிபரான சஞ்சீவ் ரங்க பிரசாத்துக்கு கம்பெனி கொடுப்பது. அதற்காகத்தான் அவனுடன் ஊட்டி மலையேறி…சேரிங் கிராஸ் பகுதியிலிருந்த அந்த உயர்தர ஹோட்டலில் அறை எண் 336-ல் அரை குறை ஆடையுடன்…நுரைப்பூ மெத்தையில் இந்த நிமிடம் படுத்துக் கிடக்கிறாள்.

    அறையின் காலிங் பெல் நாசூக்காய் சிணுங்க. பாத்ரூமிலிருந்த சஞ்சீவ் ரங்க பிரசாத், ‘ஹேய்…யாருன்னு பாருடி’ என்றான் அங்கிருந்தபடியே,

    எழுந்து, ஒயிலாய் நடந்து கதவைத் திறந்தாள்.

    வெய்ட்டர் உணவுப் பதார்த்தங்கள் தாங்கிய வண்டியுடன் நிற்க, விலகி வழி விட்டாள்.

    வுண்டியைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தவன், அதை அறையின் டைனிங் டேபிள் அருகில் நிறுத்தி விட்டு, ‘வேற ஏதாவது வேணும்னா கால் பண்ணுங்க மேடம்’ என்று சொல்லி விட்டுத் திரும்பிய போதுதான் அவள் அதைக் கவனித்தாள்.

    அவன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து வெளியே தொங்கிக் கொண்டிருந்தது ஒரு தாலி.

    ‘ஹேய்..ஹேய்..ஒன் மினிட்..அதென்ன பேண்ட் பாக்கெட்டில்?’ அவள் மிரட்டலாய்க் கேட்க,

    நடுங்கிப் போனான் அந்த வெய்ட்டர். ‘மேடம்..மேடம்…சத்தம் போடாதீங்க மேடம்…ப்ளீஸ்’

    ‘நோ…உன்கிட்ட ஏதோ தப்பிருக்கு….உண்மையைச் சொல்லு எங்க கெடைச்சது உனக்கு இந்தத் தாலி?’

    ‘மேடம்…மேடம்…ப்ளீஸ் மேடம்’ அவன் பதில் சொல்லாமல் ஒரு வித பதட்டத்துடன் கெஞ்ச,

    ‘ச்சூ…மொதல்ல இப்படிக் கெஞ்சறதை நிறுத்திட்டு அது எப்படி உன் பாக்கெட்டுக்கு அதைச் சொல்லு…’

    அவன் அப்போதும் கல்லுளிமங்கனாய் நின்றான்.

    ‘ஓ.கே…நான் ஹோட்டல் மேனேஜரைக் கூப்பிட்டுப் பேசிக்கறேன்’ சொல்லியவாறே அவள் போனைத் தொட,

    ‘அய்யோ…அய்யோ…வேண்டாம் மேடம்..நான் உண்மையைச் சொல்லிடறேன் மேடம்….இங்க டிபன் கொண்டு வந்த மாதிரியே பக்கத்து ரூமுக்கும் ஒரு வண்டி கொண்டு போனேன்…அதை உள்ளார கொண்டு போய் விட்டுட்டுத் திரும்பி வரும் போது பார்த்தேன்…டீப்பாய் மேலே…இந்த தங்கத்தாலி வெச்சிருந்திச்சு….அந்த அறையில் தங்கியிருந்த பெண்தான்; தன்னோட தாலி கழட்டி வெச்சிட்டுக் குளிக்கப் போயிருந்தாங்க…அந்தப் பெண்ணோட புருஷன் நான் வந்ததையே கவனிக்காம பால்கனிப் பக்கமா நின்னு மும்முரமா செல்போன் பேசிட்டிருந்தாரு…பார்த்தேன்.. டபக்னு எடுத்துப் பாக்கெட்ல போட்டுட்டு வந்திட்டேன்…’

    ஸ்ருதி அவனை எரித்து விடுபவள் போல் பார்க்க,

    ‘என்னைய மன்னிச்சுடுங்க மேடம்…இப்பவே இதைக் கொண்டு போய் நானே திருப்பிக் குடுத்திடறேன் மேடம்…என்னையக் காட்டிக் குடுத்துடாதீங்க மேடம்…ப்ளீஸ்’

    ‘நோ…உன்னைய நான் நம்ப மாட்டேன்..’

    சட்டென்று பாக்கெட்டிற்குள் கையை விட்டு அதை வெளியே எடுத்தவன், ‘வேணா நீங்களே…ஏதோ ஒரு காரணம் சொல்லிக் கொடுத்திடுங்க மேடம்…என்னைய மட்டும்…’

    ‘ஓ.கே..நானே குடுத்திடறேன்.’ ஏன்றபடி அவள் அதை வாங்கிக் கொள்ள, தயங்கியபடியே வெளியேறினான் வெய்ட்டர்.

    பத்து நிமிடங்களுக்குப் பிறகு பாத்ரூமிலிருந்து வெளியே வந்த சஞ்சீவ் ரங்க பிரசாத் அந்த விநாடியில் அறைக்கு வெளியே கேட்ட காலடிச் சப்தங்களைக் கேட்டு அலறினான். ‘ஓ..காட்…போலீஸ் ரெய்ட்….போச்சு…போச்சு….என் மானமே போச்சு…நாளைக்குப் பேப்பர்ல ‘இளம் தொழிலதிபர் பலான பெண்ணுடன் கைது’ன்னு கொட்டை எழுத்துல போடப் போறான்…’ கைகளைப் பிசைந்தபடி அறைக்குள் இங்குமங்கும் நடந்தவனை புன்னகையுடன் பார்த்தாள் ஸ்ருதி.

    ‘சிரிக்கறியா?….உனக்கு இதெல்லாம் பழகின விஷயம்…அதனால பயமில்லாமச் சிரிக்கறே…பட்..எனக்கு?…பிரெஸ்டிஜ்  இஷ்யூ’

    கதவு தட்டப்பட்டது.

    நடுங்கினான்.

    மீண்டும் கதவு தட்டப்பட, சிறிதும் தயக்கமின்றிப் போய் திறந்தாள் ஸருதி.

    வெளியே நின்று கொண்டிருந்த இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிள்களும் அவள் கழுத்தில் மின்னிக் கொண்டிருந்த தாலியையும்…உள்ளே வெற்றுடம்புடன் நின்று கொண்டிருந்த சஞ்சீவ் ரங்க பிரசாத்தையும் மாறி மாறிப் பார்த்து விட்டு,

    ‘ஸாரி மேடம்…ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்….’என்று சொல்லி விட்டு நகர்ந்தனர்.

    கதவைத் தாழிட்டு விட்டுத் திரும்பிய அவளை வியப்பு மேலிடப் பார்த்தான் சஞ்சீவ் ரங்க பிரசாத்.

    ‘ரொம்பக் குழம்பாதீங்க…இதோ…இந்தத் தாலிதான் இப்ப நம்மைக் காப்பாத்தியிருக்கு’ என்றாள்.

    அப்போதுதான் அதைக் கவனித்தவன், ‘உன் கழுத்துல…எப்படி…தாலி?’

    சொன்னாள்.

    முழுவதையும் கேட்டு முடித்தவன் வெகுவாய் ஆச்சரியப் பட்டான், ‘நம்பவே முடியலை…இப்படியெல்லாம் கூட நடக்குமா?’

    ‘ஓ.கே…நான் இப்பவே போய் இந்தத் தாலியை அந்தப் பொண்ணுகிட்டக் குடுத்திட்டு வந்திடறேன்…’

    வேகவேகமாய்ப் போன ஸ்ருதி அதே வேகத்தில் திரும்பி வந்தாள்.

    ‘ஏன்?…என்னாச்சு?…திருப்பிக் குடுக்கலையா?’ சஞ்சீவ் ரங்க பிரசாத் கேட்க,

    ‘ரூம் பூட்டியிருந்திச்சு…வெய்ட்டர்கிட்டக் கேட்டேன்…அவங்க அப்பவே…ரெய்டெல்லாம் வர்றதுக்கு முன்னாடியே காலி பண்ணிட்டுப் போயிட்டாங்களாம்’

    ‘சரி…விடு’ என்றபடி அந்தத் தாலியை அவள் கையிலிருந்து வாங்கி சஞ்சீவ் ரங்க பிரசாத் திடீரென்று பிளிறினான், ‘ஹேய்…இதுல ஒரு லாக்கெட் இருக்கு’

    ‘அப்ப ஓப்பன் பண்ணிப் பாருங்க…நிச்சயம் அதுல போட்டோ இருக்கும் ..அதை வெச்சுக் கூட அவங்களைக் கண்டுபிடிக்கலாம்’

    அதைத் திறக்க முயற்சித்தவன் அது முடியாமல் போக, ‘ச்சை…இந்தா…நீயே திற’ என்றவாறு அவளிடம் தந்தான்.

    அதை வாங்கி வெகு எளிதாகத் திறந்தவள் அதிலிருந்த போட்டோவைப் பார்த்ததும் அதிர்ந்தாள். ‘இவன்….இவன்…ரமேஷ்’

    ‘அப்படின்னா…உனக்குத் தெரிஞ்சவனா…அப்பப் பிரச்சினையே இல்லை…ஈஸியாக் கண்டுபிடிச்சுக் குடுத்துடலாம்’

    ஆனால்…..ஸருதி அதை மறுப்பது போல் தலையை இட,வலமாய் ஆட்ட,

    ‘ஹேய்…நீ என்ன சொல்றே?’

    ‘இது…எனக்குச் சேர வேண்டிய தாலி…..இவன் என்னுடைய பழைய காதலன் ரமேஷ்…உண்மையைச் சொல்லப் போனா…இப்ப நான்…இந்தத் தொழிலுக்கு வர்றதுக்கே காரணம்…இவன்…இந்த ராஸ்கல்தான்’ ஸ்ருதி முகத்தில் லேசாய் சோகத் தீற்றல்கள்.

    ‘வாவ்…இண்ட்ரஸ்டிங்….சொல்லு…சொல்லு’ ஆர்வமானான் சஞ்சீவ் ரங்க பிரசாத்.

    ‘இவன் ஒரு காலத்துல என்னைத் தீவிரமாய்க் காதலிச்சான்….பேசிப் பேசியே என்னை மயக்கிய இவனை நம்பி நான் வீட்டை விட்டு இவன் கூட ஓடிப் போனேன்…ஆசை தீர ஒரு வாரம் என்னை அனுபவிச்சிட்டு…காணாமல் போயிட்டான்…அப்புறம் வீட்டுக்கும் திரும்ப முடியாம…வெளியிலேயும் நல்லவிதமா வாழ முடியாம…இந்தப் பாவத் தொழிலுக்கு வந்தேன்…’ சொல்லிவிட்டு அந்த பில்டிங்கே அதிரும் வகையில் வாய் விட்டுச் சிரித்தாள் ஸ்ருதி.

    அவளை விநோதமாகப் பார்த்த சஞ்சீவ் ரங்க பிரசாத், ‘எதுக்கு…இந்தச் சிரிப்புன்னு தெரிஞ்சுக்கலாமா?’ கேட்டான்.

    ‘ம்…ஒரு காலத்துல இந்தத் தாலி வராததால குடும்பப் பெண்ணான நான் விபச்சாரியானேன்….இன்னிக்கு இந்தத் தாலி வந்ததால விபச்சாரியான நான் குடும்பப் பெண்ணானேன்…என்ன ஒரு விந்தை?’

    சில நிமிட அமைதிக்குப் பின், ‘இந்தத் தாலியை நான் திருப்பித் தரப் போறதில்லை…ஏன்னா…இது என் சொத்து…எனக்குச் சேர வேண்டிய சொத்து’

    ‘ஓ.கே’ என்று தோள்களைக் குலுக்கிய சஞ்சீவ் ரங்க பிரசாத் ஸ்ருதியின் முகத்தில் தெரிந்த அந்தப் பிரகாசத்தை ரசித்தான்.

    (முற்றும்)

    Share
  • வந்து சொல்றேம்மா…

    முகில் தினகரன்

    நடுநிசி 12.00 மணி.

    அந்த தியேட்டர் முன் கூடியிருந்த இளைஞர் பட்டாளம் படு பிஸியாயிருந்தது. மறுநாள் ரிலீஸாகவிருக்கும் அவர்களின் அபிமான நடிகன்…தானைத் தலைவன்…தங்கத்தலைவன்…’இளஞ் சூறாவளி’ ராகவ் நடித்த படத்தை வரவேற்க விதவிதமான பேனர்களையும்…கட்அவுட்களையும்…தோரணங்களையும்…வரவேற்பு வளையங்களையும் தியேட்டர் வாசலெங்கும் கட்டி அசத்திக் கொண்டிருந்தனர். இரண்டாம் ஆட்டம் முடிந்து வெளியே வந்த ஜனக் கூட்டம் அங்கு அரங்கேறிக் கொண்டிருந்த அமர்க்களத்தைக் கண்டு திறந்த வாய் மூடாமலேயே வீடு வரை சென்றது.

    ஒரு மணி வாக்கில் ஓரளவிற்கு எல்லா வேலைகளையும் முடித்து விட்ட ரசிகர் கூட்டம் புறப்படத் தயாரானது.

    தன் அபிமான நடிகன் ‘ராகவ்’வுடன் தான் நிற்கும் புகைப்படத்தை ஒரு பெரிய பேனராக்கி தியேட்டர் முகப்பில் அதைக் கட்டி வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்த மாவட்டத் தலைவர் பிரசனனாவிடம் வந்த ரசிகர் பட்டாளம்,

    ‘அப்ப..நாங்க புறப்படறோம் பிரசன்னா’

    ‘ஓ.கே.ம்மா…காலைல எல்லோரும் சரியா ஆறு மணிக்கு இங்க ஆஜராயிடணும்…சிறப்புக்காட்சி ஏழு மணிக்குத் துவங்கிடும்’

    ‘கண்டிப்பா வந்துடுவோம் பிரசன்னா’

    அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் பிரசன்னாவும் தன் பைக்கில் ஏறிப் பறந்தான்.

    காலை நாலரை மணியிருக்கும்,

    யாரோ கதவை ‘தட…தட’வெனத் தட்டும் ஓசை கேட்டு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான் பிரசன்னா. ‘யாராயிருக்கும்….இந்த நேரத்துல..?’ யோசனையுடன் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.

    கோகலே வீதி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நாலைந்து இளைஞர்கள் நிற்க,

    ‘என்னப்பா….என்ன விஷயம்?’

    ‘வந்து…வந்து…’

    ‘அட..என்ன..’ சற்றுக் கடுப்புடனே கேட்டான் பிரசன்னா. இரவு லேட்டாய் வந்து படுத்ததில் கண்கள் தீயாய் எரிந்தன.

    ‘தியேட்டர் வாசல்ல நாம கட்டியிருந்த பேனர்களுக்கும் வளையங்களுக்கும் யாரோ தீ வெச்சுட்டாங்க பிரசன்னா…’

    ‘என்ன…தீ வெச்சுட்டாங்களா?’ அதிர்ந்து போன பிரசன்னா பதட்டமாய்க் கிளம்ப, பாதித் தூக்கத்தில் எழுந்து வந்த அவன் தாய், ‘டேய்…டேய்…என்னடா…என்னாச்சுடா?’ அவன் பின்னாடியே வந்து கேட்டாள்.

    ‘ப்ச்….வந்து சொல்றேன்மா…’ தாவிச் சென்று பைக்கில் ஏறி, மின்னல் வேகத்தில் பறந்தான்.

    தியேட்டர் வாசல் சாம்பல் குவியலாயிருந்தது. ஆங்காங்கே பாதி எரிந்த நிலையில் பேனர்களும்…கட்அவுட்களும்…வளையங்களும் கிடக்க, இன்னொரு புறம் அவன் ஆசை ஆசையாய்க் கட்டி அழகு பார்த்த, தலைவனோடு அவன் நிற்கும் பேனர் குற்றுயிராய்க் கிடந்தது.

    ஆத்திரத்தில் வலது கையால் இடது உள்ளங்கையில் ஓங்கிக் குத்தினான் பிரசன்னா.

    ‘யாரு…யாரோட வேலைடா இது…?’ கண்கள் சிவக்கக் கேட்டான்.

    எதிர் டீக்கடையிலிருந்து நிதானமாய் நடந்து வந்த அந்தக் கட்டம் போட்ட லுங்கிக்காரன், ‘தம்பி…நான் பார்த்தேன்…தீ வெச்ச ஆளுங்களை..’ என்றான் பிரசன்னாவைப் பார்த்து.

    பாய்ந்து வந்து அவன் சட்டைக் காலரைப் பற்றிய பிரசன்னா கத்தலாய்க் கேட்டான், ‘சொல்லு…சொல்லு…யாரு…யாரு?’

    ‘த பாரு தம்பி…அவனுக யாரு எவருன்னு எனக்குத் தெரியாது…ஆனா தீயை வெச்சுப்புட்டு அவனுக கத்திட்டுப் போனது மட்டும் எனக்கு நல்லாக் காதில் விழுந்தது’

    ‘சரி…அதையாவது சொல்லித் தொலை…என்ன கத்திட்டுப் போனானுங்க?’ சட்டைக் காலரை உதறலாய் விடுவித்தான் பிரசன்னா.

    ‘விக்டரி ஸ்டார் விமலன் வாழ்க..! விக்டரி ஸ்டார் விமலன் வாழ்க’ன்னு கோஷம் போட்டுக்கிட்டே ஓடினானுக’

    ‘நெனச்சேன்….அவனுகளாத்தான் இருக்கும்னு நெனச்சேன்!…விட மாட்டேன்டா.. இதுக்கு அவனுக பதில் சொல்லாம விட மாட்டேண்டா…!’ என்று ஓங்கிய குரலில் கத்திவிட்டு, தன் சகாக்கள் பக்கம் திரும்பி, ‘டேய்…ரவி…போடா…ஓடிப் போய் அஞ்சு லிட்டர் பெட்ரோல் வாங்கிட்டு வாடா’

    ‘பிரசன்னா….எதுக்கு நீ இப்ப பெட்ரோல் கேட்கறே?’ அந்த ரவி புரியாமல் கேட்க,

    ‘டேய்…கேள்வி கேட்காத…சொன்னதை மட்டும் செய்’

    அந்த ரவியாகப்பட்டவன் தயங்கி நிற்க, “இப்ப நீ போறியா?…இல்ல நானே போய் வாங்கிட்டு வரட்டுமா?” விழிகள் சிவக்க பிரசன்னா அதட்டிய அதட்டலில் ரவி பாய்ந்தோடினான்.

    பெட்ரோல் கேன் கைக்கு வந்ததும், ‘இளஞ் சூறாவளி ராகவ் ரசிக கண்மணிகளே….. நம்ம தலைவரோட பேனர்களையும்….கட்அவுட்களையும் அந்த விமலனோட ரசிகர்கள் கொளுத்தினதுக்கு நீதி கேட்டு என்னை நானே கொளுத்திக்கப் போறேன்…!’

    அந்த அதிகாலை நேரத்தில்….அவ்வளவாக கூட்டமில்லாத சாலையில்…தனக்குத் தானே பெட்ரோல் அபிஷேகம் செய்து கொண்டு, தனக்குத் தானே தீபாராதனை காட்டிக் கொண்டு, அபிமான நடிகனுக்காக அமரனானான் பிரசன்னா.

    காட்சிகள் ரத்து செய்யப்பட்டு…தியேட்டர் சீல் வைக்கப்பட்டது. ஆனால், தாறுமாறாய் கிடைத்த தீக்குளிப்பு விளம்பரத்தினால் இளஞ் சூறாவளி ராகவ்வின் திரைப்படம் ரிலீஸ் ஆன மற்ற எல்லாத் தியேட்டர்களிலும் பிய்த்துக் கொண்டு ஓடியது.

    தமிழகமெங்கும் பத்தே நாளில் ஐம்பது நாள் வசூலை வாரிக் குவித்தது.

    தனக்காக உயிரை மாய்த்துக் கொண்ட அந்த ரசிகனின் குடும்பத்திற்கு ஒரு சொற்ப….அற்ப….தொகையை பெரும் விளம்பர ஏற்பாட்டிற்குப் பிறகு வழங்கிய இளஞ்சூறாவளி, தன் படத்தின் நூறாவது நாள் விழாவிற்காக காத்திருந்தார்.

    இரவு 11.30.

    இளஞ் சூறாவளி ராகவ்வின் பிரத்யேக கைப் பேசி ராகமிசைக்க எடுத்துப் பார்த்தார். ‘விக்டரி ஸ்டார் விமலன்’

    ‘ஹல்லோ…விக்டரி ஸ்டார் …எப்படியிருக்கீங்க?’ இளஞ் சூறாவளி சிரிப்புடன் கேட்க,

    ‘ஐ யாம் ஃபைன்!…அது சரி இளஞ் சூறாவளி…எப்ப உன் படத்தோட நூறாவது நாள் விழா?’

    ‘ம்ம்ம்….அதுக்கு இன்னும் இருபது நாளிருக்கே’

    ‘ம்…ம்…ஜமாய்ங்க…’ விமலன் சொல்ல

    ‘எல்லாம் உங்க தயவுதானே விமலன்?…நீங்க மட்டும் அன்னிக்கு உங்க ஆளுங்களை வெச்சு…அந்த தியேட்டர் முன்னாடி என்னோட ரசிகர்கள் கட்டின பேனர்களை எரிக்கலைன்னா…அந்தப் பையன் தீக்குளிப்பானா?…அப்படி அவன் தீக்குளிச்சதுதானே பெரிய விளம்பரமாகி…என் படத்தையே அமோக வெற்றியடைய வெச்சிருக்கு’

    ‘சரி…சரி…இப்ப நான் உங்களைக் கூப்பிட்டது எதுக்குன்னா…அடுத்த வாரம் என்னோட புதுப்படம் ரிலீஸாகப் போகுது…அந்தப் படமும் வெற்றிப் படமாகணும்…உங்க படத்துக்கு நான் எப்படி ஹெல்ப் பண்ணினேனோ, அதே மாதிரி நீங்களும் ஏதாவது ஹெல்ப் பண்ணி என்னோட படத்தையும் ஜெயிக்க வைக்கணும்’

    ‘செஞ்சுட்டாப் போகுது விமலன்…உங்க பின்னாடியும்….என் பின்னாடியும் லட்சக் கணக்குல முட்டாள் ரசிகனுங்க இருக்கற வரைக்கும் நமக்கென்ன கவலை?’ இளஞ் சூறாவளி ராகவ் சொல்லி விட்டுச் சிரிக்க,

    பதிலுக்குச் சிரித்தது விக்டரி ஸ்டார்.

    அதே நேரம்,

    மகன் சாவிற்குப் பின் பைத்தியமாகிப் போன அந்தப் பிரசன்னாவின் தாய் மகனின் போட்டோவைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தாள்.

    ‘ஏண்டா…”வந்து சொல்றேன்மா” ன்னுட்டுப் போனியே ஏண்டா வரலை? சொல்லுடா ஏண்டா வரலை?’

    (முற்றும்) 

    Share
  • பேச்சு

    முகில் தினகரன்

    ‘வயசாயிட்டா…தலைல இருக்குற முடிதான் கொட்டிடும்னு கேள்விப்பட்டிருக்கேன்…மூளையுமா கொட்டிடும்?…சனியன் என்னோட உயிரை வாங்கறதுக்குன்னே வந்து சேர்ந்திருக்கு…ஒரு ஒண்ணாங் கிளாஸ்; படிக்கற குழந்தையைக் கூப்பிட்டு…’இந்தா பாப்பா…போயி எலக்ட்ரிக் பில் கட்டிட்டு வா’ன்னு சொல்லி பணத்தையும் கார்டையும் குடுத்திருந்தா அது கூட அழகா போய் ஷநறுக்ஷகுன்னு கட்டிட்டு வந்திருக்கும்!…அறுபத்தியேழு…அறுபத்தியெட்டு வயசாச்சு…இந்த வேலையக் கூட கரெக்டாச் செய்ய முடியலை நீயெல்லாம் இத்தனை வருஷம் பொழைச்சு என்ன பிரயோசனம்?’

    மகள் சந்திரா வீட்டிற்குள் தீபாவளிப் பட்டாசாய் வெடித்துக் கொண்டிருக்க, தலையில் கையை வைத்தபடி வெளித் திண்ணையில் குனிந்து அமர்ந்திருந்தார் வெள்ளிங்கிரி. தான் முகம் தெரியாத ஒரு இளைஞனால் ஏமாற்றப் பட்டு விட்டது கூட அவரை வெகுவாய்ப் பாதிக்கவில்லை. மகளின் வாயிலிருந்து சரமாரியாய் வந்து விழும் அமிலத் துண்டங்கள்தான் அவரை உருக்குலையச் செய்திருந்தன.

    சில நிமிடங்களுக்குப் பிறகு, மெல்ல வீட்டிற்குள் எட்டிப் பார்த்து, ‘அம்மா…சந்திரா’ ஒருவித பயத்துடனே அழைத்தார்.

    ‘என்ன…என்ன எழவைக் கொட்டிக் குடுக்கப் போறே சந்திராவுக்கு?’ உள்ளிருந்து வார்த்தைச் சாட்டைகள் வந்து விழுந்தன.

    ‘ஒண்ணுமில்லம்மா….நெஞ்சு ஒரு மாதிரி எரிச்சலாயிருக்கு…ஒரு வாய் காப்பித் தண்ணி…கீது…’

    ‘க்கும்…நீ பண்ணிட்டு வந்த காரியத்துக்கு அது ஒண்ணுதான் கொறைச்சல்…சும்மா வாயை மூடிட்டு கம்னு கெட…அதையும் இதையும் கேட்டு..எரிச்சலை மூட்டாதே…!…ஹும்….என்னைப் பெத்தவ எப்படித்தான் உன் கூட பொழப்புத்தனம் பண்ணினாளோ..?…அது செரி…அவ எங்க முழுசாப் பொழச்சா…அதான் பாதியிலேயே பரதேசம் போயிட்டாளே’

    வெள்ளிங்கிரிக்கு மனைவியின் ஞாபகம் வந்தது. ‘லட்சுமி….நானும் நீயும் வாழந்த வாழ்க்கையைப் பத்தி இதுகளுக்கு என்ன தெரியும்?…பேசாம நீ போனப்பவே என்னையும் கூடக் கூட்டிட்டுப் போயிருக்கலாமல்ல லட்சுமி…இப்படி பெத்த மகள் வாயிலிருந்து கேட்கக் கூடாத பேச்சையெல்லாம் கேட்க வேண்டியிருக்கே லட்சுமி’

    மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த மாப்பிள்ளை விநாயகம், திண்ணையில் வெளிறிப் போன முகத்துடன் அமர்ந்திருக்கும் மாமனாரைப் பார்த்துமே புரிந்து கொண்டார் அங்கு சந்திரா கதகளி ஆடிக் கொண்டிருக்கின்றாள் என்று.

    வந்ததும் வராததுமாய் கணவனிடம் கொட்ட ஆரம்பித்தாள் சந்திரா. ‘ஏங்க…உங்க அருமை மாமனார் இன்னிக்கு என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கார் தெரியுமா உங்களுக்கு?’

    விநாயகம் வாயைத் திறக்காமல் புருவ உயர்த்தலிலேயே ‘என்ன?’ என்று கேட்க,

    ‘எலக்ட்ரிக் பில் கட்டிட்டு வரச் சொல்லி பணத்தையும் காரடடையும் கொடுத்தனுப்பினா…ரெண்டையும் தொலைச்சிட்டு வந்து நிக்குது கெழம்’

    ‘அடடே…அப்படியா?…’என்ற விநாயகம் மாமானார் பக்கம் திரும்பி, ‘என்ன மாமா?…எங்க மிஸ் ஆச்சு?…வரிசைல நிக்கும் போதா?…இல்ல போற வழியிலேயேவா?’

    சட்டென்று இடை புகுந்தாள் சந்திரா, ‘நீங்க வேற…அங்க வரிசைல நிக்கும் போது எவனோ வந்து, ‘என்ன பெரியவரே வெய்யில்ல நிக்கறீங்க?…என்கிட்டக் குடுங்க நான் என்னுடையதோட சேர்த்து உங்களோடதையும் கட்டித் தர்றேன்’னு சொன்னானாம்…இதுவும் நம்பிக் குடுத்துட்டுப் போய்…எங்கியோ ஒரு நிழல்ல பராக்குப் பார்த்திட்டு உட்கார்ந்திருக்கு…அவன் நைஸா…எஸ்கேப் ஆயிட்டான்…அவன் குடுத்து வெச்சவன்..நாலு நாளைக்கு குவாட்டரும்…கோழி பிரியாணியுமா ஜமாய்ப்பான்’

    கள்ளம் கபடம், சூது வாது, பொய் புரட்டு;;;;…..எதுவும் தெரியாத…அந்தக் காலத்து மனிதரான தன் மாமனார் இந்தக் கால மனிதர்களின் தகிடுதத்தங்கள் பற்றிச் சிறிதும் அறியாதவராய் இருந்ததுதான் அவர் ஏமாந்ததற்கான சரியான காரணம் என்பதை யூகித்து விட்ட விநாயகம், ‘சரி…சரி…விடு..விடு…அதையே திரும்பத் திரும்பப் பேசறதில் என்ன ஆகப் போகுது?’ என்று தன் மனைவியை அடக்கினார்.

    கணவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு; அமைதியாய் வீட்டிற்குள் சென்று அவருக்கு மதிய உணவு பரிமாறுவதில் முனைப்பானாள் சந்திரா.

    உணவை முடித்து விட்டு வழக்கம் போல் அரை மணி நேரம் உறங்கி எழுந்த விநாயகம், போகும் போது தன் மனைவியிடம் சொல்லி விட்டுச் சென்றார். ‘த பாரு சந்திரா…நீ பாட்டுக்கு ரொம்ப ஓவரா சத்தம் போட்டுப் பேசி அவரோட மனசை நோகடிக்காதே…பாவம்…ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கார்’

    ஆனால், அதைத் துளியும் காதில் வாங்கிக் கொள்ளாதவளாய் மறுபடியும் முழக்கத்தை ஆரம்பித்தாள் சந்திரா.

    ‘அங்கங்கே…வயசான கிழடு கட்டைகளை ஏண்டா முதியோர் இல்லத்துல கொண்டு போய்த் தள்ளிடறாங்கன்னு இப்பத்தான் புரியுது…இப்படிக் கேனத்தனமா நடந்து…கழுத்தறுத்தா யார்தான்…எத்தனை நாளைக்குத்தான் பொறுத்துக்குவாங்க?’

    வெள்ளிங்கிரியின் அடிவயிற்றில் பசி தன் இருப்பை உணர்த்த ஆரம்பித்தது. ‘சாப்பாடு கேட்கலாமா?…வேண்டாமா?’ யோசித்தார்.

    ‘எதற்கெடுத்தாலும்…’நாங்கெல்லாம் செய்யுற எந்தக் காரியமும்…எந்தக் காலத்திலேயும் சோடையே போகாது’ ன்னு வாய் கிழியப் பேசுவியே…இப்ப எங்க போச்சு…அந்த அனுபவச் சனியனெல்லாம்?’

    சற்றும் வாய் ஓயாமல், வார்த்தைகளில் துளியும் பிசகின்றி, தங்கு தடையில்லாமல் மடை திறந்த வெள்ளமாய்…வானைக் கிழித்துக் கொண்டு கொட்டும் அடர்த்தி மழையாய்…அவள் பேசுவதையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த வெள்ளிங்கிரியின் நினைவுகள் பின்னோக்கிச் சென்று அந்த நாளை எண்ணிப் பார்த்தது.

    அப்போது சந்திராவிற்கு மூன்று வயதிருக்கும். நல்ல நிறம், சதைப் பிடிப்பான கன்னம், மற்றும் கை கால்களுடன் ‘கொழு…கொழு’வென்றிருந்த அவளை பார்ப்பவர்கள் அனைவரும் ரசித்துக் கொஞ்சுவர். கொஞ்சிக் கொஞ்சி மகிழ்வர்.

    பிறகு அவளின் திக்குவாய் குறை பற்றித் தெரிய வரும் போது, ‘த்சொ…த்சொ..’என்று பரிதாபப்பட்டு ‘அழகை அள்ளிக் கொடுத்த ஆண்டவன் இப்படி அநியாயம் பண்ணிட்டானே!’ என்று இறைவனையே நிந்தனை செய்தபடி நகர்வர்.

    ‘ஏங்க…..காலைல நம்ம சமுக்குட்டி அண்ணன் வீட்டுக்குப் போயிருந்தேன்….ஊரிலிருந்து அவங்க பெரியாத்தா வந்திருந்தாங்க…அவங்க நம்ம சந்திராவோட குறையைக் கேள்விப்பட்டு…ஒரு நிவர்த்தி சொன்னாங்க…’ லடசுமி ஒரு நம்பிக்கையோடு சொல்ல,

    ‘என்ன…என்ன சொன்னாங்க?’

    ‘அவங்க ஊர்ல ‘புலிப்பாணி’ன்னு சித்தர் இருக்காராம்…காது கேட்காதவங்களுக்கு கேட்க வைக்கறாராம்…வாய் பேசாதவங்களைப் பேச வைக்கறாராம்…’

    ‘நெஜம்மாவா?’

    ‘ஆமாங்க…பிறவி ஊமைகளையே பேச வைச்சிடறவரு…நம்ம பொண்ணுக்கு என்ன வெறும் திக்குவாய்தானே?…நிச்சயமா சரி பண்ணிடுவார்னு எனக்குத் தோணுதுங்க’

    எப்படியாவது தங்கள் குலக் கொழுந்தின் திக்குவாய் குறை தீர்ந்தாப் போதும் என்கிற ஆர்வத்தில் கணவனும் மனைவியும் அந்தப் புலிப்பாணிச் சித்தரைப் பார்த்து, சில தீர்த்தங்களையும்…பச்சிலைச் சாறுகளையும் வாங்கி வந்து மகளுக்கு கொடுத்துப் பார்த்தனர். ம்ஹும்…ஒன்றும் பலிக்கவில்லை.

    சித்த வைத்தியம்…இங்கிலீஸ் வைத்தியம்…சீன வைத்தியம்…ஹோமியோபதி என்று எல்லா வகையிலும் முயற்சி செய்து பார்த்து விட்டுத் தோல்வியில் துவண்டு கிடந்தவர்களிடம் பக்கத்து வீட்டுப் பாட்டி ஒரு வைத்தியம் சொல்ல,

    ‘அடப்போ கெழவி…எல்லாப் பண்டுதமும் பண்ணிப் பார்த்தாச்சு…இது ஒண்ணுதான் பாக்கி’ என்று சலித்துக் கொண்ட லட்சுமியிடம்,

    ‘அப்படியேன் சொல்லுறே லட்சுமி?…அதையும்தான் முயற்சி பண்ணிப் பார்ப்போமே…ஒரு வேளை அதனால கூட சரியாகலாமில்ல?’ என்று சொன்ன வெள்ளிங்கிரி தானே தன் முயற்சியில் அந்தப் பாட்டி சொன்ன உபாயத்தைச் செய்து பார்த்தார்.

    என்ன ஆச்சரியம்…’திடு..திப்’பென்று ஒரு நாள் காலையில் சந்திரா எந்தவித திக்கலும்…திணறலும் இன்றி சரளமாய்ப் பேச ஆரம்பித்தாள். பெற்றவர்கள் மனம் குளிர்ந்து போய் ஒரு கோயில் பாக்கி வைக்காமல் எல்லாக் கோயில்களுக்கும் சென்று தங்கள் நன்றியைச் செலுத்தினர்.

    ‘ஏய்…கெழம்….வயித்துக்கு ஆகாரம் போடணும்கற நெனப்பிருக்கா?…இல்ல…பணத்தையும் கார்டையும் தொலைச்ச மாதிரி அந்த நெனப்பையும் தொலைச்சிட்டியா?…’ சந்திரா கத்தலாய்க் கேட்க,

    பழைய நினைவுகளிலிருந்து மீண்ட வெள்ளிங்கிரி மலங்க மலங்க விழித்தார்.

    ‘போ…உள்ளார தட்டுல போட்டு வெச்சிருக்கேன்…போய்க் கொட்டிக்க…’

    எழுந்து தள்ளாட்டமாய் நடந்து சென்றவரைப் பார்த்து,

    ‘தள்ளாட்டத்தைப் பாரு…தண்ணி போட்டவனாட்டம்’ என்று சந்திரா நக்கலாய்ச் சொன்னது வெள்ளிங்கிரியின் காதுகளுக்கு சரியாய்க் கேட்காமல் போனதற்குக் காரணம் பசியின் காதடைப்பு.

    (முற்றும்)

    Share
  • தீக்கொழுந்தில் பனித்துளி (அத்தியாயம்-15)

    முகில் தினகரன்

    “வாங்க.. வாங்க.. சீக்கிரம் கட்டிலுக்கு வாங்க!. எல்லாமே இப்ப நல்லா ஞாபகம் வந்திடுச்சு.. ”என்று சொல்லி, அவன் கையைப் பிடித்துப் பலவந்தமாய் கட்டிலுக்கு இழுத்துச் சென்ற ரேணுகா, அவன் பார்த்துக் கொண்டிருக்கவே உடைகள் ஒவ்வொன்றாகக் கழற்ற ஆரம்பித்தாள்.

    “அய்யய்ய.. என்ன.. என்னம்மா இது?” சுந்தர் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொள்ள,

    “அட.. இப்படித்தான் பண்ணனுமாம்!. நீலவேணி அத்தை சொல்லிச்சு!” என்றவள் அவன் வேட்டியையும் உருவ முயற்சித்தாள்.

    விலகி ஓடியவன், “த பாரும்மா.. இதெல்லாம் இப்ப பண்ணக் கூடாது!. மொதல்ல நீ பொடவையைக் கட்டு!” என்றான் சற்றுக் காட்டமாய்.

    “அய்யோ.. உங்களுக்கு ஒண்ணுமே தெரியலை!. நீலவேணி அத்தை உங்களுக்கு சொல்லித் தரலையா”

    “எனக்கு யாரும் எதுவும் சொல்லித் தரலை!. நீ இப்பப் பொடவையைக் கட்டப் போறியா இல்லையா?” விழிகளை உருட்டி மிரட்டினான்.

    அந்த மிரட்டலில் பயந்து போன ரேணுகா, திடீரென்று உரத்த குரலில் அழ ஆரம்பித்தாள்.

    தர்ம சங்கடத்துக்கு ஆளாகிப் போன சுந்தர், அவளைச் சமாதானப் படுத்தும் விதமாய் அவளை நெருங்கி வர, அவன் எதிர்பாராத வேளையில் சட்டென்று ஓடிப் போய் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள்.

    வெறும் பாவாடை ஜாக்கெட்டுடன் நடுக் கூடத்தில் நின்று கொண்டு “ஓ..”வென்று அவள் கத்தி அழ, ஆங்காங்கே உறங்கிக் கொண்டிருந்தவர்களெல்லாம், என்னவோ?. ஏதோ?வென்று அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்து அவளிடம் வந்து நின்றனர்.

    அவள் கோலத்தைப் பார்த்த அவளுடைய தாய் எங்கிருந்தோ ஒரு போர்வையைக் கொண்டு வந்து அவள் மீது போர்த்தி விட்டுத் தன் கணவன் பக்கம் திரும்பி, “என்னங்க நீங்க சும்மா பார்த்துக்கிட்டு நிக்கறீங்க?. மாப்பிள்ளையைக் கூப்பிட்டு என்ன? ஏது?ன்னு விசாரிங்க!”

    கூனிக் குறுகியபடி அறைக்குள்ளிருந்து வெளியே வந்தான் சுந்தர்.

    “என்ன மாப்பிள்ளை.. என்ன ஆச்சு?. ஏன் ரேணுகா அழறா?”

    பதில் சொல்ல முடியாமல் தவித்தான் சுந்தர். அவன் தவிப்பைத் தவறாகப் புரிந்து கொண்ட மற்றவர்கள், “அட.. புதுப் பொண்ணுல்ல அதான் மெரண்டிருக்கு!. மாப்பிள்ளை கொஞ்சம் மொரடு போலிருக்கு!” சொல்லியவாறே அங்கிருந்து குறுஞ்சிரிப்புடன் கலைந்து சென்றனர்.

    எல்லோரும் சென்றதும், சுந்தரை நெருங்கி வந்து, அவன் தோளில் கை போட்ட ரேணுகாவின் தந்தை, “என்ன மாப்பிள்ளை இப்படிப் பண்ணிட்டீங்க!. நான்தான் சொன்னேனில்ல.. “அவள் வயசுதான் இருபது.. ஆனா இன்னும் குழந்தை மாதிரி”ன்னு அதனால.. மொரட்டுத்தனம் வேண்டாம்!. கொஞ்சம் சாந்தமா.. பக்குவமாக் கையாளுங்க மாப்பிள்ளை.. உங்க பொஞ்சாதிதானே.. எங்க போயிடப் போறா?”

    செத்து விடலாம் போலிருந்தது சுந்தருக்கு, “நானா?. நானா?. மொரட்டுத்தனமா நடந்துக்கிட்டேன்?”

    “சரி.. சரி.. ரேணுகாவைக் கூட்டிக்கிட்டு உள்ளார போங்க!” என்றபடி அவளை மீண்டும் அறைக்குள் கொண்டு வந்து விட்டு விட்டுப் போனாள் மாமியார்க்காரி.

    கதவைத் தாழிட்டு விட்டு வந்த சுந்தர், படுக்கையில் விழுந்து வாயைப் பிளந்தபடித் தூங்கும் ரேணுகாவைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். “அடிப்பாவி.. ஒரே நிமிஷத்துல தூங்கிட்டாளே!”

    தலையணையை மட்டும் எடுத்துக் கொண்டு அறையின் மூலைக்குச் சென்று தரையில் படுத்தான். மறுநாள் காலை எப்படி மற்றவர்கள் முகத்தில் விழிக்கப் போகிறோமோ?. என்கிற கவலையில் புரண்டு புரண்டு படுத்துக் கிடந்தான்.

    தன் தங்கையின் நிம்மதிக்காக ரேணுகாவைக் கைப்பிடித்ததில் தன் வாழ்க்கையின் நிம்மதியைத் தொலைத்து விட்டிருந்தான் சுந்தர். திருமணம் செய்தால் ரேணுகா குணமாகி விடுவாள் என்ற கூற்று பொய்யாகிப் போனது. நாளுக்கு நாள் அவளது ரகளை அதிகமாகிக் கொண்டே போனது. சில நாள் சமையலறையில் புகுந்து “நான் சமைக்கிறேன்.. அத்தை!” என்று சொல்லி மொத்தத்தையும் பாழாக்கி அனைவரையும் விரதமிருக்கச் செய்து விடுகின்றாள்.

    திடீர் திடீரென்று அர்த்தமேயில்லாமல் கத்தி, ஆர்ப்பாட்டம் செய்வதும், வீட்டுப் பொருட்களை உடைத்தெறிவதும், துணிமணிகளைக் கிழித்தெறிவதும் அவளது வாடிக்கையான வேடிக்கைகள்.

    தன் மகனின் நிலையை நினைத்து லட்சுமி கண்ணீர் வடிக்காத நாளே இல்லை. “ஹூம்.. இந்தப் பையனுக்கும் ஒரு நல்ல நாள் வராமலா போய்டும்?” என்று தனக்குத் தானே ஆறுதல் படுத்திக் கொள்வதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் அந்த முதிய ஜீவனால்.

     

    (தொடரும்)

    படத்திற்கு நன்றி: http://thedipaar.com/news/news.php?id=15413

    Share
  • சராசரிகள்

    முகில் தினகரன்

    வழக்கத்திற்கு மாறாக பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் அதிகமாயிருக்க எனக்குள் ஏதோவொன்று பிறாண்டியது. கைகளைப் பிசைந்தபடி கலவர முகத்துடன் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் மெல்ல விசாரித்தேன்.

    ‘அதையேன் சார் கேட்கறீங்க?…மெயின் ரோட்டுல ஏதோ ஜாதிக் கட்சியோட பேரணியாம்…இந்த ரோட்டுக்கு இன்னும் ரெண்டு மூணு மணி நேரத்துக்கு பஸ்ஸே வராதாம்..கர்மம்..ஆபீஸ் முடிஞ்சு போகிற நேரத்தில்தானா இந்த சோதனையெல்லாம் வரணும்?…ச்சை’ சொல்லும் போது அஷ்டகோணலாய்ப் போனது அந்த அழகு முகம்.

    அவளைப் போலவே பல யுவதிகள் பஸ் இப்போதைக்கு வராதென்று தெரிந்தும் அது வரும் திசையை திரும்பித் திரும்பிப் பார்த்து திட்டிக் கொண்டிருந்தனர்.

    ‘ஏய்..நாம இப்படி நின்னுட்டிருந்தா நின்னுட்டே இருக்க வேண்டியதுதான்! டூவீலர்க போயிட்டுத்தானே இருக்கு? பாரு…எத்தனை ஆம்பளைங்க தனியாளா சிங்கிள்ஸ்லே போய்க்கிட்டிருக்காங்க!….அவங்களை நிறுத்தி லிப்ட் கேட்டா என்னடி?’ துணிச்சலாய்ப் பேசிய சுடிதார்ப்பெண் என் கவனத்தை ஈர்க்க, ‘அட…பரவாயில்லையே’ கவனிக்கலானேன்.

    சொன்னதோடு நில்லாமல் அந்தப் பேருந்து நிறுத்தத்தைக் கடந்து செல்லும் டூவீலர் ஆசாமிகளை குறுக்கே கை நீட்டி மறித்தாள்.

    ‘என்னம்மா…என்ன வேணும்?’ ஹெல்மட் தலையனொருவன் கத்தலாய்க் கேட்க,

    ‘சார்..இந்த ரோட்டுக்கு இப்போதைக்கு பஸ் வராது..பாருங்க எத்தனை லேடிஸ் பரிதாபமா நின்னுட்டிருக்காங்க…நீங்க தனியாத்தானே போறீங்க…யாராவது ஒருத்தருக்கு லிப்ட் கொடுத்து உதவலாமில்ல?’

    ‘வாட?;…லிப்ட்டா?..நோ…நோ..நமக்கு அந்தப் பழக்கமெல்லாம் கெடையாது…அதுக்குன்னு எவனாச்சும் வருவான் அவன்கிட்டக் கேளுங்க!..வழிய விடுங்க மொதல்ல..’

    ‘என்ன சார் லேடீஸ்க்கு லிப்ட் குடுத்தா என்ன சார் தப்பு?..மனுசனுக்கு மனுசன் இந்த உதவி கூடச் செய்யக் கூடாதா?’ சுடிதாரப்பெண் விடாமல் பேசினாள.;

    ‘த பாரும்மா..பொண்ணுங்களையெல்லாம் நான் டபுள்ஸ் ஏத்தினதில்லை…ஏத்தவும் மாட்டேன்’

    ‘அதான் ஏன்னு கேட்கறேன்?..பயமா?…யாராச்சும் பார்த்து ஏதாச்சும் கதை கட்டிடுவாங்களோன்னு பயமாயிருக்கா?..இல்ல உங்க சம்சாரத்துக்கு தெரிஞ்சு..குடும்பத்துல குழப்பம் உண்டாயிடுமோன்னு அச்சமாயிருக்கா?’

    அவன் மௌனமாய் விழிக்க,

    ‘என்ன சார்…அதைப் பத்திக் கவலைப்பட வேண்டிய பொண்ணுங்களே தைரியமா லிப்ட் கேக்கறாங்க…நீங்க ஆம்பளை..அதுவும் அடர்த்தியா மீசை வெச்சிருக்கற ஆம்பளை நீங்க பயப்படறீங்களே’

    ‘இல்லம்மா…அது..வந்து..பிரச்சினை…’

    ‘யோவ்…பிரச்சினைக்கு பயப்படற நீயெல்லாம் எதுக்கய்யா வெளிய வர்றே,..வீட்டுக்குள்ளாரவே முடங்கிக் கெடக்க வேண்டியதுதானே?’

    அவள் பேச்சில் மரியாதை தடாலென்று இறங்க அவன் தர்ம சங்கடமாய் எல்லோரையும் பார்த்தான்.

    ‘இங்க பாருய்யா..உம்மனசு சுத்தமான மனசுன்னா..யாராவது ஒருத்தரை கூட்டிக்கிட்டுப் போ’ என்றவள் பெண்கள் பக்கம் திரும்பி ‘ஏய் காயத்ரி…நீ இந்தப் பக்கம்தானே போகணும்?..வா..வந்து சார் வண்டில உட்காரு’ என்றழைக்க,

    அந்த காயத்ரி நிதானமாய் நடந்து வந்து ‘ணங்’கென்று பில்லியனில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

    ஹெல்மட்காரன் வேறு வழியில்லாமல் முனகியபடியே வண்டியைக் கிளப்பினான்.

    எனக்கு அந்தச் சுடிதார்ப்பெண்ணின் பேச்சும் செயல்பாடும் மிகவும் பிடித்திருந்தது. ‘வெரிகுட்..பெண்கள்ன்னா இப்படித்தான் இருக்கணும்..பாரதி கண்ட புதுமைப்பெண்’

    தொடர்ந்து அதே போல் பல இருசக்கர வாகனாதிபதிகளை நிறுத்தி சாம…பேத…தான…தண்ட முறைகளைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட பெண்களை அங்கிருந்து வெற்றிகரமாக அனுப்பி வைத்தாள்.

    இறுதியில் அந்த சுடிதார்ப்பெண் மட்டும் தனித்து நிற்கையில் ஒரு டூவீலர்க்காரன் கடந்து செல்ல நான் கேட்டேன். ‘என்னம்மா…ஒரு வண்டி போகுது…அத நிறுத்தி அதுல நீ போகலாமே?’

    ‘இல்ல சார் எங்க வீட்டுக்காரர் வந்திட்டிருக்கார்..என்னை பிக்அப் செய்ய’

    அடுத்த ஐந்தாவது நிமிடம் ஒரு பைக் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய அந்த இளம்பெண் ‘ரொம்ப தேங்க்ஸ் சார்…எங்க ஹாஸ்டல் இங்கிருந்து பக்கம்தான்…நான் நடந்தே போயிடறேன்’ என்று சொல்லி விட்டு நகர,

    அந்த பைக்காரனை நோக்கி வேகவேகமாயச் சென்றாள சுடிதார்க்காரி.

    ‘யார் அவ?’ கேள்வியில் கோபம் தெறித்தது.

    ‘தெரியாதுடா…இங்கதான் எங்கியோ லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கியிருப்பா போலிருக்கு!..இந்த ரோட்டுலதான் பஸ் வரலையே…தனியா நடந்து வந்;திட்டிருந்தா…நான்தான் நிறுத்தி…கேட்டு..லிப்;ட் குடுத்தேன்’

    கண்களைப் பெரிதாக்கிக் கொண்டு பற்களை ‘நற..நற’வென்று கடித்த சுடிதார்க்காரி ‘கொஞ்சம் செவப்பா…அழகா இருந்தாப் போதுமே…உடனே.. ‘ஈஈஈஈ’ ன்னு இளிச்சுட்டு லிப்ட் குடுத்துடுவீங்களே’

    ‘அட என்னம்மா…இதுல என்ன இருக்கு?..மனுசனுக்கு மனுசன் செய்யற உதவிதானே?’

    ‘போதும் பேசாதீங்க’ ‘சட்’டென அவன் வாயை அடைத்து விட்டு, பிசாசுத்தனமாய் பில்லியனில் ஏறி அமர்ந்தாள்.

    அவன் நிதானமாக வண்டியைக் கிளப்ப,

    ‘வீட்டுக்குப் போய் உங்கள வெச்சுக்கறேன் இருங்க’

    போகிற போக்கில் அவள் கோபமாய்ச் சொல்லிக் கொண்டே சென்றது என் காதுகளில் விழ நான் மூரச்சையாகாத குறைதான். ‘அடிப்பாவி..போறவனையெல்லாம் நிறுத்தி…இல்லாத வசனமெல்லாம் பேசி லிப்ட் குடுக்க வெச்சிட்டு…உம்புருஷன் ஒரு பெண்ணுக்கு லிப்ட் குடுத்ததுக்கு இந்த உறுமு உறுமுறியே..ச்சே..உன்னைப் போயி புதுமைப்பெண்ணுன்னு நெனச்சேனே…நீயும் சராசரிதானா?’

    Share
  • கோயமுத்தூர்

     

    முகில் தினகரன் 

    வறண்ட வரைபடத்தை
    விரல்களால் வருடிப் பாருங்கள்
    ஓரிடத்தில் ஜில்லிப்பு
    உங்கள் விரல் நுனியை வியப்பாக்கும் 
    அது
    கோவையின் இருப்பிடம்
    தொட்டாலே சிலிர்ப்பூட்டும்
    வரைபடத்தில் கூட!..

    இம்மண்ணின் மைந்தன்
    மாதாவை மறந்தாலும்
    மரியாதை மறப்பதில்லை!
    ‘வா’.. ‘போ’..வெனும்
    வீராப்பு வார்த்தைகளுக்கு
    வைரப்பூச்சு பூசி
    ‘வாங்க’ போங்க’ ஆக்குவதால்
    மற்ற மாவட்டத்தார் மத்தியில்
    மரியாதை ராமன் இவன்!

    ஊட்டிக் கண்ணகியை
    உரசி நிற்பதால் – இந்த
    கோவலபுரியில்
    வெப்ப மாதவிக்கு விவாகரத்து!

    கலைவாணியின் கடாட்சம்
    கரை புரண்டோடுவதால்
    இங்கு கல்லூரிக்
    கோட்டங்கள் ஏராளம்!
    ஓ…புரிந்து விட்டது
    சிறுவாணியின் தொண்டை வருடல்
    கலைவாணியையும்
    கவர்ந்து விட்டது போலும்!

    திரைத் தேவதையின்
    சிங்கார வதனத்திற்கு – இந்த
    கோவைப் பொற்கொல்லன்
    கொணர்ந்த அணிகள் ஏராளம்!
    ‘பாக்ய’ வளையல்களாய்….
    ‘சத்ய’ மோதிரமாய்….
    ‘ரகுவர’க் கம்மல்களாய்….
    ‘மணிவண்ண’ மூக்குத்தியாய்….
    ‘நிழலான ரவி’களாய்…. 
    ‘சரள’மான சிரிப்புக்களாய்!
    ஆம்!
    வெற்றிக் கோட்டைகள்
    எங்கிருப்பினும் 
    அதில்
    கொங்கு மண்டலத்தின்
    செங்கற்களுண்டு!!

    ஆடையில்லா மனிதன்
    அரை மனிதன் – எங்கள்
    கோவையில்லா உலகம்
    அரை உலகம் – ஆம்
    இங்கு உருளும்
    பஞ்சாலைத் தேர்தானே
    எங்கெங்கோ உள்ள
    திரௌபதைகளுக்கு
    ஆடை வரம் பொழிகின்றது!

    பொருளாதார வகுப்பில்
    முதலிடம் பிடித்த
    டெக்ஸ்டைல்ஸ் குழந்தைக்கு
    இங்குதானே டிசைன் சென்டர்!

    வெண்பளிங்கு மேனியில்
    வியர்க்குரு போல்
    தங்கத் தாமரை மேல்
    திராவகத்துளி போல் – அன்று
    கொங்குத் தலை மேல் மதக்கலவரம்!;  
    விளைவாய்
    வியாபாரக் குறியீட்டில்
    இறங்கு முகம்!
    பொருளாதார நல்லிருப்பில் 
    தற்காலிக நலிவு!

    கறையே காந்தமாகி
    உயர்வுகளை ஈர்த்தெடுக்க – அந்த
    ஊனமே உரமாகி
    ஊன்று கோலை உற்பத்தி செய்ய
    உயர்வு நிலை உன்னதமாய்!
    நிரந்தர வாசமாய்!
    இன்றும்..
    என்றும்!

     படத்திற்கு நன்றி

    Share
  • தீக்கொழுந்தில் பனித்துளி (அத்தியாயம்-14)

    முகில் தினகரன்

    அவள் செல்வதையே விரக்திப் பார்வை பார்த்தபடி நின்றவன். “ஹூம்.. நியாயப்படி பார்த்தா.. எப்ப என் மைதிலி என்னைத் தூக்கியெறிஞ்சுட்டுப் போனாளோ.. அன்னிக்கே நான் உசுரை விட்டிருக்கணும்!.. ஏதோ இந்தத் தேவிக்காகத்தான் இன்னமும் உசுரோடவே இருக்கேன்!.. ப்ச்.. போகட்டுமே.. இந்த மீதி வாழ்க்கையும் அவ நன்மைக்காகவே போகட்டுமே!” தன்னைத் தானே ஆறுதல் படுத்திக் கொண்டான்.

    அவன் முதுகுக்குப் பின்னால் வந்து நின்ற லட்சுமி, “சுந்தர்.. என்னடா நீ பாட்டுக்கு அந்தக் கிறுக்குப் பொண்ணைக் கட்டிக்கறேன்னு சம்மதம் சொல்லி அனுப்பிச்சிட்டே!.. எனக்கென்னமோ.. அவங்க பொய் சொல்றாங்கன்னு தோணுதுடா!.. சத்தியமா எந்த டாக்டரும் கல்யாணம் பண்ணி வெச்சா கிறுக்குத்தனம் போய்டும்ன்னு சொல்லியிருக்க மாட்டான்.. இவங்களா ஒரு கதை விட்டு அந்தப் பைத்தியத்தை யாராவது தலைல கட்டிவிடப் பார்க்கறாங்க!.. அதுக்கு என் பையன்தானா கெடைச்சான்?.. வேண்டாம்டா.. அநியாயமா உன் வாழ்க்கைய நீயே தொலைச்சுக்காதடா!”

    “அம்மா!.. நெனைச்சது கெடைக்கலேன்னா.. கெடைச்சதை நெனச்சதா ஏத்துக்கனும்” தத்துவம் பேசினான்.

    ஆற்றாமையுடன் அவனை ஏறிட்ட லட்சுமி, “ஹூம்.. எந்த நேரத்துல இவன் ஜென்மம் எடுத்தானோ?.. வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து இன்னிக்கு வரைக்கும் கஷ்டங்களை மட்டுமே பார்த்திட்டிருக்கான்!.. படிக்கற வயசுல அப்பன்காரன் செத்ததினால படிப்பை விட்டுட்டுத் தறிக்குப் போனான்!.. தறில உழைச்சு உழைச்சு ஓடாய்த் தேய்ஞ்சான்!.. கூடப் பொறந்தவ கல்யாணத்துக்காக அந்தத் தறிகளையும் வித்துட்டு கூலிக்குப் போனான்!.. போதாக்குறைக்கு ஆசைப்பட்ட அத்தை பொண்ணும்..ஏமாத்திட்டுப் போயிட்டா!.. இப்பக் கடைசியா ஒரு கிறுக்கியக் கட்டிட்டுக் காலம் பூராவும் சீரழியப் போறான்!.. கடவுளே!.. இதுக்காகவா இவனுக்கு இந்தப் பிறவியைக் குடுத்தே?”

    தேவியின் அண்ணன் ரேணுகாவைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்து விட்டான், என்கிற செய்தியை அவர்கள் வீட்டில் இருப்பவர்களால் நம்பவே முடியவில்லை.

    “நெஜம்மாவா?.. நெஜம்மாவா?” என்று ஆளாளுக்கு தேவியைத் திரும்பத் திரும்பக் கேட்டுத் துளைத்தெடுத்தனர்.

    “டேய்.. ரத்னம்.. எதுக்கும் நீயே ஒரு தடவை அவரைப் பார்த்துக் கேட்டுட்டு வந்திடுடா!..” என்று தேவியின் மாமியார் மகனிடம் சொல்லியனுப்ப,

    அவனும் நேரில் வந்து கேட்டு விட்டுப் போனான்.

    தேவியின் திருமணத்தின் போது அந்தத் திருமணத்தை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு தூரம் இழுத்து தாங்கள் கேட்டிருந்த தொகை பைசாக் குறையாமல் கைக்கு வந்த பிறகே நடத்தி முடித்த அதே குடும்பத்தினர் இன்று இந்தக் கல்யாணத்தை எவ்வளவு சீக்கிரம் நடத்தி முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் நடத்தி முடிக்க வேண்டுமென்கிற வெறியோடு செயல் பட்டனர்.

    அடுத்து வந்த முகூர்த்தத்திலேயே நாள் குறித்து, அவசர அவசரமாய் பத்திரிக்கையடித்து, அழைப்பு வைத்து, சுந்தரின் தலையில் அந்தக் கிறுக்குப் பெண்ணைக் கட்டி வைத்து விட்டுத்தான் ஓய்ந்தனர்.

    “அடேங்கப்பா.. இவ்வளவு சடுதில ஒரு கண்ணாலத்தைப் பேசி..நடத்தி முடிச்சிட்டாங்கன்னா.. சாதனைதான்!” சிலர் வியந்து பேச,

    “அது செரி.. எங்க மாப்பிள்ளை மனசு மாறி வேண்டாம்னுடுவாரோங்கற பயத்துல புயல் வேகத்துல முடிச்சிட்டாங்கப்பா!” என்றும. சிலர் கிசுகிசுப்பாய்ப் பேசினர்.

    கல்யாணத்தின் போது அந்தக் கிறுக்கி பண்ணிய அட்டகாசத்தில் மண்டபமே சிரித்தது.

    எந்த வித பிரதிபலிப்பும் காட்டாமல் சிலையாய் அமர்ந்திருந்த சுந்தரைப் பார்த்து விதி சிரித்தது.

    அந்தக் கட்டாயக் கல்யாணம் ஒரு கலாட்டாக் கல்யாணம் போலானது.

    ஆயிரம் இரவுகள் வந்து போனாலும் முதல் இரவின் முதல் அனுபவம் மட்டும் எல்லோர் மன நாக்கிலும் இறுதி வரை ஒட்டிக் கொண்டிருக்கும்.. முதல் முத்தம் போல்.. முதல் காதல் போல்!

    சுந்தருக்கும் அந்த முதல் அனுபவம் வந்தது. மறக்க முடியாததாகவும் இருந்தது. ஆனால், இனிப்பாய் அல்ல!.. வெறுப்பாய்!

    தாம்பத்யத்தைப் பற்றி யாரோ எதையோ அரையும் குறையுமாய்ச் சொல்லிக் கொடுத்து புத்தி சுவாதீனமில்லாத ரேணுகாவை முதலிரவு அறைக்குள் அனுப்பியிருக்க,

    அவள் வந்ததும் வராததுமாய் பால் சொம்பை மேசை மேல் வைத்து விட்டு, அவன் காலடியில் அமர்ந்து ரெண்டு கால்களையும் தொட்டுக் கும்பிட்டுக் கொண்டேயிருந்தாள்.

    சிறிது நேரம் பொறுத்துப் பார்த்த சுந்தர், தாள முடியாமல், “போதும் எந்திரிம்மா!” என்றான்.

    “ம்..அதெப்படி?.. நீங்கதான் என் தோளைத் தொட்டுத் தூக்கி விடுவீங்களாம்.. ம்.. தொடுங்க.. தூக்கி விடுங்க!” என்று சொல்லி விட்டுத் தரையில் சப்பணமிட்டு அமர்ந்து “கெக்கே.. கெக்கே!” என்று சிரித்தாள்.

    சுந்தர் அதை விநோதமாய்ப் பார்த்தவாறே தோளைத் தொட்டுத் தூக்கினான்.

    “ம்ம்ம்.. மொதல்ல காலைத் தொட்டுக் கும்பிடணும்னு நீலவேணி அத்தை சொல்லிச்சு.. கும்பிட்டாச்சு!.. அடுத்தது என்ன?.. மறந்திடுச்சே!” தலையை “வறட்.. வறட்”டென்று சொறிந்தபடியே யோசித்த ரேணுகா,

    “ஆங்!.. ஞாபகம் வந்திடுச்சு!.. பால் குடுக்கணும்!..” என்றவாறு ஓடிச் சென்று பால் சொம்பை எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள்.

    அதை வாங்கி அவன் குடிக்கக் குடிக்க பாதியில் “படக்”கென்று பிடுங்கி, “மீதியை நான் குடிக்கணுமாம்.. நீலவேணி அத்தை சொல்லியிருக்கு!” என்றபடியே அவசர அவசரமாய் மார்புச் சேலையிலெல்லாம் சிந்திக் கொண்டு குடித்து விட்டு.

    மீண்டும் “கெக்கே.. கெக்கே!” என்று சிரித்தாள்.

    வெறுத்துப் பொனான் சுந்தா;. “கடவுளே!.. காலம் பூராவும் இது கூட எப்படி நான் காலந் தள்ளப் போறேனோ?”

    குதித்து கட்டிலின் மீது ஏறி நின்று, “தொபீர்”ரென்று சப்பணமிட்டு அமர்ந்தவள், “அய்ய்யோ.. .அப்புறம் என்ன சொன்னாங்க.. மறந்து போச்சே!.. .ம்ம்ம்.. ஏங்க மாப்பிள்ளை உங்களுக்குத் தெரியுமா?.. தெரிஞ்சா கொஞ்சம் சொல்லிக் குடுக்கறீங்களா?”

    “தெரியாது” என்று சொல்லி விட்டுத் திரும்பி தலையிலடித்துக் கொண்டான் சுந்தர்.

    “அப்படின்னா.. நான் போயி நீலவேணி அத்தைகிட்ட நல்லாக் கேட்டுட்டு வர்றேன்” என்று சொல்லிக் கொண்டு கட்டிலிலிருந்து குதித்திறங்கி, கதவருகே சென்றவளை ஓடிப் போய்த் தடுத்தான் சுந்தர்.

    “ஏய்..ஏய்..என்ன இது?.. வெளியில போகாதே!.. அவங்கெல்லாம் இன்னேரம் தூங்கியிருப்பாங்க!” என்றபடி சுந்தர் அவள் தொளைத் தொட்டு திருப்பிய போது,

    “அய்.. ஞாபகம் வந்திடுச்சே!.. ”என்றவள் அவன் எதிர்பார்க்காத விநாடியில் அவன் கன்னத்தில்.. மூக்கில்.. வாயில்.. தாடையில்.. .என மாறி.. மாறி முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள்.

    “அய்யய்யோ.. யாரந்த நீலவேணி அத்தை.. அவ இன்னும் என்னவெல்லாம் சொல்லிக் கொடுத்து அனுப்பியிருக்காளோ தெரியலையே!.” சுந்தர் தர்ம சங்கடத்தில் நெளிந்த போதுதான் அது நடந்தது.

     

    (தொடரும்)

    படத்திற்கு நன்றி: http://www.tamilnow.com/gallery/tamil-nadu/dakshina-chitra/tamil-marriage.html

    Share
  • நாக்பூருக்குப் போ!

    முகில் தினகரன்

    பேராசிரியர் சிவஞானம் இறந்து விட்டார்.

    தகவல் கிடைத்த நிமிடத்தில் மனசு கனத்துப் போய் தாங்க முடியாத வேதனையுடன் தனிமை நாடி அமர்ந்தேன் பார்வை சூன்யத்தை பலவந்தமாய் வெறித்தது.

    ‘வாட் எ கிரேட் மேன்?அவரும்…அவரோட அந்த அறிவரையும்தானே இன்றைக்கும் நான் உயிரோட இருக்கக் காரணம்…அவர் மட்டும் அன்றைக்கு என் மனதை மாற்றி..இந்த நாக்பூருக்கு ரயிலேற்றி அனுப்பி இருக்காவிட்டால்…..’

    யோசித்துப் பார்த்ததில் உடல் சிலிர்த்தது.

    இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்….ஒரு மழை இரவில்…மந்திரி சண்முகநாதனின் அடியாட்கள் அவருடைய மகளை காதலிக்கிறேன்…என்கிற ஒரே காரணத்திற்காக என்னை துவம்சம் செய்ய என்னுடைய கல்லூரி ஹாஸ்டலுக்கு வந்த போது நண்பர்களின் உதவியோடு அங்கிருந்து தப்பி பேராசிரியர் சிவஞானத்திடம்தான் தஞ்சம் புகுந்தேன். காரணம்,? அவர்தான் எங்கள் அனைவருக்குமே வழிகாட்டி…அறிவு ஜீவி…இளம் ஜீனியஸ்.

    ‘நீ உயிரோட இருக்கணும்னு விரும்பினா….உடனே உன் காதலைத் தூக்கிப் போடு..கேவலம் அற்ப காதலுக்காக..அற்பத வாழ்க்கையை இழந்திடாதே…உன் கிட்ட படிப்பிருக்கு…திறமை இருக்கு…எதையும் சாதிச்சுக் காட்டற உத்வேகம் இருக்கு…அதை உழைப்புல காட்டு…என்னோட நண்பர் ஒருத்தரோட கம்பெனி நாக்பூர்ல இருக்கு…நான் போன்ல சொல்லிடறேன்…உடனே கிளம்பு…உனக்கான வெளிச்ச எதிர்காலம் அங்க இருக்கு…உயர்வு சிம்மாசனம் காத்திருக்கு….இங்கிருந்து மரணத்தைச் சுவைக்காதே…நாக்பூருக்குப் போ…விடியல் ரெடியா இருக்கு’

    ரயில் நிலையம் வரை எனக்குப் பாதுகாப்பாக வந்து டிக்கெட்டை என் கையில் திணித்து தடம் புரள இருந்த என் வாழ்க்கைக்கு உயர்வு திசை காட்டிய அந்த உத்தம பேராசிரியர் இன்று இறந்து விட்டார்.

    கடந்து போன இருபத்தியிரண்டு ஆண்டுகளில் ஒரு முறையேனும் ஊருக்குத் திரும்பிச் சென்று அவரைப் பார்த்திருக்கணும்….ப்ச்…தப்புப் பண்ணிட்டேன்…’உயரணும்..உயரணும்…’ன்னு உயிரைக் குடுத்து உழைத்து அவர் சொன்னபடி உயர்வுச் சிம்மாசனத்தில் அமர்ந்தாச்சு…ஆனா..ஊர்…உலகம்…உறவு…நட்பு…எல்லாத்தையும் மறந்து ஒரு எந்திர வாழ்க்கை வாழ்ந்து விட்டோமே…என்கிற ஆயாசம் இப்போது தெரிகின்றது. ஓரிரு முறை அவரிடம் கேட்டிருக்கின்றேன்…’ஊருக்கு ஒரு தரம் வந்திட்டுப் போறேனே சார்…பெத்தவங்களை…நண்பர்களை…உங்களையெல்லாம் பார்க்கணும்னு ரொம்ப ஆசையாயிருக்கு..சார்’

    கண்டிப்பான ஒரே பதில்தான் வரும் ‘வேண்டாம் தியாகு…அந்த மந்திரிக்கு இன்னும் உன் மேல் கோபம் தீரலை…எப்ப நீ வருவேன்னு காத்திட்டிருக்கான்…நீ வந்தே…அவ்வளவுதான்…இத்தனை நாள் நீ பட்ட கஷ்டமெல்லாம் வீணாப் போய்டும்….எங்கியோ கண் காணாத ஊர்ல நீ உயிரோட இருக்கறே..அதுவும் நல்லா இருக்கறே…அந்த சந்தோஷம் போதும் எங்களுக்கு அதைக் கெடுத்திடாதே’

    அவர் சொல்படியே நியூஸ் பேப்பரில் விளம்பரம் கொடுத்து ஒரு மும்பை வாழ் தமிழ்ப் பெண்ணை மணந்து இரண்டு மகன்களைப் பெற்று இன்று ஒரு பொறுப்பான தந்தை ஸ்தானத்தில் அமர்ந்திருக்கின்றேன்.

    தீர்மானித்து விட்டேன்.

    அவரது சாவக்குச் செல்வதென்று. விமான டிக்கெட்டுக்கு மின்னலாய் ஏற்பாடு செய்து புயலாய்க் கிளம்பினேன்.

    விமான நிலையத்திலிருந்து டாக்ஸி பிடித்து பேராசிரியரின் முகவரியை டிரைவரிடம் கொடுத்து விரட்டினேன். ‘எப்படியாவது பாடிய எடுக்கறதுக்கு முன்னாடி போயிடணும்’

    நல்லவேளையாக நான் போய்ச் சேர்ந்த போது பேராசிரியரின் உடல் சுடுகாடு நோக்கி பயணிக்காமல் இருந்தது. ‘கடைசியா ஒரு முறை அவர் முகத்தைப் பார்க்க இறைவன் கொடுத்த வாய்ப்பு’.

    முன் ஹாலில் கிடத்தப்பட்டிருந்த பேராசிரியரின் உடலை இறுகிய முகத்துடன் பார்த்து உள்ளுக்குள் குமுறினேன். ‘எப்பேர்ப்பட்ட மனிதர்….எப்படி முடிந்தது இவரால் மட்டும்….எப்போதும்….எல்லோருக்கும்…நல்லது மட்டுமே நினைக்க…நல்லது மட்டுமே செய்ய…,’

    அழும் பெண்கள் கூட்டத்தில் தேடினேன் பேராசிரியரின் மனைவியை. ‘இதில் பேராசிரியரின் மனைவி யார்?…துக்கம் விசாரிக்க வேண்டுமே…எப்படிக் கண்டுபிடிப்பது?’

    பக்கத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் நாசூக்காய் விசாரித்தேன்.

    ‘மிஸஸ் சிவஞானம் தானே?..அதோ அந்த….கறுப்பு ஸாரி…’

    அவர் காட்டிய திசையில் திரும்பிப் பார்த்த நான் ஒரு விநாடி அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று திரும்பினேன்.

    இது…இது…

    நான் காதலித்த….

    மந்திரி சண்முகநாதனின்…மகள்…அல்லவா?

    இவளா…பேராசிரியரின் மனைவி?

    எனக்கு எதுவுமே புரியவுமில்லை…தோணவுமில்லை. ‘எப்படி?.’

    என் மனம் ரீப்ளே பட்டனை அழுத்தி சோதித்தது.

    ‘சார்….உங்க கல்யாணத்திற்கு நான் வராமல் எப்படி சார்?…வருவேன் சார்…கண்டிப்பா ஊருக்கு வரத்தான் சார் போறேன்’

    ‘ப்ளீஸ்…தியாகு புரிஞ்சுக்கப்பா…உனக்கு எது நல்லது எது கெட்டதுன்னு எனக்குத் தெரியாதா?…உனக்கு நான் இன்விடெஷன் அனுப்பியதே ஒரு இன்ஃபர்மேஷனுக்காகத்தான்…நீ வரணும்’ என்பதற்;காக அல்ல…..நீ வரக்கூடாது…அங்கிருந்தே வாழ்த்து அது போதும்’

    (முற்றும்)

     

    Share
  • சுழல்

    முகில் தினகரன்

    குடிசைக்கு வெளியே குத்துக்காலிட்டு அமர்ந்தவாறு ஒருவித ரசிப்புடன் பீடியை உறிஞ்சிக் கொண்டிருந்தான் வீரண்ணன். சற்றுத் தள்ளி அவன் மனைவி சிகப்பி பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டே இவனையும் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தாள்.

    ‘த பாருய்யா…மூத்தவ தலைப் பிரசவத்துக்கு வந்து உட்கார்ந்துட்டிருக்கா…எப்படியும் ரெண்டு மூணு நாளுல வலி கண்டிடும்…எனக்கென்னமோ நம்மூரு கவருமெண்டு ஆசுபத்திரி தோதுப்படாதுன்னு தோணுது…பக்கத்தூரு பிரைவேட்டு ஆசுபத்திரிக்குத்தான் இட்டுட்டுப் போவணும்…அதுக்கெல்லாம் காசு பணம் கொஞ்சங் கூடுதலா ஆவும்….அதப் போயி ஏற்பாடு பண்ணுவியா….அத விட்டுட்டு இங்க உக்காந்து பீடி வலிச்சிட்டிருக்கியே…உனக்கு எதுனாச்சும் இருக்கா?’

    ‘அட ஏண்டி சும்மா கெடந்து கூவுற?…வேலை வெட்டி ஒண்ணும் சரியா கெடைக்கலைடி…மழைக்காலமாப் போனதால் டூர் வர்ற ஜனங்க எண்ணிக்கையும் கொறைஞ்சிடுச்சு…இந்தச் சமயத்துல ‘ரெண்டாயிரம் ஆவும்…மூவாயிரம் ஆவும்’ ன்னா எங்கடி போவேன் நான்?’ வீரண்ணனும் பதிலுக்குக் கத்த,

    பாத்திரங்களை அப்படியே போட்டு விட்டு எழுந்து அவனருகே வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவன் காதோரமாய் ‘த பாருய்யா…தேவை பெரிய தொகை….அதனால பாவ புண்ணியம் பாக்காம….ஆளிழுக்கற வேலையப் பண்ணிடு…’ என்றாள்.

    ‘என்னடி சொல்றே?’

    ‘காலேஜி பசங்க ஆத்துக்கு குளிக்க வர்றாங்கல்ல?…அதுல எவனாச்சும் ஒருத்தனை உள்ளார கொண்டு போய் பாறையிடுக்குல சொருகிடு…அப்புறம் பேரம் பேசி சவமெடுக்கறதுக்குன்னு பெரிய தொகையா வாங்கிடலாம்’

    ‘சீச்சீ…பாவம்டி அது…’

    ‘ஆமா…இப்படி பாவ புண்ணியம் பார்த்துட்டே இருக்கறதாலதான் இன்னமும் நீ இப்படியே அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிட்டிருக்கே….இதே அந்த ரெங்கனைப் பாரு….எப்படியும் மாசம் ரெண்டு ஆளை இழுத்துடறான்…பெரிய தொகை பாத்துப் போடறான்…’

    நிறைமாத வயிறோடு குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்த மூத்த பெண் சுந்தரி ‘அய்யா…கவருமெண்டு ஆசுபத்திரி ஆவாது…பிரைவேட்டு ஆசுபத்திரிலதான் புள்ளப் பெக்கணும்னு எங்க மாமியா சொல்லியே அனுப்பிச்சிருக்கு…’ என்று அவள் பங்குக்கு சொன்னாள்.

    ‘க்கும்…நீயே சொல்லு…நானும் சொல்லிச் சொல்லி ஓய்ஞ்சு போயிட்டேன்..’ சிகப்பி மீண்டும் பாத்திரங்களுக்கு நடுவில் சென்றமர்ந்தாள்.

    ஒரு நீண்ட மனப் போராட்டத்திற்குப் பிறகு எழுந்து ஆற்றங்கரையை நோக்கி நடந்தான் வீரண்ணன்.

    ஆற்றகரையில் கூட்டம் அவ்வளவாக இல்லை. ஆங்காங்கே வாலிபப் பசங்க கூட்டம் மட்டும் ‘காச்…மூச்’ சென்று கத்திக் கொண்டு தண்ணீரில் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

    சற்றுத் தள்ளி கூட்டம் குறைவான பகுதியில் ஐந்தாறு இளைஞர்கள் நீரில் விளையாடிக் கொண்டிருக்க அவர்களை குறி வைத்தான் வீரண்ணன்.

    நீருக்குள் இறங்கி மூச்சடக்கி, ஆழப்பகுதிக்குச் சென்று அந்த இளைஞர்கள் இருக்கும் பகுதியை அடைந்தான். மெல்ல மேல் நோக்கி வந்து, கையில் சிக்கிய ஒரு காலை இழுத்துக் கொண்டு மறுபடியம் ஆழத்திற்குச் சென்றான். பாறைகள் நிறைந்த பகுதி வரை இழுத்துச் சென்றவன் ஒரு பாறை இடுக்கில் அந்தக் காலைச் செருகி விட்டு, நீருக்கடியிலேயே நகர்ந்து நீண்ட தூரம் சென்ற பின் மேலெழும்பி வந்தான். எதுவுமே நடக்காதது போல் நீரிலிருந்து வெளியேறி கரையில் நடந்து சென்ற வீரண்ணனை யாருமே கண்டு கொள்ளவில்லை.

    அங்கிருந்து புறப்பட்டு அரைக் கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் ஒரு டீக்கடையில் வந்தமர்ந்து அழைப்புக்காகக் காத்திருந்தான்.

    ஒரு டீ…ஒரு பீடி!…ஒரு டீ….ஒரு பீடி!…என மாறி மாறி உறிஞ்சிக் கொண்டிருந்தவனை நோக்கி ஒரு கூட்டம் கத்திக் கொண்டெ ஓடி வர எதுவும் தெரியாதவன் போல் விசாரித்தான். ‘ஏம்பா…என்னாச்சு உங்களுக்கு?…எதுக்கு இப்படி ஓடி வர்றீங்க?’

    ‘அய்யா…அய்யா…எங்களோட வந்த ஒருத்தனைக் காணலை…உள்ளார போயிட்டான் போலிருக்கு….காப்பாத்துங்கய்யா…ப்ளீஸ்…’ கதறியவன் கண்களில் வண்டி வண்டியாய்ப் பீதி.

    ‘அடடே…’ என்றபடி அவசரமாய் எழுந்து வேட்டியை மடித்துக் கொண்டு வேக வேகமாய் ஓடினான் வீரண்ணன். அந்த இளைஞர் கூட்டமும் கூடவே ஓடி வந்தது.

    ‘எந்த எடத்திலப்பா குளிச்சிட்டிருந்தீங்க?’ தெரியாதவன் போல் கேட்டான் வீரண்ணன்.

    ஒரு இளைஞன் காட்டிய இடத்தைப் பார்த்து உதட்டைப் பிதுக்கி ‘அய்யய்ய…அங்க தண்ணிக்குள்ளார நிறைய சுழலு இருக்குதப்பா…அங்க ஏன் போனீங்க?’

    ‘எங்களுக்குத் தெரியாதுங்கய்யா…நாங்க வெளியூரு’

    ‘சரி…சரி…எவ்வளவு நேரமாச்சு…ஆளு காணாமப் போயி?’

    ‘ஒரு….முக்கால் மணி நேரம் இருக்கும்ங்கய்யா’

    ‘ப்ச்…அப்பக் கஷ்டந்தான்….சொழலுல சிக்கி உள்ளார பாறைல போய் மாட்டியிருந்தா இந்நேரத்துக்கு உசுரு போயிருக்கும்…’

    வீரண்ணன் சொன்னதும் அந்த இளைஞர்கள் கோரஸாய் அழ ‘சரி…சரி…இருங்க பாத்துடலாம்…’

    அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் முங்கி சில நிமிடங்களுக்குப் பிறகு மேலே வந்து ‘உள்ளார ஆள் இருப்பதாத் தெரியலையே…’ என்றான் வீரண்ணன்.

    ‘அடிச்சிட்டுப் போயிருக்குமோ என்னவோ?’ கூட்டத்தில் எவனோ ஒருவன் பொத்தாம் பொதுவாய்ச் சொல்ல,

    ‘அப்படி அடிச்சிட்டுப் போயிருந்தா…இன்னேரத்துக்கு அஞ்சாறு கிலோ மீட்டராவது தாண்டிப் போயிருக்கும்…’

    அழுது கொண்டிருந்த இளைஞர் கூட்டத்தில் சற்று தைரியமான ஒருவன் முன் வந்து ‘அய்யா….என்ன ஆனாலும் சரி…எவ்வளவு பணம் ஆனாலும் சரி…எங்களுக்கு பாடிய எடுத்துக் குடுத்துடுங்க…இப்பத்தான் அவங்க பேரண்ட்ஸ்க்குப் போன் பண்ணியிருக்கேன்…அவங்க வந்திட்டிருக்காங்க….’

    ‘ஆஹா…அப்ப பெரிய தொகை வந்திட்டிருக்கு…சரி…அந்தப் பையனைப் பெத்தவங்க வர்ற வரைக்கும் தேடுற மாதிரி பாவ்லா பண்ணிட்டு அவங்க வந்தப்புறம் பாடிய எடுத்து காசு வாங்கிடணும்’ மனசுக்குள் கணக்குப் போட்டான் வீரண்ணன்.

    ஆனால் இதையெல்லாம் மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்டவன் அதே கணக்கை வேறு விதமாய்ப் போட்டுக் கொண்டிருப்பது பாவம் அவனுக்குத் தெரியாது.

    மூன்று மணி நேரத்திற்குப் பிறகே அவர்கள் வந்து சேர்ந்தனர். வந்தவுடன் தாயும் தகப்பனும் கதறிய கதறல் வீரண்ணனை சந்தோஷப்படுத்தியது. ‘பய மேல ரொம்ப பாசம் போலிருக்கு…பாடிய எடுத்துக் குடுக்க எவ்வளவு கேட்டாலும் நிச்சயம் தருவாங்க’

    சிறிது நேரத்திற்குப் பிறகு, பாவ்லா போதுமென முடிவு செய்த வீரண்ணன் தண்ணீருக்குள் முங்கி தான் செருகி வைத்த இடத்திலிருந்து அந்த உடலை இழுத்துக் கொண்டு மேலே வந்தான்.

    கரையில் தூக்கி வந்து போட்ட அந்த சடலத்தைப் பார்த்த வீரண்ணன் அதிர்;ந்து போனான். அந்த இளைஞனுக்கு வலது கை சிறிய வெள்ளரிப் பிஞ்சு போல் சூம்பிப் போய் தோளிலிருந்து அரையடியெ இருந்தது. முன் பகுதியில் பேருக்கு இரண்டு குட்டி விரல்கள் ஒட்டிக் கொண்டிருந்தன.

    முதன் முறையாக வீரண்ணனுக்கு மனசு வலித்தது.

    ‘ஏம்பா! இப்படி இருக்கற பையன் ஏனப்பா தண்ணில எறங்கணும்?’ தன் அங்கலாய்ப்பை வீரண்ணன் கேட்டே விட,

    ‘இந்த எடத்துல ஆழமில்லைன்னு சொன்னாங்கய்யா…அத நம்பித்தான் நாங்க இவனை எறங்க அனுமதிச்சோம்…’

    சடலத்தைச் சுற்றி அமர்ந்து நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தவர்களிடம் ‘நான் கௌம்பனும்…என்னை கவனிங்க’ வீரண்ணன் சொன்னான.

    மூவாயிரம் ருபாய் கைமாறியதும் புறப்பட்டான்.

    ‘ச்சே….கை சூம்பிப் போன பையனை இழுத்திட்டுப் போய்ச் சொருகிட்டோமே…’ வீடு வந்து சேரும் வரைக்கும் அந்த உறுத்தல் வீரண்ணனை கொல்லாமல் கொன்றது.

    குடிசையில் யாரும் இல்லாதிருக்க தெருவுக்கு வந்து தலையில் துணி மூட்டையோடு சென்று கொண்டிருந்த வண்ணாத்தியிடம் கேட்டான்.

    ‘அடக் கெரகமே….தெரியாதா உனக்கு?…உன்ர மவளுக்கு பிரசவ வலி வந்து…பிரைவேட்டு ஆசுபத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்க…பணங் கட்டுறதுக்கு உன்னையக் காணோம்னு வலை போட்டுத் தேடிட்டிருந்தாங்க…சீக்கிரமா ஓடு’

    ஓடினான்.

    இன்னும் பிரசவம் ஆகவில்லை. பணம் கட்டி விட்டுக் காத்திருந்தனர்.

    நொடிகள் நிமிடங்களாக….நிமிடங்கள் மணியாக கரைந்து கொண்டிருக்க…

    ‘ஆம்பளக் கொழந்த பொறந்திருக்கு’ நர்ஸ் ஒருத்தி வந்து சொன்னாள்.

    ‘அப்பாடா….’ நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி அறைக்குள் சென்று தொட்டிலில் கிடந்த அந்த ஆண் குழந்தையைப் பார்த்த வீரண்ணனின் தலை ‘கிர்’ரென்று சுழன்றது.

    ஒரு கை சூம்பிப் போய் பாதியே இருக்க, முன்பகுதியில் பேருக்கு இரண்டே இரண்டு குட்டி விரல்கள் ஒட்டியிருந்தன.

    (முற்றும்)

    பின்குறிப்பு: எங்கள் கோயமுத்தூரில், நகரத்தை விட்டுத் தள்ளி இருக்கும் ஒன்றிரண்டு நீர் நிலைகளில் சில கும்பல்கள் செய்து கொண்டிருக்கும் இந்த கொடூரச் செயல் பற்றி கிட்டத்தட்ட பல பேர் அறிந்திருந்த போதும், மாதம் ஒன்றிரண்டு இளைஞர்கள் பலியாகிக் கொண்டுதானிருக்கின்றனர்.

    இக்கதையைப் படித்த பிறகு கொஞ்சமேனும் விழிப்புணர்வு ஏற்பட்டால் அது போதும் எனக்கு.

     

    Share