Tag: சுரேஜமீ

  • சிகரம் நோக்கி (11)

    வெற்றி

    peak111111

    சுரேஜமீ

    தொட்டுவிடும் தூரம் தான் வானம்;
    தொட முனைபவர்க்கு!
    தோகையை விரித்தால் தான்
    மயிலுக்கு அழகு!
    எண்ணங்கள் எனும் தோகை விரிந்தால்தான்
    ஏற்றங்கள் பெற முடியும்! – சுரேஜமீ

    நாம் எதை நினைக்கிறோமோ, அதுவாகவே ஆகக் கூடிய வல்லமை, மனிதனுக்கு மட்டுமே உண்டு! ஆனால், நம் நினைவுகள் எல்லாம் ஒரு எல்லையிலேயே இருப்பதுதான், நம் பிரச்சினையே.

    ஒரு விடயத்தை எடுத்தால், அதில் வெற்றியடையும் வரை, வேறு எச்சிந்தனையும் இல்லாமல், ஒரு முகமாக, செயலில் ஏகினால், வெற்றி தள்ளிப் போகலாமெயொழிய, நிச்சயம், தட்டிப் போகாது!

    நம்புங்கள் உங்களை! நாளை வரலாறு உங்களால் எழுதப் படும் என்று! வரம் கேட்டு உங்கள் வாசலுக்கே வரும் வாய்ப்புகள்!

    எந்த ஒரு சாதனையாளருக்கும், வெற்றி தன் வாயிற்கதவை உடனே திறந்து விடவில்லை; ஒவ்வொரு முறையும் ஒரு படிப்பினையைக் கொடுத்துத் தங்கத்தை மெருகேற்றுவது போல, தன்னைச் செதுக்கிய பின்னரே வரும் வெற்றி, காலத்தால் போற்றப் படுகிறது என்பது நாம் அறிந்ததே!

    அப்படி இருந்தும் ஏன், நாம் மட்டும் தோல்வி என்றவுடன், எதிர் மறையாகச் சிந்திக்கிறோமே?

    தோல்வி என்பது விதை போன்றது; விதை வீறிட்டு எழும்வரை போராட்டம்தான்!
    எழுந்த மறு நொடியே பாராட்டும் வாழ்வு பிறக்கும்!

    தோல்வி கற்றுத் தரும் பாடத்தை, உளிதாங்கும் சிற்பத்தைப் போல, எடுத்தவுடன் கிடைக்கும் வெற்றி ஒருநாளும் கற்றுத்தராது!

    வெற்றியின் ரகசியமே, நீங்கள் எந்த நிலையில் ஒரு செயலின் முடிவை அணுகுகிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது. ஒவ்வொரு முடிவும், படி தாண்டி வரும்பொழுது, ஒவ்வொன்றும் வெற்றிதானே?

    வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது.

    பாரதி என்ன சொல்கிறான்?
    தேடிச் சோறு நிதம் தின்று – பல

    சின்னஞ்சிறு கதைகள் பேசி

    வாடித் துன்பமிக உழன்று – பிறர்

    வாடப் பல செயல்கள் செய்து – நரை

    கூடிக் கிழப்பருவம் யெய்தி – கொடுங்

    கூற்றுக்கிரை எனப் பின் மாயும் – பல

    வேடிக்கை மனிதரைப் போல நானும் – இங்கு

    வீழ்வேன் என்று நினைத்தாயோ?

    உரக்க, உணர்வுகளோடு இந்த வரிகளைச் சொல்லிப் பாருங்கள். உங்கள் உதிரத்தில் வெற்றியின் வேர்கள் நிச்சயம் விதைக்கப்பட்டுவிடும்! திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்! உங்கள் வாழ்வின் இலட்சியம் புலப்படும்!

    மனித வாழ்வு என்பது அதிக பட்சம் நூறு ஆண்டுகள் தான்! இருக்கின்ற ஒவ்வொரு நாளும், இறைவன் கொடுத்த பரிசு! விதி என்று உங்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள். உங்கள் வாழ்வு, உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

    ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்த ‘ரைட்’ சகோதரர்களை, இந்த உலகம் ஏளனமாகத்தான் பார்த்தது; ஆனால், இன்று அதன் வசதியில், இந்த உலகத்தின் ஒரு மூலையும், மற்றொரு மூலையும் தொட்டுவிடும் தூரமாகிப் போனதென்றால்,

    நீங்கள் அறிய வேண்டுவது, உங்கள் முயற்சிகளைப் பற்றிய, உங்களின் தெளிவான சிந்தனையே அன்றி, அடுத்தவர்கள் உங்கள் மீது வைக்கும் விமர்சனங்கள் அல்ல என்பதே!

    உங்களுக்கு எது விருப்பமானதோ, எதை உங்கள் உள்ளுணர்வு சொல்கிறதோ, அதைத் தாமதிக்காமல் செய்ய முற்படுங்கள்! வெற்றி உங்கள் கைகளில் தவழும் நாள் வெகு தொலைவில் இல்லை!

    ஒருபோதும் உங்களுடன் மற்றொருவரை ஒப்பீடு செய்யாதீர்கள்! அது உங்களை, நீங்களே அவமதிக்கும் செயல் என்று உலகப் பணக்காரர்களுள் ஒருவரும், வெற்றியின் உச்சத்தை அடைந்தவருமான பில் கேட்ஸ் கூறுகிறார்.

    சத்தியமான வார்த்தைகள் அவை!

    மாபெரும் சபைதனின் நீ நடந்தால் உனக்கு
    மாலைகள் விழ வேண்டும்!
    ஒரு மாத்து குறையாத மன்னவன் இவனென்று
    போற்றிப் புகழவேண்டும்!

    எப்பொழுது அது நடக்கும்?

    உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம்!
    உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் தலை
    வணங்காமல் நீ வாழலாம்!

    என்ற கவியரசரின் எளிமையான வரிகளை உங்கள் இதயத்தில் இருத்தி, இலட்சியங்களை நோக்கி, இடைவிடாது பயணிக்க,

    சிகரங்கள் சிரம் வணங்கக் காத்திருக்கிறது உங்களுக்காக!

    …….. தொடர்ந்து பயணிப்போம்!

    அன்புடன்
    சுரேஜமீ

    Share
  • எம்மொழியின் மன்னவனே!

    -சுரேஜமீ​​

    தமிழன்று தவமிருக்கத்
    தாயென்று நீயிருக்கத்
    துள்ளிவந்து விழுந்ததுவே
    தெள்ளுதமிழ்ச் சொற்களெலாம்!        Kannadasan

    தரணிபுகழ் கொண்டதுவே
    தமிழரெலாம் மகிழ்ந்திடவே
    தலைவனென்று புகழ்ந்திடவே
    தலைமுறையும் வணங்கிடவே

    தன்னையுணர் மனிதரெலாம்
    தலைநிமிர்ந்து வாழ்ந்திடவே
    தக்கதொரு நூல்படைத்துத்
    தனையறியச் செய்திட்டாய்!

    தானழித்து ஊனழித்துத்
    தமிழ்செய்த பெருந்தகையே
    தலைவணங்கி வேண்டுகிறேன்
    தமிழ்கொடுத்து வரமளிக்க!

    கவியரசர் எனும்நாமம்
    கண்டவரும் கொண்டாலும்
    கண்ணதாசன் உனக்கீடு
    காவியத்தில் யார்வருவார்?

    எண்ணமெலாம் தமிழாக
    ஏற்றதொரு பண்பாடி
    எட்டுத்திக்கும் பரவிநிற்கும்
    எம்மொழியின் மன்னவனே!

     

    Share
  • வள்ளுவ மாலை

    -சுரேஜமீ​​

    வள்ளுவம் ஏகிநிற்போர் வாழ்வினில் பெற்றிடுவர்
    எண்ணுவம் எல்லாம் உலகில் – மாநிலம்
    போற்றிடத் தானுயர் சான்றோராய் என்றும்   valluvar
    பெருமையாய் வாழ்வர் சிறந்து!

    தவறிலார் வாழ்வு சிலநேரம் தள்ளாடும்
    தன்னகத்தே வீற்றிருக்கும் தெய்வம் துணையாக
    வள்ளுவம் சிந்தையில் ஏகிடத் தேடிவரும்
    வாய்ப்பு உணர்வீர் மெய்!

    மண்ணில் இறைவன் எங்கும் உளமிருக்க
    பொன்னும் பொருளும் வாரா உதவிக்கு
    மாறாய் மனிதம் தேடிஎடு – வள்ளுவம்
    கூறும் நெறியில் வாழ்!

    நல்லவை ஏதெனின் யாவர்க்கும் அல்லவை
    என்றும் செயாமை யான்கெட்டும் – வள்ளுவம்
    சொன்னவை பின்பற்ற வாழ்வின் சுகமதுதான்
    பின்னவை போற்றும் உலகு!

    எண்ணம் பிறழ்செய் ஏற்றம் தருநிழல்
    சொற்பம்; முடிவில் துன்பம் வரும்நேரம்
    தெய்வமும் தள்ளிநிற்கும் தானுணர – வள்ளுவம்
    தேறிமாற வாழ்வு நலம்!

     

    Share
  • சிகரம் நோக்கி – 10

    சுரேஜமீ

    நம்பிக்கை!

    peak11111

    தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும் – குறள்

    உங்கள் குரல் இதனைத் திரும்பத் திரும்பச் சொன்னால், நிச்சயம் முடியாதது எதுவும் இல்லை! இதோ உங்களுக்காக, இன்போஸிஸ் நிறுவனத் தலைவர், திருவாளர். நாராயண மூர்த்தி அவர்கள் ஆற்றிய உரையை அப்படியேத் தமிழில் கவிதையாக விதைக்கிறேன்!

    நம்பிக்கை மலர்கள் பூத்துக் குலுங்கட்டும்!

    பத்ம விபூஷன் திரு. நாராயண் மூர்த்தி அவர்களின் உரை:

    மாதத்தில் இருபத்திரெண்டு நாட்கள்;
    அயல் நாட்டில்;
    எட்டு நாட்கள் என் தாய் நாட்டில்;
    இதுதான் எனது இன்றைய நிலை!

    இத்தகைய சூழலில்
    இந்த குவைத் கன்னட கூட்டா
    அமைப்பின் நிகழ்ச்சியில்
    “தொழில் முனைவோர்”
    என்ற தலைப்பில் பேச
    அழைத்திருக்கிறார்கள்!

    நண்பர்களே; குறிப்பாக இளையோரே;
    தொழில் முனைவோர் எப்படி
    ஒரு சமுதாயத்தை மாற்ற முடியும்
    என்பதை நாம் உணரவேண்டும்!
    தனி நபர் வருமானத்தில்;
    உலகத்தில் முதல் பத்து இடத்தில்
    இருக்கும் குவைத்துக்கும் கூட
    இது பொருந்தும்!!

    தனது “முயற்சியை”,
    குறிக்கோளை, தகுந்த முறையில்
    செல்வம் தரும் வகையில் மாற்றி,
    வேலை வாய்ப்பை உருவாக்கி,
    ஏழ்மையை விரட்டுவோமேயானால்;
    அதுதான், நம் வெற்றியின் அடையாளம்!

    “முடியாதது” எதுவோ; அதை
    “முடியும்” என மாற்றுவதே
    உங்களின் முயற்சியின்
    இலட்சியமாக இருக்க வேண்டும்!

    ஒரு “முயற்சி” வெற்றி பெற
    அடிப்படைத் தேவைகள் என்ன?

    1. நீங்கள் கூறுவது எளிமையாக இருத்தல் அவசியம்;
    கட்டுப்பாடுகள் அற்ற, தெளிவான வார்த்தைகளை
    உபயோகிக்க வேண்டும்;

    உங்கள் முயற்சி ஒரு நிறுவனத்தின்
    2. உற்பத்தி செலவை குறைப்பதாகவோ;

    3. உற்பத்தி சுழற்சியின் நேரத்தை குறைப்பதாகவோ;

    4. சந்தையைப் பெருக்குவதாகவோ;

    5. வாடிக்கையாளரை கவருவதாகவோ;

    இருத்தல் அவசியம்!

    இவை நான்குமோ;
    இதில் ஏதேனும் ஒன்றோ
    உங்கள் முயற்சியில்
    இருந்தால்; நிச்சயம் ஒருநாள்
    உங்கள் இலட்சியம் வெற்றியடையும்!

    உலகில் தொண்ணூற்று ஒன்பது
    சதவிகிதத்தினர்; மற்றவர்
    முயற்சியை; மெருகூட்டி
    வெற்றியடைவதால்; கால
    ஓட்டத்தில்; அவர்களால்
    நிலைக்க இயலவில்லை!

    தன்னுடைய முயற்சி
    வெற்றியடைந்ததால்;
    General Motors; Microsoft;
    Apple; Fed ex போன்ற
    நிறுவனங்கள் நிலைத்து
    நிற்கின்றன!

    உலகின் மாற்றங்களை
    உன்னிப்பாய் கவனியுங்கள்;
    உலக அளவில் ஏற்பட்ட
    நான்கு மாற்றங்கள் தான்;
    நான் அன்று வெறும்
    250 டாலரில் தொடங்கிய
    நிறுவனம் இன்று
    26 பில்லியன் டாலர்
    நிறுவனமாக உயர்ந்து இருக்கிறது!

    முதல் முயற்சி
    தோல்வியில் முடிந்தால்
    மூலையில் உட்கார்ந்து விடாமல்;
    உங்கள் மூளையைத் தீட்டி
    காரணம் அறியுங்கள்!

    ஒன்று; நீங்கள் உங்கள் முயற்சியை
    காலம் தாழ்த்த நேரலாம்!
    இல்லையெனில்,
    உங்களுக்கான சந்தை
    வேறு நாட்டில் இருக்கலாம்!

    வெற்றிக்கு இன்றியமையாத
    அடுத்த தேவை;

    தகுந்த நிபுணர்களை
    தன்னகத்தே கொள்ளுதல்;
    நிதி; மேலாண்மை;
    உற்பத்தி; மனித வளம்
    என்று ஒவ்வொரு துறைக்கும்;
    ஏற்றவாறு; ஒருமித்த
    கருத்துள்ள; நாளைய
    இலட்சியத்திற்காக
    இன்று தியாகம் செய்யத்
    தயாரான; தகுதியான
    நபர்களை உங்களுடன்
    வைத்திருத்தல் அவசியம்!

    இவை அனைத்தும்
    இருந்தாலும்; நம்பத் தகுந்த
    தலைமையாக தாங்கள்
    இருத்தல் அவசியம்!

    தலைமையைப் பற்றி
    ஒன்று சொல்ல விளைகிறேன்!
    அமெரிக்காவில்; பெருந்தொழில்
    அதிபர்களிடையே;
    நான் உரையாடும்போது
    என்னிடம் சிறந்த தலைமைப் பண்பைப்
    பற்றி பேசச் சொன்னார்கள்;

    நான் சொன்னேன்;
    நான் அறையில் நுழையும்போது;
    என்னால்
    ஒரு முகம் மலர்ந்த ஒரு
    மகிழ்ச்சியை;
    என்னை நம்பி வேலை
    செய்யும் சக தொழிலாளர்களிடம்
    ஏற்படுத்த முடிந்தால்;

    அவர்களுக்கு என்னால்
    வாழ்க்கைக்குத் தேவையான
    உபரி வருமானத்தைக்
    கொடுக்க முடிந்தால்;

    நான் ஒரு நல்ல தலைமையாளன்!!
    என்று.
    இவை இருந்து விட்டால்;
    இன்றைய காலத்தில்
    உங்கள் முயற்சியை
    செயல் படுத்த பணம்
    உங்களை நாடி வரும்!

    ஆதலால்; இளையோரே
    தொழில் முனைவோரே;
    இன்னல்களைப் பொருட்படுத்தாது
    இலட்சியங்களை வென்றெடுக்க
    உங்களுக்கு தேவை;

    உங்கள் முயற்சி எதாவது ஒரு
    மாற்றத்திற்கு வித்திட வேண்டும்!
    அதற்கான சந்தை மற்றும் சகாக்கள்;
    நல்ல தலைமைப் பண்பு;
    உங்களிடம் இருத்தல் வேண்டும்!

    வாருங்கள்; வெற்றி நம்
    பக்கத்தில்!!!!!!
    வரலாறு எழுதும் நம்
    பக்கத்தை!!!!!

    ஜெய் ஹிந்த்!!!

    (Padma Vibooshan Sri.Narayan Murthy’s speech at a function organized by Kuwait Kannada Koota on 9th November, 2012)

    தொடர்வோம் நம் நெடிய பயணத்தை………..

    அன்புடன்
    சுரேஜமீ

    Share
  • வள்ளுவ மாலை

    -சுரேஜமீ​​

    வாழ்(வு)நீட்டின் யாதுபயன் மெய்யது கண்டிலார்
    சூழ்கேடும் கொண்டு விதியென்பர் – சூத்திரம்
    வள்ளுவம் ஏகிட்டுச் செல்பாதை மாற்றிட
    ஊழும் தொலையும் பார்!

    செவிச்சுவை சொல்கேளார் கண்ணெழில் காட்சியிலார் valluvar
    இன்சொல் பகர்மறுத்தார் தோள்கொடு சொந்தமிலார்
    காற்றின் மணமேகார் ஆறறிவை வென்றிடப்
    போற்றின் திருக்குறள் மேல்!

    இலக்கில்லா வாழ்வும் துடுப்பிலா ஓடமும்
    வீழுமொரு நாளே அதன்முன்னே – வள்ளுவம்
    வந்திட்டால் நிச்சயம் பெற்றிடலாம் போமுயிர்
    மருந்தாம் காக்கும்  குறள்!

    தந்தைதாய்ச் சேர்ந்தார் வணங்கிச் செய்செயல்
    யாவும் பிறழ்நெறியில் போகா – திருக்குறள்
    கொண்டு வகுக்கும் பண்போடு வாழ்ந்தால்
    மானுடம் போற்றும் தலை!

    புலன்வழிச் செல்மாந்த ரென்றும் நிலைகொள்ளார்
    தீவினைசூழ் துன்பம் மிகக்கொண்டு – ஆழ்நிலை
    சென்றுணர்வார் வாழ்வின் வசந்தம் ஏகிட
    வள்ளுவம் சாற்றும் வழி!

     

     

    Share
  • சிகரம் நோக்கி – (9)

    சுரேஜமீ

    மனிதம்

    peak1111

    மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே- இது
    மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

    asurஎனும் மருதகாசியின் வரிகளோடு இன்றைய சிந்தனையைத் தொடங்க நினைக்கிறேன். இரண்டு வரிகளில் எதிர்கால வாழ்க்கையை கண்ணாடியாகக் காட்டிய கவிஞர்களும், மனிதம் மலரவேண்டும் என்ற துடிப்புடைய தேசியவாதிகளும் வாழ்ந்த மரபு நம்முடையது!

    ஏனோ, தன் முனைப்பு, தவறான எண்ண ஓட்டங்கள், சமுதாயப் பொறுப்பற்ற செயல்கள் என கற்றவர்களாலும், கயவர்களாலும், இந்த சமூகம் மனிதத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது என்பது கண்கூடு!

    இந்த உலகில், இப்படியும் ஒரு மனிதரா எனப் போற்றப்பட வேண்டிய பண்பாளர், தமிழனின் தயாள குணத்திற்கு ஒரு சான்று, இந்த வாழ்வின் சுவையே, சக மனிதனின் கண்ணீர் மொழியை அறிவதில்தான் இருக்கிறது என்பது மட்டுமல்ல, அதைத் தன் வாழ்நாளில் செய்தும் காட்டிய வள்ளல் கலைவாணர் என்பதை கலைஉலகம் தாண்டி அவரோடு பழகியவர்கள் அறிந்திருந்தாலும் அவர் பற்றிய சில செய்திகளை, இன்று உங்கள் பார்வைக்கு வைப்பதன் மூலம், நாம் நம் மண்ணின் குணத்தை மீட்டெடுப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!

    பொன்னுச்சாமி நாடகக் குழு என்ற புகழ்பெற்ற நாடகக் கம்பெனி இருந்தது. அதிலிருந்த்துதான், நடிகர் திலகம், லட்சிய நடிகர், வி.கே.ஆர் போன்றோரெல்லாம் சினிமாவுக்கு வந்தனர் என்பது வரலாறு.

    அந்த நாடகக் கம்பனி நலிந்த நிலையில் அதைக் காப்பாற்றும் நோக்குடன், கலைவாணர் அவர்கள் உரிமையேற்று எடுத்து நடத்த முனைப்பட்ட நேரம்,

    ஒரு நபர் கலைவாணரிடம், அய்யா எனக்கு நன்றாக நடிக்கத் தெரியும். எனக்கு வாய்ப்புக் கொடுத்தால், நான் (சிவாஜி ) கணேசனை விட நன்றாக நடிப்பேன் என்று சொல்கிறார். இதைக் கேட்ட கலைவாணர் அருகில் இருந்த நண்பருக்கு கோபம் வந்துவிட்டதாம்.

    என்ன சொன்னாய்? கணேசனை விட நன்றாக நடிப்பியா? எனக் கடிந்து கொள்ள,

    கலைவாணர் நண்பரைத் தடுத்து, என்ன தப்பிருக்கிறது அவன் சொன்னதில் என்று கேட்டு,

    உனக்குத் தெரியுமா? கணேசனை விட அவனுக்கு நடிக்கத் தெரியாமல் வேண்டுமானால் இருக்கலாம்!

    ஆனால், கணேசனை விட அவனுக்குப் பசி இருக்கிறது என்று சொன்னாராம்!

    இது தான் தமிழர் பண்பாடு!

    ஒருவன் பசியைப் புரிந்து கொள்ளும் மனநிலை என்பது தெய்வத்திற்குச் சமமானது!

    asuraகலைவாணர் அவர்கள் நடித்த ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சியில் பிச்சைக்காரனுக்கு மனைவி பிச்சையிட வரும்போது ஒருமையில் அழைப்பார். அதைப் பார்த்த கலைவாணர், தன் மனைவியைக் கடிந்து, மரியாதையாகப் பேசச்சொல்லுவார்! இப்படி தான் நடித்த காட்சிகளில் கூட, மற்றவர் மனம் புண்படக்கூடாது என்பதும், தானம் செய்வதன் நோக்கம் ஒரு இருமாப்பைத் தரக் கூடாது எனவும் அறிவுறுத்துகிறாரென்றால்,

    அந்தப் பண்பாடல்லவா நாம் கற்க வேண்டிய பால பாடம்!

    இப்படித்தான், இன்னொரு முறை கலைவாணர் அவர்கள் சென்னையில் இருந்தபோது, ஒரு நாயனக் குழுவினர், கலைவாணரை அணுகி, நாயனம் நன்கு வாசிக்கும் திறமை பெற்றவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, தங்களுக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததை ஏற்று, தன் வீட்டிற்கு மாலை வருமாறு கலைவாணர் அந்தக் குழுவிடம் கூற, அவர்கள் அன்று மாலை கலைவாணர் இல்லம் வருகின்றனர். கலைவாணரும் தன் நண்பர்களை கச்சேரி கேட்கலாம் வாருங்கள் என்று அழைத்ததை ஏற்று நண்பர்கள் கூட, கச்சேரி ஆரம்பமாயிற்று!

    வாசிக்க ஆரம்பித்தால் ஒரே அபஸ்வரமாகவே இருக்க, வந்தவர்கள் நெளிகிறார்கள். கலைவாணரோ, நல்லா வாசிக்கிறீர்களே….இன்னும் வாசிங்க….இன்னும் வாசிங்க என்று உற்சாகப் படுத்த,

    நண்பர் ஒருவர் கலைவாணரைப் பார்த்து….என்ன வாசிக்கிறான்? இன்னும் வாசி…வாசி என்று உற்சாகமூட்டுகிறீர் என்று கேள்வி கேட்க, கலைவாணர் சொன்னாராம்…..அட பைத்தியக்காரர்களே அவன் பசி…பசின்னு கத்துறான்…..உங்களுக்கு அவன் மொழி புரியவில்லை! ஆனால், எனக்குப் புரிகிறது! உடனே பணம் கொடுத்து அனுப்பிவிட்டால், அவன் திறமை மீது அவனுக்கு நம்பிக்கை குன்றிவிடும். ஆதலால், அவனைப் பெருமைப்படுத்தி, அவன் பசியைப் போக்க நினைத்தேன் என்றார்!

    என்ன நண்பர்களே….உங்கள் இதயத்தைத் தொட்டுச் சொல்லுங்கள்!

    இந்த ஈர நெஞ்சம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது என்று?
    ஆகத் தொடங்கிய பாடல் வரிகளாக இன்றைய வாழ்க்கை இருக்க,

    அதற்கு மாறாக நம் பண்பாடு இருக்க வேண்டுமென்று வாழ்ந்து காட்டிய அய்யா என்.எஸ்.கே அவர்கள் வாழ்க்கை இருக்க, மாறுவதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்ற கேள்வியுடன்

    சிகரத்தை நோக்கி பயணிப்போம்…….

    அன்புடன்
    சுரேஜமீ

    Share
  • சிகரம் நோக்கி (8)

    சுரேஜமீ

    வறுமை

    peak1111

    வறுமை சொல்லித் தரும் பாடத்தை இந்த வாழ்க்கையில் வேறெதுவும் சொல்லித்தர இயலாது. இன்றைக்கு வேண்டுமானால், ஒரளவுக்கு ஒவ்வொரு நடுத்தர குடும்பமும் வறுமையின் நிழலை விரட்டி இருந்தாலும், இன்னமும் குறைந்தபட்சம் ஒருவராவது, அக்குடும்பங்களில் வறுமையின் பிடியில் சிக்கித்தான் இருப்பர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    வறுமையைப் போக்குவதில் கல்வி ஒரு முக்கியக் காரணியாக இருந்தாலும், கல்வியைத் தாண்டி, நம் எண்ணங்களும், வாழ்வியல் சூழலும் நிச்சயம் வறுமையை விரட்டக்கூடிய ஒப்பற்ற காரணிகள் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது. அதற்கு நிறைய உதாரணங்களை இந்த நவீன காலத்திலும் கூட உங்கள் முன் வைக்க இயலும்.

    உலகப் பெரும்பணக்காரர்களான பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் சுக்கெர்பெர்க் மற்றும் நம் நாட்டிலுள்ள சச்சின் டென்டுல்கர், திருபாய் அம்பானி போன்றவர்களெல்லாம், கல்வியை வைத்து வாழ்க்கையை மாற்றியவர்கள் அல்லர்; மாறாக, தான் தாங்கியிருந்த எண்ணங்களை முதலாக்கி வரலாறு படைத்தவர்கள் என்றால், ஏன் நம்மால் முடியாது?

    இன்னமும், எத்தனையோ குழந்தைகள் பள்ளிக் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மேல்நிலைக் கல்வியைத் தொடர இயலாத நிலையில் இருக்கிறார்கள் என்ற செய்திகளை பார்க்க நேரிடும் போதல்லாம், மனம் கிலேசமடைகிறது. இந்த இந்தியத் திருநாட்டில், எவ்வளவோ வளர்ச்சி கண்டுவிட்டோம்; ஆனால், இன்னமும் வறுமையை அறவே ஒழிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு, நம்மில் வலியவர்களுக்கு வர வேண்டும். அவ்வாறு வரும்போது, நம்மில் எளியவர்கள் நிச்சயம் சரித்திரம் படைப்பார்கள்.

    வறுமை பற்றி நம் இலக்கியங்கள் என்ன சொல்லியிருக்கின்றன என்பதற்கு முன்னால், சென்ற நூற்றாண்டு கண்ட மகாகவி பாரதி என்ன சொல்லியிருக்கிறான் என்பதும் நம் பள்ளிப் பாடத்தில் படித்ததே. அதை நினைவு கூறும் வகையில்,

    தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்

    இந்த ஜகத்தினை அழித்திடுவோம் – மகாகவி சுப்ரமணிய பாரதி

    ஆக வறுமையின் பிடி பசியில் தொடங்குகிறது. பசியின் கொடுமை பாதகத்திற்கும் துணியும் என்ற காரணத்தினால்தான், உலகத்தையே அழிக்கத் துணிகிறான் தன் எழுத்துக்களால் இந்தக் கவிஞன்.

    இதற்கெலாம் மேலாக நாம் ஒரு பழமொழியை உபயோகிக்கிறோம். அது தரும் சேதி என்ன? முதலில் பழமொழியைப் படியுங்கள்

    ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்!’ என்பதே. இப்பழமொழியின் தொடக்கம் ஒரு சங்க காலப் பாடல்தான்.

    அப்பாடலில் வருகிறது பசி வந்தால் என்னவெலாம் போகுமென்பது……….

    மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை

    தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை-தேனின்
    கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
    பசிவந் திடப்பறந்து போம்!

    மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை மற்றும் காமம் ஆகிய பத்தும் பறந்து விடும் ஒரு பசியின் முன் என்றால் இதைவிட பசியின் வலிமையை, வறுமையின் கொடுமையை விள்க்கிச் சொல்ல வேறு நூல் தேவையில்லை.

    அத்தகைய வறுமையை நம்மால் விரட்ட முடியும் என்ற நம்பிக்கையும், அது தொடர்பாக நாம் செய்ய வேண்டிய முயற்சிகளும் மிகவும் இன்றியமையாதது;

    என்ன செய்யலாம்?

    1. வறுமையிலிருக்கும் ஒரு குடும்பத்திற்கு உதவுவதை வாழ்க்கையின் இலட்சியமாகக் கொள்ளுங்கள்!

    2. அவரவர் கிராமத்திலோ, அவரவர் உறவுகளிலோ, வீட்டிற்கு அருகாமையிலோ இருக்கும் மாணவர்களில் எவரேனும் நன்கு படித்தும் உயர் கல்வி, வறுமையால் தடைபட நேர்ந்தால், அப்படி இருக்கும் ஒரு மாணவருக்கு உங்களால் ஆன பொருளுதவியைச் செய்வதற்குத் தயங்காதீர்கள்!

    3. படித்தும் வேலையிலாமலிருக்கும் ஒரு இளைஞனுக்கு, தகுந்த ஆலோசனை கூறி அவன் வேலயில் சேரத் தகுதியை ஏற்படுத்துங்கள். முடிந்தால், உங்களால், உங்கள் நிறுவனத்திலோ அல்லது தெரிந்த நிறுவனத்திலோ ஒரு வேலைக்கு சிபாரிசு செய்யுங்கள்.

    4. வறுமையை எந்த வடிவில் பார்த்தாலும், அதை விரட்டியே தீருவேன் என்ற உறுதியை உங்கள் இல்லத்திலிருந்து தொடங்குங்கள்.

    5. உதவி நிறுவனங்களின் தொடர்புகளையும், அவர்கள் என்ன விதமான உதவி செய்கிறார்கள் என்ற விவரத்தையும் முடிந்த அளவு அனைவருக்கும் தெரியப் படுத்துங்கள்.

    6. உழைப்பையும் உங்கள் திறமையயும் முழுமையாக நம்புங்கள். உழைப்பிற்குத் தேவையான முதலீடு எவ்வளவு என்பதைத் தீர்மானியுங்கள். முதல் இல்லையே என நிலை குலையாமல், முதலீடுக்குத் தயாராக இருக்கும் உங்கள் சொந்தங்களையோ, அல்லது வணிக நிறுவனங்களையோ அணுகுங்கள். எதில் உங்கள் திறமை என்று நினைக்கிறீர்களோ, எவ்வித ஐயப்பாடும் இன்றி உடனடியாக அச்செயலைச் செய்யத் தொடங்குங்கள்!

    7. உங்களைச் சுற்றி நடக்கும் ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கவனியுங்கள். ஏதேனும் ஒரு புதிய சிந்தனை, ஒரு வணிக உத்தி, என ஏதாவது உங்களுக்கு ஏற்படலாம். அது பற்றித் திரும்ப திரும்ப சிந்தியுங்கள். எண்ணக் கருவாக்கி, ஏற்ற உருவாக்கி, உங்களைச் செதுக்க ஒரு ஒப்பற்ற வாய்ப்பாக அமைந்தால், வறுமை வற்றிவிடும்!

    இப்படி சிந்தனையை அடுக்கிக் கொண்டே செல்லலாம். எங்கெல்லாம் ஓர் உறுதி தென்படுகிறதோ, வறுமையை ஒழிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஒளிர்கிறதோ, அங்கெல்லாம் உங்கள் ஆற்றல் வெளிப்படட்டும்!

    இது மட்டும் நடந்து விட்டால், இந்தியாவில் வறுமையின் பிடியால் இருக்கும் இயலாமையும் அது கொடுக்கும் மரணமும் நிச்சயம் ஒழிந்துவிடும். எல்லாவற்றிற்கும் அரசையும், ஆள்பவர்களையும் எதிர் நோக்கக் கூடாது. ஆண்டவனாகவே இருந்தாலும், அவரவர் மனத்தினில் உதிக்கின்ற எண்ணங்கள் தான், அவர்களின் வாழ்வுக்குப் பொறுப்பாகிறது என்ற உண்மை புலனானால்,

    சிகரம் நம்மை நெருங்கித்தான் வரவேண்டும்!

    தொடர்வோம் பயணத்தை…………..

    Share
  • கவியரசர் பாமாலை!

    -சுரேஜமீ

    மலையரசி கண்டெடுத்த முத்தொன்று வாழும்
    மனிதர்க்குச் சொத்தாகி நிற்பதற்கு யார்செய்
    தவமிங்கே தாயொடு தன்னிகரில் லாத்தமிழ்
    தான்செய் தமிழினம் செய்!

    சின்னஞ் சிறுவயதில் தெய்வம் துணையாகச்           kannadasanjpg
    சிறுகூடல் பட்டியில் பாவொன்று நீபாடப்
    பைந்தமிழ் வாவென் றுனையணைக்க வையம்
    பரவசமாய் வாழ்த்தி வர!

    படிப்பென்ன பாதியானால் பண்டிதராய் வந்திட்ட
    பார்போற்றும் தாய்த்தமிழ் உன்னகத்தே வாழ்ந்திருக்க
    பட்டினத்தில் சேர்ந்து வசனங்களை நீயெழுத
    எண்ணியவே ளைவந்த பாட்டு!

    படும்பாட்டைப் பாட்டெழுத பாரினிலே யாருளர்
    பட்டியெலாம் உன்பாட்டுத் தாலாட்டாய் தானுள
    பள்ளமேடு உள்ளவரைப் பார்மனிதன் வாழும்வரை
    பாட்டொலிக்கும் உன்பேரை நன்கு!

    தமிழ்த்தேரும் தாங்கிவரக் காவிரி மைந்தன்
    துணைவரவும் கண்ணதா சன்விழா ஆங்கே
    அமீரகத்தில் வெற்றிபெற நீயிருந்து வாழ்த்தங்கே
    வானிருந்து விண்மீனாய் நின்று!

    முத்தையா முக்காலம் வாழ்த்தும் தமிழையா
    வள்ளுவன் வானுறை தெய்வமெனக் கண்ணதாசன்
    உன்னைத்தான் பாடினனென் பேன்யான் மறுப்பாரோ
    மண்ணில் எவரும் சொல்!

    பாமாலை பாடுகின்றேன் பக்கத்தில் நீயிருக்கப்
    பூமாலை சேர்ந்திடும் உன்னடியில் நீயருள
    வாழ்த்திடு வந்திருக்கும் உன்னன்பர் யாவரையும்
    போற்றிடுவோம் உன்புகழை என்றும்!

     

    Share
  • வள்ளுவ மாலை

    சுரேஜமீ​​

    நெற்கதிர் தாழும்தரை நோக்கிச் செறிவுடைத்து
    நாளும் அறிவுடையர் ஆவரதுவொப்ப; பண்பில்
    பிறர்போற்றும் வல்லமையும் வாய்க்கும் – திருக்குறள்
    ஏகிநிற்பர் என்றும் துணை!                                                   valluvar

    துணைவரும் தெய்வம் தெரிவதில்லை ஊனுக்குத்
    தூயநல் எண்ணம் திருக்குறள் ஏகிடின்
    சாலவும் காணுனைக் காக்கும் வள்ளுவம்
    சேர்த்திடும் கோவில் உறை!

    உறையுள் யாரெனறிந் திட்டால் வரும்
    நிறைமதி காணறிவும் வாழ்வில் உயர்வும்
    தீந்தமிழ் பெற்றனள் வள்ளுவம் போலொரு
    சோதியும் உண்டு பெற!

    பெறவேண்டும் மானுடம் ஞாலத்தில் வேண்டுவன
    தேடிடும் சொர்க்கமும் கண்ணெதிர் வாழ்வாகச்
    சூளுரை வள்ளுவம் சொல்வழி அன்பினைக்
    கொண்டிட மாறும் உலகு!

    உலகுக்கு நீதிசொல் ஒப்பிலா நன்னெறியாம்
    மூலவரே முன்னின்று வார்த்தெடுத்த வள்ளுவம்
    போற்றிடக் காண்வரும் இன்பம் நிலைத்திட்டுச்
    சான்றுதர வாழும் மொழி!

    ​  

    Share
  • வாழ்த்தும் வயதில்லை வணங்குவோம் பெரியவரை!

    -சுரேஜமீ

    அகவை தொண்ணூறு
    அடைவர் சிலரே
    அப்படி அடைந்திடினும்
    அங்கங்கள் அசையா                                   kalaignar
    அடுத்தவர் துணைதேடி
    அஞ்சி வாழ்ந்திடுவர்!

    அன்னைத் தமிழ்தொட்ட
    அஞ்சுகப் புதல்வரோ
    அயராத உழைப்பினால்
    அகவை தொண்ணூற்றிரண்டில்
    அடியெடுத்து வைக்கிறார்
    அன்னார் காணநூறு!

    அண்ணா முழங்க
    அரியணை ஏற
    அரணாய்த் தொடர
    அருந்தமிழ் பேச
    அரசியல் தெளிந்து
    அரசினைப் பற்றி
    இரண்டும் மூன்றாய்
    ஐந்துமுறை ஆள
    இலக்கியப் பணியில்
    இன்னமும் ஆழ்கிறார்!

    இவர்தம் உழைப்பை
    எவரும் கற்க
    வெற்றி நிச்சயம்!
    வேண்டும் இதயம்
    எதையும் தாங்க
    இவர்போல் உறுதியாய்
    மொழியின் ஆளுமைக்கு
    முன்னமும் பின்னமும்
    எவரும் இலையென
    எழுதும் வல்லவர்!
    பேனா முனையில்
    பெண்ணை வைத்து
    மண்ணை இழுத்த
    மன்னவன் இவெரென்பேன்!

    வாழ்த்தும் உள்ளங்கள்
    வளரட்டும் இவர்வயது
    வானம் வரைக்கும்
    எட்டட்டும் வளத்தை
    வார்த்தைகள் வடிக்கும்
    வாய்ப்பினைப் பெற்று
    வளர்க்கட்டும் சிந்தனையை
    வருவது நன்றதுதீதென
    வான்புகழ் நாடென்று
    வளர்க்கட்டும் தமிழ்நாட்டை
    வளரும் சமுதாயம்
    வாழ்க வளர்கவென!
    வாழ்த்தும் வயதில்லை
    வணங்குவோம் பெரியவரை!

     

    Share
  • வள்ளுவ மாலை

    சுரேஜமீ​​

    நெறிவழி வாழ்தல் கடினமெனக் கைவிட்டால்
    நேரும்பெருந் துன்பம் அறிவீர்காள் – வந்தவர்
    வாழ்வின் நிலைசாற்றிக் காக்கும் திருக்குறள்
    போற்றிடச் செய்தல் நலம்!                                                     valluvar

    நலம்பல வேண்டியெங்கும் தேடாதீர் சொல்லிற்
    பயன்தரும் வள்ளுவம் வழியாகக் காணும்
    இலக்கினிலே இன்பம் திளைத்திருக்க – மாற்றதும்
    இங்கில்லை என்ப குறள்!

    குறள்சொல் செய்திட வாழ்வு எளிதாகிச்
    செல்வழி யாவும் வந்திடும் ஏற்றமும்
    சேராப் பழியென்றும்; வானொத்த பேரொடு
    வையம் புகழக் காண்!

    காண்நிறைக் காட்சியெலாம் இன்பமே உய்யக்
    கருப்பொருள் சிந்தையில் வள்ளுவமாக – தீதொரு
    பண்புடை மாந்தரும் மண்ணில் இலையென்று
    பாரினில் வாழுயிர் வெல்!

    வெல்கநாளும் விண்மண் துணையொடு வேண்டும்
    வரம்நல்கும் வள்ளுவம்  யாவர்க்கும் – போற்றிடப்
    புல்முதல் பல்லுயிர்ப் பண்பினை வாய்க்கும்
    புனிதமே வாழ்வின் சுவை!

     

    Share
  • சிகரம் நோக்கி – 7

    சுரேஜமீ

    peak111

    செல்வம்

    ‘’பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்

    கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்

    காவிதான் போயினபின்பு யாரே யநுபவிப்பார்

    பாவிகள் அந்தப் பணம்.’’ – ஔவையார்

    நாம் அனைவரும் பள்ளியிலே படித்த ஒரு நல்வழிப் பாடல் இது. ஆனால் படித்ததோடு மறந்து விட்டோமோ என்று வாழ்க்கை நம்மைக் கேள்வி கேட்பது புரியாமலில்லை. நமது நாட்டின் இன்னமும் வறுமைக் கோட்டிற்குக் கீழே 22% மக்கள் வாழ்வதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. அதாவது, சுமார் 27.5 கோடி மக்களுக்கு அன்றாட வாழ்க்கையே போராட்டமாக இருக்கிறது என்பதுதான் இதன் பொருள். ஆக, பொருளீட்டல் என்பது எவ்வளவு அவசியம் என உணர்ந்து, தம்மை வறுமையின் பிடியிலிருந்து விலக்க, ஒவ்வொரு குடும்பமும் முயற்சிப்பதில் என்ன தவறு இருக்கிறது? தவறேயில்லை.

    எதில் தவறு என்றால், ஒரு வரம்புக்கு மீறி சேர்த்து வைக்கும் பொருளில்தான் தவறு இருக்கிறது. அதற்காகத்தான், ஔவையார் அன்றே சொல்லி இருக்கிறார்,
    ‘’கூடு விட்டு இங்கு ஆவிதான் போனபின்பு யார் அனுபவிப்பார்?’ என வினாவினைத் தொடுத்து,

    பொருளீட்டலின் வல்லமையே, ஈட்டிய பொருள், இவ்வுலகில் பயனுற வாழ்தலில்தான் உள்ளது என்ற அறிவுரையை நமக்கு விட்டுச் செல்கிறார் என்றால் மிகையாகாது! நாம் செய்கிறோமா என்பதுதான் கேள்வி.

    வறுமையின் வலி அறிந்த நாமே, பொருள் வரும்போது, நம் தேவைக்கு மிஞ்சியதை வைத்து, அடுத்தவர் வறுமை போக்கவேண்டும் என எண்ணுவது கிடையாது. ஒருவருக்கு ஒன்றுக்கு மிகுதியான பொருள் ஏதிருந்தாலும், ஒரு நேரத்தில், ஒன்றைத்தான் அனுபவிக்க இயலுமே அன்றி, நிச்சயம் மற்றவை வெறும் காட்சியாகத்தான் இருக்க முடியும் என்ற உண்மை நமக்குப் புரிவதில்லை. மேலும், நம் சமூகம், நம்மை நிலை நிறுத்த முதல் தகுதியாகப் பார்ப்பது, நாம் சேர்த்துவைத்திருக்கும் பொருட்செல்வத்தைத்தான் என்பதும் வருத்தம் தரக் கூடிய செய்தி!

    இதிலிருந்து வெளிவர முயல்கிறோமா என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப நாம் நம்மைக் கேட்க வேண்டும்.

    சங்க இலக்கியத்தில், நறுந்தொகை அழகாகக் குறிப்பிடுகிறது
    ‘செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்!’ என்று!

    செழுங்கிளை என்றால் உறவுகள் எனும் பொருளில் கையாளப்பட்டிருந்தாலும், உறவுகளைத் தாண்டி, வருமையில் வாடும் எண்ணற்ற நபர்களையும் தாங்கி நின்றால், அதிலிருந்து பெறக்கூடிய மனமகிழ்வு என்பது அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும். உலகக் கோடீஸ்வரர்கள் அனைவரும் ஏதோ ஒரு தொண்டு நிறுவனத்தோடு, தன்னைத் தொடர்பில் வைத்திருப்பதும், தன் வருமானத்தில் ஒரு பகுதியை, அதற்குச் செலவிடுவதும், அவர்தம் வாழ்க்கைக்கு அர்த்தம் தேடுவதற்காக அன்றி, தன்னைப் பெருமைப் படுத்திக்கொள்ள அல்ல என்று நாம் அறிய வேண்டும்.

    என்னதான் சங்கப் புலவர்கள் சொன்னது நமக்கு விளங்கவில்லை என்றே எண்ணியபோதும், தற்காலத்தில் வாழ்ந்த கவியரசர் கண்ணதாசன் என்ன சொல்கிறாரென உங்களின் பார்வைக்கு;

    சொந்தமில்லை பந்தமில்லை ஏறி மிதிக்கும்

    தோள் மீது ஏறி நின்று காதை கடிக்கும்

    பல கோடி சேர்த்தாலும் மேலும் நினைக்கும்

    படுபாவி என்கின்ற பேரை கொடுக்கும்

    பணம் என்னடா பணம் பணம்

    குணம் தானடா நிரந்தரம்! – கண்ணதாசன்

    என்று அவருக்கே உண்டான எளிய தமிழில் அருஞ்சொல் எடுத்து, நம் செவிக்கு அறிவூட்டியிருக்கிறாரென்றால், இதை விட யார் சொல்ல முடியும், செல்வத்தின் நிதர்சனத்தை?

    இது ஒரு புறமென்றால், இன்னொரு புறம் எப்படியாவது மற்றவர்களுக்கு நம் வசதியைக் காட்டுவதற்காக, ஒரு மாயைச் செலவு செய்கிறோமே? அதைப் பற்றி என்றாவது ஏன் செய்கிறோம் என எண்ணிப் பார்த்ததுண்டா? மற்றவர்களுக்கு நாம் எப்படித் தெரிகிறோம் என்பதில் அல்ல வாழ்க்கை; நமக்கு நாம் எப்படித் தெரிகிறோம் என்பதில்தான் இருக்கிறது என்று உணர நாம் மறுக்கும் ஒவ்வொரு நாளும் துயரம் நம்மைத் தொடர்கிறது என்பது வாழ்க்கை கற்றுத் தரும் அனுபவப் பாடம்.

    இது பற்றியும் ஒரு பாடல் தமிழ்க்கிழவி சொல்கிறாள். தெரிந்து கொள்ளுங்கள் ; வாழ்க்கையைத் தெளிந்து கொள்ள!

    ஆன முதலில் அதிகஞ் செலவானான்

    மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை

    எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புத் தீயனாய

    நல்லார்க்கும் பொல்லனாம் நாடு!

    இதைவிட ஒரு கடுமையான பிரயோகத்தை, வாழ்க்கையில் வரவுக்கு மேல் செலவு செய்து தன்னை மிகைப் படுத்திக் காட்ட எண்ணுகிறவர்களுக்கு, எதிராக யாராலும் சொல்ல இயலாது.

    வார்த்தைகளைக் கவனியுங்கள். தனக்குக் கிடைக்கும் வருவாயை விட அதிகமாகச் செலவு செய்பவன், எப்படியேனும் தன்னைப் பொய்யாக நிலைநிறுத்த எண்ணும் வேகத்தில், விவேகத்தை இழந்து, கடன் பட்டேனும், அக்காரியத்தைச் செய்வதால், நேரக்கூடிய துன்பங்களைப் பட்டியலிடுகிறார் ஔவையார்.
    · தன்மானம் இழக்க நேரிடும்

    · புத்தி கெடும்

    · போகும் திசையெலாம் கெடுபெயர் ஆகும்

    · பிறப்பின் அருமை தொலையும்

    · நல்லவர்களெலாம் அவனை விட்டு விலகுவர்

    மலரும் ஒவ்வொரு நாளும் பல அனுபவங்களை நமக்குப் பாடமாக கற்றுத் தருகிறது. ஏனோ நம் உள்ளம் அதனை ஏற்க மறுத்து, மாய வலைக்குள் சிக்கித் தவித்துப் பின் வருந்துகிறது. பால்ய பருவத்திலேயே, பள்ளிகளில் பாடமாகக் கற்றுத்தந்த நல்ல நெறிகளையல்லாம் விடுத்து, வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்தால் என்ன நடக்கிறது என்பதன் உதாரணங்களே, நம் முன்னோர்கள் நமக்கு கோடிட்டுக் காட்டியது என்பதைத்தான், உங்கள் முன் வைக்கின்றேன்.

    கவியரசரும் எத்தனையோ பாடல்களில் வாழ்க்கைத் தத்துவங்களை வரியாக்கி இருந்தாலும், செலவு வரவை மிஞ்சினால் என்னவாகும் என ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். இதோ உங்களுக்காக.

    நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தா நிம்மதி இருக்காது

    ஐயா நிம்மதி இருக்காது!

    அளவுக்கு மேலே ஆசை வந்தா உள்ளதும் கிடைக்காது

    அம்மா உள்ளதும் கிடைக்காது! – கண்ணதாசன்

    செல்வத்தை தேவைக்கு மிகுதியாகச் சேர்ப்பதிலும், செலவுகளை வரவுக்கு மிகுதியாகச் செய்வதிலும் வரும் துன்பம் என்ன என்று அறிந்தால், வாழக்கை ஒரு இனிய பயணமாகும்.

    ஆகவே, நண்பர்களே நாம் சிந்திக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.

    செல்வம் வாழ்க்கையின் செழுமைக்கு அவசியம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால், தேவைக்கு மிகுதியான செல்வத்தால், வாழ்வின் அருமை பாதிக்கிறது என்பதை உணராமல் இருப்பதுதான் துயரமான செய்தி. செல்வம் ஈட்டும் வலிமை உள்ளவர்கள், அந்த செல்வத்தில், தனக்குப் போக, மீதியை அடுத்தவர்களுக்கு பயனீட்டும் வழியில் செலவிட முன் வந்தால்,

    வறுமைக் கோட்டில்தான் இருக்கும் இந்தியாவில்;

    வாழ்மை மிகுந்திருக்கும்!

    செழுமை அதிகரிக்கும்!

    சேர்ந்து வாழும் பண்பிருக்கும்!

    அதேவேளை, நாம் எப்பொழுதும் திட்டமிட்டுச் செலவு செய்யவேண்டும். எந்த ஒரு செலவும் அதன் தேவையை நமக்கு நியாயப் படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் செய்யும் ஒவ்வொரு செலவும் நம்மைத் துன்பத்திற்கு இட்டுச்செல்லும் வாயிலாக இருக்கும் என்ற சிந்தனைத் தெளிவோடு இருந்தால்,

    சிகரம் நோக்கிச் செல்லும் படிக்கட்டில் மற்றொன்றில் நம்மைச் செதுக்கிவிட்டோம் என்ற பெருமையோடு நடைபோடலாம்…….

    தொடர்ந்து சிந்திப்போம்!

    அன்புடன்
    சுரேஜமீ

    —————————————————————————————————

    Share
  • வள்ளுவ மாலை

    -சுரேஜமீ​​

    எழுத்து முன்னாகி எண்ணம் மனமேகி
    ஏற்றம் பெறவேண்டி ஏந்துவன் தாளேகிச்
    சொல்லில் வடித்தெடுத்த வாழ்வுநெறி – வள்ளுவம்
    செய்த திருக்குறள் கல்!                                                                   valluvar

    கற்றல் மெருகேற்றிக் காணும் அனைவரையும்
    பெற்றல் சுகமென்று தன்னுயர் பண்பெய்த
    உற்றதுணை யாகும் திருக்குறள் – வேண்டும்
    உயர்வுக்குத் தூண்டும் நூல்!

    நம்பிச் செயல்யாவும் நாயகன் காத்திடுவான்
    நம்பிலார் செய்திடினும் நன்மையே நல்கிடுவான்
    வம்பிலா நற்கருணை வையத்தை வாழ்விக்க
    வள்ளுவம் உணர்த்தும் இதை!

    எதுவரினும் தாளேகித் தானேகச் செய்திட்டால்
    வந்திடுவான் நெஞ்சதனில் ஓரொளியாய் மெய்க்கடல்
    சேர்பணி நின்றுத் திருக்குறள் – ஓதிடப்
    போகும் துன்பம் அறி!

    பிறப்பின் வருவது முன்னம் ஒருநிலை
    பின்னேகும் ஒத்ததோர் கூட்டிட மற்றவை

    போக்கித் தகும்நிலை கண்டிடத் – தெய்வத்
    திருக்குறள் சொல்வழி செல்!

     

    Share
  • வள்ளுவ மாலை

    -சுரேஜமீ​​

    திருக்குறள் நீதிவழி வாழ்வில் நடைபோட
    போர்க்குரலும் வாராது பொய்யிலை – மேதினியில்
    யாவரும் மாறிட வகுக்கும் வள்ளுவம்
    போற்றி வரும்நாள் வெல்!                                                 valluvar

    ​தன்னிலை தானுணர் தூயநல் வாழ்வுணர்
    எந்நிலை வந்திடினும் ஏற்றமும் காண்பரே
    சொல்நிலை வள்ளுவம் ஏகிட – மேதினியில்
    கோள்நிலை வாய்க்கும் ​அறிவு!

    இல்வாழ்க்கைப் பேறுடைத்து ஊர்போற்றச் சீருடைத்து
    சொல்லென்றும் மென்மையாய்த் தித்திக்கும் – வாழ்வில்
    திருக்குறள் பற்றிட நல்லறம் சேர்ந்து
    செறிவோடு மண்ணில் வர!

    திடமான எண்ணமும் சேரிடத் தேற்றமும்
    தேடிய வாழ்வும் சுகம்தரும் – கற்றுணர்
    வள்ளுவம் சொல்நெறி ஏகிட நற்றமிழ்
    தெள்ளின் திறனாகிச் சூழ்!

    வருமவர் நானறியார் வள்ளுவம் தானறிவார்
    வாழ்க்கைப் பயனதுவே சேர்த்திடல் யாவர்க்கும்
    வானுயர மூத்தோர் மொழிதந்த தேவநூல்
    மானுடம் பற்றிடச் சுகம்!

     

    Share
  • சிகரம் நோக்கி (6)

    சுரேஜமீ

    peak111

    இதுவரை நாம் சென்ற இரு கட்டுரைகளின் தொடர்ச்சியாக, இப்புவியின் இருப்பைக் கெடுக்கும் இயற்கையின் தலையாய பிரச்சினைகளைப் பட்டியலிட்டு,

    1. மக்கள் தொகை
    2. காலநிலை மாறுபாடுகள்
    3. பல்லுயிர்ப் பெருக்கங்களின் இழப்புகள்
    4. வேதிப்பொருட்களின் சுழற்சி
    5. தண்ணீரின் தேவை
    6. கடல்நீர் அமிலமயமாதல்
    7. மாசு படிதல் (Pollution)

    அதுபற்றி நாம் அறியவேண்டிய சுருக்கமான கருத்துக்களைப் பார்த்தோம். இன்றைய பதிவில் அதன் இறுதிப் பகுதியாக, அடுத்த மூன்று பிரச்சினைகளான,

    8. ஓசோன் படல பாதிப்பு
    9. கடல் வளங்கள் அபகரிப்பு
    10. காடுகளை அழித்தல்

    பற்றிச் சில தகவல்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.

    8. ஓசோன் படல பாதிப்பு

    ஓசோன் படலம் என்றால் என்ன? அதன் பயன் என்ன? அதைப் பாதுகாப்பது எப்படி? என்றெல்லாம் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது. ஓசோன் படலம் என்பது வளிமண்டலத்தில் சற்றேறக் குறைய ஒரு 50 கிலோ மீட்டர் தூரத்தில் பரவியுள்ள ஒரு படலம் ஆகும். இதன் முக்கியப் பணி என்னவென்றால், வான் மண்டலத்திலிருந்து பூமியை நோக்கி வரக் கூடிய புற ஊதாக் கதிர்களைக் கட்டுபடுத்தி, பூமியில் வாழும் உயிரினங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதே. ஆனால், அபரிமிதமான நச்சு வாயுக்களின் வெளிப்பாடு காரணமாக, ஓசோன் படலம் பாதிக்கப்பட்டு ஒரு பெரிய ஓட்டை அப்படலத்தின் மீது விழுந்திருப்பதும், அதன் தாக்கத்தால், வாழும் சூழல் மாறியிருப்பதும், அது தொடர்பான எச்சரிக்கைகளை அறிவியல் வல்லுநர்கள் நமக்கு விடுத்த வண்ணம் இருப்பதும் நாம் அறிவோம்.

    இதனைப் பாதுக்காப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு, மிகவும் உறுதியுடன், நச்சு அமிலங்களை வெளிப்படுத்தும் தொழிற்சாலைகளை மட்டுப்படுத்துவதும், அதற்கு மாற்றாக சுற்றுச் சூழலோடு ஒத்துப் போகக்கூடிய எரிசக்திகளைக் கண்டுபிடிப்பதும் தானேயொழிய, வேறேதும் கிடையாது. இதை எவ்வாறு தனி ஒருவனால் செய்ய முடியும் என எண்ணாமல், இன்றே, இப்பொழுதே, நாம் நினைத்தால், நிச்சயமாக, ஒரு மாற்று சமுதாயத்தை, இயற்கை வளங்களை மேம்படுத்தும் ஒரு சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையும், அது தொடர்பான செயல்பாடுகளும் தான்!

    9. கடல் வளங்கள் அபகரிப்பு

    கிராமங்களிலே நீர்நிலைகள் இருக்கும். அங்கு தாமரை, அல்லி, பாசி முதலான தாவரங்களோடு, மீன்களும் இருக்கும். அப்படி இருக்கின்ற சூழலில், அந்த நீர் நிலையிலிருந்துதான் குடிநீருக்கான தண்ணீரையும் எடுத்து வருவது வழக்கம். நீர்நிலை அவ்வளவு சுத்தமாக இருப்பதுடன், சத்து நிறைந்ததாகவும் இருப்பதற்கு முக்கியக் காரணம், அதில் வாழ் தாவரங்களும், உயிரினங்களும் என்றால், அது அறிந்தவர்களுக்குப் புரியும்.
    ஆக, ஒரு சாதாரண நீர்நிலைக்கே இப்படி என்றால், அகண்டு விரிந்து இப்புவியில் சுமார் மூன்று பங்கு நீரால் சூழப்பட்ட பெருங்கடல்களை நினைத்துப் பாருங்கள்! அதன் வளங்கள் நம் இயற்கைக்குத் துணை புரிந்தால்தான், நல்ல மழையே பெய்ய ஏதுவாகும் என்பதை நாம் யோசித்து இருக்கிறோமா? அது மட்டுமா?

    உயிரிகள் அனைத்துமே ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்பவை. இத்தகைய சூழலில், பரந்த வலையின் மூலமோ, இயந்திரங்கள் உதவியுடனோ, அபரிமிதமாக கடல்வாழ் உயிரிகளை பிடித்து நம் வாழ்வின் தேவைகளுக்குப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்? இதனால், அரிதான உயிரினங்கள் அழிக்கப்படுவதும், கடல் வாழ் உயிரினகளில் சூழல் நிலைகுலைவதும் நாம் எண்ணிப்பார்த்தது உண்டா?
    ஒரு தகவலை உங்களுடன் பகிர்வதில் நிச்சயம் உங்கள் சிந்தனையில் ஒரு மாற்றம் வரும் என நம்புகிறேன்.

    நம் சிந்தனையைத் தூண்டும் ஒரு புள்ளி விவரம்;

    52% மீன்களின் உற்பத்தியை முழுதும் உறிஞ்சிவிட்டோம்
    20% மீன்களின் உற்பத்தியை சுமாராக உறிஞ்சி இருக்கிறோம்
    17% மீன்களின் உற்பத்தியை அபரிமிதமாக உறிஞ்சி இருக்கிறோம்
    7% மீன்களை அழித்துவிட்டோம்
    1% மீன்கள் அழிவிலிருந்து மீண்டு வருகின்றன! (source: http://overfishing.org)

    அதிகபட்சமாக, 90% மீன்கள் இதுவரை சூறையாடப் பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!

    10. காடுகளை அழித்தல்

    ஒரு நாடு உருவாகவேண்டுமென்றால் காடுகள் அழிக்கப்படத்தானே வேண்டும்? அது தவறல்ல. ஆனால், ஒரு நாட்டை உருவாக்கிய் பின்னர் அழித்த காட்டிற்கு இணையாக மரங்களை நடலாமே என்றுதான் சொல்கிறோம். அது புரியாமல், சாலைகள் போடுவதற்காகவும். இன்னும் சொல்லப்போனால், வானளாவிய கட்டிடங்கள் கட்டுவதற்காகவும், மனிதனைவிட அதிக ஆண்டுகள் வாழக்கூடிய, வாழ்ந்த மரங்களை வெட்டுவது, தன்னைத் தானே அழிப்பதற்குச் சமம் என்பதை உணரும் நாள் வந்தால், நாம் வாழும் பூமி சொர்க்கம் எனலாம்!

    உலக நாடுகளில் இயற்கைச் சீற்றங்களால், காடுகள் அழிவதைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம்! ஆனால், மனித மேம்பாடுக்காக அழிக்கப்படும் காடுகள்தான் வேதனையைத் தருகின்றன. இதில் கொள்ளையர் கூட்டங்களும், அவர்பின் நிற்கும் அரசியல் ஊக்கங்களும் அடங்கும்.

    இதனால் ஏற்படும் விளைவுகளைச் சிந்தித்தோமா?

    மிக முக்கிய மூன்று விளைவுகளைப் பாருங்கள்!

    • தட்பவெப்ப மாறுபாடு

    கடந்த ஐம்பது ஆண்டுகளில் பூமிச்சூடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது ஒவ்வொரு ஆண்டும் என்றால் சொல்லித் தெரிய வேண்டுவதில்லை. அடர்ந்த காடுகள் இருந்த இடங்களெல்லாம் அழிக்கப்பட்டு, நகரங்கள் உருவானதும், பெரிய பெரிய தொழிற்சாலைகளும், ஆராய்ச்சி என்ற பெயரில் நிறுவப்படும் கனரக உலைகளும் தரும் பாதிப்புதான் இவைகளெல்லாம் என்பதை உங்கள் மனக்கண் முன் கொண்டு வர விழைகிறேன்.

    • சுகாதாரக் குறைவான காற்று

    இன்று நாம் பெரும்பாலும் சுவாசிக்கும் காற்று நச்சுக் காற்றுதான் என்பதும், நம் வாழ்க்கையின் நீளத்தை, இந்த நச்சுக் காற்று குறைப்பதோடு மட்டுமல்லாமல், மிகக் கொடிய நோய்களுக்கும் காரணமாக இருக்கிறதென்பதும் தெரிந்தும் கையாலாகாத நிலையில், உலக வாழ்க்கையில் நம் பொருளாதார நிலையையே ஒற்றைக் குறிக்கோளாக நினைத்து, வாழ்க்கையை ஓட்டுகிறோமே என்பதற்காக நாம் வருத்தப் படவேண்டும் நண்பர்களே!

    • பொய்யும் மழை

    பருவத்தை ஒட்டி மழை பெய்த காலங்கள் மாறிவிட்டன. இன்னும் சொல்லப் போனால், பருவமே மாறிவிட்டது கூடப் பரவாயில்லை, ஆனால் பெய்ய வேண்டிய மழை கூடப் பொய்த்துப் போனதால், நாம் இயற்கை விவசாயத்திலிருந்து செயற்கை விவசாயத்திற்கு மாறுவதற்கு உந்தப் பட்டிருக்கிறோம் என்பதைவிடத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்ற சொல்லையே உபயோகிக்க விரும்புகிறேன்.

    ஆக, நாம் வளர்ச்சி என்று எதையெல்லாம் நினைத்தோமோ அதை அடைவதற்கு நாம் கொடுத்த விலையோடு நின்றுவிட்டது தான் தளர்ச்சியேயொழிய,

    நாம் வளர்ச்சிக்கு ஈடாக, இயற்கை வளங்களை மேம்படுத்தியிருந்தால்,

    நிச்சயமாக நம்மால், இயற்கையோடு ஒன்றி வாழ்ந்திருக்க இயலும்.

    வளர்ச்சி என்பது நாணய மேம்பாடு (wealth appreciation) அல்ல; மாற்றாக, நாம் நயத்தோடு செய்யும் ஒவ்வொரு செயலும்தான் என்று கூறக் கடமைப்பட்டிருப்பதாக நாம் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்; அதற்கேற்ப செயலாற்ற வேண்டும்! அதைப் பார்த்து வரும் சமுதாயம் வளர வேண்டும்! அதுதான் உண்மையான வளர்ச்சி!

    இல்லையேல், ஒரு ஆக்க பூர்வமான சமுதாயத்தை நாம் விட்டுச் செல்வதாக ஒரு போதும் மன நிறைவு கொள்ளமுடியாது!

    தொடர்ந்து சிந்திப்போம்………சிகரம் நோக்கி!

    Share