Tag: செண்பக ஜெகதீசன்

  • குறளின் கதிர்களாய்…(55)

    -செண்பக ஜெகதீசன்

    உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன்
    பாத்தியு ணீர்சொரிந் தற்று. (திருக்குறள்:718 – அவையறிதல்)

    புதுக் கவிதையில்…

    கற்றறிந்தவர்
    அவையறிந்து அவர்முன்
    கருத்துச் சொல்…

    அது,
    பயிர்வளரும் பாத்தியில்
    நீர் பாய்ச்சுதல் போன்றதே…!

    குறும்பாவில்…

    பயிர் வளரும் பாத்திக்கு
    நீர் பாய்ச்சுதல் போன்றது,
    அறிவுடையோர் அவையிலுன் சொல்…!

    மரபுக் கவிதையில்…

    வெற்று நிலத்தில் நீர்பாய்ச்சி
    வேலை செய்வதில் பலனில்லை,
    சுற்றியே வரப்பது அரணாகிச்
    செழிப்பாய்ப் பயிர்வளர் பாத்தியதில்
    வற்றா வகையில் நீர்பாய்ச்ச,
    விளையும் பயிரது நிறைவுடனே,
    கற்றே உணர்ந்தோர் அவைதனிலே
    களறும் சொல்லிந் நீரொப்பதே…!

    லிமரைக்கூ…

    பயிர்வளர் பாத்தியில் பாய்ச்சிடணும் நீர்,
    பாசனம் இதனைப் போன்றதே
    சொல்லதை அவையறிந்து சொல்வது பார்…!

    கிராமிய பாணியில்…

    பாச்சணும்பாச்சணும் தண்ணிபாச்சணும்
    பயிருவளர தண்ணிபாச்சணும்,
    பாத்தியில தண்ணிபாச்சணும்
    பாழாவாம தண்ணிபாச்சணும்
    பயிரப்பாத்து தண்ணிபாச்சணும்..

    அதுபோல,
    பேச்சிபேசணும் பேச்சிபேசணும்
    பெழயில்லாம பேச்சிபேசணும்,
    படிச்சறிஞ்சவன் சபயப்பாத்து
    பேச்சிபேசணும் பேச்சிபேசணும்…!

     

    Share
  • வாழ்த்துவோம் பொங்கல் நாளில்…

    -செண்பக ஜெகதீசன்

    கண்ணுடைக் கரும்பை நட்டுவைத்தே       Pongal
         கதிரவன் காணப் பொங்கலிட்டு,
    பெண்ணொடு ஆணும் குரவையிட்டுப்
         பகலவன் அருளப் படைத்திடுவோம்,
    வண்ண மஞ்சள் இஞ்சியுடன்
         உறவும் நட்பும் சேர்ந்திடுவோம்,
    மண்ணில் உழவரை வாழ்த்தியேதான்
         மகிழ்வோம் பொங்கல் நாளினிலே…!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(54)

    -செண்பக ஜெகதீசன்

    நுண்மா ணுழைபுல மில்லா னெழினலம்
    மண்மாண் புனைபாவை யற்று. (திருக்குறள்:407 – கல்லாமை)

     புதுக் கவிதையில்…

    அழகாய்ச் செய்தாலும்,
    மண்பொம்மை நிலைப்பதில்லை,
    பயனற்றது…

    ஆய்ந்தறியும்
    அறிவுக்கூர்மை இல்லாதவன்
    அழகும்
    மண்பொம்மை போன்றதே…!

    குறும்பாவில்…

    பயனற்றதுதான் அழகு,
    மண்பொம்மை மற்றும்
    மதிநுட்பம் இல்லாதவனிடமும்…!

    மரபுக் கவிதையில்…

    எண்ணக் கலவை பலசேர்த்தே
    எழிலுறு உருவில் படைத்தாலும்,
    மண்ணில் செய்த பொம்மையது
    மண்ணாய்ப் போகும் நிலைக்காதே,
    எண்ணிப் பார்த்ததை ஆராய்ந்தே
    எதையும் கல்லார் எழிலதுவும்
    மண்ணால் செய்த பொம்மையதன்
    மிகுந்த அழகை ஒப்பதன்றோ…!

    லிமரைக்கூ…

    மண்ணில் செய்த பொம்மையழகு வீண்,
    மதிநுட்பம் எதுவும் இல்லா
    கல்லார் அழகதிலும் பயனில்லை காண்…!

    கிராமிய பாணியில்…

    அழகுதான் அழகுதான்
    அழிஞ்சிபோவும் அழகுதான்,
    மண்ணுபொம்ம அழகுதான்
    மறஞ்சிபோவும் அழகுதான்
    மண்ணாப்போவும் அழகுதான்…

    படிக்கணும் படிக்கணும்
    ஆராஞ்சறிஞ்சி படிக்கணும்,
    அப்புடிப் படிக்காதவன்
    அழகுமண்ணு பொம்மதான்..

    அழகுதான் அழகுதான்
    அழிஞ்சிபோவும் அழகுதான்…!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(53)

    -செண்பக ஜெகதீசன்

    புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி
    மூக்கிற் கரியா ருடைத்து. (திருக்குறள்:277- கூடாவொழுக்கம்)

    புதுக் கவிதையில்…

    குன்றிமணியின் உடலது
    குன்றாத சிவப்பழகு,
    களங்கமாய்க் கறுப்பு முகம்…

    இப்படித்தான் சிலர்,
    இருக்கிறார்கள் துறவறத்தில்-
    புறத்தே தூய தவக்கோலம்,
    அகத்தே
    குன்றிமணியின் கருமைபோல்
    குறைகளுடன்…!

    குறும்பாவில்…

    தவவேடத்தில் தவறு,
    குன்றிமணியின் சிவப்பு உடலில்
    கறுப்பு முகம்…!

    மரபுக் கவிதையில்…

    சொக்கத் தங்கம் எடைபோடச்
    சேர்த்துக் கொள்ளும் குன்றிமணிதன்
    சொக்க வைக்கும் சிவப்பழகில்
    சேர்ந்த குறையாம் கருமுகமாய்,
    பக்குவம் பெற்றுத் துறவுபூண்டு
    பக்தி நெறியில் பணியாற்றும்
    திக்கெலாம் புகழும் தவத்தோர்தம்
    தவறுகள் பெரிதாய்த் தெரியுமன்றோ…!

    லிமரைக்கூ…

    சிவப்பழகு குன்றிமணியின் கறுப்பு குறை,
    மன்பதை போற்றும் தவவேடத்தில்
    மறைத்துச் செய்திடும் தவறுகள் கறை…!

    கிராமிய பாணியில்…

    குன்னிமுத்து குன்னிமுத்து
    காட்டிலுள்ள குன்னிமுத்து,
    செவப்பழகுக் குன்னிமுத்து
    கொறயா
    கறுப்புமூக்குக் குன்னிமுத்து…

    தவசிவேசம் போட்டுக்கிட்டு
    தவறுசெஞ்சா தெரிஞ்சிபோவும்
    தெளிவா தெரிஞ்சிபோவும்,
    குன்னிமுத்து மூக்குப்போல
    கொறயெல்லாந் தெரிஞ்சிபோவும்…

    குன்னிமுத்து குன்னிமுத்து
    செவப்பா
    கறுப்புமூக்குக் குன்னிமுத்து…!

    Share
  • அன்பை அறுவடை செய்வோம்!

    -செண்பக ஜெகதீசன்

    சுழலும் காலச் சக்கரமும்
         சுற்றிச் சுற்றி வருகிறதே,
    நிழலும் நின்று நிலைப்பதில்லை
         நிலையா இன்ப துன்பமதாய்,
    பழகிடு நல்லதே செய்வதற்குப்
         புறத்தே கெட்டதைத் தள்ளிவிட்டே,
    அழைக்குதே புலரும் புத்தாண்டு
         அன்பின் அறுவடை செய்திடவே…!    

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(52)

    -செண்பக ஜெகதீசன்

    கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
    டென்னாற்றுங் கொல்லோ வுலகு. (திருக்குறள்:211-ஒப்புரவறிதல்)

    புதுக் கவிதையில்…

    மண்ணிடம் பலனேதும்
    எதிர்பார்க்காமலே
    மழை பொழிகிறது…                                      rain

    அதுபோல்தான்
    சான்றோர் செய்யும் உதவியும்
    கைம்மாறு கருதியல்ல…!

    குறும்பாவில்…

    மண்குளிர மழை பெய்வதும்,
    சான்றோர்தம் உதவியும்
    பிரதிபலன் எதிர்பார்த்தல்ல…!

    மரபுக் கவிதையில்…

    மண்ணில் மழையது பெய்தேதான்
    மண்ணின் வளத்தைப் பெருக்கிடுதல்
    மண்ணிடம் பலனெதிர் பார்த்தல்ல,
    மழையின் குணமும் அதுதானே,
    கண்ணின் இமையாய்க் காக்கும்நற்
    குணத்தை யுடைய சான்றோர்கள்
    மண்ணில் மற்றவர்க் குதவிடுதல்,
    மழைபோல் மறுபலன் பாராததே…!

    லிமரைக்கூ…

    மண்ணிடம் மழையது எதிர்பார்ப்பதில்லை பலனை,
    மாந்தரில் மழைபோல் சான்றோர்
    பிரதிபலன் எதிர்பாராமல் பேணுவர்பிறர் நலனை…!

    கிராமிய பாணியில்…

    மழபெய்யுது மழபெய்யுது
    மண்ணுகுளுர மழபெய்யுது,
    மண்ணுகிட்ட மறுஒதவி
    கேக்காமலே மழபெய்யுது…

    மனுசருலயும் மழபோல
    மத்தவனுக்கு ஒதவிசெய்ய
    மனசுவுள்ள மனுசருண்டு,
    அவுரு
    மறுஒதவி எதயுமே
    மனசாலயும் கேக்கமாட்டாரே…

    மழபெய்யுது மழபெய்யுது
    மண்ணுகுளுர மனசுகுளுர
    மழபெய்யுது மழபெய்யுது…!

     

    Share
  • தேவமைந்தன் பிறந்தான்!

    -செண்பக ஜெகதீசன்

    கண்ணியம் மிக்க மேய்ப்பனைக்                 Jesus_012
         கன்னி மரியாள் சேய்தனை,
    புண்படச் சிலுவை சுமந்த
         புனித வெள்ளிச் சுடரதை,
    உண்மைப் பொருளதை உணர்த்திட
         உயிர்த்தே எழுந்த பிதாவினை,
    விண்ணின் மைந்தன் தேவனை
         வழிபட, வந்திடும் நலமதே…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(51)

    -செண்பக ஜெகதீசன்

    துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த
    னளியின்மை வாழு முயிர்க்கு. (திருக்குறள்-557:கொடுங்கோன்மை)

    புதுக் கவிதையில்…

    மழை விழுந்தால்,
    மண் குளிர்ந்து
    வளம்பெருகும் வையத்தில்…
    மழை இல்லையெனில்,
    மன்பதை வாடும்,
    மக்கள் வாடுவர் அதுபோல்,
    ஆட்சியாளர்தம்
    அரவணைப்பு இல்லையேல்…!

    குறும்பாவில்…

    மாநிலம் வாடும் மழையில்லையெனில்,
    மக்கள் வாடுவர்
    முறையற்ற அரசியலாரால்…!

    மரபுக் கவிதையில்…

    மண்ணில் வீழும் மழைத்துளிதான்
    மன்பதை வளத்தைப் பெருக்கிடுமே,
    எண்ணிப் பாரிதை, மழையிலையேல்
    எல்லாம் காய்ந்திடும் பூமியிலே,
    கண்ணின் இமையாய்க் காத்துநிற்கும்
    கருணை யில்லா ஆட்சியரால்
    மண்ணில் மாந்தர் நிலையதுவும்
    மழையிலா நிலம்போல் மாறிடுமே…!

    லிமரைக்கூ…

    மழையில்லா பூமியது பாலையாய்க் காட்சி,
    நலிவர் மக்கள் பாழ்நிலம்போல்
    நடந்திடில் நாட்டில் நலம்பேணார் ஆட்சி…!

    கிராமிய பாணியில்…

    காஞ்சிபோச்சி காஞ்சிபோச்சி
    காடெல்லாங் காஞ்சிபோச்சி,
    ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல
    மண்ணுலத்தான் ஒண்ணுமில்ல
    மழயில்லாம ஒண்ணுமில்ல…

    கதயிதுதான் கதயிதுதான்
    ராசாங்கக் கதயிதுதான்,
    சனங்களுக்கு ஒதவத்தான்
    சத்தில்லா அரசாங்கத்தால
    மொத்தமாப் பயனில்ல,
    பயனில்ல பயனில்ல
    காஞ்சிபோன நெலம்போல
    பயனில்ல பயனில்ல…!

     

    Share
  • வானமாய்…

    -செண்பக ஜெகதீசன்

    தினம் தினம் வரும்
    தினகரனும்
    மறைந்துவிடுகிறான் மாலையில்…          Beautiful-Sky

    வளர்ந்து தேய்ந்து
    வரும் நிலவும்
    ஓடிவிடுகிறது காலையில்…

    ஓட்டடையாய் ஒட்டிக்கொண்டு
    பலமுகம் காட்டும்
    மேகமும்
    வேகமாய்ச் சென்றிடும் காற்றில்…

    நிரந்தரமாய் நிற்பது,
    வானம் மட்டும்தான்…

    வாழ்க்கையில்,
    வந்துபோகும் உறவுகளுக்கிடையில்
    வானமாய்
    மாறாமல் என்றும் நிலைப்பது,
    தாய்மைதானே…!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(50)

    -செண்பக ஜெகதீசன்

    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல். (திருக்குறள்-279: கூடாவொழுக்கம்)

    புதுக் கவிதையில்…

    நேரான அம்பு
    நோகடிக்கும் புண்படுத்தி,
    வளைந்திருந்தாலும் யாழ்தரும்                yazh_fish
    இனிய இசை…

    இதுபோல்தான் மாந்தர்கள்,
    அவர்தம்
    செயலின் தன்மையறிந்து
    சேர்ந்திடு அவருடன்…!

    குறும்பாவில்…

    அம்பு நேரானதானாலும் ஆபத்து,
    வளைந்திருந்தாலும் யாழ்தரும் இன்னிசை,
    செயல்திறன் பார்த்து சேர்ந்திடு மனிதரிடம்…!

    மரபுக் கவிதையில்…

    நேராய் அம்பது இருந்தாலும்
    நோவைத் தந்திடும் புண்படுத்தி,
    ஏராய் வடிவில் வளைந்திருந்தும்
    இனிய இசைதரும் யாழதுவே,
    பாராய் மனிதரில் பலவகையே
    பார்க்கும் உருவதை நம்பிடாதே,
    ஆராய்ந் தறிந்திடு செயல்திறனை
    அதன்பின் சேர்ந்திடு அவருடனே…!

    லிமரைக்கூ…

    புண்படுத்திடும், அம்பது இருந்திடினும் நேராய்,
    வளைந்த யாழதும் இசைதரும்,
    மாந்தருடன் சேருமுன்னவர் செயல்திறம் பாராய்…!

    கிராமிய பாணியில்…

    தெரியாது வெளிய தெரியாது
    நல்லது கெட்டது தெரியாது…
    நேராயிருக்க அம்புதானே
    நெஞ்சக்குத்திக் கிழிச்சிப்புடும்,
    வளஞ்சிருக்க யாழுலதான்
    வருமே நல்ல சங்கீதம்…

    இந்தக்கததான் மனுசங்கிட்ட,
    உருவத்தப்பாத்து ஏமாறாத
    ஆளப்பாத்து அசந்துடாத,
    அவஞ்
    செய்கயநல்லா ஆராஞ்சி
    சேந்துக்கநீ அவங்கிட்ட…

    தெரியாது வெளிய தெரியாது
    நல்லது கெட்டது தெரியாது…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(49)

    -செண்பக ஜெகதீசன்

    மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
    பெருந்தகை யான்கட் படின். (திருக்குறள்-217: ஒப்புரவறிதல்)

    புதுக் கவிதையில்…

    பிறர்க்குதவும் பெருந்தன்மையாளன்
    பெற்ற செல்வம்,
    வேர் முதலாயுள்ள
    உடல் உறுப்புக்களால்                                      Medicinal_tree
    உயிர்காக்கும்
    மருந்து மரம் போன்றதே…!

    குறும்பாவில்…

    நல்லவன் பெற்ற செல்வமும்,
    பிணி தீர்த்திடும்
    மருந்து மரமும் ஒன்றே…!

    மரபுக் கவிதையில்…

    உறுதியாய் வேருடன் கிளையும்
    உடனதாய் இலைபூ காய்கனி,
    உறுபிணி யகற்றும் மருந்தாய்
    உதவுமே மருந்து மரத்தில்,
    பெறும்தனம் சேர்த்து வைத்தே
    பிறர்நலம் பேணிக் காக்க
    உறுபொருள் கொடுக்கும் செல்வரும்
    உருவிலம் மருந்து மரமே…!

    லிமரைக்கூ…

    உடல்நலம்பெற உதவியாயிருக்கும் மருந்து மரம்,
    அத்தகையதே நல்ல மனத்தொடு
    பிறர்க்குதவும் செல்வத்தை வைத்திருப்பவன் கரம்…!

    கிராமிய பாணியில்…

    மருந்துமரம் மருந்துமரம்
    மனம்போல ஒதவும் மருந்துமரம்,
    எலபூவு காயோட
    எல்லாமே ஒதவும் மருந்துமரம்
    எல்லார்க்கும் ஒதவும் மருந்துமரம்…

    இதுபோல,
    அடுத்தவுனுக்கு ஒதவணுண்ண
    ஒயந்தகொணம் உள்ளவங்கிட்ட
    உள்ளபணம் மருந்துமரம்…

    மருந்துமரம் மருந்துமரம்
    மனம்போல ஒதவும் மருந்துமரம்…!


    Share
  • குறளின் கதிர்களாய்…(48)

    -செண்பக ஜெகதீசன்

    தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து
    வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று. (திருக்குறள்-274: கூடாவொழுக்கம்)

    புதுக் கவிதையில்…

    தகாது
    தவவேடத்தில் மறைந்திருந்து
    தப்பு செய்தல்…

    அது,
    காட்டில் வேடன்,
    புதரில் மறைந்திருந்து
    அங்கு வரும்
    பறவையைப் பிடித்தல் போன்றது…!

    குறும்பாவில்…

    துறவு வேடத்தில் தீயசெயல்,
    புதர்மறைவிலிருந்து பறவை பிடிக்கும்
    வேடன் செயலே…!

    மரபுக் கவிதையில்…

    புதரின் மறைவில் மறைந்திருந்தே
    பதுங்க வந்திடும் பறவைகளை
    இதமாய்ப் பிடித்திடும் வேடனவன்
    இயல்பை யொத்த செயல்தானே,
    மதத்தின் பெயரால் தொண்டாற்றி
    மக்கள் நன்மை பெற்றிடவே
    உதவும் துறவு வேடமதில்
    உதவாத் தீயன செய்வதுமே…!

     லிமரைக்கூ…

    புதரில் மறைந்திருந்து புள்பிடிப்பான் வேடன்,
    அதுபோல் உண்மை மறைத்துத்
    தவவேடத்தில் தீயவற்றைச் செய்பவன் கேடன்…!

    கிராமிய பாணியில்…

    வேட்டயாடு வேட்டயாடு
    வெவரமாநீ வேட்டயாடு…

    பொதருக்குள்ள ஒளிச்சிருந்து
    பதுங்கவாற பறவபுடிக்கான்
    பாதகனா வேட்டக்காரன்,
    வேண்டாவேண்டாம் இவுனப்போல
    வேட்டக்காரன் வேண்டாவேண்டாம்…

    தவசிபோல வேசம்போட்டு
    தப்புசெய்றவன் இவம்போலத்தான்,
    வேண்டாவேண்டாம் இவுனப்போல
    வேசக்காரன் வேண்டாவேண்டாம்…

    வேட்டயாடு வேட்டயாடு
    வெவரமாநீ வேட்டயாடு…!

     

    Share
  • ‘இல்லை’ இல்லை இனி…

    -செண்பக ஜெகதீசன்

    வையத்தின் கதையிதுதான்,
    வைத்துக்கொள் மனதினிலே…

    மலர்ந்த மலர்களெல்லாம்
    மணப்பதில்லை,
    மலர்ந்து மடிந்து
    உதிர்ந்தவையெல்லாம்
    உருவாக்கவில்லை
    காயை, கனியை, விதையை…

    மந்தை மந்தையாய் வந்த
    மேகக் கூட்டமெல்லாம்
    மழையைப் பொழியவில்லை…

    கடலடியில் காணும்
    கணக்கில்லாச் சிப்பியெல்லாம்
    கொண்டதில்லை முத்தைத் தம்மில்…

    கழனி விளையும்
    நெல்மணியெல்லாம்
    நல்மணியாய் ஆவதில்லை…

    இந்த
    ’இல்லை’யென்பது வேண்டாம்
    இனிய மனிதனே உன் வாழ்வில்,
    இருக்கும் நாளில்
    எதையாவது செய்திடு உருப்படியாய்,
    இதை
    ஏற்றுக்கொண்டிடு கருத்தினிலே…!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(47)

    -செண்பக ஜெகதீசன்

    இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
    துணர விரித்துரையா தார். (திருக்குறள்:650 – சொல்வன்மை)

    புதுக் கவிதையில்…

    விரிந்த இதழ்களுடன்
    விதவித அழகாய் இருந்தாலும்,            flower
    மலருக்கு மகிமை
    மணம்தான்…

    கற்றவர், கற்றதை
    மற்றவர் அறிய
    எடுத்துரைக்க இயலாதபோது
    அவரும்
    மணமில்லா மலர்போலத்தான்…!

    குறும்பாவில்…

    கற்றிருந்தும் பிறரறிய
    எடுத்துரைக்க இயலாதவனும்,
    மணமிலா மலர்தான்…!

    மரபுக் கவிதையில்…

    ஆர்வமாய்ப் பலநூல் கற்றேதான்
    அறிவை அதிகம் பெற்றிடினும்,
    தேர்வுகள் பலவும் வென்றிடினும்,
    திறம்படப் பிறர்க்கே உரையாதார்
    பேர்தான் கற்றவர் என்போரும்,
    பற்பல வடிவில் பலநிறத்தில்
    பார்க்க விரிந்த போதினிலும்
    பழுதாம் மணமிலா மலரொப்பரே…!

    லிமரைக்கூ…

    கற்றவற்றை எடுத்துரைத்து அறியவேண்டும் பலர்,
    விரித்துரைக்காதவர் ஆவார்
    விரிந்திருந்தும் பயனில்லாத மணமில்லா மலர்…!

    கிராமிய பாணியில்…

    பூவுபூவு காட்டுப்பூவு
    பெருசுசெறுசா பாக்கும்பூவு,
    எதுக்கொமொதவா காட்டுப்பூவு
    வாசமில்லா வெத்துப்பூவு…

    பூவுண்ணா மணமிருக்கணும்
    பக்கமெல்லாம் மணம்பரப்பணும்…

    படிப்பு கதயும் இதுதானே,
    தெரிஞ்சிருக்கணும் தெரிஞ்சிருக்கணும்
    படிச்சதெல்லாந் தெரிஞ்சிருக்கணும்,

    படிச்சிக்குடுக்கத் தெரிஞ்சிருக்கணும்
    எடுத்துச்சொல்லத் தெரிஞ்சிருக்கணும்..

    தெரியலண்ணா காட்டுப்பூவு
    அவுனுமொரு காட்டுப்பூவு
    தேவயில்லா காட்டுப்பூவு
    வாசமில்லா காட்டுப்பூவு…

    பூவுபூவு காட்டுப்பூவு
    எதுக்கொமொதவா காட்டுப்பூவு…!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(46)

    -செண்பக ஜெகதீசன்

    பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத்
    தஞ்சு மவன்கற்ற நூல். (திருக்குறள்-727: அவை அஞ்சாமை)

    புதுக் கவிதையில்…

    கற்றதின் பலனை
    மற்றவரும் பெறவேண்டும்…

    அவையிலதை எடுத்துரைக்க
    அஞ்சுபவன் கற்றது,
    போர்க்களத்தில்
    பேடியின் கைவாள்போல்
    பயனற்றதே…!

    குறும்பாவில்…

    போர்க்களத்தில் பேடி கைவாள்
    பயனற்றது போல்தான்,
    அவையஞ்சுபவன் கற்ற நூலும்…!

    மரபுக் கவிதையில்…

    வெற்றி பெற்றிடப் போர்க்களத்தில்
    வீரர் தங்கள் கைகளிலே
    பற்றி யிருக்கும் வாளதனைப்
    பேடியும் பிடித்துப் பயனில்லை,
    கற்ற நூலின் பொருளதனைக்
    கற்றோர் அவையில் அஞ்சாதே
    மற்றவர் அறிய உரையான்நூல்,
    மாறாப் பேடியின் கைவாளே…!

    லிமரைக்கூ…

    போர்க்களத்தில் பயனில்லை பேடியின்கை வாள்,
    எடுத்துரைக்க அவை அஞ்சுபவன்
    படித்தநூலையும் இதுபோல்தான் சொல்லுவர் கேள்…!

    கிராமிய பாணியில்…

    வாளுவாளு போர்வாளு
    வெட்டிச்சாய்க்கும் போர்வாளு,
    வீரன்புடிக்கும் போர்வாளு
    வெட்டிச்சாய்க்கும் போர்வாளு,
    பேடிபுடிச்சா பேர்வாளு
    பயனேயில்லாப் போர்வாளு…

    படிச்சபடிப்ப எடுத்துச்சொல்லணும்
    பலருந்தெரிய படிச்சிச்சொல்லணும்,
    பயந்துநின்னா பலனில்ல
    படிச்சபடிப்பு பயனில்ல,
    படிச்சதெல்லாம் இதுபோலத்தான்
    பேடிகைல வாள்போலத்தான்…

    வாளுவாளு போர்வாளு
    வெட்டிச்சாய்க்கும் போர்வாளு…!

     

    Share