Tag: காவிரி மைந்தன்

  • ஆறாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    அண்ணாகண்ணன்

    வல்லமை மின்னிதழ், 6ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்தத் தருணத்தில், நாம் கடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பிப் பார்ப்போம். இன்று வரை சுமார் 8 ஆயிரம் இடுகைகள், 9.7 ஆயிரம் பின்னூட்டங்கள், 2.2 லட்சம் வாசகர்கள், 8.1 லட்சம் பக்க நோக்குகள் ஆகியவற்றுடன் வல்லமை தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

    161 நாடுகளிலிருந்து வாசகர்கள்,வல்லமைக்கு வந்திருந்தாலும், 70 நாடுகளுக்கும் மேலிருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வந்துள்ளார்கள். இந்தியா, அமெரிக்கா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, கனடா, அமீரகம், ஆஸ்திரேலியா, ஜெர்மனி நாடுகள், இதே வரிசையில் முதல் 10 இடங்களை வகிக்கின்றன.

    Vallamai_6th_year_300x1251

    கடந்த ஓராண்டில் வல்லமை, 4 போட்டிகளை நடத்தியுள்ளது. என் பார்வையில் கண்ணதாசன், மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் ஆகிய கட்டுரைப் போட்டிகளைக் கவிஞர் காவிரி மைந்தன் மற்றும் அவர் நண்பர்களுடன் இணைந்து நடத்தி முடித்துள்ளது. எழுத்தாளர் வையவனின் ஆலோசனைப்படி, பயன்மிகு இணையவழிச் சேவைகள் என்ற மாதாந்திரக் கட்டுரைப் போட்டியை அறிவித்துத் தொடர்ந்து நடத்தி வருகிறது. வாராந்தரப் படக்கவிதைப் போட்டியை வாசகர்களின் அமோக ஆதரவுடன் நடத்தி வருகிறது. தேமொழியின் யோசனையை ஏற்றுத் தொடங்கப்பட்ட இந்தப் போட்டிக்காக, சாந்தி மாரியப்பன் படங்களைத் தேர்ந்தெடுத்து அளிக்க, மேகலா, இதற்கான நடுவராக இருந்து, உரியவர்களை நன்முறையில் தேர்ந்தெடுத்து வருகிறார்.

    வாரந்தோறும் ஒருவரை வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறோம். அந்த வகையில் கடந்த ஆண்டு முழுவதும் சிறந்த ஆற்றலாளர்களை அடையாளம் கண்டு கவுரவித்துள்ளோம். இந்தப் பணியை அன்பர்களின் பரிந்துரைகள் அடிப்படையில், ஆசிரியர் குழுவுடன் கலந்தாலோசித்துத் தேமொழி சிறப்பாகத் தொடர்கிறார்.

    இந்த ஓராண்டில் பல்வேறு தொடர்களை வல்லமை வெளியிட்டுள்ளது. சொற்சதங்கை – கவியுள்ளம் – காற்று வாங்கப் போனேன் (கே.ரவி), திருமால் திருப்புகழ் – கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம் (கிரேசி மோகன்), இசைக்கவியின் இதயம் (இசைக்கவி ரமணன்), என்னதான் இருக்கிறது வேதத்தில் (சு.கோதண்டராமன்), அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (சுபா), ஐந்து கை ராந்தல் (வையவன்), சுட்டும் விழிச்சுடர் (பவளசங்கரி), இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (சக்தி சக்திதாசன்), கவியரசு கண்ணதாசன் (காவிரி மைந்தன்), அவன், அது , ஆத்மா – காலம் (மீ.விசுவநாதன்), உன்னையறிந்தால் (நிர்மலா ராகவன்), நான் அறிந்த சிலம்பு (மலர்சபா), குறளின் கதிர்களாய் (செண்பக ஜெகதீசன்), தேகமும் யோகமும் (கவியோகி வேதம்), காதல் நாற்பது (ஜெயபாரதன்), ஓலைத் துடிப்புகள் (கவிஞர் ருத்ரா), சிகரம் நோக்கி (சுரேஜமீ)… எனத் தொடரும் தொடர்கள், வல்லமைக்கு வளமையும் பெருமையும் சேர்ப்பவை.

    இவையல்லாமல், நாகேஸ்வரி அண்ணாமலை உள்ளிட்ட பலரும் வெவ்வேறு நடப்புகளைக் குறித்துப் பத்திகளை எழுதி வருகிறார்கள். ஆய்வறிஞர்களும் பேராசிரியர்களும் தங்கள், ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி வருகிறார்கள். இவை வாசகர்களின் சிந்தனைக்கு விருந்து படைத்து வருகின்றன.

    கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுத்து வடிவில் மட்டுமின்றி,ஒலி வடிவிலும் வல்லமையில் கேட்க முடியும். கே.ரவி, இசைக்கவி ரமணன், ஆர்.எஸ்.மணி உள்ளிட்ட பலரின் பாடல்கள், வல்லமை நேயர்களின் நெஞ்சம் கவர்ந்தவை. எழுத்தும் ஒலியும் இணை சேர்ந்து வருவதைப் போல், எழுத்தும் ஓவியமும் சு.ரவியின் ஆக்கங்களில் இணை சேர்ந்து, வாசகர்களை வசீகரிக்கின்றன.

    வல்லமையின் இடுகைகளின் தொகுப்பினை ஒவ்வொரு நாளும் உங்கள் மின்னஞ்சல் பெட்டிக்கே கொண்டு சேர்க்கும் வசதியும் வல்லமையில் உண்டு. சிறிது காலம் செயல்படாமல் இருந்த இந்த வசதி, நம் தள நிர்வாகி ஸ்ரீநிவாசன் அவர்களின் உதவியால், இப்போது மீண்டும் செயல்படுகிறது. வாசகர்களும் படைப்பாளர்களும் வல்லமை முகப்பில் பின்னூட்டங்களுக்கு மேலே உள்ள பெட்டியில் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை இட்டு, வல்லமையின் எல்லா இடுகைகளையும் அறியலாம்.

    வல்லமையின் சீரிய வளர்ச்சியில் பலருக்கும் பங்கு உண்டு. கனிவும் அர்ப்பணிப்பும் மிகுந்த திருமதி பவளசங்கரி தலைமையிலான ஆசிரியர் குழுவினர், எங்கள் ஆலோசகர்கள், வழங்கி நிர்வாகி ஆமாச்சு, தள மேலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அனைவருக்கும் எமது நன்றிகள். வல்லமைக்குச் சிறப்பான படைப்புகளை அளித்து வரும் படைப்பாளர்கள், ஓவியர்கள், இவற்றைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்கள், கூகுள் – ஃபேஸ்புக் – ஃபிளிக்கர் – வாட்ஸ் அப் குழுமங்களில் துடிப்பாக இயங்கி வரும் அன்பர்கள் யாவருக்கும் நன்றிகள்.

    இந்த இனிய தருணத்தில் இசைக்கவி ரமணன் அவர்களின் கனிந்த வாழ்த்து, நமக்கு உற்சாகம் ஊட்டுகிறது.

    இணையதளம் என்றாலும் இனிமையினால் நற்பண்பால்
    இதயதள மாகிவிட்ட வல்லமையே வாழ்க!
    அணைத்தபடி அனைவரையும் அரவணைத்துச் செல்லுகின்ற
    அன்னையவள் கரம்போன்ற வல்லமையே வாழ்க!

    கணப்பாகக் குளிர்நீக்கும்! கடுங்கோடைப் பொழுதினிலே
    கற்கண்டுப் பனித்துளியாய்க் கால்நனைத்து மனம்குளிரும்!
    பிணைப்பாகி, ஒரு குழுமம் பெருங்குடும்ப மாகியதே!
    பிரிவில்லா உறவொன்றில் நெஞ்சமெல்லாம் நெகிழ்கிறதே!

    ஏதேதோ மரம்கொடிகள் எத்தனையோ மலர்வகைகள்
    எல்லோர்க்கும் தனித்தனியாய் சேர்ந்திருக்க இடமுண்டு!
    காதலுண்டு கவிதையுண்டு வாதமுண்டு பேதமுண்டு
    கடுகளவும் பகையின்றிக் கைகுலுக்கும் பண்புண்டு!

    எனத் துல்லியக் கவிபாடி, நம் உள்ளங்களை அள்ளிய தெள்ளியர், அவர்.

    பல்லாண்டு வாழ்க! பலநூறு காண்க!
    பைந்தமிழின் களஞ்சியமாய்ப் பலவிதமாய் விரிக!
    வல்லோரின் சங்கமத்தில் வளரட்டும் வல்லமை
    வழிநெடுகத் துணையாக வாழ்த்தட்டும் சிவனுமை!

    என்ற அவரின் வாழ்த்து, வல்லமைக்கு மேன்மேலும் வலிமை ஊட்டுகிறது. அவரது கூற்றின்படி, பைந்தமிழின் களஞ்சியமாய் விரிவோம். பாரெங்கும் தொண்டுகள் புரிவோம்.

    Share
  • உன் மேலே கொண்ட ஆசை….

    காவிரி மைந்தன்

    காதல் ஜோதி திரைப்படத்திற்கான கதை பேரறிஞர் அண்ணாத்துரை அவர்களுடையது!  இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் காட்சிக்கு சுப்பு ஆறுமுகம் பாடல் எழுதியிருக்கிறார் என்பது சுவையான தகவல்! அதிலும் இளம்பெண் விதவையாகிறபோது.. அவளுக்கு மீண்டும் வாழ்வுதர.. மனைவியாக ஏற்க..  நாயகன் தன் கருத்தை வெளிப்படுத்துவதாய்..

    unnamed

    கனவிலே வந்தவளே.. கதவுதாண்டி வந்தாலென்ன..

    கதையாகப் போக வேணாம்.. தங்கரத்தினமே

    நானே கதவாகத் துணையிருப்பேன் பொண்ணு ரத்தினமே!!

    அவளுக்கு ஏற்கனவே அமைந்த வாழ்வு நீடிக்கவில்லை! மஞ்சள் குங்குமம் நிலைக்கவில்லை!  கன்னிப்பெண் போகாட்சி தரும் அவள்  வாழ்வு  முடிந்ததாய்கருத வேண்டியதில்லை  என்கிற பகுத்தறிவுக்  கருத்தைத்  தன்  பாடல்  வரிகளிலும் முத்திரை பதித்தாற்போல்  பதித்திருக்கிறார்!

    நேற்று நீ போட்ட கோலம் நீர்க்கோலம் ஆகிப்போச்சு

    மாக்கோலம் போட்டுக்கலாம் தங்கரத்தினமே!

    என்னை மச்சான்னு கூப்பிடடி பொண்ணு ரத்தினமே!

    unnamed (1)

    தன் இனத்தின் தலைவன் என்று பேரறிஞர் ஏற்றுக்கொண்ட வெண்தாடி வேந்தர் பெரியாரை நினைவூட்ட ஈரோட்டையும்.. தான் பிறந்த காஞ்சியைநினைவூட்ட அங்கே பிரபலமான சேலையையும் இணைத்து பாட்டுவரிக்குள் புகுத்திவைத்த பக்குவம் தெரிந்த பண்பாளர்.. நம் அண்ணாவன்றோ?

    ஈரோட்டுச் சந்தையிலே எனக்கு வேட்டி எடுத்துக்குவோம்

    காஞ்சிபுரம் சிலுக்குசேலை தங்கரத்தினமே

    நடிகர் ரவிச்சந்திரன் கையில் ஒரு டேப்பை வைத்துக்கொண்டு சீர்காழி கோவிந்தராஜன் குரலில் பாடும்போது.. நமக்கே  அவ்விருவர் சேர்ந்துவிடக் கூடாதா என்கிற எண்ணம் தோன்றிவிடுகிறது!

    தத்ரூப நடிப்பால் ரவிச்சந்திரனும் M. பானுமதியும்  (தொலைக்காட்சிப்புகழ்) இப்பாடல் காட்சியை மெருகூட்டியிருக்கிறார்கள் என்றால் அதுமிகையில்லை!  இசையில் நம்மை கட்டி இழுத்துவைக்கிறார் மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி

    உன் மேலே கொண்ட ஆசை…

    உன் மேலே கொண்ட ஆசை..

    உத்தமியே மெத்த உண்டு

    சத்தியமா சொல்லுறேண்டி தங்கரத்தினமே!

    தாள முடியாது கண்ணே பொண்ணுரத்தினமே..

     

    சித்திரைக்கு பக்கத்திலே சேர்ந்திருக்கிற வைகாசிபோல்

    முத்தழகி நீயும் நானும் தங்கரத்தினமே!

    மூணுமுடிச்சு போட்டு சேர்ந்துக்குவோம் பொண்ணு ரத்தினமே!

    நேற்று நீ போட்ட கோலம் நீர்க்கோலம் ஆகிப்போச்சு

    மாக்கோலம் போட்டுக்கலாம் தங்கரத்தினமே!

    என்னை மச்சான்னு கூப்பிடடி பொண்ணு ரத்தினமே!

    ஈரோட்டுச் சந்தையிலே எனக்கு வேட்டி எடுத்துக்குவோம்

    காஞ்சிபுரம் சிலுக்குசேலை தங்கரத்தினமே

    தந்து கண்ணாலம் கட்டிக்கிறேன் பொண்ணு ரத்தினமே!

    கனவிலே வந்தவளே.. கதவுதாண்டி வந்தாளென்ன..

    கதையாகப் போக வேணாம்.. தங்கரத்தினமே

    நானே கதவாகத் துணையிருப்பேன் பொண்ணு ரத்தினமே!!

     

    https://www.youtube.com/watch?v=SXDzICClM4U

    Share
  • விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே – கவிஞர் ஆத்மநாதன்

    காவிரி மைந்தன்

    காற்றினிலே மிதக்கும் கானங்கள் ஆயிரம்.. அந்தக் காற்றே காதலிக்கும் கானங்களும் அதில் உண்டு! இந்தப் பாடல் அந்த ரகம்!  இன்ப லயம்! இயற்கையின் வடிவில் இன்பத்தை எடுத்துச்சொல்லும் அற்புதக் கவிதைவளம்.. ஆத்மநாதன் அவர்களுக்கு!

    athmanathanகற்பனைக் கடிவாளமில்லாமல் வானிலே பறக்க.. சொற்களும் அதற்கேற்ப வந்து கவிதை படிக்க.. காதலுக்கு வேறேது வேண்டும்! அன்பின்கரம் இணையும் நேரம் ஆகிவிடும் அந்தப்புரம் சொந்தமதே சொர்க்கமென்று சுவைதேடும் காதலர்க்கு..  அவர்தம் மனம் சொல்ல விரும்புவதை கவிஞர் தன் பாடலில் சொல்லிவிடுவதுதானே வழக்கம்!  சிலநேரங்களில் சராசரி பாடலாய் அமைந்துவிடாமல் சரித்திரப் பாடலாய் அமைந்துவிடும்!  ஆம்..  இன்னிசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் குரலில் இந்தப் பாடல் பெற்றுவிடும் உன்னதத்தால்  – உலகக் காதலர்களுக்கான ஒட்டுமொத்த காணிக்கையாக்கலாம் இப்பாடலை!

    விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரின் இசையமைப்பில் புதையல் திரைப்படத்திற்காக இசைச் சித்தருடன் இணைசேர்கிறார் இன்னிசைக்குயில் பி.சுசீலா!

    58 ஆண்டுகளுக்குப் பின்னும் இப்பாடல் ஒலிக்கப்படும் போதெல்லாம் காதுகள் கேட்கப்பிரியப்படும் பாடலாய் பவனி வருவதன் ரகசியம் என்ன? இசையா? கவிதையா? குரலா?  வாசகர்களே இப்பாடலை இன்னொரு முறை கேட்டுச் சொல்லுங்கள்!!

    விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

    Pudhayalவிண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
    கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே

    அலைபாயும் கடலோரம் இளமான்கள் போலெ
    விளையாடி.. இசை பாடி….
    விழியாலே உறவாடி இன்பம் காணலாம்

    விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
    கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே

    தேடாத செல்வசுகம் தானாக வந்ததுபோல்
    ஓடோடி வந்த சொர்க்க போகமே ஓடோடி வந்த சொர்க்க போகமே
    காணாத இன்பநிலை கண்டாடும் நெஞ்சினலே
    ஆனந்த போதையூட்டும் போகமே வாழ்விலே
    விளையாடி.. இசை பாடி..

    சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே
    சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
    சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
    மங்காத தங்கமிது மாறாத வைரமிது
    ஒன்றாகி இன்ப கீதம் பாடுவோம் வாழ்விலே
    விளையாடி…… இசைபாடி……
    விழியாலே உறவாடி இன்பம் காணலாம்

    திரைப்படம்: புதையல் (1957)
    பாடியவர்கள்: சி.எஸ். ஜெயராமன், பி. சுசீலா
    இசை : எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி
    வரிகள் : ஆத்மநாதன்
    பாடல் : விண்ணோடும் முகிலோடும்

    Share
  • நீயே என்றும் உனக்கு நிகரானவன்

    காவிரி  மைந்தன்

    அரிய இப்பாடலுக்கு அடியேன் விளக்கமளிப்பதைவிட .. தமிழ் என்னும் கடல் மூழ்கி.. தத்துவ தரிசனங்கள் காட்டி.. அடியவர்க்கெல்லாம் அடியவராக.. ஆம்.. அவர் அடியொற்றிப்போகத்தக்க அளவு சிந்தனையைச் செப்பனிட்டு.. பரம்பொருளைத் தான் உணர்ந்து பாமரரும் உணரும்வண்ணம் தான் எழுதும் பரசுராமன் என்னும் திருப்பெயரால் ஆன்மீகம்தான்தழைக்க அரும்பெரும் தொண்டாற்றும் என்னரும் நண்பரின் வாய்மொழியாலே வாசகர்கள் வாசிக்கத்த தருவதில் மெத்தவே மகிழ்கிறேன்.

    இறைவன் மிகப்பெரியவன்.. அவனுக்கு இணை கிடையாது என்கிற வாசகங்களுக்கு கவியரசர் கண்ணதாசன் விளக்கம் சொல்ல கோவிலுக்குள் அழைத்துச் செல்கிறார்!  அங்கே இறைவனுடைய தரிசனம் கிடைக்கிறது. அதுமட்டுமல்ல.. கேள்வி கேட்டவர்களுக்கு விளக்கமும் கிடைக்கிறது.

    கவியரசரின் வாய் மெல்ல அசைகிறது.  வார்த்தைகள் அர்ச்சனைப் பூக்களாக வெளிவருகின்றன!

    நீயே உனக்கு என்றும் நிகரானவன்..

    தனக்கு உவமை இல்லாதவன் என்று தமிழ்வேதம் திருக்குறள் சொல்கிறது! அடுத்த அடியில்.. அந்தி நிழல் போல் குழல் .. என்கிறார்..  ஆம்.. அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில் ‘செஞ்சடா அடவி’ என்று சொல்கிறார்.

    தனக்குத் தானே நிகரானவனாகவும், எல்லா ஜீவராசிகளுக்கும் தந்தையாகவும்,தாயகவும் இருப்பவன் இறைவன்.. ‘தாயும் நீ!  தந்தையும் நீ! என்று திருமறைகள் முழங்குகின்றன!

    அப்படிப்பட்ட இறைவன் தாயாகவே வடிவம் தாங்கி வந்து பிரசவம் பார்த்தான்.  செட்டியார்குலப் பெண்மணியான ரத்னாவதிக்குத் தாயாக வந்து இப்படித் திருவிளையாடல் புரிந்த சிவபெருமானுக்கு, ‘தாயுமான சுவாமி’ என்றே திருநாமம்!

    இந்த உட்பொருளை வைத்தே உருவானது – வளர்த்த தாயாகி வந்தவன்

    bale pandiyaa

    தாயாகி வந்த இறைவனின் தூய வடிவத்தைச் சொல்கிறார் பாருங்கள்!

    இன்னது செய்யலாம்.. இன்னதைச் செய்யக்கூடாது என்று சொல்லி எல்லோருக்கம் வாழ வழி காட்டுவது வேதம்.. அப்படிப்பட்ட வேதமே இறைவனுக்கு வாயாக இருக்கிறது.  வாய் மட்டும் நல்லதைப் பேசிப் பலனில்லை.. அது செயலிலும் வரவேண்டுமல்லவா?

    அதனால்தான், ‘இறைவனுக்குக் கையாக நீதி இருக்கிறது’ என்கிறார் கவியரசர்.

    வாய் வேதம் கை நீதி..

    இறைவனுக்கு அன்பே கண்ணாக இருக்கிறது.

    விழி அன்பு

    இறைவனின் வாய், கை, விழி என்று சொல்லி வந்த கவியரசர் இதுவரை இறைவனின் மொழி எது என்று சொல்லவில்லை..

    இறைவனின் மொழி  கருணை..

    மொழி கருணை

    இப்படி.. வாய், கை, கண் என்று வடிவம் கொண்டவனா இறைவன்?  என்று நாம் எண்ணிவிடக்கூடாது என்பதற்காக..வடிவாகி, முடிவற்ற.. என்கிறார் கவியரசர்.

    இறைவனுக்கு முடிவு கிடையாது.. எல்லாவற்றிற்கும் முதலாக இருப்பவன் இறைவன் என்று சொல்லி அழைக்கிறார்.. கண்ணதாசன்

    முதலான இறைவா!

    அடுத்து.. அருளை நாம் எப்படிப் பெறுவது?

    கூட்டமாகக் கூடித் துதி பாடி இறைவனை நெருங்கி தூபம் போட்டுக் காட்டி அவனை மயக்கி அவன் அருளை அடைந்துவிடலாம் என்றால் அது இயலுமா?

    துதிபாடும் கூட்டம் உன்னை நெருங்காதைய்யா.. வெறும்

    தூபத்தில் உன் இதயம் மயங்காதய்யா..

    எல்லோரையும் தவறாமல் ஆட்டிப்படைக்கும் விதி கூட, இறைவனை நெருங்காது.. நெருங்க முடியாது..

    விதி கூட உன் வடிவை நெருங்காதய்யா..

    இறைவனை அடைய என்ன வழி.. என்றால்..

    விணை வென்ற மனம் கொண்ட
    இனம் கண்டு துணை சென்று வென்ற தெய்வ மலர்

    இரு வினைகளை வென்ற, தூய்மையான மனம் கொண்ட நல்லவர்களை இனம் கண்டுகொள்ளவேண்டும்.  அவர்களைத் துணையாகக் கொண்டு .. பின்பற்றினால் இறைவன் அருள் கிடைத்துவிடும்.

    மேலும் ஒரு திரைப்படத்தில் நகைச்சுவைக் காட்சியாக மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட பாடல் ஒன்றிலும்கூட இவ்வளவு செய்திகள்.. கடவுள் பற்றிய விளக்கங்கள்.. அமைத்துத் தர முடியும் என்று அறியும்போது வியப்பின் விளம்பிற்குச் செல்லாதார் யார்?

    மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பாடியவர் – டி எம் செளந்திரராஜன் ..

    யாரைப் பாராட்டுவது என்று அறிய முடியவில்லை…

    tmsநடைபெறும் பரபரப்பான உலகில் எப்படி வாழ்ந்து மறைந்த கவிஞன் ஒருவரின் பாடல்களை எடுத்து இப்படி விளக்கங்கள் கொடுக்க முடிகிறது என்று நண்பர்கள் பல நேரம் என்னிடம் கேட்பதுண்டு.  வள்ளுவன் கூட வாழ்ந்து மறைந்தவன்தான்.. அவர் கருத்துக்கள் இன்றும் குறள் வடிவில் இவ்வுலகம் ஏற்றுக்கொள்ளவில்லையா? தமிழ்கூறும் நல்லுலகில் பல்வேறு கவிஞர்கள் அவ்வப்போது தோன்றி அரியபல கருத்துக்களை, வாழ்வின் அர்த்தங்களை நமக்குத் தருகின்றார்கள். அப்படி.. நாம் வாழ்கின்ற நூற்றாண்டில் நம் கண்முன்னே வாழ்ந்து மறைந்த மாபெரும் கவிஞரின் படைப்புகளில் உள்ள முத்துக்களைக் கண்டெடுக்கும்போது.. அதனை தமிழ்மக்கள் அறியத்தருவதை என் கடமையாகக் கருதுகிறேன்.

    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
    வாய் வேதம் கை மீறி விழி அன்பு மொழி கருணை
    கருணை…கருணை…கருணை…கருணை…
    வாய் வேதம் கை மீறி விழி அன்பு மொழி கருணை
    வடிவாகி முடிவற்ற முதலான இறைவன்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
    துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதய்யா
    வெறும் யூகத்தில் உன் இதயம் மயங்காதய்யா
    விதிக்கூட உன் வடிவை நெருங்காதய்யா
    விணை வென்ற மனம் கொண்ட
    இனம் கண்டு துணை சென்று வென்ற தெய்வ மலர்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    துதி பாடும் … துதி பாடும் … துதி பாடும் … துதி பாடும் …
    துதி பாடும் …துதி பாடும் …துதி பாடும் … பாடும் பாடும் டும் டும்..
    துதி பாடும் …

    திரைப்படம் – பலே பாண்டியா

    இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி

    பாடியவர் – டி எம் செளந்திரராஜன் மற்றும் வி.ராஜூ

    நீயே உனக்கு என்றும் நிகரானவன்

    இசை உலகில் 65 ஆண்டுகளாக அனுபவம் பெற்ற திரு. வி. ராஜூ அவர்கள் 84 வயதில் சமீபத்தில் இயற்கை எய்தினார். வீணை, மாண்டோலின், சிதார், சந்தூர் வாசிப்பதிலும் மற்றும் கொன்னக்கோல் சொல்வதிலும் வல்லவர். இந்த பாடலில் திரு எம். ஆர். ராதா அவர்களுக்கு ஜதி சொல்வது அவர் தான்.

    இந்தப் பாடல் “பலே பாண்டியா” என்ற படத்தில் வருகிறது. திரு. டி. எம். எஸ். அண்ணா அவர்கள் நடிகர் திலகத்துக்கும் பாடியிருப்பார். படக்காட்சியில் எம். ஆர். ராதா அவர்களின் சேஷ்டைகளை ரசிக்காதவர் எவரும் இருக்கமாட்டார்கள்.

    https://www.youtube.com/watch?v=b3ku7VgUi30

    Share
  • வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால் வேல்போல் இருக்குதடி…. கவிஞர் பூவை செங்குட்டுவன்

    காவிரி மைந்தன்

    அன்பர்களே! ஆன்மீக நண்பர்களே!

    அருந்தமிழ் விருந்துவைத்தால் அது ஆண்டவனுக்கே அமுதம் அளித்ததாய் கருதப்படும். அதுவும் முத்தமிழில் விருந்தல்லவா –  அழகன் முருகனுக்கே படைக்கின்றார் பாடலாசிரியர்!

    poovai senguttuvanஇந்தப் பாடலின் பல்லவி கற்பனையின் ஒரு சிகரம் என்றே களிப்போடு சொல்வேன்! எத்தனையோ கண்கள்  இதற்கு முன் முருகனது வேலின் வடிவத்தைக் கண்டிருக்கின்றன. எத்தனையோ கவிஞர்கள் பார்வையில் வேல் பட்டிருக்கிறது! எனினும் பட்டென்று தோன்றிய கற்பனை பூவை செங்குட்டுவனுக்குத்தானே!

    திரு.ராமச்சந்திரன் இசையின் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய இப்பாடல் பக்திரசம் வழியும் பாடல்!  கந்தன் பெருமை சொல்லும் கனிந்த மனமிங்கே எண்ணத்தில் தோன்றியதை எழுத்திலே  வடித்து ஒரு செந்தமிழ்க்கோலம் காட்டுவதைப் பாருங்கள்!

    முத்தமிழ் பிறந்தது எப்போது என்று இவரை எவரோ கேட்டிருப்பார் போலும்.. பாடலிலே பதிலுரைக்கிறார்  பாருங்கள்!

    சக்தியவள் தந்த வேலாயுதம் முத்தமிழ் முருகனுக்கு – அழகுக்கு அழகு சேர்க்கிறது! அதன் வடிவம் எண்ணித் தொடங்கிய இப்பாடல் சந்தம் சீர் மாறாமல் தமிழ் சதிராடி வருவதைப்போல் அதுவும் ‘கற்பூரம்’ திரைப்படத்திற்காக இப்பாடலை தீப ஆராதனை எனலாம்!

    வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்
    வேல்போல் இருக்குதடி
    வேல்கொண்டு நின்றவன் திருமுகம் பர்த்தால்
    பால்போல் தெரியுதடி

    vel

    கூவிடும் சேவல் கொடிமே லிருந்து
    விழித்திடச் சொல்லுதடி
    விழித்ததும் என்னை நினைத்திரு என்றவன்
    சொல்வது தெரியுதடி

    கந்தனின் கருணை மழைவரும் என்றே
    மாமயில் ஆடுதடி!
    மாமயில் விரித்த தோகையின் கண்கள்
    வேலனைத் தேடுதடி!

    முதன்முதல் இறைவன் திருவாய் திறந்தான்
    முத்தமிழ் பிறந்ததடி!
    முத்தமிழ் இன்பம் அனைத்திலும் முருகன்
    திருமுகம் தோன்றுதடி

    எப்போது பார்த்தாலும் சிரித்திருக்கும் – அது
    ஆறு முகங்களடி!
    எப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும் – அது
    பன்னிரு கைகளடி
    பாடல் ஆக்கம்: கவிஞர் திரு. பூவை செங்குட்டுவன்
    இசை: திரு. ராமச்சந்திரன்
    பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்

    Share
  • ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’, – கவிஞர் வாலி

    காவிரி மைந்தன்

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்‘, 

     என்கிற பல்லவி கடமையைக் குறிக்கவே எழுதப்பட்டிருந்தாலும்.. எம்.ஜி.ஆர் என்கிற மூன்றெழுத்தையும் குறிக்கிறதே!!

    புகழுக்குப் புகழ் சேர்க்க இப்பூமியில்  அவதரித்த புருஷர்களுள் பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும் ஒருவர் என்றே கருதுகிறேன்! அவரின் மனிதாபிமானம், கொடைத்தன்மை, விருந்தோம்பல், நற்குணங்களைப் பின்பற்றும் தன்மை, மக்கள்மீது கொண்டிருந்த பற்று, பாசம்..அவர்களிடம் காட்டிய பரிவு, வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்கிற பேராவல், இவைதான் ஒரு சரித்திர மனிதராய் எம்.ஜி.ஆரை உருமாற்றிற்று என்றால் அது மிகையில்லை!  மேலும் தாய்மீது எம்.ஜி.ஆர் கொண்டிருந்த பற்று என்பது தெய்வ பக்திக்கெல்லாம் இணையானது! அதுவே எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வழிகாட்டியாய் ஆன்மபலம்தந்து அடுத்தடுத்து வெற்றித் திருமகள் கட்டித்தழுவிடக் காரணமாய் அமைந்தது!

    MGR Vaali

    இவருக்காக பாடல் எழுதிய பெருமக்கள் வரிசை நீண்டிருக்க.. அதிலே யார் பாடல் எழுதினாலும் அந்த வரிகள் எம்.ஜி.ஆருக்கு பொருத்தமாய் அமைந்ததுடன்.. அவர் புகழை இன்னுமின்னும் உயர்த்திட வழிவகுத்தன! எம்.ஜி.ஆர் அவர்களுக்காக திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனம் சத்யா மூவிஸ் ஆகும்! இதிலே இடம்பெற்ற இப்பாடல்.. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்! பாடலின் பல்லவி தொட்டு பவனி வருகிற வரிகள் அனைத்திலும் கூறப்பட்டுள்ள சிந்தனைகள் மனித குலம் என்றைக்கும் மனதில் கொள்ள வேண்டியவை என்பதை எவர் மறுக்க முடியும்?

    கலைத்துறை என்பது மக்களை எளிதில் சென்றடைகிற ஊடகம் என்பதை முற்றிலும் உணர்ந்த எம்.ஜி.ஆர் அவர்கள் அதனை நல்ல கருத்துக்களைப் பரப்பவே பயன்படுத்த வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்திருக்கிறார்.  எம்.ஜி.ஆரின் கருத்துக்களை.. எண்ணங்களை உள்வாங்கிய கவிஞர்கள் வரிசையில் இதோ வாலி அவர்களின் வைர வரிகள்.. தெய்வத்தாய்க்காக.. மெல்லிசை மன்னரின் தக்கதோர் இசையமைப்பில் டி.எம்.செளந்திரராஜன் அவர்கள் குரலில்..

    “பதவி வரும்போது பணிவு வரவேண்டும்..

    துணிவும் வரவேண்டும் தோழா..”

    “நாளை உயிர்போகும்.. இன்று போனாலும்

    கொள்கை நிறைவேற்று தோழா..”

    deivaththaiமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்

    திரைப்படம்:தெய்வத்தாய்
    இசை:எம்.எஸ்.வி 
    பாடகர்கள்: டி.எம் செளந்தராஜன்
    இயற்றியவர்: கவிஞர் வாலி  

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
    அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
    கடமை அது கடமை
    கடமை அது கடமை
    அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
    அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்

    பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
    துணிவும் வரவேண்டும் தோழா
    பாதை தவறாமல் பண்பு குறையாமல்
    பழகி வரவேண்டும் தோழா
    பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
    துணிவும் வரவேண்டும் தோழா
    பாதை தவறாமல் பண்பு குறையாமல்
    பழகி வரவேண்டும் தோழா
    அன்பே உன் அன்னை
    அறிவே உன் தந்தை
    உலகே உன் கோவில்
    ஒன்றே உன் வேதம்

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
    அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
    கடமை அது கடமை
    கடமை அது கடமை

    வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
    கோழை குணம் மாற்று தோழா
    நாளை உயிர் போகும் இன்று போனாலும்
    கொள்கை நிறைவேற்று தோழா
    வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
    கோழை குணம் மாற்று தோழா
    நாளை உயிர் போகும் இன்று போனாலும்
    கொள்கை நிறைவேற்று தோழா
    அன்பே உன் அன்னை
    அறிவே உன் தந்தை
    உலகே உன் கோவில்
    ஒன்றே உன் வேதம்

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
    அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
    கடமை அது கடமை
    கடமை அது கடமை

    http://www.youtube.com/watch?v=izPbQMhpnBc

    Share
  • அத்தைமடி மெத்தையடி..

    காவிரி மைந்தன்

    அம்மாவின் மடியில் கண்ணுறங்கும் குழந்தை.. அவள் தரும் தாலாட்டில் தானுறங்கும் என்பது எல்லோரும் அறிந்தது!  ஆனால் அதற்கு இணையாக.. அத்தை என்னும் உறவும்கூட அக்குழந்தையை தாலாட்டுவதில் பங்குபெறுகிறது என்பதை இப்பாடல் மூலம் தெளிவுபடுத்தும் கவிஞரின் கைவண்ணம் போற்றத்தக்கது!

    நான் குழந்தையாய் இருந்தபோது.. என் தம்பிக்கு தாலாட்டு பாடிய போதெல்லாம் இப்பாடல் என் தாயாரால் பாடப்பட்டது மட்டுமின்றி விவரம்தெரிந்த நாளில் என் தாய் பாட.. ஒரு அலுமினிய தட்டை வைத்துக்கொண்டு நான் தாளம் போட.. வாழ்க்கையோடு வசியப்பட்ட பாட்டு.. அடிக்கடி உச்சரித்து உள்ளம் மகிழ்ந்திடும் பாட்டு!

    கற்பகம் திரைப்படத்திற்காக வாலி அவர்கள் வரைந்த கீதமிது!  பி.சுசீலா என்கிற தென்றல் உள்ளம் வருட பாடிய பாட்டு!  விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரின் இசையில் .. அனைவரும் மயங்கும் பாட்டு!!

    கற்பனையில் கவிஞரின் சிந்தனை எத்தனை அழகாய் விளையாடுகிறது பாருங்கள்!  தாலாட்டு கீதம் என்பதால் காலங்களைக் கடந்து ஒவ்வொரு வீட்டிலும்.. ஒவ்வொரு தொட்டிலிலும் உறவாடும் பாடலாய்.. நம் உள்ளம் தொடும் பாடலாய்.. வழங்கிய வாலியை வாழ்த்தலாமே!!

    http://www.youtube.com/watch?v=T6XAdv2DIEo

    அத்தை மடி மெத்தையடி

    k.r..v..

    அத்தை மடி மெத்தையடி
    ஆடி விளையாடம்மா
    ஆடும் வரை ஆடி விட்டு
    அல்லி விழி மூடம்மா

    அத்தை மடி மெத்தையடி…
    ஆடி விளையாடம்மா
    ஆடும் வரை ஆடி விட்டு
    அல்லி விழி மூடம்மா
    அத்தை மடி மெத்தையடீ.

    மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி
    முல்லை மல்லிகை மெத்தையிட்டு
    தேன் குயில் கூட்டம் பண் பாடும்
    மான் குட்டி கேட்டு கண் மூடும்
    அதை மான் குட்டி கேட்டு கண் மூடும்

    ம்ம்ம்.. அத்தை மடி மெத்தையடி
    ஆடி விளையாடம்மா
    ஆடும் வரை ஆடி விட்டு
    அல்லி விழி மூடம்மா
    அத்தை மடி மெத்தையடீ…

    வேறோர் தெய்வத்தை போற்றவில்லை
    வேறோர் தீபத்தை ஏற்றவில்லை

    வேறோர் தெய்வத்தை போற்றவில்லை
    வேறோர் தீபத்தை ஏற்றவில்லை

    அன்றோர் கோயிலை ஆக்கி வைத்தேன்
    அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்
    அதில் அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்

    அத்தை மடி மெத்தையடி
    ஆடி விளையாடம்மா
    ஆடும் வரை ஆடி விட்டு
    அல்லி விழி மூடம்மா
    அத்தை மடி மெத்தையடி

    பாடல்அத்தை மடி மெத்தையடி
    திரைப்படம்கற்பகம் (1963)
    இசைஎம்.எஸ்வி & டி.கேராமமூர்த்தி
    பாடியவர்பி.சுசீலா
    வரிகள்வாலி

    Share
  • அம்மானை அழகுமிகும் கண்மானை

    காவிரி மைந்தன்

    தமிழ் இலக்கியத்தில் அம்மானை என்கிற விளையாட்டு அதுவும் பெண்கள் மட்டுமே விளையாடும் விளையாட்டு மிகவும் பிரபலம்!  தோழியரிடையே போட்டிகள் நடக்கும்! அறிவும் இதிலே இணைந்து சிரிக்கும்!  கவிதைநயமும் இருபொருள்படும்படி சிலேடை நயமும் எனத் துள்ளிவரும் என்பதால் ஆடுவோர் மட்டுமின்றி ஆட்டத்தை ரசிப்பவர்களும் சுவை பெறுகின்ற விளையாட்டாகும்!

     amaaanai

    இதுவே பிற்காலத்தில் புதிர் விடுவிக்கும் போட்டியாக மாறியது என்று கூட தோன்றுகிறது!  புதிர் விடுவிப்பதில் ஆண்களும் பெண்களும் கலந்து பங்கேற்பது அம்மானை ஆட்டத்திலிருந்து வேறுபட்டதாகும்!

    அவன் ஒரு சரித்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடிகை மஞ்சுளா திரையில் தோன்ற பின்னணி குரல்களாக டி.எம்.செளந்திரராஜன், வாணி ஜெயராம்.. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அமைத்த இசையில் முழங்கும் காதல் பாடல்!  நாகரீக வார்த்தைகள் மட்டுமின்றி சங்கத்தமிழ் இன்பத்தமிழாக வழிகிறது பாருங்கள்!!

    வண்ணத்தமிழில் காதல்கனிரசம் கொட்டுகிற பாடலிது! கவியரசு கண்ணதாசன் எழுதிய திரைப்பாடல்களில் இலக்கிய நயங்கள் மிளிருகின்ற பாடல்களில் இது முக்கிய இடம்வகிக்கிறது! அன்பின் பரிமாணம் அழகுடன் சங்கமிக்கும் இருவரின் உள்ளங்களும் ஒன்றெனக் கலந்திருக்க.. இன்பராஜ்ஜியத்தில் இசையல்லவா மீட்டியெடுக்கிறது!

    இயற்கை எழில்கொஞ்சும் சூழல்களில் இதயம்குளிர்விக்கும் பாடல் கேட்க இந்தப் பாடலைக் கேட்கலாமே!

    vaanijeyaramஅம்மானை
    அழகுமிகும் கண்மானை
    ஆடிவரும் பெண்மானை
    தேடிவரும் பெருமானை
    தேடிவரும் பெருமானை

    நம்பிய பெண் ஒரு தாரகை
    அவள் நாடிய நீ ஒரு வானகம்
    நம்பிய பெண் ஒரு தாரகை
    அவள் நாடிய நீ ஒரு வானகம்
    விண்ணகம் மாறிய போதிலும்
    இந்தப் பெண்ணகம் மாறுவதில்லையே
    விண்ணகம் மாறிய போதிலும்
    இந்தப் பெண்ணகம் மாறுவதில்லையே

    அம்மானை
    அழகுமிகும் கண்மானை
    ஆடிவரும் பெண்மானை
    தேடிவரும் பெருமானை
    தேடிவரும் பெருமானை

    பாலினுள் மறைந்துள்ள சுவையென
    விழி பளிங்கினுள் மறைந்தது உன் முகம்
    பாலினுள் மறைந்துள்ள சுவையென
    விழி பளிங்கினுள் மறைந்தது உன் முகம்

    ஆழியில் மறைந்துள்ள மணியென
    உன் ஆசையில்
    மறைந்துளதென் மனம்
    ஆழியில் மறைந்துள்ள மணியென
    உன் ஆசையில்
    மறைந்துளதென் மனம்

    கன்னியின் நால்வகை சாத்திரம்
    தன் காதலன் கண்களில் மாத்திரம்
    உன்னிடம் நான் ஒரு பாத்திரம்
    அதில் ஊற்றிய தேன்மழை உன் முகம்
    உன்னிடம் நான் ஒரு பாத்திரம்
    அதில் ஊற்றிய தேன்மழை உன் முகம்

    அம்மானை
    அழகுமிகும் கண்மானை
    ஆடிவரும் பெண்மானை
    தேடிவரும் பெருமானை
    தேடிவரும் பெருமானை

    பொன்னிற வண்டுகள் பாடின
    அவை பூவெனும் மெத்தையில் கூடின
    என்னிரு கண்களும் தேடின
    அவை ஏக்கத்தில் உன்னிடம் ஓடின

    மங்கலச் சங்குகள் அழைத்தன
    இரு மந்திர முல்லைகள் இழுத்தன
    உன்னுடன் உடல் உயிர் கலந்தன
    இங்கு ஒன்றுமில்லை இனி எனக்கென

    அம்மானை
    அழகுமிகும் கண்மானை
    ஆடிவரும் பெண்மானை
    தேடிவரும் பெருமானை
    தேடிவரும் பெருமானை

    http://www.youtube.com/watch?v=RMqFp9rzqVM

    Share
  • ஏழு ஸ்வரங்களுக்குள் 

    காவிரி மைந்தன்

    காலச் சக்கரத்தின் பற்கள் வினாக்களால் ஆனவை போலும்.  பிறப்பு முதல் இறப்பு வரை இந்த வினாத் தொடர் நம்மை விடுவதேயில்லை.  கடமை என்கிற காரியங்கள் நடக்கும்.  காலை முதல் இரவு வரை வினாக்களும் விழிக்கின்றன. பத்திரிக்கைகளின் தலைப்பு செய்திகள் எப்படி பரபரப்பை ஏற்படுத்துகின்றனவே அதைவிட பல மடங்கு மனதில் பதிப்பாகும்.  தினசரி வினாக்கள் எத்தனை? எத்தனை?  விடைதேடி அலைவதற்குத் தானே பொழுதே விடிகிறது!  அன்றைய பிரச்சினையை சமாளிப்பதும் அல்லது சந்திப்பதும் நடக்கும்போதே நாளைய கேள்வி நம்மைத் தாக்கும். என்ன செய்யப்போகிறாய்?  எப்படிச்  செய்யப்போகிறாய்?  உன்னால் முடியுமா? செய்யத்தான் வேண்டுமா?  என்று பல துணைக் கேள்விகளும் மனதிற்குள் ஒன்றன்பின் ஒன்றாய் ஒவ்வொரு நாளும் துள்ளி குதிக்கின்றன. இருதியிட்டுச் சொல்வதும்.. தீர்மானிப்பதும் எப்போதும் இலகுவாக இருப்பதில்லை.  இதனால்தான்,  மனச்சுமைகூடி மனிதன் தடுமாறுகிறான்.

     24-1419408252-balachender66-79

    ஏழே ஏழு ஸ்வரங்கள்தான்.   இதிலிருந்து பிறக்கும் ராகங்கள் பல. அதேபோல் இதயச் சுரங்கத்துள் எத்தனை எத்தனைக் கேள்விகள் எழுகின்றன.. கண்ணதாசனின் ஆழ்மனம் எழுதிய வரிகள் இவை என்றே நேசிக்கிறேன்.  வாழ்க்கையை பக்கம் பக்கம் படித்துப் பார்த்திட இவ்வரிகளை வாசிக்கிறேன்.

    மெல்லிசை மன்னரின் சங்கீத சாகரத்தில் சங்கீத வாணிதிருமதி வாணிஜெயராம் பாடிய பாடலிது.  பாலச்சந்தர் படங்களுக்கு பாடல் எழுதுவது என்பது இனிய அனுபவம் என்று கண்ணதாசன் கனிந்துருகிச் சொன்னதை நினைவூட்ட விரும்புகிறேன்.

    இயக்குனரது பார்வை எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதை தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் நிரூபித்த தாதா சாஹிப் பால்கே விருது பெற்ற கே.பாலச்சந்தர் .. அமரத்துவம் பெற்றாலும் அவரது படைப்புகள் ஒவ்வொன்றாலும் அவரின் பதிவுகள் இந்த பூமியில் நிலைபெறும். அபூர்வ ராகங்கள் என்னும் திரைப்படத்தில் கற்பனைக்கு எட்டாத கதையமைப்பைக் கொண்டு அதற்கேற்ற இசை.. பாடல்கள் என்று கூட்டி..  நமக்கெல்லாம் புதுமை விருந்தளித்த இயக்குனர் சிகரத்திற்கு .. இந்தப் பாடல் சமர்ப்பணம்…

     62361_286344071491105_1020548492_n

    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் –

    இயக்கம் – இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர்

    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

    பாடல் – கவியரசு கண்ணதாசன்

    திரைப்படம்: அபூர்வ ராகங்கள்

    பாடியவர்: வாணி ஜெயராம்

    ஆ……… ஆ………..
    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
    இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
    இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
    காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
    காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும்
    கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
    கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் (ஏழு)

    காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி ஆ…..
    காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி – அது
    கையில் கிடைத்த பினனும் துடிக்குது ஆவி
    கையில் கிடைத்த பினனும் துடிக்குது ஆவி
    ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்
    ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் – மனிதன்
    இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
    இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் (ஏழு)

    vaanijeyaramஎனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் ஆ………
    எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் – நீ
    எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
    நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு – அதை
    நமக்காக நம் கையால் செய்வது நன்று
    நமக்காக நம் கையால் செய்வது நன்று

    ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை ஆ………
    ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை – என்றும்
    அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
    பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
    பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் – அதில்
    பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாபம்

    நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க – அதை
    நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
    நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க – அதை
    நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
    வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
    வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க – எந்த
    வேதனையும் மாறும் மேகத்தைப் போல
    வேதனையும் மாறும் மேகத்தைப் போல

    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
    இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
    காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும்
    கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

    http://www.youtube.com/watch?v=csnyfoXugdE

    Share
  • புதியதோர் உலகம் செய்வோம்!

    காவிரி மைந்தன்

    BHARATHIDASANபுதுவைதந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இயற்றிய கவிதை வரிகள் .. திரைப்படத்திற்காக கையாளப்படும்போது பாடல் வரிகளாக மாறின! இந்தப் பாடலை எம்.ஜி.ஆர் அவர்கள் இரண்டு முறை பயன்படுத்தியிருக்கிறார்!  ஆம்.. சந்திரோதயம் திரைப்படத்திலும்.. பல்லாண்டு வாழ்க என்னும் திரையோவியத்திலும்.. சந்திரோதயம் திரைப்படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களால் பாடப்பட்ட இப்பாடல் பெற்ற வடிவம் வேறு!  பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.செளந்திரராஜன் பாடிய இப்பாடல் பெற்ற வடிவம் வேறு! ஆக மொத்தம் பாரதிதாசனின் பாடல் ஒன்றிற்கு இசை வடிவங்கள் வெவ்வாறாக அமைந்தபோதும் இரண்டும் வெற்றி பெற்றதை இங்கே குறித்தாக வேண்டும்!

    யுகங்களில் வாழும் கவிஞர்களின் எண்ணங்கள்.. குறுகிய அளவில் இல்லாமல்.. அடுத்தத் தலைமுறைகளையும் எண்ணும் எண்ணமே மிகச் சிறந்தது!  அதுவும் புதிய தலைமுறைக்காக கவிஞரின் நெஞ்சம் பூபாளமிசைத்திருக்கிறது பாருங்கள்! புதியதோர் உலகம் செய்வோம் என்று அவரின் சிந்தனை வீச்சு பற்றி மக்கள் எங்கும் பேச்சு!

    புரட்சியின் விளைவுகளாய் ஏற்படும் நன்மைகளின் பட்டியல் பாடலாகிறது! புரட்சித்தலைவர் பாடும் கொள்கை முழக்கத்திற்கு ஊட்டம் கிடைக்கிறது! பொதுவுடைமைக் கொள்கைக்கு ஊட்டம் தரும் உணர்ச்சிமிகு வரிகளால் சமுதாய அக்கறையின் வெளிப்பாடாய் உயர்வுக்கு என்ன வழிகள் என்கிற உத்திகளும் உள்ளடக்கி புதிய உலா வருகிற பாடலாய்.. ஆம்.. விடிவெள்ளிப் பாடலாய்!

    PURATCHIபுதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
    போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.

    பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
    புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்.

    இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
    ‘இது எனதெ’ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்

    உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
    ஒருபொருள்தனி’எனும் மனிதரைச் சிரிப்போம்!

    இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
    ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்

     “புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
    போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
    பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
    புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம்
    இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம்
    இதுஎனதென்றுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்”. – பாரதிதாசன்

    Share
  • நீ.. இயக்குனர் சிகரம் மட்டுமல்ல.. இயக்குனர்களில் சிகரம்!

    காவிரி மைந்தன்

    நீ..

    இயக்குனர் சிகரம் மட்டுமல்ல..

    இயக்குனர்களில் சிகரம்!

     k.balachander

    அகரமுதல எழுத்தெல்லாம் என்று ஆரம்பிக்கும் உன் திரைப்பட ஒலி..

    ஆண்டுகள் பலவாய் தமிழகத்தில் வலம்வந்த திருப்பெயர் பாலச்சந்தர்!

    சூப்பர் ஸ்டாரையே உருவாக்கிய பிரம்மா நீதான்!

    உலக நாயகனின் விஸ்வரூபத்திற்கு மூலம் நீதான்!

    மனதில் உறுதி வேண்டும் என்று எங்கள் மனதில் விதைத்தவன் நீதான்!

    வறுமையின் நிறம் சிவப்பு என்று திரையில் கவிதை எழுதியவன் நீதான்!

    மன்மதலீலை என்னும் திரைப்படத்தை மறக்கத்தான் முடியுமா?

    சொல்லத்தான் நினைக்கிறேன் என்று சொன்னால் அங்கும் நீதான்!

    நினைத்தாலே இனிக்கும் என்கிற பல்லவி உனக்கல்லவா பொருந்தும்!

    அவள் ஒரு தொடர்கதை என்று ஒரு பெண்ணின் அவலத்தைத்

    திரையில் சொன்னவன் நீயல்லவா?  மூன்று முடிச்சு .. அவர்கள்

    என்று எதிர்நீச்சலிட்டவன் நீதானே!  நாடகத்துறையில் தடம்பதித்து

    திரைத்துறையில் சாதனைகளை எட்டியவன் நீ!  தமிழ்த்திரையில் ஒரு இயக்குனருக்காக ரசிகர்கள் உருவானது முதலில் உனக்குத்தானே!

    பாமா விஜயம்.. தில்லுமுல்லு என்று நகைச்சுவையோடு நல்லபடங்கள்

    தந்தவன் நீ என்பதால் .. எங்களுக்குத் தீபாவளி உன் படம்வந்தால்தான்!

    சிந்துபைரவி முதலான முத்திரைபதித்த படங்களின் மூலகர்த்தாவே..

    உன் அனேக கதைகள் அபூர்வ ராகங்கள்.. தப்புத்தாளங்கள் என்றாலும் அரங்கேற்றம் ஆனவுடன் அவை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையே!

    ‘தெய்வத்தாய்’ திரைப்படத்தில்  எழுதத் தொடங்கிய திரைச் சரித்திரமே!

    நீர்க்குமிழியில் தொடங்கிய உன் இயக்குனர் பயணம்..  வெற்றிகளின் விலாசம் என்றால் கவிதாலயா என்றும்.. அதற்கு முன்னர் கலாகேந்திரா என்றும்தானே அறியப்பட்டது!  நெற்றிக்கண் வரை நீ தொட்ட பாத்திரங்கள் இன்றும் எங்கள் மனதில் நிலைநிறுத்தப்பட்டிருக்க.. இந்தச் சமுதாயத்தில் பிறர் சொல்லத் தயங்குகிற விஷயத்தையே கதையின் கருவாக்கி.. அதையே திரைப்படமாய் உருவாக்கி நிழல்களை எல்லாம் நிஜமாய் காட்டியவனே!

    உனது பயணத்தில் மிளிராத நடிகரும் இல்லை.. நடிகையும் இல்லை..

    எத்தனையோ பேர்களை அறிமுகம் தந்தாய்.. இல்லை அவதாரம் தந்தாய்! அதில் ஒருவர்கூட சோடைபோனதில்லை!  எங்களின் பிதாமகன் நீ என்றுதான் இயக்குனர்கள் வரிசையில் நின்று உன்னை தரிசித்தனர்!

    கவியரசு கண்ணதாசன் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

    இருவருமே உனக்கு இரு கண்கள்.. இவர்களோடு கூட்டணியமைத்து

    எத்தனை முறை மக்கள் சபையில் அமோக வெற்றி பெற்றாய்!

    தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு முதல் வான் நிலா..நிலா.. அல்ல..

    உன் வாலிபம் நிலா வரை நீங்கள் தொட்ட பாடல்கள் எல்லாம் சூப்பர்ஹிட்!

    சிப்பியிருக்குது முத்துமிருக்குது.. பாடல் இசையும் கவிதையும் எப்படி இணைசேருகின்றன என்பதை பாமரனுக்குப் புரியவைத்ததும்..

    அபூர்வ ராகங்களில் இறுதிக்காட்சியையே பாடலாக்கித் தந்ததும்

    அடுத்த பிறவியிலா இனி நீ செய்துகாட்டப் போகிறாய்?

    நீ வாழ்ந்த நாட்களில் உனது ரசிகனாக திரைக்கொட்டகையில் அமர்ந்து கைதட்டி ரசித்து.. அறிவுபூர்வமான இயக்குனர் ‘டச்’களை அனுபவித்தோமே.. எதை எண்ணி இன்று அழ! இன்று உன் இறுதிமூச்சு அடங்கியது என்றார்கள்..

    balachanderதமிழ்திரையில் நீ போட்டுவைத்திருக்கும் கோலங்கள் சினிமா என்பது இருக்கும்வரை பேசப்படும்! நாளைய இயக்குனர்களுக்கு பாதைவகுத்தவன் நீ என்பதை வரலாறு எழுதிவைத்திருக்கிறது! விண்ணுலகம் செல்லும் நீ கவியரசோடு கலந்து கதை சொல்லிக் காட்டு! அவர் கவிதையெழுதி நீட்டுவார்!

    உம்மை நாங்கள் நடத்திய இருபெரும்விழாக்களில் பங்கேற்கச் செய்த பெருமை இப்பிறவியில் யாம் பெற்ற பேரின்பமாய் கருதுவோம்! (1994 & 2003)..

    கவியரசு கண்ணதாசன் விருது உங்களுக்கு யாம் தந்ததும் உண்டு.. 1994..

    உன் கையால் கே.ஜே.யேசுதாஸுக்கும்.. சரோஜாதேவிக்கும்..

    டி.ஆர்.பாப்பாவிற்கும் கண்ணதாசன் விருதுகள் வழங்கியதும் உண்டு (2003)

    இதுவெல்லாம் தெய்வ சங்கல்பம்!  இறைவனின் விருப்பம்!

    இமைகளை நனைக்கிற விழிநீரை நிறுத்திட இன்று இயலவில்லை..

    திரைமொழி எங்களுக்குச் சொல்லித்தந்தவனே.. உன் ஆன்மா நிம்மதியின் சன்னதியில் சேரட்டும்!  ஆத்மதிருப்தியுடன் விடைபெற்றாய்.. இந்த உலகில் பிறந்ததன் பயனை பொன்னெழுத்துக்களில் எழுதிவிட்டு!!

    அன்புடன்

    காவிரிமைந்தன்   எம்.கே.மணி.. ஏ.கே. நாகராஜன்   அ.நாகப்பன்

    ந.கோபி..  அப்துல்சலாம்  செ.ரவீந்திரன்..  வே.முரளி.. கே.ஜெகன்னாதன்

    வித்யா ஜெகன்னாதன்.. கண்ணன் சேகர்.. கே. சுந்தர்

    மற்றும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் (பம்மல்)

    சென்னை 600 075

    Share
  • நீ எங்கே என் நினைவுகள் அங்கே..

    காவிரி மைந்தன்

    அன்பின் பரிவர்த்தனை காதல் எனச் சொன்னால்… அங்கு நினைவின் அலைகளுக்கு என்றைக்கும் ஓயவில்லை. தன்னை நினைந்துருகும் இன்னொரு நெஞ்சத்திடம் தஞ்சம் அடைவதையே என்றும் விரும்பி நிற்கும்!  யுகங்கள் பல மாறினாலும் இதயங்கள் இடம் மாறி இப்படித் துடிப்பது காதலிலே மட்டும் என்பதில் மாற்றமில்லை!

    என்னை நினைத்தீர்களா என்று அவள் கேட்டதற்கு .. மறந்தால்தானே நினைப்பதற்கு என்று கவிஞர்கள் வரிந்துகட்டி வென்று விடுவார்கள்!  திரைப்பட்டிலே சொல்வதென்பதும்  இசையமைப்போடு சொல்ல வருவதும் சுகமானது அல்லவா?  நெஞ்சத்தின் வலியோடு பிரிவைத் தாளாமல் காதலன் பாடுவதோ.. காதலி பாடுவதோ நம்  உள்ளத்தைத் தொடாமல் எப்படிப் போகும்?  ஒரே பாடல் நான்கு வகையான மேட்டுக்களோடு ஒரே திரைப்படத்தில் இடம்பெற்ற வரலாறு  இப்பாடலுக்கே உண்டு..  ஆம்.. கவிஞர் வாலி  அவர்கள் இயற்றி அமரர் எஸ்.எம்.சுப்பையா நாய்டு இசை அமைத்த மன்னிப்பு.. திரைப்படப் பாடலிது!

    டி எம்.எஸ்.  பி.சுசீலா குரல்களில் தனித்தனியாக நம் அடிமனதை வருடிச் செல்லும் ஜீவனுள்ள பாடலாய் காலங்களை வென்று நிற்கிறது…

    mannippu

    பாடல்: நீ எங்கே என் நினைவுகள் அங்கே
    திரைப்படம்: மன்னிப்பு
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: வாலி
    இசை: எஸ். எம். சுப்பையா நாயுடு
    ஆண்டு: 1969

    நீ எங்கே என் நினைவுகள் அங்கே என் நினைவுகள் அங்கே
    நீ எங்கே என் நினைவுகள் அங்கே நீ எங்கே என் நினைவுகள் அங்கே
    நீ ஒரு நாள் வரும் வரையில் நீ ஒரு நாள் வரும் வரையில்
    நான் இருப்பேன் நதிக்கரையில் நீ எங்கே என் நினைவுகள் அங்கே

    பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனமல்லவா?
    பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனமல்லவா?
    ஆயிரம் காலம் ஆனபின்னாலும் வாழும் காதல் உறவல்லவா?

    நீ எங்கே என் நினைவுகள் அங்கே
    நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில்
    நீ எங்கே என் நினைவுகள் அங்கே

    நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு
    நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு
    ஆசை நிலவும் காதல் மலரும் காலங்கள் தோறும் வளர்வதுண்டு

    நீ எங்கே என் நினைவுகள் அங்கே
    நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில்
    நீ எங்கே என் நினைவுகள் அங்கே

    http://www.youtube.com/watch?v=Nmbx3CADL8I

    Share
  • தாமரைக் கன்னங்கள்..

     காவிரி மைந்தன்

    எண்ணங்களைப் பதிவு செய்ய எழுத்து கைகொடுக்கிறது! அதைப்பல வண்ணம்கலந்து சொல்வதுதான் கவிதை!  இது மொழியின் நாகரீக அடையாளம்!  வரம்பில்லாத உச்சம்!  காலம் காலமாக.. எழுதப்பட்டு வந்தாலும் இன்னுமிருக்கிறது மிச்சம்! அன்றுதொட்டு அழகுணர்வு கவிதையின் அச்சாரமாய் விளங்கி வருகிறது!  சொல்லும் பாவனையும் சொற்களின் பயன்பாடும் ஒன்றிணையும்போது வித்தகமாய் விளைந்துவிடுகிறது கவிதை! அதைச் செப்புகின்ற பாவலனின் மனவளம், கற்பனா சக்தி, கவித்துவத்திறன் இவைகளால் கவனரதம் நகர்கிறது!

    vaali nagesh

    பெண்களின் கண்களிலே விழுந்து.. அதைக் கடந்து செல்ல முடியாத கவிஞர்களுக்கு மத்தியில் பல்லவியிலேயே ‘தாமரைக் கன்னங்கள்’ என்று அசத்தியிருக்கிறாரே.. வாலி!  தமிழின் இனிமையெல்லாம் தாரளாமாக்கி – தன்வசப்படுத்தும் வித்தை அறிந்த ஞானி!  எப்படி இப்படி எனக்கேட்டால் தான் ஒரு தமிழ்த்தோணி என்று இயைபுநலம் காட்டிய பெருந்தகை! ஆழ்மனதிலும் அடிநாதமாய் அற்புதத் தமிழ்ச்சுரங்கம் கொண்டுவிளங்கிய கவிஞரின் கைவண்ணத்தில் எதிர்நீச்சல் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலிது!

    balachander

    இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் நாகேஷ் கதாபாத்திரம் ஏற்று நடித்த இப்படமும்.. இப்பாடலும் மக்கள் மனதில் என்றும் நிலைத்தவை! அன்றைக்கே கறுப்பு வெள்ளையில் கிராபிக்ஸ் யுக்தியைக் கொண்டு பதிவான படப்பாடல்!!

    ஆ..ஆ… ம்ம்….ம்ம்ம்ம்…
    ஆ…ஆ… ம்ம்… ம்ம்ம்ம்….
    தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
    தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
    எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
    பொங்கிடும் எண்ணங்கள்..
    மாலையில் சந்தித்தேன்  மையலில்  சிந்தித்தேன்
    மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
    மங்கை நான் கன்னித்தேன்
    காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
    கைகளை மன்னித்தேன்
    மாலையில் சந்தித்தேன்…..

    ethirneechalllகொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
    ஆ..ஆ..ஆ…
    முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
    ஆ..ஆ…
    கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
    ஆ..ஆ..ஆ..
    முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
    ஆ..ஆ…..ஆ..
    துயில் கொண்ட வேளையிலே குளிர் கண்ட மேனியிலே
    துணை வந்து சேரும்போது சொல்லவோ இன்பங்கள்

    மாலையில் சந்தித்தேன் மையலில்  சிந்தித்தேன்
    மாலையில் சந்தித்தேன்  மையலில்  சிந்தித்தேன்
    மங்கை நான் கன்னித்தேன்
    காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
    கைகளை மன்னித்தேன்

    ஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ
    நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ
    ஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ
    நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ
    சுமை கொண்ட பூங்கொடியின் சுவை கொண்ட தேன் கனியை
    உடை கொண்டு மூடும்போது ..
    உறங்குமோ உன்னழகு..

    தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
    எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
    பொங்கிடும் எண்ணங்கள்..
    மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
    மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
    மங்கை நான் கன்னித்தேன்
    காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
    கைகளை மன்னித்தேன்

    வி.குமார் இசையில் கவிஞர் வாலியின் பாடல்!  பி.பி.சீனிவாஸ் மற்றும் பி.சுசீலாவின் குரல்களில் ஒரு தேனமுதம்!!

    http://www.youtube.com/watch?v=PzQ-ICRm3h4

    Share
  • சின்ன சின்ன நடை நடந்து… பி.கே. முத்துசாமி – கே.வி.மகாதேவன்

    காவிரி மைந்தன்

    இதயம் தொடுகின்ற பாடல்களை இன்னிசைப் பாடல்கள் என்று சொல்கிறோம்! இசையுடன் கவிதை கைகோர்த்து வரும் அழகை எண்ணி எண்ணி மகிழ்கிறோம்! ஒரு சில பாடல்களில் பாடல் வரிகள் முன்னணியில் அமைகின்றன!  இன்னும் சில பாடல்களில் இசை நம்மை வசமாக்குகிறது!  இரண்டையும் பின்னிறுத்தி.. பாடிய குரல்கள் பரவசம் காட்டிவிடுகின்றன!  இவையெல்லாம் திரைக்குப் பின்னால் அமைகிற காரணிகள்.. திரையில் தோன்றும் நட்சத்திரங்கள் பாடலுக்கு ஒளிவடிவம் தந்து நம் கருத்தில் பதிந்துவிடுகின்றனர்!  பி.கே. முத்துசாமி அவர்கள் இயற்றிய பாடலுக்கு இசை வடிவம்..  திரையிசைத் திலகம் கே. வி. மகாதேவன்…திரையில் நட்சத்திரங்கள்.. வளையாபதி முத்துக்கிருஷ்ணன் மற்றும் சௌகார் ஜானகி.  ஏ கே. வேலன் இயக்கத்தில் உருவான திரைப்படம்..

    பழைய பாடல்கள் என்கிற பெயரைச் சுமந்தாலும் இனிய பாடல்கள் என்றால் இன்றும் அவைதானே என்பது எல்லோரும் அறிந்த ஒன்று!  பட்டியலிட்டுப் பார்த்தால் ஒரு பெளர்ணமி வெளிச்சம் கிடைக்கும் அழகிய பாடல்களின் அணிவகுப்பு.. வகைவகையாய் வளர்ந்திடும் அன்பை.. பாசத்தை.. நேசத்தை.. நெஞ்சில் ஏந்தி வரும் பேரழகை.. குறிப்பாக சிறுமழலையைத் தாலாட்டும் பாடல்கள் சிற்றிலக்கியம்போல புகழ்பெற்றுவிடுகின்றன!

     kalyaniyin kanavan

    ‘கல்யாணியின் கணவன்’ என்கிற திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் இன்னிசைப்பண்ணாக இதயத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.  குறிப்பாக திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையமைப்பில்.. இந்த வரிகள்

    அம்மாவென்று நீ அழைத்தால் அமுத கானம் பொழியுமடா

    என்று இன்பத்தேனை பொழிகின்றது!

    கட்டித்தங்க மேனிகொண்டு கண்கள் இரண்டும் கருணையென்று தத்தித்தத்தித் தவழும்மழலை.. முதன்முதலாய் அம்மா என்று அழைக்கும் நொடிதானே.. தாயின் நெஞ்சில் பால்வார்க்கும்! வாழ்வில் இனிமை தான்கூட்டும்!  அள்ளிமகிழும் பிள்ளைநிலாவை.. அரவணைத்து ஆசையுடனே.. கொஞ்சிடும் தாயின் அன்பினிலே எல்லையெங்கே?  எல்லாம் நீயடா என்பதன்றி வேறு என்ன சொல்ல? பாசம் என்கிற வார்த்தைக்கு இறைவன் அளித்த அர்த்தங்கள் முழுமையாய் புரிவது பால்மழலை சிந்தும் சொற்களிலேதானே!

    இதயத்தைத் தழுவிக்கிடக்கும் இப்பாடல் பி.சுசீலாவின் குரலில் வருகிறது கேளுங்கள்!  கண்கள் மயங்க யாரோ கவிதை சொன்தைப் போலிருக்கும்!  வயதை மறந்து நாமும் கூட குழந்தையாகும் மந்திரம் இந்தப் பாடலில் உள்ளது!  அமுதம் என்பது இதுவன்றி வேறெப்படி இருக்க முடியும்?

    ke.vi.em.

    சின்ன சின்ன நடை நடந்து

    செம்பவள வாய் திறந்து

    சின்ன சின்ன நடை நடந்து

    செம்பவள வாய் திறந்து

    அம்மாவென்று நீ அழைத்தால்

    அமுத கானம் பொழியுமடா

    அமுத கானம் பொழியுமடா

    ஆடி வரும் தென்றல் என்பார்

    பாடி வரும் அருவி என்பார்

    ஆடி வரும் தென்றல் என்பார்

    பாடி வரும் அருவி என்பார்

    தேடி வரும் செல்வம் உன் போல்

    தெய்வம் வேறு இல்லையடா

    தேடி வரும் செல்வம் உன் போல்

    தெய்வம் வேறு இல்லையடா

    கொஞ்சும் அழகை கேட்கையிலே

    குழலும் யாழும் பொய்யன்றோ

    கொஞ்சும் அழகை கேட்கையிலே

    குழலும் யாழும் பொய்யன்றோ

    sowcar

    மேவும் தமிழே உன்னையன்றி

    வேறு சொந்தம் இல்லையடா

    மேவும் தமிழே உன்னையன்றி

    வேறு சொந்தம் இல்லையடா

    சின்ன சின்ன நடை நடந்து

    செம்பவள வாய் திறந்து

    சின்ன சின்ன நடை நடந்து

    செம்பவள வாய் திறந்து

    அம்மாவென்று நீ அழைத்தால்

    அமுத கானம் பொழியுமடா

    அமுத கானம் பொழியுமடா!!

    http://www.inbaminge.com/t/hits/Hits%20Of%20Solo%20By%20P%20Susheela%20Vol%20-%204/

    http://music.cooltoad.com/music/song.php?id=218474

    Share
  • நான் உன்னை அழைக்கவில்லை..

    காவிரி மைந்தன்

    stepsஅன்பின் சங்கமம் – ஆண், பெண் இருவரது உறவில் அடிப்படையானது! தன்னை நேசிக்கம் நெஞ்சமது என்கிற போது, தாமாக ஊற்றெடுக்கம் கங்கையாகிறது!  ஊன், உறக்கம் யாவும் மறந்து உறவை நினைக்கிறது! ஏன் எதற்கு என்கிற கேள்விகள் எழுகின்றன!  படபடக்கும் நெஞ்சத்தோடு பார்வை தேடி அலைகிறது!  துடிதுடிக்கும் இதயத்தில் தூவானம் போடுகிறது!  அவனுக்கு அவளென்பதும், அவளுக்கு அவனென்பதும் ஆனந்தப் புதையலாகிறது!  சரியாகச் சொல்லப்போனால், வாழ்க்கை சொர்க்கபுரியாகிறது!  இந்த நிலை தொடர்கிறதா?  பிரிவு வந்து சேர்கிறதா?  பாதிப் பாதியென ஆன இருவருமே பரிதவிக்கும் நிலைதானே பிரிவுவரும் வேலைதன்னில்!  அழுவதுகூட ஆனந்த சுகமென்றே அடிமனம் நினைக்கும்!

    காரணம் தெரியாமல் கதறும் நிலைதன்னில்.. கதாநாயகன் பாடுகிறான்! கதையின் ஓட்டத்தில் கதாநாயகி அவனைப் பிரிகிறாள்! எங்கிருந்தோ வந்தாள் என்கிற திரைப்படத்தில் நடிகர்திலகத்தின் மகோன்னத நடிப்பில் – பிரிவுக்கு ஆயிரம் பொருள் சொல்லும் முகபாவனைகளுடன்.. புலம்பலின் வெளிப்பாடுகளுக்கு வார்த்தைகள் வழங்கிய கவியரசு கண்ணதாசன்!  நெஞ்சைப் பிழியும் வண்ணம் இசை அமைத்திருக்கும் மெல்லிசை மன்னர்!!

    நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
    கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
    நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
    பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை

    தத்தளிக்கும் மனதின் தவிப்புகளிதுவா? இதயத்தின் வலியை உணர்த்தி நிற்கும் வரிகளா?  கண்களிரண்டும் கலங்கித் ததும்பும்..சொல்லும் வார்த்தையில் துயரம் வழியும்!  உயிரூட்டியிருக்கிறார் மெல்லிசை மன்னர்!  உணர்வூட்டியிருக்கிறார் – டி.எம்.செளந்திரராஜன்.

    திரைப்பாடலில் பாவங்கள் காட்டி நடிக்க ஒரு நடிகர் திலகமும் .. பாடிக் கொடுக்க ஒரு  டி.எம்.எஸ்-ம்  மெட்டமைக்க ஒரு எம்.எஸ்.வியும் பாடல் வடித்துத் தர கவிஞர் கண்ணதாசனும் – தேவன் தந்த வரங்களா?

    இதைப்போன்ற பாடல்கள் எத்தனை தந்தாலும் ரசிப்பதற்கு கோடான கோடி இதயங்களும் – பிரிவு என்கிற கடலில் தள்ளப்படும் ஒவ்வொரு உள்ளதிலும் அலைமோதும் பாடலிது!

    என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை
    உன்னை அனுப்பி வைத்தான் ஆனால் உனக்கும் கருணை இல்லை
    இருண்ட வீட்டில் அன்பு விளக்கு இருக்க கூடாதா அம்மம்மா.. இரக்கம் பிறக்காதா

    http://www.youtube.com/watch?v=XNOjcAZJoSM

    Engirundho-Vandhalநான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
    கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
    நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
    பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை

    நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
    கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை

    என்ன தவறு செய்தேன் அதுதான் எனக்கும் புரியவில்லை
    வந்து பிறந்துவிட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை
    அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால் உலகம் தெரியாதா
    அம்மா.. .. விவரம் புரியாதா

    நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
    கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை

    என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை
    உன்னை அனுப்பி வைத்தான் ஆனால் உனக்கும் கருணை இல்லை
    இருண்ட வீட்டில் அன்பு விளக்கு இருக்க கூடாதா அம்மம்மா.. இரக்கம் பிறக்காதா

    நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
    கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
    நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
    பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை

    பாடல் : நான் உன்னை அழைக்கவில்லை
    பாடியவர் : டி.எம்சௌந்தர்ராஜன்
    வரிகள் : கண்ணதாசன்
    இசை : எம்.எஸ்விஸ்வநாதன்
    திரைப்படம் : எங்கிருந்தோ வந்தாள்

    Share