Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 26

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 26

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    கவிஞர் சுப. வீரபாண்டியனின் ‘எதுவாக இருக்கும்?’ – கவிதை நூல் பற்றிய திறனாய்வு

    சமுதாயப் போர்க்களத்தில் எதிர் நீச்சல் போடுவது அவ்வளவு சாதாரணமானதன்று. சிலருக்கு அதுவே பிள்ளை விளையாட்டாகிவிடுகிறது.. அவர்களிடத்தில் மறைந்து கிடக்கும் பிற ஆற்றல்கள் அவ்வப்போது தோன்றி மறையும் அல்லது வந்து போகும். பேரறிஞர் அண்ணாவின் உள்ளம் கவிதை உள்ளம்;. யாராவது ‘கவிஞர் அண்ணா’ என்று கூறியதுண்டா? இது அவர் எழுதிய எழுபத்தோரு கவிதைகளிலிருந்து அறியக் கூடிய உண்மையாகும். ‘காதல் ஜோதி’ என்னும் திரைப்படத்தில் “உம்மேல கொண்ட ஆசை உத்தமியே மெத்த உண்டு” என்ற பாடல்தான் அண்ணா எழுதிய ஒரே திரையிசைப்பாடல். அந்தப் பாடலில் அவருடைய மென்மையான உள்ளத்தைக் காணலாம். கண்ணதாசன், கலைஞர், ஜீவா முதலியோரும் இந்த நிரலில் வருவார்கள். அவர்கள் ஓய்வெடுக்கிற மண்டபமாக அல்லது சோலையாக இருப்பது கவிதைப் பணியே. இந்த நிரலில் அண்மைக்காலத்தில் இணைந்திருப்பவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள். அவர் எழுதித் தொகுத்த ‘எதுவாக இருக்கும்?’ என்னும் சிறு கவிதை நூலை நான் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த நூல் தந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறது இந்தக் கட்டுரை.

    நூல் கட்டுமானம்

    அரசியல் கட்சித் தலைவர்கள், உலகத் தலைவர்கள், வாழ்க்கைச் சிக்கல்கள். தனிமனிதக் காதல் உணர்வுகள் முதலிய பாடுபொருள்களை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு மூன்று பகுப்புக்களைக் கொண்டது. 1972 தனியாகவும் 2002 முதல் 2006 வரை அடுத்த பகுதியாகவும். 2006க்குப் பிறகு இறுதிப் பகுதியாகவும் அமைந்துள்ளது:.. பாரதிதாசன், கண்ணதாசன் முதலியோர்தம் பதிவுகளில் காணப்படும் முரண்களையும் அவற்றிற்கான காரணங்களையும் புரிந்து கொள்வதுபோல் இந்தக் காலமுறைப் பகுப்புக்கள் உதவும் என்று நான் நினைக்கவில்லை. காரணம் இவர் மாணவப் பருவத்திலிருந்தே முரண்படாத பகுத்தறிவுச் சிந்தனைவாதியாகவே வளர்ந்து வந்துள்ளார். மொழிநடை, பாடுபொருள் களம், கட்டுமானப் பரிமாணம் மற்றும் உத்திகளில் அமைந்திருக்கும் மாற்றங்களை அறிந்து கொள்ள இந்தப் பகுப்புக்கள் கொஞ்சம் உதவக்கூடும். உத்தி சிறக்காத எந்தக் கவிதையையும் நான் பொதுவாகத் திறனாய்வு செய்வதில்லை. காரணம் அவை என்னை அவ்வளவாகப் பாதிப்பதில்லை. எனவே பொதுவாக அமைந்த சில கவிதை வெளிப்பாடுகள் பற்றிய திறனாய்வு பின்வரும் பத்திகளில் சுருக்கமாக எடுத்துரைக்கப்படுகிறது..

    எதுவாக இருக்கும்?

    ‘எதுவாக இருக்கும்’ என்பது இந்த நூலின் இறுதிக் கவிதையாகக் கோக்கப்பட்டுள்ள்து.

    எதுவாக இருக்கும்
    என் கடைசிப் பயணம்?
    எதுவாக இருக்கும்
    என் கடைசி மேடை?
    எதுவாக இருக்கும்
    நான் படிக்கப் போகும் கடைசிப் புத்தகம்?
    சொல் தோழி!
    எதுவாக இருக்கும் நம் கடைசிச் சந்திப்பு?

    கவிஞர் அனைவரையும் போலவே சுபவீ அவர்களையும் காதல் அலைக்கழித்துத்தான் உள்ளது. ‘சீதையைக் கண்டேன்’ என்றால் அது உரைநடை. ‘கண்டணன் கற்பினுக்கு அணியைக கண்களால்’ என்றால் அது கவிதை. தொடரில் அமையும் ஒரு எளிய மாற்றம் இந்த ரசவாதத்தைச் செய்துவிடும். இந்த மாற்றம் இயல்பாக அமைதல் வேண்டும். இறுதியில்  நிற்கவேண்டிய வினை முன்னால் நின்று செயப்படுபொருள் தொடர்ந்து வந்தால் உரைநடை கவிதையாகி விடும்.. ‘சொன்னது நீதானா?’ என்றால் அது கவிதை. ‘நீதான் சொன்னாயா?’ என்றால் அது வினாத் தொடர். ‘நான்’ என்பது வேற்றுமையில் ‘என்’ என்று வேறுபடும். உவமங்களாக நின்று பொருளுணர்த்த வேண்டியவைகளை உணர்ச்சிவழி ஏக்கங்களாக வெளிப்படுத்தும் உத்தியினால் சிறக்கின்ற தொடர்கள். புத்தகங்களும் பயணங்களும் மேடைகளுமே வாழ்க்கையாகிப் பழகிப்போன  ஒருவனுக்குக்  கைகாட்டியாக எப்போதாவது தோன்றுவதுதான் காதல். அதனால்தான் பாட்டு தோழியைப் பார்த்துத்தான் அமைந்திருக்கிறது. மூன்று ஏக்கங்களைத் தன்னுள்ளே செறிததுக் கொண்டு கேட்க வேண்டிய இறுதி வினாவைத் தோழியைப் பார்த்துக் கேட்பதாக அமைந்துள்ளது. எதுவாக இருக்கும் ‘நம் கடைசிச் சந்திப்பு?’ என்பது எங்கே நடக்கும் அது என்பதையும் உள்ளடக்கி நிற்கிறது. ஒருமையில் மற்றவற்றைக் கேட்ட கவிஞன் ‘எதுவாக இருக்கும் என் சந்திப்பு? என்னாமல் ‘எதுவாக இருக்கும் நம் சந்திப்பு?’ என்பதால் காதல் உள்ளத்தின் பரிமாணம் புலப்படுகிறது. ‘நான்’  என்பது ‘நாம்’. ஆவதுதானே காதல்? ‘கடைசி’ என்பதனாலேயே இந்தப் பாட்டும் நூலின் கடைசியில் வைக்கப்பட்டிருக்குமோ?

    உம்மையும் உத்திதான்

    கவிதை இயற்கை. செயற்கையன்று. இயற்கை ஒரு புதிர் ஆதலின் நுண்ணியம் அதன் இயல்பு. இயல்பாக அமைந்துவிடும் கவிதைகளில் எல்லாமே நுட்பமாக அமைந்துவிடும். அறிவு நிலையிலிருந்து முற்றுமாக விலகி உணர்வு நிலையில் இருந்து படைக்கப்படும் எல்லாக் கவிதைகளுக்கும் இது பொருந்தும். தான் பெற்று வளர்த்து ஆளாக்கிய மகன் தன்னை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுகிறான். அந்தத் ‘தாய்மொழியில் ஒரு கவிதையை எழுதியிருக்கிறார் சுபவீ

    “அன்று
    உன் தொட்டிலை ஆட்ட
    எனக்கும்
    இன்று
    முதியோர் இல்லத்தில்
    வந்து பார்க்க
    உனக்கும்
    நேரமில்லாமல் போய்விட்டது”

    அன்றைக்குத் தன்னைச் சுற்றியிருந்த வாழ்க்கைச் சூழலை எண்ணி மருகுகிறாள். அந்தத் தாய். ஒரு வேளை பணிக்குச் சென்றிருந்த காலத்தில் அவள் பாடிய  ‘அவசரத் தாலாட்டு’ அவள நினைவுக்கு வந்திருக்கலாம். அதனைத் தற்போது எண்ணிப் பார்க்கிறாள். தனக்கு ஒரு நியாயம் தன் மகனுக்கு ஒரு நியாயம் எனக் கருதுவதற்கு அவள் மனம் ஒப்பவில்லை. இரண்டையும் ஒன்றாக்கித் தனக்குத் தானே சமாதானம் செய்து கொள்கிறாள். புதுக்கவிதையாக இருந்தாலும் வாய்விட்டுச் சொல்லிப் பாரத்தால் கவிதைக்குள் தாயின் வேதனை ஒடுங்கிக் கிடப்பதைக் காணலாம்.

    இந்தப் பாட்டில் ‘உம்’மை விடுபட்டுப் போனது அவலத்தின் ஆற்றலைக் குறைத்துவிடுகிறது. தொடர்வினைகள் கவிதைகளில் இடம்பெறும்போது உம்மைகள் வெளிப்பட நிற்பதுதான் முறை. கவிதையுள் அடங்கிக் கிடக்கும் உணர்ச்சி அப்போதுதான் முழுமையாக வெளிப்படும். சங்க இலக்கியத்தில் ஒரு காட்சி. தலைவியைக் காணும் தலைவன் பாடுவதாக அமைந்தது.

    “நீயும் தவறிலை, நின்னைப் புறங்கடைப்
    போதர விட்ட நுமரும் தவறு இலர்

    நிறைஅழி கொல்யானை நீர்க்குவிட் டாங்கு

    பறையறைந்து அல்லது செல்லற்க என்னா
    இறையே தவறுடையான்’”

    இந்தப் பாட்டில் தலைவியோ அவள உறவினரோ தவறு செய்யவில்லை. மதம் கொண்ட யானை தெருவில் நடப்பதை எச்சரித்துச் ‘செல்ல வேண்டாம்’ எனச் சொல்லாத மன்னனே தவறுடையான் என்று குறிப்பிடப்பட்டுள்ள்து. ‘நீயும்’ என்ற உம்மையும் ‘நுமரும்’ என்ற உம்மையும் பாட்டின் உணர்ச்சியை மேலும் ஆழப்படுத்துவதைக் காணலாம். ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ என்பது கம்பன் தமிழ். ‘அண்ணலும் அவளும் நோக்கினர்’ என்று எழுதியிருந்தால் காட்சி கவிதையாகியிருக்காது.

    தந்தை பெரியாரைப் பற்றிய கவிதையொன்றில் பாவலர் பாலசுந்தரம் ஆதங்கத்தோடும் ஆர்வத்தோடும் இந்த உம்மைகளைப் பதிவு செய்திருக்கிறார்.

    “சங்குகள் நிறமும் மாறி
    சந்தனம் மனமும் மாறி
    செங்கதிர் திசையும் மாறி
    தெங்குநீர் குளிரும் மாறி
    திங்கள் தண் நிலையும் மாறி
    தெவிட்டமு தினிப்பும் மாறி
    சங்கமும் மாறி னாலும்
    தந்தை சொல் வாளும் நாளும்

    பின்னாலே வந்த திரையிசைப்பாடலில் இவற்றைத் தழுவி கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று இப்படி அமைந்திருக்கிறது.

    “உன்னைச் சொல்லிக் குற்றமில்லை!
    என்னைச் சொல்லிக் குற்றமில்லை”

    இப்படி அமைந்தால்தான் கவிதையின் உயிர்ப்பு நிலைக்கும். இதனை உன்னைச் சொல்லியோ என்னைச் சொல்லியோ குற்றமில்லை என்றால் வெறுந்தொடர்தான் நிற்கும். எனவே

    “அன்று
    உன் தொட்டிலை ஆட்ட
    எனக்கும்
    நேரமில்லை!
    இன்று
    முதியோர் இல்லத்தில்
    வந்து பார்க்க
    உனக்கும்
    நேரமில்லாமல் போய்விட்டது”

    என்று அமைந்திருந்தால் இன்னும் சிறந்திருக்கும். இப்படிச் சொல்வது  படைப்பாளனின் படைப்புரிமையில் தலையிடுவதாகாது. கரும்புச் சாறு பருகுகிறபோது கோது பல்லிடுக்கில் குத்தக்கூடாது அல்லவா? எளிய மக்கள் பேறு பெறுவதைப் போலவே எளிய கவிதைகளும் பேறு பெறுகின்றன. எதிரது தழுவியது, இறந்தது தழுவியது என்றெல்லாம் இலக்கணத்தில் குறியிடப்படும் இந்த உம்மை கவிதையில் ஏக்கத்தைத் தழுவி நிற்கும்.

    கவிதை நோக்கு

    எது பற்றிக் கவிதை வரும்? கொடுமுடியைப் பற்றியும் வரும். குண்டூசியைப் பற்றியும் வரும். கவிதை பொருளிலே இல்லை. பொருளைக் காண்பவனின் உள்ளத்தில் இருக்கிறது. ‘உள்ளத்தில் உள்ளது கவிதை’ என்பதன் பொருள் இதுதான். பலாப்பழத்தைப் பற்றிக் கசப்பான கவிதைகளும் உண்டு. பாகற்காய் பற்றி இனிப்பான கவிதைகளும் உண்டு.

    “சிறைகளைத் தாங்கும் ஆயுதம் கவிதை!
    சிறுகை அளாவிய கூழும் கவிதை!
    காதலைச் சொல்லும் கண்களை விடவும்
    சாதியைக் கொல்லும் காதல் நற்கவிதை!
    பிழைக்க வந்தவர் பொன்னிற மன்று
    உழைத்துக் கறுத்தவர் உடலே கவிதை!
    யாழின் இசையும் கவிதை என்றாலும்
    வாளும் வேலுமே களத்தில் கவிதை!
    கண்ணீர் கவிதை! புன்னகை கவிதை!
    கண்ணகி கொண்ட கோபமும் கவிதை!
    சின்ன ஊரின் அழகு மட்டுமா?
    சென்னை நகரின் நெரிசலும் கவிதை!
    கூடி வாழும் குடும்பமும் கவிதை!
    தேடிக் கொள்ளும் தனிமையும் கவிதை!
    கொஞ்சிப் பேசும் மொழியைக் காடடிலும்
    நெஞ்சில் தைக்கும் சொற்கள் கவிதை!
    அடிமைப் படாத வாழ்க்கை கவிதை!
    அடிமை வேண்டா மனம் உயர் கவிதை!
    நெஞ்சில் ஈரம் எதுவுமில் லாமல்
    வஞ்சக மாக வாழ்ந்து வாழ்ந்தே
    ஆகும் வரையில் அனுபவிப் போர்க்குச்
    சாகும் வரையில் கவிதை வராது!”

    கவிதைக்கு வரைவிலக்கணம் கிடையாது என்பதுதான் இந்தக் கவிதையின் உள்ளடக்கம்.. கவிதை உத்தியால் சிறப்பது. இலக்கிய வடிவங்களுள் கவிதை தனித்து நிற்பதற்கு இந்த உத்திச் சிறப்பே தலையாய காரணம். படைப்பாளனைப் பொருத்தவரையில் “வஞ்சகமாக வாழ்ந்து ஆகும் வரையில் அனுபவிப்போர்க்குச் சாகும் வரையில் கவிதை வராது” என்று சொல்லுவது நூற்றுக்கு இருநூறு விழுக்காடு உண்மை. ‘எது கவிதை’ என்று யார் யாரோ எத்தனையோ நூல்களில் எதையெதையோ எழுதியிருக்கிறார்கள். இந்தக் கவிதை அவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி ஓர் ஆராய்ச்சிக் கவிதைபோல் அமைந்துள்ளது. கவிதை என்பது யாப்புக்குள் அமைவது என்னும் நெறியற்ற புரிதலைப் புறந்தள்ளிச் செழுமையான கவியுள்ளத்திலிருந்து பிறப்பதே கவிதை என்னும தெளிவை இந்தக் கவிதை தந்திருக்கிறது. ‘தேமா புளிமா வாய்பாட்டுக்குள் தேங்கி நிற்பது கவிதையாகும்” என்று சுபவீ சொல்லாதது எனக்கு சொல்லில் அடங்கா மகிழ்ச்சி!

    இந்த வாழ்க்கைதான் என்றைக்கும் உரிய்து .

    மரபுக்கவிதை என்றால் மரபார்ந்த சிந்தனைகளின் தொடர்ச்சியே. அது வெறும் யாப்புத் தொடர்ச்சியன்று. இந்த உண்மையைத் தெளிவாகப் புரிந்து கொண்ட சிலருள் சுபவீயும் ஒருவர். ‘இன்னாது அம்ம இவ்வுலகம் இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே’ என்பது பழந்தமிழர் பண்பாடு.  இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்” என்பது வள்ளுவம்.

    “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.
    வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எதுவென்றாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை. !
    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
    இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்”

    என்பது வாழ்வைப் பற்றிய கண்ணதாசன் பார்வை. இதுதான் மரபுக்கவிதை. ‘வாழ்வியல் துன்பங்களை இயல்பென்று உணர்வதும்’ அவற்றை மனஉறுதியால் புறங்கண்டு வெல்லுவதும் முள்ளுக்குள் மலராக வாழ்வைச் சுவைக்க முயல்வதுமான சிந்தனையே தமிழர் சிந்தனை. இந்தச் சிந்தனையை மீட்டுருவாக்கம் செய்து சுபவீ எழுதியிருக்கும் கவிதை இப்படி அமைகிறது.

    வாழ்க்கை முழுவதும்
    துன்பத்தின் சாயல் படிந்தே கிடக்கிறது!
    வாழ்நாள் முழுவதும்
    வலிகள் நிறைந்தே இருக்கின்றன!
    உறவுகள் சூழ வாழ்ந்தும்
    ஒரு தனிமை உள்ளே நிலைக்கிறது!
    வெளிச்சக் காட்டிலும்
    இருளின் அச்சம் இருக்கவே செய்கிறது.!
    இருந்தாலும் என்ன
    இந்த வாழ்க்கையைப் போல்
    இன்னொரு வாழ்க்கை உண்டா
    நாம் கொண்டாடுவதற்கு?

    இது ஆன்மீகத்தைப் பினபற்றும் ஒரு சனாதனக் கவிஞர் எழுதியதன்று.  நடப்பியலைப் புரிந்து கொண்டு எந்தத் தனிமனிதச் சிக்கலுக்கும் சமுதாயச் சிக்கலுக்கும்  போராடுவதுதான் ஒரே வழி என்னும் சிந்தனையை முன்னிறுத்தி எழுதப்பட்ட திராவிட இயக்கக் கவிஞர் ஒருவரின் அருமையான கவிதைப் பதிவு.

    விடைகளால் நிரம்பியிருக்க வேண்டிய இந்த வாழ்க்கை புதிர்களால் நிரம்பியிருக்கிறது.  முப்பத்திரண்டு பற்களால் சிரிப்பதைவிட இரண்டு கண்களால் அழுகிற நாள்களே அதிகம். நமக்கு நன்றி செலுத்துபவர்களைவிட நம்முடைய நன்றிக் கடன்களே அதிகம். இதயத்தில் நான்கு அறைகள்தாம். ஆனால்  நாலாயிரங்கோடி ஆசைகள். சுபவீ எழுதுகிறார்.

    “விடை தெரியாத கேள்விகளோடும்
    நிறைவடையாத ஆசைகளோடும்
    எழுதி முடிக்காத எண்ணங்களோடும்
    அடைபடாத நன்றிக் கடன்களோடும்தான்
    முடியப்போகிறது நம் வாழ்க்கை!
    இன்னும் பல்லாண்டுகள்
    இம்மண்ணில் நாம் வாழ்ந்தாலும்!

    தொடுவானமாய் வளரும் உணர்ச்சிகளும் உணர்வுகளும் தேவைகளும் ஆசைகளும் கடமைகளும் பிறவும் வரையறுக்கப்பட்ட வாழ்நாளை எகிறியடிக்கின்றன. எல்லா வினாக்களுக்கும் விடையெழுதிய மாணவன் இல்லை. எல்லா ஆசைகளையும் அனுபவித்தவனும் இலலை. துறந்தவனும் இல்லை. இதயத்து எண்ணங்களையெல்லாம் அப்படியே எழுத்தில் கொட்டிய எழுத்தாளன் எவனும் கிடையாது. விடுபட்டுப்போன நன்றிக் கடிதங்கள் எத்தனையோ? இந்த வாழ்க்கை முரண்களின் தொகுப்பு.

    “நாளது சின்மையும் இளமையது அருமையும்
    தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும்
    அன்பினது அகலமும் அகற்சியது அருமையும்
    இன்மையது இளிவும உடைமையது உயர்ச்சியும்
    ஒன்றாப் பொருள் வயின் ஊக்கிய பாலினும்”

    என்பார் தொல்காப்பியர். இந்த முரண்களுக்கிடையே ‘வந்து பிறப்பதும் வாழ முயல்வதும் வாழக் கற்றுக் கொள்ளுவதும் அவற்றுக்கான காரணங்களைத் தேடிய களைப்பிலேயே முடிந்துபோவதுமே வாழ்க்கை’ என்னும் இந்த வரிகளில் ஒருவகை ஏக்கமும் ஏமாற்றமும் தென்படுகிறது. ஒரு போராளி மனத்துள் புதைந்து கிடக்கும் ஆயிரம் எண்ணங்களுள் இதுவும் ஒன்று போலும்! போராளிக்கும் இதயம் உண்டுதானே!

    போய் வா மகளே!

    கண்ணதாசன் எழுதிச் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய ஒரு திரையிசைப் பாடலின் பல்லவி ‘போய் வா மகளே போய் வா’ எனத் தொடங்குகிறது.. அது பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்குச் செல்லும் ஒருத்தியை வழியனுப்புவதாக அமைந்தது, அந்தப் பல்லவியில் மனம் பறிகொடுத்த கவிஞர் அதனைத் தான் எழுதிய ஒரு பாட்டுக்குத் தலைப்பாக வைத்துள்ளார்.

    சங்க இலக்கிய அகப்பாடல்கள் இலக்கியத் துறைகளை அடியொட்டித் திட்டமிட்டு எழுதப்பட்டன. ஆனால் புற இலக்கியங்கள் அவ்வாறின்றி வரலாற்று நிகழ்வுகளையும் சமுதாயத்து அன்றாட நிகழ்வுகளையும் சித்தரிக்கும் பான்மையுடையவை. ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் என்றால் அது கற்பனையன்று. பறம்பில் நடந்த ஒரு சோக நிகழ்வு. ‘வருவன் என்ற கோனது பெருமையும் அது பழுதின்றி வந்தவன் அறிவும் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே!’ என்றால் அது கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.

    இந்த நெடிய மரபில் வந்தவர் கவிஞர் சுபவீ. அதனால்தான் பொடா தடைச் சட்டத்தில் அவர் சிறையிலிடப்பட்டபோது தன்னைப் பார்க்கப் பேரனோடு வந்த மகளை வழியனுப்பி வைத்த நிகழ்ச்சியைக் கவிதையாக்கியிருக்கிறார்.

    கவிதைக்காக அந்த நிகழ்ச்சியன்று. நிகழ்ச்சி கவிதையாக வெளிப்பட்டுள்ளது.

    போய் வா மகளே புறப்படு மகிழ்ச்சியாய்!
    சிறைச்சாலையில் கைதியாக இருக்கும் போதுதான்
    கைக்குழந்தையாய்க் கண்டேன் உன் மகனை!
    வெளியில் நான் வருவதற்குள்
    நீங்கள் வெளிநாடு புறப்படுகின்றீர்கள்!

    நீ பெற்றிருக்கும் காதல் பரிசைக்
    கணவருக்குக் காட்ட வேண்டுந்தானே!

    இங்கே மகளைப் பிரியும் பெற்றோரைக் காட்டிலும்
    அங்கே மகனை எதிர்பார்த்திருக்கும்
    தந்தையின் தவிப்பு தனித்துவமானது

    என்னதான்
    உலகை நேசிக்கும் உள்ளம் விரும்பினாலும்
    என் பேரன், என் பேத்தி, என் சதை, என் இரத்தம்
    என்னும் உணர்வுகள்
    எம்மை ஆட்டித்தான் படைக்கின்றன
    போய் வா மகளே! புறப்படு மகிழ்ச்சியாய்!

    ஆழமான உணர்வுகளைக் கடினமான சொற்களால்தாம் வெளிப்படுத்த வேண்டும் என்று நியதி இல்லை. எளிய சொற்களும் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்த்லாம் ஏழையின் கண்ணீர்போல!. இதற்கு இந்தக் கவிதை ஓர் எடுத்துக்காட்டு. உறவுகளில் ஊசலாட்டம் சமுதாயப் போராளிகளுக்கும் உண்டு என்னும் இயற்கையைப் பாடியிருக்கும் சுபவீ ஒரு சோக ராகத்தையே மீட்டியிருக்கிறார். மீண்டும் பதிவு செய்கிறேன். ஒரு திராவிட இயக்கக் கவிஞரின் படைப்பு வளையததிற்குள் வராத பாடுபொருள் இது. காரணம் அது மரபு சார்ந்து அமைந்ததுதான்.

    சிறைச்சாலையில் கவிதை எழுதியவர்கள் உண்டு. வரலாற்று நூல்கள் எழுதியவர் உண்டு. நிரம்பப் படித்தவர்கள் உண்டு. தன்னைச் சந்தித்தார் பற்றிய சரித்திர நிகழ்வுகளை சுபவீ போலக் கவிதையாக்கியிருப்பவர் சிலரே. கல்லுக்குள் ஈரம் என்பதைப் போலச் சொல்லுக்குள் சோகம் பாடியிருக்கிறார் சுபவீ. ஒரு நிமிடம் அந்தச் சிறைச் சூழலை எண்ணிப்பாருங்கள்! நொறுங்குவதற்கு ஒன்றுமில்லை என்ற அளவுக்கு இதயம் சுக்கு நூறாகிவிடும். போராளிகளின் புலம்பல் என்று புரியாதவர்கள் சொல்லக்கூடும். காரணம் அவர்கள் கவிஞனின் இதயத்தோடு உறவாடத் தெரியாதவர்கள்!

    மகள் வயிற்றுப் பேரனை வழியனுப்பிய கவிதை அப்படி அமைந்தது என்றால் இன்னொரு சிறைச் சூழலில் தன் மகன் வயிற்றுப் பேத்தியைக் கொஞ்சும் பேறும் அவருக்குக் கிட்டியது. தன பாட்டனைச் சிறையில் காணும் பேறுபெற்றவர்கள் அந்தப் பேரப்பிள்ளைகள். மெய்யால் தீண்டுதலும் இன்பம் மழலையர் சொல் செவியால் கேட்பதும் இன்பம் என்பதற்கேற்ப அவ்விரண்டையும் சில நொடிகள் சிறைவாசலில் அனுபவித்த கவிஞன் எழுதுகிறான்.

    கறுப்பென்ன வண்ணத்தில் தப்பா? – நீ
    கறுப்பில்லை என்பான் உன் அப்பா!
    கறுப்புத்தான் அழகென்று சொல்வோம்! – கட்டிக்
    கரும்பென்றே உன்னை அள்ளிக் கொள்வோம்!

    தாத்தாவைச் சிறைவந்து பார்த்தாய்! – என்
    தனிமையினைச் சில நிமிடம் தீர்த்தாய்!
    மூத்தாலும் வயதினிமேல் குறையும் – உன்
    முத்தத்தில் என் நெஞ்சம் கரையும்”

    இவ்விரண்டு கண்ணிகளும் முழுக்கவிதையின் பகுதிகள் ‘கறுப்புத்தான் அழகென்று சொல்வோம்!’ என்று தன் கொள்கைக் குண்டூசியைக் குழந்தைக்கு வலிக்காமல் குத்தியிருக்கிறார்.  குழந்தை என்றவுடன் யாப்பில் சிந்து முன் நிற்பது வள்ளலார் மரபு. பாரதியும் பாரதிதாசனும் வெற்றிபெற்றது மழலைச் சிந்துகளால். பெரும்பண்டிதர்கள் எழுதிய பிள்ளைத் தமிழ் எலலாம் படுதோல்வி அடைந்ததற்குக் காரணம் பிள்ளைகளுக்கே அவை புரியாமல் போனதுதான்!

    உப்பா? சர்க்கரையா?

    தனிமனிதக் குடும்ப வாழ்வின் அனுபவங்கள் வேறு. பொதுவாழ்வின் அனுபவங்கள் வேறு.  முரண்களால் முடையப்படடவையே அவ்விரண்டும்.  ‘இருவேறு உலகத்தியற்கை’ என்பது வள்ளுவம். முரண்கள் இயற்கை. செயற்கை அன்று. இந்த முரண்களில் ஒற்றுமையைப் பார்க்கிறவன்தான் கவிஞன். சிரிப்பவர் சிலர். அழுபவர் சிலர். இரண்டும் முரண்கள். ஆனால் கவிஞன் சிரித்துக் கொண்டே அழுகிறான். அல்லது அழுதுகொண்டே சிரிக்கின்றான். பொதுவாழ்க்கையிலும் முரண்களே முன்களப் பணியாளர்கள். பதவி வரும்., போகும். போராட்டத்தில் வெற்றியும் உண்டு. தோல்வியும் உண்டு.  எனவேதான போராளிகள் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் களப்பணி ஆற்றுவதையே கடமையாகக் கொள்கிறார்கள். பலமுறை பல காரணங்களுக்காகச் சிறை சென்றவர் சுபவீ. ஒரு காரணமும் சொந்தக் காரணம் அல்ல. சமுதாயக் காரணமே. சிறை தந்த சில அனுபவ முரண்களைக் கவிதையாக்கியிருக்கிறார் இந்த நூலில்.

    “சிறையிலும் உண்டு
    சுதந்திர நாள் கொணடாட்டம்!

    என் மனைவிக்கு எழுதினேன்!
    சிறை எனக்கு!
    தண்டனை உனக்கு!

    ஒரு புறம்
    பிரிவு, தனிமை, முடக்கம்!
    மறுபுறம்
    படிப்பு எழுத்து சிந்தனை!
    சிறை உப்பா சர்க்கரையா?”

    சுதந்திரத்திற்கு எதிர்ச்சொல் சிறை. ஆனால் சிறையிலும் சுதந்திரத் திருவிழா கொணடாடுகிறார்கள். எத்தகைய முரண்? புனல்கடந்து பொருள தேடச் செல்வான் தலைவன். ஆனால் பாலைத்திணை தலைவிக்குத்தான்!. தலைவியை எண்ணித் தலைவன் புலம்புவதாக ஒருபாடல் கூடத் தமிழில் இல்லை.

    என் மனைவிக்கு எழுதினேன்!
    சிறை எனக்கு!
    தண்டனை உனக்கு!

    என்றெழுதுகிறான் கவிஞன். மரபின் வேர் என்பது இதுதான். இதனையே சங்கப் புலவன் எழுதியிருந்தால்

    பிரிந்தவன் நான்!
    அழுதவள் நீ!

    என்றல்லவா எழுதியிருப்பான்? ஒரு புறம் தனிமனிதனை வாட்டும் தனிமை, பிரிவு, முடக்கம். மறுபுறம் ஒரு போராளியைச் செதுக்கும் படிப்பு, சிந்தனை, எழுத்து.  இந்த முரண்களால் ஆனது சிறை. இரண்டு வகை அனுபவங்களும் சிறை தருகிறது. இறுதியாக வினவுகிறார்

    “சிறை உப்பா? சர்க்கரையா?”

    படித்தவர்கள்தாம் சொல்ல வேண்டும், இந்தக் கவிதை உப்பா? சர்க்கரையா? என்று!

    நிறைவுரை

    எதுவாக இருக்கும்? என்னும் தலைப்பில் ஐம்பது கவிதைகளைக் கொண்ட இந்த நூலில் என்னைக் கவர்ந்த அத்தனைக் கவிதைகளையும் நான் இங்கே சுவைத்து ஆராய்ந்து பதிவிடவில்லை. கட்டுரையின் அளவு கருதியும் காலம் கருதியும் ஒரு சிலவற்றைப் பற்றி மிகச்சுருக்கமாகவே பதிவு செய்திருக்கிறேன். இவருடைய நூல்கள பலவற்றையும் நான் படித்து அவருடைய பன்முக ஆற்றலையும்  ஆழங்கால்பட்ட அறிவுத் தெளிவையும் அறிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவருடைய இரண்டாவது கவிதை நூலாகிய இதனை நான் மேலெழுந்த வாரியாகப் படித்தபோது ஒரு போராளிக் கவிஞனின் மறைவிடத்தை அறிந்த கொண்ட மன திருப்தி எனக்கு. எப்போதும் வருவது கவிதை அல்ல! எப்போதாவது வருவதுதான் கவிதை!. அவை கவிஞர் சுபவீயிடமிருந்தும் வந்திருக்கின்றன. பேராசிரியர் சுபவீ விருப்ப ஓய்வு பெற்றவர்.  கவிஞர் சுபவீக்கு விருப்ப ஓய்வு கிடையாது. காரணம் முன்னது பதவி. விருப்பம் போல் துறந்துவிடலாம்  பின்னது படைப்பு. அது ஒருவகைப் பாசப்பிணைப்பு. துறக்க முடியாது படடினத்தாரைப் போல!

    (தொடரும்)

    Share
  • Mahatma Gandhi

    Mahatma Gandhi

    Baskar Seshadri

    It was an ordinary day for Mohandas.

    It was Friday and the life was usual for everyone. Mohandas got up at sharp 3.30 am in Birla house and he has been staying there since September of 1947.

    The peacemaking ceremony had happened in this place among many persons. Attendant Brij Krishna was ready as usual with his nieces Manu and Abha. The prayer started at sharp 3.45 am on the dot. He had a simple massage and corrected the draft proposal he already made. He had his lemon juice. Later little honey and orange juice since he underwent a long fast only a month ago which had deteriorated  his health.

    The completed document was almost his last will and testament in a way. He recollected about the Noakhali issue and the crisis of Rice in Madras to his secretary Pyarelal and then went to take a short nap. There were some heated speech by Shyam prasad Mukherjee only few days ago and he had threatened to kill congress men on this.

    Mohandas was upset at this hate speech. He met as a normal practice his visitors which included blind refugees. A delegation from Punjab and Sikh came to invite and he suggested Babu Rajendra Prasad to be the President. He also had a meeting with Nehru and Patel since he did his peace making process between them.

    On the other hand it was Nathuram Godse who was staying in the retiring room Number Six of the old railway station decided that he had a mission on his hand and he was among a big team who were in various points to execute in case of any failure from his end. Many may not be aware that there was an attempt on Jan 10 was later treated as a dry Run.

    Mohandas love to be punctual and sadly on this day he was late by ten minutes since his secretaries decided not to intervene a discussion which was going on already. His famous Ingersoll was not worn by him and that could be another reason for his being late that day.

    To make it quick he chose a short cut and was moving to the prayer hall in the first floor. There were normally twenty policemen to protect him which was arranged only few months ago after an attempt was made months ago.

    Well before five Pm Godse reached Birla Temple  and Apte and Karkare was there following him. He was in Khaki and engaged a tonga. The mission was on and they were all travelling towards the Birla House.

    Normally people used to form a passage track and on that fateful day it was not to be. Godse was getting ready with his Italian made Beretta pistol. Godse Pushed Manu aside and moved his way towards Mohandas. In the melee when the flower plates fell down she bent down to pick it. It was at this moment Godse picked his gun and shot Mohandas thrice one at the chest and two on the abdomen. It was a point blank range. Mohandas stood till third bullet was pumped on him and fell on the ground.

    The man who fought against the violence fell prey to his teaching and the age of close to eighty.

    All were over at 5.17 Sharp on the evening of January 30, 1948. The fragrance of flowers vanished and it became a smokey Gun Powder smell that filled the air.

    When Mohandas fell to the bullets he chanted just two times He Ram He ram and had his last breathe. That was his last prayer.

    There are versions to say that he did not say He Ram at all. His personal assistant Sri Kalyanam (He died Last year) says he fell and died and it was Manu and Abha who lifted him and kept his head on their laps.

    The whole world grieved. it was this man who preached non-violence and it was the same man who fell to the Beretta Bullets.

    Its shame on us that we killed him. Who also can be fondly called as Bapu and its our own Mahatma.

    Our salutes forever to this Messiah.

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 61

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 61

    -மேகலா இராமமூர்த்தி

    இறந்த இராவணனுக்கு இறுதிக் கடன்களைச் செய்யும் பணியை வீடணனிடம் ஒப்படைத்துவிட்டுத் தன்னைக் கண்டு வாழ்த்தவந்தவர்களைக் காணச் சென்றான் இராமன்.

    வீழ்ந்துகிடந்த இராவணனின் உடலைக் கண்டு வருந்திய வீடணன், ”ஆற்றலின் உறைவிடமாயிருந்த அண்ணனே! அசுரர்களுக்குப் பிரளயமாய் உருவெடுத்தவனே!  தேவர்களுக்கு எமனாய் இருந்தவனே! எந்த நஞ்சும் உண்ணாவிட்டால் உயிரை உண்ணாது; ஆனால் சானகி எனும் நஞ்சு கண்ணால் கண்ட மாத்திரத்தில் உன் உயிரைப் போக்கியதே! நீயும் சாமானியன் போன்று படுகளப்பட்டு வீழ்ந்தாயே! எண்ணத் தெரியாதவனென்று உன்னால் கருதப்பட்ட நான் எண்ணி உரைத்த சொற்களை இந்த இறுதிக் காலத்தில்தான் எண்ணுகின்றாயா?

    கொல்லத் தகாத மைத்துனனை நீ கொன்றுவிட்டாய் என்று அக்கொடுமையை மனத்தில் குறித்துவைத்துக் கொண்டு கொடுமைசூழ்ந்து, உன்னைப் பழிவாங்குவதற்குச் சமயம் பார்த்துப் பல்லைக் கடித்துப் பொறுத்துக்கொண்டிருந்த கொடிய பாவியான சூர்ப்பனகை, தன் நெஞ்சையழுத்திக் கொண்டிருந்த நெடுநாள் பகையை இன்று தீர்த்துக்கொண்டாளோ?” என்று புலம்பினான்.

    இதன்மூலம் ஓர் உண்மை தெரியவருகின்றது. சூர்ப்பனகை இராமனோடு இராவணனை மோதவிட்டது தான் இராமனை அடையவேண்டும் என்பதற்காகவோ இராவணன் சீதையை அடையவேண்டும் என்பதற்காகவோ அல்ல. அவள் கணவனான வித்துருசிங்கன் என்பவனைத் திக்குவிசயம் செய்யச் சென்ற சமயத்தில், யாது காரணத்தாலோ, இராவணன் கொன்றுவிடுகின்றான். அதனால் அவன்மீது கடுங்கோபமும் தீராப்பகையும் கொண்டிருந்த சூர்ப்பனகை, அதற்குப் பழி தீர்க்கவே சீதை குறித்து அவனிடத்தில் கூறி காமத்தைத் தூண்டி அவன் அழிவுக்கு வித்திடுகின்றாள். இச்செய்தியை இங்கே வீடணன் மூலம் நமக்கு அறியத்தருகின்றார் கம்பர்.

    நீல மாமணிநிற நிருதர் வேந்தனை
    மூல நாசம்பெற முடிக்கும் மொய்ம்பினாள்
    மேலைநாள் உயிரொடும் பிறந்துதான் விளை
    காலம் ஓர்ந்து உடன்உறை கடிய நோய் அனாள்.
      (கம்ப: சூர்ப்பனகைப் படலம் – 2836) என்று இராமகாதையில் சூர்ப்பனகையை அறிமுகப்படுத்தும்போதே அவள் உட்கிடையைக் கம்பர் இப்பாட்டில் வடித்துக் காட்டியமை இங்கே நினையத்தக்கது.

    அவ்வேளையில் தன் கணவன் இராவணன் மாண்ட செய்தியறிந்து களம்புகுந்த மண்டோதரி மண்ணில் கிடந்த அவன் உடல்மீது வீழ்ந்தாள். ”அந்தோ! அரக்கர் வேந்தன் இறந்த பின்னேயோ யான் இறப்பது? இராவணனார் வாழ்வு இவ்வாறா முடியவேண்டும்?” என வருந்தி, ”ஒப்பற்ற வீரனான இராமனின் அம்பு, வெள்ளெருக்கம் பூவைத் தன் சடையில் சூடும் சிவனின் கயிலை மலையைத் தூக்கிய இராவணனின் திருமேனியில் மேலும் கீழும் எள்ளிருக்கும் இடமின்றி உயிர் இருக்கும் இடத்தை ஆராய்ந்ததோ? கள்ளிருக்கும் மலர்க் கூந்தலாள் சானகியை மனச்சிறையில் அடைத்த காதல் இராவணனின் உள்ளே எங்கேனும் பதுங்கியிருக்கும் என்றெண்ணி உடல் முழுதும் நுழைந்து தடவிப் பார்த்ததோ? என்று வேதனையோடு உரைத்தாள்.

    வெள்எருக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த
    திருமேனி மேலும் கீழும்
    எள்இருக்கும் இடனின்றி உயிர் இருக்கும்
    இடன்நாடி இழைத்தவாறோ
    கள்இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை
    மனச் சிறையில் கரந்த காதல்
    உள் இருக்கும் எனக் கருதி உடல் புகுந்து
    தடவியதோ ஒருவன் வாளி.
    (கம்ப: இராவணன் வதைப் படலம் – 9940)

    இராவணனின் உடலை இராமனின் அம்பு துளைத்தது எனக்கூற விரும்பாத மண்டோதரி, ”தடவியதோ” எனக் கேட்பது, தன் கணவன்மேல் அவள் கொண்டிருந்த அளவற்ற அன்பைப் புலப்படுத்துகின்றது.

    ”யாருடைய கணைகளாலும் துளைக்கமுடியாத இராவணனின் தோள்வலிமை மாரனின் கரும்பு வில்லுக்கும் மலரம்புக்கும் இலக்காகி நைந்தழிந்ததே!” என்று ஏங்கியழுத மண்டோதரி, இராவணனின் மார்பினைத் தன் கரங்களால் தழுவி உயிர்நீத்தாள்.

    புலனடக்கமின்றிக் கழிகாமம் மிக்கோனாய்ப் பல பெண்டிரொடு வாழ்ந்தவன் இராவணன்; அவன் மனைவி மண்டோதரியோ, மாசுமறுவற்ற கற்புக்கரசியாய் வாழ்ந்து, கணவனின் மரணத்தைத் தாங்கவியலாது உயிர்விடுகின்றாள். இக்காட்சி நம் நெஞ்சை உருக்குகின்றது. அத்தோடு, சிலப்பதிகாரத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்ததும் ”கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்” என்றுரைத்து உயிர்நீத்த கோப்பெருந்தேவியின் செயலையும் நினைவுபடுத்துகின்றது.

    இறந்துபட்ட இராவணனுக்கும் மண்டோதரிக்கும் ஏனைய அரக்கர்கட்கும் வீடணன் ஈமக்கடன்கள் ஆற்றினான்; வருத்தத்தில் ஆழ்ந்திருந்த அவனை இராமன் அருள்மொழிகளால் தேற்றினான்.

    அதனைத் தொடர்ந்து இராமனின் விருப்பப்படி இலக்குவன் வீடணனுக்கு முடிசூட்டினான்; முடிசூடிக்கொண்ட வீடணன் இராமனைப் பணிந்தான். அவனை ஆரத்தழுவிய இராமன், ஓர் அரசன் கடைப்பிடிக்க வேண்டிய நீதிநெறிகளை, முன்பு சுக்கிரீவனுக்கு உரைத்தது போலவே, வீடணனுக்கும் உரைத்தான்.

    அடுத்து, அனுமனை அருகில் அழைத்த இராமன் நடந்தவற்றைச் சீதைக்கு உரைத்துவருமாறு அவனைப் பணித்தான். அசோகவனம் சென்ற அனுமன், ”அன்னையே! உன்னைப் பணிகின்றேன்; மங்கலச் செய்தி கொணர்ந்துள்ளேன். இலங்கையில் மகளிரன்றி ஆடவர் அனைவரும் போரில் அழிந்துபட்டனர்” என்றான் சீதையிடம்.

    அதுகேட்டு மகிழ்ச்சி மீதூரப்பெற்ற சீதை, சொல்லுதற்கு வார்த்தைகளின்றி மௌனித்திருந்தாள். அவளின் மௌனத்திற்கான காரணத்தை அனுமன் வினவ, ”ஐய! நீ செய்திருக்கும் பேருதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் என்றறியாது திகைத்திருக்கின்றேன்” என்றாள் சீதை.

    அப்போது அனுமன் சீதையிடம், ”தாயே! மலர்ந்த முகமுடையவளான திரிசடை நீங்கலாக அனைத்து அரக்கியரையும் நான் அழித்திட உம் அனுமதி வேண்டுகின்றேன்” என்றான். அதுகேட்டு அஞ்சி நடுங்கிய அசோகவனத்து அரக்கியர், ”அன்னையே எம்மைக் காத்திடு” என்று அச்சத்தோடு சீதையைச் சரணடைந்தனர். ”அஞ்சல்மின்” என்று அவர்களுக்குத் துணிவுரைத்த சீதை, ”தாயைக் காட்டிலும் என்பால் அன்புடையோனே! அறிவிற் சிறந்தவனே! எனக்கு ஏற்பட்ட துயர்களுக்கு என் தீவினையே காரணம்; இவ் அரக்கியர் இராவணன் சொன்னதைச் செய்தனர்; அவ்வளவே! இவர்கள் கூனியினும் கொடியோர் அல்லர்; ஆதலால், நடந்துமுடிந்தவற்றை மனத்தில் வைத்து இவர்களை வருத்த எண்ணாதே!” என்றாள் அனுமனிடம்.

    யான் இழைத்த வினையினின் இவ் இடர்
    தான் அடுத்தது தாயினும் அன்பினோய்
    கூனியின் கொடியார் அலரே இவர்
    போன அப்பொருள் போற்றலை புந்தியோய்.
    (கம்ப: மீட்சிப் படலம் – 9886)

    சீதையின் பெருந்தன்மை கண்டு நெஞ்சு நெகிழ்ந்தான் அனுமன்.

    இதற்கிடையில் இராமன் வீடணனிடம், ”வீடணா! நீ சென்று நம் தேவியைச் சீரொடும் தா!” என்றான். அதனையேற்றுச் சீதையைக் காணவந்த வீடணன், ”இறைவியே! இராமபிரான் உன்னைக் காண விரும்புகின்றான். அணியத்தக்க அணிகலன்களை விரைவாய் அணிவித்துச் சீதையை இங்கே அழைத்து வா” என்று எனக்குக் கட்டளையிட்டான்” என்றான்.

    இராமன், ”சீதையைச் சீரொடும் தா” அதாவது ”சிறப்பாக அழைத்து வா” எனும் பொருளில் சொன்னதைச் சீதை தன்னை அலங்கரித்துக்கொண்டு வரவேண்டும் என இராமன் சொல்வதாகப் புரிந்துகொண்ட வீடணன் அவ்வாறே சீதையிடம் செப்பினான். அதனை ஏற்க மறுத்த சீதை, ”வீரனே! நான் அசோகவனத்தில் எத்தகு கோலத்தில் இருந்தேனோ அக்கோலத்துடனேயே என் தலைவன் இராமனையும் ஏனையோரையும் காண்பதே சிறப்புடைத்து; கோலம் பூண்டு வருவது பீடன்று!” என்றாள்.

    வீடணனும் விடாமல், ”தாயே! நீ அணிபுனைந்து வரவேண்டும் என்பது ஐயன் இராமனின் கட்டளை” என்றுரைக்கவே வேறுவழியின்றி அதனையேற்றுக் கோலம்புனைந்தாள் அந்தக் கோதை; அவளை அரம்பையர் சூழ விமானத்திலேற்றி இராமன் இருக்குமிடம் அழைத்துவந்தான் வீடணன்.

    பச்சிலை வண்ணனாய், பவளச் செவ்வாயனாய் நின்றிருந்த இராமனைக் கண்டு உவந்தாள் சீதை; அண்ணலும் அவளை நோக்கினான். ஆனால், அப்பார்வையில் மகிழ்ச்சியின் மலர்ச்சியில்லை; மாறாக வெறுப்பே வெளிப்பட்டது; அதனை அனைவர்க்கும் புலப்படுத்தும் வகையில், ”நீ ஒருத்தி தோன்றியதால் பெண்மைக் குணங்களும் பெருமையும் நற்குடிப் பிறப்பும் கற்பும் ஒழுக்கமும் சத்தியமும், கொடைத்தன்மை இல்லாத அரசனின் புகழ் கெடுவதுபோல் அடியோடு அழிந்தன” என்றான் சீற்றத்தோடு.

    பெண்மையும் பெருமையும் பிறப்பும் கற்பு எனும்
    திண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும்
    உண்மையும் நீ எனும் ஒருத்தி தோன்றலால்
    வண்மைஇல் மன்னவன் புகழின் மாய்ந்தவால்.
    (கம்ப: மீட்சிப் படலம் – 10017)

    தன் கொடுமொழிகளை மேலும் தொடர்ந்தவன், “உன்னை மீட்பதற்காக நான் இலங்கைக்கு வந்ததாகவா எண்ணுகின்றாய்? இல்லை! என்னைத் தவற்றிலிருந்து நீக்கிக்கொள்ளவே வந்தேன்; உன் செயல் என் உணர்வுகளை வெட்டிவிட்டது; உன் ஒழுக்கத்தை நீ சாதிப்பாயாக!” என்றான்.

    நஞ்சினும் கொடிய இராமனின் மொழிகள் பூங்கொடியன்ன சீதையை நிலைகுலையச் செய்தன; அவள் கண்கள் அருவியாய் நீரைப் பொழிந்தன. ”ஆடவர் திலகனே! நான் இத்தனை காலமும் செய்த தவமும், காத்த கற்பும் நீ சிந்தையில் உணராமற் போனதால் எனது பைத்தியக்காரச் செயல் எனும்படியாய்ப் பயனற்றுப் போயின.

    இனி நான் யாருக்கு என் குற்றமற்ற தவத்தை நிரூபித்துக் காட்டவேண்டும்? சாதலின் சிறந்தது எனக்கு வேறொன்றில்லை; அதுவே எனக்குத் தகுதியும் விதியும் ஆகும்” என்று வேதனையோடுரைத்து இராமனின் அருகில் நின்ற இலக்குவனை அழைத்துத் தனக்கு நெருப்பை உண்டாக்கித் தருமாறு வேண்டினாள். அதுகேட்டுக் கலக்கமுற்ற இலக்குவன், ”இதனைத் தான் ஏற்பதா தவிர்ப்பதா?” எனும் அச்சத்தோடு இராமனைப் பார்க்கவே, ”அவ்வாறு செய்க” என இராமன் தன் கண்ணினால் குறிப்புக் காட்டினான் இலக்குவனுக்கு.

    இவ்விடத்தில், சீதை தீயில் இறங்க விரும்பிய செயல் குறித்தும் அதற்கு இலக்குவனை உதவப் பணித்த இராமனின் எண்ணம் குறித்தும் இராமாயண ஆய்வாளர்கள் தெரிவிக்கும் கருத்துக்களைக் காண்போம்.

    ”அசோகவனத்திலிருந்து மீண்டுவந்த சீதை இராமனின் கடுஞ்சொற்களால் மனம்நொந்து தீயில் இறங்குவது என்று முடிவுசெய்தபோது தீமூட்டித் தருமாறு இலங்கையைச் சேர்ந்தவனான வீடணனிடந்தான் கேட்டிருக்க வேண்டும்; ஆனால், அவளோ அவ்வாறு செய்யாமல் இலங்கைக்குப் புதியவனான இலக்குவனிடம் கேட்கிறாள்; இதற்குக் காரணமென்ன?

    பஞ்சவடியில் இராமன் இலக்குவன் சீதை மூவரும் தங்கியிருந்தபோது மாய மானைத் துரத்திச்சென்ற இராமனின் அபயக் குரல் தொலைவினில் கேட்கவே, உடனே அங்குச்சென்று அண்ணனுக்கு உதவுமாறு இலக்குவனை வேண்டினாள் சீதை; அவனோ அதனையேற்க மறுத்து, ”அண்ணனுக்கு ஊறுசெய்வோர் அகிலத்தில் எவரும் இல்லை” என்று உறுதிபடத் தெரிவித்து ”அவளுக்குக் காவலாய் இருப்பதே அண்ணன் தனக்கிட்ட ஆணை” என்றுரைத்தபோது, மனக்கொதிப்படைந்து தகாத மொழிகளால் அவனைத் தீட்டினாள் சீதை. அதனையெண்ணி அவள் அசோகவனத்தில் சிறையிருந்தபோது பெரிதும் வருந்தினாள்.

    அவளின் அந்த வருத்தத்தைப் போக்குதற்கும், தூயவனான இலக்குவனைத் தீயவனாய் அடையாளப்படுத்திய தீச்செயலுக்கு அவள் கழுவாய் தேடிக்கொள்வதற்கும் வாய்ப்பாகவே சீதையை இராமன் கொடுமொழிகளால் திட்டி அவளே தீயில் இறங்கும் நிலைக்குக் கொண்டுவந்தான் எனவும் இலக்குவனைத் தீ உண்டாக்கித் தருமாறு சீதை கூறியமைக்குக் காரணம் அவனிடம் அன்று நடந்துகொண்ட விதம் குறித்த அவளின் குற்றவுணர்ச்சியே” எனவும் தெரிவிக்கின்றார்கள்.

    இவை ஏற்புடைய கருத்துக்கள் தாமா?

    தன் மனைவி சீதையிடம் இரக்கமின்றியும் மனச்சான்றின்றியும் நடந்துகொண்டு அவளை ’அக்னிப் பிரவேசம்’ செய்யும் நிலைக்குத் தள்ளிய இராமனின் முறையற்ற செய்கையை நியாயப்படுத்துவதற்குச் சொல்லப்பட்ட சமாதானங்களாகவே இவை தோன்றுகின்றன.

    சீதை இலக்குவனிடம் பேசிய வார்த்தைகள் தகாதவையே; அவளின் தகுதிக்குச் சிறிதும் பொருத்தமற்றவையே. எனினும், அதற்குக் கழுவாய் அவளைத் தீக்குளிக்க வைத்தலா? இல்லை!

    இலக்குவனிடம் தன் தவற்றுக்குச் சீதை மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று இராமன், அவர்கள் மூவரும் தனித்திருக்கும் பொழுதொன்றில், சொல்லியிருந்தால் அது சரியானதாக இருந்திருக்கும்; ஏற்கனவே அதுகுறித்துக் குற்றவுணர்ச்சி கொண்டிருந்த சீதை அதனை மறுக்காது ஏற்றுச் செய்திருப்பாள். அதனைவிடுத்து, கற்புக்கனலியான அவள் நடத்தையை அருவருக்கத்தக்க வகையில் பலர் முன்னிலையில் இழித்துப் பேசியதும் அவளைத் தற்கொலைக்குத் தூண்டியதும் இராமன்செய்த மன்னிக்க முடியாத குற்றங்களே.

    இனி, அடுத்து நடந்தவற்றைக் காண்போம்.

    இலக்குவன் உண்டாக்கிய தீயில் இறங்கினாள் சீதை; கண்டோர் நடுங்கிநிற்க, தீக்கடவுள் அவளின் கற்புத் தீயில் வெந்தான்; வெம்மை பொறாது கதறியபடி எழுந்துவந்த அவன், அம்மை சீதையை ஊறின்றிக் கொண்டுவந்து இராமனிடம் சேர்ப்பித்து அவள் கற்பின் மேன்மையைச் சாற்றினான்; உயர்மொழிகளால் அதைப் போற்றினான். அதன்பின்னர் இராமன் சீதையை ஏற்றுக்கொண்டான்.

    உயிர்நீத்துத் துறக்கம் சென்ற தயரதன் அப்போது தன் மகன் இராமனைக் காண வருகின்றான்; வந்தவன், இராமனைத் தழுவி மகிழ்ந்தபின், சீதையைப் பார்த்து, ”நங்கையே! நின் கற்பினை உலகுக்கு நிலைநாட்டவே நெருப்பின்கண் புகும்படி உன்னை இராமன் கூறினான்; அதற்காக அவனை வெறுக்காதே! அவனுக்கு உன்மீது ஐயம் ஏதுமில்லை” எனக் கூறித் தன் மருமகளைத் தேற்றுகின்றான். இராமனின் அடாத செயலுக்கு நியாயம் கற்பிக்கவே விண்ணிலிருந்து இறங்கிவந்து தயரதன் இவ்விடத்தில் பேசுவதாய்ச் சாதுரியமாகக் காப்பியம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

    தயரதன் சொல்வதுபோல் உலகுக்குச் சீதையின் கற்பை நிரூபித்துக் காட்டும்பொருட்டு இராமன் சீதையைத் தீயில் இறங்கச் சொல்லியிருந்தாலும் அது குற்றமே. தன் மனைவி எப்படிப்பட்டவள் என்பதைக் கணவன் மட்டும் அறிந்தாலே போதுமானது; அதனை ஊருக்கும் உலகுக்கும் மெய்ப்பித்துக் காட்டவேண்டியது அவசியமற்றது!

    ’நடையின் நின்றுயர் நாயகனாக’ப் போற்றப்படும் இராமன் அதனின்று சறுக்கும் இடங்களாக இராமகாதையில் இரண்டைச் சொல்லலாம்; ஒன்று மறைந்திருந்து வாலிமீது அம்பெய்து அவனைக் கொன்றது; இரண்டாவது சீதையைத் தீயில் இறக்கியது.

    அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
    இன்மை அரிதே வெளிறு.
    குறள்: 503) எனும் குறளை நினைவூட்டுகின்றன இராமனின் இச்செயல்கள்.

    தவக்கோலம் புனைந்து இராமன் மேற்கொண்டிருந்த பதினான்கு ஆண்டுக்கால வனவாசத்தின் பெரும்பகுதி இளவல் இலக்குவனோடும் மனைவி சீதையோடும் அமைதியாகக் கழிந்தது; ஆனால், இறுதிப்பகுதியோ சீதையைப் பிரிந்த துயரத்தோடும் அவளைச் சிறையெடுத்துச் சென்ற இலங்கையர்கோனிடமிருந்து மீட்பதற்காக நிகழ்த்திய பெரும்போர்களோடும் கழிந்து ஒரு முடிவுக்கு வந்தது.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப்
    (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

    Share
  • மகாத்மா காந்தி மரண​ நினைவு நாள்

    மகாத்மா காந்தி மரண​ நினைவு நாள்

    சி. ஜெயபாரதன், கனடா

    [1869-1948]

    [சத்தியம், சுதந்திரம், சமத்துவம்]

    அறப் போர் புரிய மனிதர்
    ஆதர வில்லை யெனின்
    தனியே நடந்து செல் ! நீ
    தனியே நடந்து செல் !

    இரவீந்திரநாத் தாகூர்

    http://youtu.be/QT07wXDMvS8

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14

    பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.

    மகாத்மா காந்தி

    Gandhi -1

    முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்!

    கி.மு.399 இல் கிரேக்க வேதாந்த ஞானி சாக்ரெடிஸ் [Socrates] எழுபதாவது வயதில் விஷம் ஊட்டப் பட்டுத் தன் இனத்தாரால் கொல்லப் பட்டார்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏசு நாதர் தன் இனத்தாரால் காட்டிக் கொடுக்கப் பட்டு, ரோமானியரால் சிலுவையில் அறையப்பட்டு செத்து மடிந்தார்! அடிமை வாழ்வு ஒழித்த ஆப்ரகாம் லிங்கன் 1865 ஆண்டில் அமெரிக்கன், ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் சுடப்பட்டு உயிர் இழந்தார்!  ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங் வெள்ளைக் காரன் ஒருவனால் 1968 இல் சுடப்பட்டு மாண்டார்! மகாத்மா காந்தி 1948 ஜனவரி 30 ஆம் நாள் மாலை 5 மணிக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் இந்து மத வெறியன் ஒருவனால் கண்முன் நேரே சுடப்பட்டு “ஹே ராம்” என்று முணங்கிய வண்ணம் மடிந்தார்!

    Hey Ram

    உலக வரலாறு மீள்கிறது [History repeats] ! பல நூற்றாண்டுகளுக் கிடையே அந்த ஐந்து பேர் வாழ்ந்த போதிலும், மனிதரால் கொல்லப்பட்ட அவர்களிடம் ஒளிர்ந்த ஓர் அரிய ஒற்றுமை என்ன ? அனைவரும் மனிதப் பணிபுரிந்த உயர்ந்த மனிதாபிமானிகள்! ஆயுள் உள்ள போது சாதித்ததை விட, அவர்கள் மரணத்தின் பின் உலகுக்குப் போதித்தவை, பிரமிக்கத் தக்கவை!

    ஏசு மகான் சிலுவைச் சின்னம் இமயத்தளவு ஓங்கி வளர்ந்து, உலகிலே மாபெரும் கிறிஸ்துவ மதம் பரவ ஆணிவேரானது. மார்டின் லூதர் கிங் அமெரிக்காவின் மகாத்மா வானார்! மகாத்மா காந்தியைப் பற்றி, ‘முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!’ என்று மகாகவி பாரதியார், காந்தி உயிரோடுள்ள போதே போற்றிப் புகழ்ந்தார். அவரது அமர வாக்கு காந்தியின் மரணத்துக்குப் பின், எத்தகைய மெய்மொழியாய் ஆகி விட்டது! ஆனால் கொலை மரணத்தில் இறந்தவர் எல்லோரும் முடிவில்லாக் கீர்த்தியும், புவிக்குள் முதன்மையும் அடைவ தில்லை! அந்தக் கோணத்தில் பார்க்கும் போது, கொலை செய்யப் பட்ட இந்திரா காந்தியும், அவரது மகன் ராஜீவ் காந்தியும், மகாத்மா காந்தியின் உன்னத மகிமையைப் பெற வில்லை!

    Gandhi's last journey -2

    அகால மரணத்திற்கு அபூர்வ இரங்கல் அறிவிப்புகள்!

    மகாத்மாவின் மரணச் செய்தியைக் கேட்டு 1948 ஜனவரியில், “அகில உலகும் இந்தியாவுடன் சேர்ந்து வருந்துகிறது” என்று அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அவலச் செய்தி அனுப்பி யிருந்தார். காந்தியின் முதற்போர்க் களமாகிய தென் ஆப்பிரிக்காவி லிருந்து, அவரை வெறுத்த தளபதி ஜான் ஸ்மட் “நம்முடன் இருந்த ஓர் இளவரசர் பிரிந்து விட்டார்”  என்று ஒரு புகழுரையை அனுப்பினார். இத்தாலியில் வாட்டிகன் போப் பாண்டவர் பையஸ் XII தனது இரங்கல் மொழியில், “கிறிஸ்துவ மதத்தின் நண்பர், சமாதானத்தின் சீடர் ஒருவர் மறைந்தார்” என்று எழுதி யிருந்தார். சைனாவும் இந்தோனேசியாவும், “ஆசிய விடுதலையின் முதல் மூல கர்த்தா மாண்டார்” என்று கூறி அதிர்ச்சி அடைந்தன.

    ஒன்றான பாரதத்தைத் துண்டு படுத்திய அரசியல் போட்டியாளர் மகமதலி ஜின்னா, தன் இரங்கல் உரையில், “இந்து இனம் உண்டாக்கிய உன்னத மனிதருள் ஒருவர், காந்தி” என்றார். மரணச் செய்தி கேட்டு, இங்கிலாந்தில் லண்டன் மக்கள் கண்ணீர் விட்டனர். காந்தியைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் அவர்கள் நேராகப் பார்த்ததை நெஞ்சம் மறக்க வில்லை! உலக மகா யுத்தம் முடிந்த தறுவாயில் பல சம்பவங்களைக் கேட்ட பிறகு அவர்களை நிலைகுலையச் செய்த நிகழ்ச்சி காந்தியின் கோர மரணம்! காந்தியை வெறுத்த வின்ஸ்டன் சர்ச்சில், வருந்தற் கடிதம் அனுப்பி யிருந்தார். எல்லாருக்கும் மேலாக, நாடக மேதை பெர்னாட் ஷா கூறியது, சிந்திக்க வைப்பது ! “நல்லவராக இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்று காட்டுகிறது, காந்தியின் மரணம்” என்று ஷா கூறினார்.  ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜய லட்சுமி பண்டிட், மாஸ்கோவில் புதிதாகத் திறக்கப் பட்ட இந்திய எம்பஸியில் வருந்தல் பதிவுப் புத்தகத்தை எடுத்து வைத்தார். ஆனால் ஸ்டாலின் வெளித்துறை உறுப்பினர் ஒருவர் கூடத் தன் பெயரை எழுதிக் காந்தியின் மரணத்துக்கு வருத்தம் தெரிவிக்க வில்லை!

    Nehru and Gandhi

    நேர்வழி எதுவெனத் தெரிந்தபின் செய்யாமல் நழுவுவது கோழைத்தனம்

    இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில், மனைவிமார் காமப் பலாத்காரத்திற்கு இரையாகும் போது, குழந்தைகள் கண்முன் கொலை செய்யப்படும் போது, உறவினர் தலைகள் சீவப்படும் போது, பழிவாங்க ஆய்தமோடு ஓடும் இந்துக்களைத் தடுத்துப் பொறுக்குமாறு, காந்தி அகிம்சா வேதம் போதித்தார். “அகிம்சா வழித் தூதரே! சொல்லுங்கள்! எப்படி இந்த நரகத்தில் வாழ்வது ? பஞ்சாபில் இந்துக்களைக் கண்டதும் முஸ்லீம் ஆட்கள் கொலை செய்யும் போது, ஆயுதத்தைக் கைவிட நீங்கள் எப்படிச் சொல்லலாம் ? கசாப்புக் கடை ஆடுகளைப் போல எங்கள் தலைகள் அறுபட்டுக் கூறுபட வேண்டுமா ?” என்று புலம்பெயர்ந்த கூட்டத்தார் யாவரும் கத்தினார்கள்! “காந்தி சாகட்டும்” என்று கூச்சலிட்டார்கள்!

    டெல்லியில் வாழும் காந்தியின் முஸ்லீம் நண்பர்கள், “உயிருக்கு ஆபத்து என அறிந்தும் இந்தியாவிலே தங்குவதா ? அன்றி எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பாகிஸ்தானுக்கு ஓடுவதா ?” என்று கேட்டால், “ஓடிப் போகாமல் தங்கி மரண ஆபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்பது காந்தியின் பதிலாக இருந்தது! போகப் போக, காந்தியின் அறிவுரை, அவரைப் பின்பற்றியவருக்கும் பிடிக்க வில்லை! எப்போதும் இஸ்லாமியருக்குப் பரிந்து, அவர் பேசுவது பலருக்கு வெறுப்பூட்டின!

    “முஸ்லீம்களுக்குப் பகைவன் எவனோ, அவன் இந்தியாவுக்கும் பகைவன். இந்தியா, பாகிஸ்தான் இரண்டிலும் ஒருங்கே அமைதி நிலவட்டும். நாம் ஒருவரை ஒருவர் பகைவராக எண்ணக் கூடாது. இந்துக்கள் குர்ரானைப் படிக்க வேண்டும். முஸ்லீம் பகவத் கீதையின் உட்பொருளை அறிய வேண்டும். நமது மதத்தை நாம் மதிப்பதுபோல், மற்றவர் மதங்களையும் மதிக்க வேண்டும். உயர்ந்த கருத்துக்கள் உருது மொழியில் இருந்தா லென்ன ? சமஸ்கிருதத்தில் இருந்தா லென்ன ? பார்ஸி மொழியில் இருந்தா லென்ன ? அவை எல்லாமே மெய்யான மொழிகள் தான்! நமக்கும் உலகுக்கும் கடவுள் நல்லறிவைத் தரவேண்டும்.” இவை காந்தியின் அழுத்தமான வார்த்தைகள்.

    Tagore and Gandhi

    காந்தியைக் கொல்ல பலவிதச் சதிகள்

    காந்தி இஸ்லமியருக்குப் பரிந்து பேசுவது, சிலருக்கு வேப்பங் காய்போல் கசந்தது! மகாராஷ்ட்ராவில் ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க [R.S.S.S] உறுப்பினர் பலருக்கு எட்டிக் காயாய் இருந்தது. அவர்கள் தூய இந்துக்கள்; மத வெறியர்கள். குறிப்பாக பூனாவைச் சேர்ந்த நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகிய இரு வாலிபருக்கு காந்தி பகைவரானார்! தென் ஆப்பிரிக்காவில் வேலை முடிந்து 1915 இல் பாரதம் திரும்பிய காந்தியை, விடுதலைப் போராட்டத்திற்கு இழுத்து வந்தவரும், ஒரு மராட்டியரே; அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே! 1948 இல் சதி செய்து அவரைக் கொன்றவனும் ஒரு மராட்டியனே! அவன்தான் நாதுராம் விநாயகக் கோட்சே! முதலில் கோட்சே முழுக்க முழுக்க காந்தியை பின்பற்றினான்! 1937 இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு, கைதி செய்யப்பட்டுச் சிறைக்குச் சென்றவன், கோட்சே! பிறகு கொள்கை பிடிக்காமல் அவரை விட்டுவிட்டு ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க இந்து போராட்டத் தளபதி வீர சாவர்க்கரைப் பின் பற்றினான். வீர சாவர்க்கர் இந்து மதத்தைக் காக்க வந்த கடவுளின் தூதராகப் போற்றப்படும் ஒரு பட்டாளிய இந்து [Messiah of Militant Hindu]. சாவர்க்கர் காந்தியின் கொள்கை எல்லாவற்றையும் எதிர்க்கும் ஓர் எதேச்சை அதிகாரி! மெளண்ட் பாட்டன் தனது இந்தியப் பிரிவினைத் திட்டத்தை, 1947 ஜூலை 3 இல் வெளியிட்ட போது, அதைப் ‘பாரதத்தின் இருண்ட நாள்’ என்று பறை சாற்றி, வீர சாவர்க்கர் தனது பூரண எதிர்ப்புத் தெரிவித்தார்!

    Gandhi and Einstein

    40 கோடி [1948] இந்திய மக்களின் விதி, அப்போது காந்தியின் கையில் இருந்தது! பாரதக் கண்டம் இரு துண்டமாக வெட்டுப்படப் போவதை காந்தி எப்போதும் எதிர்த்தார்! ‘என் இறந்த உடம்பு மீதுதான், இந்தியா பிரிவுபட வேண்டும் ‘ என்று வெகுண்டார். ‘இந்தியா பிளவு பட்டால் ஒழிய, இந்து முஸ்லீம் தனித் தனியே சமரசமாய் வாழ முடியாது’ , என்பது வைஸ்ராய் மெளண்ட் பாட்டனின் உறுதியான எண்ணம். நேரு, வல்லபாய்ப் படேல், ராஜாஜி ஆகியோர் மூவரும் இந்தியா இரண்டாய்ப் பிரிவதைத் தவிர வேறு வழியில்லை என்று காந்தியுடன் வாதாடினர்.

    காந்தி பாரதப் பிரிவினைப் போராட்டத்தில் தோல்வி அடைந்தார்! ‘இந்தியா இரண்டாகப் பிளக்கப் பட்டது. ஆனால் காந்தி உயிரைப் போக்கிக் கொள்ள வில்லையே’ என்று கோட்சே ஆங்காரம் அடைந்தான். ‘காந்தியின் அகிம்சா வேதம், இந்து மக்களைக் கோழையாக்கி, எதிர்க்கும் சக்தியை இழக்க வைத்து, எதிரிகள் முன் மண்டியிடச் செய்து விட்டது! மானத்தைக் காக்க இந்து மாதர்கள், காம பலாத்கார வேதனையிலிருந்து தப்பிக் கொள்ள, கிணற்றில் குதித்துத் தம் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்! பலியானப் பெண்களுக்கு அது ஒரு வெற்றி, என்று காந்தி அவர்களது சாவைப் பாராட்டுகிறார்! அப்படிப் பலியாகும் மாதர்களில் ஒருத்தி, அடுத்து என் தாயாக இருக்கலாம்’ என்று கொதித்தான் கோட்சே! ‘பாரத மாதாவின் சதையைப் பசிக் கழுகுகள் உயிரோடு கிழிக்கின்றன! நம் பெண்டிர் நடுத் தெருவில் கற்பழிக்கப் படுவதை, காங்கிரஸ் அலிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன! எத்தனை காலம் பொறுப்பது ? இதற்கு ஒரே முடிவு, காந்தியைக் கொல்ல வேண்டும்’ என்று கொதித் தெழுந்தான் கோட்சே. இந்து மகா சபையில் காந்தியைக் கொல்ல பலவித சதித் திட்டங்கள், வீர சாவர்க்கர் தலைமையில் உருவாகின! குழுச் சதியாளர்கள்: நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கோபால் கோட்சே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா, இன்னும் சிலர்.

    Gandhi fasting and Indira

    மகாத்மா காந்தியின் இறுதி உண்ணா விரதம்

    பாரதப் பிரிவினை ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு ஈடாகத் தர வேண்டிய 55 கோடி ரூபாயை, பாரத அரசாங்கம் பிடித்து வைத்துக் கொள்ளப் போவதை, காந்தி அறவே வெறுத்தார். அவரது எதிர்ப்புத் தர்க்கம் நேருவையும், படேலையும் உடன்பட வைக்க முடியவில்லை! இறப்பதற்கு 17 நாட்களுக்கு முன், 1948 ஜனவரி 13 ஆம் தேதி காந்தி, அதற்காகத் தான் உண்ணா விரதத்தைத் தொடங்கப் போவதாக, பிர்லா மாளிகையிலிருந்து அறிவித்தார். ஓராண்டுக்கு முன்பு இந்து முஸ்லீம் படுகொலைக் கலகத்தை நிறுத்த, காந்தி நெளகாலி நோக்கித் தனியாகத் தைரியமாகப் பாத யாத்திரை செய்தார். அப்போது ரவீந்திர நாத் தாகூரின் ஒரு பாடலைப் [தலைப்பில் உள்ளது] பாடிக் கொண்டு தன் உண்ணா விரதத்தைத் துவங்கினார்.

    சில நாட்கள் கழித்து இந்தியாவின் எல்லை மாநிலத்திலிருந்து, பாரதப் பிரிவினைக் கலகத்தில் பாடுபட்ட சில இந்துகளும், சீக்கியர்களும் கூக்குரலுடன் காந்தியைக் காண வந்தனர். ஆறுதல் மொழி கூறு வந்த காந்தியை, அவர்கள் யாவரும் உடனே திட்ட ஆரம்பித்தனர்! ‘இதுவரை எங்களைக் கொடுமைப் படுத்தியது போதும். முற்றிலும் எங்களை நாச மாக்கி விட்டார்! எங்களைத் தனியே வாழ விடு! இமயத்தில் போய் ஓய்வெடு! ‘ என்று காந்தியை நோக்கிக் கூச்சல் போட்டனர். இக்கடுஞ் சொற்கள் காந்தியின் நெஞ்சை ஊடுருவித் தாக்கின! அவற்றைக் கேட்டு கற்சிலையாய் நின்று விட்டார், காந்தி! அவரது மெலிந்த மேனி மீது ஒரு பெரிய பாறாங்கல் விழுந்து எலும்பு நொருங்கியது போல் உணர்ந்தார்! பிறகு சில நாட்கள் சென்றபின் வேறு ஒரு கூட்டம் வந்து, உண்ணா விரதத்தை நிறுத்துமாறுக் காந்தியைக் கெஞ்சியது. அந்தக் கூட்டத்தில் இஸ்லாமியர், சீக்கியர், இந்துக்கள் எல்லா இனத்தவரும் இருந்தனர்.

    Gandhi -9

    ‘இந்தியாவுக்கு அகிம்சா வழி இனி தேவை இல்லை என்றால், நான் இங்கு உயிர் வாழ்வதிலும் பயனில்லை! பாரதத்தின் தலைவர்கள் ஒருநாள், இந்தக் கிழவனால் நாம் பட்டது போதும்! நம்மை விட்டு அவன் ஒழிந்து போக மாட்டானா ? என்று கூறினால் கூட நான் ஆச்சரியப் படமாட்டேன்’ என்று காந்தி ஒருதரம் சொல்லி யிருக்கிறார்.

    மெளண்ட் பாட்டன் தம்பதியர் உண்ணா விரதத்தில் கிடந்த காந்தியைக் காண வந்தனர். ‘மலையை மகமதிடம் கொண்டு வர, நான் ஓர் உண்ணா விரதம் எடுக்க வேண்டி யிருக்கிறது! ‘ என்று காந்தி நகைப்பூட்டி அவர்களை வரவேற்றார். காந்தியின் மெலிந்து போன உடலைக் கண்டு, எட்வீனா பாட்டன் கண்களில் நீர் பெருகியது! ‘வருத்தப் படாதே, எட்வீனா, காந்தி எதைச் செய்ய விரும்புகிறாரோ, அதைச் செய்து கொண்டிருக்கிறார். அவர் மிகுந்த மனத்திட முடைய மெலிந்த மனிதர்’, என்று மனைவியைத் தேற்றினார் மெளண்ட் பாட்டன்.

    கோபால் கோட்சே, தன் அண்ணன் நாதுராம் கோட்சேயிக்குக் கொடுத்த வாக்குப்படி, ஜனவரி 17 ஆம் தேதி காந்தியைக் கொல்ல .32 காலிபர் கைத் துப்பாக்கியுடன், டெல்லிக்கு வந்தான். ஆனால் அன்று அதை நிறைவேற்ற அவனால் முடியவில்லை!

    Gandhi in UK 1931

    கடேசியில் பெற்ற காந்தியின் வெற்றி!

    இறுதியில் பாரத அரசாங்கம் 55 கோடி ரூபாயைப் பாகிஸ்தானுக்குக் கொடுக்க முன் வந்தது! காந்தி ஜனவரி 18 ஆம் தேதி உண்ணா விரதத்தை நிறுத்தினார். அன்றைய பிரார்த்தனை சொற்பொழிவில் நேரு பேசினார், ‘இந்திய விடுதலை நான் கண்ட ஓர் ஒளிக்காட்சி! ஆசியாவின் எதிர்காலத்தை என் மனதில் வரைந்து வைத்தேன். ஆனால் அந்த ஒளிக்காட்சியை அளித்தவர் ஓர் அரிய, எளிய மனிதர்! அவரைக் காப்பாற்றச் செய்யும் எந்தத் தியாகமும் அத்தனை பெரிய தல்ல! அவர் ஒருவர்தான் நம்மை மெய்யானக் குறிக்கோளை நோக்கி நடத்திச் செல்ல முடியும். அது நம் குருட்டு நம்பிக்கை இல்லை!’

    அன்று கூட்டத்தில் காந்தி பேசினார், ‘பாரத நாடு இந்துக்களுக்கு மட்டுமே! அதுபோல் பாகிஸ்தான் இஸ்லாமியருக்கு மட்டுமே! என்று கூறுவது போல் முட்டாள்தனமான எண்ணம் எதுவும் இருக்க முடியாது! இந்தியா, பாகிஸ்தான் இரண்டையும் ஒருங்கே சீர்திருத்துவது என்பது மிகவும் கடின மானது! ஆனால் நாம் மனம் வைத்து செய்தால், எதுவும் நிச்சயமாக முடியும்!’

    1947 ஜனவரி 20 ஆம் நாள் மிகப் பலவீனமுள்ள காந்தியை, பிர்லா மாளிகைப் பிரார்த்தனை மேடையில் ஒரு நாற்காலியில் வைத்துக் கொண்டு போய் அமர்த்தினர்! அப்போது இந்து மகா சபைச் சதியினர் கொலை ஆயுதங்களோடு கூட்டத்தினுள் நுழைந்தனர். மதன்லால் பாவா பற்ற வைத்த கைவெடி எதிர் பாராதவாறு கூட்டத்தில் வெடித்தது. ஆனால் காந்தி உயிர் தப்பினார். போலீஸ் பாவாவைத் தேடிப் பிடித்துக் கைதி செய்தனர்.

    Gandhi -10

    காந்தி இறப்பதற்கு முந்திய நாள் [ஜனவரி 29, 1948] வியாழக்கிழமை, அவர் அணு ஆயுதங்களைப் பற்றி இந்திரா காந்தியிடம் கூறியது: ‘அணுகுண்டை ஒருங்கே அமெரிக்கா தவிர்க்க வேண்டும். அகிம்சா வழிப் போராட்டம் ஒன்றை மட்டும் அணு குண்டுகள் அழிக்க முடியாது! அணுகுண்டு நம்மைத் தாக்கும் போது, அச்சமின்றி நிமிர்ந்து நின்று மேல் நோக்கிப் பார்த்து, விமானிக்காகப் பிரார்த்திக்க வேண்டு மென்று, என்னைப் பின்பற்று வோரிடம் நான் கட்டாயப் படுத்துவேன்.’ மற்றும் ஒரு சமயம், ‘அகிம்சா இயக்கம் ஒன்றுதான் மனித இனத்தின் கைவசமுள்ள மாபெரும் சக்தி பெற்ற ஓர் ஆயுதம். பேரழிவுச் சக்தியுடைய எந்த யுத்த ஆயுதத்தையும் விட பெரியது, அது!’ என்று சொல்லியிருக்கிறார்.

    இரண்டாம் தடவை ஜனவரி 30 ஆம் தேதி மாலை ஆப்தே, கோட்சே இருவரும் கைத் துப்பாக்கியை மறைத்துக் கொண்டு, காந்தியின் பிரார்த்தனை மைதானத்தில் நடமாடிக் கொண்டிருந்தனர். அன்று கோட்சே வெற்றி அடைந்தான்! காந்தியைக் கொன்ற சதிகாரனாய்ச் சரித்திரத்தில் இடம் பெற்றான்! 1948 மே மாதம் 27 ஆம் தேதி நாதுராம் கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே, சாவர்க்கர் உள்பட எட்டுப் பேர் கைதி செய்யப் பட்டு சதி வழக்குப் பல மாதங்கள் நடந்தது. முடிவில் நாதுராம் கோட்சே, ஆப்தே இருவரும் கொலைக் குற்றம் சாட்டப் பட்டு, நவம்பர் 15 ஆம் தேதி தூக்கிலிடப் பட்டனர்! கோபால் கோட்சே, கார்காரே, பாவா மூவருக்கும் 12 வருட சிறைத் தண்டனை கொடுக்கப் பட்டது! போதிய சாட்சி இல்லாது போனதால், சாவர்க்கர் உள்பட மற்றோர் விடுவிக்கப் பட்டனர்!

    Samarmathi Ashram

    ஜாதி மதங்களைப் பார்ப்போம்! சகிப்போம் மதிப்போம்!

    பாரத அரசியல் நிர்ணயச் சட்டப்படி, இந்தியா ‘மதச் சார்பற்ற [Secular]’ ஒரு குடியரசு. மகாத்மா காந்தி மதச் சார்பற்ற ஒரு பாரத நாட்டை உருவாக்கும் பணிக்கே உயிர் வாழ்ந்தார்; அதை இந்தியாவில் நிலைநாட்டப் போராடியதில் அவர் தோல்வியுற்று மாண்டார்! பாரதச் சட்டங்கள் வழக்கறிஞர் களுக்கும் நீதி மன்ற நீதிபதிகளுக்கும் மட்டுமே பயன்படும் கருவிகள்! பாமர மக்கள், அரசியல் வாதிகள், மதவாதிகள், மடாதிபதிகள் ஆகியோருக்கு, எழுதப் பட்டாலும் அவர்கள் சட்டத்தைப் பின்பற்றுவ தில்லை! இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், புத்த மதம், ஜெயின மதம் இந்திய நாட்டில் பல நூற்றாண்டுகள் வேரூன்றி, இந்து மதத்துடன் இணைந்து உலவி வருகின்றன. ஆயிரக் கணக்கில் நம்மிடையே ஜாதிகள் உள்ளன! பல்லாயிரம் ஆண்டுக் காலம் வளர்ந்து வேரூன்றி விட்ட ஜாதிப் புற்றுநோயை எந்த அறுவை முறையிலும், எத்தனை ஆண்டுகள் முயன்றாலும், அவற்றைப் பாரத மண்ணிலிருந்து களை எடுக்க முடியாது! ‘எம்மதமும் சம்மதமே’ என்று காந்தியின் மரணம், நமக்கு அறிவுரை சொல்லட்டும்! பாரத நாடு இம்மதங்கள் ஒருங்கே தனித்து வாழப் பல நூற்றாண்டுகள் இடம் கொடுத்தது. எல்லோருக்கும் இணையான சமரச வாழ்வைத் தொடர்ந்து, ஏன் பாரதம் அளிக்கக் கூடாது ?

    வட இந்தியாவில் இந்து மத வெறியர்கள், அடிக்கடிக் கிறிஸ்துவக் கோயில்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், அங்குள்ள பாதிரியார் களைக் கொலை செய்தும் வருகிறார்கள்! தாழ்த்தப் பட்ட ஏழை மக்களை, மேலினத்தார் வட நாட்டிலும், தென் நாட்டிலும் படாத பாடு படுத்தி வருகிறார்கள். பாரத்திலே பிறந்து வளர்ந்த புத்த மதத்தினரை, இந்து மதவாதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நசுக்கி பாரத நாட்டிலிருந்து விரட்டி விட்டதால், மிஞ்சிய சிறுபான்மை யினர் இருக்குமிடம் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்! சீக்கியர் தனி நாடு கோரிப் போராடித் தொல்லை கொடுத்துத் துன்புற்று, அவர்கள் கொட்டம் அடக்கப் பட்டு இப்போது சற்று அமைதி நிலவி வருகிறது.

    Einstein on Money

    காந்தி ஏசு நாதரை மிகவும் நேசித்தார். ‘ஏசு நாதரின் ‘மலைப் பிரசங்கம்’ [Sermon on the Mount] காந்தியைக் கவர்ந்த ஓர் அரிய வாக்குரை! இந்து வேதங்கள் மட்டுமே தேவ வாக்குகள் என்பதைக் காந்தி ஒருபோதும் ஒப்புக் கொண்ட தில்லை! அவை ஏன் பைபிளாகவும், கொரானாகவும் இருக்கக் கூடாது ? என்று கேள்வி எழுப்பினார். ‘நீங்கள் கிறிஸ்துவர் இல்லை’, என்று ஒருவர் குறிப்பிட்ட போது, காந்தி சொன்னார், ‘நான் ஒரு கிறிஸ்டியன்! நான் ஒரு இந்து! நான் ஒரு முஸ்லீம்! நான் ஒரு யூதன்!’ அந்த ரீதியில் அவர் மற்றவர்களை விடத் தான் ஒரு தகுந்த இந்தியன், என்று காட்டிக் கொண்டார்.

    ‘எனது ஆழ்ந்த நம்பிக்கை இதுதான்: இந்துக்கள், சீக்கியர், இஸ்லாமியர், கிறித்துவர் யாவரும் ஒரே பாரத மாதாவின் புத்திரர், புத்திரிகள். பாரதத்திலோ, பாகிஸ்தானிலோ நடக்கும் எந்த விதப் படு கொலையும் கண்டு பலிவாங்க முற்பட்டு, நம் மக்கள் கடமை யிலிருந்து பிறழக் கூடாது! பாகிஸ்தானில் உள்ள எல்லா இந்துக்களும், சீக்கியரும் கொல்லப் பட்டாலும், இந்தியாவில் உள்ள ஓர் இஸ்லாமியச் சிறு பிள்ளையைக் காப்பாற்ற நாம் முற்பட வேண்டும்!’ என்பது காந்தியின் வாக்கு!

    News

    இந்தியர் பலருக்குத் தேசப்பற்று குன்றி வருவதைக், காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி முதல் பயணம் செய்யும் எவரும் கண்டு பிடித்து விடலாம்! தேசப்பற்று என்றால், நாட்டு மக்கள், நாட்டு மொழிகள், நாட்டுப் பண்புகள், பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள் மீதுள்ள சகிப்புத்தன்மை, மதிப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் மீது இந்தியர் காட்டும் மனிதத் தன்மை! அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை! மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம்! பாரதத்தின் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்துள்ள, இந்தச் சகிப்பற்ற தன்மைகளே !

    ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா! ஜாதி மதங்களைப் பாரோம்! மற்றும் செப்பும் மொழி பதினெட் டுடையாள், ஆயின் சிந்தை ஒன்றுடையாள்’ என்று பாரத மாதாவைப் பற்றிப் பாரதியார் பாடியதற்கும் இதுதான் அர்த்தம்! ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு’ என்றும் நமக்குக் கூறினார்! நாற்பது ஆண்டுகள் ஒன்றாக எல்லா ஜாதியினரும், எல்லா இனத்தவரும், எல்லா மதத்தினரும் பிரிட்டீஷ் சாம்ராஜியத்தோடு போராடி இந்தியா மகத்தான விடுதலைக் குறிக்கோளை அடைய வில்லையா ?

    Gandhi's last journey

    ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!

    பிரிட்டீஷ் அரசாங்கம் பாரத நாட்டை அடிமைப் படுத்தினாலும், அது செய்த நல்ல காரியங்களும் உண்டு. துண்டுபட்டுப் போன பரத கண்டத்தை ஒன்றாக்கியது பிரிட்டீஷ் அரசு! ஆங்கில மொழி நம்மிடையே பரவி யிருந்ததால், பாரத நாடு கல்வி, தொழில், வாணிபம், விஞ்ஞானம், வேளாண்மை போன்ற எல்லாத் துறை களிலும் முன்னேறி இருக்கிறது. இந்தியாவின் பதினெட்டு மொழிகள் வளர்ச்சி பெற, ஆங்கில மொழி உதவியாக இருந்திருக்கிறது. இந்திய நகரங்கள், பெரும்பான்மை யான ஊர்கள் ரயில் பாதைகளில் இணைக்கப் பட்டு, ரயில்தொடர் வாகனங்கள் ஜாதி மதம் பாராது எல்லா இனத்தாரையும் ஒருங்கே ஏற்றிச் செல்கின்றன. இந்தியத் தபால், தந்தி நிலையங்கள் ஜாதி மதம் பாராது, எல்லா ஊர்களுக்கும் நமது கடிதங்களைப் பரிமாறி வருகின்றன. இந்திய ரயில்தொடர் வாகனங்கள், ஆகாய விமானங்கள் போன்ற சாதனங்களில் நாம் பயணம் செய்யும் போது, ஜாதி, மதம், இனம் எதையும் பார்க்காமல், ஒரு தேச மக்களாய் நடந்து வருகிறோம்! பன்மொழி பேசும் பல்வேறு இந்திய மக்களைப் பிணைக்கும் ஓர் இணைப்பு மொழியாய் ஆங்கில மொழியும் பாரதத்தில் பணி செய்து வருகிறது!

    Gandhi with Ratinam

    இப்போது அடிப்படைவாத இந்துக்கள் மதப் போர்வைக்குள் புகுந்து கொண்டு, இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர் ஆகியோர்க்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள்.  அதனால் நாட்டில் மீண்டும் மீண்டும் எழும் கொலை பாதக எதிர்ப்புகளுக்கும் இந்துக்கள் ஆளாகி வருகிறார்கள். 16 ஆம் நூற்றாண்டில் பாபர் கட்டிய பாப்ரி மசூதியை அயோத்தியாவில் 1992 ஆம் ஆண்டில் இடித்துத் தரைமட்ட மாக்கிய பிறகு, அங்கே சில இந்துக்கள் ராமர் கோயில் கட்டப் புகுவது ஒரு மாபெரும் பிரச்சனைக் குரிய மதச் சம்பவம்! இராமர் பிறந்த புண்ணிய பூமியாகக் கருதப்படும் அந்தத் தளத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமி யருக்கும் நிரந்தர மதப்போரை உண்டாக்கிப் பலரது குருதி வெள்ளம் ஓடி விட்டது! இதைப் பற்றி மத்திய அரசியல் மந்திரி, உமா பாரதி அழுத்தமாகச் சொன்னாராம், ‘பாப்ரி மசூதி தேசீய அவமானச் சின்னம்! ஓர் அடிமைச் சின்னம்! அது நமது தேசப்பற்றைப் பாதிக்கிறது! முகலாய சாம்ராஜியத்தைப் பாரத தேசத்தில் நிலைநாட்டிய ஓர் ஆக்கிரமிப்பாளன் பாபர், பெயரைத் தாங்கி நிற்கிறது! மசூதி இடிப்பில் எந்த விதச் சதித் திட்டமும் இல்லை! அது ஓர் அடிமைச் சின்னம், என்பது எனது உறுதியான நம்பிக்கை’ என்று முழக்கினாராம்!

    Einstein qoutes

    அப்படிப் பார்க்கப் போனால், ஆக்ராவில் உள்ள ‘தாஜ் மஹால்’ ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? டெல்லியில் உள்ள ‘குதுப்மினார்’ கம்பம் ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? மொம்பையில் பிரிட்டீஷ் அரசாங்கம் கட்டிய, ‘இந்தியத் தலை வாசல்’ [Gateway of India] ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? சையத் அகமத் புகாரி உமா பாரதியைத் தாக்கி, ‘பாப்ரி மசூதியை ஓர் அடிமைச் சின்னம் என்பது இஸ்லாமியரை அவமானப் படுத்துவதாகும்! இஸ்லாம் மதத்தை எடுத்துக் காட்டும், ஓர் தனித்துவச் சின்னம் அது’ என்று சீறினார். இராமர் பிறந்த பூமிக்காக தீராத இந்து முஸ்லீம் சண்டைகள், கொலைகள், தீயெரிப்புகள் !

    மீண்டும் வட நாட்டில் 2002 ஆம் ஆண்டில் ‘ராம் ஆலயப் போர்’ தலை தூக்கி யிருக்கிறது! இந்து முஸ்லீம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக், கொலை செய்து பலிவாங்கிக் கொண்டனர்!  இறந்தவர்களில் முஸ்லீம் மக்கள் எண்ணிக்கை மிக அதிகம்! பெரும்பான்மையான அடிப்படை இந்து மத வெறியர்கள், தீங்கிழைக்காத சிறுபான்மை முஸ்லீம் மக்கள் இல்லங்களைத் தீயிட்டு, அவர்களை உயிரோடு கொளுத்தி யிருக்கிறார்கள்! காந்தி எந்த மதச் சண்டைகள் நிகழக் கூடா தென்று தன் ஆருயிரைக் கொடுத்தாரோ, அந்த மதச் சண்டைகள் பாரதத்தில் இன்னும் ஓயவில்லை ! இனியும் ஓயப் போவதில்லை!

    Gandhi -8

    கிறிஸ்துவ ஆலயங்களைத் தீயிட்டுக் கொளுத்திப் பாதிரியாரைக் கொன்ற போதோ, பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்ட மாக்கிய போதோ, சங்கராச்சாரியார் போன்ற இந்து மதாதிபதிகள், இந்து மத வெறியர்களைக் கண்டிக்கவும் இல்லை! தண்டிக்கவும் இல்லை! ராம ராஜியத்தை ஆதரித்த மகாத்மா இருந்திருந்தால், ராம பூமிக்காக மசூதி தகர்க்கப் படுவதைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி யிருப்பார்! கிறிஸ்துவர் புனிதக் கோயில் எரிப்புகளையும், அருட் பாதிரியார் கொலைகளையும் தடுக்க அறப்போர் நடத்தி யிருப்பார்! ஆனால் காந்தி சீடர்கள் என்று சொல்லிக் கொள்பவரும், மதச் சார்பற்ற பாரத அரசின் ஆட்சியாளர்களும் கோரக் கொலைகளை, தீயெரிப்புகளை இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அநாகரீகம், அவமானம், அநியாயம், அறிவீனம்!

    Gandhi Memorial

    வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்!

    மகாத்மா காந்தி இன்னும் மாண்டு போகவில்லை! அவர் ஓர் உலக மனிதாபிமானி! ‘மகாத்மா’ என்னும் பட்டத்தை காந்திக்கு அளித்தவர், கவியோகி இரவீந்திரநாத் தாகூர். ‘உலக சரித்திரத்தில் மகாத்மா காந்தி புத்தர், ஏசுக் கிறிஸ்து ஆகியோருக்கு இணையான இடத்தைப் பெறுவார்’, என்று இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மெளண்ட் பாட்டன் கூறி யிருக்கிறார்.   ரஷ்ய மேதை லியோ டால்ஸ்டாய், விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காந்தியின் ஆயுதமற்ற விடுதலைப் போராட்டத்தைப் பாராட்டியுள்ளார்.  ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங், காந்தியின் அகிம்சாப் போராட்ட முறையைப் பின்பற்றினார். ‘வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்’ என்று பாரதியார் பாடியுள்ளது போல், மகாத்மா காந்தி பிற நாடுகளில் ‘மாதிரி மனிதராய்’  மாந்தருக்கு வழிகாட்டியாய் மறைமுகமாகப் பணி செய்து கொண்டிருக்கிறார்!  ஆனால் இந்தியாவை விட்டு, அவரது ஆத்மா என்றோ போய் விட்டது !  பாழ்பட்டுப் பரிதபிக்கும் பாரத தேசம் தன்னை, இனி வாழ்விப்பது எப்படி என்று விண்ணுலகிலிருந்து கவலைபட்டுக் கொண்டிருக்கிறார், மகாத்மா காந்தி!

    Birla House Memorial

    w.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14

    http://youtu.be/QT07wXDMvS8

    ***************************

    தகவல்:

    1.  Gandhi’s Truth By : Erik H. Erikson (1969)

    2.  Gandhi His Life & Message for the World By:  Louis Fischer (1954)

    3.  The Life of Mahatma Gandhi By : Louis Fischer  (1950/1983)

    4.  http://graysparks.blogspot.com/2011/04/blog-post_18.html

    5.  http://en.wikipedia.org/wiki/Mahatma_Gandhi

    6. http://www.mkgandhi.org/assassin.htm

    7.  http://en.wikipedia.org/wiki/Assassination_of_Mahatma_Gandhi

    8. https://mail.google.com/mail/u/0/#inbox/14b3e9d68711e1e0

    ++++++++++++++++++

    Mohandas Gandhi Timeline

    From the Website : http://www.sparknotes.com/biography/gandhi/timeline.html

    https://mail.google.com/mail/?hl=en&shva=1#all/13465cd01bf5bf45

    Picture from Gandhi Movie with Ben Kingley as Gandhi [1982]

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2GgK_Nq9NLw

    [Mahatma Gandhi Interview]

    http://www.columbia.edu/cu/weai/exeas/asian-revolutions/pdf/gandhi-timeline.pdf

    https://mail.google.com/mail/u/0/#inbox/14b3e9d68711e1e0

    Share
  • கல்வெட்டு வெளிப்படுத்தும் வரலாற்று உண்மை

    கல்வெட்டு வெளிப்படுத்தும் வரலாற்று உண்மை

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    தமிழகத்தில் சற்றொப்ப 60,000 கல்வெட்டுகள் உள்ளதாக அறியப்பட்டாலும் அவற்றின் பொருள் அறிந்து படிப்பவர் மிகக் குறைவு, தொல்லியலார் தவிர. அதனால் கல்வெட்டு தெரிவிக்கும் சமூக, வரலாற்று செய்திகளை இக்கால மக்கள் அறிய முடியாமல் போகிறது. அந்த குறையை போக்க தமிழ் பிராமி கல்வெட்டு 103 ம், இடைக்கால கல்வெட்டு 70 – 80 வரைக்கும் விளக்கம் அளித்துள்ளேன். இது அதில் ஒரு பகுதி. முதலில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தை படித்துவிட்டு பின் கல்வெட்டு  பாடத்தை படித்தால் நன்றாக புரிந்து கொள்ளலாம்.

    வரலாறு அறியாதவர் அரசியல் மேடையிலும் எழுத்திலும் சமூக ஏற்றத் தாழ்விற்கும் வேற்றுமைக்கும் மதம் தான், பிராமணர் தான் காரணம் என்று வெறுக்கத்தக்க முறையில் பொய்யான செய்திகளை பரப்பி மக்களை முட்டாள் ஆக்கிவிட்டுள்ளனர். ஆனால் அதற்கு மாறாகத் தான் கல்வெட்டு தரும் உண்மைச் செய்தி உள்ளது. மன்னராட்சிக் கால ஆட்சியாளர்கள் விருப்பமுள்ள மக்கள் தமது வசதிக்கு தக்கவாறு நல்லது தீயது நிகழ்வுகளை நடத்திக் கொள்ளலாம் என்று பொதுப்பட வைக்காமல் சாதிக்கு தக்கவாறு சலுகைகளையும் உரிமைகளையும் (விருது) வழங்கியதால் பிணக்கு ஏற்பட்டது என்பதை கல்வெட்டுகள் காட்டுகின்றன. மக்கள் தமது முன்னோரின் மெய்யான வரலாற்றை அறிவது மக்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும் மேலும், பெருமை உணர்வை ஊட்டும். ஆனால் இன்று வரலாற்றை ஆய்வோர் தமது சாதி ஆண்ட பாரம்பரையா இல்லையா என்பதை நிறுவுவதற்கே கல்வெட்டை துழாவுகின்றனர் உண்மையை அறிவதற்கு அல்ல. மக்கள் அரசியலாளர் கூறும் பொய் வரலாற்றை புறக்கணித்து கல்வெட்டுச் செய்திகளையே முழுதாக நம்ப வேண்டும். அப்போது தான் பொய்மையும் வெறுப்பும் ஒழியும். இனி கீழே கல்வெட்டு விளக்கத்துடன்.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் மருதங்கிணறு கண்மாய் தூண் 10 வரிக் கல்வெட்டு.

    1. சோணாடு வ
    2. ழங்கியருளிய  சு
    3. ந்தர பாண்டி
    4. ய தேவற்கு யாண்டு 7 வது 
    5. வியாகக் கு
    6. டி ஊற் பறையரில் கண
    7. வதி பொதுவ
    8. னான காராண்மை பறையன் 
    9. நாட்டின அ 
    10. ணை (த)றி      

    காராண்மை – மழைநீர் சேமிப்பு மேலாண்மை; அணை- நீர்க்கரை; தறி – தூண்.

    விளக்கம்:  இக்கல்வெட்டு மாறவர்மன் சுந்தர பாண்டியனின் 7 ஆம் ஆட்சி (பொ.ஆ. 13) ஆண்டில், 1223 இல் வெட்டப்பட்டுள்ளது. ஏரியில் மழைநீர் சேமிப்பு மேற்கொள்ளும் கணவதி பறையன் என்பவன் நீர் அளவை அறியும் பொருட்டு நீர்க்கரையில் தூண் ஒன்றை நாட்டினான் என்பதே செய்தி.

    பார்வை நூல்: ஆவணம் 30, 2019, பக். 30

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தா. வேலூரில் உள்ள வேடியப்பன் கோவிலில் உள்ள 10 வரிக் கல்வெட்டு.

    ஸ்வஸ்தி ஸ்ரீ / மதிரை கொண்ட கோப்பர  / கேசரி பன்மற்கு யாண்டு பதினைந்தா / வது பராந்தகப் பல்லவரையனாள மீ / கொன்றை நாட்டுப் பெருவேளூர் நாட்டுப் பா  /  லை ஏரியில்லழிவு கண்டு கற்றூம்பி / டுவித்து  அதற்குத் தேவதானமு/ மேரிப்பட்டியு மூர்ப்புறமு / மூராரும் பாலைப் பறையன் சாத்தன்னு  /  மு(மா)க அட்டினார் . இது வழியப்பண்ணி / ணவர்  நரகத்துக்குக் கீழா நரகம் புகுவார்.

    அழிவு – உடைப்பு; கல் தூம்பு – கல்லில்ஆன மதக்குத் துளை; இடுவித்து – அமைத்து; தேவதானம் – கோவிலுக்கு கொடையாக கொடுத்த நிலம்; ஏரிப்பட்டி – ஏரியைப் பேண விட்ட நிலம்; ஊர்ப்புறம் – வெட்டவெளி நிலம்;

    விளக்கம்:  இக்கல்வெட்டு முதலாம் பராந்தக சோழனின் 15 ஆம் ஆட்சி ஆண்டில், 922 இல் பராந்தகப் பல்லவரையன் ஆளும் போது மீகொன்றை நாட்டின் பெருவேளூர் நாட்டுப் பிரிவில் அடங்கிய பாலை ஊர் ஏரியில் உடைப்பு ஏற்பட்ட போது அதற்கு கல்லில் மதகுத் துளை அமைத்து அதற்கு கொடையாக அங்கத்து கோவிலுக்கு நிலம், ஏரி பேண நிலம், வெட்ட வெளி நிலம் ஆகியவற்றை ஊராரும் பாலை ஊர் பறையன் சாத்தனும் நீர்வார்த்துக் கொடுத்தனர். இதை அழிப்பவர் நரகம் புகுவார் என்று சபித்து முடிகிறது கல்வெட்டு. இந்த மதகுத் துளை கட்டுமானத்தில் பறையன் சாத்தன் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்பதை அவன் பெயர் குறிப்பு காட்டுகிறது. அவனிடம் நன்கொடை அளிக்கும் அளவுக்கு சொந்தமாக நிலம் இருந்துள்ளது. அவர்ணரான பறையரிடமே நிலம் இருந்தது என்றால் நாலாம் வர்ண சூத்திரரிடமும் நிலம் இருந்திருக்க வேண்டும் அல்லோ!!!!  ஆனால் மனுஸ்மிருதி சொல்வதை மட்டுமே கருத்தில் கொண்டு அம்பேத்கர் சூத்திரருக்கு  சொத்து உரிமை இல்லை என்று சொன்னது பொய் அன்றோ?

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 23, 2012    பக். 28

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் ஸ்ரீ வாசிநாதர் கோவில் 3 வரிக்  கல்வெட்டு

    கீழைக்குறிச்சி ஊராளிகளில் / அழகன் கோனாட்டுப்  பரைய / ன் ஆதி  தன்மம். 

    விளக்கம்:  இக்கல்வெட்டு 16-17 ஆம் நூற்றாண்டினது. வாசிநாதர் கோவில் திருச்சுற்று (பிரகாரம்) வாயிலின் வலது புறம் நடுகல்லாக நடப்பட்டுள்ளது. அதன் ஒரு பக்கத்தில் கழுத்தை தானே வெட்டிக்கொள்ளும் ஒருவருடைய புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் கல்வெட்டு பொறிப்பு உள்ளது. கீழைக் குறிச்சி ஊரில் வாழும் அழகன் கோனாட்டு பறையன் ஆதி என்பான் தன் தலையை வெட்டி உயிர் பலி செய்ததைத் தான் தர்மம் என்கிறது கல்வெட்டு. எதற்காக தலையை வெட்டிக் கொண்டான் என்ற குறிப்பு மட்டும் அதில்  இல்லை. தனது முதலாளி உடல் நன்றாகும் பொருட்டு இது போல் தலையை வெட்டி உயிர் பலி கொடுக்கும் வழக்கம் பிற கல்வெட்டுகளில் காணப்படுவதில் இருந்து இதை அப்படியாக ஊகிக்கலாம்.

    இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவென்றால் ஒரு பறையருடைய நடுகல் கோவில் திருச்சுற்றில் காணப்படுவது தான். தன் தலையை வெட்டிக் கொள்ளும் முன் பறையன் ஆதி கோவிலுள் சென்று சாமி கும்பிட்ட பின் இதை செய்தார் என்றால் 16-17 ஆம் நூற்றாண்டுகளில் பறையர் ஒடுக்கப்படவுமில்லை தீண்டாமைக்கு ஆட்படவுமில்லை என்றல்லவா உறுதி ஆகிறது? பறையர் தீண்டாமை கடந்த 300-350 ஆண்டுகளாக நாயக்கர் ஆட்சியில் ஏற்பட்ட சமூக பிரச்சனை தான். அதற்கு முன் பறையர் கோவிலுள் சென்று சந்தி விளக்கு ஏற்றிய கல்வெட்டு செய்திகள் சில உள. கடந்த 2,000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் ஊரில், கோவிலில் நுழையவிடாமல் தடுக்கப்பட்டனர் என்ற தலித்திய, திராவிடவியல் பொய் பரப்புரையை கிழித்தெறிவதாக உள்ளதன்றோ இக்கல்வெட்டு?

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 22, 2011 பக்.128

    கிருஷ்ணகிரி மாவட்டம் கோடிப்பள்ளி பஞ்சாயத்து குட்டப்பள்ளி கிராமத்தில் உள்ள பெருமாளப்பன் கோவில் அருகே உள்ள 14 வரி சர்வ மானியக் கல்வெட்டு.

    சறுவதான்ய வருஷத்து மா / சி மாதம் பதின்னஞ்சாதி புதுப் / பற்று வல்லேரிபள்ளியில் / பறைஆண்டியேன், நாட்டு மாட்டை இராய நாயக்கர் பிடிச்சு போ / கையில் முத்தையூரிலே சென்று தலை / ப்பட்டு பூசலில் இராகுத்தனுட்டு குதி / ரையையூங் குத்தி தானும் பட்டா . இவனுக் /கு சறுவ மானியமாக பெரிய ஏரியி[ல்] / கீழ்ழேரிலே கல்ல_ _ _ தர்  கண்ட / க கழனியும் இருக்கை கொல்லை மு / பட்டிலே விட்டேன் மனைக்கு [மா]ட்டுக்கு / தலைக்கு. இவை சறுவ மானியமாக  விட்டோம். / நம் வர்க்கத்தாரும்  நம் மக்கள் அவன் மக்கள் மானியம். 

    புதுப்பற்று – புதிய உரிமை நிலம், புறவு நிலம்; உட்டு – உட்பட; தலைப்பட்டு – தடுத்து நிற்க, தோன்றி; பூசலில் – மீட்பு சண்டையில், skirmish; இராகுத்தன்  – குதிரை வீரன்; பட்டில் – வீராசாவில்;சறுவமானியம் – முழுமையும் வரி நீக்கி; கல்லதர் – பருக்கை கல்லிட்ட சிறுவழி; கண்டக – மண் தடுப்பு; கழனி – போரடிக்கும் களமுள்ள நிலம்;இருக்கை – குடியிருப்பு; கொல்லை – புதர் மண்டிய நிலம்; தலை – தரை.

    விளக்கம்:  சர்வதானிய ஆண்டு கி.பி. 1408 இல் மாசி மாதம் 15 ஆம் தேதியில் புதுப்பற்று வல்லேரிப்பள்ளியில் வாழும் பறைஆண்டியேன் நான் சொல்வது யாதெனில், “ஊர் மாட்டை இராய நாயக்கர் கவர்ந்து கொண்டு போன போது இந்த நடுகல் வீரன் அவரது வீரர்களை விரட்டிச் சென்று முத்தையூரில் தடுத்து நிறுத்தி அங்கு ஏற்பட்ட மீட்பு போரில் குதிரைவீரன் உட்பட குதிரையையும் குத்திக் கொன்று தானும் வீர சாவடைந்தான்.  இவனுக்கு முழுவதும் வரி நீக்கி பெரிய ஏரியின் கிழக்கு மேட்டில் தரையிட்ட சிறுவழியொடு மண் தடுப்பு கொண்ட போரடிக்கும் களம் உள்ள வயலும் குடியிருக்கக் கொல்லையும் இந்த வீராசாவிற்காக கொடுத்தேன். இந்த கொல்லையை வீடு கட்டவும், மாடு கட்டவும், வெறும் தரை இடமாகவும் பயன்படுத்தலாம். இதை என் உறவினரும் என் பிள்ளைகளும் அவன் பிள்ளைகளுக்கு அளித்த வரி நீக்கிய நிலம் என்று கருத வேண்டும் என்கிறார்.

    இந்த நடுகல் வீரன் பறைஆண்டியின் கட்டளைக்கு கட்டுப்பட்ட  வீரன் என்று தெரிகிறது. அப்படியானால் பறைஆண்டியை ஒரு படைத்தலைவர் என்றே கொள்ள வேண்டும். அதனால் பறைஆண்டியிடம் மிகுந்த சொத்து இருந்ததை அறிய முடிகிறது. ஆகையால் தான் நடுகல் வீரனுக்கு கொடை கொடுக்க முடிந்துள்ளது.

    பார்வை நூல்: ஆவணம் 32, 2021 பக். 117 & 118

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் விரையாச்சிலை மேல வயலில் பலகை கல்லில்  உள்ள 13 ஆம் நூற்றாண்டு 5 வரிக்  கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி  ஸ்ரீ வதையாத
    2.  கண்டப் பரையன் 
    3. செய்யுங் கிணறும். 
    4. செவ்வலூரார் பேரயர்
    5. கட கண்டன் வயக்கல் 

    வதை – கொல், துன்புறு; பேரயர் – படைத்தலைவர்; கட – பெரிய, மூத்த; வயக்கல் – எல்லை குறிப்பிட்டு பெயரிட்டு கொடையாக கொடுத்த வயல்.

    விளக்கம்:  போரில் கொல்லப்படாமல் தப்பிய கண்டப் பறையன் தான் தப்பிப் பிழைத்தமைக்கு அற உணர்வு மேலிட தனது வயலையும் கிணற்றையும் செவ்வலூராருக்கு கொடையாக கொடுத்தார். எல்லை குறிப்பிட்ட அந்த வயலுக்கு படைத்தலைவன் கட கண்டப் பறையன் வயக்கல் என்று பெயர் சூட்டினர் செவ்வலூரர். வயக்கல் புதுக்கோட்டை, இராமநாதபுரம் வட்டார வழக்குச் சொல்.

    கண்டப் பறையன் நன்கொடை வழங்கும் அளவிற்கு சொத்துகள் வைத்திருந்தது ஒன்றும் வியப்பல்ல ஏனெனில் அவன் படைத்தலைவன். அவர்ணரான பறையரே சொத்தும் பதவியும் பெற்றிருப்பது சூத்திரனுக்கு பதவியோ சொத்தோ இருக்கக் கூடாது என்ற அம்பேதுக்கரின் மனுஸ்மிருதி அடிப்படையிலான குற்றச்சாட்டை இக்கல்வெட்டு பொய் ஆக்கி இருக்கிறது அன்றோ?

    பார்வை நூல்: ஆவணம் 15, 2004.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் வாய்விடாந் தாங்கல் கிராமத்தால் காட்டுப் பகுதியில் உள்ள 27 வரிக் கல்வெட்டு.

    ஸ்வஸ்தி ஸ்ரீ  சீறிமனு மகா மண்டலிசுர /  விபாடன் பாஷைக்குத்  தப்புவராய கண்டன் / ஸ்ரீ வீர பொக்கண்ண உடையார் குமாரர் ஸ்ரீ கம்பண்ண உடையார்க்கு பிரி / திவி ராச்சியம் பண்ணி அருளா நின்ற சகாற்த்தம் 1290 இதன் / மேல் செல்லா நின்ற பிரமாதி வருஷத்து சி[ம்ஹ] ஞாயிற்று அமரபக்ஷ / த்து  யேகாதெசியும் திங்கட்கிழமையும் பெற்ற புணர்பூசத்து நா / ள் ஜயங்கொண்ட சோழமண்டலத்து ஆடையூர் நாடு கீழ்ப்பற்றில் யணி அ(ண்) ணாமலை உடையார் – – –  யினார் தேவதானம் / வாயுளான் ஏந்தலில் யெல்லையிலே பொன்னப் பரையன் – – – / அணி அண்ணாமலை பரையன் ஏந்தலென்று  நத்தமும் கண்டு குடியும் ஏற்றி ஏரியும் / கண்டு கிணறு ஆழ – – – மான் தனைக் காடு / வெட்டி கழனி – – – பெருவிலையாகக் கொண்டு கணி / – – – அணி அண்ணாமலை உடைய / நயினார் திருப்பணிக்கு குடுத்த – – – நிலத்திலே நூறு குழி இறையிலியாக / கல்லுவெட்டி – – – குடுத்த யேந்தல் – – – நஞ்சை புன்சைக்கு / – – – ற்றுடையான் நிலத்துக்கு கிழக்கு கருங்கடி காட்டு வடக்குவெல்லை /  – – – அரசுடையான் ஏந்தல் பழைய வழிக்குத் தெற்கு – – –  இன்னான்கெல்லைக்கு உள்பட்ட / நஞ்சையும் புன்சையும்  நத்தமும் காணியாட்சியாக தந்த – – – /  யும் அணி – – – யித்துப் போகவும் – – – நஞ்சை புன்சை நிலம் / வெட்டிக் – – – கெல்லை தடுத்தாத கொல்லையும் நத்தமும் வடக்கு பனியம் தொண்டி புஞ்சல்லாக / ன்ற இவன் திருத்திய நத்தமும் ஏந்தலும் / ந – – – புன்சை நாற்பாற்கெல்லையும் /  ஏற்றப் பரிக்கிறமங்களும் தான தன்மங்களும் / உரித்திரத்தக்கதாகவும் பழைய ஏரில் நீர் தான கிணறு / நிலத்துக்கு பாக்கி கொள்ளவும். இப்படிக்கு கல்லு வெட்டிக் கு / டுத்தேன் ஆடை நாயனனேன். இவை நாற்பத்தெண்ணா / யிர நம்பி எழுத்து.

    அமரபக்ஷம் – தேய்பிறை; தேவதானம் – கோவிலுக்கு கொடையாக விட்ட நிலம்; ஏந்தல் – உட்கிடை சிற்றூர், பிடாகை, hamlet, தேக்கம்; நத்தம் – வீடு கட்ட விட்ட நிலம்;  தனை காடு –  ; காணியாட்சி – பரம்பரை நில உரிமை; தடுத்தாத  – தட்டி வேலியிடாத; பனியம் தொண்டி – பனியத் தாவரம் வளர்ந்த தோட்டம்; பாக்கி – பகிர்.

    விளக்கம்:  இக்கல்வெட்டு விசயநகர வேந்தர் புக்கண்ண ராயரின் மகன் குமார கம்பண்ணரின் வெற்றியை அடுத்து 1368 ஆண்டு பிரமாதி வருடம் சிம்ம ராசி கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று தேய்பிறையில் ஏகாதசியும் திங்கட்கிழமையும் கூடிய புனர் பூச நாளில் செயங்கொண்ட சோழ மண்டலத்தில் அடங்கிய ஆடையூர் நாட்டு கிழக்கு வயல் புற ஊரில் இறைவன் அணி அண்ணாமலையார்க்கு நிலக் கொடையாக வாயுளான் சிற்றூர் எல்லையில் வாழும் பொன்னப் பறையன் என்பான் அணி அண்ணாமலைப் பறையன் சிற்றூர் எனப் பெயரிட்டு ஒரு சிற்றூரை ஏற்படுத்தினான். அதில் வீட்டு மனையும் ஏற்படுத்தி மக்களையும் குடியேற்றி அங்கே ஏரியும் எழுப்பி கிணறு ஆழப்படுத்தி காடு வெட்டினான். பெருத்த விலைக்கு வயலை வாங்கி அணி அண்ணாமலை இறைவன் திருப்பணிக்கு கொடையாக கொடுத்த நிலத்தில் நூறு குழியை வரியற்ற நிலமாகக் கொடுத்து கல்வெட்டிக் கொடுத்துள்ளான். இந்த புதிய சிற்றூரின் நஞ்செய் புஞ்செய் ஆகியன _ _ _ ற்றுடையான் நிலத்துக்கு கிழக்கிலும் கருங்கடிக் காட்டை வட எல்லையாகவும் _ _ _  அரசுடையான் ஏந்தலுக்கு போகும் பழைய வழியை தெற்காகவும் உடைய நான்கு எல்லைகளை கொண்டது. இந்த அணி அண்ணாமலைச் சிற்றூரின் நஞ்செய் புஞ்செய் மற்றும் வீட்டு அடிமனை ஆகியவற்றை பரம்பரை நில உரிமையாக அனுபவித்துக் கொள்ளலாம் என்கிறான். இந்த நஞ்சை புஞ்சை நிலத்தை வெட்டி அதற்கு நான்கு எல்லையும் ஏற்படுத்தி தட்டி வேலியிடாத புதர் மண்டிய நிலமும் (கொல்லை) வீட்டு மனையும் கொடுத்தது எப்படியெனில் வடக்கில் பனியம் தோட்டம் புஞ்சல் ஆகியவற்றை அகற்றி இவன் ஏற்படுத்தியதாகும்.  வீட்டு மனையும் ஏரியும் நஞ்சை புஞ்சை நாற்பக்க எல்லையும் தக்க செய்முறைக்கும் தான தர்மங்களும் உரித்தாக்குக என்கிறான். பழைய ஏரியில் அமைந்த நீர் தானக் கிணற்றை நிலத்திற்கும் பகிர்ந்து கொள்க என்று இப்படி வழிகாட்டுநெறியை (பிடிபாடு) தந்தான். இதை நன்கொடையை பற்றி ஆடை நாயன் என்ற ஆசாரி கல்வெட்டில் வடித்தார். இக்கொடை  பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதற்கு பிராமணர்  நாற்பத்தெண்ணாயிர நம்பி ஒப்புதல் கையெழுத்திட்டார்.

    பொன்னப் பறையன் ஒரு சிறு  ஊரையே ஏற்படுத்தி அதில் மக்களை குடியேற்றி ஏரிஎழுப்பி நஞ்சை புஞ்சை நிலங்களை கொடை அளிக்கும் அளவிற்கு பெருஞ் செல்வராக இருந்துள்ளார் என்றால் அவர் ஒரு படைத் தலைவராகவோ அல்லது ஆடையூர் நாட்டின் கீழராகவோ இருந்திருத்தல் வேண்டும். அப்படி எனில் அவர் கல்வி கற்றவராகவும் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. படைத்துறை சார்ந்தவர் மேலிடத்திற்கு அவ்வப்போது ஓலை எழுதி அனுப்ப வேண்டும் தனக்கு வந்த மேலிட ஆணை ஓலையை படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஆக உயர் படைப் பொறுப்பில்  இருப்பவர் கட்டாயம் கல்வி கற்றவராக இருக்க வேண்டும்.

    [சூத்திரன் அறிவைப் பெறக்கூடாது. அவனுக்குக் கல்வி போதிப்பது ஒரு பாவம்; ஒரு குற்றச் செயல். ஒரு சூத்திரன்  சொத்து சேர்க்கக்  கூடாது. ஒரு பிராமணன் அவனது சொத்துக்களை தன் விருப்பப்படி எடுத்துக் கொள்ளலாம். சூத்திரன் அரசாங்க பதவியில்  இருக்கக் கூடாது.  சூத்திரன் கொத்தடிமையாகவே பிறந்தவன்; எப்போதும் கொத்தடிமையாகவே வைக்கப்பட வேண்டியவன்.

    (ஆதாரம். சூத்திரர் யார் ? அவர்கள் எவ்வாறு நான்காம் வர்ணத்தவராயினர், ஆசிரியர் டாக்டர். B.R. அம்பேத்கர்)]

    அம்பேத்காரின் மேற்கண்ட கூற்றுக்கு இக்கல்வெட்டு சிரிப்பாய் சிரிக்கிறது. ஏனெனில் அதில் உண்மை துளியும் இல்லை.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 30, 2020  பக். 64-65

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் மதவீர விநாயகர் கோவில் முகப்பு மண்டப நடு உத்திரத்தில் உள்ள 6 வரிக் கல்வெட்டு.

    விகுறுதி வருஷம் பங்குனி மாதம் 6 ஆம் தேதி கானனாட்டுப் படை பத்து இலம்பங்குடியில் பள்ளற்கும் பறையற்கும் விருது சண்டையாக காஞ்சிபுரத்துக்குப்  போய் கல்வெட்டுப் பாத்து வந்தபடி காஞ்சிபுர சுவாமி யேகாம்பரரைய்யன்  காமாட்சியம்மன் கோவில் தானம் மாயேசுரர் சகல / குண சம்பன்னரான பல்லவராயன் பண்டாரத்தின் மனிசர் வேங்கடம் நாயக்கர் இலம்பங்குடி ஊரவற்கும் சகல பாக்கியமும் உண்டாக வேனுமென்று ஆதரித்து வரவிட வேண்டின ஆசிறு பாகம். கானனாட்டு படைப்பற்று இலம்பங்குடியில் பறையற்கும் பள்ளற்கும் சண்டை வளக்குத்தாரமாக  முத்திரை மனுசன் திருவம் / பலய்யனையும் கூட்டி பறையன் உலகங்காத்த சாம்பானும் பள்ளன் ஞானிகாத்தானும் வராக்காட்டினா(ர்)கள். அப்படியே சாதனப்படி பறையர் வலங்கையா இருக்கும் பள்ளர் இடங்கையா யிருக்கும். அவடத்திலே / பறையர் வலங்கைக்கு செல்லுகிறதெல்லாம் நடத்தவும் பள்ளர் இடங்கைக்கு செல்லுகிறதெல்லாம் நடத்தவும் . பள்ளனுக்கு தவுலும் சேமக் / கலம் அஞ்சு பந்தக்காலும், பறையற்கு  கொட்டு மேழதாழம்  பறையருட்டுன கோயில் கிடாத்தரம் பறையருட்டுன மொந்தைக் கள்ளு பறையருட்டுன பன்னிரண்டு பந்தகால் பறையருட்டுனே _ _ _ தங்களை ஏகாம்பரய்யன் காமாட்சியம்மன் ஆதரித்துக் கொண்டருளவும் வேணும், ஆசிறுபாகம். / இப்படிக்கு பாண்டிதிராயர்  பச்சைப் பெருமா எளுத்து. இந்தக் கல்வெட்டு விசுவ முத்திக்காத்தவன் எழுத்து.  சதா சேர்வை  

    படைப்பற்று – படை வீரர்களின் ஊர் அல்லது நிலம், cantonment; விருது – பட்டம், சிறப்பு சலுகை, உரிமை; தானம் – பொறுப்பு அதிகாரி,  ஸ்தானம்; மாகேசுரர் – அறங்காவலர்; பண்டாரம் -கருவூலக் கணக்கு; (ஆசு + இறு) ஆசிறு பாகம் – குற்றம் நீங்கி பக்குவமடைக;  சதானப்படி/சாசனப்படி – எழுத்துச் சான்றுபடி; சேமக்கலம் – ஒரு தட்டை கட்டையால் அடித்து ஒளி எழுப்புதல்; கிடாத்தரம் – ஆட்டின் தலையாக இருக்கலாம்; சதா சேர்வை – எப்போதும் வணங்கி நிற்கும்.

    விளக்கம்:  இது 16 ஆம் நூற்றாண்டில் 1530 அல்லது 1590 இல் விக்ருதி ஆண்டு பங்குனி மாதம் 6 ஆம் தேதி வெட்டப்பட்ட  கல்வெட்டு. கானநாட்டுப் படை ஊரில் வாழும் பறையருக்கும் பள்ளருக்கும் சிறப்பு சலுகை, உரிமை (விருது) காரணமாக பிணக்கு ஏற்பட்டு சண்டை எழுந்தது. அதை தீர்க்க காஞ்சிபுரம் சென்று கல்வெட்டு பார்த்து தெளிந்து வந்தனர். அதை விவரிப்பதே இக்கல்வெட்டு. காஞ்சிபுரம் ஏகாம்பர ஈசுவரன், காமாட்சியம்மன் கோவில்களின் பொறுப்பு அதிகாரி எல்லா குணமும் நிரம்பிய பல்லவராயன் ஆவணக் கருவூல கணக்கர் வேங்கடம் நாயக்கர் இளம்பங்குடி ஊராருக்கு எல்லா நலமும் உண்டாக வேண்டும் என்று ஆசீர்வாத மொழி பேசி வரவழைத்து உமது குற்றம் நீங்கி பக்குவமடைவதாக என வாழ்த்தினார். கானநாட்டுப்  படை ஊர் பறையருக்கும் பள்ளருக்கும் ஏற்பட்ட சண்டை வழக்கு தொடர்பாக முத்திரை மனிதர் திருவம்பலய்யனையும் உடன் அழைத்து வந்து பறையன் உலகங்காத்த சாம்பனையும் பள்ளன் ஞானிகாத்தானையும் ஒருசேர வரவழைத்தார்கள். ஆவண எழுத்தின்படி பறையர் வலங்கையாய் இருப்பர்; பள்ளர் இடங்கையாய் இருப்பர். அப்படியான நிலையில் பறையர் வலங்கைக்கு உண்டானதெல்லாம் நடத்திக் கொள்ளலாம், பள்ளர் இடங்கைக்கு உண்டானதெல்லாம் நடத்திக் கொள்ளலாம். பள்ளர் தவிலும், சேமக்கலனும் முழக்கலாம், ஐந்து பந்தக்கால் நடலாம். பறையருக்கு கொட்டு மேளதாளம், பறையருக்கு உண்டான கோவிலில் பலியிடப்படும் ஆட்டின் தலை, மொந்தைக் கள், 12 பந்தக்கால் நடுதல் ஆகிய உரிமைகளை சலுகைகளை (விருது) அனுபவிக்கலாம் என்று சொல்லி உங்களை ஏகாம்பர ஈசனும் காமாட்சி அம்மனும் ஆசீர்வதித்து அருளவேண்டும், குற்றம் நீங்கி பக்குவமடைக என்று வாழ்த்தி அனுப்பினர். இப்படியாக நடந்து கொள்க என்று பாண்டித்திராயர் பச்சைப் பெருமாள் ஆணை ஓலை தந்தார். இதை விசுவ முத்திகாத்தவன் என்ற ஆசாரி கல்வெட்டாக வடித்தான். எப்போதும் வணங்கி நிற்கும் என முடிகிறது.

    பள்ளரும் பறையரும் போரில் ஈடுபட்டதால் தான் அவருக்கென்று தனிப் படைஊர் ஏற்படுத்தி அதில் குடியேற்றும் நடைமுறை இருந்துள்ளது என்பது இக்கல்வெட்டால் உறுதி ஆகிறது. பள்ளரைவிட பறையருக்கு அதிக சலுகையும் உரிமையும் இருந்ததால் அது பிடிக்காத பள்ளர் அதை எதிர்த்தனர், தடுத்தனர். இவ்வாறான பிணக்கு மன்னராட்சியில் அரசர்களின் ஒரு தலைச் சார்பான உரிமை வழங்கல் காரணமாகவே எழுந்தது என்று தெளிவாகிறது. ஆனால் எல்லா சமூக வேற்றுமைக்கும் ஏற்றத் தாழ்விற்கும் இந்து மதம் தான் காரணம், பிராமணர் தான் காரணம் என்று பொய் உரைக்கின்றனரே அறியா மூடர்? உண்மையில் இன்றைய சமூக வேற்றுமை, ஏற்றத் தாழ்விற்கு இந்த ஆட்சியாளர்கள் தான் பொறுப்பு எனில் அவர் வழிவந்த ஆண்ட பரம்பரை, அடக்கி ஆண்டவர், பார் ஆண்டவர், மண் ஆண்டவர் என மார்தட்டிக் கொள்ளும் நிலவுடைமைச் சாதிகளை தானே இன்றைய வேற்றுமைக்கு ஏற்றத் தாழ்விற்கு பொறுப்பாக்க வேண்டும்?

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 15, 2004  பக். 32

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் கோவிலூர் சிவன் கோவிலில் உள்ள 3 வரிக் கல்வெட்டு

    1. கோனேரின்மை கொண்டான் தலையூர் நாடு, வெங்கால நாடு, அரைய நாடு, இடைபுளுகி நாடு, வடகரை நாடு, மணலூர் நாடு, தட்டையூர் நாடு, கிழங்கநாடு உள்ளிட்ட பற்றில் கண்மாளர்க்கு பதினஞ்சாவது ஆடி மாதம் முதல் தங்களுக்கு 
    2. நன்மை தீமைக்கு இரட்டைச் சங்கும்  ஊதி பேரிகை யுள்ளிட்டன கொட்டுவித்துக் கொள்ளவும்  தாங்கள் புறப்பட வேண்டும் இடங்களுக்கு பாதரக்ஷை கோர்த்து கொள்ளவும் தாங்கள் வீடுகளுக்கு சாந்திட்டுக் கொள்ளவும் சொன்னோ
    3. ம் இப்படிக்கு இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு அசந்திராதித்தவத் செல்வதாகத் தங்களுக்கு வேண்டின இடங்களிலே கல்லிலும் செப்பிலும் வெட்டிக் கொள்க.  

    பிடிபாடு – வழிகாட்டுநெறி, guidelines; சாந்து – சுண்ணாம்பு அடித்தல்

    விளக்கம்:  இக்கல்வெட்டு கொங்கு சோழன் வீர ராசேந்திரனின் 15 ஆம் ஆட்சி ஆண்டில், 1222 இல் வெட்டப்பட்டது. தலையூர் நாடு, வெங்கால நாடு, அரைய நாடு, இடைபுளுகி நாடு, வடகரை நாடு, மணலூர் நாடு, தட்டையூர் நாடு, கிழங்க நாடு ஆகிய நாடுகளில் வாழும் ஐந்து தொழில் கம்மாளர்கள் தமது வீட்டு நல்லது, கேட்டது நிகழ்ச்சிகளுக்கு இதற்கு முன் இல்லாத உரிமையான (விருது) இரட்டை சங்கு ஊதுதல், பேரிகை கொட்டுதல் ஆகிய உரிமைகள் (privileges) ஆடி மாதம் முதல் வழங்கப்பட்டதுடன் வெளியே ஊர் செல்லும் போது கால்களில் செருப்பு அணியும் உரிமையும் தரப்பட்டது.  தமது வீடுகளுக்கு சுண்ணாம்பு சாந்து அடித்துக் கொள்ள அனுமதி இல்லாததை ரத்து செய்து புதிதாக வீர ராசேந்திரன் ஆட்சிக் காலத்தில் அதற்கு  அனுமதி தரப்பட்டது. இந்த ஓலை உரிமையை வழிகாட்டு நெறியாகக் கொண்டு சந்திர சூரியன் நிலைக்கும் காலம் வரை இது செல்வதாக உரிமை  தரப்பட்டது. சுதந்திரமாக மக்கள் தம் விருப்பப்படி, இயலுமைப்படி வாழ முடியாமல் சமூக ஏற்றத் தாழ்வுடன்  வாழ்க்கை வாழ்ந்ததற்கு ஆட்சியாளர்களே முழுக் காரணம் என்பதை இக்கல்வெட்டு தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. ஆனால் இந்து மதம், பிராமணர் தான் சம உரிமை மறுப்பிற்கு காரணம் என்று அரசியல் மேடையிலும் எழுத்திலும் பொய் பரப்பப்படுவது நோக்குக.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 19, 2008, பக். 8

    விழுப்புரம் மாவட்டம் திருவாமாத்தூர் அபிராமீசுரர் கோயில் இரண்டாம் திருச்சுற்று திருகு சுவரில் உள்ள 11 வரிக் கல்வெட்டு .

    பரா(ப)வ ஆண்டு புரட்டாசி மாதம் 3 நாள் ஸ்ரீ மன் மகா மண்டலேசுரன்  சதாசிவ தேவ மகாராயர்  காரியத்துக்கு கத்தரான நாயகர் / சூரப்ப நாயக்கரய்யன் பார்வத்தம்மான திருவதி ராச்சி(ய)த்தில் கைக்கோளர் பூறுவத்தில் / திருவதி வில்லியநல்லூர் பூறுவத்தில் கல்வெட்டை நா(ட்)டில்  இலை வாணியர் அழிக்கயில் / எங்களை அவதாரமும் கொண்டு எங்கள் விருது பகடை ஒழிய / நாங்கள் இல்லாத விருது சொல்ல கடவோம்  அல்லாகவும் சொன்னதே / உண்டானால் ஆயக்கனையும்பட்டு ஆயிரத்து அஞ்நூறு பொன் இறுக்க (க)டவோம்  ஆக /  வும் . இப்படி சம்மதித்து கல்வெட்டி குடுத்தோம் நாட்டு கைக்கோள(ர்)க்கு  / நாட்டில் இலை வாணியர்  _ _ _ .  இப்படிக்கு கல்வெட்டு திருவதி சிராபட்ட ஆசாரி . இப்படி அறிவோம் ஆண்ட நாயக்க பட்டர்  / திருவதி சந்திரன்.  

    பூர்வம் – முன்னொரு காலம்; திருவதி – சிறப்பு அடைமொழி, ஊர்ப்பெயர்; அவதாரம் -கீழ்மைப்படுத்தி;  விருது – பட்டம், சிறப்பு சலுகை உரிமை; பகடை – பெருமை என்னும் பக(ட்)டு, ஆயக்கன் – வரி, தண்டனை ; இறுக்க – கட்ட, பொன் – வெள்ளிக் காசு.

    விளக்கம்:  இக்கல்வெட்டு விசயநகர வேந்தர் சதாசிவ தேவ மகாராயரின் ஆட்சியில் பிரபவ ஆண்டு 1547 இல் புரட்டாசி மாதம் 3 ஆம் நாளில் வெட்டப்பட்டது. சதாசிவ தேவ மகாராயரின் செயல் அலுவலர் சூரப்ப நாயக்கரய்யன் மேற்பார்வையில் உள்ள திருவதி ராச்சியத்தில் கைக்கோளர் (செங்குந்தர்) முன்னொரு காலத்தில் அவர் வாழ்ந்த வில்லியநல்லூரில் முன்னொரு காலத்தில் அவ்வூரில் இருந்த கல்வெட்டை இலை வாணியர் அழித்து, எம்மை தரக்குறைவாகத் திட்டி, எமது சலுகை, உரிமை, பெருமை அழிய “நாங்கள் இல்லாத சலுகையை உரிமையை (விருது) கொண்டாடுவதாகவும் குற்றம் சாட்டினர். அப்படி அல்லாமல் நாங்கள் சொன்னதே உண்மையாகுமானால் தண்டனைப்பட்டு அதற்கு 1,500 வெள்ளி காசு கட்டுவோம்” என்று இலை வாணியர் ஊர் கைக்கோளர்க்கு கல்வெட்டு பொறிக்க ஒப்புதல் கொடுத்தனர். இதை கல்லில் வெட்டியவர் திருவதி வாழ் சிராபட்ட  ஆசாரி. இதற்கு திருவதி வாழ் ஆண்ட நாயக்க பட்டர் சந்திரன் சாட்சியாக ஒப்பம் இட்டார்.

    கைக்கோளருக்கு இருந்த சலுகையும் உரிமையும் தமக்கு இல்லாமையால் தான் பொறாமை கொண்ட இலை வாணியர் சிலர் வில்லியநல்லூர் கைக்கோளர் கல்வெட்டை முன்பு சிதைத்துவிட்டார். இது கடந்த கால மன்னர்கள் சமத்துவப்  பார்வை இன்றி செய்த செயலின் எதிர்வினை ஆகும். ஏனெனில் கைக்கோளர், சேனைக்கு கடையார், வாணியர் என்போர் முன்பு போர்த் தொழில் செய்யும் பட்டடைக் குடியாக, இதாவது போர்க் குடியாக இருந்தவர். இரண்டாம்  குலோத்துங்கன் ஆட்சியில் பெரிய புராணம் தொகுக்கப் பெற்று அதனால் ஏற்பட்ட சைவ சமய எழுச்சியால் இந்த போர்க் குடிகளுக்கு போர்த் தொழில் கொலைத்தொழில் என்று கருத்தேற்றப்பட்டு அதை விட்டு நீங்க வணிகத் தொழில் உரிமை வழங்கப்பட்டது. அதன்படி கைக்கோளர் தறித் துணி விற்கவும், வாணியர் வெற்றிலை,கயிறு விற்கவும், சேனைக் கடையார் செக்கு எண்ணெய் விற்கவும் உரிமை தரப்பட்டது. அதன் விளைவு போர் புரியும் குடிகள் வெகுவாக குறைந்ததால் சோழப் பேரரசு அடுத்த ஒரே நூற்றாண்டில் விழுந்தது. அதுமுதல் தமிழகம் 650 ஆண்டுகளாக அயலவர் ஆட்சிக்கு அடிமைப்பட்டது. இன்று வரை அதிலிருந்து மீளவே இல்லை. வந்தேறிய அயலவர் விளைநிலத்தை கவர்ந்து கொண்டனர் அதனால் தமிழர் வாழ்வுரிமை இழந்து ஒடுக்கப்பட்டனர். இது சைவர் தமிழகத்திற்கு ஆற்றிய திருத்தொண்டு என்று நகையாட்டாக சொல்ல வேண்டியுள்ளது.

    பார்வை நூல்: விழுப்புரம் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி III, பக். 191&192, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு.

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் அரமலை ஊர் பாறை 4 வரிக் கல்வெட்டு

    1. சாகாத்தம் 1469 மேல் செல்லா நின்ற ஆனந்த வருஷம் சித்திரை 5 நாள் அரச மீகாமன் நிலை ஊராக அ
    2. மைந்த  ஊரவரோம் . மேற்படியூர் வலவற்கு நின்றையும் இட்டபடிக்கு சவம் அடக்கிறதும் துறை ஆற்றுகிறதும் 
    3. மியானக் கரைக்கு சுழுந்து இடவேண்டாம் என்று சட்டன் இட்டுக்குடுத்தபடிக்கு அரச மீகா
    4. மன் நிலை ஊரவர் சொற்படிக்கு வாழைக்குறிச்சி தொண்டைமானார் _ _ _ பெருமாள் எழுத்து.

    மீகாமன் – கப்பல் செலுத்துபவன், படையை வழிநடத்துபவன், guide; நிலை – தங்குமிடம்; வலவர் – முத்தரைய வலைஞர், மீனவர்; நின்றை – தீர்மானம், நிலையான அறிவுறுத்தல், standing instruction; துறைஆற்று – இடம் ஏற்பாடு செய்தல், proper  arrangement; சுழுந்து – சுளுந்து எனும் பிணஎரி விறகு  மேடை,சட்டன்  – சட்டம்.

    விளக்கம்:  இக்கல்வெட்டு 1547 இல் நாயக்கர் ஆட்சி காலத்தில் சித்திரை 5 ஆம் நாள் வெட்டப்பட்டது. “அரச படையை  வழிநடுத்துபவன் நிலைத்து தங்கும் அரமலை ஊரவரோம்; இவ்வூரில் வாழும் முத்தரைய மீனவர்க்கு நிலையான அறிவுறுத்தல் வைத்தது யாதெனில் இவ்வூரில் பிணஅடக்கம், அதற்கான இட ஏற்பாடு, பிண எரிமேடைக்கு விறகு இடுதல் ஆகிய மூன்று வேலைகளை செய்யக்கூடாது” என்ற கட்டளையை சட்டமாக ஆக்கி வாழைக்குறிச்சி தொண்டைமான் _ _ பெருமாள் அரச படையை வழிநடுத்துபவன் நிலைத்து தங்குகின்ற அரமலை ஊரார் கேட்டுக் கொண்டபடி ஆணை ஓலையை எழுதிக் கொடுத்தார்.

    மீனவ முத்தரையர் சிலர் பிழைப்பிற்கு வேறு வழியின்றி இடுகாட்டில் பிணம் கையாளும் தொழிலை மேற் கொள்ளத் தொடங்கினர். இத்தொழிலின் இழிவு கருதி இதனால் வரும் குல இழிவு கருதி அதே மீனவ வகுப்பினர் இந்த இழிவை முளையிலேயே கிள்ளி எறியும் பொருட்டு நாடாளும் வாழைக்குறிச்சி தொண்டைமானிடம் தடை சட்டம் பெற்றது ஒரு வகைஒடுக்குமுறை ஆகும். இதே போன்ற தடை ஆணை, கட்டுப்பாடு மூலம் தான் இன்றைய ஒடுக்கப்பட்ட, தீண்டாமை சாதிகள் 17 ஆம் நூற்றாண்டில் உருவாயின. அதற்கு முன் அவர்கள் படை வீரர்கள்.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 8, 1997, பக். 4

    முற்றும் 

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 25

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 25

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    வசந்தராசன் கவிதைகளில் வடிவக் கோட்பாடுகள்

    ஆய்வு முன்னுரை

    கவிதைகளின் யாப்பமைதியை அவற்றின் வடிவம் என்று கூறலாம். தொடைகளும் அவற்றின் விகற்பங்களும் வடிவத்தை நிர்ணயிக்கும் கூடுதல் காரணிகளாகப் பணியாற்றுவதும் உண்டு. இது பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் ஆய்வாளர் பலரும் தங்கள் நுண்மாண் நுழைபுலத்தால் நுண்ணிய செய்திகளையும் கண்டு கூறுவர். பாடலொன்றை எடுத்துக் கொண்டு அதன் பெயர் இனம், தொடை, விகற்பங்கள் முதலியவற்றையெல்லாம் விரித்துக் கூறுவர். இந்தக் கட்டுரையில் அத்தகைய நுட்பமான ஆய்வு முறை மேற்கொள்ளப்படவில்லை. பண்ணை கவிக்கோ வசந்தராசன் அவர்கள் அவ்வப்போது முகநூலில் எழுதி வரும் கவிதைகளின் யாப்பமைதியைப் புதிய நோக்கில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    1.0. இலக்கிய வடிவங்களும் கவிதையும்

    இலக்கியத்தின் வடிவங்கள் பல. செய்யுள், நாடகம், சிறுகதை, புதினம், புதுக்கவிதை என அவை விரியும். இறக்குமதியான வடிவங்களும் கவிதைகளில் இடம் பெறுவதுண்டு. தமிழைப் பொருத்தவரையில் கவிதையே தலைசிறந்த வடிவமாக எல்லாராலும் ஏற்பளிக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில்கூடப், ‘புதுக்கவிதை’ என்னும் வழக்கைப்போல் ‘புதுச்சிறுகதை’, ‘புதுநாடகம்’ என்னும் வழக்கின்மை நோக்குக. புதுமையானதை ஏற்றுக் கொள்ளும் பாங்கும் ஆழந்த உணர்ச்சிகளையும் ஒன்பான் மெய்ப்பாடுகளையும் குறைந்த சொற்களில் வெளிக்கொணரும் சிறப்பும் கவிதைக்கு இருப்பதே ஏனைய வடிவங்களைவிடவும் இது சிறப்பாகக் கருதப்படுவதற்கான காரணங்கள் எனலாம். எனவேதான் கற்பனை, உணர்ச்சி, வடிவம், கருத்து என்னும் இலக்கியக் கூறுகள் பற்றி ஆராயும் ஆய்வாளர்கள் கவிதைகளையே தேர்ந்தெடுக்கிறார்கள்.

    1.1. கவிதை வடிவங்கள்

    “கலையின் வடிவமே கலைஞரின் உள்ளத்தையும் கற்பவரின் உள்ளத்தையும் தொடர்பு படுத்தும் கருவியாகும்” வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா அவற்றின் இனங்கள் எனப் பல்கிப் பெருகிய தமிழில் சிந்துகளும் வந்து கலந்த வரலாறு உண்டு. இவற்றுள் எதிலும் அடங்காத நாட்டுப்புறப் பாடல் வடிவங்களும் சிலப்பதிகாரம் முதல் இன்றைய புதுக்கவிதை வரை தங்கள் இலக்கிய உரிமையை நிலைநாட்டியிருக்கின்றன. யாப்பே மரபு என்பார் உள்ளத்து இருத்த வேண்டிய இன்றியமையாத செய்தி இது.

    1.2. வடிவத்தின் வரையறை, பயன், இன்றியமையாமை

    உணர்ச்சியின் வெளிப்பாடே கவிதை என்பது உண்மையே. ஆனால் அழகான கற்பனையும் பொருத்தமான வடிவமும் அமையாவிடின் கவிதையின் படைப்பு நோக்கம் முழுமை பெற இயலாது. படைப்பவனின் உணர்ச்சியனுபவத்தை நுகர்வோனுக்குக் கொண்டு சேர்க்கும் தனித்ததொரு ஊடகமாகச் செயல்படுவது வடிவமே.

    “கவிஞர் தன் எண்ணத்தையும் உணர்ச்சியையும் பிறருக்கு உணர்த்த முற்படும் ஆழ்ந்த முயற்சிகளே வடிவமாகும்.  இலக்கியம் அழகு பெறுவது வடிவத்தால்”

    என்பார்கள் அறிஞர்கள். உணர்ச்சிக்கும் கருத்துக்கும் இசைந்த வடிவம் அமையாவிடிலோ அவை தம்முள் மாறுபட அமைந்துவிடிலோ கருச்சிதைவைப் போலப் படைப்புச் சிதைவும் தடுக்க இயலாமற் போய்விடுவதோடு இலக்கியத்தின் வெற்றியும் பெருமளவுக்குப் பாதிப்புக்கு ஆளாகும். “ஓர் இலக்கியம் சிறந்ததா இல்லையா என்பது அதனுள் அமைந்த உணர்ச்சியின் விழுப்பத்தைப் பொருத்தது, ஓர் இலக்கியம் நன்கு அமைந்ததா இல்லையா என்பது உணர்ச்சிக்குத் தரப்பட்ட வடிவத்தைப் பொருத்தது” மகாகவி பாரதி அனைத்து கவிதை வடிவங்களையும் அறிந்தவர். ஆனால் அவர் பாஞ்சாலி சபதத்தைக் குறிப்பிட்ட வடிவத்தில் எழுதாமல் விருத்தம், சந்த விருத்தம், சிந்து முதலிய வடிவங்களைக் கையாண்டு நிறைவு செய்திருப்பதற்குக் காரணம் உணர்ச்சிக்கேற்ற வடிவம் தர தன்னை இழந்ததுதான்.

    1.2.1. யாப்பின் மந்தணம் ஓசை ஒழுங்கே

    யாப்பு என்பது இயற்றமிழ் இலக்கணம். இசைத்தமிழ் இலக்கணமன்று. எனினும் அதன்கண் நுட்பமாக அமைந்துள்ள ஓசையொழுங்கே அதன் கொடுமுடியாகும். ‘இன்ன சீர்கள் இன்னவாறு அமைந்தால் இன்ன தளைகள் தோன்றும். தோன்றவே இன்ன ஓசை புலப்படும்’ என்பது யாப்பறி கல்வியின் தொடக்க நிலையாகும். குறிப்பிட்ட ஒரே யாப்பில் அமைந்த பாடல்கள் பலவற்றைப் பலகாலும் பயின்று ஓசையொழுங்கின் அடிப்படையில் பாடல்கள் படைக்கப்படின் அப்பாடல்களில் முறையான தளையும் வரவேண்டிய சீரும் தாமாகவே அமையும் என்பது யாப்பறி கல்வியின் இறுதி நிலையாகும். “யாப்பில் வந்தடங்கும் வார்த்தைகளே கவிதையாகும்” என்னும் சுரதாவின் வரிகள் காட்டும் கவிதை அரிச்சுவடி இதுதான்.

    1.2.2. யாப்பும் படைப்பும்

    கலத்தையும் காரிகையையும் மட்டும் கற்றுப் பாடல் எழுதுகிறவர் வெறும் சொற்களைப் பின்னுகிறவராகத்தான் இருப்பர். ஒலி நயத்தின் அடிப்படையில் கற்பனை கலந்து கருப்பொருள் பாடுகிறவர் ‘கவிஞராக’ ஒளிர்வர். தமிழ்க்கவிதை உலகைப் பொருத்தவரையில் இலக்கியத்தின் பொற்காலம் எனப் புகழப்படும் சங்கக் காலம் தொடங்கிப் “புதுக்கவிதை”யின் பொற்காலம் எனப் புகழப்படும் தற்காலம் வரை இவ்வடிப்படையில் அமைந்த படைப்புக்களே காலத்தை வென்று நிற்கின்றன. இன்றைய கவிதைப் படைப்பாளர் பெரும்பாலோர் மரபுவழி வந்த யாப்பமைப் பாடல்களைப் பாட எத்தனிக்கும்போது அவர்கள் கொள்கிற அச்சமே இதற்குப் போதிய சான்றாகும்.

    பொங்கிவரும் உணர்ச்சிகளைக் கவிதைப் படைப்பாக மாற்ற முயலும் படைப்பாளனுக்கு யாப்புப் பற்றிய தெளிந்த அறிவும், உணர்ச்சிகளுக்கேற்ற வடிவத்தைத் தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கை உணர்வும் பெரிதும் தேவைப்படுகின்றன. நிதானம், பொறுமை, தெளிந்த அறிவு, நிறைந்த பயிற்சி முதலியவை ஒருங்கிணைந்தாலேயொழிய இந்தக் கவிதை வித்தையில் அர்ச்சுனர் ஆவது கடினம்.

    1.2.3. உணர்ச்சியும் வடிவமும்

    யாப்பு உணர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது என்பவர் தமிழ்க்கவிதை மரபையும் வரலாற்றையும் துளியும் அறியாதவரே. புகழேந்திப் புலவர் நளவெண்பாவை நேரிசை வெண்பாவில் பாடினார். அபிராமி பட்டர் தமது அபிராமி அந்தாதியை ‘யாப்பின் பாசக்கயிறான’ கட்டளைக் கலித்துறையில் பாடிக்காட்டினார். ஆண்டாள் கலிவிருத்தத்திலும் கொச்சகக்கலியிலும் பாசுரங்களையும் பாவையையும் பாடினார். ‘பாவை பாடிய வாயால் கோவை’ பாடிக் கொச்சகக்கலியிலும் கட்டளைக் கலித்துறையிலும் கொடி நாட்டினார் மணிவாசகப்பெருமான். இந்த இலக்கியங்கள் எல்லாம் உணர்ச்சிக் கொந்தளிப்பு என்பதை ஒருமுறை ஓதுபவரும் உணர்ந்து கொள்ளலாம். வடிவமோ அதற்கான காரணியாகிய யாப்பும் கவிஞனின் உணர்ச்சி வெளிப்பாட்டிற்குத் தடையாக இருந்ததே இல்லை. தற்காலத்திய இத்தகைய புலம்பலுக்குக் காரணம் உணர்ச்சியற்றவர்களெல்லாம் கவிதை புனைய எத்தனித்ததே. மேற்சொல்லப்பட்ட பல்வகை யாப்புக்களும் அவை பயன்படுத்தப்பட்டிருக்கும் இலக்கியப் பொருண்மைகளும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. உணர்ச்சிக்கேற்ற யாப்பு என்பதே தமிழ்க்கவிதைகளின் வடிவக் கொள்கையாகும். “என் உணர்ச்சி என்னைப் பிசைந்து பிசைந்து தன்னை வடிவமைத்துக் கொள்கிறது” என்பார் வைரமுத்து.

    1.2.4. வெண்பாவின் தோல்வியும் விருத்தத்தின் வெற்றியும்

    உணர்ச்சிக்கும் கருத்துக்கும் ஏற்ற வடிவம் என்பதே தமிழ்க்கவிதைக் கொள்கை. வடிவத்தை வைத்துக் கொண்டு உணர்ச்சியைக் கொட்ட முடியாது. வடிவத்தை வைத்துக் கொண்டு கருத்துக்களைப் பதிவு செய்ய முடியாது. அவையிரண்டும் முன்னவை. யாப்பு பிந்தியது. மைசூர் பாகு முன்னால். அதற்கான அச்சு பின்னால். கடினமான யாப்பு என்பதாலேயே அதனால் செய்யப்படும் இலக்கியங்கள் வெற்றி பெற்றுவிடும் என்பது ஒரு மாயை. உண்மை நிலைக்கு மாறானது. பாரதக் கதைக்கு வில்லிப்புத்தூராழ்வாரின் உணர்ச்சி விருத்தத்தைத் தேர்ந்தெடுத்தது. அதே பாரதக்கதைக்குப் பெருந்தேவனார் கொண்டிருந்த உணர்ச்சி வெண்பாவைத் தேர்ந்தெடுத்தது, என்ன ஆனது? எளிமையான விருத்தத்தால் வில்லியார் பெற்ற இலக்கிய வெற்றியை, மிகக் கடினமான வெண்பாவினால் எழுதிய பெருந்தேவனார் பெற முடியவில்லையே? யாருக்காவது பெருந்தேவனார் பாரதம் தெரியுமா? “புறநானூற்றுப் பாடல்களை விருத்தங்களில் எழுதியிருந்தாலும் உலகப்பன் பாட்டைக் கலிப்பாவில் எழுதியிருந்தாலும் என்றோ இரண்டும் அழிந்து போயிருக்கும்” என்பார் பெருஞ்சித்திரனார். கவிதைகளை அவற்றின் அழகும் செப்பமும் குறையாமல் வார்த்தெடுக்கும் ஆற்றலும் நுட்பமான ஆய்வு நோக்கும் கொண்ட பாவலரேறு பெருஞ்சித்திரனார் கண்ட உண்மை, நம் கருத்துக்குப் போதிய அரணாகும். பொருளுக்கும் உணர்ச்சிக்கும் ஏற்ற வடிவம் என்பது வைரத்தைத் தங்கத்தில் வைத்துப் பார்ப்பதுபோன்ற அனுபவமாகும்.

    2.0 தொல்காப்பியச் செய்யுளியலும் வடிவக்கோட்பாடும்

    தற்காலத் திறனாய்வாளருள் பலரும் தொல்காப்பியச் செய்யுளியல் இன்றைய இலக்கிய நுகர்ச்சிக்கோ திறனாய்வுக்கோ பயன்படாது என்று விடாது கூறிவருகின்றனர். ஆனால் உற்று நோக்குவார்க்கு ஓர் உண்மை புலப்படக் கூடும். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பனவெல்லாம் செய்யுளின் கூறுகளாதலின் தொடையும் தொடை விகற்பங்களும் வடிவத்துள் அடங்கும் என்பது பெறப்படும். பெறவே தொடை விகற்பங்களைப் பற்றிய தொல்காப்பியச் சிந்தனை வியப்பளிப்பதாக உள்ளது.

    “மெய்பெறு மரபின் தொகை வகை தாமே
    ஐ ஈர் ஆயிரத்து ஆறு ஐந்நூற்றொடு
    தொண்டு தலையிட்ட பத்துக் குறை எழுநூற்று
    ஒன்பஃதென்ப உணர்ந்திசி னோரே!”

    ஐ ஈர் ஆயிரம்                                   10000
    ஆறு ஐந்நூறு                                     3000
    தொண்டு தலையிட்ட பத்துக் குறை எழுநூறு        699

    ஆக 13699. எப்படி? மோனை 1019. எதுகை 2473. முரண் 2. இயைபு 182. அளபெடை 159. பொழிப்பு 654. ஒரூஉ 654. செந்தொடை 8556 ஆக தொடை விகற்பம் 13699. இலக்கியத்தை அனுபவித்தல் அக்காலச் சமுதாயத்தினருக்கு இல்லையென்றால் தொடை வகைகளை இவ்வாறு வகைப்படுத்தித் தொகைப்படுத்தி விளக்கங்களைத் தந்து கூற முடியாது. அதனால் இலக்கியத்தை நன்றாக அனுபவித்தவர்கள் தமிழர்கள் என்பதுடன் அதற்குரிய இலக்கணமும் செய்யுளியலில் கூறப்பட்டுள்ளது என்பது வெளிப்படை. வடிவமே கவிதையாகாது. ஆனால் வடிவமே கவிதை என்னும் கருத்துடையார் குறைந்த அளவு இத்தனை தொடை விகற்பங்களில் தாம் எழுதும் கவிதைகளில் இடம் பெற்றவை எத்தனை எனச் சிந்திப்பதற்கு உரியாரே.

    2.1. நோக்குமிடமெல்லாம் யாப்பன்றி வேறில்லை

    ‘வடிவக்கோட்பாடுகள்’ என்பது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, தொடைவிகற்பங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதே. இவற்றினும் தனித்து நிற்பது யாப்பு. யாப்பினால் உருவாகும் செய்யுட்கள் அல்லது கவிதைகளில் முன்னவை பெறும் இடம் இன்றியமையாதன என்பதை அறிதல் வேண்டும். வெண்பா என்று தனித்து ஒன்றில்லை. ஆசிரியப்பா எனத் தனித்து ஒன்றில்லை. கலிப்பா என்று தனித்து ஒன்றில்லை. வஞ்சிப்பா என்று தனித்து ஒன்றில்லை. நாம் ஏதேனும் பாடல் எழுதுகிறோம் என்றால் அவற்றின் வகைகளில் ஏதேனும் ஒன்றைத்தான் எழுதுகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, சிந்தியல் வெண்பா, பஃறொடை வெண்பா, நேரிசையாசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, அடிமறிமண்டில ஆசிரியப்பா, ஒத்தாழிசைக் கலிப்பா, கொச்சகக்கலிப்பா, கலிவெண்பா, வெண்கலிப்பா, குறளடி வஞ்சிப்பா, சிந்தடி வஞ்சிப்பா என்னுமாறு கிடந்த பாவகையினுள் (கலிப்பாவின் விரிகள் தனி) தற்காலக் கவிஞர் பெருமக்கள் எத்தனை யாப்பினைக் கையாண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் எழுதும் பாக்களிலிருந்தே அறிந்து கொள்ள இயலும்.

    இவை வெறும் பாக்கள் மட்டுமே. இனி இனம், தாழிசை, துறை, விருத்தம் என நான்கு வகைப்பாக்களுக்கும் கூட்டி உறழத் தோன்றுபவை கடல்போலக் காட்சிதரும். வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம், ஆசிரியத்தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம், கலித்தாழிசை, கலித்துறை, கலி விருததம், வஞ்சித் தாழிசை, வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம் என்னுமாறு கிடந்த பாவினங்களுள் எத்தனைப் பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்பதைச் சிந்திக்க வேண்டாமா? இந்த மாபெருங்கடலுள் ஆசிரியப்பாவின் இனங்களுள் ஒன்றாகிய ஆசிரிய விருத்தத்தில் இரண்டினை மட்டும் எழுதிக் கொண்டு தன்னை ஒரு மரபுப் பாவலர் என்று கூறிக் கொள்வாரை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.

    3.0. வசந்தராசன் கவிதைகளில் யாப்பமைதி

    தமிழை முறையாகப் பயின்றவர் வசந்தராசன். யாப்பினைப் பொருத்தவரையில் வசந்தராசன் பாக்கள், பாக்களின் இனங்கள் ஆகிய அனைத்தையும் கையாளவில்லை என்பதை முன்னமே சொல்லிவிட வேண்டியதாகிறது. அவரும் தன்னை யாப்பியல் வல்லார் என்றும் கூறிக் கொண்டதில்லை. நேரிசை வெண்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, தரவு கொச்சகக்கலிப்பா, தரவிணைக் கொச்சகக்கலிப்பா, சிந்து முதலிய பாவகைகளையும் எண்சீர், அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தங்களையும் மட்டுமே எழுதியுள்ளார். அவர் எழுதியிருக்கும் புதுக்கவிதைகளுக்கு வெளிப்பாட்டு உத்தியே வடிவமாகலின், வடிவத்திற்குத் தனி இலக்கணமுடைய தமிழ் மரபுகளுக்கு உகந்ததாக அது கருதப்படவில்லை. எனவே அது பற்றிய ஆராய்ச்சியும் இங்கு எழவில்லை. எனவே வடிவத்தைப் பொருத்தவரையில் தமிழ்க்கவிதை வடிவங்களைப் புதுக்கவிதை வடிவத்தோடு ஒப்பிடுவது எள்ளின் முனையளவும் ஆய்வுப் பயனை நல்காது என இக்கட்டுரை உறுதிபடக் கருதுகிறது.

    3.1. எண்சீர் விருத்தமும் இலக்கண அமைதியும்

    பாக்களுக்கு இருப்பது போன்ற சீர் கட்டுப்பாடுகள் விருத்தங்களுக்கு இல்லை. சான்றாக எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்றால் அடிக்கு எட்டுச்சீர்களாக நான்கடியில் அமையவேண்டும் என்பது மட்டுமே விதி. இன்னும் தெளிவாகச் சொன்னால் அளவொத்த நான்கடிகள் அமையுமாயின் அது விருத்தம். இதில் அடிக்கு நான்குசீர் என அமைந்தால் அது கலிவிருத்தமாய்விடும். ஐந்து சீர் என்று அமைந்தால் அது கலித்துறை ஆகிவிடும். எனவே ஆறுசீர்களும் அதற்கும் மேலும் அமைந்து நான்கடியாய் அமைவதே கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாகும். எனவே எட்டுச்சீர் கொண்ட அடிகள் நான்காய் அமைந்தால் அது எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். ஏனை வெளிவிருத்தம், கலிவிருத்தம், வஞ்சி விருத்தம் என இருப்பினும் தமிழ்க்கவிதைகளின் பெரும்பரப்பு முழுவதையும் பட்டா போட்டுக் கொண்டிருப்பது இவ்விரண்டு விருத்தங்களே.

    “அம்மாமித் தமிழெழுதி ஆகா என்பார்!
    அறிவில்லாத் தமிழரதை வாங்கிக் கற்பார்!
    செம்மை சேர் இலக்கியத்தின் சீரைக் கொன்றே
    சிறப்பாரும் தனித்தமிழை வேண்டாம் என்பார்!
    கைம்மைசேர் புலைமொழியைக் கொச்சைப் பேச்சை
    மடமையினால் காதலிப்பார்! காதைத் தீய்ப்போம்!
    நம் மறைமலையார் கொள்கை போற்ற
    நலனில்லாத் தமிழ் வளர்ப்போம் நன்மை செய்வோம்!”

    எண்சீர் விருத்தங்களுள் இது ஒரு வகை. காய் காய் மா மா என்பது அரையடிக்கான இலக்கண மரபு. நினைவிற் கொள்ளவேண்டும். இலக்கணமன்று. இலக்கண மரபு. இந்த அரையடியில் 3,4 சீர்கள் மாவில் வரலாம் என்று இருந்தாலும் 3வது சீரில் தேமா வரலாம் புளிமா வரலாம். ஆனால் 4வது சீரில் தேமா மட்டுமே வரவேண்டும். இதில் இது யாப்பு வல்லாண்மை என்றால் 3 மற்றும் 4வது சீர்கள் அனைத்திலும் தேமாவாகவே வைத்துக் கோப்பது. மேலே காட்டப்பெற்ற பாடலுள் நான்கடியுள் அமைந்த 16 சீர்களும் தேமாவாகவே இருப்பது காண்க. இவ்வாறு அமைவது அரிதினும் அரிது. ஒரு விருத்தத்திற்கு இத்தகைய 16 சீர்களும் தேமா என்பது அரியதாயினும் 15, 14, 13, 12 என தேமா பயின்று வருமாறு விருத்த வல்லாளராகவே வசந்தராசன் திகழ்கிறார்.

    “சேர்ந்தெழுந்தால் வானிறங்கிக் கால்பி டிக்கும்!
    செதுக்கிவைத்த காலமது கால்கி டக்கும்!
    வேர்மேடை அரங்கத்தை ஊர்நி றைக்கும்!
    விசிறிவைத்த நிழல்வீட்டில் தேர்ந டக்கும்!
    ஊர்கூடி நடந்தாலே போதும் அந்த
    வெற்றிமங்கை எதிர்வந்து கொண்ட ழைக்கும்!
    யார்கூற்று மல்லவிது! இயற்கை காட்டும்
    கூர்கூற்று! உணர்ந்தாலே ஞானம் பேசும்!”

    “வான்பரப்பைச் சிறகளந்து வளைத்து வைத்தேன்!
    வட்டநிலா தொட்டிலுக்குள் போட்டு வைத்தேன்!
    தேன்சிந்தும் செந்தமிழில் பாட்டெ டுத்துத்
    தென்றலாலே தொட்டிலாட்டித் தூங்க வைத்தேன்!
    நான்நடிக்கும் நாடகத்தை நானே பார்த்தேன்!
    நாக்குவழி சுவாசித்துக் காலம் யாத்தேன்!
    தோன்றுமிட மெல்லாமே என்னைப் பார்த்தும்
    தொலைந்துவிட்டேன் உன்னிடம்நான்! தேடித் தாயேன்!”

    என்னும் விருத்தங்களுள் 15 தேமாக்கள் வந்து சந்த கம்பீரத்தை உயர்த்துவதைக் காணலாம். இத்தனைத் தேமாக்கள் என எண்ணிக் கொண்டு எழுதியதனால் அமைந்ததல்ல இவை. கவிஞன் உணர்ச்சியைக் கொட்டுகிறான். கொட்டுவது கவிதையாகிறது. கொட்டப்பட்ட கவிதையில் கிடந்த சீர்கள் இவை. அவ்வளவுதான்.

    “சிறகுகளின் இறகெழுத்தில் என்னைப் பார்த்தேன்!
    சிற்றிடையுன் வளைவிருந்து நாணம் பார்த்தேன்!
    பரபரக்கும் இமையிரண்டின் விளிம்பில் நின்று
    படும்பார்வை தூரம்வரை நின்று பார்த்தேன்!
    சரசரக்கும் சேலையிழை மடிப்பில் நின்று
    சாய்ந்தாடி அத்தனையும் தின்று பார்த்தேன்!
    திறமைகளின் பேரழகுத் தீவே! உன்னில்
    தொலைந்துபோய் கிடக்குமெனைத் தேடித் தாயேன்!”

    என்னும் விருத்தத்துள் 14 தேமாக்கள் அமைந்திருக்கின்றன என்றால் பின்வரும் விருத்தத்தில் 13 தேமாக்கள் அமைந்துள்ளதைக் காணலாம்.

    “ஈக்கடிக்கும் கொசுக்கடிக்கும் எறும்பி னோடும்
    எக்கடிக்கும் உனைக்காத்த என்னை யின்று
    நீகடித்துப் பார்க்கின்றாய்!தாய்ப்பால் வற்ற
    நெஞ்சார ரத்தத்தால் பசித ணிப்பேன்!
    நாகடித்துக் கொள்ளாதே அவச ரத்தில்!
    நானிருப்பேன் பொறுமையாக! என்னை மட்டும்
    சாகடிக்கும் பழியுனக்கு வேண்டாம்!நானே
    செத்துபல நாளாச்சு! போய்வா!போய்வா!”

    வசந்தராசனின் இத்தகைய எண்சீர் விருத்தங்களால் சாதாரணமாக, மிக மிகச் சாதாரணமாக யாப்பியல் மரபினைப் பேணும் இயல்பை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அமைதல் வேண்டும் என்று எண்ணிக் கணக்கெடுத்து அவர் எழுதவில்லை. அவர் எழுதுகிற பாட்டில் அப்படி அமைந்துவிடுகிறது. இதுதான் யாப்பின் இரகசியம். தேமாங்காய் தேமாங்காய் தேமா தேமா என்றிருந்த அரையடி யாப்பு, தேமாங்காய் புளிமாங்காய் தேமா தேமா என்றும் புளிமாங்காய் தேமாங்காய் புளிமா தேமா என்றும் இன்னும் பலவாகவும் விரிந்து காட்சியளிக்கிறது. இருப்பினும் எந்த நிலையிலும் எட்டுச் சீர்களில் 4 மற்றும்  8 ஆகிய சீர்களில் புளிமா வரக்கூடாது என்னும் மரபு இன்றும் பின்பற்றப்படுகிறது. எல்லாரும் அறிந்த இன்னொரு வகை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இப்படி அமைந்திருக்கிறது.

    “கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளுவம்வகை கிடைத்த
    குளிர்தருவே! தருநிழலே! நிழல்கனிந்த கனியே!
    ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே!
    உகந்த தண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே!
    மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே!
    மென்காற்றில் விளைசுகமே! சுகத்திலுறும் பயனே!
    ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
    ஆடுகின்ற அரசேஎன் அலங்கலணிந் தருளே!”

    வள்ளற்பெருமான் உள்ளங்கவர்ந்த யாப்பு இது. அவருடைய அருள்விளக்க மாலை, அருட்பிரகாச மாலை, இங்கித மாலை முதலியனவெல்லாம் இந்த யாப்பில் அமைந்தனவே. பாவேந்தர் பாரதிதாசனுக்கும் இந்த யாப்பு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தாலும் அதிகமான பாடல்களை இந்த யாப்பில் அவர் எழுதவில்லை.

    “தென்திசையைப் பார்க்கின்றேன்! என்சொல்வேன்? என்றன்
    சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்கு தடடா!
    அன்றந்த இலங்கையினை ஆண்டமற வேந்தன்
    ஐயிரண்டு திசையனைத்தும் தன் புகழை வைத்தோன்!
    குன்றெடுத்த பெருந்தோளான்! கொடைகொடுத்த கையான்!
    குள்ளநரி செயல் செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
    என்தமிழர் மூதாதை! என் தமிழர் பெருமான்!
    இராவணன்காண்! அவன்பெருமை இவ்வுலகம் அறியும்”

    என்பது போன்ற ஒருசில பாடல்களையே எழுதியிருக்கிறார். இவ்வகை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் அரையடி காய் காய் காய் என மூன்று சீர் அமைந்து (அதாவது தேமாங்காய் புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய்) எனக் கலந்தமைந்து) நான்காவது சீர் தேமா, புளிமா முதலிய வாய்பாடுகளில் அமையும். ஆனால் அவை கூவிளம், கருவிளம் வாய்பாடுகளில் அமைவதில்லை. இது மரபு. இப்படி அமைவதற்கு எந்த நூலிலும் இலக்கணம் இல்லை தாங்களாகவே இலக்கணம் செய்து கொண்டவர்களைத் தவிர. வசந்தராசன் இத்தகைய யாப்பிலும் தன் ஆளுமையைப் பதிவு செய்திருக்கிறார்.

    “பொற்கால ஆட்சியின் பூபாளம் வாழ்க!
    பொன்னிநதி தோற்கவரும் பெருந்தாய்மை வாழ்க!
    சொற்கோலம் தினம்வரையும் செந்தமிழே வாழ்க!
    சோராத பேருழைப்பின் சூத்திரமே வாழ்க!
    நற்பேறே! தமிழகத்தின் நாயகனே வாழ்க!
    நடந்துவரும் ஓய்வறியா சூரியனே வாழ்க!
    வற்றாத தமிழ்நாட்டு வரலாறே வாழ்க!
    வசந்தங்கள் பூப்பெய்ய வாலிபமாய் வாழ்க!”

    என்னும் விருத்தத்தில் அரையடி ஈறு ‘வாழ்க’ என்னும் தேமாவில் முடிந்திருப்பது காண்க. பலரும் அறியாத வேறொரு வகை எண்சீர் விருத்தத்தை மணிவாசகப் பெருமானும் மகாகவி பாரதியும் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் இருவரைத் தவிர பிறர் எழுதியிருக்கிறார்களா என்பது கட்டுரையாசிரியருக்குத் தெரியாது. பின்னூட்டம் இடும் அன்பர்கள் காட்டினால் நன்றியுடையேன். மணிவாசகப் பெருமானின் திருப்பள்ளியெழுச்சி இப்படி அமைந்திருக்கிறது.

    “கூவின பூங்குயில்! கூவின கோழி!
    குருகுகள் இயம்பின! இயம்பின சங்கம்!
    ஓவின தாரகை ஔிஒளி உதயத்து
    ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
    தேவநற் செறிகழல் தாளினைக் காட்டாய்!
    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
    யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்!
    எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே!”

    மணிவாசகப் பெருமானின் இந்தப் பாடலில் உள்ளத்தைப் பறிகொடுத்த மகாகவி பாரதமாதா திருப்பள்ளியெழுச்சியை இதே யாப்பில் எழுதியிருக்கிறார்.

    “பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
    புன்மை இருட்கணம் போயின யாவும்
    எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
    எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
    தொழுது வாழ்த்தி வணங்குதற்கு இங்குன்
    தொண்டர் பல்லாயிரவர் சூழ்ந்து நிற்கின்றோம்!
    விழிதுயில் கின்றனை இன்னும் எம்தாயே!
    வியப்பிதுகாண் பள்ளி எழுந்தரு ளாயே!”

    வழக்கமான காய் காய் மா மா என்னும் வாய்பாட்டில் அமைந்த விருத்தங்களை எழுதித் தாங்களே படித்துக் கொள்ளும் மரபுக் கவிஞர்களுக்கு ஒரு சேதி! மணிவாசகப் பெருமான், மகாகவி இவர்கள் எழுதியிருக்கும் இந்த எண்சீர் விருத்தங்கள் தம்முள் அளவொத்து அமைந்த நான்கடியாய் அமைந்தனவேயன்றிச் சீர் வரையறையில்லை என்பதை அருள்கூர்ந்து புரிந்து கொள்ள வேண்டும். காரணம் விருத்தத்திற்குச் சீர், தளை வரையறை கிடையாது. இதில் என்ன வியப்பு என்றால் மணிவாசகரும் மகாகவியும் பயன்படுத்தாத யாப்பே இல்லை என்பதுதான். பெரும்பாலும் இவற்றை நிலைமண்டில ஆசிரியப்பா என்றுதான் பலரும் எண்ணிக் கொண்டிருப்பார்கள். இன்னொரு வியப்பும் உண்டு. அதாவது மரபுக்கவிஞர்கள் என்று சொல்லிக் கொள்வார் யாரும் இந்த வகை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தைக் கையாண்டு கவிதைத் தொழில் செய்துள்ளனரா என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

    3.2. அரையடி இலக்கணமும் அறுசீர் விருத்தமும்

    எண்சீர்க் கழிநெடிலடி மற்றும் ஒருசார் அறுசீர்க் கழிநெடிலடி விருத்தங்களுக்கு இலக்கணம் சொல்வார் முழுமையான அடிக்குச் சொல்லாமல் அரையடிக்கு இலக்கணம் சொல்வார். காரணம் இவற்றுள் முற்பாதி போலப் பிற்பாதி அமைவதில்லை. தேமாங்காய் புளிமாங்காய் தேமா தேமா என்று முதல் அரையடி இருக்கும். புளிமாங்காய் கருவிளங்காய் புளிமா தேமா என்று அடுத்த அரையடி இருக்கும். இந்தக் குழப்பத்தைச் சீர் செய்ய வேண்டுமானால் அரையடி இலக்கணமே சரி என்று அவர்கள் கருதியிருக்கிறார்கள்.

    “வெள்ளம்போல் தமிழர்க் கூட்டம்
    வீரங்கொள் கூட்டம் அன்னார்
    உள்ளத்தால் ஒருவ ரேமற்
    றுடலினால் பலராய்க் காண்பர்
    கள்ளத்தால் நெருங்கொ ணாதே
    எனவையம் கலங்கக் கண்டு
    துள்ளும்நாள் எந்நாள்? உள்ளம் 
    சொக்கும் நாள் எந்த நாளோ?”

    பாவேந்தரின் இந்தப் பாட்டில் முதலடியின் முற்பாதி ‘தேமாங்காய் புளிமா தேமா’ என்றும் பிற்பாதி ‘தேமாங்காய் தேமா தேமா’ என்றும் அமைந்திருத்தல் காண்க. அடுத்த அடியோ முந்தைய அடியினும் மாறுபட்டு தேமாங்காய் புளிமா தேமா என்றும் கருவிளம் புளிமா தேமா என்றும் அமைந்திருப்பதைக் காணலாம். கம்பன் முதல் அத்தனைப் பேருக்கும் இதுதான் நிலை. எனவே விருத்தங்களில் சீர் வரையறை இல்லாத காரணத்தால் ஒரு முழுமையான அடிக்கு இலக்கணம் இல்லை என்பது பெறப்படும். இது கட்டளைக் கலித்துறைக்கும் பொருந்தும்.

    “செம்பிட்டுச் செய்த இஞ்சித்
    திருநகர் செல்வந் தேறி
    வம்பிட்ட தெரியல் எம்முன்
    உயிர்கொண்ட பகையை வாழ்த்தி
    அம்பிட்டுத் துன்னம் கொண்ட
    புண்ணுடை நெஞ்சோ டைய!
    கும்பிட்டு வாழ்கிலேன் யான்
    கூற்றையும் ஆடல் கொண்டேன்”

    முதல் அரையடியைத் “தேமாங்காய் தேமா தேமா” என்றமைத்துக் கொண்ட கம்பன் அடுத்த அரையடியைக் கருவிளம் தேமா தேமா என்றமைத்துக் கொள்வதைக் காண்க.

    “எய்திய நிருதர கோனும்
    இராமனை இறைஞ்சி எந்தாய்!
    உய்திறன் உடையார்க் கன்றோ
    அறன் வழி ஒழுகும் உள்ளம்
    பெய்திறன் எல்லாம் கொண்டு
    பேசினேன் பெயரும் தன்மை
    செய்திலன் குலத்து மானம்
    தீர்ந்திலன் சிறிதும் என்றான்”

    இதுவும் கம்பன் எழுதிய அறுசீர்க் கழிநெடிலடி விருத்தமே! சென்ற பாட்டில் மூவசைச்சீரில் தொடங்கி எழுதியவன் இந்தப் பாட்டில் நான்கடிகளின் தொடக்கத்தையும் கூவிளம் என்னும் வாய்பாட்டிலேயே அமைத்திருப்பது காண்க. இந்த மரபைத்தான் வசந்தராசன் பின்பற்றி எழுதுகிறார். அதனால் இது மரபுக்கவிதை.

    “புயலிலே பிறந்த பூவே!
    பூமணத் தமிழின் நாவே!
    வயலெலி தின்னும் நெல்லும்
    வயிறுகள் காணா நம்மை
    இளமையில் வறுமை தின்னும்
    இடுக்கிலே துளிர்த்து வந்தோம்
    வளமையைக் கனவு காணும்
    வயதில்நீ மறைந்த தென்ன?”

    “கருவிளம் புளிமா தேமா
    கூவிளம் புளிமா தேமா
    கருவிளம் தேமா தேமா
    கருவிளம் தேமா தேமா
    கருவிளம் புளிமா தேமா
    கருவிளம் புளிமா தேமா
    கருவிளம் புளிமா தேமா
    கருவிளம் புளிமா தேமா”

    என்னும் வாய்பாடுகளில் வைத்துப் பாடுகிறார் வசந்தராசன். இளமையில், வளமையில் என்பன மகரக் குறுக்கங்கள். வயதில்நீ என்பதில் ஒற்று அலகு பெறாது ஒலிநோக்கி. இன்னொருவகை அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இருக்கிறது. அதில் அரையடியின் ஈற்றுச்சீர் மூவசைச்சீராகப் பெரும்பாலும் காய்ச் சீராக வரும். முதல் இரண்டு சீர்களும் மாச்சீர்கள் வரும்.

    தேமா தேமா தேமாங்காய்!
    புளிமா தேமா புளிமாங்காய்!
    தேமா புளிமா புளிமாங்காய்!
    புளிமா தேமா தேமாங்காய்!

    என்னுமாறு அரையடி இலக்கண வாய்பாடுகள் அமையும்.

    “கூடிக் கூடி உன்னடியார் குனிப்பார் சிரிப்பார் களிப்பாரால்?
    வாடி வாடி வழியற்றேன் வற்றல் மரம்போல் நிற்பேனா?
    ஊடி ஊடி உடையாயொடு கலந்துள் ளுருகிப் பெருகிநெக்கு
    ஆடி ஆடி ஆனந்தம் அதுவே யாக அருள் கலந்தே”

    என்பது திருவாசகம். ‘தேமா தேமா கூவிளங்காய்’ என்பது முற்பகுதி இலக்கணம். ‘புளிமா புளிமா புளிமாங்காய்’ என்பது பிற்பகுதி இலக்கணம். இரண்டாவது அடி மாறுபட்டுத் தேமா தேமா புளிமாங்காய், தேமா புளிமா தேமாங்காய் என அமைந்திருப்பதைக் காணலாம். தமிழ்க்கவிதை யாப்பு என்பது நெகிழ்ச்சி உடையது என்பதும் இதனாற் புலனாகலாம். கவிச்சக்கரவர்த்தி கம்பனும் இந்த யாப்பில் தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறான்.

    “கம்ப மதத்துக் களியானைக் காவற் சனகன் பெற்றெடுத்த
    கொம்பும் என்பால் இனிவந்து குறுகினள் என்றகம் குளிர்ந்தேன்!
    வம்புசெறிந்த மலர்க்கோயில் மறையோன் பெற்ற மாநிலத்தே
    தம்பியுடையான் பகையஞ்சான் என்னும் மாற்றந் தந்தனையால்!”

    என்பன இந்த யாப்பில் அமைந்த புகழ்பெற்ற பாடல்கள். பெருமக்கள் கையாண்ட இந்தக் கவிமரபு தம்பி வசந்தராசன் கவிதைகளில் வெகு சாதாரணமாக இழையோடுவதைக் காணலாம். வாய்பாடுகளைப் படித்து மனப்பாடம் செய்து கொண்டு எழுதுகிற எவரும் இந்தக் கலையில் வெற்றிபெற முடியாது. ஓசையொழுங்கை உள்வாங்கி உணர்ச்சிகளை அவ்வொழுங்கில் அடுக்கி வைப்பதே கவிதையாகும். வசந்தராசன் எழுதுகிறார்.

    “எவரின் வாயாய் அசைகின்றாய்?
    எவரின் விசையால் நடக்கின்றாய்?
    சுவராய் நிற்கும் தமிழ்நாட்டின்
    சுண்ணாம் பாய்நீ ஒட்டியவன்!
    தவறாய் நாக்கை நீட்டாதே!
    தலையில் கல்நீ சுமக்காதே!
    உவர்நீ ராக வயலுக்குள்
    வந்தால் வரப்புகள் விடமாட்டோம்!”

    என்றெழுதும் வசந்தராசன் வேறொரு வழக்கான அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தையும் எழுதியிருக்கிறார். இது காய் காய் காய் காய் மா மா என்னும் வாய்பாடுகளைக் கொண்டது. வில்லி பாரதம், கம்பராமாயணம். பாரதிதாசன் முதலியோர்க்குச் சர்க்கரைப் பொங்கலாக இனித்த யாப்பு இது.

    “வெம்மடங்கல் வெகுண்டனைய
    மனமடங்க செயலடங்க
    வினையம் வீய
    தெம்மடங்கு பொருதடக்கைச்
    செயலடங்க மயலடங்க
    ஆற்றல் தேய
    தம்மடங்கு முனிவரையும்
    தலையடங்க நிலையடங்கச்
    சாய்த்த நாளின்
    மும்மடங்கு பொலிந்தனஅம்
    முறைதுறந்தான் உயிர்துறந்த
    முகங்கள் அம்மா!”

    என்று இராவணனின் மரணப் பொலிவைப் பாடுவான் கம்பன். சொரணையற்ற தமிழர்களுக்குச் சொரணை வரவேண்டும் என்பதற்காய்ப் பாவேந்தர் பாடிய தமிழியக்கம் என்னும் நூல் முழுமையும் இதே யாப்பில் அமைந்தது.

    “ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின்
    முன்னேற்றம் ஒவ்வொன்றும்
    உன்முன் னேற்றம்!
    கண்டறிவாய் எழுந்திரு நீ!
    இளந்தமிழா! கண்விழிப்பாய்!
    இறந்தொ ழிந்த
    பண்டைநலம் புதுப்புலமை
    பழம்பெருமை அனைத்தையும்நீ
    படைப்பாய்! இந்நாள்!
    தொண்டு செய்வாய் தமிழுக்குத்
    துறைதோறும் துறைதோறும்
    துடித்தெ ழுந்தே!”

    கம்பனையும் வில்லிப்புத்தூராரையும் பாரதிதாசனையும் கவர்ந்த இந்த அறுசீர் விருத்த யாப்பு நம் வசந்தராசனையும் கவர்ந்திருக்கிறது. சொற்களின் கம்பீரம் குறையாமல் கையாள்வதற்கு இந்த வகை யாப்பு இடந்தரும். இந்தக் கவிஞர்களின் விருத்தங்களுக்கும் சிலர் எழுதும் ஜிகினா விருத்தங்களுக்கும் வேறுபாடுகள் உண்டு.

    “போனவனே திரும்பிவந்தான்! திரும்பிப் போனான்!
    போகாத இன்னொருவன் சேர்ந்து வந்தான்!
    நானும்தான் போனவுடன் திரும்பி வந்தேன்!
    நடுச்சாலை வந்தவுடன் திகைத்து நின்றேன்!”

    என்று எழுதுவதற்கு யாப்பருங்கலமோ காரிகையோ தேவையில்லை. இலக்கணம் மட்டுமே கவிதையாகாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. தற்காலத்தில் பாட்டெழுதத் தெரிந்தவர்கள் மரபுக்கவிஞர்கள் எனப் பறைசாற்றிக் கொள்வதற்கு இந்த விருத்தங்களே போதுமானவை என்னும் கருத்து நிலவுகிறது. உண்மையில் ஒலியை உள்வாங்கிய யாரும் விருத்தத்தை எழுதிவிட முடியும். இன்னும் துணிந்து சொன்னால் யாப்பறிவு இல்லாமலேயே விருத்தங்களை எழுதலாம். ஒலியமைதி பிடிபட்டால் போதும். அப்படியானால் விருத்தங்களை எழுதியவர்கள் அனைவரும் இவ்வாறுதான் எழுதினார்களா என்றால் இல்லை. யாப்பு செறிவுக்குச் சொல் பயன்பாடு தலையாய காரணம். சொற்செறிவு இருந்தாலேயொழிய விருத்தத்தில் அடர்த்தி அமையாது. அடர்த்தி குறையா விருத்தங்களை எழுதியவர்கள் கம்பர், சேக்கிழார், வில்லிப்புத்தூராழ்வார், பாவேந்தர், சுரதா, முடியரசன், முருகுசுந்தரம், தமிழன்பன், பொன்னிவளவன், நன்னியூர் நாவரசன், நம் வசந்தராசன் முதலியோர்.

    “புதுமைகளின் புன்னகையே!
    பொற்றுகளின்  நாக்கிடங்கே
    இளமைக் காவே!
    முதுமைக்கே வழியடைத்து  
    மொட்டுமல ராய்ச்சிரிக்கும் 
    மூத்த நாவே!
    எதுவந்து நின்றாலும்
    எதிர்வந்து பொருதாலும்  
    வாகை ஒன்றே
    நிதம்சூடும் செந்தமிழே 
    நெஞ்செல்லாம் நீயாகும்
    நெற்றிப் பொட்டே!”

    செந்தமிழ்த்தாயைத் தம் சித்தம் நிறைய அவள் சிந்தை குளிர வாழ்த்தும் இந்தப் பாடல் யாப்பு, மரபின் தாக்கம் என்பது சொல்லாமலேயே புலப்படும். எளிய யாப்பு எனப் பாரதி கூறுவது இதனைத்தான். இந்த எளிய யாப்பினை அழகான கற்பனையால், ஆழமான உணர்ச்சியினால் விழுமிய கருத்தினால் அலங்கரிக்கத் தெரிந்தவனே கவிஞன். நம் வசந்தராசன் ஒரு கவிஞன். அது ஒரு தனி ஆய்வு.

    3.3. சந்த விருத்தம் தரும் தமிழ்க்கவிஞன்

    இலக்கண வரம்புடைய பாடல்களைக் கவிஞர்கள் தம் சொல்லாற்றலின் காரணமாகச் சந்தச் சுகத்தைத் தரும் கவிதைகளாக மாற்றும் வித்தையால் நம்மைக் கவர்ந்து விடுகிறார்கள். அத்தகைய பாக்கள் இயற்றமிழ்ப் பாக்களாகவும் இருக்கும். சந்தப்பாக்களாகவும் இனிக்கும்.

    “தத்திவரும் முத்துமொழித் தத்தையென முத்தமிடும்
    சித்திரம்போல பூஞ்சிவப்பு சிந்திநின்ற — அத்தைமகள்
    பூப்பெய்தி விட்டாளாம்!. பூமகளின் காலடியில்
    பூப்பெய்தேன் என்னவியப் பு?”

    இப்படியொரு நேரிசை வெண்பாவை எழுதியிருக்கிறார் வைரமுத்து. முதல் இரண்டு அடிகளில் உள்ள எட்டுச் சீர்களும் வெண்பா உரிச்சீர்களாக நின்று, வெண்டளை பிறழாது உள்ளன என்பது உண்மையே. ஆனால் ஓசை சந்தமாகியிருக்கும் ரகசியத்தை உணர்தல் வேண்டும்.! பாட்டை ஒருமுறை வாய்விட்டுப் படித்தால் செப்பலோசை மறைந்து சந்தம் பிடிபடும். இலக்கணத்தில் வழுவாத இந்த நேரிசை வெண்பா எப்படிச் சந்த வெண்பாவாகியிருக்கிறதோ அதுபோலவே வசந்தராசன் எழுதிய சில பாடல்கள் விருத்தயாப்பில் இருந்தாலும் சந்த விருத்தங்களாக மலர்ந்திருக்கின்றன.

    “புலிநகத்தைக் கடிப்பதற்கு எலிகள் கூட்டமா?
    பூஞ்சகாளான் முகம் வெளுத்தால் இடிநடுங்குமா?
    அலிபுணர்ந்தால் ஆண்குழந்தை அடைய முடியுமா?
    அரைஞாணில் ஆனைகளை அடக்க முடியுமா?
    சிலைவடிக்கச் சிற்பியின்றி உளிகள் போதுமா?
    சீழ்பிடித்த சிந்தனையால் ஈழம் மலருமா?
    அலைகடலைத் தோற்கடிக்கும் மறவர் கூட்டமாம்!
    அணிவகுப்போம்! அடையுமட்டும்! ஈழம் வாழ்த்துவோம்!”

    தமிழில் அருகிவரும் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் என்று இதனைச் சொல்வது எளிது. ஆனால் பாட்டின் ஒலியமைப்பு ஒரு சந்தவிருத்தமாகவே அமைந்துவிடுவதற்குக் காரணமாகிவிடுவதைக் காணலாம்.

    4.0. வெண்பாவைத் தன்பாவாய் ஆக்கிக் கொண்ட வசந்தராசன்

    இந்தக் கட்டுரை தமிழின் முழுமையான மரபியல் யாப்பினை முன்னெடுக்கும் மூன்று நூல்களில் ஒன்றான யாப்பருங்கலக்காரிகை என்னும் நூலை அடியொட்டி எழுதப்படுகிறது. அதன்படி வெண்பாவின் வகைகளை நிரல்படுத்துகிறபோது குறளடி, சிந்தடி, அளவடி, பலவடி என்னும் நிரல்படுத்தாமல் குறளடி, அளவடி சிந்தடி, பலவடி என்று நிரல்படுத்தியிருக்கிறார்கள். அதாவது குறள் வெண்பாவிற்கு அடுத்ததாகச் சிந்தியல் வெண்பா வரவேண்டும். அதற்குப் பிறகே நேரிசை வெண்பா அமைய வேண்டும். ஆனால் குறள் வெண்பாவிற்குப் பிறகு நேரிசை வெண்பாவை அமைத்து அதன் பிறகே சிந்தியல் வெண்பா அமைகிறது. காரணம் குறள் வெண்பாதான் அடிப்படை. குறள் வெண்பா தெரிந்த ஒருவன் எந்த வெண்பாவையும் எழுத முடியும். இரண்டு குறள் வெண்பா இணைந்தால் ஒரு நேரிசை வெண்பா. எனவே நான்கடி. நான்கடியின் திரிபெல்லாம் இன்னிசை வெண்பா. நான்கடி மூன்றடியானால் சிந்தியல் வெண்பா. பல அடிகளால் அமையின் அது பஃறொடை வெண்பா.

    பாரதவெண்பா, நளவெண்பா, மணிமேகலை வெண்பா முதலியனவெல்லாம் நேரிசை வெண்பாவினால் கட்டமைக்கப்பட்ட நூல்கள். தமிழில் ஒரு இலக்கண நூலையே வெண்பாவினால் எழுதியிருக்கிறார்கள். அதற்குப் பெயர் புறப்பொருள் வெண்பா மாலை. புறத்திணைச் சிந்தனைகளைக் கூறும் இந்த நூலில் அமைந்துள்ள  நேரிசை வெண்பாக்களுக்கு மின்னல் வெண்பாக்கள் என்று பெயர். காரணம் செப்பலோசையைத் திகட்டத் திகட்டத் தருவதனால் மின்னலாய்த் தோன்றி மறைந்துவிடும் என்பதாம். இருபதாம் நூற்றாண்டில் வெண்பாப் புலியைப் பூனைக்குட்டியாக்கியவர் கவிமணி.

    “முத்து பவளம் முழுவயிரம் மாணிக்கம்
    பத்தியொளி வீசும் பதக்கமெல்லாம் சித்தன்
    சிரங்கப்ப ராயன் சிந்தை யிரங்கித்
    தரங்கண்டு தந்த தனம்”

    தன் உடம்பு முழுவதும் வந்திருந்த சிரங்கைப் பாடிய கவிமணி கையறு நிலையை வெண்பாவில் இறக்கி வைக்கிறபோது கல் நெஞ்சும் கரையும்.

    “கைநோவக் கால்நோவக் கல்லுடைத்துச செக்கிழுத்து
    மெய்சோர்ந்தும் ஊக்கம் விடாது நின்ற – ஐயன்
    சிதம்பரம் அன்றுசிறை சென்றிலனேல் இன்று
    சுதந்திரம் காண்பாயோ சொல்!”

    என்னும் அவருடைய வெண்பாவில் ஒரே தொடரை ஒரு நேரிசை வெண்பாவாக ஆக்கியிருக்கும் சதுரப்பாட்டை அறியலாம். வெண்பாவைத் தளை கொண்டு அளப்பவர் பலர். தமிழ் கொண்டு அளந்தவர் சிலர். அந்தச் சிலருள் நம் வசந்தராசனும் ஒருவர்.
    “விண்ணிருந்து கலைஞர் விண்ணப்பம் நீட்டினரோ?
    மண்ணிருந்து போகின்றாய் மன்னவனே!-சண்முக
    நாதனே! அன்பின் சுருக்கெழுத்தே! நம்கலைஞர் 
    சாதனைக்கு நீயன்றோ சான்று!”

    என்பது ஒரு கையறுநிலை வெண்பா. கலைஞரின் நேர்முக உதவியாளர் திரு.சண்முகநாதனின் மறைவுக்காக எழுதியது. ஒரு முழுமையான நேரிசை வெண்பா எப்படி அமைதல் வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான வெண்பா இது. பாட்டில் இருக்க வேண்டிய பதினைந்து சீர்களில் பத்து வெண்பா உரிச்சீர்கள். ஐந்து ஆசிரிய உரிச்சீர்கள். எட்டு வெண்சீர் வெண்டளை. நான்கு இயற்சீர் வெண்டளை. முதல் அடியிலும் இரண்டாம் அடியிலும் நான்காம் அடியிலும் பொழிப்பு மோனை. மூன்றாம் அடியில் ஒரூஉ மோனை. முதலடியில் பொழிப்பெதுகை. இரண்டாம் அடியில் மேற்கதுவாய் எதுகை. நான்கடி வெண்பாவில் இரு விகற்பங்கள். ‘சண்முக நாதனே!’ என்பதில் வகையுளி. சுருக்கெழுத்தராய் வாழ்வைத் தொடங்கியவரைச் ‘சுருக்கெழுத்தே!’ என்று அழைக்கும் கவிதை நயம்! இத்தனையும் நிறைந்த பாடல் இது. தங்கு தடையின்றிப் பொங்கி வரும் உணர்ச்சியை யாப்புக்குள் இறக்கி வைக்கிறபோது கட்டுமானம் சிதைவதற்குக் காரணமில்லை. இலக்கிய நயமும் குறையாது. தொடை விகற்பங்களுக்கும் சேதாரம் இல்லை.

    4.1. வெண்பா அந்தாதி

    சோதனை முயற்சி என்பது அறிவியலுக்கு மட்டுமன்று. கவிதைக்கும் பொருந்தும். அந்தாதி என்பது யாப்பு முறை அன்று. தொடையழகு. எந்த யாப்பிலும் அந்தாதி எழுதலாம். இலக்கியம் செய்யலாம். ஆனால் பெரும்பாலும் மாலை, சதகம், அந்தாதி, கலம்பகம் முதலிய இலக்கியங்களே அந்தாதித் தொடையில் அமையும். நால்வர் நான்மணிமாலை, திருச்சதகம், அபிராமி அந்தாதி, நந்திக் கலம்பகம் முதலியன அவ்வாறு அமைந்தவற்றுள் சில. நம் வசந்தராசன் வெண்பாவில் அந்தாதி பாடியிருக்கிறார். அதாவது அந்தாதி இலக்கியத்தை வெண்பா யாப்பில் பாடியிருக்கிறார். மரபு காக்கும் மாண்பால் மறக்காமல் அதற்கு அந்தாதி மாலை என்றும் பெயர் சூட்டியிருக்கிறார். வெண்பாவில் அமைந்த நூல்கள் உண்டு. ஆனால் அந்தாதி உண்டா என்பது தெரியவில்லை.

    “பார்போற்றும் எங்கள் பகுத்தறிவுத் தந்தையெனக்
    கூர்சொற்கள் தேர்ந்தே கொடைசெய்தார்! —சீரசையால்
    மாலைகட்டி  நம்மின் மனமாளும் சந்தனப்பாச்
    சோலையெனத் தந்தார் சுடர்! (1)

    என்று தொடங்கி அந்தாதியால் நடத்திச்,

    “சீர்தந்து பாட்டால் சிறைசெய்யும் பேராற்றல்
    ஆர்தந்தார் ஆனந்தா? பேரன்பே! –நேர்தந்த
    வேர்முகத்தில் கார்மழைபோல் வெற்றி பேர்கொடுக்கும்!
    பார்பெறுவாய் பாட்டுக்குப் பார்!”

    என்னும் இறுதிப்பாட்டை நூலைத் தொடங்கிய சீராலேயே முடித்தும் காட்டியிருக்கிறார். வடிவத்தில் புதுமை காணும் முயற்சி இது. பொதுவாகப் பாட்டுக்குத்தான் தொடையழகு. ஆனால் அந்தாதி நூல் முழுமையும் விரவிக் கிடப்பதால் நூலுக்கே அழகாக அமையும். ஏனைய தொடைவிகற்பங்களுக்கு இல்லாத பெருமை இது.

    4.2. எவரும் அறியாத இன்னிசை வெண்பாக்கள்

    “நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி அமைந்தால் அது இன்னிசை வெண்பா” என்றே பலரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அது சரியே. ஆனால் படைப்புக்கள் கவிஞனின் சிந்தனையோடு தொடர்புடையதேயன்றி இலக்கணத்தோடு தொடர்புடையது அன்று. அந்த அடிப்படையில் சிந்தித்தால் சில வினாக்கள் தோன்றும். ஒரு நேரிசை வெண்பாவில் இரண்டாம் அடியில் அமைய வேண்டிய தனிச்சொல் மூன்றாம் அடியில் அமைந்தால் என்ன செய்வது? ஒவ்வொரு அடியின் இறுதியிலும் முதற்சீருக்கு ஏற்ப ஒரூஉத்தொடை பெற்றமைந்தால் என்ன செய்வது? இரண்டு எதுகைக்குப் பதிலாக நான்கு எதுகையாக அமைந்தால் என்ன செய்வது? ஒவ்வொரு அடியிலும் தனிச்சொல் பெற்று வந்தால் என்ன செய்வது? ஒரு நேரிசை வெண்பாவின் ஒரு சீர் கனிச்சீராக அமைந்து போனால் அந்த அருமையான பாட்டைத் தள்ளிவிட முடியுமா? இந்த வினாக்களுக்கு விடை காணும் முயற்சியை இதுவரை எழுதிய எந்த மரபுக்கவிஞரும் தம் சிந்தனையில் கொள்ளவில்லை. ஒன்றும் பலவும் ‘விகற்பொடு நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி நடப்பின் அஃது இன்னிசை துன்னும்’ என்ற யாப்பருங்கலக்காரிகை இலக்கணத்தில் அமைந்த ‘துன்னும்’ என்ற மிகைச்சொல்லால் (விதப்புக்கிளவி) உரையாசிரியர் மேற்சொன்ன ஐயங்களைக் கிளப்புகிறார். அவ்வாறு அமைந்த வெண்பாக்களையெல்லாம் இன்னிசை வெண்பாவிலேயே அடக்கிக் கொள்ள வேண்டும் என்று ஒரு தரமான விதிவிலக்கையும் எடுத்து மொழிவதை மரபுக்கவிஞர்கள் மறக்காமல் நினைவிற் கொள்ள வேண்டும். வசந்தராசனும் இதற்கு விதிவிலக்கல்லர். ஆனால் அவர் எல்லா யாப்பையும் படைப்புக்குப் பயன்படுத்திக் கொள்ளாமல் ஒருசில யாப்புக்களையே பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்பதையும் நாம் மறக்கக்கூடாது. யாப்பே மரபு என்னும் கருத்துடையோர் கொள்ள வேண்டிய கவலை இது.

    தமிழ் மரபியல் யாப்பு நெகழ்ச்சியுடையது. சான்றாக வெண்பாவை எடுத்துக் கொள்ளலாம். எப்படி எண்சீர் விருத்தம் தேமாங்காய் தேமாங்காய் தேமா தேமா என்னும் அரையடிக் கட்டுமானத்திலிருந்து காய் காய் மா மா என்னும் கட்டுமானத்திற்கு இறங்கி வந்து நின்றதோ அதுபோல் தான் வெண்பாவும். இப்பொழுது எந்தக் கவிஞரும் வெண்பாவிற்கு உரிய செவ்வையான கட்டுமானத்தில் எழுதுவதில்லை.

    ‘தன் சீர் தனதொன்றின் தன் தளையாம்’ என்றால் காய்ச்சீர் நின்று மற்றொரு காய்ச்சீர் வந்து அதன் முதலசையோடு ஒன்றுவதுதான் வெண்சீர் வெண்டளை. அதாவது தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் நின்று வருகின்ற தேமாங்காய் கூவிளங்காய் என்னும் மூவசைச்சீர்களின் முதலசையோடு ஒன்றுவதுதான் வெண்சீர் வெண்டளை. இவ்வாறு கட்டமைக்க இயலாத நிலையில் நின்ற சீருக்குத் தளை பார்த்தால் போதும் என்று தளர்ச்சி கண்டதுதான் தமிழ்யாப்பு. வெண்பா அந்தணர் பா என்கிறார்கள். வெண்பாவிற்கென்று வெண்பா உரிச்சீர் இருக்கிறபோது வெண்பாவிற்கென்று உரிய தளைதானே அதில் வரவேண்டும்? ஆனால் நிலைமை அவ்வாறு இருக்கிறதா? இல்லையே! கட்டிக் கொள்கிறவன் ஒருவன் கலந்து கொள்கிறவன் இன்னொருவனா? காய்ச்சீர் நான்கும் நின்று வருஞ்சீர் எதுவாயினும் அவற்றின் முதலசையோடு ஒன்றினால் அது வெண்சீர் வெண்டளையாம். பொருந்துமா? அதனைவிடக் கொடுமை ஆசிரிய உரிச்சீர்களின் உறழ்ச்சியிலிருந்து பெறப்படும் தளைக்கு இயற்சீர் வெண்டளையாம். வெண்சீரில் வெண்டளை என்றால் இயற்சீரில் இயற்றளைதான் வருமேயன்றி வெண்டளை வருமா? ஆனால் அது இயற்சீர் வெண்டளையாம். அந்த இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் வெண்பாவில் வரலாமாம். இதனைத் தான் நாம் நெகிழ்ச்சி என்கிறோம். கொச்சையாகச் சொல்லப் போனால் நம்முடைய இயலாமையையெல்லாம் இலக்கணமாக்கிவிட்டோம்.

    இதே நிலைதான் பாக்களின் வகைகளுக்கும். தமிழ் யாப்பின் நெகிழ்ச்சித் தன்மையைக் குறிப்பதற்குப் பாக்களின் வகைகளின் பாகுபாடே போதிய சான்றாகும். குறள் வெண்பாவிற்கு மட்டுமே இலக்கணம் உண்டு. இரண்டு குறள் வெண்பா இணைந்தால் அது நேரிசை வெண்பா. நாலடியாலான நேரிசை வெண்பா தனிச்சொல் இன்றி வந்தால் அது இன்னிசை வெண்பா. தனிச்சொல்லோடு மூன்றடியால் நடந்தால் அது நேரிசைச் சிந்தியல் வெண்பா. தனிச்சொல் இல்லாமல் மூன்றடியால் நடந்தால் அது இன்னிசைச் சிந்தியல் வெண்பா. பல அடிகளால் வந்தால் அது பஃறொடை வெண்பா. “தட்டிப் போட்டால் வடை. உருட்டிப் போட்டால் போண்டா” என்ற கதைதான் தமிழ்க்கவிதைகளின் யாப்பு நெறி என்பதை உயத்துணர வேண்டும். குறள் வெண்பா மட்டும் எழுதத் தெரிந்தவனுக்கு எந்த வெண்பாவும் எழுத முடியும் என்பதுதான் நடப்பியல் உண்மை. ஒரே சிலப்பதிகாரத்தை வைத்துப் பல பட்டங்களைப் பெறுவது போன்றது இது.

    இந்தப் பின்புலத்தில் வசந்தராசன் எழுதியிருக்கும் சில இன்னிசை வெண்பாக்களின் கட்டுமானத்தை ஆராயலாம்.

    “ஊற்றுப் பெருக்கெடுக்கும்! ஓடி கடல்குடிக்கும்!
    சேற்று வயல்புரண்டு செம்மை பசிதணிக்கும்!
    காற்றின் வியர்வைக்கும் கைவிசிறி யாகுமதை
    ஆற்றுப் படுத்துவ தார்?”

    “காய்ந்தாலோ மேகம்! கவிழ்ந்தால் மழை!காற்றில்
    சாய்ந்தால் புயலாகும் சாட்டை! சுழன்றே
    ஓய்ந்தபின்னும் சொட்டுக்குள் ஓர்வான வில்வளைத்துப்
    பாய்ந்து உளம்திருடும் பார்!”

    மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு இவ்வெண்பாக்கள் நேரிசை வெண்பாவிலிருந்து மாறுபட்டுத் தனிச்சொல்லை வேண்டுமென்றே தவிர்த்து எழுதப்பட்டதாகத் தோன்றலாம். உண்மை அதுவன்று, கவிஞன் எழுதுகிறபோது சீர்கள் தன்னிச்சையாக அமைகின்றன. அவை தனிச்சொல்லாகவும் தோன்றலாம். தொடரில் அமைந்த சீராகவும் தோன்றலாம். ‘தனிச்சொல்’ என்னும் சொல்லாட்சி பாட்டுக்குத் தொடர்பில்லாத ஒரு சொல் என்னும் கருத்தியலைத் தாங்கி நிற்பதன்று. இடத்தால் பெயர் பெற்ற சொல். சான்றாகச் ‘சேற்றில் வயல்புரண்டு செம்மை பசிதணிக்கும்’ என்பது ஒரு தொடர். மேலே காட்டிய நேரிசை வெண்பாவில் அமைந்த ‘மன்னவனே சண்முக நாதனே! என்பதும் அவ்வாறு விழுந்த சீர்களேயன்றிப் பதிந்த சீர்கள் அல்ல. ஒன்று முதலடியின் முதற்சீருக்குகந்த எதுகையாக அமைய மற்றொன்று அவ்வாறு அமையவில்லை. அமைந்தால் நேரிசை! அமையாவிடின் இன்னிசை! வேறு எந்த இலக்கண மாற்றமும் இல்லவே இல்லை!

    “வானைத்தன் கால்விரலில் வைத்திருக்கும் பேரண்ட
    மோனப் பெருவெளியின் முன்முட்டை ஓடதனைத்
    தானே உடைத்துவந்த தன்மானத் தாய்த்தமிழே!
    கூனல் சிறிதின்றிக் குத்தீட்டி போல்நிற்கும்
    மானத் தமிழ்மறவர் மன்றம் வருபவளே!
    சீனப் பெருஞ்சுவரைச் சின்னதாய்க் காட்டுகின்ற
    ஞானச் செருக்குகளின் நாற்றங்கால் ஆனவளே!
    ஏனமாய்ப் பூவிருந்து ஏந்தியுனைப் பரிமாற
    மோனையாய் முந்துகின்ற முத்தமிழே! சங்கத்தின்
    மானத் தமிழ்மடியாய் மல்லர்கள் தோள்நின்று
    நாணச் சுரப்பிகளின் நாவிருந்த காதலுக்கு
    மோன மொழிகொடுத்து முத்தமழை பெய்தவளே!
    ஊனம் சிறிதுமின்றி உயிர்ப்பாட்டில் தீவளர்த்து
    கான மொழிமழையில் காதல் நனைத்தவளே!
    வீணர் விரலெழுத்தில் விற்கத் துடிக்கையிலும்
    பாணர்தம் பாட்டெனவே பாய்ந்தே எழுந்துவந்து
    ஆனமட்டும் கீழடியின் ஆழப் புதையலெனக்
    காணக் கிடைத்திருக்கும் காலத்தின் கையெழுத்தே!
    கோணல் உலகத்தின் கோடாய் உயர்ந்தவளே!
    நாணல் உலகின் நரம்பறுத்து நிற்பவளே!
    வீணில் விருந்தாக்க வேற்றுமொழி தான்கலந்து
    வானில் பருந்தெனவே வாய்பிளந்து நிற்போரைத்
    தேனில் விடம்கலந்து திண்ணைகளில் விற்போரைச்
    சாணைப் பிடிநீ! எமக்குச் சங்கத்தமிழாய்
    வாநீ! தமிழே!வளர்பிறை மட்டுமினி!
    ஆணை! தமிழே! அறி!”

    என்பது அவரெழுதிய பஃறொடை வெண்பாக்களில் ஒன்று. வெண்பாக்களுக்குரிய சீர், தளை, அடி வரையறை, இறுதி நிலை வாய்பாடு ஆக அத்தனையும் அமைந்து செப்பலோசை குன்றாது அமைந்த பஃறொடை வெண்பா இது. இந்தப்பாட்டின் தொகைவிகற்பங்களைச் சுட்டி எழுதப்போனால் அது தனிக்கட்டுரையாக விரியும் என விடுக்கப்படுகிறது. “மோனையாய் முந்துகின்ற முத்தமிழே!”, “வீணர் விரலெழுத்தில் விற்க”, “வீணில் விருந்தாக்க வேற்றுமொழி”, “பாணர்தம் பாட்டெனவே பாய்ந்தே” என்றெல்லாம் அமைந்திருக்கும் கூழையும் “காணக் கிடைத்திருக்கும் காலத்தின் கையெழுத்தே!” என்னும் முற்றும் பொங்கலில் முந்திரியாய்ப் புன்னகைக்கும் பொழிப்பும் ஆகிய தொடைவிகற்பங்களோடு வசந்தாராசன் பாராட்டு சொந்தம் கொண்டாடுகிறது.

    5.0. மரபார்ந்த வடிவமும் மாற்றமும்

    கலிப்பா ஒத்தாழிசைக்கலி, கொச்சகக்கலி, வெண்கலி, கலிவெண்பா என நான்கு வகைப்படும். அவற்றுள் ஒத்தாழிசைக்கலி மூன்று வகையாகவும் கொச்சகக்கலி ஐந்து வகையாகவும் அமைந்து, ஏனைய இரண்டும் இணைய கூடுதல் கலிப்பா பத்து வகைப்படும். கலிப்பாவின் இனங்கள் தனி. இவற்றுள் கொச்சகக்கலி தரவு கொச்சகக்கலி, தரவிணைக் கொச்சகக்கலி, மயங்கிசைக் கொச்சகக்கலி, சிஃறாழிசைக் கொச்சகக்கலி, பஃறாழிசைக் கொச்சகக்கலி என ஐவகையாக அமையும். அவற்றுள் தரவு கொச்சகக்கலிப்பாவில் வசந்தராசன் பல பாடல்களை எழுதியிருக்கிறார். மணிவாசகப்பெருமான், ஆண்டாள், பெருஞ்சித்திரனார் முதலியோர் தரவு கொச்சகக்கலியை எட்டடித் தரவாகவே எழுதியிருக்கின்றனர். திருவெம்பாவையும் திருப்பாவையும் ஆரும் அறிந்ததனால் பெருஞ்சித்திரனார் எழுதிய செந்தமிழ்ப்பாவையிலிருந்து ஒரு பாடல் காட்டப்படுகிறது.

    “கற்றவரோ செந்தமிழால் காசுபணம் சேர்க்கின்றார்!
    மற்றவரைக் கேட்பானேன்? மான்விழியே! நாட்டுநலம்
    உற்றசிலர் நின்றே உரிமைதரக் கேட்டாலோ
    கொற்றவரும் அன்னார் குரலை நெரிக்கின்றார்!
    குற்றமென்று கூறிக் கொடுஞ்சிறையில் தள்ளுகின்றார்!
    முற்றும் தமிழரினம் மூங்கையதா போகுமுனம்
    பெற்ற குலத்தோரே! பேருரிமை காக்கவல்லார்!
    பொற்றொடியே துஞ்சல் புரையேலோர் எம்பாவாய்!”

    வெண்சீர் வெண்டளையும் இயற்சீர் வெண்டளையும் விரவி வந்த இந்தக் கொச்சகக்கலிப்பா எட்டடித் தரவினைக் கொண்டது. வசந்தராசன் இதே கொச்சகக்கலிப்பாவைப் பத்தடித் தரவைக் கொண்டு அமைத்திருக்கிறார்.

    “ஊரின் இருபுறமும் ஓய்ந்த இருகுளங்கள்!
    தேரின் வடமாய்த் தெருக்கள்!  இவைநடுவே
    சீராய்ப் பிரித்தபடிச் செல்லும் நடுச்சாலை!
    நாரின்பூக் கட்டெனவே நன்றிணைந்த வீடுகள்முன்
    பேரின்பம் பேசும் பெருந்திண்ணை! சூழ்ந்திருக்கத்
    தூரெடுத் தூட்டும்  துணைதொடக்கப் பள்ளி !ஆங்குப்
    பேரெடுத்தப் பேர்கள் பெருங்கூட்டம்!காலையிலே
    ஏரின் கலப்பைக் கெழுந்தூதும் சங்குகள்!
    நீரின் நிலைதேடி நீளும் இடைகுடங்கள்!
    சேரக் கிடைப்பதுகாண் செந்தமிழூர் எம்பாவாய்!”

    பாவை இலக்கியம் படைப்பதிலும் அதனை வெண்டளை விரவி வரும் கொச்சகக்கலியால் பாடுவதிலும் மரபினைப் பின்பற்றும் வசந்தராசன், அதனைப் பத்தடித் தரவாகப் பாடி மரபில் மாற்றம் செய்வதைக் காணமுடிகிறது. இந்த மரபு மாற்றத்தை அவ்வளவு எளிதில் யாரும் கண்டறிய முடியாத வண்ணம் பாட்டின் கட்டமைப்பு அமைந்துவிடுவதை உணர்தல் வேண்டும்.

    6.0. சந்தச் செல்வங்களான சிந்துகள்

    சிந்து இலக்கியம் பற்றிய இலக்கண விதிகள் பிற்காலத்திய வீரசோழியம், பஞ்சமரபு முதலிய நூல்களில் காணக்கிடக்கின்றன. சிந்தினை இயற்றமிழ்ச் செய்யுட்களாகக் கொள்வாரும் நாட்டுப்புற இலக்கிய வடிவமாகக் கொள்வாரும் என இருதிறத்தார் உளர். மக்கள் வழக்கின்றிச் செய்யுள் வழக்கு அமையாதாதலின் எல்லா இலக்கிய வழக்கும் மக்களுக்குக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் சிந்து பெரிதும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எழுத்து வடிவ இலக்கியங்களைப் பாவெனக் குறித்த தொல்காப்பியம் எழுத்து வடிவம் இல்லாத மக்கள் இலக்கியங்களைப் பண்ணத்தி என்னும் சொல்லால் குறித்தது என்பதை அறிதல் வேண்டும்.

    “பாட்டிடைக் கலந்த பொருளவாகிப்
    பாட்டின் இயல பண்ணத் திய்யே”

    என்பது தொல்காப்பியச் செய்யுளியல் நூற்பாவாகும். இதற்கு உரையெழுதிய பேராசிரியர்,

    “இஃது எழுதும் பயிற்சியில்லாத புறஉறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி என்ப’ என்பது நாடகச் செய்யுளாகிய பாட்டும் மடையும் வஞ்சிப் பாட்டும் மோதிரப்பாட்டும் கடகண்டும் முதலாயின”

    என்று விளக்கிக் காட்டுகிறார். தொல்காப்பியம் குரவை, வள்ளை முதலிய நாட்டுப்புற இலக்கிய வடிவங்களைக் கூறுகிறது. ஏர்மங்கலம், முகவைப்பாட்டு, குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை, கொடிச்சியர் பாடல், வேலன் பாணி, வள்ளைப் பாட்டு, உழவர் ஓதை, கழங்காடு மகளிர் பாணி என்பனவெல்லாம் சிலப்பதிகாரத்தில் காணப்படும் நாட்டுப்புற இலக்கிய வடிவங்கள் ஆகும். இவற்றை நோக்க, புலவர் பெருமக்கள் ஒருபுறம் செவ்வியல் இலக்கியங்களை வளர்க்க, மக்கள் தங்கள் வாழ்வியல் நிகழ்வுகளில் இத்தகைய இலக்கியங்களை வளர்த்து வந்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வரலாம். செவ்வியல் இலக்கியங்களில் திருவாசகத்தில்தான் எண்ணற்ற நாட்டுப்புற இலக்கிய வடிவங்களை மணிவாசகப் பெருமான் பயன்படுத்தியிருக்கிறார். பதின்மூன்றாம் நூற்றாண்டில் திருவாழி பரப்பினான் கூத்தன் என்பார் எழுதிய பெயர் தெரியாத சிந்து இலக்கியமே தமிழின் முதல் சிந்து இலக்கியமாகும் என்பது அறிஞர் மு.அருணாச்சலனார் அவர்கள் ஆய்வு முடிவு. நாட்டுப்புற இலக்கிய வடிவங்களுள் ஒன்றான சிந்தின் இலக்கணத்தைப் பின்வருமாறு வரன்முறை செய்யலாம். வரன்முறை விதியாகாது. விதிக்குக் கவிதை உட்படாது.

    1. சொற்களோ அடிகளோ மடங்கி வருதல்
    2. தனிச்சொல் பெறுதல்
    3. எதுகை மோனைகளுடன் இயைபும் பொருந்தி வருதல்
    4. கண்ணிகளாக அமைதல்
    5. ஒலிநலன் உடைமை
    6. உறுப்புக்கள் உடைமை
    7. தாளகதியில் அமைதல்
    8. எளிய நடை

    என்னுமாறு அமைந்தவையெல்லாம் சிந்துகளே. புலவர் குழந்தை முதலிய யாப்பறி வல்லார்கள் சிந்துகளை வளையல் சிந்து, வழிநடைச் சிந்து, காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, தெம்மாங்கு என்றெல்லாம் வகைப்படுத்தியிருக்கிறார்கள். அப்பெருமக்கள் எல்லாம் பாடிய இலக்கியத்திற்குத்தான் வடிவம் அமைத்திருக்கிறார்களேயன்றி இப்படித்தான் பாடவேண்டும் என இலக்கணவிதிகளை வகுக்கவில்லை என்பதைக் கற்பார் உணர்தல் நலம். வகுக்க இயலாது என்பது நடப்பியல். சிந்து பற்றிய விரிவான ஆராய்ச்சி செய்திருக்கும் புதுவை திருமுருகனார் சிந்துகள் இலக்கண வரையறைக்குள் உட்பட வாய்ப்பில்லை என்பதைத் தாம் எழுதிய சிந்து இலக்கியம் என்ற நூலில் குறிப்பாகக் கூறியிருக்கிறார். தற்காலச் சிந்துகளுக்கு வடிவ மூலம் வழங்கியவர்கள் சித்தர்களே! அவருக்குப் பின்னால் சிந்துக்குப் பேரரசர் என்னும் உண்மையான பட்டம் கட்டிக் கொண்டவர் அண்ணாமலை ரெட்டியாரே. இந்தப் பின்புலத்தில் வசந்தராசன் எழுதிய சிந்துகளின் அமைப்பை ஒப்பீட்டு வகையால் ஆராய்வது படைப்பாளியின் உணர்ச்சிக்கும் படைப்பின் வடிவத்திற்குமான உறவைப் புரிந்த கொள்ள ஏதுவாகும்.

    “பாலைவனங்களும் பட்டுடுத்த – இனி
    பாட்டுத் தறியினை நெய்திருப்போம்!
    நாளைச் சரித்திரம் நாம் படைப்போம் – அதை
    நல்ல சரித்திரம் ஆக்கி வைப்போம்”

    என்று எழுதியிருக்கும் வசந்தராசன் இன்னொரு சிந்தினை இப்படி எழுதியிருக்கிறார்.

    “எள்ளில் கிள்ளலில் என்னைப்படி! எனை
    ஏற்பதில் ஏனின்னும் தயக்கமடி? தினம்
    முள்முடி சுமக்கவா மூளையடி – நான்
    மீண்டும் உயிர்த்திட வேண்டுமடி!”

    இந்தச் சிந்தில் அளவொத்த இரண்டடிகள் அமைந்து ஒவ்வொரு அடியிலும் தனிச்சொல் பெற்று வந்திருப்பதைக் காணலாம். மேலே காட்டிய சிந்தில் கண்ணிக்கு ஒரு தனிச்சொல். இங்கே ஒவ்வொரு அடியிலும் தனிச்சொல். கவிஞனின் உணர்ச்சிக்கு ஏற்பவே வடிவம் அமையுமேயன்றி எந்த இலக்கணமும் அவனைக் கட்டுப்படுத்தாது. கட்டுப்பாட்டுக்கு உட்பட்டால் அது கவிதையாகாது.

    “கன்னத்தில் கனிமுத்தம் தந்து – உடல்
    கட்டிவிட்டான் கவிதை கைப்பந்து – எந்தன்
    எண்ணத்து எழுங்கவிதை
    எழிலாக்கிப் பாடிடுவான்
    வந்து – வண்டின் – சிந்து!”

    என்றெழுதப்பட்டிருக்கும் சிந்து அண்ணாமலை ரெட்டியாரின்,

    “பாதிராத்திரி வேளையில் வீட்டுப்
    பக்கத்தில் வந்து மேவிப் – பஞ்ச
    பாதகன் ஒரு பாவி – சிறு
    பாவையை மெள்ளக் கூவி — கையைப்
    பற்றிக் கொண்டேகினான், பதை
    பதைக்குதே என்றன் ஆவி!”

    என்னும் சிந்தினை எண்ணத் தூண்டுகிறது. சித்தர்கள், வள்ளற் பெருமான், பாரதி, பாரதிதாசன் முதலிய எவராயினும் அண்ணாமலை ரெட்டியார் எழுதிய காவடிச் சிந்தின் குறைந்த அளவு வடிவக் கோட்பாட்டைக்கூடப் பின்பற்ற இயலவில்லை என்பது அவர்களுடைய படைப்புக்களிலிருந்து தெளிவாகும் உண்மையாகும். இன்று கிட்டியிருக்கும் இருபத்து நான்கு பாடல்களிலேயே சந்தத்தின் அத்தனைப் பரிமாணங்களையும் கொண்டு வந்து நிறுத்துகிறார் ரெட்டியார். சந்தச் சிந்துகளுக்கு உயிராக அமைவன எதுகை, மோனை. இவற்றையும் விட இயைபு.

    “சிந்தி வைத்தநம் குருதித் துளியெலாம்
    சேர்ந்து ஒன்றென ஆகுது! – தினம்
    வெந்த சோற்றுக்கே நொந்து வாழ்கிற
    வேதனை எல்லாம் தீருது!”

    என்னும் வசந்தராசன் எழுதியுள்ள சிந்தில் எதுகை, மோனை, இயைபு ஆகிய அனைத்தும் இயல்பாக அமைந்திருப்பதைக் காணலாம். பொழிப்புச் சந்தங்களை நிரல்படக் கோத்து ஒரு புதிய வகைச் சிந்தினை வசந்தராசன் எழுதியிருக்கிறார்.

    “பொன்னும் பொருளுமொரு மண்ணில் வைரமலை
    என்னை மயக்கவில்லை தாயே!  கேள்!
    பண்ணும் பரதமொடு இன்னும் பலவிருந்தும்
    என்னை மயக்கவில்லை தாயே! – அட
    மின்னல் விழியிரண்டில் கன்னல் மொழியிருந்தும்
    பெண்ணும் மயக்கவில்லை தாயே! – நீ
    தன்னந் தனியே வந்து என்னை ஈர்த்துவிட்டாய்!
    தாள்களிலே நான் பணிந்தேன் தாயே!”

    கவிதைகளின் மென்மையை மெல்லினங்கள் மேலும் மென்மையாக்கும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு எடுத்துக்காட்டு.

    “கடல் சுருங்கி அலையாக மாறும் – உன்றன்
    காலடியில் வால்சுருட்டி வீழும்!
    மடலெழுதிச் சூரியக் கை நீளும் – உன்றன்
    மலர்ப்பாத விரல் சொடுக்கிக் காயும்!
    நடைபாதை மணற்பூக்கள் விரியும் – நீ
    நடனமிட நண்டு வனம் சிரிக்கும்!
    கடன் வாங்கி மேகம் குடை பிடிக்கும் உனைக்
    கண்டதுமே அடிவானம் சிவக்கும்!”

    ‘தேடிச் சோறு நிதம் தின்று’ என்னும் சிந்தில் ஒவ்வொரு வரியிலும் தனிச்சொல் வரும். வசந்தராசனின் இந்தப் பாடலில் ஒவ்வொரு அடியிலும் தனிச்சொல் வந்து சந்தம் நிறைப்பதைக் காணலாம். முதலிரண்டின் அடிகளின் ஈற்றியைபு தேமாவில் அமைய இறுதியிரண்டடிகளின் ஈற்றியைபு புளிமாவில் முடிந்திருப்பது காண்க. வசந்தராசன் எழுதியுள்ள அனைத்துச் சிந்துகளும் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதையும் அறிக.

    கட்டுரைச் சாரம்

    பண்ணைக் கவிக்கோ துரை.வசந்தராசனின் கவிதைகள் சிலவற்றை ஆய்ந்து அவற்றில் கண்ட வடிவக் கோட்பாடுகள் பற்றிய கருத்துக்கள் பின்வருமாறு தொகுத்துரைக்கப்படுகின்றன.

    • அசை, சீர், தளை ஆகியவற்றின் முறையான அமைப்பு ஒலிவகை தோன்றுவதற்குக் காரணமாயினும் நுட்பமான ஒலியமைப்பை உள்வாங்கிக் கொண்டு படைக்கும் கவிதைகளிலேயே மேற்சுட்டிய செய்யுட் கூறுகள் அமைந்திருக்கும் என்னும் யாப்பியல் நுண்ணியத்தை அவருடைய கவிதைகள் காட்டுகின்றன.
    • கவிதையின் பாடுபொருளுக்கும் உணர்ச்சிக்கும் இவற்றை வெளிப்படுத்தும் வடிவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை அவருடைய கவிதைகள் உறுதி செய்கின்றன.
    • தொல்காப்பியத் தொடைவிகற்பம் பதின்மூன்றாயிரத்து அறுநூற்று தொண்ணூற்றொன்பது (13699) என்பது தமிழ்மக்களின் கவிதைச் சுவையுணர் திறத்தினைக் காட்டும் அளவுகோலாகும்.
    • வசந்தராசனின் கவிதைகளில் நான்குவகை ஆசிரியப்பாக்களைத் தவிர, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, பல்வகை ஆசிரிய விருத்தங்கள் கையாளப்பட்டுள்ளன.
    • கொச்சகக்கலியைப் பாவைக்கு உரித்தாக்கியிருக்கும் இவர் ஆசிரிய விருத்தங்களில் அமையும் பல்வகை வடிவங்களையும் கையாண்டிருக்கிறார்.
    • எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் மற்றும் அறுசீர் விருத்தங்கள் மட்டுமே ஒருவரை மரபுக்கவிஞர் எனச் சுட்டுவதற்குப் போதுமானவையாகா என்னும் கருத்து அவர்க்கு உடன்பாடே.
    • ‘காய் காய் மா மா’ என்னும் அரையடி யாப்பு கொண்ட எண்சீர் விருத்தத்தில் மூன்றாவது சீரைப் பெரும்பாலும் புளிமாவில் அமைக்காமல் தேமாவிலேயே அமைத்துக்காட்டும் திறன் கண்டறியப்பட்டுள்ளது.
    • சீருக்குள் வாய்பாட்டையும் வாய்பாட்டுக்குள் சீரையும் ஒன்றுக்குள் ஒன்றாகப் பின்னிப் பிணைத்து நோக்கும் பெருங்கவியாற்றல் இவர்க்கு இயல்பிலேயே கைவரப்பெற்றிருக்கிறது என்பது புலப்படுத்தப்பட்டுள்ளது.
    • “சிறகுகளின் இறகெழுத்தில் என்னைப் பார்த்தேன்! சிற்றிடையுன் வளைவிருந்து நாணம் பார்த்தேன்! பரபரக்கும் இமையிரண்டின் விளிம்பில் நின்று படும்பார்வை தூரம்வரை நின்று பார்த்தேன்!” என்றவாறு ஓர் அடியை ஒரு தொடராக்கியும் ஈரடியை ஒரு தொடராக்கியும் தங்குதடையில்லாமல் சீர்கோக்கும் பேராற்றல் இவர்க்கு இயல்பு.
    • எதுகை நோக்கி முதற்சீரை அமைக்காமல் எந்தச் சீரையும் தொடக்கச்சீராக அமைத்துத் தொடர்ந்து வரும் சீர்களைப் பொருத்தமாக அமைத்துக் காட்டும் ‘சீராளி’யாகவே இவர் விளங்குகிறார்.
    • எதுகைக்காக இறவாணம் பார்க்கும் இயல்பு இவர்க்கு இல்லை என்பதும் எழுதிய பாக்களிலோ இனங்களிலோ எந்த வகைச் சீரையும் இயல்பாக அமைத்துக் காட்டும் குற்றால அருவியாகவே இவருடைய கவிதைகள் இவரைக் காட்டுகின்றன என்பதும் அறியத்தக்கன.
    • புதிய சொல்லாட்சிகளையும் பழைய சொல்லாட்சிகளையும் தேவை கருதி அளவு நோக்கிப் பயன்படுத்தும் கவி பக்குவம் இவர்க்கு உண்டு.
    • இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை என்னும் கொள்கையைப் பாவேந்தரைப் போலவே இவரும் உடைத்தெறிந்திருக்கிறார்.
    • கவிதைத் திடலில் சிந்துப் பந்துகளை உருட்டி விளையாடுவதில் இவர் தீராத விளையாட்டுப் பிள்ளையாகவே காட்சி தருகிறார்.
    • தொடைவிகற்பங்களைக் கணக்கெடுத்துக் கொண்டு கவிதை செய்யாமல், எழுதுகிற கவிதைகளில் அவை தாமாக விரும்பி வந்து அமரும் காந்தத் திறனை இவருடைய கவிதைகள் பெற்றிருக்கின்றன.

    நிறைவுரை

    வாழுகின்ற கவிஞன் ஒருவன் தானறிந்த யாப்புக்களைக் கையாளும் செவ்வியல் பற்றிச் சுருக்கமாக ஆராய்வதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொண்டது. தமிழின் மேற்கணக்கு நூல்கள் பெரும்பாலும் ஆசிரியப்பாக்களாலும், கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் வெண்பா வகைகளாலும் ஆனவை என்பதையும் விருத்தங்கள் மிகவும் பிற்காலத்தவை என்பதையும் தற்கால ‘மரபுக்கவிஞர்கள்’ உணர வேண்டும். ஓரளவு யாப்பு மரபைப் பின்பற்றியவர்களில் வள்ளற்பெருமான், பாரதி, பாரதிதாசன் ஆகியோர் முக்கியமான இடத்தைப் பெறுகின்றனர். எந்தக் கவிஞனும் எல்லா யாப்புக்களையும் கையாண்டுவிட முடியாது என்பது நடப்பியல். யாப்புக் கட்டுமானமும் தொடைவிகற்பங்களும் பின்னிப்பிணைந்தவை. வடிவமாகிய புறஉறுப்பை அகவுறுப்பாக மாற்றுவதே கவித்திறன். அவையிரண்டும் தம்பி வசந்தராசனின் கவிதைகளில் அரவப்புணர்ச்சிபோல் அங்கம் வகிக்கின்றன என்பதை இக்கட்டுரையால் ஓரளவு தெளிந்து கொள்ளலாம்.

    (தொடரும்…….)

    Share
  • பொங்கலென்னும் மங்கலத் திருநாள்!

    பொங்கலென்னும் மங்கலத் திருநாள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா      
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என்று – பொங்கல் திருநாளில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்போம். வறுமை அகல வேண்டும். வாய்மை நிலைக்க வேண்டும். பொறுமை பொலிய வேண்டும். பொய்மை அகல வேண்டும். அறிவு பெருக வேண்டும். ஆன்மீகம் சிறக்க வேண்டும். அன்பு நிலைக்க வேண்டும். அறியாமை மறைய வேண்டும்.

    பொங்கல் என்றாலே புத்துணர்வு வருகிறதல்லவா! பொங்கல் என்றாலே பூரிப்பு பெருகிறது அல்லவா! பொங்கல் என்றாலே ஆனந்தம் பெருக்கெடுக்கிறது அல்லவா! அதனால்த்தான் “பொங்கலோ பொங்கல்“ என்று பொங்கலை மகிழ்வாய் வரவேற்றுப் பொங்கியும் மகிழுகின்றோம்.

    உறவுகள் கூட வேண்டும். ஒற்றுமை ஓங்க வேண்டும். பிரிவுகள் மறைய வேண்டும். பெரியவர் வாழ்த்த வேண்டும். இளையவர் சிறக்க வேண்டும். இன்பமே இருக்க வேண்டும். இதுதானே பொங்கலின் உட்பொருளாய் அமைந்திருக்கிறதல்லவா!

    பொங்கலின் சிறப்புகள் எங்கள் தமிழினத்தின் ஏற்றமிகு பண்பாட்டுப் பெட்டகமே ஆகும். புத்தரிசி, புதுப்பானை,  கோலம், மாவிலை, வாழையிலை, மஞ்சள், கரும்பு, அது தரும் சுவையான சர்க்கரையும் வெல்லமும். வெற்றிலை, பழங்கள், நிறைகுடம், குத்துவிளக்கு, இலக்குமியாய் எங்களின் பசுக்கள், அது அன்பாய் பொழியும் அமுதாம் பசும்பால், அத்தனையும்  பொங்கலுக்கு வாய்த்திட்ட பொக்கிஷங்கள் அல்லவா!

    இனிப்பாய் இருக்க வேண்டும். சிறப்பாய் இருக்க வேண்டும். பொறுப்பாய் உழைக்க வேண்டும். நன்றியாய் இருக்க வேண்டும். நலிந்தோர்க்கும் நல்கவேண்டும். பொங்கிய பொங்கலை நாமும் உண்ண வேண்டும். மற்றவர்க்கும் பகிர்ந்தளித்து மகிழவும் வேண்டும்.

    உதவும் மாடுகளுக்கு நன்றி. உழைக்கும் உழைப்புக்கும் நன்றி. ஒளி கொடுக்கும் ஆதவனுக்கும் நன்றி.

    மண்ணுக்கும் நன்றி. விண்ணுக்கும் நன்றி. மண்போட்ட விதை முளைக்க வைத்திட்ட மாமழைக்குக்கும் நன்றி. இத்தனைக்கும் உரித்தாய் அமைந்திருக்கும் உன்னதத் திருநாள் தான் எங்களின் “பொங்கல்த் திருநாள்“. அந்தத் திருநாளைப் பற்றி அறிவதும் அகத்திருத்துவதும் அவசியம் அல்லவா!

    “தைபிறந்தால் வழிபிறக்கும்” என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். அந்த வழக்கம் தொடர் ந்து வரவேண்டும் என்பதே யாவரதும் ஆசையாகும்.

    “தை பொறந்தால் (பிறந்தால்) வழி பிறக்கும் தங்கமே தங்கம்               
    தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்                                               
    முத்துச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்                                     
    முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்                                           
    குத்து விளக்கேத்தி வச்சு (வைத்து) தங்கமே தங்கம்                               
    கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்”  –  

    என்னும் இந்தப் பாடல் மனமகிழ்ந்த பொங்கலை, மலர்ந்த பொங்கலை, மண்வாசனை தரும் பொங்கலை, உயிர்த் துடிப்பான பொங்கலை, கலாசாரம் பண்பாடு கலந்த பொங்கலை நினைவூட்டி நிற்கிறதல்லவா?  அப்படி ஒரு காலம் இருந்தது. அந்தக் காலம் எங்கள் ஆழ் மனதில் அமர்ந்திருக்கிறதல்லவா? அப்படி ஒரு காலம் வரவேண்டும் என்பதுதான் எல்லோரதும் ஆசை!

    “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில்                             
    உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்”

    “உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லைக் கண்டீர்                                        
    பழுதுண்டு வேறோர் பணிக்கு“ 

    “சேற்றில் கால் வைக்காவிட்டால் சோற்றில் கைவைக்க முடியாது” இவையெல்லாம் பொங்கலை மனமிருத்தும் அமுத வாக்குகள்.

    தைமாதத்தின் தொடக்கத்தில் இந்த விழா ஏன் கொண்டாடப்படுகிறது? இந்த விழாவினை யாரை மையப்படுத்திக் கொண்டாடுகிறோம்? இந்த விழாவின் அடிப்படை எதனை உணர்த்துகிறது? இந்த விழாவில் தமிழரின் எத்தகைய பண்பாட்டு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன? பொங்கல் என்றால் புது உடைகள் வாங்குவோம். பொங்குவோம். தொலைக்காட்சியில் நடக்கும் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்போம். அத்துடன் பொங்கல் விழா நின்றுவிடும். இதுவா பொங்கல் திருநாள்!

    உழைப்பு என்பதுதான் சமுதாயத்தின் அடிப்படை. அந்த உழைப்பில் பங்கு கொள்ளும் அனைவரும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே. உழைப்புக்கு உதவும் மனிதர்கள், உழைப்புக்கு உதவிடும் விலங்குகள், உழைப்புக்கு உதவிடும் கருவிகள் கவனத்தில் கொள்ளப்படுவதுதான் சமூதாய அறமாகும். அப்படியான ஒரு அறத்தினை வலியுறுத்தத்தான் தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம் என்பதை மனமிருத்தல் வேண்டும்.

    உலகிலே  உயிர் வாழ்வதற்கு வெப்பம் முக்கியமானது. காற்று முக்கியமானது. நீர் முக்கியமானது. உணவு  முக்கியமானது. இவற்றுக்கெல்லாம் இறை அம்சம் கொடுத்து அவற்றை சமூகத்தின் உயர் நிலையில் வைக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. இவையாவும் தைப்பொங்கலுடன் இணைத்து வைத்தார்கள் எங்கள் முன்னோர்கள். இதனால் பொங்கல் சிறப்பான விழாவாக அமைகிறது லென்பதும் நோக்கத்தக்கது.

    விவசாயம் என்பதுதான் சமூக வாழ்வுக்கு முதுகெலும்பாகும். விவசாயம் கொண்டு வருகின்ற பொருட்களால்த்தான் சமூகத்தில் மக்களின் அன்றாட வாழ்வே சிறப்பாகிறது. அந்த விவசாயத்தைச் செய்பவன் இந்தப் பொங்கலில் போற்றப்படுகின்றான். அந்த விவசாயிக்கு உதவும் மாடுகள் பூசிக்கப்படுகின்றன. விவசாயத்தை செழிப்பாக்கும் சூரியன் வணங்கப்படுகிறான். விவசாயத்துக்கு உதவும் கருவிகள் மதிக்கப்படுகின்றன. இதனால் தைப்பொங்கல்  என்பது  நன்றியினை நவில்கின்ற பெருவிழா அமைகிறது என்பது முக்கிய கருப்பொருள் எனலாம்.

    தையில் அறுவடை செய்த புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பாலும் சர்க்கரையும் சேர்த்து மண்பானையில் பொங்கி மகிழும்பொழுது பொங்கி வரும் பாலினைப் பார்த்து குடும்பத்தில் உள்ளார்கள் “பொங்கலோ பொங்கல்“ என்று மகிழ்ந்து நிற்கும் நிலையினை எங்கள் பிள்ளைகளின் உள்ளத்தில் இருக்கச் செய்வது மிக இன்றியமையாததாகும்.

    கலப்படம் இல்லாமல் யாவுமே உழைப்பின் பயனாக வந்த அரிசி, பால்,  சர்க்கரை, கரும்பு, இஞ்சி, மஞ்சள், வாழை, மாவிலை, இவையெல்லாம் மகிழ்ச்சியின் அடையாளங்கள். மனித சமூகத்தின் மாண்பின் அடையாளங்கள். எங்களின் பண்பாட்டின் அடையாளங்கள். இவைகள் தைப்பொங்கலில் பயன்படுத்தும் பொழுது ஏற்படும் மனநிறைவுக்கு ஈடு இல்லை எனலாம்.

    கூட்டுறவின் மகத்துவம் தைப்பொங்கலின் சிறப்பாகும். மனிதனும் விலங்குகளும் கூடி உழைத்து அதன் பயனாக வெளிப்படும் ஒரு கூட்டுறவுத் திருநாள் என்றுகூட தைப்பொங்கலை எடுத்துக் கொள்ளலாம். வருடத்தின் தொடக்கமாய் வரும் தையினை மங்களகரமாக வரவேற்க வேண்டுமென்று எண்ணி பொங்கல் திருநாளினை ஏற்படுத்திய எங்களின் முன்னோர்களை நாங்கள் வாழ்த்தாமல் இருந்திட முடியுமா? வருடத் தொடக்கத்தில் மனதில் ஏற்படும் எண்ணங்கள்தான் அந்த வருடம் முழுவதையும் மகிழ்வுடன் வாழ வைக்கும் என்று எண்ணிய உளவியல் சிந்தனையை உவந்தேற்ற வேண்டாமா?

    பொங்கலின் முதலில் மார்கழியின் நிறைவில் போகி என்றொரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி என்றால் பழைய விஷயங்களை பழைய பொருட்களைக் களைந்து விடுவதாகும். அடுத்து பொங்கல் வருகிறது. பழைய பொருட்களை எரித்து விடுவதைத்தான் போகியில் காண்கிறோம், உண்மையில் இதன் அர்த்தம் அதுவன்று. எங்கள் மனத்திலுள்ள பொறாமை வஞ்சகம். பொய், கபடு, சூது, வாது, இவற்றையெல்லாம் ஞானம் என்னும் தீயில் பொசுக்கி மனதைத் தூய்மை ஆக்கி புத்தாடை உடுத்து புதுப்பொங்கலை சுவையாக உண்டு புத்துணர்வு பெற்று நிற்கவேண்டும் என்பதுதான் இதன் தாற்பரியம் எனலாம்.

    பொங்கலுக்கு அடுத்து மாட்டுப் பொங்கல் வருகிறது. விவசாயத்துக்கு உதவிய மாடுகளுக்கும், பால் தந்து எம்மை வாழ்வித்த பசுக்களுக்கும் நன்றி நவிலும் நாளாக இது அமைகிறது. அடுத்த நாள் “காணும் பொங்கல்” அமைகிறது. உற்றார் உறவினரை, பெரியவர்களைக் கண்டு அவர்களின் வாழ்த் தினை ஆசியினைப் பெற்றுக் கொள்ளும் நாளாக இந்த நாளை அமைத்து மகிழ்கின்றார்கள்.

    மாட்டுப்பொங்கல், போகித்திருநாள், காணும்பொங்கல் இவைபற்றி எல்லாம் நகரத்தில் வாழ்கின்றவர்களுக்கோ.  புலம்பெயர் பகுதிகளில் வாழ்கின்றவர்களுக்கோ தெரியவருவது குறைவாகும். பொங்கலைக் கூட குக்கரில் பொங்கி தாங்கள் இருக்கும் வீட்டின் அடுப்படியில் வைத்து கரண்டியால் இரண்டு கரண்டி அவசர அவசரமாக வாயில் போட்டுவிட்டு வேலைக்கு ஓடும் நிலையினைத்தான் பொங்கல் நன்னாளில் காண்கின்றோம். மாடிக் குடி இருப்புகளில் வாழ்கின்றவர்களின் பொங்கலை நினைத்துப் பார்க்கவே பரிதாபமாகவே இருக்கும்.

    சமயம் கடந்த விழாவாக தமிழர் விழாவாக தைப்பொங்கல் விளங்குகிறது என்பதுதான் இந்த விழாவின் மிகச் சிறப்பு எனலாம். உலகில் வாழுகின்ற தமிழர்கள் – தைப்பொங்கலை மகிழ்வுடன் “பொங்கலோ பொங்கல்” என்று பொங்கும் மனத்துடன் கொண்டாடி மகிழ்கிறார்கள். சமயச்சாயம் பூசப்படாத தமிழர் திருநாளாய்  தைப்பொங்கல் திகழ்கிறது என்பது தமிழருக்கெல்லாம் மிகவும் பெருமையான விஷயம் அல்லவா!  நன்றி நவிலும் விழா! உழைப்பாளரின் உன்னத விழா! கூட்டுறவின் விழா! மத பேதமற்ற மகோன்னத விழா! எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் நிறை என்னும் விழா! எனவே பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள்! உதவுவதை உளமிருத்த பொங்கல் திருநாளில் அனைவரும் சங்கற்பம் எடுத்திடுவோம். கற்பவர்க்கு இயலுமான வரை கைகொடுக்க எண்ணிடுவோம். ஏழையாய் இருப்பார்க்கு இயன்றவரை இருப்பதைக் கொடுத்திடவும் எண்ணிடுவோம். கற்கின்ற மாணவர்கள் ஏழ்மையால் உழலுவதைக் கைகட்டி நின்று பார்க்கும் மனநிலையைக் கைவிட்டு அவர்களைக் கையணைப்போம். உள்ளங்கள் அன்பாய் அருகணைய வேண்டிடுவோம். பொங்கல் திருநாள் புத்தொளியை தந்திடட்டும்! பொங்கல் திருநாள்  புதுப்பாதை திறந்திடட்டும்!

    தை பிறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
    பொங்கப் பான வெள்ளம் போலப் பாயலாம்
    அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு

    அத்தனையும் தித்திக்கிற நாள்தான்                                  
    எங்கள் தை பிறக்கும் நாள்தான்
    ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
    அன்பாகச் சேர்ந்துமே பொங்கி மகிழ்வோம் 

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 60

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 60

    -மேகலா இராமமூர்த்தி

    இந்திரசித்தைக் கொன்ற இளவல் இலக்குவனைப் பாராட்டிய இராமன் இலக்குவனிடம், ”ஆடவர் திலகனே! இந்த வெற்றி நின்னால் கிடைத்ததன்று; அனுமன் எனும் உயர்ந்தவனால் கிடைத்ததன்று; வேறோர் தெய்வத்தின் சிறப்பினால் விளைந்ததும் அன்று! இது வீடணன் தந்த வெற்றி!” என்று வீடணனைப் புகழ்ந்தான்.  

    ஆடவர் திலக நின்னால் அன்று இகல் அனுமன் என்னும்
    சேடனால் அன்று
     வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று
    வீடணன் தந்த வென்றி ஈது என விளம்பி மெய்ம்மை
    ஏடு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன் இனிதின் இப்பால்.
    (கம்ப: இந்திரசித்து வதைப் படலம் – 9185)

    இந்திரசித்தைக் கணை எய்து கொன்றது இலக்குவன்தான்! அப்படியிருக்க ”இது வீடணன் தந்த வென்றி” என்று இராமன் புகழ்ந்துரைக்கக் காரணம் என்ன?

    நாகபாசப் படலத்தின் இறுதியில் இலக்குவன் நாகக் கணையால் கட்டுண்டு வீழ்ந்துகிடந்தது கண்டு மனம்பதைத்த இராமன், ”இலக்குவனுக்கும் இந்திரசித்தனுக்கும் போர் ஏற்பட்டது பற்றி நீ என்னிடம் கூறாததால் இந்திரசித்தனை நான் கொல்ல இயலாமல் கெடுத்துவிட்டாய் வீடணா!” (கம்ப: 8227) என்று வீடணனைக் கடிந்துகொண்டதைக் கண்டோம்.

    அவ்வாறு தேவையில்லாமல் வீடணனைக் கடிந்துகொண்டது இராமனுக்கே பின்னர் வருத்தத்தை அளித்திருக்கக்கூடும்; அதற்குக் கழுவாய் தேடும் வகையில் இப்போது வீடணன் நேரடியாக இந்திரசித்தோடு போரிட்டு அவனைக் கொல்லாதபோதிலும் அவ்வெற்றியை வீடணனுக்குச் சமர்ப்பித்துத் தன் மனத்தை இராமன் ஆறுதல்படுத்திக்கொண்டதாகக் கருதலாம் என்கிறார்  கம்பனில் தோய்ந்தவரான மகாவித்துவான் வே. சிவசுப்பிரமணியன்.

    இந்திரசித்து இறந்ததை இராவணனிடம் சொல்லச் சென்ற தூதுவர்கள் தம் உடலும் மனமும் நடுங்கியவாறே, ”அவன் இறந்தான்” என்று அமங்கலமாய்ச் சொல்ல அஞ்சி, ”உன் மகன் இன்று இல்லாமற் போனான்!” என்று சொல்லினர்.

    அதனைக் கேட்ட அளவில் கண்கள் தீயைக் கக்கச் செய்திசொன்ன தூதுவர்களின் கழுத்துக்களை வாளால் வீசித் துண்டித்துவிட்டுச் சோர்ந்த இராவணன், தன் மகனை நினைந்து துன்பமும் பகைவரை நினைந்து சீற்றமும் கொண்டவனாய்த் தரையைக் கைகளால் அறைந்தான். வெந்தபுண்ணில் வேல்பாய்ந்ததுபோல் நொந்தவனாகி, என் சிறந்த மகனே என்பான்; என் தந்தையே என்பான்; என்னுயிரே என்பான்; உனக்குமுன்னர் உயிர்விட வேண்டிய நான் இன்னுமிருக்கிறேனே என்பான். இவ்வாறு இந்திரசித்தின் பெருமைகளைச் சொல்லிச் சொல்லிப் புலம்பினான் இராவணன்.

    மைந்தவோ எனும் மாமகனே எனும்
    எந்தையோ எனும் என்னுயிரே எனும்
    முந்தினேன் உனையான் உளனே எனும்
    வெந்த புண்ணிடை வேல்பட்ட வெம்மையான்.
    (கம்ப: இராவணன் சோகப் படலம் – 9195)

    பின்பு புலம்பலை நிறுத்திவிட்டு எழுந்த இராவணன் தன் மகனின் உடலைத் தேடுவதற்காகப் பொருகளம் நோக்கிப் புறப்பட்டான். அங்கே பல பிணங்களையும் புரட்டிப்பார்த்து இந்திரசித்தின் கையையும் தோளையும் அதைத் தொடர்ந்து அவன் மெய்யையும் (உடல்) கண்டெடுத்தான். அவ்வுடலின்மீது வீழ்ந்து கதறியவன்,

    ”சினத்தொடு நின்று வெற்றியெய்தி இந்திரனுடைய செல்வத்தையடைந்து நினைத்ததை முடித்துநின்ற நான், சீதை என்கின்ற ஒருத்தியின் காரணமாக அந்நிலையிழந்து, எனக்கு நீ செய்யத்தக்க இறுதிக் கடன்களையெல்லாம் வருந்தி வருந்தி உனக்கு நான் செய்யும் நிலையை அடைந்தேன்! என்னைவிட இழிந்தவர் இவ்வுலகில் யாருளர்?” என்று அரற்றினான்.

    சினத்தொடும் கொற்றம் முற்றி இந்திரன் செல்வம் மேவி
    நினைத்தது முடித்து நின்றேன் நேரிழை ஒருத்தி நீரால்
    எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம் ஏங்கி ஏங்கி
    உனக்கு நான் செய்வதானேன் என்னின் யார் உலகத்து உள்ளார்.
    (கம்ப: இராவணன் சோகப் படலம் – 9224)

    பெறலரும் மைந்தனான இந்திரசித்தின் மறைவு தந்த வேதனையால் இராவணனின் அகமனம் திறந்து தன்னுடைய முறையற்ற கழிகாமமே இத்துயரத்துக்குக் காரணம் என்று அவனை ஒத்துக்கொள்ள வைப்பதை இங்கே காண்கின்றோம். அம்மட்டோ? தந்தைப் பாசத்தின் ஆழத்தையும், எப்படிப்பட்ட வீரத் தந்தையாலும் புத்திர சோகத்தைத் தாங்கவியலாது என்பதையும் இப்பாடல் அங்கை நெல்லியெனப் புலப்படுத்திப் படிப்போர் கண்களைக் குளமாக்கி விடுகின்றது.

    இந்திரசித்தின் உயிரற்ற உடலையெடுத்துக்கொண்டு (தலையை இலக்குவன் எடுத்துக்கொண்டு போய்விட்டபடியால் அஃது இராவணனுக்குக் கிட்டவில்லை.]  இலங்கைக்குச் சென்றான் இராவணன். இந்திரசித்தின் மனைவியர் தம் கணவனின் உயிரற்ற உடலம் கண்டு தரையில்வீழ்ந்து புரண்டு அழ, இந்திரசித்தைப் பெற்றவளும் மயன்மகளுமான மண்டோதரி தலைவிரி கோலமாய் அங்குவந்து, மலைமீது மயில்வீழ்ந்ததுபோல், மகன் உடல்மீது வீழ்ந்து மூர்ச்சையுற்றாள். சிறிதுநேரத்தில் மூர்ச்சைதெளிந்து எழுந்தவள்,

    ”நாளுக்குநாள் கலையினால் வளர்கின்ற சந்திரனைப்போல் வளர்கின்ற இளம் பருவத்திலே உன் வில்லினால் இந்திரனை வெல்லக்கண்டு மகிழும் தவத்தை முன்பு செய்திருந்தேன்; தலையில்லாத உன் உடலைக் காண ஐயோ…என்ன தவத்தை (இங்கே பாவத்தைக் குறித்தது) செய்தேன்! நல்ல நினைவு இல்லாத நான் இனியும் இந்த நிலையில்லாத வாழ்வை மதிப்பேனா?” என்றாள்.

    கலையினால் திங்கள் என்ன வளர்கின்ற காலத்தே உன்
    சிலையினால் அரியைவெல்லக் காண்பதுஓர் தவம்முன் செய்தேன்
    தலைஇலா ஆக்கைகாண எத்தவம் செய்தேன் அந்தோ
    நிலைஇலா வாழ்வை இன்னும் நினைவெனோ நினைவுஇலாதேன்.
    (கம்ப: இராவணன் சோகப் படலம் – 9232)  

    இவ்வாறு இந்திரசித்தின் இளமைக்காலச் சாதனைகளை ஒவ்வொன்றாய்ச் சொல்லி அரற்றிய மண்டோதரி, ”பஞ்சுப்பொதியில் நெருப்புப் பற்றி எரிந்ததுபோலக் கடல்போன்ற அரக்கர்படை அனைத்தும் மனிதர் இருவரால் மாண்டதே தவிர மீண்டதில்லை; சீதையெனும் பெயருடைய அமுதத்தால் செய்த நஞ்சினால் நாளை இலங்கைவேந்தன் நிலையும் இஃதே என்பதை எண்ணி நான் அஞ்சுகின்றேன்” என்றுரைத்தாள்.

    தன் கணவன், சீதையை அவள் விருப்பத்துக்கு மாறாய் வலிந்து பற்றிக்கொணர்ந்து சிறைவைத்திருக்க, அவன்மீது குற்றம் காணாதவளாய்ச் சீதையை அமுதாகத் தோன்றிய நஞ்சு என்று மண்டோதரி விளிப்பது கணவன்மீது அவள் கொண்ட மூடத்தனமான ’பதிபக்தி’யாகவே தெரிகின்றது.

    மண்டோதரியின் மொழிகளால் சீதைமீது சீற்றங்கொண்ட இராவணன், ”கல்நெஞ்சினளாகிய வஞ்சகி சீதையை இப்போதே வாளால் வெட்டிக் கொல்லுகின்றேன்” என்று கிளம்பினான். இராவணன், தான்செய்த தவற்றுக்குச் சீதையை வஞ்சகி என்றுரைப்பது அடாதது அல்லவோ?

    அப்போது இராவணனைத் தடுத்த அவன் அமைச்சன் மகோதரன்,  ”புலத்திய முனியின் மரபில் வந்தவனே! பெண்கொலை புரிதல் மண்ணுலக நீதியன்று! அறமுமன்று! அதனால் அழியாத பழிவந்து உன்னைச் சேரும்!” என்று எடுத்துரைக்கவே வாளைக் கீழேபோட்டான் இராவணன்.

    அடுத்து, இராவணன் ஆணைப்படி உலகிலிருந்த அரக்கர்படை அனைத்தும் அவனைக் காண வந்துசேர்ந்தது. அவர்களைப் போருக்கழைத்த காரணத்தை அவர்களிடம் விரிவாய் விளக்கினான் இராவணன். வேற்றுப் பகுதிகளிலிருந்து வந்திருந்த அந்த அரக்கர்படை போர்க்களம் நோக்கிப் புறப்பட்டது; அப்படையோடு இராவணனின் மூலசேனையும் இணைந்துசென்றது.

    அப் படைப்பெருக்கத்தைக் கண்டு வானரக் கூட்டம் தொடைநடுங்கி அஞ்சியோடவே, அவர்களின் அச்சத்தைப் போக்கி அடுகளத்துக்கு அழைத்துவந்தனர் அங்கதன், அனுமன் போன்ற வானர வீரர்கள். களத்தை அடைத்துநின்ற அரக்கர்படையைத் தனியொருவனாய் எதிர்த்த இராமன், பெரும்பாலானவர்களைக் கொன்று குவித்தான்; அரக்கரின் உடலிலிருந்து வெளிப்பட்ட குருதிவெள்ளம் கடலென இலங்கைக்குள் பாய்ந்ததுகண்டு அரக்கியர் அஞ்சியோடினர்.

    தன்பொருட்டுப் பொருதோர் அனைவரும் பொன்னுலகு சேர்ந்துவிட, பாரிலும் விசும்பிலும் நீரிலும் நெருப்பிலும் செல்லும் பேராற்றலுடைய தன் தேரிலேறிய இராவணன், “நறுமணமிகு அழகிய கூந்தலையுடைய சீதை தன் மலர்க்கையால் வயிற்றிலடித்துக்கொண்டு துயரத்தில் மூழ்குதல்; அவ்வாறு நடக்காதெனின் மயன்மகள் மண்டோதரி அச்செயல்களைச் செய்தல்; இந்த இரண்டில் ஒன்றை இன்று போரில் நடைபெறச் செய்வேன்” என்று சூளுரைத்துப் போருக்குப் புறப்பட்டான்.

    மன்றல்அம் குழல்சனகி தன்மலர்க் கையான் வயிறு
    கொன்று அலந்தலைக் கொடு நெடுந்துயரிடைக் குளித்தல்
    அன்றுஇது என்றிடின் மயன்மகள் அத்தொழில் உறுதல்
    இன்று இரண்டின் ஒன்று ஆக்குவென் தலைப்படின் என்றான்.
    (கம்ப: இராவணன் தேர்ஏறு படலம் –  9667)

    ஒன்று, இராவணனாகிய தான் உயிரோடு இருக்கவேண்டும் அல்லது இராமன் உயிரோடிருக்க வேண்டும்; அந்த இரண்டில் ஒன்று இன்றைய போரில் முடிவாகிவிட வேண்டும் என்பதே இராவணன் சொன்னதன் உட்பொருள். போரின் இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டதை இஃது உணர்த்துகின்றது.

    இராவணன் போருக்கு வருகின்றான் என்பதை வீடணன் உரைக்க, விரைவாய்ப் போருக்கெழுந்தான் இராமன். பெருவீரர்களான இராமனுக்கும் இராவணனுக்குமிடையே எழுந்தது கடும்போர். இராவணன் அம்புகளை மாரியாய் விட, அவ் அம்புகளைத் தன் கணைகளால் விலக்கினான் இராமன். தன் தேரொடு விண்ணிலேறினான் இராவணன்; அதுகண்டு, இந்திரன் தந்த தேரிலேறிப் போர்புரிந்துகொண்டிருந்த, இராமனும் விண்மிசைத் தன் தேரைச் செலுத்தினான். விண்ணில் தொடர்ந்தது வெம்போர். இருவரும் ஒருவர்மீது ஒருவர் தெய்வக் கணைகளை மாறி மாறிச் செலுத்தித் தம் வலிமையை வெளிப்படுத்தினர். இராவணன் சூலப்படையை விடுத்தான்; அதனை இராமன் தன் உங்காரத்தால் (’ஹூம்’ எனும் ஒலியெழுப்பி) பொடிப்பொடியாக்கியது கண்டு வியந்த இராவணன்,

    ”என் மிகச்சிறந்த வரபலத்தையெல்லாம் அழிக்கிறான்; இவன் சிவனோ? அல்லன்! திருமாலோ? அவனும் அல்லன்! தவம்செய்து ஆற்றல் பெற்றவனோ என்றால் இத்தகு பேராற்றலைத் தவத்தால் முடிக்கும் தகுதியுடையவன் ஒருவனும் இல்லை; அப்படியாயின் வேதங்களுக்கெல்லாம் மூலகாரணமான ஆதிப் பரம்பொருள் இவன்தானோ?” என்று தனக்குள் சொல்லி பிரமித்தான்.

    மும்மூர்த்திகளும் திக்குவிசயம் செய்தபோது இராவணனிடம் தோற்றவர்கள் ஆதலின் அவர்களை விலக்கினான்; தானே மிகப்பெரும் தவங்களைச் செய்து  வரங்களைப்   பெற்றவன் ஆதலின் தன் வரங்களை அழிப்பவன் தன்னினும் மிகப்பெரிய தவம் செய்யவேண்டும்; அப்படி ஒருவன்  இருக்க இயலாது என்று இராவணன் ஈண்டு எண்ணுவது அவனுடைய தற்செருக்கால் வந்ததாகும்.

    சிவனோ அல்லன் நான்முகன் அல்லன் திருமாலாம்
    அவனோ அல்லன் மெய்வரம் எல்லாம் அடுகின்றான்
    தவனோ என்னின் செய்துமுடிக்கும் தரன் அல்லன்
    இவனோதான் அவ்வேத முதல் காரணன் என்றான்.
    (கம்ப: இராவணன் வதைப் படலம் – 9837)

    ”யாராயினும் சரி…இனிப் போரைக் கைவிடுவதில்லை” எனும் உறுதியோடு போரைத் தொடர்ந்தான் இராவணன். அப்போது இராவணனின் சிரத்தைப் பிறைமுகச் சரத்தால் கொய்தான் இராமன். ஒரு தலை அற்றுவீழ மீண்டும் முளைத்தது மற்றொரு தலை அவனுக்கு. புதிதாய் இராவணனுக்குத் தலைகள் முளைக்க முளைக்க அவற்றை அறுத்துத் தள்ளினான் இராமன். அதனைத் தொடர்ந்து, இராவணனின் உடலைத் தன் அம்புகளால் மூடினான். தன்னுடலெங்கும் துளைத்த இராமனின் அம்புகளால் சோர்ந்து செயலற்றுப் போனான் இராவணன். அவன் செயலற்ற நிலைகண்ட இராமன் அவன்மீது கணைகளைத் தொடுப்பதை நிறுத்தினான். அப்போது இராமனின் தேர்ப்பாகன் ”இதுதான் இராவணனைக் கொல்ல ஏற்ற சமயம்; அம்புகளைத் தொடர்ந்து செலுத்துக!” என்று கூறிய யோசனையை இராமன் ஏற்கவில்லை; ”நினைவிழந்து கிடப்பவனைத் தாக்குதல் போர்நெறியினின்று பிறழ்ந்த செயலாகும்” என்றுகூறி அதனைச் செய்ய மறுத்துவிட்டான்.

    இராவணன் தெளிந்து எழுந்தபின் அவனுக்கும் இராமனுக்கும் மீண்டும் போர் தொடர்ந்தது. இராவணன் வில்லையுடைத்த இராமன், ”இவனை முடிக்கும் வழி யாது?” எனச் சிந்தித்து, அயன்படையை (பிரமாத்திரத்தை) எடுத்து இராவணனின் மார்பைக் குறிவைத்து விடுத்தான்.

    இராகவன் எய்த தூய்மையான அந்த பிரமாத்திரம், இராவணனின் மூன்றுகோடி வாணாளையும், முயன்று பெற்றிருந்த பெருந்தவப் பயனையும், தேவர்களுள் ஒருவனான நான்முகன் முற்காலத்தில் ”எத்தேவராலும் நீ வெல்லப்பட மாட்டாய்” எனக் கொடுத்த வரத்தையும், மற்றுமுள்ள திசைகளையும், உலகங்கள் அனைத்தையும், போர்வெற்றிகளை ஈட்டித்தந்த இராவணனின் தோளாற்றலையும் உண்டுவிட்டு அவன் மார்பில் நுழைந்து உடலெங்கும் ஓடி உயிரைத் தேடிப் பருகிவிட்டு வெளியே போயிற்று.  

    முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய
    பெருந்தவமும்
     முதல்வன் முன்நாள்
    எக்கோடி யாராலும் வெலப்படாய்
    எனக்கொடுத்த வரமும் ஏனைத்
     
    திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த
    புயவலியும் தின்று மார்பில்
    புக்கோடி உயிர்பருகிக் புறம்போயிற்று
    இராகவன்தன் புனித வாளி.
    (கம்ப: இராவணன் வதைப் படலம் – 9899)

    உடலை விட்டு உயிர் நீங்கியதால் இராவணனின் மனத்தில் நீங்காதிருந்த சினம் அடங்கியது; அடங்காமல் முறையற்ற வழிகளில் திரிந்துகொண்டிருந்த மனம் அடங்கியது; பகைவுணர்வு அடங்கியது; சானகிமீது கொண்டிருந்த மையல் அடங்கியது; இவ்வாறு தீயன அனைத்தும் அடங்கியதால் அவன் முகங்கள் முன்பைவிட மும்மடங்கு பொலிந்தன என்கிறார் கவியின் வேந்தராகிய கம்பர்.

    இராமனின் புனித வாளி ஏற்றிய ஒளியால் இராவணனின் அகம் பொலிவுற்றது; அஃது அவனுக்கு முகத்திலும் மும்மடங்கு பொலிவைத் தந்தது.

    கீழே விழுந்துகிடந்த இராவணனின் உடலைப் பார்க்கின்றான் இராமன். அவன் முதுகில் திசை யானைகளின் கொம்புகளால் ஏற்பட்ட சிவந்த தழும்புகள் தெரிகின்றன. அதுகண்டவன், ”நான் பெருவீரன் இராவணனை வென்றேன் என்று பெருமிதம் கொள்ளமுடியாத வகையில் இவன் முதுகில் ஏற்கனவே புறப்புண்பட்ட தழும்புகள் உள்ளனவே! கார்த்தவீர்யன் எனும் மானுடனிடத்தில் இராவணன் ஏற்கனவே தோற்றவன் என்ற சொல்லுண்டு; இவன் தழும்புகள் அதனை மெய்ப்பிக்கின்றன” என்றான் அருகில் நின்றிருந்த வீடணனிடம்.

    தன் அண்ணனின் வீரத்தை இராமன் இழித்துரைத்தது கேட்ட வீடணன் அதனைப் பொறாது கண்களில் நீரோடு, ”ஐய! கார்த்தவீர்யனும் வாலியும் பெற்ற வெற்றிகள், தேவர்கள் இராவணனுக்கு இட்ட சாபங்களால் விளைந்தவை; தையல் சீதையின்மேல் கொண்ட மையலும், உன் சீற்றமும் அல்லால் அவனை வெல்லவல்ல வீரர் இவ்வுலகில் யாருளர்?

    உலகத்தையே வென்றுவிட்டபின் போரிட யாருமில்லாத காரணத்தால் எட்டுத் திக்குகளின் காவலாய் நின்ற குன்றனைய யானைகளின் நீண்ட கொம்புகளைத் தன் மார்பில் அழுத்திக்கொண்டான் இராவணன்; அவை முதுகின் வெளிப்புறமும் அழுந்தியதால் ஏற்பட்ட புண்களே இவை; பகைவர் ஆயுதங்களால் ஏற்பட்ட புறப்புண்கள் அல்ல!” என்று தமையன் இராவணனின் இணையில்லா வீரத்தை வீடணன் இராமனிடம் விளம்பவே, தன் வெற்றியில் மனநிறைவு பெற்ற இராமன், இராவணனுக்கு இறுதிக் கடன்களை ஆற்றும் பணியை வீடணனிடம் ஒப்படைத்துவிட்டு, இராவணனை வீழ்த்தியமைக்காகத் தன்னை வாழ்த்தவந்தவர்களைக் காணச் சென்றான்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன் – 24

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன் – 24

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    வசந்தராசனின் ‘வானவில் குதிரைகள்’

    அன்புள்ள எழில்!

    மருந்தும் நானும் நலம். மருந்தால் நான் நலம். மருந்து விற்பனையாவதால் கடைக்காரனும் நலம். நீயும் உன் வீட்டாரும் நலமா? கடிதம் எழுதி நீண்ட நாள் ஆகிவிட்டதால் இதனை எழுதுகிறேன். கல்வி கற்றோம் என்ற கர்வத்திலே இன்பம் கண்டவருண்டோ? என்பார் சுரதா. அவரோடு நெருங்கிப் பழகியவர்களுக்கு அவருடைய ‘வித்தை கர்வம்’ நன்கு தெரியும். உண்மையில் தொடர்கல்வி என்பது அன்றாட நடைப்பயிற்சி போன்றதாகும். கசடாகிய களிம்பு படராமல் இந்த உள்ளம் தெளிந்த நீர்போல் இருப்பதற்குத் தொடர் கல்வி பெரிதும் உதவக்கூடும்.

    கல்வி என்பது கல்வி நிலையங்களில் ஆசிரியரால் கற்றுத்தரும் பாடங்கள் என்பது அதுபற்றிய கிட்டப் பார்வையே. தொலைத்தூரப் பார்வை ஒன்றுண்டு. ‘கண்டது கற்கப் பண்டிதன்’ ஆவான் என்பது. அதே நேரத்தில் ‘கல்வி கரையில கற்பவர் நாள் சில!’ என்பதையும் நான் மறந்துவிடக் கூடாது. சல்லாத் துணிபோல் வாழ்க்கை. போலிச் சரிகைபோலப் புத்தகங்கள். இவற்றுள் நீ எதனைப் படித்தால் இதயத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி நீதான் முடிவெடுக்க வேண்டும்.

    நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். நாளும் படிக்க வேண்டும். என்னைப் பொருத்தவரையில் சிறுகதை நம்மை ஓடவைக்கும். நாவல் நடக்க வைக்கும். கவிதை பறக்க வைக்கும். நமக்கும் ஓடிப்பழக்கம் உண்டு. நடந்தும் பழக்கம் உண்டு. ஆனால் பறந்துதான் பழக்கமில்லை. கவிதைகளால் பறப்பதையே என் மனம் விரும்புகிறது.

    உனக்கு என்ன பிடிக்கும் என்பது எனக்குத் தெரியாது. தெரியாது என்பது தெரிந்தும் கவிதை நூல் ஒன்றினை இத்துடன் அனுப்பியிருக்கிறேன். நீ படித்து உன் கருத்துக்களை உன் பதிலில் எனக்கு எழுதினால் எனக்கும் தெளிவாகும். இதயமும் நலமாகும்.

    ‘வானவில் குதிரைகள்’ என்ற நூலை என் அன்புத் தம்பி வசந்தராசன் எழுதியிருக்கிறார். உண்மையில் அவருடைய பாடல்கள் சிலவும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. வேறு சில நண்பர்களுடைய பாடலும் இடம் பெற்றிருக்கின்றன. எனவே இது ஒரு தொகுப்பு நூல்.

    எனக்குத் தெரிந்து எந்தக் கவிஞனும் தொகுப்பு நூல் வெளியிடுவதில்லை. காலைவாரிவிடும் அரசியல் வாதிகளுக்குள்ள பண்பு தற்காலத்தில் கவிஞர்களுக்கும் வந்துவிட்டது. நாற்பது பக்கங்களில் இரண்டு நூல்களைத் தன் பணத்திலேயே அச்சடித்துக் கொள்கிறவன் லெட்டர் பேடை அடித்த பிறகுதான் நூலையே அச்சடிக்கிறான். இவன் எழுதியதை அச்சுக் கோப்பவன் கூடப் படிப்பதில்லை. அது கூட இவனுக்குத் தெரிவதில்லை. தன்னையொத்த கவிஞர்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது ஓர் உயர்ந்த பண்பு. பிறர் வளர்ந்தால் தன் வளர்ச்சி பாதிக்குமே என்று நினைப்பவன் கவிஞனாவது இருக்கட்டும்; முதலில் மனிதனாவது எப்போது? ‘அறிஞர் சிலர்’ இருக்கிறார்கள். தங்கள் நூல்களைக் கூட அரசுடைமையாக்க அனுமதி தருவதில்லை. எழுத்துக்களைக் காசாக்கும் உரிமையைத் தந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் மிகக் கவனமாக இருந்திருக்கிறார்கள்.

    தன்னையொத்தவர்களைத் தன்னோடு அரவணைத்துச் செல்லும் பண்பு, அறிமுகப்படுத்தும் உயர்குணம் தம்பி வசந்தனிடத்தில் உண்டு என்பதற்கு இந்த நூல் ஓர் எடுத்துக்காட்டு.

    வானவில்லின் வண்ணங்கள் ஏழு. அந்த ஏழு வண்ணங்களைப்போல் ஏழு நண்பர்கள் பாடல் எழுதியிருக்கிறார்கள்.

    நூலைப் பற்றிய புறவுரை இதுதான். நிரம்ப எழுதிவிட்டேன். இனி நூலைப் படித்து உனக்குப் பிடித்தமான வரிகளை அதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு, எழுதிய கவிஞரையும் பாராட்டும் வகையாக இரண்டு வரிகள் எழுது. உனக்குத் தெரிந்த அளவில் ஏதேனும் குறையிருந்தால் அதனையும் குறிப்பிடு. அது எனக்கும் கவிதையை எழுதியவருக்கும் மகிழ்ச்சியைத் தரும். உன் கடிதத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    மாறா அன்புடன்
    மணி

    *********

    அன்பு மறவா மணிக்கு! வணக்கம்!

    இங்கு நானும் என் குடும்பத்தாரும் நலமே. கடிதம் எழுத முடியவில்லை என்ற வருத்தம் எனக்குமுண்டு. நீ அனுப்பிய கடிதமும் நூலும் வரப்பெற்றேன். என்னைச் செவ்வழிப்படுத்துவதில் உனக்குள்ள ஆர்வத்தையும் நேசத்தையும் நான் சிறிய வயதிலிருந்தே அறிவேன்.

    உன்னுடைய வேண்டுகோளுக்கிணங்க இந்த நூலை என்னால் அவ்வளவு எளிதாகப் படிக்க முடியவில்லை. கவிதையைப் படிப்பதற்கும் படித்து உணர்வதற்கும் உணர்ந்து உள்வாங்குவதற்கும் ஒரு தனி முயற்சி தேவைப்படுகிறதோ என்ற ஐயம் வந்துவிட்டது எனக்கு.

    முழுநூலையும் நான் படிப்பதைவிட யாராவது ஒருவருடைய கவிதையைப் பற்றிய என் கருத்தினைப் பதிவிடலாம் என்றே எண்ணி இதனை எழுதுகிறேன். தொடர்ந்த உன் கடிதங்களைக் கண்டு கவிதை கற்கும் கலையை நான் முழுமையாகக் கற்றுக் கொள்வேன் என்றே நம்புகிறேன்.

    தஞ்சை மயிலரசன் சில கவிதைகளை எழுதியிருக்கிறார். அவை எல்லாமே என்னைக் கவர்ந்தன என்று பொய்சொல்லி உன்னையும் என்னையும் ஏமாற்றிக் கொள்ளத் தயாராயில்லை. இதற்குக் காரணம் கவிதை பற்றிய ஆழமான புரிதல் எனக்கு இன்மைதான். எனக்குப் புரிந்த வகையில் எழுதுகிறேன். பிழையிருந்தால் என்னைத் திருத்தும் முழு உரிமை உனக்குண்டு.

    மயிலரசன் எழுதிய கவிதைகளில் என்னைப் பெரிதும் கவர்ந்தது ‘வெளிச்ச வாசல்’ என்னும் தலைப்பில் அமைந்த கவிதையாகும். அது எந்த பாட்டிலக்கணப்படி எழுதப்பட்டது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் படித்தால் ஓசைஒழுங்கு பிடிபடுகிறது. யாப்பைவிட ஓசை ஒழுங்குதான் கவிதையைத் தூக்கி நிறுத்தும் என்று நீ பல முறை சொல்லியது நினைவுக்கு வருகிறது. கற்பனை குறைவானாலும் உணர்ச்சியும் ஓசையொழுங்கும் இந்தக் கவிதை நூலின் முதற்கவிதையாக இருக்கும் தகுதியை உறுதி செய்கிறது.

    கவிதை கவலைக்குக் காரணமாகிவிடக்கூடாது. கண்ணீருக்கு ஊற்றாகிவிடக் கூடாது. சிலபேர் கவிதை எழுதி அவர்களும் அழுகிறார்கள் படிப்பவரையும் அழ வைத்துவிடுகிறார்கள். இருவருக்கும் ஒரே நேர்கோட்டில் விதி விளையாடிவிடுகிறது. “கவிதை கவலையைப் போக்க வேண்டும். நம்பிக்கையைப் பதிய வேண்டும். போராடும் குணத்தைத் துளிர்க்கச் செய்ய வேண்டும்” என்றெல்லாம் நீ சொல்லுவாயே, அந்தப் பணியை இந்தக் கவிதை செய்கிறது.

    “சோகத்தின் வரவுகள் காத்திருக்கும் நீ
    சோராதிருந்தால் சுகம் மலரும்!
    காலத்தின் முகவரி மாறுமடா! – உந்தன்
    கரங்களால் துன்பங்கள் தீருமடா!”

    என்று எழுதியிருக்கிறார் மயிலரசன். இந்தப் பாட்டில் சோகத்தின் வரவுகள் என்னும் தொடர் சிந்திக்கத்தக்கது. சோம்பல் உள்ளவனுக்கு வாட்டம் வரிசைகட்டி நிற்குமாம்.

    “எரிமலை போலே நீயிருந்தால் அந்த
    இமயமும் உனக்குத் தலைவணங்கும்!
    வானின் வில்போல் நீ வளைந்தால் இந்த
    வையகம் உன்றன் கையடக்கம்!”

    என்னும் பகுதியில் கவித்துவம் களிநடனம் புரிவதை உணர முடிகிறது. கவிதை வெற்றி பெறுவது உத்தியால். கூனிக்குறுகுவது என்பது வேறு. வளைவது என்பது வேறு. உள்ளத்தால் சிறுத்து உடலால் வளைவதுதான் கூனிக்குறுகுவது. கர்ப்பத்தில் குழந்தை அப்படிக் கூனிக்குறுகி அமர்ந்திருக்கும். சத்திமுத்தப் புலவரும் தேரடிக்குக் கீழ்க் கூனிக் குறுகி அமர்ந்திருந்தார் என்று நான் படித்திருக்கிறேன். ‘மனம் கூசவில்லையா?’ என்னும் வழக்கு நோக்குக. மூங்கில் வளைவது அத்தகையதன்று. ‘முடத்தெங்கு’ என்று தென்னையைச் சொன்னாலும் அது நிமிர்ந்து கொண்டே வளைந்து செல்லுமேயன்றிக் குனியாது. அவைபோல மனிதனின் பணிவுக்கு வானவில்லின் வளைவை உவமமாக்கும் அழகியல் சுவைத்து மகிழத்தக்கது.

    சிலர் சிந்தனை நம்மைச் சிந்திக்க வைக்கும். பாம்பு சட்டையை உரிக்கும் என்பதை அறிவோம். பாம்புக்குச் சட்டைபோடுவதை யாராவது அறிவோமா? மயிலரசன் அறிந்திருக்கிறார். இராவணன் போல அவர் எப்போதும் பொதுப்பணித்துறை சாலைகளையே பார்த்து நடப்பவர்போல் தெரிகிறது. போட்ட சாலையைப் பெயர்த்தெடுத்துவிட்டுப் புதிய சாலை போடுவது மேல்நாட்டார் வழக்கம். சாலைமேல் எற்கனவே மாட்டியிருக்கிற தார்ச்சட்டையைக் கழட்டிவிட்டுப் புதிய சட்டையைப் போடுவது நம்மவர் பழக்கம். நெளிவுகள் என்ற குறுங்கவிதையில் இந்த அங்கதத்தை அற்புதமாகச் சித்திரித்துள்ளார் மயிலரசன்.

    “நெளிந்து போகும்
    பாம்புக்குச் சட்டை போடுவதுபோல்
    சாலைக்குத் தார்போடுகிறார்களே,
    “உரிப்பதற்காகவா?”

    ஆண்டுதோறும் வரவேண்டிய ‘முறை’ முன்னதாகவே வந்து, மீண்டும் தார் போட்டுக் கமிஷன் பெறுவதற்காகவே என்பதை “உரிப்பதற்காகவா?” என்னும் சொல்லில் வைத்துக் காட்டும் அங்கதம் போற்றத்தகுந்தது. பாம்பு உரித்த சட்டையிலிருந்து அதற்குச் சட்டையை மாட்டுவது பற்றிய கற்பனை பெரிதும் போற்றத்தக்கது.

    மனிதனிலிருந்தே மனிதன் தோன்றுவதால் மனிதன் ஒரு மரபுப் பிறவி. எனவே மரபார்ந்த பண்புகளைப் பெற்றிருப்பது, பெற்றிருக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். தமிழினம் பல பெருமைகளைப் பெற்றிருந்தது. உலகின் ஆதி மொழி தமிழ் என்பர். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதைப் பண்பாடென்பர். ‘செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்போம் எனினே தப்புந பலவே’ என்பதை அறக்கோட்பாடு என்பர். எல்லா உயிரிகளுக்கும் உணர்வுண்டு என்னும் இருபதாம் நூற்றாண்டு அறிவியல் கண்டுபிடிப்பை மயிலுக்குப் போர்வையும் முல்லைக்குத் தேரையும் தந்தவர்கள் அறிந்திருந்தார்கள். மணிமேகலை அறச்செல்வியாக விளங்கினாள். புலிகூட இடப்பக்கம் வீழ்ந்ததை உண்ணாத வீரம் நம்முடையது. ‘தீமை செய்வார்க்கும் நன்மை செய்வதே அறம்’ என்பது நமது கொள்கை. ஆனால் இவையெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்ட கொடுமை எண்ணிச் சில கண்ணிகள் பாடியிருக்கிறார்.

    “சங்கத்துப் பரம்பரையில் செந்தமிழன் சேர்த்து வைத்த
    தங்கப்பண் பாட்டெங்கே? தரணிக்கோர் முகமெங்கே?
    தட்டானின் பட்டறையில் தகரத்தின் அடிமைகளாய்
    சுட்டாலும் சுரணைகெட்ட விட்டில்களாய்த் தொண்டர் கூட்டம்!
    வெட்டாட்டுக் கொட்டகைக்கு வெள்ளாட்டு ஊர்வலம் போல்
    முட்டாளாய்த் தன்தலையில் முடிசூட வாக்களிப்பார்!
    பஞ்சத்தைப் பாய்விரித்துப் படுத்துறங்கும் பாவிமக்கள்
    லஞ்சப்பேய் நெரிசலுக்குள் லட்சியத்தை மறந்துவிட்டார்!
    சாதிகளை நட்டுவைத்துச் சமத்துவத்தைப் பேசுகின்ற
    சூதர்களின் ராச்சியத்தில் சொக்கிவிட்ட தமிழகமே!
    நாற்காலி வெறிபிடித்து நலங்காத்த நண்பனையும்
    ஆள்காட்டும் நரிகளெல்லாம் அருந்தமிழர் சந்ததியா?
    புத்தொளியே பிறக்கட்டும்! புத்துணர்ச்சி பெற்ற தமிழ்ச்
    சத்தியங்கள் வருமுன்நான் செத்தாலும்; தமிழனல்ல!”

    என்று உணர்ச்சி மேலிட எழுதியிருக்கிறார். கவிஞனும் மனிதன் தான். விருப்பு, வெறுப்பு என்பன அவனுக்கும் உண்டு. இருந்தாலும் படிப்பதற்கும் எழுதுவதற்கும் அதனையும் தன் சமுதாயத்திற்காக எழுதுவதற்கும் எல்லாருக்கும் மனம் வராது. இவருக்கு வந்திருக்கிறது. ‘தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!’ என்று சொன்னால் மட்டும் போதாது. அதற்கான காரணங்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். பாரதிதாசன் சொல்வதைப் போல இழந்தபழம் புகழ்மீள வேண்டும் நாட்டில்’ அவ்வாறு மீட்டெடுக்கும் வரைத் தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொள்ள மாட்டேன் என்னும் இந்தக் கவிஞரது உணர்ச்சி எல்லாருக்கும் வருமா?

    இறுதியாக அவர் விபத்து என்ற தலைப்பில் எழுதியிருக்கும் பாடல் ஒரு சொல்விளையாட்டாகவே இருந்தாலும் பல நல்ல கருத்துக்களைத் தொகுத்துரைத்திருக்கிறது. இவ்வாறு ஒரு சொல்லையே தொடரில் பயன்படுத்தி எழுதுவது இடைக்காலத் தமிழ்க்கவிதைக் கோட்பாடுகளில் ஒன்று. அது இன்றும் தொடர்கிறது.

    “இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்
    உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர் வண்ணம் உறுவதுண்டோ?
    மைவண்ணத்து அரக்கிப் போரில் மழைவண்ணத்து அண்ணலே! உன்
    கைவண்ணம் அங்குக் கண்டேன்! கால்வண்ணம் இங்குக் கண்டேன்!”

    என்று கம்பன் பாடுவான். அதனை வள்ளற் பெருமானும் பாவேந்தரும் சுரதாவும் கண்ணதாசனும் வைரமுத்தும் பின்பற்றி எழுதியிருக்கிறார்கள்.

    “விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்!
    வீணைக்கு மேலா..டை நரம்புகளின் கூட்டம்.!.
    கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்!
    கனவுக்கு மேலா..டைதொடர்ந்து வரும் தூக்கம்!..
    விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்!
    மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழலாகும்!
    மண்ணுக்கு மேலாடை வண்ண மையிருட்டு!
    மனதிற்கு மேலாடை வளர்ந்து வரும் நினைவு!
    பத்துக்கு மேலாடை பதினொன்றேயாகும்
    பக்கத்தில் நீ இருந்தால் பல கதை உருவாகும்!”

    என்ற சுரதாவின் பாடல் காலத்தால் அழிக்க இயலாத கற்பனை வளம் சார்ந்தது. உன்னைப்போல் அவரும் குணத்தால் கெட்டழிந்தவர். பணிவு என்பதே உங்கள் இருவருக்கும் கிடையாது. அவர் சமரசம் செய்து கொண்டிருந்தால் தமிழ்த் திரையுலகின் முடிசூடா கவிமன்னர் அவராகத்தான் இருந்திருப்பார்.

    “என்பிறப்பு இவ்வுலகில் விபத்து என்றால்
    இறைவனுக்கே நன்றிசொல்வேன்! அடடா! அன்று
    என்னவளைக் கண்டெடுத்த காதல் கூட
    இருவிழிகள் மோதி நின்ற விபத்தால் இன்பம்!
    வண்டொன்று மலர்மடியில் விழுந்து விட்டால்
    வாழ்த்துப்பா பாடுகின்ற மலர்கள் கூட்டம்
    வஞ்சிதரும் எதிர்பாரா முத்தம் ஒன்றை
    விபத்தென்று சொல்லிவிட்டால் விரும்பார் உண்டா?
    கரும்புக்கு விபத்தென்றால் வாயி னிக்கும்!
    கல்லுக்கு விபத்தென்றால் கலையினிக்கும்!”

    என்றெல்லாம் மயிலரசன் எழுதிக்காட்டுகிறார். மரபுக்கவிதை என்பது இதுதான். விருத்தத்தில் எழுதுவதனாலே இது மரபுக்கவிதை என்பது அறியாமை. முன்னோர்களைப் பின்பற்றி எழுத வேண்டும்.

    நூல் அனுப்பினாய். படிக்க முயன்றேன். முடிந்ததை எழுதினேன். உன்னைப்போல் நுட்பமாக எனக்கு படிக்கத் தெரியாது. எனவே எழுதவும் தெரியாது. வழக்கம் போல என்னை வழிநடத்து. அடுத்த மடல் இன்னும் சிறப்பாக எழுத முயல்வேன். உன் மடலை எதிர்பார்க்கிறேன்.

    அன்பு மறவா
    எழில்

    **********

    அன்புடைய எழிலுக்கு! வாழ்த்துக்கள்!

    மலையரசன் கவிதைகள் பற்றிய உன்னுடைய அழகான அருமையான திறனாய்வைக் கண்டேன். இந்த அளவுக்கு உனக்குக் கவிதைச் சுவை அறிய இயலும் என்பது உறுதியாக எனக்குத் தெரியாமற் பேனாதற்கு வருந்துகிறேன்.

    கவிதையைச் சுவைப்பது பற்றிய கோட்பாடுகளைத் தனியாக அறிந்து கொள்ள வேண்டுமோ என்று நீ எழுப்பிய ஐயம் நியாயமானதே! ஆனால் அந்தக் கோட்பாடுகளை எழுதி வைத்துக்கொண்டு நாம் கவிதையைச் சுவைக்க முடியாது. ஒரு கவிதை படிப்பவனுடைய உள்ளத்தில் சலனத்தை உண்டு பண்ண வேண்டும். அந்தச் சலனத்தின் பரிமாணங்களை வைத்தே கோட்பாடுகளை உருவாக்க வேண்டும். அவன் உள்ளத்தைக் கவிதை திருட முயல வேண்டும். படிப்பவன் பாதித்த கவிதை, அவனைப் பாதிக்க வேண்டும். அந்தப் பாதிப்பும் கவிஞனின் பாதிப்பும் ஒரே அலைவரிசையில் இயங்க வேண்டும்.

    கவிதையால் உண்டாகிற சலனம் கற்பனையால் உண்டாகலாம். யாப்பால் உண்டாகலாம். உணர்ச்சி வெளிப்பாட்டால் உண்டாகலாம். கருத்தினால் உண்டாகலாம். தமிழ்க்கவிதைக் கொள்கை கருத்துக்கு முதலிடம் தருவதாக இருப்பதினால் ஏனைய கவிதைக் கூறுகளைப் பின்னுக்குத் தள்ளி முன்னணியில் நிற்பது கருத்தே!, ஒரு இசைக்கச்சேரியில் வாய்ப்பாட்டு போன்றது அது. ஏனைய பக்க வாத்தியங்களே!

    இந்தக் கோட்பாட்டினை நண்பர் வெண்முகிலன் கவிதையில் வைத்துக் காணலாம். நான்கு எண்சீர் விருத்தங்களும் முப்பத்து மூன்று அறுசீர் விருத்தங்களுமாக எழுதியிருக்கும் அவருடைய கவிதைகளில் மையக்கருத்தாக இழையோடுவது ‘தமிழின அடையாளம்’ மற்றும் எழுச்சி என்பதே ஆகும்.

    பொதுவான பாடுபொருள்தான். ஆனால் சிறக்கப் பாடியிருக்கிறார் வெண்முகிலன். கவிதைச் சிறப்பதற்குப் படைப்பாளனின் உத்திகளே காரணம். ‘நெஞ்சினில் நேயம் வைப்பீர்’ என்னுந் தலைப்பில் பதினான்கு அறுசீர் விருத்தங்களை எழுதியிருக்கும் வெண்முகிலன் கருத்திசைவுக்கேற்ப இறுதிப்பாடலை எண்சீர் விருத்தமாகப் பாடியிருப்பது சிந்திக்கத்தக்கது.

    “பலகோடிப் புற்றீசல் பறந்தால் என்ன?
    பகலவன் கதிர்பட்டால் மண்ணில் வீழும்!
    பலகாலம் மடமைகள் வாழ்ந்தால் என்ன?
    பகுத்தறிவு நெருப்பானால் சாம்பலாகும்!”

    என்றெழுதும் வெண்முகிலன் அடுத்த பாட்டைச் ‘சிறியன சிந்தியாதீர்’ என்னுந் தலைப்பில் ஒன்பது அறுசீர் விருத்தங்களை எழுதி முதல்பாட்டைப் போலவே கருத்திசைவுக்கேற்ப மூன்று எண்சீர் விருத்தங்களை இறுதிப்பாடல்களாக எழுதியிருக்கிறார். தமிழனின் கடமை பற்றி மயிலரசன் சொன்ன கருத்துக்களையே வெண்முகிலன் வழிமொழிந்திருந்தாலும் உத்தியினால் வேறுபடுகிறார்.

    “மனக்கதவைத் திறப்பதும் அன்பி னாலே!
    மரக்கதவைத் திறந்திடலாம் கருவியாலே!
    சினப்பாம்பை அடக்கிடலாம் அறிவினாலே!
    சிந்தனையைத் தூண்டுவதோ கல்வியாலே
    தனக்கெனவே வாழ்வார்பே ராசையாலே!
    தன்மானம் இழந்திடுவார் அச்சத்தாலே!
    எனக்கெதற்கு வம்பென்று இருந்திடாமல்
    இன்தமிழுக்குழைப்பவரே என்றும் வாழ்வார்!”

    எனப் பல எடுத்துக்காட்டுக்களை உவமமாகச் சொல்லித் ‘தமிழுக்குழைப்பவரே என்றும் வாழ்வர்’ என முத்தாய்ப்பாய் முடித்திருப்பது போற்றத்தகுந்தது.

    “கூர்மதி நல்காக் கல்வி குறிக்கோளைக் காட்டா நட்பு
    நேர்வழி செல்லா எண்ணம் நிம்மதி நல்கா வாழ்க்கை
    ஊர்நலம் நாடி நாளும் உழைத்திடா உழைப்பு யாவும்
    பார்மிசை சான்றோர் போற்றும் பாராட்டைப் பெறுவதில்லை”

    எனப் பொதுவாழ்க்கைக்கும் தனிவாழ்க்கைக்கும் இலக்கணம் கூறும் வெண்முகிலனின் இந்தப் பாடல்

    “ஆபத்துக் குதவா பிள்ளை அரும்பசிக் குதவா அன்னம்
    தாகத்தைத் தீராத் தண்ணீர் தரித்திர மறியாப் பெண்டிர்
    கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
    பாவத்தைத் தீராத் தீர்த்தம் பயனிலை ஏழுந்தானே”

    என்னும் தனிப்பாடலை நினைவூட்டுகிறது. மூன்று பாடலை மட்டுமே இந்தத் தொகுப்பில் எழுதியுள்ள வெண்முகிலன் மொழிநடை இயல்பானது. எளியது. எவருக்கும் புரியக்கூடியது.

    என்னுடைய இந்தக் கடிதம் உனக்கு இன்னும் தெளிவினை உண்டாக்கக் கூடும். எனக்கு விடையிறுக்க வேண்டும் என்னும் ஆர்வமும் அடுத்த கவிதை பற்றி என்னிடம் கலந்துரையாட வேண்டும் என்னும் துடிப்பும் உன்னிடம் மிக்கிருக்கும் என்றே நம்புகிறேன்.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    மாறா அன்புடன்
    மணி

    **********

    அன்பு மறவா மணிக்கு, வணக்கம்!

    உன்னுடைய மடல் கண்டேன். மகிழ்ச்சி கொண்டேன். பாடல்களின் மையத்தைக் கண்டறிவதிலும் பாட்டின் மையத்தைக் கண்டறிவதிலும் உனக்கு நிகர் நீயே. வெண்முகிலன் கவிதை மூன்றாயினும் சிறந்தவை என்னும் உன்னுடைய கருத்து எனக்கும் உடன்பாடே. இந்த அடிப்படையில் நான் நாவரசன் எழுதியுள்ள புதுக்கவிதைகள் பற்றி உன்னுடன் கலந்துரையாடலாம் என்றே இந்த மடலை எழுதுகிறேன்.

    ஒருபக்கம் கவிதையின் புதிய உத்தி என்று புதுக்கவிதையைக் கூறுகிறார்கள். மற்றொரு பக்கம் இதுதான் புதுக்கவிதை என்று அச்சமூட்டுகிறார்கள். புதுக்கவிதை ஒரு இறக்குமதிப் பண்டம். அதற்காக அதனைத் தள்ளுபடி செய்துவிட வேண்டும் என்பது பொருளல்ல. ஆனால் என்ன நடக்கிறது இங்கே?

    மனத்தினும் விரிந்து அதாவது மனத்தால் உள்வாங்க முடியாத கற்பனைகளைத் திணிப்பது எப்படிக் கவிதையாக முடியும்? இல்லாத பொருளை உவமமாகச் சொன்னாலே அதனை இல்பொருள் உவமமென்று தள்ளிவிடுவது தமிழ்க்கவிதை மரபு. ஆனால் இவர்கள் பொருத்தமில்லாத இரண்டு சொற்களைப் பொருளே தெரியாமல் இணைத்துவிட்டு அதனைப் புதுக்கவிதை என்று நம்பச் சொல்கிறார்கள். போதாத குறைக்குப் புதுக்கவிதைக்குப் பிதாமகர் பாரதிதான் என்று கவிதையில் அடித்துச் சத்தியம் செய்கிறார்கள்.

    பாரதிமீது வேண்டாத புகழைத் திணிப்பதையே ஒருசாரார் திட்டமிட்டுச் செய்து வருகிறார்கள். அவர்கள் உண்மையில் பாரதியின் நோக்கத்துக்கு எதிரானவர்கள். எளிய பதம், இனிய நடை, உள்ளத்தை உருக்கும் இசை இதுதான் பாரதியின் கவிதைக் கோட்பாடு. இதற்கு எதிரானவர்கள் பாரதிக்கும் எதிரியே!. இந்தப் பின்புலத்தில்தான் நான் நாவரசன் கவிதைகளை நோக்குகிறேன்.

    “கவலைப்பட்டதற்காகக் கவலைப்பட்டேன்!
    சஞ்சலப்பட்டதற்காகச் சஞ்சலப்பட்டேன்!
    ஆம்!
    வாழ்வின் பரிணாமங்களுக்கும்
    வாழ்வியல் வினாக்களுக்கும்
    கவலைப்படுவதும் சஞ்சலப்படுவதும்
    ஓ….
    பரிணாம ஊற்றோ?”

    என்னும் கவிதையில் ஒரு சாரம் இருப்பதை உணர முடிகிறது. ‘இன்னாது அம்ம இவ்வுலகம்! இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே’ என்னும் சங்க இலக்கிய வரிகளின் எதிர்மறைப் பதிவு இது. இதிலிருந்து அதுவும் அதிலிருந்து மற்றொன்றுமே வாழ்வின் பரிணாமம் என்பதைப் புரிந்து கொள்வதற்குள் வாழ்வு முடிந்துவிடுகிறது என்பதை மிக அருமையாகப் பதிவிட்டிருக்கிறார் நாவரசன்!

    “ஒளியை வரைந்தேன்! பசிக்கு —- இருளைக் கேட்டது!
    மீனை வரைந்தேன்! பசிக்குப் —– புழுவைக் கேட்டது!
    பறவையை வரைந்தேன்! பசிக்குத் — தானியம் கேட்டது!
    மிருகத்தை வரைந்தேன்! பசிக்கு இரையைக் கேட்டது!
    மனிதனை வரைந்தேன்! அவன் என்னையே கேட்டான்!”

    என்று ‘மனிதன்’ என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ள சிந்தனைகள் குறிப்பிடத்தக்கவை. ஒன்றை விழுங்கித்தான் மற்றொன்று என்னும் தத்துவத்தையும் மானுட வாழ்வியல் உண்மையையும் அவர் அழகாகச் சொல்லியிருக்கிறார். இனிய சொற்கள்! எளிய நடை! அருமையான கவிதை!

    தாஜ்மகாலை வெறுக்கிறேன் என்று எழுதியிருக்கிறார் நாவரசன்! எதற்காக வெறுக்க வேண்டும் என்பது தெரியவில்லை. உருவாக்கிய தொழிலாளிகளின் கைகள் வெட்டப்பட்டன என்னும் சேதியின் அடிப்படையில் இதனை எழுதியிருக்கிறார். அப்படி நடந்திருந்தால் வெட்டுக்கு ஆளான கைகளைத்தான் இவர் பாடியிருக்க வேண்டும். மேலும் இது போன்ற வரலாறுகள் எல்லா நாடுகளிலும் உண்டு. வெறுப்பதற்காகக் கட்டப்பட்டதன்று தாஜ்மகால். ஏதோ யாருக்கும் தோன்றாத புதிய சிந்தனையைப் பதிவிடுவதாகக் கருதிக் கவிஞர் நாவரசன் எழுதியிருப்பதுபோல் தோன்றுகிறது. ஒன்றன் பின்புலத்தை அறிந்து கொள்வதும் தவறன்று. அதற்காகப் படைக்கப்பட்ட ஒரு பொருளை வெறுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனை மிக அருமையாகப் படம்பிடித்துக் காட்டுவார் பாவேந்தர்.

    “சித்திரச் சோலைகளே! உமை நன்கு
    திருத்த இப்பாரினிலே முன்னர்
    எத்தனைத் தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
    உங்கள் வேரினிலே!”

    என்றுதான் பாடினாரே தவிர, தொழிலாளர்கள் ரத்தம் சொரிந்ததற்காகச் சோலையை வெறுக்கவில்லை. தாமரைத் தடாகத்தைப் பாடுகிறபோதும்,

    “தாமரை பூத்த தடாகங்களே!
    உமைத்தந்த அக்காலத்திலே
    எங்கள் தூய்மைச் சகோதரர்
    தூர்ந்து மறைந்ததைச்
    சொல்லவோ ஞாலத்திலே”

    “தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச் சொல்லவோ ஞாலத்திலே” என்று பாடிய பாரதிதாசன், “தாமரை பூத்த குளத்தினிலே முகத்தாமரை தோன்ற முழுகிடுவாள்” என்றுதான் பாடுகிறார். அதாவது தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைவதற்குக் காரணமான குளத்தில் குப்பனின் காதலியைக் குளிக்க வைத்து அழகு பார்க்கிறார் பாவேந்தர்.

    மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் உள்ள நுண்ணிய வேறுபாடுகளில் ஒன்று. வெற்றசை என்பதை மரபுக்கவிதையில் இணைத்துக் கொள்ள முடியும். சாரியை புணர்த்து எழுதிக் கொள்ள முடியும். வலித்தல் மெலித்தல் விகாரங்களை அனுமதிக்கலாம். இது போன்ற சலுகைகள் புதுக்கவிதையில் நடக்காது. சொற்செட்டு என்பது கவிதைச் செறிவுக்கு மற்றொரு பெயர். இந்தச் செறிவில் புதுக்கவிதை சங்க இலக்கியத்தை ஒத்திருக்க வேண்டும். அடைச்சொற்களைக் கூடக் காரணத்தோடுதான் புணர்ந்து எழுதியிருப்பார்கள். இந்த ஆழமான நெறிமுறை தெரிந்திருந்தால் நாவரசனின் புதுக்கவிதைகள் வெற்றி பெற்றிருக்கக்கூடும். உண்மையில் மரபுக்கவிதையைவிடப் புதுக்கவிதைக்கான சிந்தனைக் களம் பெரியது. புதுக்கவிதை எழுதுவது அரியது என்பதை அவர் உட்பட இன்னும் பலரும் புரிந்து கொண்டனரா என்பதில் எனக்கு ஐயம் உண்டு.

    நிரம்ப எழுதிவிட்டேன். உன் மடல் கண்டு

    அன்பு மறவா
    எழில்

    **********

    அன்புடைய எழிலுக்கு எழுதிக்கொண்ட அன்பு மடல்.

    உன் கடிதம் கிடைத்தது. செறித்து வைக்கப்பட்டிருந்த உன் இலக்கிய ரசனை நெகிழ்ந்து நீட்சியாகி வருகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். வாழ்க்கைத் துன்பங்களில் சோர்ந்திருக்கும் எவருக்கும் இலக்கியம் குளிர்தருவாக, தருநிழலாக, நிழல் கனிந்த கனியாக’த் திகழ்வதை நீ தற்போது உணர்ந்து கொண்டிருப்பாய் எனற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.

    கவிஞர் நாவரசன் எழுதிய புதுக்கவிதைகளைப் பற்றிய உன் கருத்து எனக்கு முற்றிலும் உடன்பாடே. உலகத்தை ஆளப்போகிறான் எனச் சொல்லிக் கொண்டு பிறந்தவன் ஒரு ஊராட்சித் தலைவராகக் கூட ஆகமுடியாததுபோலத்தான் இன்றைய புதுக்கவிதை நிலை வந்திருக்கிறது. அதற்காக மரபுக்கவிதைகள் மண்ணாளுகின்றன என்று பொருளில்லை. அது புதைகுழிக்குள் போகாமல் காக்கின்ற சிலர் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் புதுக்கவிதைக்குப் புவியரசு, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், சிற்பி முதலியவர்களையே எடுத்துக்காட்டுக்களாக்கிக் கொண்டிருப்பது ஒன்றே அது வளரவில்லை என்பதற்குப் போதுமான சான்றாகும். விதைகளின் வெளிச்சம், வெற்றிடங்களின் வீரியம் என்ற இரண்டு சொற்களில் என்ன குறியீடு இருக்கிறது? என்ன இலக்கியச் சுவை இருக்கிறது என்பது விளங்கவில்லை. நான்கே வரிகளில் எழுதவேண்டிய தாஜ்மகால் கவிதையைச் சாண்டில்யன் கதையைப் போல நாற்பது வரிகள் நீட்டிக் கொண்டு செல்வது புதுக்கவிதை பற்றிய தெளிவின்மையையே காட்டுகிறது.

    நண்பர் தெட்சணாமூர்த்தி சில பாடல்களை எழுதியிருக்கிறார். பிறந்து நான்கு நாள்களில் மறைந்த தன் அருந்தவப்புதல்வனை எண்ணி அவர் உருகியிருப்பது நெஞ்சு வெடிக்கும் உண்மையாகும். இழந்த சோகத்தை எழுத்தில் இறக்கி வைத்திருக்கிறார். அந்தச் சோகச்சுமை சரியான தளத்தில் இறக்கி வைக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பற்றி விவாதிக்கப் பாடுபொருளும் அந்தச் சூழ்நிலையும் இடங்கொடுக்கவில்லை.

    ‘நெசவாளிகள்’ என்னுந் தலைப்பில் அவர் எழுதியுள்ள ஒரு ஏழுவரி கவிதைதான் அவரைக் கவிஞர் என்று அடையாளப்படுத்துகிறது.

    “மானுட நிர்வாணத்தை
    மறைப்பதற்காய்
    நாங்கள் மானத்தை நெய்கிறோம்!
    இடுப்பில் ஆயிரம் கண்ணுடைய
    அரைமுழத் துண்டணிந்து”

    இதுதான் புதுக்கவிதை. உத்தியால் வேறுபடும் புதுக்கவிதை. இந்த முரண்தான் இதற்கு அழகு. பிறருடைய மானத்தைக் காக்க நெசவாளர்கள் நெய்கிறார்கள். ஆனால் அவர்கள் இடுப்பில் இருப்பதோ அரைமுழத் துண்டு. அதில் ஆயிரம் கிழிசல்கள். அங்கதம், முரண். குறியீடு, படிமம் என்னும் நான்கு உத்திகளில் பெரும்பான்மையாகச் சிறந்து வருவதே புதுக்கவிதை!. இதனைப் புரிந்தவர்கள் எண்ணிக்கையில் குறைவு.

    “நாங்கள்
    நிர்வாணத்தை விற்பனை
    செய்கிறோம்!
    ஆடை வாங்குவதற்காக!”

    முரணும் குறியீடும் கலந்ததே இந்தக் கவிதையின் வெற்றிக்குக் காரணம்.

    “அவன் ஒரு பட்டு வேட்டி
    பற்றிய கனாவில் இருந்தபோது
    கட்டியிருந்த கோவணமும்
    களவாடப்பட்டது”

    என்னும் அங்கதம் புதுக்கவிதைளைக் கற்பார் உள்ளத்தில் நங்கூரம் பாய்ச்சுவதை உணரவேண்டும். இலக்கணம் இல்லாதது புதுக்கவிதை என்று எவனோ ஒரு கோமாளி சொன்னதைக் கேட்டதன் விளைவுதான் சொற்குப்பைகள் எல்லாம் இன்று புதுக்கவிதைக் கிடங்கில் கொட்டிக்கிடக்கின்றன கொளுத்துவதற்கு ஆள் போதாமல்!. இவர்கள் என்ன தவறு செய்கிறார்கள் பாருங்கள். இலக்கணம் இல்லாதது புதுக்கவிதையாம். அருத்தாபத்தியால் இலக்கணம் உள்ளது மரபுக்கவிதையாம்! என்ன ஒரு பைத்தியக்காரத்தனம்.? ஒன்றினை நினைவுபடுத்தவேண்டியது எனக்குக் கடமையாகிறது. புதுக்கவிதையில் வாகை சூடியவர்கள் எல்லாம் மரபின் எல்லை கண்டவர்கள். மரபிலக்கிய, இலக்கணப் பயிற்சியில்லாதவர்கள் புதுக்கவிதையில் வெற்றி பெற முடியாது. அப்படிப் பெற்றாலும் அது நத்தையின் எழுத்துப் போல் தோன்றுகிறபோதே மறைந்துவிடும்! இந்தக் கடிதத்தை இத்துடன் நிறுத்துகிறேன்.

    உன் மடல் கண்டு மீண்டும் எழுதுவேன்.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    மாறா அன்புடன்
    மணி

    **********

    அன்புடைய மணிக்கு எழில் அன்புடன் எழுதிக் கொண்ட அன்பு மடல்.

    சென்ற உன் கடிதத்தில் கவிதையைப் பற்றிய பல செய்திகளைத் தெரிந்து கொண்டேன். மரபுக்கவிதை மற்றும் புதுக்கவிதை பற்றிய நுண்ணிய கருத்துக்களை நீ எளிமையாக எடுத்துச் சொன்னது எனக்குத் தெளிவையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே தந்தது.

    எதனைப் பற்றியும் கவிதை எழுதலாம். ஆனால் பொருளைப் பற்றிய கவிதைப் பார்வையும் கவியுணர்வுமின்றி எழுதினால் அது வெற்றி பெறாது.

    “தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு அங்கே
    துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
    நாவால் நக்குது வெள்ளைப் பசு பாலை
    நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி”

    என்னும் கவிமணியின் கவிதை மிக எளிய காட்சிப் பொருளைப் பற்றியதுதான். ஆனால் அதில் கவிதைப் பார்வையும் கவியுணர்வும் கலந்திருப்பது காண்க. மேய்தல், நக்குதல் ஆகிய பசுவின் இரண்டு வினைகளும் குதித்தல், குடித்தல் ஆகிய குட்டியின் இரண்டு வினைகளும் கவிமணிக்குக் கவியுணர்வைத் தூண்டியிருக்கின்றன என்பதையும் அறிதல் வேண்டும். இந்தப் பின்புலத்தில் தேனீ தமிழ்ச்சிம்மன் கவிதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. நடந்து போன காவிரியின் நின்று போன கதைபேசும் தமிழ்ச்சிம்மன், நிற்பதற்குக் காரணமான அரசியல் வாதிகளைக் கடிந்து கொள்கிறார்.

    “காவிரியில் நீரோட்டத்தைக் கைது செய்துவிட்டுத்
    தேசிய நீரோட்டத்தில் நீந்துவது எப்படி?
    தஞ்சை வயல்களில் கொஞ்சி
    விளையாட வேண்டிய காவிரியைக்
    கண்ணம்பாடியில் கட்டிப் போட்டது ஏன்?”

    என்று கவி நயத்துடன் பாடும் தமிழ்ச்சிம்மன், காவிரியைப் பெண்ணாக உருவகப்படுத்தியதன் இன்றைய சமுதாய நிலையை அங்கதச் சவையுடன் பாடியிருப்பது சிறப்பாக உள்ளது. அவர் எழுதுகிறார். பெண் விடுதலை, பெண்ணியம் என்றெல்லாம் மேடைகளில் கதையளக்கும் அரசியல் வாதிகளே!

    “ஒரு நதிப்பெண் கூட
    இந்த நாட்டில்
    சுதந்திரமாக நடக்க முடியவில்லையே?”

    என்று வினவியிருக்கிறார். தொடர்ந்து எழுதுகிறார்.

    “நீர் ஆதாரத்தையே
    நிர்மூலப்படுத்திவிட்டு
    நீர் என்ன ஆதாரத்தோடு
    தேசியம் பேசுகிறாய்?”

    காவிரிக்கரையில் எல்லாரும் நடக்கிறார்கள். பேசுகிறார்கள் போகிறார்கள் வருகிறார்கள். இளங்கோவடிகள் நடந்தாய் வாழி காவேரி என்று பாடினார். விடுதலை இந்தியாவில் நதிகளுக்கும் விடுதலை இல்லை என்பதை மிகச் சிறப்பாகப் பாடியிருக்கிறார். புதுக்கவிதை எளிமைக்கு எடுத்துக்காட்டு என்னும் படைப்புண்மையை நான் அறிந்து கொள்ள இந்தக் கவிதை எனக்குத் துணை புரிந்தது.

    இனம், மொழி, நாடு இவை பற்றிச் சிந்திப்பது மரபுவழிச் சிந்தனையே. இவை பற்றிப் பாடுவதும் மரபுவழிக் கவிதைகளே. ஆனால் இதே பாடுபொருளைப் புதுக்கவிதைப் பாடுபொருளாக மாற்றித் தமிழ்ச்சிம்மன் பாடியிருப்பது சிந்திக்கத்தக்கது. முன்னாலே மரபு என்பது அவற்றின் பெருமைகளை. இங்கே புதுமை என்பது இன்றைய நிலையை. இன்றைய நிலை மரபாகாது. எனவேதான் அவர் புதுக்கவிதையில் பதிவிடுகிறார்.

    “தமிழா!
    பல ஆண்டுகளுக்கு முன் பர்மாவில் அகதியானாய்!
    சில ஆண்டுகளுக்கு முன் ஶ்ரீலங்காவில் அகதியானாய்!
    இன்று இந்தியாவில் அகதியானாய்!!
    நாளை தமிழ் நாட்டில் அகதியானால்
    நீ வாழப் போவது எங்கே?”

    என்ன பொருள் பொதிந்த வினா! மொழித் திணிப்பும் பிறமொழி மக்கள் குடியேற்றமும் சொந்த நாட்டிலேயே மக்களை அகதியாக்கிவிடும். ஒரு மொழிக்கு உயர்வளிக்கும் ஒன்றிய அரசினைக் கண்டிப்பதைவிட உள்ளூர்த் தமிழர்கள் உண்மை நிலை உணர்ந்து தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். வெற்று அரசியல் கூச்சல்களை நம்புவோரின் எதிர்காலம் விடையில்லாத வினாவாகிவிடும்.  நியாயங்கள் தண்டிக்கப்படுவதும் குற்றங்கள் விடுதலையாவதும் இந்திய நீதி மன்றங்களில் காணமுடியாத காட்சிகள் அல்ல என்பதைக் காமராசன் தனது ‘கறுப்பு மலர்களில் இப்படிச் சித்திரித்திருப்பார்.

    “உன் விசாரணையே கூண்டுகளில்
    தொடங்குகிறபோது
    தீர்ப்புக்கள் சிறைக்கம்பிகளில் முடிவதில்
    வியப்பேதும் இல்லை!”

    இதனால் பாதிக்கப்பட்ட தமிழ்ச்சிம்மன் இதே உணர்வுகளை வேறு வாய்பாட்டில் பாடியிருப்பது உத்தி மாற்றத்தால் பெறும் கவிதை வெற்றியைக் காட்டுவதாக அமைகிறது. சிம்மன் எழுதுகிறார்.

    “ஏ, நீதி தேவனே!
    உன் மயக்கமென்ன?
    கஞ்சிக்கு இல்லாத பசி மயக்கமா?
    இல்லை கள்ளச் சாராயத்தின்
    போதை மயக்கமா?”

    பாடுபொருள் பாடலில் சிறக்கலாம். உணர்ச்சி கவிதையில் சிறக்கலாம். பாதிப்பின்றிப் பாடல் எழுத முடியும். பாதிப்பின்றிக் கவிதை எழுத முடியாது. வராது. இங்கே பொங்கல் வாழ்த்துக்களைக் கூடக் கவிதை என்று மயங்கித் திரிவது ஒரு இரங்கத்தக்க நிலை. தேனீ தமிழ்ச்சிம்மனைப் பாதித்தவைகள் நம்மையும் பாதித்திருக்கின்றன. அவர் எழுதுகிறார். நம்மால் எழுத முடியவில்லை. காரணம் அவர் படைக்கப் பிறந்தவர். நாம் படிக்கப் பிறந்தவர்கள். அவ்வளவுதான்!

    தொடர்ந்து செயராமன் எழுதிய கவிதை தொகுக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கையில் சிலவே எனினும் அன்னை தெரசாவைப் பற்றிய கவிதை ஈர்க்கிறது. இணையத்தில் சறுக்கிய இணைப்புத் தகராறால் செய்தி தவறாக ஒலிபரப்பாகிவிட்டது என்ற அங்கதச் சுவையோடு அவர் தந்திருக்கும் கவிதை இப்படி அமைகிறது.

    “தேசிய நீரோட்டம் செல்லும் பாதையில்
    அண்டை மாநில கர்நாடக
    வேலை வாய்ப்பு அலுவலகம் அருகில்
    உடைப்பு ஏற்பட்டு, உரியவர்களின்
    உரிய நடவடிக்கையால்
    மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டது!
    இத்தேசிய நீரோட்டப் பாதை
    ஐம்பதாண்டு பழைமை உடையது என்பதால்
    மீண்டும் உடைப்பு ஏற்படலாம் என
    அஞ்சப்படுகிறது.
    எனவே……………………….
    ஆங்காங்கே இருக்கும் தமிழர்கள்
    விழிப்புடனும் எச்சரிக்கையுணர்வுடனும்
    இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்!”

    காவிரி நதி நீர்ச்சிக்கலால் இரு மாநிலங்களுக்கிடையே புகைந்து கொண்டிருக்கும் பகை, கலவரமாகத் தெரிந்த நிலையில் எழுதப்பட்ட கவிதை இது. கோலார் முதலிய மாவட்டங்களில் பணியாற்றும் தமிழ் மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் சாதுரியமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. வந்தார்க்குப் புகலிடமாகத் தமிழகம் விளங்கினாலும் தமிழர்க்குப் புகலிடமாக இந்தியாவில் ஏதுமில்லை என்பதையும் பிற மாநிலங்களில் தமிழர்கள் ஒரு வகை அச்ச உணர்வோடு வாழவேண்டியதிருக்கிறது என்பதையும் அங்கதச் சுவையோடு செயராமன் எழுதியிருப்பது நூலின் பரிமாணத்தைக் கூட்டுகிறது.

    உடல்நிலை காரணமாக என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை. என்றாலும் இந்த நூலில் நான் படித்துணர்ந்த கருத்துக்களும் சமுதாய நிலைப்பாடுகளும் உன்னுடைய விளக்கங்களும் என் எதிர்கால இலக்கியப் பார்வைக்கு ஒளி தந்திருக்கின்றன.

    மீண்டும் உன் மடல் கண்டு

    அன்பு மறவா
    எழில்

    **********

    அன்புடைய எழிலுக்கு மணி எழுதிக்கொண்ட அன்பு மடல்.

    நான் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வருகிறேன். மருத்துவச் செலவும் மனக்கவலையும் ஏறி வருகின்றன. என்னால் முடிந்தவரை என் கடமைகளை நான் செய்து முடித்திருக்கிறேன். சாதிக்கப் பிறந்தவர்கள் சந்திக்கும் சிக்கல்களால் தடுமாறுவது இயல்பு. நானும் அப்படி தடுமாறியவனே. போலித்தனத்தை அறவே வெறுக்கும் என் இயல்பு நீ அறிந்ததே. வெற்று ஆரவாரங்களிலும் விளம்பரங்களிலும் விருதுகள் பெறுவதிலும் நான் ஆர்வம் காட்டுவதில்லை. பொய்ச்சிரிப்பிலும் புனைசுருட்டிலும் நான் அருவெறுப்படைகிறேன். ஒரு காட்டு மூலிகையாகவே இருந்துவிட்டாலும் பரவாயில்லை. ஜிகினா மாலையாக ஆகிவிடக்கூடாது என்பதில் வெகு கவனமாக இருக்கிறேன். இந்த இயல்புகளே எனக்குப் பகையைப் பெருக்கியது. நட்பைக் குறைத்தது. சொல்லப் போனால் எனக்கு நண்பர்களே இல்லையோ என்ற நிலைதான் நிலவுகிறது. இதனால் நான் வருந்துகிறேன் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆரவார உலகில் அமைதியால் ஒன்றும் செய்ய இயலாது. இத்தனைக்குப் பின்னாலும் நான் படிக்கிறேன். எழுதுகிறேன். உன்னைப் போன்ற நண்பர்களுக்குச் சில நூல்களை அறிமுகம் செய்கிறேன். அதனை ஒரு தொண்டாகவே செய்து வருகிறேன். இதனால் நான் இழக்கப்போவது ஏதுமில்லை. ஆனால் மன அமைதியைப் பெறுகிறேன்.

    இந்த நூலின் இறுதியாகத் தொகுக்கப்பட்டிருப்பவை தம்பி வசந்தராசன் எழுதிய சில கவிதைகள். இன்றைக்கு இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டுத் கோக்கப்பட்ட இந்த நூல் கவிதைகளில் இவருடைய கவிதைகள் தனித்துவம் மிக்கிருக்கின்றன என்பதை அவரது கவிதைகளால் அறிந்து கொள்ளலாம்.

    கவிஞன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அவனே தன்னை ‘இன்னான்’ என்று அறிமுகம் செய்து கொள்வது. இரண்டு அவனுடைய படைப்புக்கள் வழி அவனை யார் என்று பிறர் அடையாளம் காண்பது. இந்த இரண்டும் ஒத்திருக்குமாயின் அவன் உண்மைக் கவிஞன். பெரும்பாலான கவிஞர்களின் சுயரூபத்தை நேரடியாக அறிந்தவர்களுக்கு அவர்களுக்குப் பலமுகங்கள் இருப்பதை அறிந்து கொள்ள முடியும். கவிதைகளில் ஒன்றுமிருக்காது. பாரதிக்கு ஒத்திருந்தது. பாவேந்தருக்கு ஒத்திருந்தது. கண்ணதாசனுக்கு ஒத்திருக்கவில்லை. தம்பி வசந்தராசனுக்கு ஒத்திருக்கிறது. அதனால்தான்,

    “ஆடையல்ல எழுத்தெனக்குக் கழற்றி மாட்ட!
    அணிந்திருக்கும் நகையல்ல அழகு பார்க்க!!
    கூடவந்த எலும்பின் தோல்! எலும்பைப் போர்த்திக்
    கொண்டிருக்கும் என்னுயிரை, உடலைக் காட்ட!
    மேடைதரும்! விழிவெளிச்சப் பாதை தன்னில்
    மெருகேற்றி வருவதுதான்! மீண்டும் சொல்வேன்!
    ஏடடைந்த சொல்வேறு நான்வே றல்ல!
    எனைப்பிரியா என்தோல்தான் என்னெ ழுத்து!”

    என்னும் அறிமுகக் கவிதைக்கேற்ப அவரது படைப்புக்கள் அமைந்து போயிருக்கின்றன. ‘எழுத்துக்களைத் தோல்’ என்பதற்கு என்ன பொருள் என்றால் தன்னைப் பாதிக்கும் பொருள் பற்றிய தனது கருத்துக்கள் மாற்றத்திற்குரியன அல்ல என்பதாகும். அரசியல்வாதிகளைப் போல் பொதுக்கருத்து என்றும் சொந்தக்கருத்து என்றும் தனித்தனி வசதிகள் கவிஞனுக்குக் கிடையாது. பாத்திரங்களுக்காக மாறுவானே தவிர தனக்காக மாறமாட்டான். தன்னை என்றும் மாற்றிக் கொள்ள மாட்டான். கற்பனையால் அவரது கவிதைகள் அழகுபெறும் என்பதை ‘எலும்பைப் போர்த்திக் கொண்டிருக்கும் உடல்’ என்னும் தொடரால் குறிக்கிறார். பாதிக்காத பொருண்மையைப் பற்றிய கவிதைகள் எடுபடாது. கவிஞனையும் கவிதையையும் பிரித்துப் பார்க்க முடியாது. கவிஞன் கவிதையைப் படைக்கிறான் என்பது பொதுவான கருத்து. கவிதை கவிஞனிடத்திலிருந்து பிறக்கின்றன என்பதே உண்மையான கருத்து.  குழந்தைக்கும் தாயக்குமான உறவுதான் கவிதைக்கும் கவிஞனுக்குமான உறவு என்பதை வசந்தராசன் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

    “தரையில் நடந்த தாடிச் சூரியன்
    தத்துவம் முளைக்கும் புத்தக வயல்வெளி!
    தடியால் பூமியைத் தட்டி எழுப்பி
    விடியலைக் காட்டிய சூரிய விழிகள்!”

    என்னும் நான்கு வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு அவர் எழுதிய நிலைமண்டில ஆசிரியப்பாவிற்கு வைத்திருக்கிற பெயர் ‘பெரியார்’ என்பதாகும். என் எழுத்து, என் தாகம், தமிழா நலந்தானா? மீண்டும் ஒரு தொடக்கம், பூக்களின் தேசத்தில் புயல், உழுது….உழுது, எப்படித் தவறினாய் கணக்கு என்பன அவர் இந்த நூலில் கோத்திருக்கும் பிற கவிதைகளின் தலைப்புக்கள். இது ஒரு நூலைப் பற்றிய அறிமுகம் ஆதலின் அத்தனைக் கவிதைகளையும் திறனாய்வு வளையத்திற்குள் கொண்டு வருவது இயலாத செயல். எனவே உன்னைப் போலவே ஒன்றிரண்டு பகுதிகளை மட்டும் தொட்டுக் காட்டுகிறேன்.

    மேலே காட்டிய தந்தை பெரியாருக்கான ‘தரையில் நடந்த தாடிச் சூரியன்’ என்னும் உருவகத்தில் கற்பனையின் அத்தனைப் பரிமாணங்களும் அமைந்துள்ளன. அரிதாக தோன்றுகிற கற்பனைகளில் இதுவும் ஒன்று. சூரியன் வானத்தில் இருக்கும். பெரியார் நம்மிடையே தோன்றினார். விண்வெளியில் பவனி வருவது சூரியன். பெரியார் தரையில் நடந்தார். சூரியனுக்குத் தாடி இல்லை. தடியும் இல்லை பெரியாருக்குத் தடியும் உண்டு. தாடியும் உண்டு. சூரியனின் கதிரொளி பரப்பில் மண்ணகம் அடங்குவது போலப் பெரியாரின் பகுத்தறிவு சிந்தனை வீச்சில் மானுடம் அடங்கும் என்பது கருத்து. பேரறிஞர் அண்ணாவைக் கவிஞர் வைரமுத்து ‘நான்கடி இமயம்’ என்று உருவகப்படுத்தியிருப்பார். அண்ணாவின் குட்டையான தோற்றத்திற்கும் அறிவின் உயரத்திற்கும் தொடர்பில்லை என்பதை இமயத்தின் உயரம் நாலடி’ என்று சுருக்கிக் காட்டுவார்.

    இந்தப் பாட்டில் தடியால் பூமியைத் தட்டி எழுப்பி என்னும் தொடர் மரபு வழிச் சிந்தனையாகும். தடியால் பூமியைத் தட்டி எழுப்ப முடியுமா? இங்கே பூமி என்பது தூங்கிக் கொண்டிருந்த தமழினத்தைப் பெரியார் எழுப்பிய பிறகுதானே நம்மவரில் பலர் தூங்கியதையே தெரிந்து கொண்டார்கள்! அது தனி. ஆனால் பாத்திரம் பூமியைத் தட்டி எழுப்புகிற அல்லது மயக்கத்தைத் தெளிவிக்கின்ற கற்பனை தமிழுக்குப் புதியதன்று.

    சிலம்பில் ஒரு காட்சி. பதினாறு ஆண்டுக்காலம் கழித்து மனைவியின் நினைவு வந்த கோவலன் வீடு திரும்பியவுடன் தன் மனைவி கண்ணகியை அழைத்துக் கொண்டு பிழைப்பதற்காக மதுரை நோக்கிச் செல்கிறான். புறஞ்சேரியில் தங்கியிருக்கும் சூழலில் தன் கணவனுக்குத் தன் கையறி மடமையால் சமைத்து விருந்து படைக்கிறாள் கண்ணகி. இலைபோட்டு நீர் தெளிக்கிறாள். எப்படித் தெரியுமா?

    “மண்ணக மடந்தையை மயக்கொளிப்பனள் போல்
    தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவி”

    எனக் குறிக்கின்றார். இருந்த நிலையையும் எதிர்வரும் துன்பத்தையும் அறிந்து கொண்டு மண் மடந்தை மயங்கியதாகவும் இனம் பற்றிய இரக்கத்தால் மண்ணக மடந்தையின் மயக்கத்தைக் கண்ணகி நீர் தெளித்துத் தெளிவித்தாள் எனவும் உரையாசிரியர்கள் நயம் காண்பர். ‘நிலமடந்தைக்கு நீர் தெளித்ததைப் போல்’ என்னும் உவமம் முறையான தமிழ்க்கல்வியைப் பெற்றுள்ள கவிஞர் வைரமுத்தையும் அவரையும் அறியாமல் அவரை ஆட்கொண்டதைத்,

    “தாமரைப் பூவில் உறங்கிக் கொண்டிருக்கும் சரஸ்வதியின்
    முகத்தில் தண்ணீர் தெளிப்பதாக இருக்கின்றன”

    என்னும் உவமத்தால் அறியமுடிகிறது. பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்குத் தேர்வு கிடையாது என்னும் நடுவண் அரசின் சேதி, உறங்கிய கலைமகளின் முகத்தில் தண்ணீர் தெளிப்பதைப் போல் இருந்ததாம். “தடியால் பூமியைத் தட்டி எழுப்பிய பெரியார்” என்னும் உவமம் மரபின் தாக்கமாக இருந்தாலும் இலக்கியம் வளம் பெறுமேயன்றித் தரம் குறையாது என்பது உண்மை. கண்ணகி மண்மகளின் மயக்கம் தீர்த்தது அன்று. ஒன்றிய அரசு கலைமகளின் மயக்கம் தீர்த்தது நேற்று! பழைமை மயக்கத்தில் இருந்த  தமிழர்களைப் பெரியார் விழிக்கச் செய்தது இன்று!

    ‘புகாரில் மாநாய்கன் மகளாகப் பிறந்து செந்தமிழ்ச் செல்வியாக வளர்ந்த அவளுடைய புறஞ்சேரி நிலைகண்டு மண்ணக மடந்தை மயக்கமடைந்தாளாம். அந்த மயக்கத்தைப் போக்குவதற்காகக் கண்ணகி நீர் தெளித்தாளாம். கற்பனை என்றால் இதுதான். நம்முடைய சம்பளச் சாதித் தமிழாசிரியர்கள் அரசு விதிகளின்படி இதனையும் ஓர் அணியில் இரண்டு மதிப்பெண்ணுக்காக ஒதுக்கிவிட்டுக் கடந்து போய்விடுவார்கள். தமிழுக்கும் அவர்களுக்குமே தொடர்பில்லாது போய்விட்ட பிறகு கவிதைக்கு எப்படித் தொடர்பிருக்க முடியும்? எனவேதான் உரத்தொழிற்சாலை தொழிலாளர்களும் மேலாளரும் தமிழுக்குக் கவிதை உரம் ஏற்றுகிறார்கள் போலும்!

    பெரியாரைப் பற்றிப் பாவேந்தரும் கண்ணதாசனும் எழுதிய கவிதைக்குப் பிறகு பொருள் ஆழத்தோடும் கற்பனை வளத்தோடும் எழுதப்பட்ட கவிதை இது. இடைநிலைக் கல்வியில் மனப்பாடப் பகுதிக்குக் கவிஞரின் ஒப்புதல் இல்லாமலேயே பாடமாக வைக்க வேண்டிய வரிகள்.!

    “கவிதை எல்லா மனிதர்களுக்காகவும் படைக்கப்படுகிறது. ஆனால் அது எல்லா மனிதர்களாலும் புரிந்து கொள்ளப்படுவதில்லை என்பதே அதன் கவலையாக இருக்கிறது.”

    தன்னையுமறியாமல் முன்னுணர்ந்த சிந்தனைப் பதிவுகளை இடுவது கவிஞனுக்கு இயல்பு. ‘பட்டுக்கோட்டை அன்றைக்கே பாடினான்” என்று சொல்வதில்லையா அது போல!  இன்றைக்குத் தமிழகத்தைப் பொருத்தவரையில் ஒன்றிய அரசு நிறுவனங்கள் ஆனாலும் சரி, தமிழக அரசுப் பணிகளானாலும் சரி, வட இந்தியர்களின் ஆக்கிரமிப்பு பேரளவு கூடியிருக்கிறது. திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் வட மாநில மாவட்டங்களுள் ஒன்றாகவே காட்சியளிக்கிறது. இதற்குத் தமிழர்களே காரணம் எனலாம். தமிழக இளைஞர்களின் பொறுப்பற்ற தன்மையும் தவறான வாழ்க்கை நெறிகளுமே காரணம். தமிழகம் மெல்ல மெல்லப் போதைக்கு அடிமையாகி வருகிறது. கிடைத்த பணியை நன்கு பற்றிக் கொண்டு அதிலிருந்து முன்னேறலாம் என்ற மனப்பான்மை குறைந்து வருகிறது. படிப்புக்குத் தகுந்த வேலைதான் வேண்டும் என்ற பிடிவாதம் ஒரு பக்கம். எல்லாவற்றையும் விட நியாயமான பணியிடங்களுக்கே கையூட்டு கொடுக்க வேண்டிய நிலை.

    “சொந்தநாட்டில் அகதிகளாகிச்
    சோற்றுக் கலைவதே பிழைப்பாச்சா? – இங்கு
    வந்தவனுக்கு வால்பிடிப்பதுதான்
    வழக்கம்போல் உன் தொழிலாச்சா?”

    என்னும் நான்கு வரிகளில் தமிழகத்தின் இன்றைய நிலையை இருபது ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருக்கிறார் வசந்தராசன். சத்திய எழுத்துக்கு இது இயல்பே. சம்பிரதாய எழுத்துக்கு இது பிடிபடாது.

    “உலகத் தமிழனை நாடு பிரிக்கும் இங்கு
    உலவும் தமிழனைச் சாதி பிரிக்கும்
    இலைமறை காய்மறை இந்தியத் தமிழனை
    இங்குள்ள மதங்கள் சேர்த்துப் பிரிக்கும்”

    என்றெழுதுகிறார் வசந்தராசன். ஒற்றுமை என்பதையே தமிழன் அறியமாட்டான் என்னும் பேருண்மையை மூன்று முறைகளில் விளக்கியிருக்கிறார். சிங்கப்பூர் தமிழன், மலேசியா தமிழன், இலங்கைத் தமிழன் என்று நாட்டால் பிரிந்து நிற்பான். சரி. உண்மையான உள்ளூர்த் தமிழன் என்ன ஆவான்? இவன் சாதியால் பிரிந்திருப்பான். “தமிழன் முட்டாள்” என்றால் எவனுக்கும் கோபம் வராது. ஒரு சாதிக்காரனை முட்டாள் என்றால் அந்தச் சாதிக்காரனுக்குக் கோபம் வரும். காரணம் அவன் தன் சாதியை இனம் என்று எண்ணிக் கொண்டிருப்பதுதான். போகட்டும். நாடும் வேண்டாம். சாதியும் வேண்டாம் என்றிருக்கும் ஒன்றிரண்டு தமிழர்களை மதம் பிரித்து விடும். கிறிஸ்தவ உடையார், கிறிஸ்தவ வேளாளர் என்பது போல. இருப்பவனை மட்டுமல்ல வந்தவனையும் சாதி பிடித்தாட்டுகிறது. நடப்பியலைக் கவிதைச்சுவை குன்றாமல் கவிதையாக்கும் கலை இது.

    “பள்ளியிலே தமிழுண்டா? பள்ளிக்குப்பின்
    பணியிடத்தில் தமிழுண்டா?பணி தொடர்ந்த
    இல்லறத்தில் தமிழுண்டா? இல்லறத்து
    இனியபிள்ளை பெயர்சூட்டல் தமிழில் உண்டா?
    சொல்லவரும் பெயரதும் தமிழே தானா?
    தொண்டு செய்யும் கோயிலிலே தமிழ்தான் உண்டா?
    கல்லறையில் தமிழுண்டா? நீத்தார் ஆண்டு
    காரியத்தில் தமிழுண்டா? எதிலே உண்டு?”

    என்னும் விருத்தத்தில் போலித் தமிழ்ப்பற்றையும் பிறமொழி மயக்கத்தையும் ஒருசேரக் கண்டிக்கிறார். மாநிலத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வில் முதல் மதிப்பெண் வாங்குகிற பெண்ணின் பெயர் கூட வடமொழியில். வன்ஷிகா, மன்ஷிகா, வருஷணி, தர்ஷணி என்று பெயர் வைத்துக் கொள்கிறார்கள். மகேஷ், சுரேஷ் பெருவழக்கு. தமிழாசிரியர்களின் பிள்ளைகளுக்கும் தமிழ்ப் பேராசிரியர் பிள்ளைகளுக்கும் வடமொழியில்தான் பெயர் வைக்கிறார்கள்.

    மிகச் சிறந்த கவிதைத் தொகுப்பு எனக் குறிப்பிட இயலாவிடினும் பாடவேண்டியதைக் காலமறிந்து பாடியிருக்கிறார்கள். கடமை அறிந்து தொகுத்திருக்கிறார் வசந்தராசன். புதுக்கவிதை பற்றிய புரிதல் பற்றாக்குறை காரணமாக அந்த வடிவத்தில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகள் இந்த நூலைப் பொருத்தவரை அவ்வளவாகச் சோபிக்கவில்லை என்பதை நீயும் அறிவாய். நம் இருவரின் பார்வையும் இப்படியிருப்பதால் எல்லாருடைய பார்வையும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. எனவே வாசகர் வட்டத்தில் இது போன்ற நூல்களை மையப்படுத்திக் கருத்துரைகளைத் தொகுக்க வேண்டும். இத்தகைய கருத்துரைகளின் அடிப்படையில் படைப்பாளர்களைச் சிறப்பிக்க வேண்டும். ஒரு கவிஞன் பிற கவிஞர்களின் பாடல்களைத் தேடித் தொகுத்தளித்த வசந்தராசன் உள்ளம் வள்ளல் உள்ளம் என்பதில் நமக்கு ஐயமில்லை. எழுதிய கவிஞர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாது. அவர்கள் எங்கே இருந்தால் என்ன? அவர்களின் முகவரியாக அவர்தம் கவிதைகள் இருக்கின்றன! அவை போதும் நமக்கு! கவிதைகள் நமக்கு நல்ல நண்பர்கள்! மீண்டும் அடுத்த கடிதத்தில்!

    மாறா அன்புடன்
    மணி

    **********

    Share
  • 2022 ஒரு சாமானியனின் பார்வை

    2022 ஒரு சாமானியனின் பார்வை

    சக்தி சக்திதாசன்
    இலண்டன்

    ஐயையோ! ஓடியே போயிற்றா? 2022 அதற்குள்ளாகவா? நம்பவே முடியல்லையே! சந்திக்கும் பலரின் அங்கலாய்ப்புகள். ஆமாம் காலண்டர் தேதிகள் கிழிக்கப்பட்டு டிசம்பர் மாதம் 31ம் தேதியில் வந்து நிற்கிறது. ஓரிரவுக்குள் 2022 ஐக் கடந்து 2023 க்குள் கால் வைக்கப் போகிறோம்.

    சரி ஒரு வருடம் எம் வாழ்க்கையில் கடந்து போயிற்று. அதற்குள் அது தாங்கிக் கொண்டும், கடந்து சென்ற நிகழ்வுகள் தான் எத்தனை?

    இன்பம், துன்பம் எனும் இரண்டு நிகழ்வுகள் வெவ்வேறு வடிவங்களில் எம்மீது நிகழ்த்தி விட்டுச் சென்ற நிகழ்வுகளின் மீது ஒரு சாமானியனாக, பாமரனாக, ஒரு பேரக்குழந்தையின் தாத்தாவாக, தந்தையாக, மாமனாராக, தம்பியாக, அண்ணனாக, கணவனாக உள்ளத்தின் தாக்கங்கள் தந்த உணர்வுகள் மீட்டிய ராகங்கள் தான் எத்தனையெத்தனை?

    முதலில் எனது பிரத்தியேக வாழ்வின் தாக்கங்களை எடுத்துப் பார்க்கலாமே ! 2022 ம் ஆண்டின் அரம்பமே ஒரு சுழற்சியுடன் தான் ஆரபமாகியது என்று வைத்துக் கொள்ளுங்களேன். இரண்டு ஆண்டுகள் கைகளாக்கிய கொரோனா எனும் வைரஸ் சரி இனி தண்டனை போதும் என்று எண்ணி எம்மை விடுவித்தது.

    சரி இலக்கிய தாகத்தின் நிமித்தம் வருடந்தோறும் ஜனவரியில் தமிழகத்தின் தலைநகர் சென்னை நோக்கி ஓடிவரும் எனக்கு இரண்டு வருட வனவாசம் முடிந்து இனிக் கிளம்பலாம் என்று எண்ணி பயண ஏற்பாடுகளைக் கவனிக்க ஆரம்பிக்கும் போது விழித்துக் கொண்ட கொரோனா விட்டேனா பார் என்றது பாருங்கள்.

    ஒமிக்குரோன் எனும் ஒரு புதிய வடிவம் எடுத்து என்னைப் பார்த்துச் சிரித்தது. சரிப்பா! நானா? நீயா? எனும் போட்டி வேண்டாம் நீயே ஜெயித்ததாக வைத்துக்கொள் என்று சொல்லி சரணடைந்து பிரயாண ஏற்பாடுகளை ரத்துச் செய்து விட்டேன்.

    இப்படியான எனது 2022 ஆரம்பம் எப்படி இருக்கப் போகிறதோ ? எனும் அங்கலாய்ப்புடன் இருந்தேன். கோவிட்டுக்கான 3ம் தடுப்பூசி, நான்காம் தடுப்பூசி என்று ஏற்றிக் கொண்டே போனபோதுதான் புரிந்தது. ஓ! முதுமை எனும் வாசலுக்குள் நுழைந்து விட்டேன் எனும் உண்மை.

    ஒய்வூதியம் விருப்பத்துடன் பெற்று 7 வருடம் முடிந்த நிலையில் நானிருந்தேன்,என் மனைவி தானும் ஓய்வூதியம் விருப்பத்துடன் இரண்டு வருடத்தின் முன் எடுத்துக் கொண்டும் அதைச் சரியாக அனுபவிக்க கொரோனா விடவில்லையே!

    ஆயினும் எப்படியோ நேரம் கிடைப்பதோ அரிது எனும் வகையில் வாழ்க்கை ஓடியது. இடையிலே ஸ்பானிய நாட்டின் பாகமான காஸ்டல் டி சொல் எனும் நகரிற்கு ஒருவார விடுமுறையில் சென்றதும் அத்துடன் அக்டோபர் மாதம் கிரேக்க நாட்டுத் தீவுகளில் ஒன்றான சாக்கிந்தோஸ் அல்லது சாண்டி என்று அழைக்கப்படும் தீவுக்கு ஒரு வார விடுமுறையில் சென்றதும் கோவிட் கெடுபிடிகளில் இருந்து விடுபட்டதற்கான ஒரு அடையாளமானது.

    எழுத்து, விடுமுறை, பேத்தியுடனான இனிய பொழுதுகள் எனும் இடையறாத அக்கணப் பொழுதுகளின் சுகிப்போடு இனிமையும், திகிலும், ஆச்சரியத்தையும் தாங்கி பிரத்தியேக வாழ்வு தனது வருடப் பயணத்தை நிறைவு செய்கிறது.

    சரி இனி இங்கிலாந்தின் 2022 நிகழ்வுகளைப் பார்ப்போமா?  2022 இன் ஆரம்பம் ஒமிக்குரோன் எனும் திரிபடைந்த கொரோனா எனும் கிருமியின் திக் விஜயத்தின் திசை எத்திசையை நோக்கிப் போகப் போகிறது எனும் கேள்வியே இங்கிலாந்தின் வருடப் பயணத்தின் அனுபவங்கள் இருக்கப் போகிறது எனும் எண்ணமே பலரின் உள்ளங்களையும் ஆக்கிரமித்திருந்தது.

    ஒமிக்குரோனைப் பற்றிய பரபரப்பில் ஈடுபட்டிருந்தோருக்கு தெரிந்திருக்குமா? இங்கிலந்தின் அரசியல் பயணத்தின் ஆச்சரியங்கள்? ஆம் ஒன்றல்ல, இரண்டல்ல மூன்று பிரதமர்களைக் கண்டது இங்கிலாந்து. அதுமட்டுமா? இங்கிலாந்து சரித்திரத்தில் முதன்முறையாக இந்தியக் கலாசாரப் பின்னனியைக் கொண்ட ஒருவரைத் தனது பிரதமராக்கிய பெருமையை இங்கிலாந்து மக்களுக்கு 2022 கொடுத்தது .

    70 ஆண்டுகள் இங்கிலாந்தின் மகுடத்தைச் சூடிச் சரித்திரம் படைத்த, ஒரே வருடத்தில் மூன்று பிரதமர்களை நியமித்த பெருமையைத் தனதாக்கிய இரண்டாவது எலிசபெத் மகாராணியின் வாழ்க்கையை முடித்துக் கொண்ட ப்ந்ருமைதையும் கொண்டது 2022. எமது வாழ்நாளிலேயே ஒரு மகாராணியாரின் பிரஜையாக இருந்தது மட்டுமில்லாமல் மகாராஜாவின் பிரஜையாகவும் எம்மை ஆக்கிய பெருமையும் 2022 க்கே உண்டு.

    30 வருடங்களின் பின் வாழ்க்கை செலவாதாரம் மிகவும் அதிகரித்த நிலையைத் தீவிரமாக்கியது 2022. தமது சம்பள உயர்வுக்காக வேலைநிறுத்தம் எனும் போராட்டத்தில் பல ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட நிலையைத் தோற்றுவித்ததும் 2022 எனலாம்.

    எரிவாயு, பெட்ரோல், மின்சாரம் ஆகியற்றின் விலை மக்களால் சமாளிக்க முடியாத ஒரு கட்டத்திற்கு உயர்ந்ததும் இந்த 2022 யே ஆகும்.

    இப்படியாக இங்கிலாந்தில் தாக்கங்களை ஏற்படுத்திய 2022 சர்வதேசரீதியை மட்டும் விட்டுவிட்டதா என்ன?

    மிக முக்கியமாக சுமார் ஒரு வருடத்தின் முன் ஆரம்பிக்கப்பட்ட ரஸ்ய – யூக்கிரென் போரின் தாக்கம் அனைத்துலக நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திட்டது என்றே சொல்ல வேண்டும். மேற்குலக நாடுகள் எரிபொருள்களின் விலையுயர்வு எனும் பிரச்சனைக்குள் மாட்டித் தத்தளிக்கையில் இந்தியா பொருளாதாரத்தில் தன்னை ஸ்திரமாக்கி உலக அளவில் தனது முக்கியத்துவத்தை நிலைநாட்டக்கூடிய நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொண்டே செல்கிறது. அதேநேரம் சிறீலங்காவோ பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு மற்றைய  நாடுகளில் தங்கி இருக்க வேண்டிய நிலைக்குத் தன்னைத் தாழ்த்திக் கொண்டது.

    சீனாவுக்குள் கொரோனா வைரஸ் எடுக்கும் மாற்றத்தினை அறியாமல் உலக சுகாதார நிறுவனத்தின் தடுமாற்றம். அரபு நாடுகளின் நிலையற்ற தன்மை, ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஆதிக்கம், வட கொரியாவின் அணுவாயுத மிரட்டல்கள், ரஸ்ய ஆயுத ஆக்கிரமிப்பின் எல்லைகள் என சர்வதேசத்தைப் பலமுனைகளில் மிரட்டும் சூழல்களுடன் 2022 ஒரு போர்வைக்குள் தன்னை இழுத்து மூடிக் கொள்கிறது.

    அனைத்துக்கும் மேலாக காலநிலை, சுற்றுச்சூழல் மாசளவின் தாக்கத்தின் விளைவை நோக்கிய மாற்றங்களின் ஆழத்தை விளக்கும் வகையில் அமெரிக்க நாட்டினை பனிப்பொழிவினுள் மூடி எமக்கெல்லாம் பாரிய சிந்தைகளைத் தூவிவிட்டு மறைந்து போகிறது 2022.

    இந்தச் சாமானிய பாமரனின் 2022 ஐ நோக்கிய பின்னூட்டப் பார்வையை எதிர்மறையாக நோக்காமல் அதனுள் புதைந்துள்ள நேர்மறை கருத்துகளை உள்வாங்கிக் கொள்வீர்கள் எனும் நம்பிக்கையுடன் விரியும்  2023 இனுள் உங்களுடன் இணைந்து நானும் நுழைகிறேன். வாருங்கள் நல்லதையே தியானிப்போம்.

    அன்பான புத்தாண்டு வாழ்த்துகள்

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன் – 23

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன் – 23

    முனைவர். ச. சுப்பிரமணியன்

    தம்பி வசந்தராசனுக்கு வாழ்த்துக்கள்!

    மாத்திரையும் மருந்துமாக வாழ்க்கையின் கடைமடைப்பகுதியில் என் காலம் கழிந்து கொண்டிருக்கிறது. உன்னுடைய நலத்தையும் உன் இல்லத்தரசி, மக்கள் மற்றும் பேரப்பிள்ளைகளின் நலத்தையும் அறிய ஆவலாய் உள்ளேன். தம்பி சுப.வீ  சொல்வதைப் போல வெள்ளித்திரை, சின்னத்திரை, செல்போன் திரை, கணினித் திரை என இந்த வாழ்க்கையை திரைகள் மறைத்துக் கொண்டுள்ளன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரால் கடிதம் எழுதுகிற மரபே கருகிவிட்டது என்றே எண்ண வேண்டியதிருக்கிறது. உறவுகளுக்குள்ளேயே கடிதம் இல்லையென்னும்போது உலக இலக்கியங்களில் கடிதம் எப்படி எழுதப்படும்? அமைதியாக இருந்த வாழ்க்கையில் ‘தேவை’ என்ற பெயரால் ஒவ்வொன்றாக நுழைத்துக் கொண்டு நாமே நம்மை இழந்து வருகிறோம், மரத்தை வெட்டி நாலுவழிச்சாலை போட்டுக் கொண்டே மரம் நடுவிழாவை நடத்துவதைப் போல!

    மாதவி கோவலனுக்கு எழுதிய இரண்டு கடிதங்கள் மகா இலக்கியங்களாகப் போற்றப்படுகின்றன.  நேரு பெருமான் தன் மகளுக்கு எழுதிய கடிதங்களும் பேரறிஞர் அண்ணா தன் தம்பிமார்களுக்கு எழுதிய கடிதங்களும் வரலாற்று ஆவணங்களாகக் கொள்ளப்படுகின்றன. கலைஞர் எழுதிய உடன்பிறப்புக்கான கடிதங்கள் அவர் கால அரசியல் நிழற்படமாக இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்றன. அறிஞர் மு.வ. எழுதிய அன்னைக்கு, தம்பிக்கு, நண்பர்க்கு முதலிய கடிதங்கள் எல்லாம் கடித இலக்கியங்களாகவே கருதப்படுகின்றன. அவையெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்க் கற்பனையாய் மெல்லப் போயினவோ? என்று நெஞ்சம் குமுறுகிறேன். ஒரு இலக்கிய வடிவத்தை உருவாக்குவதும் அதனைச் செழுமைப்படுத்துவதும் அவ்வளவு சாதாரணமான செயலன்று.

    நான் உன் கவிதைகளைப் படித்து என் அனுபவத்திற்கும் சிற்றறிவிற்கும் ஏற்ப உணர்ந்தும் அறிந்தும் அனுபவித்தும் வருகிறேன். அவற்றை என் உடல்நிலையின் அனுமதிக்கேற்ப அவ்வப்போது ‘வல்லமை’ இதழில் பதிவு செய்து வெளிப்படுத்தியும் வருகிறேன். நீ எழுதிய ‘சூரியச் சிறகுகள்’ என்னும் உன் தொடக்கக் காலக் கவிதை நூல்களில் ஒன்றினைப் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். அதனைப் படித்த பிறகு உனக்குக் கடிதம் எழுத வேண்டும்போல் தோன்றியது. அதனால் இதனை எழுதுகிறேன்.

    இலக்கிய வடிவங்களில் நான் வசமிழந்து போனது கவிதைகளில்தான்.  கவிதைகளின் சுருக்கமும் ஆழமும் மரபுவழித் ஒரு தமிழரசிரியனைக் கவர்வதில் எந்த வியப்பும் இல்லை. சங்க இலக்கியக் கோட்பாடே வடிவச் சுருக்கந்தானே? மேலே நான் சுட்டிய பெருமக்கள் எழுதிய கடிதங்கள் எனக்குக் கவிதைகளாகவே இனித்துக் கொண்டிருக்கின்றன. உண்மையில் அந்தக் கடிதங்களின் உள்ளடக்கம் பெரும்பாலும் கவிதைக்குரியது அன்று. ஆனால் எழுதிய பெருமக்களின் உள்ளத்து அழகு அவர்தம் எழுத்தில் கவிதைகளாக இழையோடுவதை மிக எளிதாக உணர முடியும். உள்ளத்து உள்ளது கவிதை!

    இளங்கலை வேதியல் படித்துக் கொண்டிருக்கும்போதே நீ கவிதைகளில் ஆர்வம் கொண்டிருந்ததை அறிவேன் நான். அறிவியலுக்கும் தொழில் நுட்பத்திற்கும் உறவு உண்டு. ஆனால் தாய்மொழிமீது பற்றுக் கொள்வதற்கும் படைப்பிலக்கியம் செய்வதற்கும் அவ்விருதுறைகளும் பகை பாராட்டுவதில்லை. மொழியை யார் வேண்டுமானாலும் கையாளலாம். கவிதை புனையலாம். உன்னுடைய இன்றைய வாழ்வு கவிதைகளால் முழுமை பெறுகிறது என்பதை அறிந்து நான் பெருமையுறுகிறேன். அன்று ஏகாம்பரம்! இன்று வசந்தராசன்! வாழ்த்துக்கள்!

    சிந்தைமிசை குடிகொண்ட சந்தப் பாக்கள்

    பாடல் புனைபவர்களுக்குச் சந்தக் காதல் மிக முக்கியம். சத்தக் காதல் வேறு., சந்தக் காதல் வேறு. சந்தத்தை உள்வாங்கிக் கொண்டால் கவிதை வழி தானாகத் திறந்து கொள்ளும். வெற்று வாய்பாடுகளை மனனம் செய்தும் அவற்றுக்கான சீர்களைத் தேடிக் காவல் துறை உதவியோடு கைப்பற்றுவதிலும் பலர் ;தங்கள் மதிப்பு மிக்க நேரத்தைச் செலவிட்டு மாய்கிறார்கள். உனக்கு இயல்பிலேயே அமைந்த வரம் அது! சந்தம் உன்னைச் சொந்தம் கொண்டாடுகிறபோது நான் என் சிந்தை குளிர்ந்தேன்! சிலிர்த்து மகிழ்ந்தேன்!

    நதியொன்று வயல்தேடி நடைபோடுது!  — அதன்
    நடைபாதம் கரையேறித் திரைமூடுது!
    வழிதேடி விழியலையும் கரை மோதுது! – அந்த
    வயல் ஏனோ தடம் மறந்து இடம் மாறுது!

    வயல்வீழ்ந்த விதை கூட நாற்றாகுது! – அதன்
    வழிதேடி நதிகூட ஊற்றாகுது!
    கயல்வீச்சு தனைக்காண நதி வாடுது! – உடன்
    கைகோத்து விளையாடச் சுதிபோடுது!

    நதியேக்கம் இதைத் தீர்க்க வயலாகு நீ! – என்னில்
    நரம்புக்குள் தமிழாக விளையாடு நீ!
    விதிப்போர்வை இனிவேண்டாம் தெளிவாகு நீ! – என்னில்
    விழுமழையின் துளிசேர்ந்து தேனாகு நீ!

    என்று ஒரு பாடல் எழுதியிருக்கிறாய். ‘நோக்கு’ என்பது கவிதையின் கூறுகளில் தலையாயது. விரைவாகப் படித்துச் செல்பவனைக் கையைப்பிடித்து நிறுத்திக் கவனித்துச் செல்’ என்று ஆணையிடுமாறு அமைந்த கூறுக்குத்தான் நோக்கு என்று பெயர். ‘நோக்குதற் காரணம்’ கவிதைகளில் அமைந்திருக்க வேண்டும். இந்தக் கவிதையில் இரண்டு இடங்களில் நான் அந்த நோக்கினால் தடுமாறினேன். ‘நதியேக்கம் ;இதைத் தீர்க்க வயலாகு நீ’ என்ற தொடரும் விழுமழையின் துளிசேர்ந்து தேனாகு நீ’ என்ற தொடரும் என்னைத் தடுத்து நிறுத்தின. தங்களை அடையாளம் காட்டின. மென்மையான காதலை வயலின் ஈரப்பதம் குலையாமல் வாசத்தோடு வடித்தெடுத்திருக்கிறாய்!. இந்தப் பாடலை நான் வாய்விட்டுப் பாடியபோது ‘மாலையிட்ட மங்கை’ திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதி விசுவநாதன் இராமமூர்த்தி இசையமைத்த ‘மழைகூட ஒரு நாளில் தேனாகலாம்’ என்ற தேனினுமினிய பாடல் நினைவுக்கு வந்தது.

    வினாக்களால் கருத்துக்களை வெளிப்படுத்துவது கவிதையின் வடிவ உத்திகளில் ஒன்று. துன்பத்திற்கு யாரே துணையாவார் என்பது போல!. ‘காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டா என்பார் பாவேந்தர்! பெரும்பாலான கவிஞர்கள் கையாண்ட வெற்றிகரமான உத்தி இது. இன்றைய திரையிசைப்பாடல்களின் பெருவெற்றிக்கு இந்த வினா உத்திதான் கைகொடுக்கிறது. என்பதை நுணுகிக் கேட்டு அறிந்து கொள்ளலாம். ‘நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வமகனே?” என்பதில் தொடங்கி, இது கல்லின் தோல்வியா? இல்லை உளியின் வெற்றியா? என்பது வரைக்கும் தொடர்வது இந்த உத்திதான். இந்த உத்தியை ஒரு சந்தப்பாட்டில் அதுவும் ஈழத்தமிழர்களின் கண்ணீரைத் துடைக்கப் பாடியிருப்பது இன்னொரு மகிழ்ச்சியே!

    புலிநகத்தைக் கடிப்பதற்கு எலிகள் கூட்டமா?
    பூஞ்ச காளான் முகம் வெளுத்தால் இடி நடுங்குமா?
    அலிபுணர்ந்து ஆண்குழந்தை அடைய முடியுமா?
    அரைஞாணில் ஆனைகளை அடக்க முடியுமா?
    சிலைவடிக்க சிற்பியின்றி உளிகள் போதுமா?
    சீழ்ப்பிடித்த சிந்தனையால் ஈழம் மலருமா?
    அலைகடலைத் தோற்கடிக்கும்ஆண்கள் கூட்டமாம்
    அணிவகுப்போம்! அடையுமட்டும் ஈழம் வாழ்த்துவோம்!
    உலைதுருத்தி மூச்சுவிட்டால் புயலடிக்குமா?
    ஒரு பனியின் துளியெதிர்ந்தால் கதிரடங்குமா?
    வலைவீசி வான்முழுதும் சுருட்ட முடியுமா?
    வதங்கிவிழும் பூவெதிர்த்து வேர் கறுக்குமா?
    தலையடகு வைத்துவிட்டு முடிசுமக்கவா?
    தமிழீழம் தள்ளிவைத்தோன் தமிழன் என்பதா?
    விலைபோன தலைவர்களால் வீழ்ந்து கிடக்கிற
    வீரத்தமிழ் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்புவோம்!

    உணர்வுப் பூர்வமாக எழுந்த ஈழ ஆதரவு உன் வழியாகக் கவிதையாகியிருக்கிறது. எனக்கொரு ஆழ்ந்த வருத்தம் உண்டு. ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு நாவலுக்கான கரு உண்டு என்பர். ஒரு கவிதைக்கான கருவா இருக்காது? அப்படியிருக்கையில் ஈழத்தைப் பற்றிய நெஞ்சை உருக்கும் படைப்புக்கள் தமிழகத்தில் இதுவரை வெளிவராமல் போனது மனத்தை என்னவோ செய்கிறது. ஒரு சில இருக்கலாம். உதிரிப் பாடல்கள் எழுதப்பட்டிருக்கலாம். சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கலாம். அவையெல்லாம் ஈழத்திற்கு நாம் தருவதாகச் சொல்லிக் கொள்ளும் ஆதரவு நிலையை முற்றிலும் வெளிப்படுத்துவதாக இல்லை. நீலமலை படகரின் வாழ்க்கையை ராஜம் கிருஷ்ணன் ‘குறிஞ்சித்தேன்’ என்ற நாவலில் சித்திரித்ததைப் போல ஈழக்கொடுமையை உலக இலக்கியமாக்கும் முயற்சி ஏதும் செய்யப்பட்டிருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. சுருங்கச் சொன்னால் விபத்தில் சிக்கியவனைப் பார்த்து ‘அடடா!’ என்று சொல்லிவிட்டு வழியோடு போகிறானே அவனுடைய அந்த அளவு உணர்ச்சிதான் நமக்கு ஈழத்தில் என்பதை என்னால் உரக்கச் சொலல முடியம். உன்னால் முடிந்ததை நீ செய்திருக்கிறாய் என்ற அளவில் நான் அமைதியடைகிறேன்.

    எத்தனையோ வினாக்களை நீ கேட்டிருக்கிறாய்! எந்த வினாவிற்கும் இங்கே  விடையில்லை. ஈழச்சிக்கலில் பன்னாட்டுப் பேராதரவைப் பெறுவதில் நாம் படுதோல்வி அடைந்திருக்கிறோம். அதற்குக் காரணம் தமிழக அரசியல் தலைவர்கள் அதனை உள்ளூர்ச் சிக்கலாக மாற்றிக் கொண்டதுதான் காரணம். ஒரு பைசா கூடச் செலவழிக்கத் தயாராக இல்லாதவன் கூடத் ‘தொப்பூழ்க்கொடி உறவு’ என்று சொல்லிக் கொண்டு மேடையேறிவிடுகிறான். விலைபோன தலைவர்களால் வீழ்ந்து கிடக்கிற வீரத்தமிழ் உணர்ச்சிகள்’ என்று நீ சொல்லியிருப்பது மிகச்சரியே! இந்த நூலின் இன்னொரு இடத்தில் கூட,

    “வெளிக்கடையின் சிறையிடுக்கில் கண்ணிழந்த
    வேங்கைகளின் வீரததைக் காசாய் ஆக்கும்
    ஒலிபெருக்கி வீரர்கள்”

    என்று நீ எழுதியிருப்பதையும் கவனித்தேன்! பிரபாகரனைக் கைது செய்து இந்தியா கொண்டு வரவேண்டும்’ என்று சொன்னவர்கள் கூட ஈழத்திற்காகப் போராடுவதாகச் சொல்லிக் கொள்ளும் நகைச்சுவைக் காட்சிகள் இங்கு ஏராளம்! ஏராளம்!!. தற்கால உலக அரசியல் அமைப்பில் பிற நாட்டுச் சிக்கல்களில் எந்த ஒரு நாடும் தன்னிச்சையாக நுழைந்து செயல்பட முடியாது என்னும் சாதாரண உண்மையைக் கூட நாம் அறிவதற்கு முயலவில்லை. களச்சிக்கலைக் கபடிப் போட்டியாக எண்ணியதன் விளைவு இன்னும் பன்னூறு ஆண்டுகளுக்குத் தொடரும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.

    சந்தப்பாடல் எழுதுவோர் அனைவருக்கும் ஒரு சிச்கல்வரும். சந்தம் அமையும். அதற்கான சொற்கள் அமையும். ஆனால் பொருளிருக்காது. பொருளோடு கூடிய சந்த அமைதி கொண்ட சொற்கள் அமைவது அரிதிலும் அரிது. மகாகவிக்கு அது இயல்பாக அமைந்தது. பறையருக்கும் இங்கு தீய புலையருக்கும் விடுதலை! பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை’ முதலிய பாடல்களில் இந்தப் பொருட்சந்தத்தை உணரலாம். அதுபோன்ற பேராற்றல் உனக்குக் கைவரப்பெற்றிருப்பது எனக்குத் தனி மகிழ்ச்சி! சித்தர்களின் பாடல்களை நீ அடிக்கடி பயில்வது சந்தம் அமைய எளிதான வழியாகும்.

    அதிசயச் சிலந்தி

    எச்சிலால் வலைபின்னும் சிலந்தியை எடுத்துக்காட்டாக்கிப்  பாடல் ஒன்று எழுதியிருக்கிறாய். முயற்சியில்லாத மனிதனைச் சாடுவதற்கு நீ சிலந்தியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாய். திருச்சிராப்பள்ளி திருவானைக்காவின் தலபுராணம் இந்தச் சிலந்தியைப் பற்றிக் கூறுகிறது. சிவலிங்கத்தின் மீது வெயில்படாமல் இருக்க சிலந்தி வலைபின்ன, சிவனை வணங்கி வந்த யானை சிலந்தியின் செயலைத் தவறாகப் புரிந்து கொண்டு அந்த வலையைச் சிதைக்க. இப்படி பின்னுவதும் அழிப்பதுமாக இருந்து இறுதியில் ஒன்றினையொன்று அழித்துக் கொண்டதாக அந்தக் கதை போகிறது. நமக்கு வேண்டியது யானை அழித்தாலும் சளைக்காமல் வலைபின்னிய சிலந்தியின் முயற்சிதான். அத்தகைய முயற்சி இல்லாத மனிதனை நீ ‘அதிசயச் சிலந்தி’ என்று அழைப்பது சரியென்றே தோன்றுகிறது.

    நடந்ததை எண்ணிக் கலங்கிக் கிடப்பவன்!
    எட்டாக் கனிகளைக் கொட்டாவி விட்டே
    கனிய வைக்கக் காத்துக் கிடப்பவன்!
    ……………………………………வாழ்க்கைத் திடலில்
    கண்ணா மூச்சியால்காலம் கழிப்பவன்
    நரை திரை மூப்பு நடக்கும் வரைக்கும்
    அமைதியே இவனது ஆகாசக் கோட்டை!
    பொறாமை என்பதோ
    ஏக்க இதயத்தில் எழுந்த புற்றுநோய்!
    எதிர்ப்பார்ப்புக்களில் ஏமாந் திருப்பவன்!

    என்றெல்லாம் எழுதிய நீ, இறுதியில் எழுதியிருக்கிறாயே ‘அடுத்தவன் கனவுக்கும் ஆசைப்படுபவன்’ என்று! அடடா! பொறாமையையும் பேராசையையும் இதனைவிடக் கவிதைச் சொற்களால் கொண்டுவர இயலுமா என்பது தெரியவில்லை.

    காட்டுக்குப் பேன் பார்த்த காற்று

    தற்காலக் கவிஞர் பெருமக்கள் பலரும் கற்பனையை அறியாதவர்களாகவே இறக்கிறார்கள் என்பது அவர்தம் கவிதைகளைப் பாரத்தாலே புரிந்து கொள்ள முடியும். கவிதையை நிலைக்கச் செய்வது கற்பனையே. பாடுபொருள் ஒன்றாகவே இருந்தாலும் இத்தனைக் கவிஞர்களும் இப்படி வேறுபட்டுத் தோன்றுவதற்குக் காரணமே கற்பனைதான். ஒருவரைப் போல மற்றவர் கற்பனை செய்யமுடியாது  செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது. அமையாது!

    “காற்றே!
    மரங்களின் தலைகளில் நீ
    பேன் பாரத்தது போதும்! போ!
    அவசரத்தில் மயில் இலைகளை
    ஏன் அப்புறப்படுத்துகிறாய்?

    இனிய எளிய காட்சி.! இதமான கற்பனை!. கற்பனைக்காகக் கால்கடுக்கத் தவம் செய்வாரிடையே நீ பதங்களைக் கொண்டு பல்லாங்குழி ஆடியிருக்கிறாய்!. தென்றலாக வரும்போது பேன் பாரத்த காற்று, சற்று வேகமாக அடிக்கிறபோது மயிரைப் பியத்து எறிவதைக் கலைநயத்தோடு நீ சொல்லியிருப்பது மனத்தை இனிக்கச் செய்கிறது, எண்ணவும் செய்கிறது. ‘ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே! என்பார் குமரகுருபரர்! காட்டின் அடர்த்தியைக் காட்டாது காட்டிய உன் திறன் மெச்சத் தகுந்தது.

    அரளிப்பூவின் அழுகை

    நாட்டுப்புற வடிவங்களை மரபுக்கவிதைக்காரர்கள் கையாண்டதை விடப் புதுக்கவிதைக்காரர்கள் கொஞ்சம் அதிகமாகவே கையாண்டிருக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன். இளங்கோவடிகள், மணிவாசகர், வள்ளற்பெருமான், மகாகவி, பாரதிதாசன் முதலியோரைத் தொடர்ந்து வந்த புதுக்கவிதைக்காரர்கள் இந்த வடிவத்தில் பல புதுமைகளைச் செய்து காட்டியிருக்கிறார்கள். படிமம், அங்கதம், குறியீடு, முரண் என்னும் கவிதை உத்திகளில் படிமத்தைக் காட்சிப்படுத்தியதில் இவர்களுக்குப் பெரும்பங்கு உண்டு.

    “பூக்களிலே நானுமொரு
    பூவாயத்தான பிறப்பெடுத்தேன்!
    பூவாகப் பிறந்திருந்தும்
    பொன்விரல்கள் தீண்டலையே
    பொன்விரல்கள்தீண்டலையே நான்
    பூமாலை ஆகலையே! “

    என்னுமொரு கவிதை மேத்தாவின் கண்ணீர்ப்பூக்களைத் தூக்கி நிறுத்தியவற்றுள் ஒன்று. முதிர்கன்னிகளின் அவலத்தை அரளிப்பூ மேல்வைதது அவர் அழவைத்தாலும் அந்தக்கால முதிர்கன்னிகளுக்கு அது ஒரு அரசியல் வாதியின் ஆறுதலாக இருந்தது என்னவோ உண்மை. இந்தக் குறிப்பை நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் ‘காலம் கூட கரியாச்சு’ என்னும் உன்னுடைய கவிதையைப படித்தவுடன் அரளிப்பூ கவிதை நினைவுக்கு வந்ததை நான் தடுக்க முடியவில்லை.

    “முன்வாசல் கோலத்தில்
    முகமாகிக் காத்திருந்தேன்!
    என்வாசல் மூடலையே!
    என்கிழக்கு வெளுக்கலையே”

    என்ற வரிகளை நான் படித்தபோது கண்ணீர் ததும்பியது என்றாலும் வயது நோக்கி அடக்கிக் கொண்டேன். ‘எல்லாருடைய வாழ்க்கையிலும் வெளிச்சம் அடிக்க என் வாழ்க்கை மட்டும் இன்னும் விடியவில்லை’ என்னும் ஏக்கததை உன்னுடைய சுருக்கமான பதிவு கவிதை அழகோடு வெளிப்படுத்துகிறது. ‘என் கிழக்கு’ என்பதுதான் கவிதைச் சொல்!

    “கனவெல்லாம் விறகாச்சு!
    கண்ணீரும் நெருப்பாச்சு!
    கன்னிமனம் குழம்பாச்சு!
    காலம் கூட கரியாச்சு”

    என்ற பாடலை

    “கனவெல்லாம் விறகாச்சே!
    கண்ணீரும் நெருப்பாச்சே!
    கன்னிமனம் குழம்பாச்சே!
    காலம் கூட கரியாச்சே”

    என்றுதான் என்னால் படிக்க முடிந்தது. இப்படி எழுதியது ஒன்றாகவும் படிப்பது ஒன்றாகவும் அமைய முடியுமா என்பது எனக்குத் தெரியாது. அந்தப் பாடல் செலுத்திய தாக்கத்தினால் நடந்திருக்கலாமோ? மேத்தாவும் நீயும் கையாண்டிருக்கும் இந்த நாட்டுப் புறவடிவம் உங்கள்; இருவரையும் கைவிடவில்லை. என்பதோடு கவிதையும் கனக்கிறது என்பதை நான் சொல்லியாக வேண்டும்.

    அங்கதத்தில் நீ அடைந்திருக்கும் வெற்றி

    ‘நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி’ என்ற வள்ளுவர்தான் ‘தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுகலான்’ என்று கிண்டலாகப் பேசியிருக்கிறார். கிண்டல் வேறு, ஒருவரை இகழ்வது வேறு. இந்த வேறுபாடு வள்ளுவருக்கும் தெரியும். உனக்கும் தெரியும். கவிதைக் ‘கிண்டலை’  ‘அங்கதம்’ என்பர்.  உண்மைக்குள் ஒளிந்திருக்கும் உரசல்களை அது ஊரறியச் செய்யும். மனிதம் விரும்பாதது மரணம். அது முன்பெல்லாம் எருமை மாட்டின் மீது அமைதியாக ஆடி அசைந்து வருவதாகத்தான் எண்ணிக் கொண்டிருந்தார்கள். இன்றைக்குச் ஒரு வழிச்சாலை நடந்த ஒன்பது விபத்துக்கள் இப்போது நான்குவழியான காரணத்தால் நாற்பதாக உயர்நதிருக்கிறது. சென்னையில் பல்லவன் ஓடியபோது வந்த கற்பனை இது உனக்கு. நன்றாகத்தான் இருக்கிறது.

    “எருமைமீதே ஏறி வந்த எமனே!
    உனக்குப் பதவி உயர்வு எப்போது வந்தது?
    பல்லவன் மீதேறி பவனி வருகிறாய்?”

    எளிய மனம் பெற்றோர் பேறு பெற்றோர் என்பது விவிலியம். எளிய மனம் பெற்றோருக்குத்தான் இத்தகைய கவிதைகள் கைவரும். இன்னொரு இடத்திலும் நீ இந்த அங்கதத்தை அழகுபடச் சித்திரித்திருப்பதைக் கண்டேன்.

    குழந்தை வளர்ப்பு

    குழந்தைகள் பிறர் சொல்வதைக் காட்டிலும் செய்வதைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்குப் பிடித்தமான ஆசிரியர்கள எண்ணிக்கையில் குறைவாகப் போனதற்கு இதுதான் காரணம். குழந்தைகளை எப்படி வளரக்கக் கூடாது எனபதற்கு நீ எழுதியிருக்கும் இந்த அங்கதம் எனக்குச் சிரிப்பையும் என் பேத்திக்குச் சிந்தனையையும் தூண்டியது என்ற சொல்லலாம்.

    “பையிலிருந்த பெனசிலை எவனோ
    கையில் எடுத்துக் கொண்டு
    கம்பி நீட்டிவிட்டான்”

    பள்ளியிலிருந்து வீடு திரும்பிய
    மகள் புலமபினாள்!

    நான் சொன்னேன்
    போகட்டும் திருட்டுப் பயல்கள்!
    நாளைக்கே உனக்கு
    நான்கு பென்சில்களை
    அடித்துவருகிறேன்
    ஆபீசிலிருந்து”

    மழலைச் செல்வங்களை எப்படி வளர்க்கிறார்கள்? எப்படி வளர்க்கக்கூடாது என்பதை அங்கதச் சுவையோடு நீ சொல்லியிருப்பது அழகு.

    இந்தியச் சமையல்

    மகாகவி வாழ்க்கையில் நடந்ததாக ஒரு பதிவு கண்டேன். அவர் பையில் இருபது ருபாய் பணம் இருந்ததாம். தன்னோடு உடன் நடந்த சுத்தானந்த பாரதியிடம் அவர் சொல்லியிருக்கிறார். “ஓய்….என் பையில் இப்போது இருபது ரூபாய் இருக்கிறது. இந்த இருபது இருநூறாகும். அந்த இருநூறு இருபதாயிரம் ஆகும். நான் அமுதம் என்ற பத்திரிகையை ஆரம்பிக்க இருக்கிறேன். பிறகு பார் என்னை!” என்றாராம். அந்த வேளையில் “ஐயோ நான கொண்டு வந்த ஒரு பழம் கூட விற்பனையாகவில்லையே? இன்று நான் எப்படி உலை வைப்பேன்?” என்ற அழுகுரல் கேட்டுத் ;திரும்பிய பாரதியின் பார்வையில் விற்காத வாழைப்பழத்தை வைத்துக் கொண்டிருந்த வயதான மூதாட்டி தென்பட்டிருக்கிறாள். பாரதி அருகில் வந்தார். கிழவியிடம் வாழைப்பழம் என்ன விலை என்றார். இருபது ரூபாய் என்றாள் கிழவி தன் பையிலிருந்து அந்த இருபது ரூபாயைத் தூக்கிக் கொடுத்துவிட்டு விருட்டென்று நடந்தாராம் .பாரதி. பசியோடு இருப்பவனிடத்தில் தத்துவம் பேசக்கூடாது. இந்தியாவில் இன்று இது தலைகீழ்! உலகமே இந்தியாவை வியப்போடு பார்க்கிறது என்கிறார்கள். பார்ப்பவர்களுக்கு வேறு வேலை இல்லையா என்பதும் தெரியவில்லை. அவர்கள் இந்தியாவில் எதனைப் பார்த்து வியக்கிறார்கள் என்பதும் புரியவில்லை.

    இதோ காகித இலைகளில்
    இந்தியச் சமையல்!
    கைகளைக்கழுவு!
    குழப்பங்கள் கூடிச் செய்த
    கொள்கைக் குழம்பு
    அருகே………………………….
    ஆர்யபட்ட அப்பளங்கள்!
    விண்வெளிப் பச்சடிகள்!
    காமன்வெல்த் மாநாட்டுக்
    கடுகு ரசங்கள்!
    ஊர்கள் தோறும் தொலைக்காட்சி ஊறுகாய்கள்!
    வெவ்வேறு சுவைகளில்!
    உம். சீக்கிரம் சாப்பிடு!
    “என்ன சோறு வேண்டுமா?
    உதை படுவாய் நீ!

    வெளிநாட்டவர் வந்தால் சேரிப்பகுதிகளைப் பார்க்காமல் இருப்பதற்காகத் திரைச் சீலைஅமைத்துத் தடுத்துக் கொண்டே இந்தியாவை வியப்போடு பார்க்கிறார்கள் என்றால் எதனால் சிரிப்பது? பசித்தவனுக்கு இறைவன் சோறாக வரவேண்டும். ஆட்சியின் அவலத்தை நகைச்சுவையோடும் அங்கதத்தோடும் நீ சொல்லியிருப்பது பலரையும் கவரக்கூடும்.

    சமாதானம்

    கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது!  என்று ஒரு பாடல் உண்டு. அதனைக் கவிதை என்பாரும் உளர். அண்ணல் கனவு கண்ட களப்போரில் குருதிக்கு இடமில்லை. என்பது உண்மையே! ஆனால் இந்திய விடுதலை வரலாற்றைக் கொஞ்சம் கவனத்தோடு படித்தவர்களுக்கு அன்று சிந்திய ரத்தத்தின் அளவு எவ்வளவு என்பது தெரியவரும்.

    அன்று
    விடுதலைப் போரில்
    வீணாக்கமல் சேமித்துவைத்த
    செங்குருதித் துளிகளை
    இன்று
    மண்டைக்காடுகளில்
    மீனாட்சிபுரங்களில்
    செலவழித்துக் கொண்டு
    இதோ சமாதானப் புறாக்கள்!
    எங்கள் இலைகளின ஓரத்தில்
    இறால்களோடு
    சமாதானத்தைச் சமைத்துக் கொண்டு!

    ஆங்கிலம் தெரிந்தும் மௌனவிரதம் இருந்தவர் அண்ணல்தான். அவர் சமய ஒற்றுமைக்குத் தந்த முன்னுரிமையைச் சாதி ஒழிப்புக்குத் தராததற்கான பலனை நான் அனுபவிக்கிறோம். காதல் கூடச் சாதி பார்த்துத்தான் அனுமதிக்கப்படுகிறது. தனிமனித ஆணவக் கொலைகள் தமிழகமெங்கும் வாரச்சந்தையாகிவிட்டது. இந்தப் பாடல் இரண்டு சமுதாயத்தினருக்கிடையே எழுதிய சமயப் பூசலைச் சுட்டுவதாக நீ எழுதயிருக்கிறாய். இன்று நிலைமை இன்னும் மோசம். தமிழகத்தின் மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்களில; சாதிய வன்மங்கள் தீக்கங்குகளாய்க் கனன்று கொண்டிருக்கின்றன. அரசியல் வாதிகளுக்கு மடடுந்தான் இரட்டை வேடம் சொந்தமா? நமக்கில்லையா? பிறகு என்ன?

    நடைபாதை வாக்காளர்கள்

    வாக்காளர் அடையாள அட்டை அவர்கள் வாழுகின்ற நாட்டை அடையாளப்படுத்தும். ஆனால் இந்தியாவில், சென்னையில் இன்னும் பல ஊர்களில் நடைபாதையையே அடையாளப்படுத்தும் வாக்காளர்கள் அட்டைகளைப் பெற்றவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நடைபாதை யாருக்கானது என்பதையும் உண்மையில் இன்று யாருக்குப் பயன்படுகிறது என்பதையும் கவிதைப் பதங்களால் ஒரு வேடிக்கைச் சோகத்தை விளையாட்டாகப் மீட்;டியிருக்கிறாய்.

    “நடை பாதை ஓரங்களில் நாங்கள்
    நிர்வாணத்தை உடுத்துக் கெர்ணடு!
    ஓ…சுவரே
    உனக்குக் கூட வண்ண வண்ணச்
    சுவரொட்டி ஆடைகளா?
    ஆம்!
    மரம் வளர்க்கும் நடைபாதைகளில இன்னும்
    மனிதர்களையே வளர்த்துக் கொண்டிருக்கும்
    இந்தச் சமுதாயத்தில்
    இது இப்படித்தான்!”

    மறைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நடைபாதை கை ரிக்‌ஷாக்காரர்கள் பாடுவதாக எழுதிய ஓரு திரையிசைப்பாடலில்

    “மாடா இழுக்கிறோம் வேகமா
    நம்ம வாழ்க்கைக் கெடக்குது ரோட்டோரமா’

    என்று எழுதியிருப்பது என் நினைவுக்கு வந்தது.

    தலைவனும் தொண்டனும்

    நான்கு திரைகளின் நடுவே சிக்கிக்கொண்டிருக்கும் இளைஞர்கள தங்களையும் அறியாமல் இன்னுமொரு வலையிலும் சிக்கியிருக்கிறார்கள் .அது அரசியல் வலை. தேர்தலில் நல்லவருக்கு வாக்களிப்பது நேர்மையான அரசியல் என்ற நிலைமாறிக் கொடுக்கிற கூலிக்குக் கூவுவது அரசியல் என்ற நிலைக்குத் தமிழ்நாடு முன்னேற்றமடைந்திருக்கிறது. இந்தியாவில் ஏழை ஏழையாகவே ஆகிக் கொணடிருக்கிறான். பணக்காரன் மேலும் பணக்காரனாகவே ஆகிக் கொணடிருக்கிறான் என்பார்கள். தமிழ்நாட்டில் தலைவன் தலைவனாகவே இருக்க தொண்டன், அடிமட்டத் தொண்டனாகவே இருக்கிறான். தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்தான் அமைச்சனாக இருக்கிறான் என்பதை வாக்காளன் மறந்துவிடுகிறான். தான் கொடிபிடித்து உருவாக்கியவன்தான் தலைவனாக இருக்கிறான் என்பதைத் தொண்டன் மறந்துவிடுகிறான். தனிமையில புலம்புகிறான் அந்தப் புலம்பலை நீ இப்படிப் பதிவு செய்திருக்கிறாய்

    “கொள்கைகளைக் கோட்டைகளாய் வைத்திருந்த
    காலம் போய் இங்கே

    “கோடடைகளே கொள்கைகள் ஆனதால்
    எங்கள் தலைவர்கள்
    பொன்ராட்டையால் பொய் நூற்கிறார்கள்!
    அவர்களின் பிறந்த நாளில கூடக்
    கொக்கோகச் சிறகணிந்து
    குதூகலிக்கின்றன!
    நாங்களோ
    புழுதி ஆடை அணிந்து
    புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம்!”

    நடப்பியலைக் கவிதையில் சித்திரிக்கிறபோது கவிதைக் கட்டுமானம் செய்தித்தாள் ஆகிவிடக் கூடாது. நீ அதில் போதுமான அளவுக்குக் கவனத்தோடு இருக்கிறாய். இராட்டையே பொன்னானால் நூற்பது என்னாகும்?  சிந்திக்க வைக்கிற வரிகள்!

    கண்ணில் விளையாடும் கற்பனை!

    சொற்சேர்க்கையால் கற்பனை கொஞ்சும் கவிதைகளை நீ எழுதி வருவதை முகநூலில் நான் ரகசியமாக ரசித்து வருகிறேன். இன்று கூட நீ எழுதிய கவிதையில் ‘கண்ணிவெடிப் பூக்கள்’ என்று கவிதைச் சீர்களை நீ உருவகம் செயதிருந்ததைக் கண்டேன். ‘நெருப்பை நட்டு’ இருக்கிறாய் நீ! ‘களத்தைத் தீட்டச் சொல்லியிருக்கிறாய்!’ இந்த நூலிலும் நிலவைப் பற்றிய கற்பனைகள் என் நெஞ்சைத் தாலாட்டுகின்றன. பதினைந்து நாள் வளர்பிறை. பதினைந்து நாள் தேய்பிறை. இதுதான் செய்தி. இந்தச் செய்தியை அதாவது விண்வெளிப் பொய்யை எப்படிக கவிதையாக்குவது? நீ ஆக்கியிருக்கிறாய்!

    “இருட்டுக்கு
    வெள்ளையடிக்க
    முயன்று முயன்று
    ஒருநாள்
    நிலவே இருட்டானது

    வளர்பிறையின் வளர்ச்சியும் தேய்பிறையின் தளர்ச்சியும் உனக்கு Brush ஆகத் தெரிந்திருக்கிறது. இறுதியில் இருட்டு அமாவாசையானது. அமாவாசை இருட்டானது. இதனையொட்டிய மற்றொரு கற்பனையையும் நான் கண்டேன்

    “கைபிடி இல்லாத அந்தக்
    கருக்கரிவாளை
    கொஞ்சம்
    பழுக்கக் காய்ச்சியது யார்?”

    கவிதை ஒன்றினை மறைத்து மற்றொன்றால் அதனை உணர்த்தும். ஆனால் நீயோ காட்சியையே மறைத்துக் கவிதை செய்திருக்கிறாய்!, பிறைநிலவின் ஒளி உனக்குப் பழுக்கக் காய்rச்சியதைப் போல் இருப்பது எனக்கு வியப்பில்லை. அதனை அதாவது அதன் வடிவத்தைச் சாதாரண வெட்டரிவாளாக நோக்காது கருக்கரிவாளாக நோக்கியதும் கருக்கரிவாளுக்கான கைப்பிடியை நீ தேடியதும் எனக்கொரு கவிதை வியப்பு! அருமையான கற்பனை! இந்தக் கவிதையைப் படிப்பார் யாரும் பிறைநிலவை இனிமேல் கைப்பிடியிலலாத கருக்கரிவாளாகத்தான் பார்ப்பார் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை!

    காற்றும் விதையும் கண்ணி வெடிகளே!

    திருச்சி தியாகராசன் எழுதியுள்ள அணிந்துரையில் புரட்சிபற்றி நீ எழுதிய ஒரு நான்கு வரிப் புதுக்கவிதையை எடுத்துக்காட்டிச் சிலாகித்து இருக்கிறார். அது சரியே

    “அழுத்தி அழுததிக்
    காற்றைக் கைது செய்துவிட்டேன்!
    என் வண்டிச் சக்கரத்தில்
    ஒரு நான் திமிறிய காற்று வெடித்து
    விடுதலையானபோது
    வண்டி தாறுமாறாய்……………………………!”

    காதலுக்கு வநத தடை கூடப் புரட்சியை உருவாக்கப் போதுமானது என்பதைப் பாவேந்தர் தமது புரட்சிக்கவியில் பதிவு செய்திருக்கிறார். அறிவியலின் அரிய கண்டுபிடிப்பான சக்கரம் சுழலத் தேவையான காற்றுக்கூடப் புரட்சிக்கு வித்தாகிவிடும் என்பதை உன் கவிதையில் காட்டியிருப்பதைத் தியாகராசன் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார். பாராட்டியிருக்கிறார்.

    வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்! வேழத்தில்
    பட்டுருவும கோல் பஞ்சில் பாயாதுநெட்டிருப்புப்
    பாறைக்கு நெக்குவிடாப பாறை பசுமரத்து
    வேருக்கு நெக்குவிடும்

    என்னும் ஔவை மொழியின் அடிநாதத்தை உள்வாங்கிக்

    கண்ணீர் துயரங்களின் எச்சந்தான்!
    ஆனாலும் ஏளனப்படுத்திவிடாதீர்கள்!
    பறவைகளின் எச்சத்தால்
    சிலவேளைகளில்
    பாறைகளே வெடித்துவிடும்.!

    என்று நீ எழுதியிருக்கிறாய். சமுதாயச் சிந்தனையுடைய படைப்பாளனுக்கு முந்தைய உவமங்கள் புதிய சிந்தனைகளுக்குக் களமாகிவிடும் ;என்பதற்கு இந்தச் சிலவரிகள் எடுத்துக்காட்டு. இறுதியாக

    “அழுத்தம் கூட அதிகமானால்
    எங்கும் எதுவும் வெடிக்கலாம்!
    அழுத்தப்பட்டவன் வெடித்தெழுந்தால்
    ஆணவக்கூட்டம் துடிக்கலாம்!””

    என்று முடித்துக் காட்டியிருக்கிறாய். முழக்கம், களம், இரத்தம், குண்டு, அக்கினி, பிழம்பு, தீ என்ற சொற்கள் இருந்தால்தான் புரட்சியை ஒளிப்பதிவு செய்ய முடியும் என்னும் பாசாங்குக் கொள்கையைப் புறந்தள்ளி இனிய எளிய சொற்களால் புரட்சியை விளக்கியிருப்பது கவிதை பற்றிய தொடக்கப்பள்ளிக்கான பாடமுமாகலாம்.

    பாடாண் திணை உனக்குப் பக்குவப் பலகாரம்

    எல்லாரும் எழுதுகிறார்கள். யார் யாரோ எழுதுகிறார்கள். எல்லாவற்றைப் பற்றியும் எழுதுகிறார்கள். என்னென்னவோ எழுதுகிறார்கள். நீயும் எழுதுகிறாய். உன் எழுத்தில் என்னைக் கவர்வது சீர்களின் வரிசையா? அசைகளின் நாட்டியமா? சொற்களின் சொந்தமா? இல்லை உரசல்களா? யாப்புத் திறமையா? எளிமையின் தவமா? எதுவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எதுவோ கவர்கிறது. பெரும்பாலும் கவிதைகளிலேயே மூழ்கிக்கிடக்கிறேன். ஹைக்கூ எது என்று தெரியாமலேயே ஹைக்கூ எழுதுகிறார்கள். கொன்றைவேந்தனையும் ஆத்திசூடியையும் கூட ஹைக்கூ என்றே சொல்லிவிடுவார்கள் போலிருக்கிறது. புதுக்கவிதை அறியாமலேயே புதுக்கவிதை எழுதுகிறார்கள். இலக்கணம் படித்துவிட்டால் கவிஞன் என்று என்னைப் பலர் அச்சுறுத்துகிறார்கள். பாட்டுக்கு முன்பே ‘நான் இன்ன வாய்பாட்டில்தான் படிக்க வேண்டும்’ என்று எனக்கே அவசரச்சட்டம் போடுவதுபோல் வாய்பாட்டை எழுதிவிடுகிறார்கள். இவர்களிடமிருந்து தப்பித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.

    பல்வகை பாடுபொருள் உனக்கு வசப்பட்டாலும் பாடாண் திணை உன்னுள் பரவசப்படுகிறது என்றே தோன்றுகிறது, பெரியாரைப்பற்றி எழுதினாலும் அண்ணாவைப் பற்றி எழுதினாலும் கலைஞரைப் பற்றி எழுதினாலும் பாவேந்தரைப் பற்றி எழுதினாலும் முடியரசனைப் பற்றி எழுதினாலும் மறைமலையைப் பற்றி எழுதினாலும் பங்கமில்லா உன மனத்துள் அவர்கள் பதியம் போட்டுவிடுகிறார்கள். அதனால் பாடாண்திணை பாடுதிணையாகிவிடுகிறது.

    இந்த நூலின் இறுதியில்  காமரசரைப் பற்றிய பாடாண் திணைப் பாடலைக் கண்டேன். கண் கலங்கினேன். எப்படிப்பட்ட தலைவர்கள் வாழ்ந்த மண் இது.  என்பதை எண்ணிப்பார்க்க எனக்கு ஒரு வாய்ப்பு. இந்திய சீனா போரின் போதுதான் அதாவது 1962இல்தான் என்னுடைய 15 வயதில அவரை நேரில் பார்த்தேன். அவருடைய கையின் நீளம் பெரிதா? உடம்பின் உயரம் பெரிதா? என்று அப்போதே நான் நினைத்ததுண்டு. மகான் என்ற சொல்லுக்கு அவரைவிட்டால் ஆளில்லை. அவரை நீ பாடியிருக்கிறாய். இல்லை உனக்கும் எனக்கும் கல்விக்கண் திறந்ததால் எனக்கும் சேர்த்து நன்றிக்கடன் பாடியிருக்கிறாய்.

    “ஆகட்டும் பார்க்கலாம்நாம் மந்திரத்தில்
    ஆனைகளே கட்டுண்டு கிடந்த காலம்!
    வேகத்தில் செயலிருக்கும்! வீண்கிளம்பும்
    வெறுஞ்சொற்கள் செயலிழக்கும்! மூளை யெல்லாம்
    தாகத்தில் தவித்திருக்கும்!முன்னே றத்தான்
    தலைகூட நடந்திருக்கும்1 தாழ்வுற் றோரின்
    சோகத்தில் கரமிணைக்கும் இவரோ மக்கள்
    சொநத்தில் கைகோத்த புரட்சி வீரன்!

    பெருந்தலைவரை இப்படிப் பட்ம் பிடித்த நீ இறுதிப்பாட்;டில் இன்றைய தமிழகத்தின ;இரங்கத்தக்க நிலையை நேரடியாகச் சொல்லாமல் காமராசரை உவமமாக்கி அவர்போலத் தலைமை வேண்டும் என்கிறாய். நடக்கக் கூடிய காரியமா இது?

    சுயநலத்தைச் சுட்டெரிக்கும் தலைமை வேண்டும்!
    சுடரறிவால் இருளகற்றும் திறமை வேண்டும்!
    கயமைகளின் கையொடிக்கும் துணிவு வேண்டும்!
    கண்ணீரைத துடைத்தெறியும் கரங்கள் வேண்டும்
    அயலான் போல் நம் நாட்டில் நாமே வாழும்
    அவலத்தின் வேரறுக்கும் முயற்சி வேண்டும்!
    இயல்கின்ற வரைகாமராசர் போல
    இன்னொரு தமிழ்த்தலைமை தானே வேண்டும்!

    சமுதாயத்தைப் பற்றிய ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறாய். அங்கதத்தால் அர்ச்சனை செய்திருக்கிறாய். புரிந்து கொண்டாரும் புரிந்து கொள்ளாததுபோல் கடந்து போய்விடுவார்கள். போலி அரசியல் வாதிகளைப் புரட்டி எடுத்திருக்கிறாய்! கற்பனை அழகு பெறுகிறது உன் பாட்டில். உணர்ச்சி ஓங்காரமிடுகிறது உன்பாடடில்! ஏகாம்பரம் வசந்தராசனாகியிருக்கிறாய்! இன்றைக்கு நீ மட்டுமா வளர்நதிருக்கிறாய்? உன் கவிதைகளும் வளர்ந்திருக்கின்றன. ஒரு கருத்தை உனக்கு நினைவூட்ட வேண்டும். நீ பள்ளியில் படித்த போது செய்த அதே தவற்றை இன்னமும் ;செய்கிறாய். ‘வேர்வையை’ ‘வியர்வை’ என்று எழுதுகிறாய்! ‘கோப்பது’ என்பதை கோர்ப்பது என்று எழுதுகிறாய்!. அவ்வளவு ஏன்? இந்த நூலின் தலைப்பைச் சூரிய சிறகுகள் என்று வைத்திருக்கிறாய்! அப்படியானால் அது அல்வழியா? சூரியனாகிய சிறகுகள் என்று வருமா? சிறகுகள் என்ற பன்மையினால் சூரியனைச் சிறகாக உருவகம் செய்ய முடியாது. சூரியனுக்கான சிறகுகள். சூரியனுடைய சிறகுகள். வேற்றுமை. எனவே சூரியச் சிறகுகள் என்றே வரவேண்டும். அப்படி எழுதுவது போலித் தமிழ்வாணர்களின் பொழுதுபோக்கு. மகர ஈற்றுப் பெயர்ச்சொற்களின் பின் வேற்றுமை உருபு இணையுமானால் அத்துச் சாரியை வரவேண்டும் என்று ஒரு அன்பருக்குச் சொன்னேன். அவர் என்ன செய்தார் தெரியுமா? ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத்தாழ்ப்பாள் என்பதுபோல ‘வாழ்க வளமுடன்’ என்றே எனக்கு எழுதினார். அவரைத் திருத்துவது என் பணியன்று. அவர் வழி அவர் வழி! என் வழி இலக்கண வழி! பாட்டை எழுதியவுடன் இப்போதாவது திருப்பிப் பாரக்கிறாயா? அந்த வழக்கம் உன் பாட்டில் உன்னையுமறியாமல் அமைந்துவிடும் சிறிய பிழைகளைக் களைய உதவக்கூடும்.

    முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன் அதாவது உன்னுடைய முப்பது நான்காவது வயதில் வெளியிட்ட இந்தக் கவிதை நூலை இந்த வாரம்தான் நான் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. பதிப்பில் சில குறையிருக்கலாம். அடர்காட்டில் தடம் அமைப்பது அவ்வளவு சாதாரணமானதன்று என்பதை நான் நன்கறிவேன்!

    இறுதியாக ஒன்று நான் சொல்லவேண்டும்  நூலுக்கு அணிந்துரை என்பது யானைக்கு முகத்திரை போல. இந்த உன் கவிதை நூலுக்கு அன்பர் திருச்சி தியாகராசன் எழுதியிருக்கும் முன்னுரை சிறந்தது. தயவு தாட்சண்யம் இல்லாமல் பதிவு செய்யப்பட்டிருக்கும் அவருடைய சாடல் குறிப்பிட்டவர்களைக் கொஞ்சம் சங்கடப்படுத்தும். உண்மை எங்கே யாருக்கும் இனித்திருக்கிறது?

    உடல் நலம் பேணி வா! நல்ல நூல்கள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து நாளும் படி! உன்னைப் பாராட்டுபவரிடம் எச்சரிக்கையாய் இரு!. விருதுகளுக்கு உன்னை வீணாக்கிவிடாதே! உன்னை நீ நம்பு. நீ உன் திறமைக்குப் பெற வேண்டிய அங்கீகாரத்தை இதுவரை பெறாமல் இருப்பது யாருடைய தவறு? எனக்கு ஒன்றும் புரியவில்லை

    நாடு உன்னைத் தேடுகின்ற நாள் விரைவில்!

    இன்னும் எழுத என் இதயத்தால் வாழ்த்துகிறேன்

    கூடித் தமிழ் வளர்ப்போம்!
    மாறா அன்புடன்

    ச.சுப்பிரமணியன்

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 59

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 59

    -மேகலா இராமமூர்த்தி

    வண்டின் உருவினொடு அசோகவனம் சென்ற வீடணன், அங்கே சீதை யாதோர் அபாயமுமின்றி உயிரோடிருப்பதைக் கண்டு, அவளை இந்திரசித்தன் கொன்றதுபோல் காட்டியது மாயச்செயல் என்பதைத் தெற்றென உணர்ந்துகொண்டான். அத்தோடு, நிகும்பலை என்ற கோயிலில் இந்திரசித்தன் வேள்வி செய்துகொண்டிருக்கின்றான் என்பதனையும் அறிந்துகொண்டு தன் இருப்பிடம் திரும்பியவன், அருந்ததி அனைய கற்பினளான சீதை நலமாக உள்ளாள் என்பதையும், நிகும்பலை வேள்விசெய்து இராம இலக்குவரை ஒழிக்க இந்திரசித்தன் திட்டமிட்டுச் செயலில் இறங்கியிருப்பதையும் இராமனுக்குத் தெரிவித்தான்.   

    சீதை நலமாக உள்ளாள் எனும் செய்தியறிந்து மகிழ்ந்த இராமன், அவ்வுண்மையை அறிந்துவந்து சொன்ன வீடணனை மெய்யுறத் தழுவிக்கொண்டான். அப்போது வீடணன், ”அண்ணலே! இந்திரசித்தன் நிகும்பலை வேள்வியை வெற்றியோடு முடிப்பானாயின் அவனை யாரும் வெல்லவியலாது; வெற்றியும் அரக்கர் படைக்கே வசமாகும். ஆகவே, நான் இப்போதே இலக்குவனோடு அங்குச்சென்று அவ்வேள்வியை அழித்துவருகின்றேன்; விடை தருக!” என்றான்.

     “நன்று! அவ்வாறே செய்வீர்!” எனவுரைத்த இராமன், இலக்குவனுக்குச் சில அறிவுரைகளை வழங்கினான்.

    ”ஐய! இந்திரசித்தன் உன்மீது பிரமாத்திரத்தை விடுவானாயின் அதனை விலக்குதற்குப் பொருட்டு நீ பிரமன் கணையைச் செலுத்தலாமேயொழிய மற்று எக்காரணத்திற்காகவும், வானுலகையும் இவ்வுலகையும் ஒருசேர அழிக்கவல்ல பிரமன் கணையை அவன்மீது எய்யாதே! அவ்வாறே சிவபெருமானின் பாசுபதாத்திரம், திருமாலின் நாராயணாத்திரம் ஆகியவற்றையும் இந்திரசித்தன் ஏவினால் அவற்றின் ஆற்றலை அழித்தற்பொருட்டு நீ பயன்படுத்து; இல்லையேல் பயன்படுத்தாதே! உன் வில்லாற்றலின் துணைகொண்டே அவனை வீழ்த்து!” எனச்சொல்லித் திருமாலின் வில்லையும் கவசத்தையும் அளித்தான். இந்த வில்லும் கவசமும் அகத்தியரைக் கானத்தில் இராமன் சந்தித்தபோது அவர் அவனுக்கு அளித்தவை.

    பகைவன் எத்தகைய ஆயுதத்தையும், மாய மந்திரங்களையும் செய்து தம்மையும் தம் படையினரையும் வீழ்த்திவிடக்கூடும் என்பதை அறிந்திருந்தும்கூட உலகவுயிர்களுக்குத் துன்பம் தரத்தக்க கணைகளை நாமாக முதலில் செலுத்தக்கூடாது; தற்காப்பின் பொருட்டு மட்டுமே செலுத்தவேண்டும் என்பதைப் பல சமயங்களில் இராமன் திரும்பத் திரும்ப இலக்குவனிடம் வலியுறுத்துவதைக் காண்கையில், எத்தகைய சூழலிலும் அறமல்லாத வழியில் போரிட்டு வெற்றியை ஈட்டவிரும்பாத – புகழை நாட்டவிரும்பாத ”அறத்தின் நாயகன்” இராமன் என்பது நமக்குத் தெளிவாய்ப் புலப்படுகின்றது.  

    அண்ணனை வலம்வந்து வணங்கிய இலக்குவன், “இந்திரசித்தனின் தலையோடு மீள்வேன்!” எனச் சூளுரைத்துச் சென்றான்.

    ”தன்னால் பிரிந்துவாழ இயலாதவனாகிய தன் தம்பி இலக்குவன் விரைந்து செல்பவன், உடம்பினை விட்டுப் பிரிதலறியாத உயிரைப் போன்று மறைந்த அளவில், இராமனாகிய தான் வளர்ந்துவருகின்ற இளம்பருவத்தில் விசுவாமித்திரரின் உயர்ந்த வேள்வியைக் காத்தற்பொருட்டுப் பிரிந்துசெல்வதைக் கண்ணுற்ற தயரதனை ஒத்தான்” என்று இலக்குவனைப் பிரிந்த இராமனின் நிலையை இராமனைப் பிரிந்த தயரதனோடு ஒப்பிட்டுக் காட்டுகின்றான் கம்பன். 

    தான் பிரிகின்றிலாத தம்பி வெங்கடுப்பின் செல்வான்
    ஊன் பிரிகின்றிலாத உயிர் என மறைதலோடும்
    வான்பெரு வேள்வி காக்க வளர்கின்ற பருவநாளில்
    தான் பிரிந்து ஏகக் கண்ட தயரதன் தன்னை ஒத்தான்.
    (கம்ப: நிகும்பலை யாகப் படலம் – 8947)

    அரக்கர் சேனையும் நிகும்பலையை அடைந்த குரக்குச் சேனையும் கைகலந்தன. இலக்குவன் புரிந்த போரினால் அரக்கர்குழாம் அழிந்தது; அரக்கரின் இறந்த உடல்களும் அறுபட்ட தலைகளும் ஓமகுண்டங்களில் வீழ்ந்ததனால், ஓமத் தீ அவிந்தது; இந்திரசித்தன் செய்யத் தொடங்கிய யாகம் சிதைந்தது.

    அதனைத் தொடர்ந்து இந்திரசித்தனின் யாகம் சிதைந்தது குறித்தும், அயோத்திக்குப் போர்செய்யப் போவதாய்ச் சொன்ன அவன் பொய்யுரை குறித்தும் அனுமன் பகடிசெய்ய, அதுகேட்டுச் சினங்கொண்ட இந்திரசித்தன், ”என்னால் உயிரிழந்து மருந்துகளின் உதவியால் பிழைத்த நீவிர் மீண்டும் என் கையால் சாவது உறுதி!” என்று முழக்கமிட்டுத் தேரேறிப் போரைத் தொடங்கினான். அவனை எதிர்ந்த வானரப் படை அழிய, வீடணனின் அறிவுரைப்படி இந்திரசித்தனோடு மீண்டும் போருக்கு வந்தான் இலக்குவன். நெடுநேரப் போரில் சலிப்புற்ற இந்திரசித்தன், காற்றின்படையை ஏவ, அதே காற்றின்படை கொண்டு அதனைத் தடுத்தான் இலக்குவன்; இந்திரசித்தன் மீண்டும் பிரமாத்திரத்தை ஏவத் தன்னைக் காத்துக்கொள்ளும்பொருட்டுப் பிரமாத்திரத்தை ஏவி அதனைத் தடுத்தான் இலக்குவன். அடுத்து ஆற்றல்மிகு நாராயணாத்திரத்தை இலக்குவன்மேல் செலுத்தினான் இராவணன் சேய். தன்னைத் திருமாலாகவே எண்ணிக்கொண்டு அதனெதிர் சென்ற இலக்குவனை அக்கணை தாக்காது விலகி, அவனை வலம்செய்து கொண்டு ஆகாயம் சென்றவிந்தது.

    அடுத்து, சிவன்படையை இந்திரசித்தன் செலுத்த, அதனை அழித்தற்கு இலக்குவனும் சிவன்படையை ஏவ இந்திரசித்தனின் அத்திரத்தை அது விழுங்கியது.

    இராமன் சொன்னதுபோலவே தானாகக் கொடிய படைகள் எதனையும் இந்திரசித்தன்மீதோ அரக்கர்படைமீதோ ஏவவில்லை இலக்குவன்; தன்மீது இந்திரசித்தன் கொடியபடைகளை ஏவித் தன்னையழிக்க முற்பட்டவேளையில் மட்டும் அதே படைகளை ஏவித் தன்னையும் உலகையும் அழிவினின்று காத்தான் என்பதை அறிகின்றபோது ”இவனல்லவா தமையன்சொல் தட்டாத தம்பி!” என்று பாராட்டத் தோன்றுகின்றது.

    தன் அத்திரங்கள் பயனற்றதுபோனது இந்திரசித்தனுக்கு எரிச்சலூட்டியது. இலக்குவன் அருகில் தன் சிறியதாதை வீடணன் நிற்பதைக் கண்டபோது தன் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு நீராய்ப் போனதற்கு இவன்தானே காரணம் எனும் சீற்றமும் உடனெழுந்தது; வீடணனை வெகுண்டு நோக்கிய இந்திரசித்தன், ”குளிர்ந்த தாமரை மலர்மேல் உள்ளவனாகிய பிரமனை முதல்வனாகக் கொண்ட வேதியர்குலத்துக்கெல்லாம் தனிமுதல் தலைவனாகிய உன்னைத் தேவர்கள் வந்து வணங்குவர்; ஆனால் நீயோ இழிந்த மனிதர்களுக்கு அடிமைச்சேவகம் செய்து நின் தமையன் இராவணனின் அரசச் செல்வத்தை ஆளுதற்கு உள்ளாய்; இனி உனக்கு மானம் என்ன இருக்கின்றது? அப்பெருமை போரில் இறந்தொழியும் எங்களோடு அடங்கி ஒழிந்தது!” என்று இகழ்ந்துரைத்தான்.

    பனிமலர்த் தவிசின் மேலோன்
    பார்ப்பனக்
     குலத்துக்கு எல்லாம்
    தனிமுதல் தலைவன் ஆன
    உன்னைவந்து அமரர்
      தாழ்வார்

    மனிதருக்கு அடிமையாய் நீ
    இராவணன் செல்வம் ஆள்வாய்

    இனிஉனக்கு என்னோ மானம்
    எங்களோடு அடங்கிற்று அன்றே.
    (கம்ப: நிகும்பலை யாகப் படலம் – 9100)

    அதுகேட்ட வீடணன், ”நான் அறத்தைத் துணையாகக் கொள்வேனேயன்றி பாவத்தையும் அதனால் வரும் பழியையும் துணையாகக் கொள்ளேன். எப்போது இராவணன் பிறனில் விழையும் பிழையைச் செய்தானோ அப்போதே நான் அவனுடைய பின்னோனாய்ப் (தம்பி) பிறவாதவன் ஆனேன்” என்றான்.

    தொடர்ந்தவன்…“நான் மதுவினை மாந்தவில்லை; பொய்ம்மொழி புகலவில்லை; பிறர்பொருளை வஞ்சத்தில் கவரவில்லை; மாயச் செயலால் எவரையும் அழிக்கும் செயலை மனத்திலே குறிக்கவில்லை; என்பால் எவரும் எக்குற்றமும் கண்டிலர்; ஏன்… நீங்களெல்லாரும் என்னை நன்கு அறிந்தவர்கள்தாமே; என்பால் ஏதேனும் குற்றமுளதோ? கற்புடைய பெண்டிரிடத்து முறைதவறி நடந்தவரைவிட்டு நான் நீங்கியது பிழையான செயலோ?” என்றான் இந்திரசித்தனைப் பார்த்து.

    உண்டிலென் நறவம் பொய்ம்மை உரைத்திலென் வலியால் ஒன்றும்
    கொண்டிலென் மாய வஞ்சம் குறித்திலென் யாரும் குற்றம்
    கண்டிலர் என்பால் உண்டே நீயிரும் காண்டிர் அன்றே
    பெண்டிரின் திறம்பினாரைத் துறந்தது பிழையிற்று ஆமே. (கம்ப: நிகும்பலை யாகப் படலம் – 9106)

    அதற்குத் தக்க மறுமொழி கூறவியலாத இந்திரசித்தன், சிற்றப்பன் வீடணனைக் கொல்லும்பொருட்டுச் சிறகுடைய கருடனையொத்த அம்பொன்றை அவன் கழுத்தைநோக்கிச் செலுத்த, அதனைத் தன் அம்பால் இடைவெட்டி முறித்தான் இலக்குவன். அடுத்து வேற்படையை இந்திரசித்தன் வீடணனை நோக்கி ஏவ, அதனையும் தன் வேற்படையால் வீழ்த்தினான் இலக்குவன்.

    இந்திரசித்தனின் தேர்ப்பாகனையும் குதிரைகளையும் காற்றினும் கடுகிச்சென்று அழித்தான் வீடணன். சிதைந்த தேரில் நின்றவண்ணம் எதிர்நின்றோர் மீதெல்லாம் அம்புமழை பொழிந்துவிட்டு ஆகாயத்தில் மறைந்த இந்திரசித்தன், ஒருவருக்கும் தெரியாமல் இராவணனைச் சென்றடைந்தான்.

    இந்திரசித்தனின் தளர்ந்த தோற்றத்தைக் கண்ட இராவணன், ”கருடன் நெருங்கியதால் படம் ஒடுங்கின பாம்புபோல் தோன்றுகின்றாய்! நிகழ்ந்தது என்ன? சொல்!” என்றான்.

    நான் செய்த மாயங்கள், யாக முயற்சி அனைத்தையும் உன் தம்பிவாயிலாக அறிந்து இலக்குவன் தடுத்துவிட்டான்; மூன்று தெய்வப்படைகளை வீசினேன்; அவற்றையும் முறியடித்துவிட்டான். இதுவரை விடாது வைத்திருந்த நாராயணப்படையை ஏவினேன்; அதுவோ இலக்குவனைத் தாக்காது வலம்செய்து போயிற்று! நம் அரக்கர்குலம் செய்த பாவத்தினால் நீ கொடுமையான பகையைத் தேடிக்கொண்டாய்; இலக்குவன் நினைத்தால் அவன் ஒருவனே உலகம் மூன்றையும் அழிப்பான்” என்றான் இந்திரசித்தன் இராவணனிடம்.

    மந்திராலோசனைக் கூட்டங்களில் இராம இலக்குவரை அற்பமாய்க் கருதி இறுமாப்புடன் பேசியவனான இந்திரசித்தன், ”கெட்ட பின்பு ஞானி” என்பதுபோலப் போர்க்களத்தில் தன் வரபலம் தவபலம் தெய்வப்படைகளின் பலம் ஒன்றும் பலிக்காதது கண்டு உண்மைநிலை உணர்ந்து தன் தந்தையிடம் பேசிய பேச்சு இது.

    ”ஆதலால் தந்தையே! அச்சீதையினிடத்தில் வைத்த ஆசையை விட்டுவிடு! அவ்வாறு விடுவாயேல் அவர்கள் சீற்றம் தணிவர்; நம்மோடு போர்செய்யாது போகவும் செய்வர்; அத்தோடு நாம் செய்த தீமையையும் பொறுத்துக்கொள்வர்; உன்மேல் வைத்த அன்பினால் இதைச் சொல்லுகின்றேன்; அவர்களுக்கு அஞ்சிச் சொன்னதாக எண்ணாதே!” என்றான் உலகத்தைப் போர்களால் கலக்கிய வீரனான இந்திரசித்தன்.

    ஆதலால் அஞ்சினேன் என்று அருளலை ஆசைதான்அச்
    சீதைபால் விடுதிஆயின் அனையவர் சீற்றம் தீர்வர் 
    போதலும் புரிவர் செய்த தீமையும் பொறுப்பர் உன்மேல்
    காதலால் உரைத்தேன் என்றான் உலகுஎலாம் கலக்கிவென்றான். (இந்திரசித்து வதைப் படலம் – 9121)

    கும்பகருணன் போருக்குப் புறப்படுவதற்கு முன்பாகத் தன் அண்ணனுக்கு நல்லறிவு கொளுத்த விரும்பி, ”இராம இலக்குவரோடு பகையொழி; சீதையை அவர்களிடத்து ஒப்படை” என நன்மொழி பகன்றான்; அதனை இராவணன் ஏற்கவில்லை. இப்போது போர்கள் பலபுரிந்து இராம இலக்குவர் மனிதரினும் மேம்பட்ட ஆற்றலாளர்; அவர்களை வெல்லுதல் அரிது என்பதனைத் தன் அனுபவத்தின் வாயிலாய் உணர்ந்த இந்திரசித்தனும் ”சீதையை விடுத்தல் அரக்கர் இனத்துக்கு நலம் பயக்கும்” என இராவணனுக்கு அதே நன்மொழிகளை உரைக்கக் காண்கின்றோம். ஆனால், கும்பனின் மொழிகளை எள்ளி நகையாடியது போலவே இந்திரசித்தனின் மொழிகளையும் நகையாடிப் புறக்கணித்த இராவணன்,

    ”ஏற்கனவே போருக்குச் சென்று இறந்தோர் இப்பகையை முடிப்பர் என்றோ, பின்பு போர்செய்பவர்கள் பகைவரை வென்று மீள்வர் என்றோ, நீ எனக்குப் போரில் வெற்றிதேடித் தந்துவிடுவாய் என்றோ கருதி நான் இப்பகையைத் தேடிக்கொள்ளவில்லை. என்னையே நோக்கி (என் வலிமையை எண்ணி),  யான் இந்நெடும்பகை தேடிக் கொண்டேன். ஆகவே, உலகங்கள் அழிந்தாலும் என் கதை அழியாது நிலைபெறும் வகையிலும் அதனைத் தேவர்கள் காணுமாறும், நீர்மேல் குமிழிபோன்ற நிலையில்லாத இந்த உடம்பை விடுவதல்லால் சீதையை விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை!

    நான் போரில் வெற்றிபெற வில்லையாயினும் வெற்றிபெற்ற அந்த இராமன் பேர் நிற்குமாயின் அவனால் வெல்லப்பெற்ற யானும் வேதமிருக்கின்ற காலம் வரையில் நிலைபெற்றிருப்பேன் அன்றோ? இறத்தல் என்பது ஒரு காலத்தும் தவிர்க்கக் கூடியதோ? அஃது எவ்வுயிர்க்கும் பொதுவானது அன்றோ? இன்றிருப்பார் நாளை இறப்பார்; ஆனால் புகழுக்கு அத்தகு இறுதி உளதோ?” என்றான் இந்திரசித்தனிடம்.

    வென்றிலென் என்றபோதும் வேதம் உள்ளளவும் யானும்
    நின்றுளென் அன்றோ மற்றுஅவ் இராமன்பேர் நிற்கும்ஆயின்
    பொன்றுதல் ஒருகாலத்தும் தவிருமோ பொதுமைத்து அன்றோ
    இன்றுஉளார் நாளை மாள்வர் புகழுக்கும் இறுதிஉண்டோ. (கம்ப: இந்திரசித்து வதைப் படலம் – 9125)

    இறப்பு என்றவொன்று தவிர்க்கவொண்ணாதது; ஆனால், புகழுக்கு என்றும் இறப்பில்லை எனும் இப்பாடலின் இறுதி அடிகள் அற்புதமானவை!

    ”ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
    பொன்றாது நிற்பதொன்று இல்.”
    (குறள்: 233) என்ற குறளினையும்,

    ”மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
    தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே.”
    என்ற புறப்பாட்டு அடிகளையும் இக்கருத்தோடு நாம் இணைத்துக் காணலாம்.

    ”சரி நீ போய் ஓய்வெடு! நான் போருக்குப் புறப்படுகின்றேன்” என்று இந்திரசித்தனிடம் உரைத்த இராவணன், ”என் தேரைக் கொணர்க!” எனத் தேர்ப்பாகனிடம் கூறவே, அதுகேட்ட இந்திரசித்தன், ”வேண்டாம் எந்தையே! நானே போருக்குப் புறப்படுகின்றேன்; நான் இறந்தபிறகு என் சொற்களை நல்லனவாய் நீ காணுவாய்!” என்று சொல்லிவிட்டுத் தேரேறிப் புறப்பட்டான்.

    இலக்குவனுக்கும் இந்திரசித்தனுக்கும் மீண்டும் கடும்போர் தொடங்கியது. இந்திரசித்தனின் தேரும் அவன் கையிலிருக்கும் வில்லும் சிவபிரான் அருளால் அவனுக்குக் கிட்டியவை; அவையிருக்கும் வரை அவனைக் கொல்ல இயலாது என்பதனை வீடணன் வாயிலாய் அறிந்த இலக்குவன், தன் வில்லின் திறத்தால் அவன் தேரின் கடையாணியைக் கழற்றித் தேரின் சக்கரங்களை அச்சிலிருந்து பிரித்தான். அதுகண்டு விண்ணில் சென்று மறைந்து நின்று ஆரவாரித்தான் இந்திரசித்தன். அவன் குரல்வந்த திக்கில் அம்புகளைப் பொழிந்தான் இலக்குவன்; மேகக்கூட்டத்தில் திடீரென்று வில்லோடு இந்திரசித்தன் தோன்றவே, அம்பெய்து அவன் கையை வில்லோடு கொய்து வீழ்த்தினான் இலக்குவன். உடனே சிவனார் தந்த சூலத்தைக் கையிலேந்திக்கொண்டு இலக்குவனைக் கொல்வதற்காக நின்றான் இந்திரசித்தன்.

    ”இவனைக் கொல்லும் காலம் வந்துவிட்டது” எனவுணர்ந்த இலக்குவன், வேதங்களே தெளியத்தக்கவனும், வேதியர் வணங்கத்தக்கவனுமாகிய இறைவன் இராமன் எனும் நல்லற மூர்த்தியே என்பது உண்மையாயின் பிறைச்சந்திரனைப் போன்ற வளைந்த பல்லினையுடைய இந்த இந்திரசித்தனைக் கொல்வாயாக” என்றுகூறிப் பிறைபோன்ற வாய்கொண்ட அம்பொன்றைத் தன் ஆற்றல் முழுவதையும் பயன்படுத்தி விண்ணில் செலுத்தினான். விரைந்துசென்ற அந்த அம்பானது இந்திரசித்தனின் தலையை அறுத்துத் தள்ளியது.

    அந்தத் தலை விண்ணில் முட்டிவிட்டுத் திரும்ப வருவதற்குள் இந்திரசித்தனின் உடல் மண்ணில் வீழ்ந்தது; அதனைத் தொடர்ந்து அவன் தலையும் மண்மேல் வந்துவீழ்ந்தது; அதுகண்ட அரக்கர்சேனை அச்சத்தோடு சிதறியோடியது. இராமனைத் தேடிச்சென்ற இலக்குவன், அவன் காலடியில் இந்திரசித்தனின் தலையை வைத்தான்.

    தம்பியின் வெற்றியால் களிப்புற்ற இராமன், ”சனகன்பெற்ற பூங்கொம்பு போன்றவளான சானகி என்னை நெருங்கிவிட்டாள் என்று மனங்குளிர்ந்தேன். ”தம்பி உடையவன் பகைக்கு அஞ்சமாட்டான்” எனும் பெருமையை எனக்குத் தந்துவிட்டாய்!” என்று இலக்குவனைப் பாராட்டினான்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

     

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 22

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 22

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    ‘நீர்க்குமிழி’ கவிதை : துரை வசந்தராசன்
    மொழிபெயர்ப்பு: பொன்னுசாமி திருநாவுக்கரசு

    முன்னுரை

    ‘பிறநாட்டுச் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்பதை முன்னிறுத்தித் ‘திறமான புலமையினில் வெளிநாட்டார் அதை வணக்கம செய்தல் வேண்டும்’ என்பதைத் தொடர்ந்து சொல்வான் பாரதி. நாம் இரண்டினையும் தவறியும் செய்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்து பன்றிக்குட்டிகளாய் கவிதைக் குட்டிகளைப் போட்டுக் கொண்டிருக்கிறோம். சிங்கக் குருளையைப் போல கவிதைகள் சில முகநூலில் வருவதைக் காணமுடிகிறது. தம்பி வசந்தராசன் ஒரு சிங்கம். அன்னாருடைய ‘நீர்க்குமிழி’ என்னும் கவிதையைக் கண்ணுற்றபோது அறிஞர் பொன்னுசாமி திருநாவுக்கரசு அவர்களின ஆங்கில மொழி பெயர்ப்பையும் கவனிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.  இருகோப்பை கனிரசத்தை ஒரு கோப்பையில் அருந்தும் பேறு பெற்றேன்.

    அசலும் நகலும்

    முதனூல் வழிநூல் சார்பு நூல் என்று நூலகள் மூவகைப்படும். முதனூலின் மொழிபெயர்ப்பு வழிநூல் ஆகாது. மூலத்தின் சாரத்தை உள் வாங்கிக்கொண்டு தன்னை வெளிப்படுத்தும் தனித்தன்மையோடு செய்யப்படுவதே வழிநூலாகும். கம்பராமாயணம் இதற்குப் பொருத்தமான சான்றாகலாம். மொழிபெயர்ப்பு என்பது வழிநூல் ஆசிரியனுக்கு இடம் கொடுக்காது.  காரணம் அவ்வாறு இடம் கொடுத்தால் முதநூலில் சிறந்தது சிதைவு பெறும். சிதைந்தது சிறப்புறும். மேலும் இது முதனூல் ஆசிரியன் உரிமையில் தேவைற்ற தலையீடாகும்.  எனவே இருப்பதை அப்படியே மொழிமாற்றம் செய்வதுதான் மொழிபெயர்ப்பு எனப்படும்.

    மூலக்கலவை மொழிபெயர்ப்பு

    இருப்பதை அப்படியே பெயர்த்தெழுவதுதான் மொழிபெயர்ப்பு என்று முந்தைய பத்தியில் சொல்லப்பட்டது. அப்படிச் செய்தால் செய்திகள் பரிமாறப்படுமேயன்றிக் கவிதை மணமோ, கற்பனை வளமோ வெளிப்பட வாய்ப்பில்லை. மூலத்தின் சாரத்தை முற்றிலுமாக உள்வாங்கிக் கொண்டு, பெயர்த்தெழுதும் மொழிமரபுக்குப் பெருமை உண்டாகும் வகையில் செய்யப்படுவதுதான் மொழி பெயர்ப்பு. ராபர்ட் பிராஸ்டு என்னும் கவிஞன் எழுதிய கவிதை வரிகள் இப்படி அமைந்திருக்கின்றன.

    The woods are lovely dark and deep
    But I have promises to keep
    And miles to go before I sleep
    And miles to go before I sleep

    இந்த நான்கு வரிகளை அறிஞர் ஒருவர் எப்படி மொழி பெயர்த்திருக்கிறார் தெரியுமா?

    வளமிகு காடுகள் வாவென அழைக்கும்!
    ஆயினும் எனக்கோ ஆயிரம் கடமைகள்!
    துயில்கொளுமுன்பு முடித்திடல் வேண்டும்!
    தொலைவோ பல கல் நடந்திடல் வேண்டும்!

    என்று மொழி பெயர்த்திருக்கிறார் மூலத்தில் . காடுகளின் வளப்பம் சொல்லப்பட்டிருக்கிறதேயன்றி அவை கவிஞனை அழைப்பதாக இல்லை. ஆனால் மொழிபெயர்ப்பில் தத்துவச் சாரத்தை உள்ளடக்கித் தன் இறுதிக் காலத்தை எண்ணிய கவிஞன் பாடுவது போல் காடுகள் அழைப்பதாக மொழிபெயர்த்திருக்கிறார். ‘Promises’ என்ற பன்மையைத் தமிழ் வழக்கியல் மரபுக்கேற்ப ‘ஆயிரம் கடமைகள்’ என மொழி பெயர்த்திருக்கிறார். ஒன்பது வாசல் உடலுக்கு ஆயிரம் வாசல் இதயம் என்று கண்ண்தாசன் பாடவில்லையா? ஒரு ஜென்மமே சமாளிக்க முடியாத போது ஆயிரம் ஜென்மங்கள் என்று படம் வரவில்லையா? ஒரே நிலவை ஆயிரம் நிலவே வா என்று புலமைப்பித்தன் ;அழைக்கவில்லையா? இந்த மரபு மொழிபெயர்ப்பாளருக்குத் தெரிந்திருக்க வேண்டும். இவருக்குத் தெரிந்திருக்கிறது. And miles to go before I sleep என்னும் தொடரை மூலத்தின் கருத்து கூடுதலை வலிமை பெறுமாறு இருவகையாக மொழிபெயர்த்து எழுதிய திறனை எத்தனைப் பாராட்டினாலும் தகும். ‘நாளது சின்மையும் இளமையது அருமையும்’ என்பதுபோல முரண்பாடுகளை மொழிபெயர்க்கும் பேராற்றல் இது. இளமைக் காலம் மிகக்குறைவு. ஆனால் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசைகள் பல கோடி! அதுபோல முடிக்க வேண்டிய கடமைகளும் அதற்கான வாழ்நாளும் முரணாக உள்ளன என்பதை அந்த ஒரே தொடர் உணர்த்துவதாகக் கருதி மொழிபெயர்த்திருக்கும் அருமை!

    மொழிபெயர்ப்புச் சிக்கல்

    எவ்வளவு தான் மூலத்திற்கு ஏற்ற சொற்களைப் பிறமொழிகளில் கண்டாலும் சொற்றொடர்களையும் மரபுத் தொடர்களையும் கையாள்வது பெருஞ்சிக்கலாகும். சான்றாகக் ‘கற்பு’ என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க இயலாது. ‘பாவாடை தாவணியில் பாரத்த உருவமா? என்பதை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது? ‘தொழுது’ என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் சொல் இல்லை. தொழுது என்பதை மண்டியிடுதல் என்ற அளவிலேயே மொழி பெயர்க்க இயலும். உண்மையில் தொழுது என்பது மனத்தால் தொழுவது. அறிஞர்களோ WORKSHIP’ ‘BEND’ ஆகிய சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு மொழிபெயர்ப்பைப் பாருங்கள்.

    தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை

    No god adoring low she bends her lord
    I hen rising serves the rain falls instant at her word

    மொழி பெயர்ப்பாளர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகித்தான் இதனை மொழிபெயர்த்திருக்கிறார் தெய்வத்தைத் தொழ வேண்டியதில்லை என்பதற்கு ‘No god adoring’ என்று தெளிவாகக் கூறுகிறார். சிறப்பாகக். கணவனை ‘lord’ என்கிறார். உடனடியாக மழைபெய்யும் என்பதையும் சரியாகவே மொழி பெயர்த்திருக்கிறார். அவருக்கு எங்கே சிக்கல் வருகிறது என்றால் தொழுதெழுவாள் என்பதில்தான்! திருவள்ளுவரின் மரபு சார்ந்த சொல்லாட்சி அது. ‘Bend’ என்னும் ஆங்கிலச் சொல் முதுகோடு தொடர்புடையது. இடுப்போடு இயைபுடையது. சைக்கிள் சக்கரத்திற்குக் கோட்டம் பார்க்கலாம். வளைவுகளை (bend) எடுக்கலாம். மனத்திற்கும் அதற்கும் தொடர்பு கிடையாது. கோணல் மனம் என்று மொழி பெயர்க்க முடியாது. எனவேதான் உச்சபட்சமாக ‘bend her lord’  என்று மொழி பெயர்த்திருக்கிறார்.  உண்மையில் கொழுநன் தொழுதெழுவாள் என்பதற்கு bend her lord என்பது பொருளாகாது. ஆனால் ஆங்கிலத்தில் அவ்வளவுதான் முடியும். இது ஆங்கிலத்திற்கும் பொருந்தும். ஒரு சான்று ‘A BIRD IN THE HAND IS WORTH TWO IN THE BUSH’ என்பது ஆங்கிலப் பழமொழி. இதனைப் பொந்துக்குள் இருக்கும் இருபறவையைவிடக் கையிலிருக்கும் ஒரு பறவையே மேல் என்பது சரியான மொழிபெயர்ப்பே!  ஆனால் பண்பாட்டுக்குகந்த மொழிபெயர்ப்பாகாது. எனவே நாம் என்ன செய்கிறோம்? ‘மரத்தில் இருக்கும் பலாக்காயைவிடக் கையிலிருக்கும் களாக்காயே மேல்’ .என்று வழமை பாராட்டுகிறோம்.

    மொழிபெயர்ப்பினால் உண்டாகின்ற பயன்

    உண்மையில் மொழி பெயர்ப்பை உலக இலக்கிய அறிமுக முயற்சி எனலாம். பைபிளும் குரானும் தமிழில் வந்திருக்கவில்லையென்றால் இறைத்தூதர்களின் அறிவுரைகளை நாம் கற்றிருக்க முடியாது. இதனால் சமயத்தால் ஒன்றுபட்டு மொழியால் வேறுபட்டிருப்பவர்கள் அடைந்த, அடைகின்ற, அடையப்போகும் பயன் எண்ணிறந்தன. விவிலியத்தைக் கற்பதற்கு ஒவ்வொருவனும் இலத்தீனையோ அராமைக்கையோ கற்க வேண்டியிருந்திருக்கும். அரபி மொழி தெரிந்தாலேயொழிய குரான் என்னும் மறையை நாம் உணர்நதிருக்க இயலுமா? இவ்வளவு பெரிய பணியைச் செய்வது மொழி பெயர்ப்பே!. வேதங்கள் இலக்கியங்கள் அல்ல. இலக்கியத்தில் சிக்கல்கள் வேறுமாதிரி அமைந்து விடும். உள்ளதை உள்ளவாறே சொல்லுவது சமய இலக்கியங்கள். உள்ளதை உணர்ந்தவாறு சொல்லுவது மொழி இலக்கியங்கள்.! படைப்பாளன் உணர்ந்தவற்றை மொழிபெயர்ப்பாளன் உணரவேண்டுமானால் படைப்பாளனாக மாறினாலே ஒழிய நடவாது. படைப்பாளன் எந்தத் தளத்தில் சஞ்சாரம் செய்தானோ அந்தத் தளத்தில் சஞ்சாரம் செய்தாலேயொழிய மொழிபெயர்ப்பு வெறும் எழுத்துக்களின் வேற்று வடிவங்களாகவே முடியும். பல மொழிபெயர்ப்புக்கள் அப்படித்தான் முடிந்து போயிருக்கின்றன. விதிவிலக்காகச சிலர், தன்னலம் கருதாது, தாயமொழிக்கு ஏதாவது செய்யவேண்டுமே என்ற நல்ல எண்ணத்தில் இந்தப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அப்படிக் கொண்டவர்களில் புகழ் விரும்பாப்  பொன்னுசாமி திருநாவுக்கரசும் ஒருவர். வசந்தராசன் கவிதைகளைத் தாய்மொழியில் சுவைத்து வந்த நான் முதன் முறையாக ஆங்கில மொழிபெயர்ப்போடு படிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன்! அந்த மொழிபெயர்ப்பின் அருமை பற்றிய சில செய்திகளை இந்தக் கட்டுரை எடுத்துரைக்க முயல்கிறது.

    வாழ்க்கை போல நீர்க்குமிழி

    ‘பொருளே உவமம் செய்தனர் ஆயினும் மருளறு சிறப்பின் அஃதுவமமாகும்’ என்பது தொல்காப்பியம். உவமத்தால் பொருள் விளக்கம் செய்வது இயல்பு. மாறாகப் பொருளால் உவம விளக்கம் செய்தால் என்ன ஆகும்? பொருள் உவமப்பணியைச் செய்யும். உவமம் பொருளாகி நிற்கும். ‘நீர்க்குமிழி’ என்பது புகழ் பெற்ற திரைப்படம். அந்தப் படத்தில் சுரதா எழுதிய பாடல்கள் உண்டு. அதில் ஒன்றின் சரணம் இப்படி அமைந்திருக்கும்.

    பிறந்தோம் என்பதே முகவுரையாம்
    பேசினோம் என்பதே தாய்மொழியாம்
    மறந்தோம் என்பதே நித்திரையாம்
    மரணம் என்பதே முடிவுரையாம்

    நிலையற்ற வாழ்க்கையை நான்கே வரிகளில் சுரதா தமக்கே உரிய மொழியாளுமையுடன் எழுதியவை இவை. இதன் தாக்கத்தைப் பின்னாலே வந்த அத்தனைக் கவிஞர்களிடத்தும் காணமுடியும். ‘சட்டி சுட்டதடா கைவிட்டதடா’ என்பார் கண்ணதாசன். ‘ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே! என்பார் பட்டுக்கோட்டையார்.

    “சேவை செய்யும் தியாகி சிருங்கார போகி
    ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
    எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
    நம் வாழ்வில் காணாச் சமரசம் உலாவும் இடம்”

    என்பது மருதகாசியின் வரிகள் .பாடுபொருள் நீர்க்குமிழி ஆனதால் வசந்தராசன் வாழ்க்கையை உவமமாக்கிவிடுகிறார். இது ஒரு நுண்ணியம். இந்தப் பாடலைக் கண்ணுறும் பலரும் பாட்டின் தலைப்பு ‘வாழ்க்கை’ என்றே  கருதுவர்!. அல்ல!. பாட்;டின் தலைப்பு ‘நீர்க்குமிழி’. இயற்கையைப் பாடுகிறார் கவிஞர்;. உயர்திணைப் பண்புகளை அதன் மீது ஏற்றி ஒப்பற்ற பாடலைப் படைக்கிறார் வசந்தன்.

    “கருவில்லா நீர்முட்டை!கானல் கோடு!
    கட்டிவைத்த காற்றுப்பை! ஓடம் போகி!
    துருப்பிடிக்கா ஆசைகளின் தூரச் சொந்தம்!
    தொட்டாலே தனைமாய்க்கும் ரோசக் காரி!
    விருப்புற்று காணுகிற நேரந் தன்னில்
    விளையாட்டுக் காட்டிவைத்துவானத் தோகை
    உருள்விழிக்குள் உள்வாங்கி எடுத்துப் போகும்
    ஊர்வலமே நீர்க்குமிழி!வாழ்க்கை போல.!”

    முட்டை என்றால் கருவிருக்கும். கரு இருந்தால்தான் அது முட்டை. நீர்க்குமிழி முட்டைதான். ஆனால் அதில் கருவில்லை. கானலைக் கண்ணால் காணலாம். தொட முடியாது. பானிபூரியைப் போல் நீரின் மீது தவழ்ந்து வரும் நீர்க்குமிழி ஒரு காற்றுப்பை என்கிறார். ஓடத்தைப் போல் பயணம் செய்வதால் ஓடம் போகி என்கிறார். ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே ஒடம் போலே வாழ்ந்திடுவோமே வாழ்நாளிலே’ என்ற கண்ணதாசன் வரிகளைச் செரித்துக் கொண்டவர்களுக்கு வசந்தராசன் நீர்க்குமிழியை வாழ்க்கையாக உவமித்த நுண்ணியம் புரிவது எளிது. இந்த விருத்தத்தில் கவிதை மணம் அனைத்து வரிகளிலும் கமழ்ந்தாலும்

    துருப்பிடிக்கா ஆசைகளின் தூரச் சொந்தம்!
    தொட்டாலே தனைமாய்க்கும் ரோசக் காரி!

    என்னும் இரண்டு வரிகள் குறிப்பிடத்தக்கன. நீர்க்குமிழியை உயர்திணைப் பத்தினியாக்கிக் காற்றின் வாசம் பட்டாலே உடைந்துவிடும் ரோசக்காரி எனப்பாடியிருப்பது இலக்கணத்தில் அருமையான உருவக அணி. இலக்கியத்தில் அற்புதமான தொடர்! இந்தக் கவிதையை இப்படி மொழி பெயர்த்திருக்கிறார் திருநாவுக்கரசு.

    A water egg without an embryo ! A line mirage !
    A bonded bag of Air ! A ferrying aftermath !
    A distant kinship of un-corroded desire !
    A miffed lady who perishes by the touch itself !
    A show-off of Sky’s feather by play
    When seen at longing times !
    Only a Parade of enclosed takeaway
    In the rolling eyes,… akin to Life !

    பாட்டின் முதல் இரண்டு வரிகளின் மொழிபெயர்ப்பு இயல்பாக அமைந்திருப்பதைக் காணலாம். மூன்றாவது மற்றும் நான்காவது வரிகளை மிகக் கவனமாகக் கையாள்கிறார் திருநாவுக்கரசு. அவர் வேதியல் படித்தவர் என்பதை நினைவில் வைக்க வேண்டும். A distant kinship of un-corroded desire ! ‘சொந்தம்’ என்பதற்கு ஆங்கிலத்தில் பல சொற்கள் இருந்தாலும் ‘kinship’ என்பதையும் ‘துருப்பிடிக்காத’ என்பதற்கு மிகப் பொருத்தமாக ‘un-corroded’ என்ற சொல்லையும் கவனமாகக் கையாண்டு மூலத்தின் சாரம் சொரிகிறார்.

    விருப்புற்று காணுகிற நேரந் தன்னில்
    விளையாட்டுக் காட்டிவைத்துவானத் தோகை

    என்னும் இரண்டு வரிகளை முன்பின்னாக ஆக்கி, பாட்டின் பொருளுக்கான தெளிவைக்  கூடுதலாக்குகிறார் திருநாவுக்கரசு.

    A show-off of Sky’s feather by play
    When seen at longing times !

    வசந்தராசன் எதுகைக்காக அமைத்த கட்டுமானத்தை செறிவாக்கியிருக்கிறார் திருநாவுக்கரசு. இந்த மொழிபெயர்ப்பை மீண்டும் தமிழாக்கினால்,

    விருப்புற்று காணுகிற நேரந் தன்னில்
    உருள்விழிக்குள் உள்வாங்கி எடுத்துப் போகும்

    என்று அமைந்துவிடும். விடவே ‘காணுகிற நேரந்தன்னில்,உருள்விழிக்குள் உள்வாங்கி எடுத்துப்போகும்’ எனத் தொடர் நின்று  காணுகிற நேரத்திற்கும் எடுத்துப்போகும் நேரத்திற்குமான இடைவெளியைக் குறைப்பது உணர்க. மொழிபெயர்ப்பு,  மூலத்தைப் பின்னுக்குத் தள்ளும் இடங்களில் இதுவும் ஒன்று.

    மழை நடத்தும் மாநாடு

    இடி இடிப்பதை மழைக்கு வானம் கைதட்டி மகிழ்வதாகக் கற்பனை செய்வார் வைரமுத்து. தம்பி வசந்தராசன் வேறுவகையாகக் கற்பனை செய்கிறார். மழைநீர்ச் சொட்டு மண்ணில் ;விழுகிறது. சிறு சிறு துளைகள் உருவாகின்றன. நம் கண்ணுக்கு இதுதான் தெரியும். கவிஞன் கண்ணுக்கு மண்துளைகள் தொண்டர் படைகளாகத் தோன்றும். மழை மாநாடு நடத்துகிறதாம். மணலிலே தொண்டர்படை காத்திருக்கிறதாம். அருமை!

    மண்மீதில் மழைநடத்தும் மாநாட் டிற்கு
    மணல்பூத்த தொண்டர்படை! நீர்ப்ப ரப்பில்
    கண்பூத்த போல்காலாட் படைந டத்திக்
    காட்டுகிற ராணுவம்போல் ஆடும் காற்று!

    இந்தப் பகுதியை மொழிபெயர்ப்பாளர் எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள்!

    A devoted army.., blossomed by the sand
    For the symposium conducted,
    By the rain on the soil’s watery surface !
    A dancing wind, like an army’s infantry

    இந்தப் பகுதியிலும் அடியை மாற்றி அமைத்துக் கொள்கிறார். மணல் பூத்த தொண்டர் படை என்பதை மழைநடத்தும் மாநாட்டிற்கு மணல் வாழ்த்துரைக்க வநதிருப்பதாகக் கற்பனை செய்கிறார். தமிழில் வசந்தராசன் கற்பனை அப்படி. ஆங்கிலத்தில் இப்படி! மொழி பெயர்ப்பு வெற்றி பெறுகிற இடங்களில் இதுவும் ஒன்று. தொண்டர் படை என்பதை ‘devoted army’ என்று பெயர்த்தெழுதுகிறார். ‘மாநாட்டை’ என மோனைக்காக வசந்தராசன் எழுத, ஆய்வரங்கம் என்னும் பொருள்படும் ‘symposium’ என்னும் சொல்லை திருநாவுக்கரசு பயன்படுத்துகிறார். கைதட்டலுக்காகக் கூடுவது மாநாடு. கருத்துக்களின் சங்கமம் ஆய்வரங்கம். கலைவதற்காகவே கூடுவது மாநாடு!. கூடிக் கலைவது ஆய்வரங்கம்! நீர்க்குமிழிகளின் மாநாடு வாழ்க்கைத் தத்துவத்தை ஆராய்கிறது என்பதை மூலவரும் உணர்ந்திருக்கிறார். உற்சவ மூர்த்தியும் உணர்ந்திருக்கிறார்.

    காலாட்படை என்பதை ‘army’s infantry’  என்று ஆங்கிலத்தில் எழுதுகிறார். காலாட்படை என்பது இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சொல். ‘Infantry battalion’ தற்போது வழக்கத்தில் உள்ள சொல். கண்பூத்தது போல் காலாட்படை வந்ததை That blurs the sight by its parade !  என்று அருமையாக மொழிபெயர்க்கிறார். ‘கண்பூத்தது’ என்பது மரபுத் தொடர;. அதற்கு இணையான ’blurs the sight’ தொடரை ஆங்கிலத்தில் உருவாக்கிக் கொள்கிறார்.

    பொன்பூத்த வயலெனினும் ஒருவாள் வந்து
    பொட்டென்று வரப்புடைத்துப் போகும் நாளில்
    விண்பூத்து விழும்காலில்! வாழ்க்கை யென்னும்
    வயல்பூத்த நீர்க்குமிழி அதனைப் பேசும்!

    என்னும் நான்கு வரிகளை

    A Day when bunds are collapsed
    Suddenly by a sword
    In the fields that, even, yield the gold,
    The sky’ll bloom and fall at the feet !
    That time the water bubble,
    That bloomed in field of Life,
    Will speak !

    என்று பெயர்த்தெழுகிறார். வசந்தராசன் ‘வரப்பு’ என்றதை நாவுக்கரசர் bunds என்கிறார். விண்புத்து காலில் விழும் மழைத்துளி’ என வசந்தராசன் எழுத, அதனை, ‘The sky’ll bloom and fall at the feet!’ என்று  பெயர்த்தெழுகிறார் அரசு. ஆங்கில மரபும் மொழிபெயர்ப்பு மந்திரமும் கைவந்தவர்க்கே ஒல்லும் அரிய திறன் இது. அடுத்த வரியை இன்னும் அழகாக மொழிபெயர்க்கிறார்.  ‘இத்தகைய அரிய காட்சி நிகழும் பொழுதில் வாழ்க்கையெனும் நீர்க்குமிழி பேசும்’ என்றெழுதுகிறார் ஒரு வரியில் மூலக்கவிதை சொன்னவர். மொழிபெயர்த்தவர் என்ன சொல்கிறார் தெரியுமா?

    That time the water bubble,
    That bloomed in field of Life,
    Will speak !

    ‘வாழ்க்கைக் கழனியில் மலர்ந்த நிகழ்வுகளாகிய நீர்க்குமிழிகள் அதனைப் பேசும்’ என்று மொழிபெயர்க்கிறார். கையில் ஏந்திய கார்த்திகை தீபத்தைக் காற்றால் அணைந்துவிடாமல் பாதுகாப்பாக முற்றத்தில் இறக்கி வைக்கிற ஒரு அடியவளின் முயற்சியை நான் இந்த மொழிபெயர்ப்பில் காணுகிறேன்.

    முத்தமிட்டு வாழ்ந்தால்தான் வரலாறாகும்

    தாங்க முடியாத வலியின் காரணமாகவும் எதிர்மறை மன அழுத்தங்களின்  காரணமாகவும் நம்மிடத்திலிருந்து வெளிப்ப்டுவது முக்கல். முனகல். பெருமூச்சு!. இந்தப் பண்புகளை நீர்க்குமிழிக்கு ஏற்றி நெட்டிவரும் நெடுமூச்சின் எச்சில்’ என்கிறார் கவிஞர். பொருத்தமான  சொற்களைப் பொறுக்கி எடுத்து, ‘Spittle of lengthened groan sigh என்று எழுதுகிறார் அரசு! ‘காலம் நெய்து வரும் காற்றாடை நூல் முடிச்சு’ என்னும் நுண்ணிய வரியை The Time !  Threaded knot of weaving wind’s robe ! எனக் கவிதையிலக்கணம் மாறாமல் மொழி பெயர்க்கிறார்.

    “முட்டிவரும் நீர்காற்று இருக்கு மட்டும்
    முத்தமிட்டுக் குமிழ்நீரின்பயணம் நீளும்!

    என்னும் இரண்டு வரிகளை

    “Lengthened will be the travel
    Of the water bristle with the kisses
    Till the butting moisture air survives ! “

    என்று மொழி பெயர்த்திருக்கிறார். ‘Moisture’ என்பது பனிக்காலத்தில் சன்னலின் கண்ணாடியில் படிந்திருக்குமே சிறிய நீர்த்துளிகள் அவை போன்றவை.  வாழ்க்கைச் சின்னஞ்சிறு கண்ணிகளால் தொடுக்கப்பட்ட மாலை. ஒவ்வொரு கண்ணியிலும் வாழ்வு ஊசலாடுகிறது. அந்த ஊசலாட்டத்தை நிறுத்திக் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்தால் முழுமையான மாலையின் மணத்தை நுகர முடியும். குடிப்பவன் கூடக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தால்தானே மகிழ்ச்சியடைகிறான்! இந்த சின்னஞ்சிறு நீர்த்துளிகள் இருக்கிறவரைதான் இந்தக் கோலமும் அழகும். இந்தத் துளிகள் மிகவும் மென்மையானவை. எந்த அளவுக்கு மென்மையானவை என்பதை அடுத்த வரிகளில் சொல்லுகிறார் வசந்தராசன்!

    “தொட்டுவிட்டால் பட்டென்று உடைந்து போகும்
    தோற்றமுடி வெல்லாமே கரைந்து போகும்!”

    தொட்டுச் சுருங்கினால் கூட விரித்துக் கொள்ளலாம். ஆனால் வாழ்க்கை தொட்டவுடன் உடைந்துபோகும் நீர்க்குமிழியையொத்தது. இந்தப் பாட்டில் வாழ்க்கையை உவமமாக்கிய நுண்ணியம் இதுதான். வாழ்க்கையின் எந்தக் கூறும் சிதிலத்திற்கு ஆளாகிவிடக் கூடாது, சிறு சலசலப்பும் வாழ்க்கைப் பாதையைப் புரட்டி விடும். ஒரு சிறு ஐயம் வாழ்க்கையை நாசமாக்கிவிடும்;. ஒரு சிறு சொல் வாழ்க்கையைச் சிதறடித்துவிடும்.  ஒரு சிறிய நம்பிக்கைத் துரோகம் காலத்திற்கும் கேடு விளைவித்துவிடும். அது போல ஒரு மெல்லிய காற்றின் துகள் பட்டாலே உடைந்து போகும் பனித்துளி என்கிறார் தருமொழிக் கவிஞர். அதனைப் பெறுமொழிக் கவிஞர் எப்படி. மொழிபெயர்க்கிறார் தெரியுமா?

    “By the touch, suddenly breaks in sway !
    The Origin and End, all melt away! “

    தோற்றம் ;முடிவு என்பதற்கு ‘The Origin and End’ என்ற சொற்களை இணைத்துக் கொள்கிறார்.  கரைந்து போகும என்பதை melt away எனச் சொல்லிக் கவிதையின் அடர்த்தியைக் கூட்டுகிறார்.

    “மொட்டவிழும் நேரம்தான் சருகாய் மாற!
    முத்தமிட்டு வாழ்ந்தால்தான் வரலா றாகும்!”

    என்னும் இறுதிவரிகளும் பொருள் பொதிந்தவை. வாழ்க்கை உருவெடுக்க நாள் வேண்டும். திங்கள் வேண்டும். ஆண்டுகள் வேண்டும். ஆனால் அதனை முடித்துவைக்க நொடிகள் போதும். அந்த நொடியை மொட்டவிழும் நேரம் என அளவிடுகிறார் மூல ஆசிரியர்.

    Time to get transformed as A Dry Leaf
    Is nothing but the time
    For the bud to spread its leaves !
    History, it becomes
    Only When Life is lead with kisses !

    என்னும் மொழிபெயர்ப்பில் மரபை வெல்ல முடியாமல் மொழிபெயர்ப்பாளர் சிக்கிக் கொள்வதையும காண முடிகிறது. ‘சருகு’ என்பதற்கு ‘dry leaf’ என்னும் மொழிபெயர்ப்பு ஒருசார் பொருளை உணர்த்துகிறதே அன்றி தமிழ் மரபிலிருந்து வெகுதொலைவு சென்றுவிடுவதைக காணலாம். வாழைச்சருகு, வெற்றிலைச் சருகு என்ற அளவில் இந்த மொழி பெயர்ப்பு சரியே. இலையின் பருவங்களுக்கு அது அவ்வளவாகப பொருந்தாது. தமிழில் இலையின் பருவங்கள் அதன் வளர்ச்சி நிலைகளையும் வாழ்வு நிலைகளையும் உணரத்தும். ஆங்கிலத்தில் இயலாது. அது அந்த மொழியின் இயல்பு. அவ்வளவுதான்.  மொழிபெயர்ப்பாளரின் இயலாமை அன்று. இலைக்கு ஒரு பண்படை சேர்த்துச் சொல்ல வேண்டியது மொழிபெயர்ப்பாளரின் கடமையாக இருக்கிறது. ஆனால் இலை வேறு. சருகு வேறு. மொழிபெயர்ப்பாளர் காய்ந்த இலை என்கிறார். காய்ந்த இலை சருகாகாது.  குருத்து. அரும்பு, துளிர், தளிர், இலை, பழுப்பு, சருகு, வீ என்னும் இலைபற்றிய பருவ நிலைச் சொற்கள் தமிழில் ஏராளம். மொழி பெயர்ப்பின் தொடக்கம் முதல் (சில பிரகஸ்பதிகள் துவக்கம் என்று எழுதித் தம் புலமையை நிலைநாட்டுவார்கள்) இறுதிவரை மூல ஆசிரியனின் இதயத்தோடும் மொழியோடும் உறவாடியிருக்கிறார். ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்று வசந்தராசன் சொல்லியிருப்பாரா?

    நிறைவுரை

    மொழிபெயர்ப்புக்கு வசப்படாது வசந்தராசன் கவிதை என்றுதான் இது வரை எண்ணிக் கொண்டிருந்தேன்.. காரணம் அவர் எழுதுவதெல்லாம் மரபுக்கவிதை. மரபை அவ்வளவு எளிதில் பெயர்த்தெழுத முடியாது என்பது முன்பே சொல்லப்பட்டது. ஆனால் தம்பி திருநாவுக்கரசு உண்மையான தமிழ்த் தொண்டர் ஆதலின் இதனைக் கைகூட வைத்திருக்கிறார். செறிவு குறையாமல், மையக்கருத்துக்கு மாசு வராமல், பா நயத்திற்குப் பங்கம் வராமல், துணிச்சலோடும் பொறுப்புணர்வோடும் எல்லாவற்றுக்கும் மேலாக அர்ப்பணிப்பு உணர்வோடும் செய்திருக்கும் இந்த மொழிபெயர்ப்புப் பணிக்கு நான் இந்த வயதான காலத்தில் தலைவணங்குகிறேன். ஒரு தமிழன் சக தமிழனுக்கு எந்த வகையில் உதவ வேண்டும் என்பதற்குத் தம்பி திருநாவுக்கரசு அமெரிக்காவிலிருந்து செய்முறை விளக்கம் தந்திருக்கிறார். .அதனுடைய விளைவு பாட்டின் பெருமையில் செம்பாதி அவருக்குத் தாய்வீட்டுச் சீதனமாகப் போய்விடுகிறது. பண்பாட்டு வளர்ச்சி, சமுதாய முன்னேற்றம், இலக்கியப் பெருக்கம், அறிவியல் மேம்பாடு, அரசியல் விழிப்புணர்ச்சி என்னும் மொழி பெயர்ப்பின் பயன்களில் சிலவற்றுக்குத் தம்மாலான பேருதவியைச் செயதிருக்கிறார் அரசு. அரசுக்கும் ஆக்கியோனுக்கும் அடியேன் வணக்கமும் வாழ்த்தும்!

    Share
  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 4

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 4

    மீனாட்சி பாலகணேஷ்

    அம்பிகை மீதான இன்னும் சில பிள்ளைத்தமிழ் நூல்களைக் காணலாமா?

    4. திருக்கேதீச்சரம் கௌரிநாயகி பிள்ளைத்தமிழ்

    இந்த நூலைப் பார்க்கப் புகுமுன், கௌரிநாயகியம்மை குடிகொண்டுள்ள மிகப்பழமையான தலமாகிய திருக்கேதீச்சரத்தைப் பற்றிய தகவல்களைக் கட்டாயம் நாம் அறிந்துகொள்ள வேண்டும். திரு. ஆர் கந்தையா என்பவர் 1938ம் ஆண்டில் இத்தலத்தைப் பற்றி ஒரு நூலை வெளியிட்டுள்ளார். அதனின்றும் சில குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    சமயக்குரவர்களால் பாடப்பெற்ற திருத்தலங்கள் 274 ஆகும். இவற்றுள் இரண்டு இலங்கையின்கண் உள்ளவையாம். இலங்கையின் பழமையானதும் திசைக்கொன்றாக இருப்பதுமான நான்கு சிவன் கோவில்கள் திருக்கேதீச்சரமும், திருக்கோணேச்சரமும் முன்னேஸ்வரமும், நகுலேஸ்வரமுமாகும். திருக்கேதீச்சரம் 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது (மகாவம்சம், பிரிட்டானிகா). திருக்கேதீச்சரத்தை சமயக் குரவர்களான சுந்தரமூர்த்தி நாயனாரும், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும் பாடிப்பரவியுள்ளனர். இந்த இடம் மன்னாரை அடுத்த மாதோட்டத்தில் (மாந்தோட்டம் எனவும் கூறப்படும்) அமைந்துள்ளது. மகாதுவட்டா வெனும் மன்னன் பூசித்த இடமாதலால் மாதோட்டம் எனப் பெயர்பெற்றது என்பர். மாந்தை எனவும் கூறப்படும். பழங்காலத்தில் இவ்விடம் பெரும் துறைமுகமாக விளங்கிற்று. சேர சோழ பாண்டியர்கள் ஆண்ட காலத்திலும், இலங்கையை விசயன் எனும் மன்னன் ஆண்ட போதும் இருநாடுகளுக்குமிடையே மாதோட்டத் துறைமுகத்தின் வாயிலாகவே பெரும் வாணிகம் நடைபெற்றது  என்பர். ஈழ மன்னன் விசயனுடைய இரண்டாம் மனைவியாகிய பாண்டிய இளவரசி திருமணஞ் செய்துகொண்டு வந்திறங்கிய துறைமுகம் மாதோட்டம் என்று ஈழத்தின் வரலாற்று நூலான, ‘மகாவம்சம்,’ எனும் நூல் மாதோட்டத்தைப்பற்றிக் குறிப்பிடுகின்றது.

    ரோம, கிரேக்க நாணயங்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது, இது அக்காலத்தில் இந்நாடுகளுடன் நடந்த  வாணிகத்தை உணர்த்துகிறது.

    சுந்தரமூர்த்தி நாயனார் பாடியுள்ள, ‘வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகர்’ எனும் தேவாரத்தினாலும் இம்மாதோட்டம் பெரிய துறைமுகமாக விளங்கிற்று என அறியலாம். சம்பந்தப்பெருமானும் தமது தேவாரத்தில் மாதோட்டம் எனும் பெயரைக் குறிப்பிட்டுள்ளதனைக் காணலாம்.

    மேலும் இங்கிருந்த பாலாவி எனும் நதியினைப் பற்றி சம்பந்தர் தமது திருக்கேதீச்சரப் பதிகத்தில்  ‘மாதோட்டத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். ‘பாலாவியின் கரைமேல்’ எனும் தொடரை சுந்தரர் எடுத்தாண்டுள்ளர்.

    புராண வரலாற்றை நோக்கினால், வாயுதேவனுக்கும் ஆதிசேடனுக்கும் ஒருகாலத்தில் வாக்குவாதம் தொடங்கிப் பெரிய போராகவே மாறியது என்றும்,  ஆதிசேடன் ஒருகட்டத்தில் மேருமலைக்குள் சென்றொளிந்து கொள்ள, வாயுபகவான் அம்மலையைத்தாக்கி, அதன் மூன்று சிகரங்களையும் பெயர்த்தெடுத்துச் சென்றான் என்றும் காணலாம். அவற்றுள் ஒரு சிகரத்தைத் திருக்கேதீச்சரத்தில் வைத்துச் சென்றான் எனப்படுகிறது.

    இது கேது பூசித்த தலமாதலின் கேதீச்சரம் என்றானது. இதற்குமொரு புராணக்கதை உள்ளது. சாவா மருந்தான அமுதத்தை மோகினி வேடம்பூண்ட திருமால் தேவர்களுக்குப் பகிர்ந்தளித்தபோது,  ஒரு அசுரன் மாறுவேடம் பூண்டு, சூரிய சந்திரர்களுக்கிடையே மறைந்து நின்று தானும் ஒரு பங்கைப்பெற்று உண்டான். இதையறிந்த திருமாலின் சாபத்திற்காளான அவனது உடல் இராகு, கேது என இரு கூறுகளாயிற்று. அவ்வரக்கன் பெருந்துன்பமடைந்து இத்தலத்தில் சிவபிரானை வணங்கி அவர் அருளைப் பெற்றனன்.

    திருக்கேதீச்சரம் பழம்பெரும் தலமாகும். துவட்டா என்பவன் திருக்கேதீச்சரத்திற்கு வந்து பாலாவியிலே தீர்த்தமாடி, புத்திரப் பேற்றிற்காகச் சிவபெருமானை வழிபட்டான் என்றும், கேதீச்சரப்பெருமான் அவன்முன் தோன்றி, அத்தலம் மகாதுவட்டாபுரம் என வழங்கப்படும் எனவும், அவனுக்கு விசுவகர்மா எனும் மகன் பிறப்பான் எனவும் அருளினார். இத்தலத்தில் அகத்திய முனிவர் வழிபட்டார்.

    இது அழிந்து போனதற்குப் பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன.

    இத்தலத்தின் ஈசன் புகழை சம்பந்தர், சுந்தரர் ஆகிய இரு நாயன்மார்களும் தத்தம் பதிகங்களில் பாடிவைத்துள்ளனர்.

    இத்தலத்துப்பெருமானை வழிபட்டால் தீராத வினைகளும் நோயும் தீரும் என்பர். திருஞானசம்பந்தர்

    ‘மேருமலையை வில்லாகக் கொண்டு அரவை நாணாகப்பூட்டி, அனல் எரியை அம்பாகக் கொண்டு போரிட்டு முப்புரங்களை எரித்த சிவபிரான் விரும்பி உறையுமிடமாக அடியவர் கருதும் ஊர், கடலால் சூழப்பட்ட, வாசமிகு பொழில்கள் அணிசெய்யும் மாதோட்டத்தில் பலரும் விரும்பிப் பூசனை செய்திடும் திருக்கேதீச்சரமாகும். அப்பதியைக் கையால் தொழுதால் நம் கடுவினைகள் விலகியோடும்,’ என்கிறார்.

    விருதுகுன்ற மாமேருவில் நாணர
    வாஅனல் எரியம்பா
    ……….. …………… ……………..
    கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ்
    பொழிலணி மாதோட்டம்
    கருத நின்றகே தீச்சரங் கைதொழக்
    கடுவினை யடையாவே.

                                       (திருக்கேதீச்சரப் பதிகம்- 2ம் திருமுறை)

    சுந்தரமூர்த்தி நாயனார், ‘தனது அடியார்களின் உடற்பிணிகளை  முற்றும் ஒழித்தருள்பவனாகிய சிவபிரான், மரக்கலங்கள் (வங்கம்) மிகுதியாகவுள்ள கடலருகேயுள்ள மாதோட்டம் எனும் நல்ல நகரத்தில், தனது திருமேனியைப் பங்கிட்டுக்கொண்ட மடமங்கையுடன், பாலாவியாற்றின் கரைமீது தென்னம்சோலை சூழ்ந்த திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்,’ எனப் போற்றிப் பாடியுள்ளார்.

    அங்கத்துறு நோய்கள்ளடி
    யார்மேல் ஒழித்தருளி
    வங்கம்மலி கின்றகடல்
    மாதோட்டநன் னகரில்
    பங்கஞ்செய்த மடவாளொடு
    பாலாவியின் கரைமேல்
    தெங்கம்பொழில் சூழ்ந்ததிரு
    கேதீச்சரத் தானே. (சுந்தரர்- ஏழாம் திருமுறை)

    மேலும், மாதோட்டத்தின் சிறப்பினை, ‘மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன்னகர் புறமருவிய மாதோட்டம்,’ என சம்பந்தப் பெருமானும், ‘மாவின் கனிதூங்கும் பொழில் மாதோட்ட நன்னகர்’ என சுந்தரரும் தேவாரத்தில் பதிவு செய்துள்ளனர்.

    திருநாவுக்கரசரும் இத்தலத்துப்பெருமானை, அவர் பற்பல இடங்களிலும், திருக்கேதீச்சரத்திலும் உறைபவனாய்க்கண்டு ஏற்றுகிறார்.

    ‘பூதியணி பொன்னிறத்தர் பூண்நூலர்
    பொங்கரவர் சங்கரர் வெண்குழையோர் காதர்
    கேதீச்சர மேவினார் கேதாரத்தார்
    கெடில வடவதிகை வீரட்டத்தார்
    மாதுயரந் தீர்த்தென்னை வுய்யக்கொண்டார்
    மழபாடிய மேவிய மழுவாளனார்
    வேதிகுடியுளார் மீயச்சூரார்

    வீழி மிழலையே மேவினாரே’ என்று திருத்தாண்டகத்தில் எம்மிறைவர் உறையும் தலங்கள் அனைத்தையும் போற்றிக் குறிப்பிடுகிறார். இவற்றுள் கேதீச்சரமும் ஒன்றெனக் காணலாம்!

    மாணிக்கவாசகப்பெருமான் குயிற்பத்து, திருவார்த்தை இவற்றில் ‘இலங்கையில் மண்டோதரிக்கு அருள்செய்த தலம்’ எனக் கூறியுள்ளார். குயிற்பத்தின் பாடலில், ‘தென்னிலங்கைக்கு அரசியான வண்டோதரிக்கு, பேரருளாகிய இன்பத்தையளித்தவனும் பெருந்துறையில் உறைபவனுமாகிய பிரானை, உனது பெருமை பொருந்திய வாயால், அத்தென்பாண்டி நாட்டானை, என்னிடம் வரும்படிக் கூவுவாயாக, குயிலே’ என்கிறார்.

    இலங்கை அரசனான இராவணனின் மனையாளாகிய மண்டோதரி (இங்கு வண்டோதரி எனக் குறிப்பிடப்படுகிறாள்) வழிபட்ட இடமே கேதீச்சரமாகும்.

    ஏர்தருமேழ் உலகேத்த எவ்வுருவுந் தன்னுருவாம்
    ஆர்கலிசூழ் தென்னிலங்கை அழகமர் வண்டோதரிக்குப்
    பேரருளின் பமளித்த பெருந்துறை மேயபிரானைச்
    சீரியவா யாற்குயிலே தென்பாண்டி நாடனைக்கூவாய்.

                                                               (குயிற்பத்து, எட்டாந் திருமுறை)

                                                               0000000

    இவ்வாறெல்லாம் பெருமையும் பீடும் வாய்ந்த இத்தலத்தின்மீது ஒரு ஊஞ்சல் பிரபந்தம், திருக்கேதீச்சுரர் வண்டுவிடு தூது, திருக்கேதீச்சுர நாதர் கிள்ளைவிடு தூது, திருக்கேதீச்சுர புராணம் ஆகிய நூல்கள் உள்ளன. தமிழ்ச்சுவை நனிசொட்டச் சொட்ட பாடப்பெற்றவை இவை. திருக்கேதீச்சுர நாதர் கிள்ளைவிடு தூது எனும் நூலினை எழுதிய திரு. சி. இ. சதாசிவம் பிள்ளை என்பவரே 1976ம் ஆண்டுவாக்கில் இத்தலத்தில் வதியும் கௌரியன்னை மீது ஒருபிள்ளைத்தமிழ் நூலினையும் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்காலத்திற்கேற்ற எளிய நடையில் அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பு.

    இதனின்றும் சில செய்யுட்களைக் கண்டு மகிழலாமா?

    வழக்கமான பத்துப் பருவங்களில் பத்துப்பாடல்கள் வீதம் இயற்றப்பெற்ற இப்பிள்ளைத்தமிழ் நூலின் செங்கீரைப் பருவப்பாடலொன்று; குமரகுருபரனார் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் செங்கீரைப்பருவப் பாடலொன்றின் கருத்தை அடியொற்றி இருப்பினும், வேறு நயங்களிலமைந்து சிறப்பாக உள்ளது.

    ‘காற்று, நெருப்பு, நீர்,நிலம், ஆகாயம் எனும் ஐந்து பூதங்களையும் கொண்டு தாமரை மலரில் உறையும் கஞ்சனான பிரமன் உலகைப் படைக்க, கருமேக வண்ணனான திருமால் அதைக் காக்க, கயிலைவாசியான சிவபிரான் அழித்திடவும், அவர்களையும் அழித்தும் ஆக்கியும் விளையாடி, அழகான உருக்கொண்டும், குதலைமொழி பேசியும், எம்மிடம் அருள்கொண்டும், கேதீச்சரத்தில் குடிகொண்டும் நற்குணங்களையும் கொண்டு தெய்வமாக உள்ள அம்மையே, செங்கீரையாடுக! செங்கண்மாலின் தங்கையான கௌரி அம்மையே செங்கீரையாடியருளுக!’ என் வேண்டும் பாடல்.

    காலங்கி நீர்நிலங் காயமெனு மைம்பூத
    காரணத் தாயவுலகு
    கஞ்சன் படைக்கவுங் கருமேக வண்ணனவை
    காக்கவுங் கயிலையாளி
    மேலங் கழித்திட ………………………………
    …………………………….
    மீண்டும் அவர்தமை யாக்கிமுத் தொழிலதாம்
    விளையாட்டயர்ந்து வேண்டும்
    …………………………………………………..
    செங்கண்மா லுக்கரிய தங்கையாய் வருகௌரி
    செங்கீரை யாடியருளே.

    மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் ‘சுற்றுநெடு நேமிச் சுவர்க்கிசைய எட்டுச் சுவர்க்கால் நிறுத்தி’ எனும் செங்கீரைப்பருவப் பாடலிலும் அம்மை உலகங்களை ஆக்குவதனையும், பித்தனான சிவபிரான் நடனமாடி அதனை அழிப்பதனையும், இவ்வாறு மாறிமாறி இன்னிகழ்வு நடைபெறுவதனையும் குமரகுருபர சுவாமிகள் பாடியிருப்பார். இதுவும் கருத்தில் அதனை யொத்துள்ளது.

    சப்பாணிப்பருவப் பாடலொன்று, வெள்ளிக் கயிலை மலையைப் பெயர்க்க முயற்சித்த இலங்கேசனான இராவணனும் அவனது மனையாள் மண்டோதரியும் அன்னையை இத்தலத்தே தொழுது போற்றியதைப் பதிவு செய்கின்றது.

    வெள்ளிக் கயிலை மலையெடுத்த
    வீறார் மெய்ம்பன் இலங்கேசன்
    வேற்கண் மனைமண் டோதரியும்
    விண்ணார் அணங்கி னருமேத்தப்
    …………. …………….. …………..
    கயிலைக் கிறைவர் பங்கிலமர்
    கௌரீ தாலோ தாலேலோ.

    சொல்நயம் செறிந்தவொரு அம்மானைப்பருவப் பாடல் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றது.

    கௌரியன்னை பாலாவியாற்றின் கரையினில் அம்மானையாடுகிறாள். அவள் பெரும்புகழை வருணிக்கிறார்.

    தாமரை மலரில் இருக்கும் பெரியோனான பிரமன் வேதங்களை யோதும் ஒலி ஒருபுறம்; கழுமலம் எனப்படும் சீர்காழியிலுதித்த முத்தமிழிற் சிறந்த சம்பந்தப்பெருமான் முதலியோர் திருமுறைகள் ஓதும் ஒலி இன்னொரு புறம்; தேனோடு பாலைக் கலந்தாற்போன்று அன்பர்கள் செவி இவற்றைக் கேட்பதனால் இனிமைபெறுகின்றது. திருவீதியில் நீண்ட மதில்களும், வானளாவு கோபுரங்களும் ஓங்கி நிற்கின்றதும், வானிலுள்ள தேவர்கள் காணவியலாதவனும் வேதங்களின் முதல்வன் எனப்படும் சிவபெருமான் அமர்ந்து வரமருளுவதுமான திருக்கேதீச்சுரத்தில், அவனுடைய இடதுபாகத்தைப் பகிர்ந்துகொண்டு அன்பர்களுக்கு அருள்செய்கின்ற மலைவல்லி, சியாமளை, வராகியான அம்மையே நீ, அளவற்ற அருளினோடு பாலாவியின் கரையில் அம்மானை யாடுக. அரியும் பிரமனும் அறியவொண்ணாத அமலரான பெருமானிடம் அமரும் கௌரி, அம்மனை யாடி அருளுக! என வேண்டுவதாக அமைந்த பாடல்.

    கானாறு கஞ்சப் பொகுட்டுறு பிதாமகன்
    கழறுமறை யோதை யுடனே
    கழுமல முதித்தமுத் தமிழ்விரக ராதியோர்
    கண்டதிரு முறையோ தையும்
    …………………………………………………
    வாமபா கம்பகிர்ந் தன்பருக் கருளுமலை
    வல்லியா மளைவ ராகீ
    ஆனாத அருளினொடு பாலாவி மறுகதனில்
    அம்மானை யாடி யருளே
    அரிபிரம ரறிவரிய வமலரிட மமர்கௌரி
    யம்மானை யாடி யருளே.

    இதுபோன்று கவிநயமும் பத்திநயமும் சேர்ந்தமைந்த பலப்பல பாடல்கள். எளிய தமிழிலமைந்தவை. படித்துப்பொருளுணர்ந்து மகிழலாம்.

    (இன்னும் வளரும்)

    பார்வை நூல்கள்:

    1. திருக்கேதீச்சரம் – ஆர். கந்தையா
    2. மகாவம்சம் – இலங்கைத் தீவின் புராதன வரலாறு
    3. சம்பந்தர் தேவாரம்
    4. சுந்தரர் தேவாரம்
    5. அப்பர் தேவாரம்
    6. மாணிக்கவாசகர் திருவாசகம்
    7. திருக்கேதீச்சரம் கௌரிநாயகி பிள்ளைத்தமிழ் – சி. இ. சதாசிவம் பிள்ளை.

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 58

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 58

    -மேகலா இராமமூர்த்தி

    இந்திரசித்தனின் பிரமாத்திரத்தால் தாக்குண்டு இலக்குவன் உள்ளிட்ட அனைவரும் உயிரற்ற உடல்களாய்த் தரையில் கிடப்பதைக் கண்டு மராமரம்போல் மண்ணில் சாய்ந்தான் இராமன்.

    போர்க்கள நிகழ்வுகளைக் கண்ட இராவணனின் தூதுவர்கள் அவனிடம் விரைந்துசென்று ”நின்சேய் விட்ட நெடுஞ்சரத்தால் படைவீரர்களும், இன்னுயிரனைய இளவல் இலக்குவனும் இறந்ததைக் கண்டு பெருந்துயருற்று இராமனும் மடிந்தான்; ஆதலால் முடிந்தது உன் பகை” என்றனர்.

    …..நின்  மைந்தன்தன்  நெடுஞ் சரத்தால்
     துணைவர் எல்லாம்  நிலம்சேர
    பின்வந்தவனும் முன்மடிந்த
    பிழையை நோக்கி பெருந்துயரால்
    முன்வந்தவனும் முடிந்தான் உன்
    பகைபோய் முடிந்தது என மொழிந்தார். (
    கம்ப: பிரமாத்திரப் படலம் – 8670)

    இராமன்   போர்க்களத்தில் நினைவிழந்து  கிடந்ததனை அவன் மரணமடைந்து விட்டதாய்த் தவறாகக் கருதிய தூதுவர் இராவணனுக்கு இங்ஙனம் அறிவிக்கின்றனர். அதுகேட்டு நனிமகிழ்ந்த இராவணன், வெற்றிவிழாக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தான்.

    இராவணன் கட்டளைப்படி மருத்தன் எனும் அரக்கன் களத்தில் மாய்ந்துகிடந்த அரக்கர் சேனையைக் கடலில் எறிந்தான்; அதன் நோக்கம் அரக்கர் யாருமே களத்தில் மாயவில்லை எனும் தோற்றத்தைக் காண்போர்க்கு உண்டாக்குவதே!

    அடுத்ததாக இராம இலக்குவர் போர்க்களத்தில் மாண்டதைச் சீதைக்குக் காட்டவிரும்பிய இராவணன், அரக்க மகளிரை அழைத்து, ”சீதையைப் புட்பக விமானத்தில் ஏற்றி இராம இலக்குவரின் கதியை அவள் காணுமாறு காட்டுவீர்!” என்று ஏவ, அவர்களும் நடைபிணமாய் வாழ்ந்துவந்த நங்கை சீதையை விமானத்தில் ஏற்றிப் போர்க்களத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    தரையில் வீழ்ந்துகிடந்த தன் கணவன் உருவைக் கண்டாள் சீதை; விடத்தை உண்டதுபோல் உடலும் உள்ளமும் ஓய்ந்தாள்; குளிர்ந்த தாமரைப் பூவொன்று தழலில் வீழ்ந்ததுபோல் பெருந்துயரில் தீய்ந்தாள். இலக்குவனின் உயிரற்ற உடலைக் கண்டவள் மேலும் மனம்நொந்து அரற்றினாள். முடிவில் தானும் இராமன்மீது வீழ்ந்து இறக்க முடிவுசெய்து எழுந்தவளைத் தடுத்த திரிசடை, சீதையை ஆதரவாய்த் தழுவிக்கொண்டு,

    ”அன்னம் போன்ற அன்னையே! மாரீசனாகிய மாய மானை முன்பு விடுத்த தன்மையும், மாயா சனகனை உண்டாக்கிய தன்மையும், சென்றநாளில் இலக்குவன் முதலானோரைப் பிணித்த நாகபாசம் அழிந்துபோன தன்மையும் எண்ணிப் பார்! நன்னெறியில் செல்லாதவர்களாகிய இந்த அரக்கரின் மாயச் செயல்களை அறியாது நீ மாள நினைக்கின்றாயோ?”

    மாயமான் விடுத்தவாறும் சனகனை வகுத்தவாறும்
    போயநாள் நாகபாசம் பிணித்தது போனவாறும்
    நீஅமா நினையாய் மாள நினைதியோ நெறி இலாரால்
    ஆயமா மாயம் ஒன்றும் அறிந்திலை அன்னம் அன்னாய்!
    (கம்ப: சீதை களம்காண் படலம் – 8693)

    ”கவனித்துப் பார்! இராமனின் திருமேனியில் அம்பு ஒன்றும் அழுந்தவில்லை; இலக்குவனின் முகம் ஊழியிறுதியில் தோன்றும் சூரியனைப் போல் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றது! எனவே, அவ்விருவருக்கும் அழிவில்லை என்பதை உணர்ந்துகொள்! வீணில் வருந்தாதே!” என்று தேற்றினாள். பெற்ற தாயினும் உற்றதுணையினளாய்த் தனக்கு விளங்கிவந்த திரிசடையின் சொற்களைக் கேட்டு உள்ளம் தேறினாள் சீதை. புட்பக விமானம் மீண்டும் அசோக வனத்திற்குத் திரும்பியது.

    இராமன் ஆணைப்படி படையினர்க்கு உணவுகொண்டுவரச் சென்ற வீடணன், தான் கொணர்ந்த உணவைப் பாசறையில் வைத்துவிட்டுப் போர்க்களத்துக்குத் திரும்பினான். படையினர் களத்திலே உயிரற்று வீழ்ந்துகிடக்கும் காட்சிகண்டு மூர்ச்சையானவன், சற்றுநேரத்தில் மூர்ச்சைதெளிந்து எழுந்து இராமனைத் தேடிச்சென்றான்; இராமன் இலக்குவன்மீது மயங்கிச் சாய்ந்துகிடப்பதைக் கண்டான். அவன் மேனியில் அம்பின் வடுவில்லை என்பதனால் அவன் இறக்கவில்லை என்றுணர்ந்து, வேறு யாரும் உயிருடன் உள்ளனரா எனத் தேடிச் சென்றான். இறந்த யானைக் குவியல்களின்மேல் அனுமன் வாய்மடித்துக் கைகளை முறுக்கிய நிலையில் கிடப்பதைக் கண்ணுற்றான். புண்ணுற்ற அவன் மேனியிலிருந்த அம்புகளை மெல்லப் பிடுங்கி அவன் முகத்தில் குளிர்ந்தநீரைத் தெளித்தான்; உடன் கண்விழித்தான் அனுமன்! விழித்தவுடன் இராமனின் நிலையை வீடணனிடம் உசாவி அறிந்தான்.

    அதனைத் தொடர்ந்து, ”சாம்பன் (ஜாம்பவான் – கரடிவேந்தன்) எங்கே?” என்று வீடணனிடம் அனுமன் விசாரிக்க, ”அவன் உயிருடன் உள்ளானோ இறந்துபட்டானோ யானறியேன்” என வருத்தத்தோடு மொழிந்தான் வீடணன். ”அவனுக்கு அழிவில்லை; அவன் சிரஞ்சீவியாய் வாழும் பேறுபெற்றவன்; அவனைச் சென்று காண்போம்” என்று அனுமன் கூறவே அவனைத் தேடிச் சென்றனர் இருவரும்.

    மூப்பினாலும் புண்பட்ட வலியினாலும் சாய்ந்துகிடந்த சாம்பன், காலடி ஓசையால் வீரர் இருவர் அருகில் வருவதை அறிந்தான். அவர்கள் வீடணனும் அனுமனும் என்றறிந்து பூரித்தான். படையினரும் இராம இலக்குவரும் இருக்கும் நிலையறிந்த சாம்பன், ”மேருமலையையும் அதற்கு அப்பால் உள்ள நீலகிரி மலையையும் கடந்து சென்றால் மருந்துமலை ஒன்று உள்ளது. இறந்தவரை உயிர்பெறச் செய்யும் மருந்து ஒன்றும்; உடம்பு வெவ்வேறு பிளவுகளாய்க் கிழிந்தாலும் முன்புபோல் பொருந்தச் செய்யும் மருந்து ஒன்றும்; (உடம்பில் தைத்திருக்கும்) படைக்கலங்களை வெளிப்படுத்தும் மருந்து ஒன்றும்; பண்டைய உருவை மீட்டளிக்கும் மருந்து ஒன்றும் அங்குள்ளன எனச்சொல்லி அவற்றின் அடையாளங்களையும் எடுத்துரைத்து அவற்றை விரைவில் கொணர்வாய்” என்று அனுமனைப் பணித்தான். [இந்த மலையைத்தான் சஞ்சீவி மலை என்றழைப்பர்.]

    மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும்
          உடல்வேறு வகிர்களாகக்
    கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும்
         படைக்கலங்கள் கிளைப்பது ஒன்றும்
    மீண்டேயும் தம்உருவை அருளுவது ஓர்மெய்ம்
         மருந்தும் உளநீ வீர
    ஆண்டுஏகி கொணர்தி என அடையாளத்தொடும்
         உரைத்தான் அறிவின் மிக்கான். (கம்ப: மருத்துமலைப் படலம் – 8729)

    மாண்டாரை   உய்விக்கும் மருந்து, மிருதசஞ்சீவினீ; உடற்கிழிவைப்
    பொருந்துவிப்பது,  ’சந்தானகரணீ;   படைக்கலங்கள் கிளைப்பது, விசல்யகரணீ; மீண்டும் தம் உருவை அருளுவது சாவர்ண்ய  கரணீ என்று மூலிகைகளின் பெயர்களை அளிக்கின்றது முதனூலாகிய வான்மீகம்.

    பேருருவெடுத்து மருந்துமலையை அடைந்த அனுமன், ”இங்கிருந்துகொண்டு சாம்பன் சொன்ன அடையாளப்படி, மூலிகைகளை ஆராயத் தொடங்கினால் நேரமாகும்; எனவே, இந்த மருந்துமலையை அப்படியே பெயர்த்துச் செல்வோம்” என்று எண்ணமிட்டவனாய் அதனைப் பெயர்த்தெடுத்துக் கொண்டு வான்வழியே விரைந்துசென்றான் இலங்கைப் போர்க்களம் நோக்கி!

    இதற்கிடையில் மயக்கம் தெளிந்து எழுந்த இராமன் தன்னருகில் அமர்ந்திருந்த சாம்பனையும் வீடணனையும் கண்டு நிகழ்ந்தவற்றுக்கு வருந்திக்கொண்டிருந்தான். அப்போது சாம்பன் இராமனிடம், ”மூலிகைகளைக் கொணர வடதிசைக்கண் அனுமன் சென்றுள்ளான்; அவன் அம்மூலிகைகளைக் கொண்டுவந்ததும் களத்தில் மாண்டோரெல்லாம் மீண்டெழுவர், வருந்தற்க!” என்று இராமனுக்குத் தேறுதல் உரைத்திருந்த வேளையில், பேர்த்தெடுத்த மருந்துமலையோடு வானில் ஆர்த்தபடி அவ்விடம் வந்துசேர்ந்தான் அனுமன். அந்த மருந்துமலையின் காற்றுப்பட்டதும் களத்தில் பட்டோரெல்லாம் பட்டென்று கண்விழித்தனர். சாம்பன் இயம்பியபடி மீண்டும் மருந்துமலையை அதனையெடுத்த இடத்திலேயே வைப்பதற்குச் சென்றான் அஞ்சனை மைந்தன்.

    இடைப்பிறவரலாய் இன்னொரு செய்தி: இந்தச் சஞ்சீவி மலையையும் அதிலுள்ள மூலிகைகளைச் சாப்பிடும் நாயகனும் நாயகியும் (குப்பன் – வஞ்சி) என்ன பயன் கண்டார்கள் என்பதையும் மையமாக வைத்துப் பாவேந்தர் பாரதிதாசன் ’சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ எனும் காப்பியம் ஒன்றைப் படைத்துள்ளார். பகுத்தறிவுக் கருத்துக்களைத் தமிழ்ச்சுவையோடு தாங்கிநிற்கும் அக்காப்பியமும் படித்தற்குரிய ஒன்று!

    இலங்கையில் இராவணன் அரண்மனை விழாக்கோலம் பூண்டிருந்தது. ”அயன்படை (பிரமாத்திரம்) பயன் நல்கியது; அதனால் பகையழிந்தது” என்றெண்ணிய இராவணன், தேவலோக மாதர்களின் ஆட்டத்தில் திளைந்திருந்தான். அப்போது வானரர்களின் ஆரவாரவொலியும் இராம இலக்குவரின் வில்நாணொலியும் கேட்கவே, நிகழ்ந்தவற்றை ஒற்றர் வாயிலாய் அறிந்த இராவணன் மகிழ்ச்சியைத் தொலைத்தவனாய் ஆலோசனை மண்டபம் அடைந்தான்.

    இராவணன் ஆலோசனை மண்டபம் சென்றதறிந்த இந்திரசித்தனும் மகோதரனும் பாட்டன் மாலியவானும் ஏனைய அரசியல் சுற்றத்தாரும் அங்கே வந்தனர்; அவர்களிடம் தன் துன்பத்தை விளக்கினான் இராவணன்.

    ”களத்தில்பட்ட அரக்கர்குழாத்தைத் தீய எண்ணத்தோடு நீ கடலில் எறியச்சொல்லாமல் இருந்திருந்தால் அவர்களும் மருந்துமலையின் உதவியால் பிழைத்திருப்பர்; பிரமாத்திரமே பயனற்றுப் போனபின் இனி எந்த அத்திரம் நமக்குப் பயனளிக்கப் போகின்றது?” என்றுரைத்த பாட்டன் மாலியவானைச் சினந்து நோக்கிய இராவணன்,

    ”என் மகனென்ன? மற்றவர்கள் என்ன? இவ்வாறு அச்சங்கொண்டவர்களாய் உயிர்வாழ்க்கையை விரும்பிய நீங்கள் பிழைத்துப் போங்கள்! நாளை, ஊழிக்காலத்து வடவைத் தீயைப்போல் பொங்கி, எனது சேனையை அழித்த அம்மனிதரோடு, அக்குரங்கினையும் (அனுமன்) சேர்த்தொழிப்பேன்” என்றான் வெந்திறல் அரக்க வேந்தன் இராவணன்.

    மைந்தன்என் மற்றையோர்என் அஞ்சினிர் வாழ்வு வேட்டிர்
    உய்ந்துநீர் போமின் நாளை ஊழிவெந் தீயின் ஓங்கி
    சிந்திய மனித்தரோடு அக் குரங்கினைத் தீர்ப்பென் என்றான்
    வெந்திறல் அரக்கர் வேந்தன்…(கம்ப: மாயாசீதைப் படலம் – 8849)

    அப்போது இந்திரசித்தன் எழுந்து, ”ஐய! பிரமனின் அத்திரத்தை நான் இராமனையும் கொன்றிடுக என்று சொல்லியே விடுத்தேன்! ஆனால், அவ் அத்திரம் அவனைத் தீண்டாது மீண்டது வியப்புக்குரியது. ஆதலால், அவன் மானிடனோ வானவனோ முனிவனோ அல்லன்; வீடணன் ஆய்ந்துசொன்னதுபோல் ’யான் எனது’ எனும் செருக்கறுத்த ஒப்பற்ற ஒருவன் ஆவான் என்பது தெளிவு” என்று இராமனின் இயல்பை இராவணனுக்கு உணர்த்திய இந்திரசித்தன், ”அவ்வுண்மை ஒருபுறம் இருக்கட்டும்! நீ வருந்தாதே! நான் நிகும்பலை எனும் கோயிலை விரைவில் அடைந்து வேள்வி இயற்றினால் உன் துன்பம் தீரும்!” என்றான்.

    அதுகேட்ட இராவணன், ”நல்லது! நிகும்பலையில் வேள்வி செய்க!” என்று உடனே தன் சம்மதத்தை இந்திரசித்தனிடம் தெரிவித்தான். ”செய்யலாம்! ஆனால் உன் தம்பி வீடணன் அந்த வேள்வி பற்றிய இரகசியத்தை இராம இலக்குவரிடம் கூறி அது முற்றுப்பெறாவண்ணம் தடுத்துவிட்டால் என்ன செய்வது?” என்று இராவணனைக் கேட்டான் இந்திரசித்தன். ”அவர்கள் அதனைத் தடுக்காவண்ணம் செய்வதற்கு உபாயம் ஏதுமில்லையா?” என்று இந்திரசித்தனை இராவணன் வினவ, சற்றுச் சிந்தித்த இந்திரசித்தன்,

    ”ஓர் உபாயம் உள்ளது! சீதையைப்போல் மாய உருவம் செய்து அவளை அனுமன் முன்பு கொண்டுபோய்க் கொன்றுவிட்டு, அயோத்திக்குப் போய் அங்குளோரையும் கொல்வேன் என்று அவனிடம் சொல்லி அயோத்தி அமைந்துள்ள வடக்குத் திசைநோக்கிச் செல்வதுபோல் சென்று நிகும்பலை புகுந்து என் வேள்வியை முடிப்பேன்; நின் பகைவரை வெல்வேன்” என்றான்.

    ”நல்லது; அவ்வாறே செய்!” என்றான் இராவணன். அதைத் தொடர்ந்து மாயா சீதை உருவத்தைச் சமைக்கச் செய்த இந்திரசித்தன், அவள் கூந்தலைப் பற்றி இழுத்துக்கொண்டு கோட்டைக்கு வெளியே வந்தான். மருந்துமலையை அதன் இருப்பிடத்தில் வைத்துவிட்டு ஆரவாரித்தபடித் திரும்பிவந்துகொண்டிருந்த அனுமனின் எதிரேபோய் நின்ற அவன், ”இப்போது சீதையை நான் கொல்லப்போகிறேன்” என்று கர்ச்சிக்கவே, இந்திரசித்தன் பற்றியிருப்பது உண்மையான சீதையே என நினைத்து அச்சமடைந்த அனுமன், “பெண்கொலை புரிதல் பெரும்பழியாகும்; இப்புன்செயல் உன் புகழினைக் கெடுக்கும்” என்றான் நடுக்கத்தோடு!

    அதனைப் பொருட்படுத்தாத இந்திரசித்தன் அனுமனிடம், “இவளைக் கொன்றுவிட்டு அயோத்திமேற் செல்வேன்; இராமன் தம்பியரையும் தாயரையும் கொல்வேன்” என்றுகூறி, மாயா சீதையை அனுமன் கண்முன்னர் வாளால் வெட்டிக்கொன்று மாய்த்துவிட்டுத் தன் சேனையோடு அயோத்தி செல்வதாய்ப் போக்குக் காட்டிவிட்டு, அத்திசையிலிருந்து மாறி நிகும்பலை புகுந்தான்.

    இங்கே அனுமனோ சீதையின் மறைவைத் தாளாது கண்ணீர் பெருக்கினான்; இராமனிடம் சென்று அவன் தாள்களில் வீழ்ந்து புரண்டழுதான். செய்தியறிந்த இராமனும் இலக்குவரும் மெய்சோர்ந்து மயங்கினர். அப்போது அனுமன் இந்திரசித்தன் இராமனின் தம்பியரையும் தாயரையும் அழிக்கவேண்டி அயோத்திக்குச் சென்றிருக்கும் செய்தியைக் கூறவே உணர்வுமீண்ட இராமன், உடனே அயோத்திக்குச் சென்று அவ் அழிவைத் தடுக்க விரும்பினான். அனுமனின் தோள்களில் ஏறிக்கொண்டு இராமனும் இலக்குவனும் அயோத்திநோக்கிப் புறப்பட எத்தனித்த வேளையில் அருகிலிருந்த வீடணன், ”ஐயனே! சீதையை இந்திரசித்தன் கொன்றசெயல் மாயம் என்று ஐயுறுகின்றேன்! பத்தினியாகிய சீதையை அப்பாதகன் தீண்டிக் கொன்றிருப்பானேல் மூவுலகும் வெந்து சாம்பலாகியிருக்கும்; அத்தோடு அவன் அயோத்திக்குப் போனான் என்ற வார்த்தையும் அதியசமாயிருக்கின்றது; அவை உண்மைதானா என்பதைச் சிறிது நேரத்தில் தெரிந்துகொள்ளலாம்” என்றான்.

    பத்தினி தன்னைத் தீண்டிப் பாதகன் படுத்தபோது
    முத்திறத்து உலகும் வெந்து சாம்பராய் முடியும் அன்றே
    அத்திறம் ஆனதேனும் அயோத்திமேல் போன வார்த்தை
    சித்திரம் இதனை எல்லாம் தெரியலாம் சிறிது போழ்தின்.
    (கம்ப: மாயா சீதைப் படலம் – 8926)

    தொடர்ந்தவன், ”ஐய! நான் இமைப்பொழுதில் அசோகவனத்துக்குச் சென்று சீதையின் நிலையறிந்து வருவேன்; பின்பு என்ன செய்வது என்று முடிவுசெய்வோம்” என்றான்.

    ”நீ சொன்னது பொருத்தமான யோசனைதான் வீடணா!” என்று இராமன் அதனை ஆமோதிக்கவே, தன் உருவை வண்டுபோல் மாற்றிக்கொண்ட வீடணன், அசோகவனம் நோக்கிப் பறந்துசென்றான் சீதையைக் கண்டுவர!

    [தொடரும்]

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

    Share