பிரஞ்ச் – சுவிஸ் எல்லையில் நியூட்டன் ஆட்டம்

சி. ஜெயபாரதன், கனடா
நியூட்டன் ஆட்டம்
நியூட்டன் ஆட்டம் காணீரோ – தில்லை
ஆடல் அரசன் அரங் கேற்றும் பேணீரோ
பிரஞ்ச் – சுவிஸ் எல்லையில் வரவேற்கும்
நியூட்டன் நாட்டியம் காணீரோ
பிரெஞ்ச் -சுவிஸ் எல்லையில் – சிவனின்
பியூட்டிபுல் தாண்டவம் காணீரோ
பரதக் கலை நம் நர்த்தன மாடல் – பூர்வ
பிரபஞ்சம் தோன்றிய திருவிளை யாடல்.
நியூட்டன் ஆட்டம் ஓர் நாட்டியம் – மூலக
வாயுக்கள் பிணையும் ஒளித் தாண்டவம்
நியூட்டன் ஆட்டம் பிரபஞ்ச அரங்கேற்றம்
பியூட்டிபுல் நர்த்தனம் நிற்கா கூத்தாட்டம்.
********************
[ஆடும் அழகே அழகு -இசைப்பாடல்]
செர்ன் அணு உடைப்பு ஆய்வகம்
பிரெஞ்ச் – சுவிஸ் எல்லை
ஆடும் அழகே அழகு – தில்லையில் நீ
ஆடும் அழகே அழகு.
ஆடும் அழகே அழகு – உனைத்
தேடும் விஞ்ஞான உலகு.
ஏடும், பாரத நாடும், பாட நீ
ஆடும் அழகே அழகு, தமிழ்
நாடும்,ஏடும், பாடும், தேடும்
ஆடல் அரசே,கூடல் முரசே நீ
ஆடும் அழகே அழகு.
அணு உடைப்பு ஆய்வக வாசலில்
நாடி வரவேற்கும் பிரஞ்ச் எல்லையில் நீ
ஆடும் அழகே அழகு, அங்குனைத்
தேடும் விஞ்ஞான உலகு.
ஆதி மூலன் நீ ! அகிலம் படைத்தது நீ
அணுவுக்குள் நீ ! அகிலத்தில் நீ !
அண்ட சராசரம் அனைத்திலும் நீ
ஆடும் அழகே அழகு.
ஓங்கார நாதத்தில் ஆங்கார மோடு
தீங்கிழைத்த அசுரன் மேல் கால்வைத்து
ஆடும் அழகே அழகு – கம்பீர மாய் நீ
ஆடும் அழகே அழகு.
நெற்றிக் கண்ணன் ஒற்றைக் காலில்,
ஆடும் அழகே அழகு.
வெற்றி மாலை சூடி முற்றும் அதிர நீ
ஆடும் அழகே அழகு.
ஒரு கையில் அக்கினி ஏந்தி
மறு கையில் உடுக்க டிக்கும் கூத்தாடி நீ
ஆடும் அழகே அழகு. உ்னைப்
பாடும் சீடரை ஆசீர்வதி நீ.
ஆதி முதல்வன் நீ ! அண்டக் குயவன் நீ !
ஓதி உணரும் உன்னதம் நீ ! உத்தமன் நீ !
நீதி நெறியுடன் நிறுத்துப் பகிர்பவன் நீ !
வேத ஞானி நீ ! மேதினி செழிக்கநீ
ஆடும் அழகே அழகு, அவனியில்
நில்லாது, நிற்காது, ஆட்டம் ஆடு !
நீ நின்றால் பூமியே நின்று விடும்
பூகோளம் அழிந்து விடும், தொடர்ந்து
ஆதி சக்தி நீ ஆட வேண்டும், நாம் தினம்
ஓதி உன்னைப் பாட வேண்டும்.
ஆடும் அழகே அழகு. உனைப்
பாடும் சீடரை ஆசீர்வதி நீ.
தேடும் மாந்தரைக் காப்பாய் நீ
சாடும் மனிதரை மீட்பாய் நீ