நிலவொளியில் ஒரு குளியல் – 23

6

ஸ்ரீஜா வெங்கடேஷ்

Srija venkatesh“வீட்டைக் கட்டிப்பார் , கல்யாணம் பண்ணிப்பார்” என்ற சொலவடை ஏன் ஏற்பட்டது என்றால் இவை இரண்டுமே மிகவும் கஷ்டமான காரியங்களாக உணரப்பபட்டிருக்கின்றன. அதோடு வீட்டைக் காலிசெய்து பார் என்பதையும் சேர்த்து விடலாம். என்னைப் போல ஊர் ஊராகச் சுற்றியவர்களுக்குத் தான் தெரியும் அதன் கஷ்டம். இந்த வாரப் பத்தி, அதைப் பற்றித்தான்.

ஒரு வீட்டைக் காலி செய்வது என்ன சும்மாவா? ஏதோ இருந்தோம், காலி செய்தோம் என்று உடனே காலி செய்ய நாம் என்ன கேம்ப் குடித்தனமா நடத்துகிறோம்? சமையல் சாமான்கள், பாத்திரங்கள், குழந்தைகளின் புத்தகங்கள், நோட்டுக்கள், கணவரின் அலுவலக சம்பந்தப்பட்ட ஆவணங்கள், நாற்காலிகள், சோபாக்கள்…. இவை தவிர துணிகள் என நீண்டுகொண்டே போகும் பட்டியல்.

வீடு காலி செய்யும் போதுதான் நாம் எவ்வளவு தேவையில்லாத பொருட்களாக வாங்கிச் சேர்த்திருக்கிறோம் என்று தெரியும். எப்போதோ வாங்கிய கொசு பேட், விளையாட்டுத் துப்பாக்கி, கால் உடைந்த பிளாஸ்டிக் ஸ்டூல் எனத் தொடரும் பொருட்களை விட்டு விட்டுப் போவதா? இல்லை, எடுத்துக்கொண்டு போவதா? என்ற பட்டி மன்றம், நம் மனத்துள் நடக்கும். இதன் நடுவே சாமான்களை எடுத்துப் போக வந்த கூலி ஆட்கள் வேறு, தங்களுக்கு ஏதாவது தேறுமா என்று ஆராயத் தலைப்படுவார்கள்.

shifting houseமுதலில் சமையலறையிலிருந்து தொடங்கலாம் என்றால் அன்று முழுவதும் காபி, சாப்பாடு இவற்றுக்கு என்ன செய்ய? கடைசி நிமிடம் வரை கிண்டிக் கொண்டும் கிளறிக் கொண்டும் இருந்தால் பாத்திரங்களை எப்போது சுத்தம் செய்து, அவற்றை எப்போது வண்டியில் ஏற்றுவது? இது போன்ற கேள்விகள் ஒவ்வொரு வீடு மாறும் போதும் தோன்றும். அதனால் நாங்கள் வீடு மாற்றும் தினத்தன்று முழுவதும் வெளியில் வாங்கித்தான் சாப்பிடுவோம். அக்கம் பக்கத்தவரோடு நல்லுறவு இருப்பதால் காபி, டீ முதலியவற்றுக்குப் பஞ்சமில்லை. ஆனாலும் சாப்பாட்டுக்காக அவர்களைத் தொந்தரவு செய்ய முடியுமா?

இப்போது பொருட்களை மூட்டை கட்டும் படலத்துக்கு வருவோம். பாத்திரங்களை எளிதாக அட்டைப் பெட்டியில் போட்டு அடுக்கி விடலாம். துணிகள் இருக்கின்றவே? அப்பப்பா! தேவையில்லாதவற்றை நமக்கு உதவ வந்திருக்கும் வீட்டு வேலை செய்பவரிடம் கொடுத்து விடலாம் என்றால் அதற்கும் மனசாகாது. அதுவும் என் மகள் இருக்கிறாளே? ஏதாவது ஒரு உடை அரதப் பழசாக, அவளால் உள்ளேயே நுழைய முடியாதபடி இருப்பதை இலேசாகக் கிழிந்திருந்தால் இன்னும் விசேஷம், எடுத்துத் தள்ளி வைத்தால் “ஐயோ! அம்மா அது என்னோட ராசியான டிரெஸ். அதைப் போய் கொடுக்கறியே” என்பாள். உன்னால் அதைப் போடவே முடியாது என்றால் அழும்புக்காகவாது அந்தச் சிறிதாகப் போன உடையை போட்டுக்கொண்டு வந்து பயங்கரமாக நிற்பாள்.

அதற்காகவே அவள் வேண்டாம் என்றால் அவள் எதிரே கொடுக்காமல், அவள் வேறு வேலையாக இருக்கும் போது வேண்டாத துணிகளோடு சேர்த்துவிடுவேன். பழசைத்தான் கொடுக்க மாட்டாளே தவிர, புதிய உடை அவளுக்குப் பிடிக்காத நிறம் என்றால் கர்ணனாக மாறி விடுவாள். “அம்மா, நம்ம வீட்டுல வேலை செய்யறவங்க பொண்ணுக்கு இது கரெக்டா இருக்கும்மா. நீ வேணா இதை அவங்க கிட்ட குடுத்துடேன்” என்பாள் நான் முறைப்பதையும் லட்சியம் செய்யாது. பிறகு வேறு வழி? மூக்கால் அழுதுகொண்டே கொடுப்பேன்.

shifting houseஇவள் இப்படி என்றால், என் கணவர் இருக்கிறாரே அவர் தனி ரகம். காலாவதியான லைசன்ஸுடைய ஜெராக்ஸ் , இவர் முதன் முதலில் வேலை செய்த கம்பெனியின் சம்பள விவரம், 1999இல் ATMஇல் பணம் எடுத்த ஸ்லிப், அவருடைய ஒவ்வொரு சர்டிஃபிகேட்டுக்கும் குறைந்தது 5 ஜெராக்ஸ் காபி (நன்கு கசங்கியது), இன்னும் இப்படி பல பேப்பர்களாகச் சேர்த்து வைத்திருப்பார். இதில் இடைஞ்சல் என்னவென்றால் மிக முக்கியமான ஆவணங்களும் இந்தப் பேப்பர்க் கடலுக்குள் சங்கமித்திருக்கும். அதனால் எல்லாவற்றையும் குப்பை என்று தூக்கிப் போடவும் முடியாது. உட்கார்ந்து நிதானமாக வேண்டுவது, வேண்டாதது என்று பிரிக்க வீடு காலி செய்யும் தினத்தன்று நேரமிருக்குமா?

ஒரு வழியாக எல்லாவற்றையும் ஒரு அட்டைப் பெட்டிக்குள் அடைத்துத் திணித்து அதில் என்னென்ன இருக்கிறது என்று எழுதிவிட்டு நிமிர்ந்தால் கொலு பொம்மைகள் எங்களை இன்னும் நீ கவனிக்கவேயில்லையே என்று ஏக்கத்தோடு பார்க்கும். பெட்டிக்குள் போன புடவைகளை மீண்டும் பிரித்து ஒவ்வொரு பொம்மைக்கும் ஒரு புடவை வீதம் சுற்றி நன்கு பாதுகாப்புக் கொடுத்து, அதற்கான பெட்டியில் வைத்த பிறகும் திக் திக் என்று தான் இருக்கும். “கொலு பொம்மைகள், கவனமாகக் கையாளவும் என்று எழுதினாலும் அவை கவனமாகக் கையாளப்படுமா? என்பது சந்தேகமே.

நடுநடுவே “காலி பண்ணிப் போறீங்களா? எங்க போறீங்க? எங்களையெல்லாம் மறந்துடாதீங்க” என்ற விசாரிப்புகள். கூலி ஆட்களின் “அம்மா இந்த சாமான் வேணுமா? வேண்டாமா?” என்ற கேள்விகள், ஃபோன் தொந்தரவுகள் எல்லாவற்றையும் சமாளித்து நிமிர்வதற்குள் பெண்டு கழன்று விடும். காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததால் வயிறு வேறு கடமுடா என்று சத்தம் போடும். சரி கணவரை அனுப்பி எதையாவது வாங்கி வரச் சொல்லலாம் என்றால் அவர் தன் ஃபோனில் டிரையல் பாலன்ஸ், புரொஜக்க்ஷன் என்று ஏதாவது தீவிரமாகப் பேசிக்கொண்டிருப்பார் (?).

ஒரு வழியாக சாப்பாடு வந்து, சாப்பிடலாம் என்று நினைக்கும் போது கூலி ஆட்கள் “எல்லா வேலையும் முடிச்சிட்டு ஒரேயடியா போயிடுறோம்மா” என்று நம்மை ஒரேயடியாக அனுப்பி வைக்கப் பார்ப்பார்கள். எல்லாச் சாமான்களையும் ஏறக் கட்டி, அந்தக் குப்பைகளின் நடுவே சாப்பிட எப்படியும் மணி நான்காகிவிடும். இத்தனை சிரமங்களும் குடி போகும் புது வீட்டிற்கும் பொருந்தும். வீடு ஒரு நிலைக்கு வர எப்படியும் நாலு நாட்களாவது ஆகும். இதில் எவ்வளவு பொருட்கள் உடைந்திருக்கின்றன, சேதமடந்திருக்கின்றன என்ற கணக்கு வேறு பார்க்க வேண்டும்.

shifting houseஉடலும் மனமும் களைத்துப் போய் இருக்கும். வீடு மாறுவது என்பது இனி இந்த ஜென்மத்தில் இல்லை என்று முடிவு செய்வோம். ஆனால் அது நம் கையிலா இருக்கிறது? வாடகை பேசும் போது இருக்கும் வீட்டுச் சொந்தக்காரரின் இனிய முகம், நாம் குடி வந்த அடுத்த நிமிடமே மாறி விடும். வீட்டின் சொந்தக்காரர்களோடு சேர்ந்து குடியிருப்பவர்கள் நிலை, ஐயோ பாவம்தான். சொந்த வீடு கட்டிக் குடி போகும் பாக்கியம் உள்ளவர்களைப் பற்றிக் கவலையில்லை. வீட்டு வாடகை, வீட்டுக்காரரின் தலையீடு இவை எதுவும் இருக்காது. மாதா மாதம் ஒரு பெரும் பணம் வங்கிக் கடன் கட்டுவதற்குச் செலவாகும் அந்த ஒரு கஷ்டம் தான்.

ஆனால் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். ஒரு காலண்டர் மாட்ட வேண்டுமானால் கூட வீட்டின் சொந்தக்காரரைக் கேட்டு, அவர் சம்மதித்தால்தான் மாட்ட முடியும். ஏன் சுவரில் லேசாக அழுக்காகிருக்கிறது? ஏன் தூசியும் தும்புமாக இருக்கிறது? ஏன் இரவு நேரங்களில் லேட்டாக வருகிறீர்கள்? என்று அவர் நம் வீட்டுக்குள் வந்து, நம்மைப் பார்த்துக் கேட்கலாம். சொந்த வீடு, அவருக்கு அந்த உரிமையை வழங்கியிருக்கிறது.

இதில் மிக முக்கியமான பிரச்சனை என்னவென்றால், ரேஷன் கார்டு மாற்றுவது. இப்போது தேர்தல் சமயமாதலால் வாக்காளர் பட்டியலில் நம் பெயர் இடம் பெற கடும் முயற்சி செய்ய வேண்டும். ரேஷன் அலுவலகத்தில் நாம் அந்த முகவரியில் தான் குடியிருக்கிறோம் என்பதற்கு ஆதாரம் கேட்பார்கள். வீட்டுச் சொந்தக்காரர் கொடுத்த வாடகை ரசீது இருந்தால் போதும் என்பார்கள். அவர்களா ரசீது கொடுப்பார்கள்? ரேஷன் கார்டு வேண்டுமென்றால் வாக்காளர் அடையாள அட்டை வேண்டும். வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டுமென்றால் ரேஷன் கார்டு வேண்டும். இது ஒரு மாயச் சுழல். இதிலிருந்து மீள ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. கேஸ் சிலிண்டர் ரசீது இருந்து, (அதுவும் உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) அது உங்கள் பெயர் தான் என்பதற்கான ஆதாரங்களும் உங்களிடம் இருந்தால் ஒரு வேளை ரேஷன் கார்டு கிடைக்கலாம்.

அடிப்படைத் தேவைகளை வழங்குவதில் ஏன் இவ்வளவு சிக்கல்கள்? இத்தனை கெடுபிடிகள் இல்லையென்றால் போலிகள் வந்து விடும் என்று அவர்கள் காரணம் கூறலாம். ஆனால் முறையான ஆதாரங்கள் இருந்தும் ரேஷன் கார்டு கிடைக்க நமக்கு கால தாமதம் ஆகிறது. ஆனால் போலி கார்டுகள் வைத்திருப்பவர்கள் எப்படி அவற்றை அடைந்திருப்பார்கள்? இதற்கும் ஏதேனும் ஏஜெண்டுகள் உண்டா? இது போன்ற விவரங்கள் நம்மைப் போல சாமானியர்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.

தொந்தரவு கொடுக்காத வீட்டுச் சொந்தக்காரர்கள், மக்களின் அடிப்படைத் தேவைகள் எளிதாகக் கிடைக்கும் ஒரு இந்தியா இவை உருவாகும் கனவுகளோடு நிலவொளியில் ஒரு குளியல்.

(மேலும் நனைவோம்…….

==============================

படங்களுக்கு நன்றி: http://www.preetihomepackers.com, http://mademoiselle-poirot.blogspot.com, http://quebec.inetgiant.ca

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “நிலவொளியில் ஒரு குளியல் – 23

  1. மிகவும் எளிமையான நடையில் வீட்டைக் காலி செய்யும் பிரச்சினைகளை நன்றாக விளக்கி உள்ளீர்கள். வாழ்த்துகள்.

  2. Very funny article madam. Vacating the old house and moving into a new house though difficult, are part and parcel of life. Nalla ezuthiyulleergal.

  3. கட்டுரை மிகவும் அருமை. தாங்கள் மிகவும் அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள். பழையன கழிதல் புதியன புகுதல். என் அப்பவும் ஓர் அரசு ஓய்வு ஊழியர். வாடகை வீடு தான். வீட்டைக் காலி செய்யும் கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியம். எளிமையான நடை.

    நன்றி

    திருச்சி ஸ்ரீதரன்

  4. Really superb madam. I enjoyed this article very much. I have recollected my childhood days as we had a lot of problem when we shifted our house from one house to another at Srirangam. Some items, neither we can destroy nor we can preserve it.

    Really good.

    Thank you

    Saradha Sridharan

  5. திருமதி. ஸ்ரீஜா வெங்கடேஷ் என்னைப் பற்றி மறைமுகமாக எழுதியிருக்கிறார்! ஒவ்வாரு டிரான்ஸ்ஃபர் வரும்போதும், என் மனைவி திண்டாடுவாள். என் சதகுப்பையில், எல்லாமே கலந்து கட்டி; பல பட்டறை. ரேஷன் கார்டும், காலாவதியான வருமானவரி ஆவணம், மூத்த பையனின் பிராக்ரெஸ் ரிப்போர்ட் (இருபது வருடம் முன்னால்) எல்லாம் ஒரே சங்கமம்.
    Enjoy!

  6. Painstaking article once again. U forgot to write about various uninvited guests like rats, cockroaches, bugs etc at your shelves which would have been silently staying in your house along with you all those while.. 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *