அஞ்சலகங்களில் மின் கட்டணம் செலுத்தலாம்
தமிழ்நாடு முழுவதும் 2011 ஏப்ரல் 6 முதல் அனைத்து அஞ்சலகங்களிலும் மின்சார கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே குறிப்பட்ட சில அஞ்சலகங்களில் மட்டுமே மின்கட்டணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டிருந்தது. தற்போது இது விரிவுபடுத்தப்பட்டு அனைத்து அஞ்சலகங்களிலும் மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அஞ்சல் வட்டம், தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டுள்ளது. அதன்படி, குறைந்த அழுத்த மின்சார நுகர்வோர் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் தங்கள் மின் கட்டணங்களைச் செலுத்தும் வசதி நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது சென்னை நகரம் முழுவதும் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாநகரங்களையும் உள்ளடக்கிய 192 அஞ்சல் அலுவலகங்களில் இந்த வசதி உள்ளது.
இந்த வசதியானது, மேலும் விரிவுபடுத்தப்படுகிறது. அதன்படி ஏப்ரல் 6ஆம் தேதியிலியிருந்து அனைத்துக் கணினிமய அஞ்சல் அலுவலகங்களிலும் மின் கட்டணத்தைச் செலுத்தலாம். இந்த வசதிப்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நுகர்வார், தேர்வு செய்யப்பட்ட எந்தவொரு அஞ்சல் அலுவலகத்தையும் அணுகி, தங்கள் மின் கட்டண அட்டையைக் காண்பித்து, மின்கட்டணத்தைச் செலுத்தி, ரசீது பெற்றுக்கொள்ளலாம். இந்த வசதிக்கு ஒவ்வொரு மின்கட்டண பில்லுக்கும் ரூ.5ஐச் சேவைக் கட்டணமாக அஞ்சல் துறைக்குச் செலுத்த வேண்டும். இந்த வசதியுள்ள அஞ்சலகங்கள் குறித்த விவரங்களை http://tamilnadupost.nic.in இணையதளத்தில் காணலாம்.
இதனைத் தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
=============================================
தகவல்: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை
ஒரு காலத்தில் தபாலாஃபீஸில் க்வினைன் என்ற சின்கோணா மூலிகை மருந்து விற்றுக்கொண்டிருந்தார்கள். மலேரியாவுக்கு மருந்து. இதை ஒற்றைச் சாளர வசதி எனலாம். தபாலாஃபீஸ் எங்கெங்கும் இருப்பதால், மக்களுக்கு வசதி. ரூ.5/- கொடுக்கலாம்.