இந்த வார வல்லமையாளர்
வெ.திவாகர்
மனிதனும் இயற்கையும் ஒன்று. நம் உடல் பஞ்ச பூதத்தினால் ஆனது. மண், ஆகாயம், நீர், காற்று, அனல் இவற்றுடன் சம்பந்தப்படுத்தியே மனிதன் படைக்கப்பட்டான். அதனால் மனிதன் இயற்கையோடு ஒன்றிச் செயல்பட வேண்டும் என்பதற்காகப் படைக்கப்பட்டவன்.. ஆனால் மனிதனே மனிதனை அதாவது இயற்கையை அழிக்கலாமா.. ஆண்டாண்டுக் காலமாக இந்த விழிப்புணர்ச்சி இல்லாமல் இயற்கையை அழிப்பது இந்த மனித குலம்தான்.
மனிதர்களின் சின்னச் சின்ன சுகங்களுக்காக இயற்கையை அதிகம் சீண்டி விளையாடியதால்தான் சமீபத்திய கேதார்நாத், பத்ரிநாத் இழப்புகள் என்கிறார்கள் சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள். இயற்கைச் சீற்றங்களினால் மனித அழிவு ஏற்படும்போதும் அந்த அழிவில் நமக்கு நெருங்கியவர்களில் சிலர் மறையும்போதும் ஆற்றாத் துயருணர்ச்சி உண்டாகிறதுதான். ஆனாலும் ஒவ்வொரு முறையும் மனித வசதி மேம்பாடு என்கிற பெயரில் நாம் இயற்கைக்கு செய்யும் கொடுமைகளை மட்டும் மிக வசதியாக மறந்துவிடுகின்றோம்.
இயந்திரமயமான நிகழ்கால வாழ்க்கையில் நமக்காக நாம் முதல் பலி கொடுப்பது இயற்கையை அழிக்கும்போதுதான். அதே சமயத்தில் இயற்கையும் நமக்குப் போட்டியாக எத்தனையோ பேரழிவுகளை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. ஆனால் அவைகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்வதில்லை. மேலும் தவறு செய்கிறோம். பாதுகாப்புக்காகவும், நீர்வசதிக்காகவும் இயற்கை கொடுத்திருந்த மலைகள் கிரானைட் கல் ஏற்றுமதியில் இருந்த இடம் தெரியாமல் கரைக்கப்பட்டு வருகின்றன. சுத்தமான குடிநீரை அள்ளித் தரும் நதி நீரில் ரசாயனக் கழிவுகள் தெரிந்தே கலக்கப்பட்டு, மாசுபடுத்தப்பட்டு வருகின்றன. இன்று சுற்றுச் சூழல் காற்று கெடுக்கப்பட்டு வருவதை உலகம் முழுவதும் பார்த்துக்கொண்டு வருகிறோம். இதனைத் தடுக்க எத்தனையோ கூப்பாடுகள் போட்டாலும் சுற்றுச் சுழல் மாசுபடுத்தப்படுவது நிறுத்தப்படுவதில்லைதான். வான்வெளியையும் விட்டு விடுவதில்லை நாம். இயற்கையைக் கெடுத்து அதனால் நாமும் நம்மைக் கெடுத்துக்கொண்டு வாழும் இந்த வாழ்க்கையும் ஒரு வாழ்வா என்று மனிதன் எப்போதுதான் நினைக்கத்தொடங்குவானோ..
இயற்கைதனை அழிப்போர்
இறைவனின் எதிரியென்போம்
படைத்தவன் நமக்களித்த
வாழ்வுதனைத் தட்டிப் பறிக்கும்
அரக்கனை அழிப்போம்
பணத்துக்குச் சோரம் போகும்
கொடியோரின் கருவறுப்போம்
தலைமுறையும் துளிர்க்காமல்
காவல் காப்போம்!
செயற்கைப் பேரிடர்
நந்தவனப் பயிர்களும் உயிர்களும்
அற்ப ஆயுளை முத்தமிடல்
கொடுமையின் உச்சம்!
இறைவனின் அருட்கொடை
மனிதன் இயற்கையை
நேசிப்பதும் சுவாசிப்பதும்
காப்பதும் வாழ்த்துவதும்
உரிமையும் பெற்றவன்!
இயற்கையைக் காக்க
உள்ளத்தையும் உயிரையும்
அள்ளித் தருவோம் மடமையில்
எதிர்ப்போரைக் கிள்ளி எறிவோம்
அடுத்த தலைமுறைக்கு இயற்கையை
விட்டுவைப்போம் செழிப்பாய்
அதுவரையில் உயிராய்க்
காத்து நிற்போம்!
மலேசியாவைச் சேர்ந்த வே. ம. அருச்சுணனின் கவிதை இது. இன்னும் இது போல எத்தனை ஆயிரம் கவிதைகள் விழிப்புணர்வு தந்தால் மனிதன் விழித்துக் கொள்வானோ.. இந்த வாரத்தில் வல்லமை இதழில் இக்கவிதையை இயற்றிய திரு அருச்சுனன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து வாழ்த்துகின்றோம்.
கடைசி பாரா: திரு செண்பக ஜகதீசனின் கவிதை
எல்லாம்
ஒன்றாய்ச் செய்யும் மனிதன்,
நன்றாய் இல்லையே குணத்தில்
ஒன்றியே உள்ளானே பணத்தில்…!
வல்லமையாளர் வே. ம. அருச்சுணன், திரு செண்பக ஜகதீசன் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
எப்போதும் போல், வல்லமையாளருக்கான வாழ்த்தை முதலாவதாக வந்து தெரிவித்துக் கொண்ட பழமைபேசிக்கும் வாழ்த்துகள்!!
கதை, கட்டுரை, கவிதை என எந்த வகைப் படைப்பை வழங்கினாலும் வே.ம.அருச்சுணன் அறிவுறுத்தும் அடிப்படைக் கருத்துக்கள் சமுதாய விழிப்புணர்ச்சியினை நோக்கமாகவே கொண்டு அமைந்து வருகிறது.
இத்தகு ஒருவரை அடையாளம் கண்டு அவரை ஊக்குவிக்கும் வகையில் வல்லமையாளராக அறிவித்த வல்லமை இதழ் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
வல்லமையாளர் வே. ம. அருச்சுணனுக்கும் வாழ்த்துக்கள்.
கடைசி பத்தி சிறப்பு செண்பக ஜகதீசன் ஐயாவிற்கும் வாழ்த்துக்கள்.
முதல் நபராக வல்லமையாளர்களை ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து வாழ்த்தி உற்சாகமூட்டி வரும் பழமைபேசிக்கும் வாழ்த்துக்கள்.
அன்புடன்
….. தேமொழி
இந்த வார வல்லமையாளராகத் தேர்வு செய்யப்பட்ட, திரு. வே. ம. அருச்சுணன் அவர்களுக்கும் கடைசிப் பாராவில் இடம் பிடித்த திரு. செண்பக ஜெகதீசன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
வல்லையாளரின் கவிதை அருமை. வாழ்த்துக்கள் கவிதைக்கும் விருதுக்கும்.
சிறப்பு பதிவர் சென்பக ஜெகதீசனின் எழுத்தை பாராட்டவும் வேண்டுமா. மேன்மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள்.
சமுதாய விழிப்புணர்ச்சியினை அறிவுறுத்திய வல்லமையாளர் வே. ம. அருச்சுணன், அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். திரு செண்பக ஜகதீசன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
வணக்கம்,
எனது படைப்பை வாசித்து கருத்துரைத்த வாசகர்களுக்கும் ஆசிரியருக்கும் நன்றி.இவ்விருது என்னை மேலும் எழுத்துலகில் உற்சாகத்துடன் எழுத உட்படுத்துகிறது.மிக்க நன்றி.
வே.ம.அருச்சுணன் – மலேசியா
வல்லமையாளர் வே.ம.அருச்சுணன் அவர்களுக்கு
வாழ்த்துக்கள்…!
கடைசி பாராவாய் என்
கவிதையைத் தேர்வுசெய்த
திவாகர் அவர்களுக்கும்,
மனதார வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கும்
என்
நெஞ்சார்ந்த நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…