இந்த வார வல்லமையாளர்!
இந்த வார வல்லமையாளர்!
மே 5, 2014
வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..
**************************************************************************************
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு திரு. ராஜா கார்த்திக் கண்ட்டா அவர்கள்
**************************************************************************************
வல்லமை இதழால் இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்யப் பெறுபவர் திரு. ராஜா கார்த்திக் கண்ட்டா அவர்கள்.
இலண்டனைச் சேர்ந்த 33 வயதான திரு. ராஜா கார்த்திக் கண்ட்டா என்பவர் பெரும்பான்மையான இந்திய இளைஞர்களில் தனிப்பட்டவராகப் பிரகாசிக்கிறார். இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தனது சொந்த மாநிலமான ஐதராபாத்திலிருந்து இலண்டன் சென்று அங்குள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனத்திற்காகப் பணியாற்றுபவர். சமீபத்தில் (ஏப்ரல் 30, 2014 ) ஆந்திராவில் நடந்த மக்களவைத் தேர்தலில் தனது வாக்கைப் பதிவு செய்யும் பொருட்டு இந்தியா வந்திருப்பவர். உள்ளூரில் இருந்து கொண்டே தாய்நாட்டு நலனில் அக்கறையின்றி வாக்குப் பதிவு செய்யாமல் அலட்சியமாக இருக்கும் சிலருடன் ஒப்பிடும்போது இவர் வாக்களிப்பதற்காகவே வெளிநாட்டிலிருந்து சொந்த மண்ணிற்கு வந்திருப்பது பாராட்டிற்குரியது.
ராஜா கார்த்திக் கண்ட்டா இதற்கும் ஒருபடி மேலே சென்று, தனக்குச் சிறப்புச் சலுகையை எதிர்பார்த்து, மக்களுடன் வரிசையில் நின்று வாக்களிக்காமல் அனைவரையும் முந்த நினைத்த மத்திய அமைச்சரும், அரசியல் தலைவரும், நடிகருமான திரு. சிரஞ்சீவியின் செயலுக்கு வெளிப்படையாகத் தன் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். இவரது எதிர்ப்பினால் வேறு வழியின்றி ஐதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு செய்ய வந்த சிரஞ்சீவி தனது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அங்கு கூடியிருந்த மற்றவர்கள் போலன்றி, அவர் மத்திய அமைச்சர் என்ற பெரும் பதவியில் இருப்பவராயினும் அவரும் பொது மக்களைப் போலவே வரிசையில் நின்றுதான் வாக்களிக்கச் செல்ல வேண்டும் என்று துணிச்சலாக அவரைத் தட்டிக் கேட்டு, ஒரு சிறந்த குடிமகனாகத் தன் கடமையைச் சரிவர நிறைவேற்றிய இவருடைய செயல் பாராட்டுதலுக்குரியது. இவரது இந்த செயலை ஆதரித்து வரிசையில் காத்திருந்த மற்றவர்களும் கரவொலி எழுப்பித் தங்கள் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியின் காணொளி சுட்டி இங்கே: http://youtu.be/LPyL5X8oThw
இது குறித்து செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த ராஜா கார்த்திக், “நான் அயல்நாட்டில் வசிக்கும் இந்தியன், எனது வாக்குரிமையை நிறைவேற்றவே இந்தியா வந்தேன். சிரஞ்சீவி முதியவரோ, மாற்றுத்திறனாளியோ அல்ல, அதனால்தான் நான் அவரிடம் உங்களுக்குச் சிறப்புச் சலுகை வேண்டுமா எனக் கேட்டு அவரை வரிசையில் நிற்கச் சொன்னேன், சிரஞ்சீவியை நான் மதித்தாலும் அவர் விதிமுறைகளை மீறுவதை அனுமதிக்க முடியாது,” என்று சொல்லியிருக்கிறார். இது போன்று அதிகாரத்திற்கு அஞ்சாது துணிச்சலுடன் இந்திய அரசியல்வாதிகளைக் கண்டிக்கப் பலர் முன் வர வேண்டும்.
சிறப்பு மிக்க நடத்தையால், இந்திய இளைய சமுதாயத்திற்கு முன்னுதாரணமாக விளங்கிய திரு. ராஜா கார்த்திக் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
செய்திகள் பல செய்தித் தளங்களில் இருந்து திரட்டப்பட்டன.
படம் உதவி: www.ndtv.com
நேர்மையாகவும் துணிந்தும் கேள்வி எழுப்பி, சிரஞ்சீவி மட்டுமின்றி அனைவரின் மனசாட்சியையும் தட்டி எழுப்பிய ராஜா கார்த்திக் கண்ட்டா அவர்களுக்கு வாழ்த்துகள்.
இதற்கு முன்பும் சிரஞ்சிவி இப்படியே ஓட்டளித்து பழகி விட்டதால் தான் இம்முறையும் அவர் அப்படியே செய்ய வந்துள்ளார். முதல் முறையிலேயே அவரை அதிகாரிகள் தடுத்திருந்தால் அவர் திருந்திருப்பார் .அதிகாரிகளை விட பொது ஜனத்தை விட மீடியாககள் தான் இதை தடுத்தி நிறுத்தி வெளிக்கொண்டு வந்திருக்க வேண்டும்.அரசியல் வாதிகளுக்கு மீடியாக்கள் சலாம் போடுவதை நிறுத்தினாலே நம் அரசியல்வாதிகள் திருந்தி விடிவார்கள்.
ராஜா கார்திக்கு பாராட்டுக்கள்