இந்த வார வல்லமையாளர்!
இந்த வார வல்லமையாளர்!
ஜூன் 9, 2014
சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு திருமிகு. கீதா மதிவாணன் அவர்கள்
சென்ற வாரம் வல்லமை வாசகர்களுக்காக இவர் வழங்கிய “உன்னைப் போலவே…” என்ற கவிதைக்காக இவர் வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார்.
ஆஸ்திரேலியா வாழ் இந்தியத் தமிழரான கீதா மதிவாணன் தமிழிலக்கியங்களைப் படிப்பதிலும் படைப்பதிலும் ஆர்வம் மிக்கவர். மதுரைக் கணக்காயர் மகன் நக்கீரனார் பாடிய பழந்தமிழ் இலக்கியப் படைப்பான பத்துப்பாட்டில் ஒன்றான “நெடுநல்வாடை“யின் இலக்கிய நயத்தில் தன்மனதினைப் பறிகொடுத்தவர். அதன் விளக்கத்தை எளிமையான வரிகளால் புதுக்கவிதை போன்ற பாணியில் இக்காலத் தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார்; அதனை அவர் தளத்தில் படித்து மகிழலாம் (http://geethamanjari.blogspot.com/2013/05/blog-post.html). பல சிறுகதைகளும், கவிதைகளும், விமர்சனங்களும் எழுதியுள்ள கீதா “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?” என்ற 30 அத்தியாயங்களுக்கும் மேற்பட்ட நெடுங்கதையையும் (http://geethamanjari.blogspot.com/2011/06/1.html) எழுதியுள்ளார்.
வல்லமை இதழிலும் சற்றேறக் குறைய மூன்று ஆண்டுகளாக கீதா தனது படைப்புகளை வழங்கி வல்லமை வாசகர்களை மகிழ்வித்து வருகிறார். கவிதை, சிறுகதை, தொடர்கதை, கட்டுரை, இலக்கியம், விமர்சனம் என இவரது எழுத்தாற்றல் பல வகைகளிலும் பரந்து விரிந்திருப்பது மட்டுமல்லாமல் அவற்றிற்காக பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார். வல்லமையின் கடித இலக்கியப் போட்டி முதற்கொண்டு, பிற இதழ்கள் நடத்திய தைப்பொங்கல் கட்டுரைப் போட்டிக்கான பரிசு, சிறுகதை விமர்சனப் போட்டிக்கான பரிசு, சிறந்த வலைதள எழுத்தாளருக்கான பரிசுகள் என்று பல பரிசுகள் வென்றுள்ளார். இவர் கவிதைகள் பெரும்பாலும் மனித நேயத்தை அடிப்படைக் கருத்தாகக் கொண்டு அமைந்துள்ளன. பெண்களின் நிலை, தன்னம்பிக்கை, மாற்றுத் திறனாளிகளின்பால் காட்டும் நேயம், ஒற்றுமை போன்ற கருத்துகளை உள்ளடக்கியவை இவரது கவிதைகள். இவ்வார வல்லமையில் இவர் எழுதிய கவிதை தனக்கெனப் போராட வழியற்ற, தனக்காக வாழும் உரிமை கேட்கத் திறனற்ற, கருவிலேயே அழிக்கப்படும் உயிர்களுக்காகக் குரல் கொடுக்கிறது….
அந்தக் கவிதை வரிகள் இங்கே…
(https://www.vallamai.com/?p=46228)
ஆகாயம் பிளந்துதித்த அண்டரண்டப் பட்சியுமில்லை
ஆவென்று வாய்பிளந்து ஆராதித்துத் தொழுவதற்கு!
பூமி கிளர்ந்து வெளிப்பட்ட புழு பூச்சியுமில்லை
’ப்பூ’வென்று புறந்தள்ளிப் புழுதியிற் புரட்டுவதற்கு!
உன்னைப் போலவே ஒற்றைத் துளியில் உருவாகி
உயிர்க்குடத்தில் கருவானது!
உன்னைப் போலவே உண்ணவும் கழிக்கவும்
உடுத்தவும் உரிமையுடையது!
உன்னைப் போலவே சிரிக்கவும் அழவும்
சிந்திக்கவும் கூடியது!
உன்னைப் போலவே ஆக்கவும் அழிக்கவும்
அணைக்கவும் தலைப்பட்டது!
உன்னைப் போலவே உணரவும் புணரவும்
மரணிக்கவும் வாய்த்த சக மானுடம் அது!
சாமான்யமாய் எண்ணிவிடாதே…
சாபத்துக்கு ஆளாகிவிடும்
சாத்தியத்துக்கு ஆளாகிவிடக்கூடும்!
மனிதநேயத்திற்காக, கருச்சிதைவினை எதிர்த்து பிறக்காத குழந்தைகளும் உயிர் வாழவேண்டிய நியாயத்திற்காகக் கவிதை வடித்த கீதா மதிவாணன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. இந்த வார வல்லமையாளராக என்னைப் பரிந்துரைத்த தோழி தேமொழிக்கும் தேர்வு செய்துள்ள வல்லமை குழுவினருக்கு மனம் நெகிழ்ந்த நன்றிகள் பல. எழுத்தின் மீதான என் பொறுப்புணர்வை அதிகரிக்கச் செய்கின்றன இதுபோன்ற அங்கீகாரங்கள்.
இவ்வார வல்லமையாளலாக வல்லமைப் பல்லக்கிலேறும் தங்களிற்கு மனமார்ந்த வாழ்த்து டென்மார்க்கிலிருந்து.
வாழ்துக்கள். “உன்னைப்போலவே” கவிதையை முன்பு நான் படிக்கவில்லை. சிறந்த கவிதையை தவற விட்ட வருத்தம் இப்போது வருகிறது. இலங்கை தமிழருக்காக எழுதப்பட்ட கவிதை போல் ஆரம்ப வரிகள் ஒரு உணர்வை கொடுத்தது.
இன்று உலகத்தில் அததனைபேரும் இந்த கொலை பாதகம் செய்ய தயங்குவதே இல்லை இது சட்டத்துக்கு உட்பட்டது என்பதால் பார்க்க மட்டுமே முடிகிறது..அருமையான கவிதை.
எல்லா மருத்துவமனையிலும் இந்த கவிதையை எழுதி வைக்கலாம்.கருக்கலைப்புக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுப்ரியா அவர்கள் துவங்கிய இயக்கத்திற்கிம் இதனை அனுப்பி வைக்கலாம்.
மீண்டும் பாராட்டுக்கள். வல்லமையாளருக்கும் தேர்வு செய்த தேமொழி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இன்று தான் கீதமஞ்சரியை பார்த்தேன்.
குத்துப்பாட்டு கோலோச்சும் இந்த காலத்தில் பத்துப்பாட்டை நெடுநல்வாடையில் தெளிவான தமிழில் அருமையாக தந்துள்ளார் .
இந்த வலைதளத்தை அறிமுகப்படுத்திய தேமொழி அவர்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
அன்பு கீதா இந்த வாரம் வல்லமையாளராக பவனி வரும் உங்களுக்கு என் நல்வாழ்த்துகள்
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழி வேதா.
தங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி அமீர். மனித வாழ்வின் உரிமை மறுக்கப்படும் எந்த இடத்துக்கும் பொருந்தும் கரு அது. ஊக்கமிகு தங்கள் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் அன்பான நன்றி.
தங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி மேடம்.
’RIGHT MAN FOR THE RIGHT JOB !’ என்று சொல்லுவார்கள்.
உண்மையிலேயே வல்லமையாளர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து இந்தவார வல்லமையாளராக்கி, வல்லமை தன் வல்லமையை நிரூபித்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள், அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
வல்லமையாளரைத் தேர்ந்தெடுத்துள்ள வல்லமை மின் இதழுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
மனதைத் தொடும் அருமையான கவிதை! வல்லமையாளராகத் தேர்வு பெற்றிருக்கும் கீதாவிற்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
‘வல்லமையாளர்’ கீதா மதிவாணன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!!
ஊக்கமளிக்கும் தங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி கோபு சார்.
கவிதையை ரசித்துப் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ள ஞா.கலையரசி அவர்களுக்கு என் அன்பான நன்றி.
வாழ்த்துத் தெரிவித்துள்ள மாதவன் இளங்கோ அவர்களுக்கு மிகவும் நன்றி.
கீதா மதிவாணனின் பல படைப்புகளை வாசித்து மகிழ்ந்துள்ளேன் . தேர்ந்தெடுக்கத் தகுதி உடையவர் . என் பாராட்டு .
சிறந்த கவிதைக்கு என் மனமுவந்த பாராட்டு .
அழுத்தமான கவிதை படைத்த கவிதாயினி வல்லமைமிகு கீதா மதிவாணன் அவர்களுக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள்.
என்னையும் கவிதையையும் பாராட்டி ஊக்கமளித்த சொ.ஞானசம்பந்தன் ஐயா அவர்களுக்கு உளங்கனிந்த நன்றி.
பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து மேலும் எழுதும் உற்சாகம் அளித்துள்ள வல்லமை நிறுவனர் திரு. அண்ணாகண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.