இந்த வார வல்லமையாளர்!
அக்டோபர் 5, 2015
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு முனைவர் அரவிந்த் திருவேங்கடம் பத்மாவதி அவர்கள்
வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் மேற்கு விர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில் ஆய்வுப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் அரவிந்த் திருவேங்கடம் பத்மாவதி (http://www.mae.cemr.wvu.edu/faculty/faculty-detail.php?id=1069&type=faculty) அவர்கள். வோல்க்ஸ்வேகன் நிறுவனம் செய்த மோசடியை வெளியுலகிற்குக் காட்டிக் கொடுத்த ஆய்வறிக்கையை வெளியிட்டதற்காக இவரை வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் முனைவர் அண்ணா கண்ணன் அவர்கள், அவருக்கு நன்றிகள் உரித்தாகிறது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளம்நிலைப் பொறிமுறைப் பொறியியல்(B.E. Mechanical Engineering) பட்டம் பெற்ற அரவிந்த், அமெரிக்காவின் மேற்கு விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பொறியியலில் முதுநிலை பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். ஊர்திகளின் மாசுக்கட்டுப்பாட்டுச் சோதனைகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருக்கும் இவரின் ஆய்வறிக்கை ஒன்றின் முடிவுகள், ஜெர்மனியின் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் செய்த குற்றத்தை வெளியுலகிற்குக் காட்டிக் கொடுத்தது. இதன் காரணமாக வோல்க்ஸ்வேகன் நிறுவனம் ஊர்திகளில் மாசுக்கட்டுப்பாட்டுச் சோதனைகளின் பொழுது ஆய்வாளர்களை ஏமாற்றுவதற்காக ஊர்திகளில் பொருத்தியிருக்கும் மென்பொருள் பற்றி அமெரிக்க அரசு கண்டறிந்தது. அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (U.S. Environmental Protection Agency) வோல்க்ஸ்வேகன் நிறுவனம் மீது தொடுத்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட வோல்க்ஸ்வேகன் நிறுவனம், 11 மில்லியன் வண்டிகளில் மென்பொருள் நிறுவி, அரசை ஏமாற்றியதையும் ஒப்புக்கொண்டுள்ளது.
இதன் விளைவாக வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி விலகியுள்ளார், பதினெட்டு பில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்தவிருக்கும் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் பற்றிய உண்மை தெரிந்தவுடன், பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்கு வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இப்பொழுது பிற வாகன நிறுவனங்களும் எச்சரிக்கையடைந்துள்ளன.
முனைவர் அரவிந்த் அவர்களின் ஆய்வும் அதன் காரணமாக வோல்க்ஸ்வேகன் நிறுவனம் குற்றம் வெளிப்பட நேர்ந்த நிகழ்வுகள் பற்றிய மிகச் சுருக்கமாக அறிமுகம்.
மேற்கு விர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் மாற்று எரிபொருள் ஆய்வு மையம் (Center for Alternative Fuels, Engines and Emissions – CAFEE) ஊர்திகளின் மாசு கட்டுப்பாட்டு சோதனைகள் பற்றி பல ஆண்டுகளாக ஆய்வில் ஈடுபட்டு அத்துறையில் முன்னணி வகிக்கிறது. இந்த மையத்தில் ஒரு ஆய்வாளராகப் பணியாற்றும் முனைவர் அரவிந்துடன், மார்க் பேஷ்க், கிரிகரி தாம்ப்சன், டேனியல் கார்டர், ஹேமந்த் கப்பண்ணா (Marc Besch, Gregory Thompson, Daniel Carder, and Hemanth Kappanna) ஆகியோர் அடங்கிய ஐவர் குழு , கலிஃபோர்னியா மாநில அரசு அளித்த ஆய்வுநிதி பெற்று அந்த மாநிலத்தின், கண்டிப்பான சூழ்நிலை மாசுக்கட்டுப்பாடு விதிகளை ஊர்திகள் கடைப்பிடிக்கின்றனவா என்ற ஆய்வில் ஈடுபட்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் இம்மாநிலத்தின் ஊர்திகள் மாநில அரசு விதிக்கும் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்குள் இருந்தால் மட்டுமே அவற்றை இயக்க அனுமதி அளிக்கப்படும். அந்தச் சோதனைகளில், ஆய்வக சூழலில் கிடைக்கும் சோதனை முடிவுகள், வண்டிகள் சாலைகளில் இயக்கப்படும் பொழுதும் அதே அளவில் அமைந்துள்ளனவா என்ற சோதனையை மேற்கொண்டனர் இந்த ஆய்வுக் குழுவினர்.
முனைவர் அரவிந்தும் துணை ஆய்வாளர் மார்க் பேஷ்க்கும், வோல்க்ஸ்வேகன் ஊர்தி ஒன்றை வாடகைக்கு எடுத்து, தங்கள் சோதனைக் கருவியை அதில் பொருத்தி, கலிஃபோர்னியாவில் இருந்து வாஷிங்டன் மாநிலம் வரை சுமார் 2,500 மைல்கள் ஓட்டி சோதனை செய்தனர். அப்பொழுது வெளிப்படும் நைட்ரஜன் ஆக்சைட்களின் (Nitrogen oxides – NOx) அளவு, அமெரிக்க அரசு அனுமதித்த குறைந்த அளவு விதிக்கும் மேலாகா 35 மடங்கு வரை அதிகம் இருப்பது தெரிய வந்தது. சோதனைக் கருவிகளின் குற்றமோ எனச் சந்தேகித்து ஆராய்ந்ததில், அதிலும் குறை இல்லை என்று தீர்மானிக்கப்பட்டது. ஆய்வக சோதனையில் தேறிய ஊர்திகள் எவ்வாறு சாலைப்பயணத்தில் இதுபோன்ற மாறுபட்ட முடிவைக் கொடுக்க முடிகிறது என்பதைத் தொடர்ந்து ஆய்வுகள் செய்து கண்டறியாவிட்டாலும், தங்கள் முடிவை முனைவர் அரவிந்த் குழு ஆய்வறிக்கையாக வெளியிட்டது. இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டது 2013 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில். இவர்களுக்கு நிதிவழங்கி ஆய்வை முன்னெடுத்த ‘இண்டர்நேஷனல் கவுன்சில் ஆன் கிளீன் டிரான்ஸ்போர்ட்டேஷன்’ (International Council on Clean Transportation) ஆய்வின் முடிவுகளை அமெரிக்க அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றது.
இது போன்று தனிப்பட்ட பல்கலைக்கழக ஆய்வறிக்கைகளில் வோல்க்ஸ்வேகன் ஊர்திகள் அரசு நிர்ணயித்த மாசுக்கடுப்பாட்டு விதிகளை மீறுவதைக் கவனித்து வந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை அடைந்தது. இதற்கு முன்னரே 1973, 1998 ஆண்டுகளிலும் ஏமாற்று வேலைகள் செய்து வோல்க்ஸ்வேகன் பிடிபட்டிருந்தால், அரசு மேலும் ஆராயத் தொடங்கியது. முடிவில் ஆய்வக சோதனையில் ஊர்தியின் ஸ்டியரிங் வீல் அசையாமல் இருக்கும்பொழுது வண்டியின் இயந்திரம் மட்டும் தொடர்ந்து இயங்கினால், அது ஊர்தி சோதனைக்குள்ளாகும் நேரம் என மென்பொருள் கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு மாசுக்கட்டுப்படுத்தும் பாகங்களை இயங்கச் செய்து நைட்ரஜன் ஆக்சைட்களின் அளவைக் கட்டுப்படுத்தும் வகையில் நிறுவனம் வண்டிகளை வடிவமைத்து வைத்திருக்கும் உண்மை வெளியாகியது. இது அரசை ஏமாற்றும் மிகப்பெரிய குற்றச் செயல் மட்டுமல்ல, சுற்றுப்புறச் சூழல் மீதும், மனித நலத்திலும் அக்கறையற்ற செயலும் ஆகும். மாசுநிறைந்த காற்றைச் சுவாசிக்கும் பொழுது ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள் அதிகரிக்க வழிவகுக்கும்.
ஏன் ஊர்தி சோதனைக்குள்ளாகும் பொழுது மட்டும் மாசுக்கட்டுப்பாடு திட்டம் இயங்க வேண்டும் என்ற கேள்விக்கு … வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் பேராசை என்பதே பதில். பெட்ரோலுக்குப் பதில் மாற்று எரிபொருளாக டீசல் பயன்படுத்தும் ஊர்திகளை அதிகரிக்கும் எண்ணம் சந்தையில் பரவலாகத் தோன்றியது. அமெரிக்கர்கள் விரும்பும் வண்ணம் பெரிய வண்டிகளையும், அதே சமயம், அமெரிக்க அரசு விதிகள்படி குறைந்த எரிபொருளில் அதிக மைல்கள் கொடுக்கும், டீசலில் ஓடும் வண்டிகளைத் தயாரித்து விற்றால் அமெரிக்க சந்தையைப் பிடித்துவிடலாம் என்பது வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் திட்டம். ஆனால் அமெரிக்க அரசு நிர்ணயித்த மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்குள் வண்டி இயங்க நேர்ந்தால், குறைந்த எரிபொருளில் அதிக மைல்கள் ஓடாது. வண்டியை இயக்க அதிகம் செலவானால் ஊர்திகளும் விற்பனையாகாது. இதற்கு வழி, சரியான தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதாக இருக்கும். ஆனால் வோல்க்ஸ்வேகன் நிறுவனம், அதிக செலவைக் கூட்டி, ஊர்தியின் விலையை அதிகரிக்கச் செய்யும் முறையைத் தவிர்க்கும் நோக்கில் குறுக்கு வழியைக் கண்டுபிடித்தது. அரசு செய்யும் சோதனைகளில் ஆய்வாளர்களின் கண்களில் மண்ணைத்தூவும் வண்ணம் சோதனை நேரங்களில் மட்டும் வண்டிகள் மாசுக்கட்டுப்பாடு திட்டத்திற்கு ஏற்ப இயங்கும். பிற வேளைகளில், சாலைகளில் ஓட்டும்பொழுது வெளியாகும் நைட்ரஜன் ஆக்சைட்களின் அளவைக் கட்டுப்படுத்தும் முறை செயலிழந்து போகுமாறு வண்டிகளை இயக்க மென்பொருள் பொருத்தியது. அதனால் ஊர்தியும் குறைந்த எரிபொருளுக்கு அதிக தூரம் ஓடும். வோல்க்ஸ்வேகன் நிறுவனம் செய்த இந்த மோசடி வெளியாகக் காரணமாக இருந்தது முனைவர் அரவிந்தின் ஆய்வறிக்கையே.
மாசுக்கட்டுப்பாட்டைக் குறைப்தற்கும், ஏமாற்றும் நிறுவனத்தின் குற்றம் வெளிப்படவும் உதவியாக இருந்த ஆய்வினை செய்த 32 வயதாகும் முனைவர் அரவிந்த் அவர்களின் ஆய்வுப்பணியைப் பாராட்டி அவரை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை இதழ் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
_____________________________________________________________________________________________
வல்லமையாளர் முனைவர் அரவிந்தின் கட்டுரை:
The routine study that led to the discovery of the VW scandal
by Arvind Thiruvengadam Oct 01, 2015
http://www.autocarpro.in/news-international/routine-study-led-discovery-huge-scandal-9408
_____________________________________________________________________________________________
Arvind Thiruvengadam:
Research Assistant Professor
Mechanical and Aerospace Engineering
West Virginia University
Morgantown, West Virginia 26506
Email: arvind.thiruvengadam@mail.wvu.edu
Phone: 304-293-0805
http://www.mae.cemr.wvu.edu/faculty/faculty-detail.php?id=1069&type=faculty
Google+ https://plus.google.com/103696045919648975153/
Google.scholar. https://scholar.google.com/citations?user=yNpEEDAAAAAJ&hl=en
Linkedin https://www.linkedin.com/pub/arvind-thiruvengadam/31/732/644
_____________________________________________________________________________________________
தகவல்களும் படங்களும் கொடுத்து உதவிய தளங்கள்:
How a university lab helped unearth the VW emissions scandal
http://www.autocarpro.in/news-international/university-lab-led-unearthing-vw-emission-scandal-9373#sthash.SEqL1nbL.dpuf
As Volkswagen Pushed to Be No. 1, Ambitions Fueled a Scandal
http://www.nytimes.com/2015/09/27/business/as-vw-pushed-to-be-no-1-ambitions-fueled-a-scandal.html?_r=0
Unexpected VW emissions results catapult WVU researchers to fame
http://www.newsshine.com/us-local-news/west-virginia/business/140060-unexpected-vw-emissions-results-catapult-wvu-researchers-to-fame.html
The Indian-origin scientist who took a test drive, exposed VW
http://www.hindustantimes.com/business/a-long-ride-by-a-tamilian-that-exposed-the-vw-emission-fraud/story-DNB9Px86mMb4Fout6QiokN.html
The Chennai-Born Scientist Who Exposed The Volkswagen Scam
http://www.outlookindia.com/blogs/post/the-chennaiborn-scientist-who-exposed-the-volkswagen-scam/3627/12
_____________________________________________________________________________________________