நவம்பர் 30, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு ஆர். பி. ரமேஷ் அவர்கள்

Ramesh RB

வழக்கத்திற்கு மாறாக, அளவுக்கதிகமாகப் பெய்த வடகிழக்குப் பருவமழையின் காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தத்தளித்து வருகிறது சென்னையும், சென்னையின் புறநகர்ப்பகுதிகளும், அதன் சுற்றுவட்டாரங்களும். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பலர் வீட்டையும் உடைமைகளை இழந்து துன்பப்படுவது செய்திகளாக வந்த வண்ணம் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போர்க்கால அடிப்படையில் உதவிப்பணிகளும் அரசால் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு மட்டுமின்றி பல அரசு சாரா பொதுப்பணி நிறுவனங்களும் தங்களால் இயன்றவகையில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்து வருகின்றன. அவ்வாறு காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வெள்ளத்தால் சூழ்ந்து பாதிக்கப்பட்ட கிராமங்களின் மக்களுக்கு உணவளித்து உதவி செய்த சமூக நல ஆர்வலரும், தி நியூ லைஃப் அறக்கட்டளை அமைப்பின் நிர்வாகியுமான திரு. ஆர். பி. ரமேஷ் (R. B. Ramesh) அவர்களை அவரது சமூக சேவைகளுக்காக இவ்வார வல்லமையாளராக அறிவித்து வல்லமைக் குழு பாராட்டுகிறது. இவரை வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் ஆசிரியர் திருமதி பவளசங்கரி அவர்கள்.

Ramesh RB1

Ramesh RB2

Ramesh RB3

செங்கல்பட்டைச் சேர்ந்த ஆர். பி. ரமேஷ் அவர்கள் சமூக அக்கறை கொண்டவரும், ஆன்மீக ஆர்வலரும் ஆவார். சமூகநலப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள ரமேஷ் அவர்கள் சென்னையில் பள்ளிப்படிப்பையும், திருச்சி நேஷனல் இன்ஸ்டிடுயுட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பையும் முடித்து பொறியியலில் பட்டம் பெற்றவர். ரமேஷ் அவர்கள், இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த மேதகு ஆர். வெங்கட்ராமன் அவர்களின் மகளும், புகழ் பெற்ற சமூக சேவகியுமான திருமதி பத்மா வெங்கட்ராமன் அவர்களிடம் பணிபுரிந்தவர்.

நலிவுற்ற மக்களுக்கு உதவும் நோக்கில் ‘தி நியூ லைஃப் அறக்கட்டளை அமைப்பு’ என்ற அறக்கட்டளையைத் துவக்கி, அதன் இயக்குநராகத் திட்டங்கள் வகுத்து வாடும் மக்களுக்குப் பலவகைகளிலும் உதவி செய்து வருகிறார். இதைத் தவிர மேலும் பல சமூகநலப்பணி நிறுவனங்களின் உறுப்பினராகவும், ஆலோசகராகவும் பங்காற்றி வருகிறார்.

தி நியூ லைஃப் அறக்கட்டளை அமைப்பு சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள தொழுநோயாளர்களின் பிள்ளைகளுக்காக நடத்தப்படும் ஞானோதயா உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வியிலும், உணவுத் தேவைக்கும் உதவி வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள பல அரசு தொழுநோய் மையங்களில் இருப்பவர்களுக்கு அடிப்படை வசதிக்குத் தேவையான பொருட்களை வழங்கியும், மருத்துவ உதவிகளிலும் பங்கேற்று வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளி செல்ல மிதிவண்டிகள், காலணிகள், நோட்டுப்புத்தகங்கள், சீருடைகள், உணவு விடுதிக்குத் தட்டுகள் போன்ற உதவிகளும், நோயாளிகளுக்கு இரத்தப் பரிசோதனை போன்ற மருத்துவ உதவிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு உதவிகள், மரம் நடுவோருக்கு மரக்கன்றுகள் வழங்கும் உதவிகள், தேவையுள்ளோருக்கு தொழிற்பயிற்சி உதவிகள் என விரியும் உதவிகளினால் சற்றொப்ப ஆயிரம் பள்ளி மாணவர்கள் கல்வி சார்ந்த உதவிகளையும், சுமார் ஐந்நூறு தொழு நோயாளிகள் மருத்துவ உதவிகளையும் பெற்று பயனடைந்துள்ளனர்.

தி நியூ லைஃப் அறக்கட்டளை அமைப்பு தனது எதிர்காலத் திட்டங்களாக; கல்வி, வேலைவாய்ப்புக்கான தொழிற்பயிற்சி, குக்கிராமங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான உதவி, கிராமப்புற குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் மருத்துவ உதவி, முதியோர் விடுதி, அனாதை குழந்தைகளுக்கான விடுதி எனத் தனது சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. தி நியூ லைஃப் அறக்கட்டளை அமைப்பு  திரு. ஆர். பி. ரமேஷ் அவர்களின் வழிகாட்டுதலில் மேலும் பல சமூகப் பணிகளில் பங்கேற்று தேவையுள்ளோர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட உதவ வேண்டும் என்று வாழ்த்தி அதன் நிர்வாகி திரு. ஆர். பி. ரமேஷ் அவர்களை வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

தொடர்புக்கு :
வலைத்தளம்: http://www.thenewlifetrust.org/
சமூக வலைத்தளங்கள்
https://www.facebook.com/TheNewLifeTrust/
https://www.facebook.com/rbramesh.rb

அறக்கட்டளையின் முகவரி:
The New Life Trust – Regd
Plot No.1,Akshaya Nagar,
Lake Avenue 1st Street Extn,T.K.M.Road,
Chengalpattu – 603002

தொலைபேசி: +91 96598 47096
மின்னஞ்சல்: thenewlifetrustcpl@gmail.com

நன்கொடை வழங்க விரும்புவோருக்கான தகவல்:
Bank : Karur Vysya Bank
Branch : Chengalpattu
Account Name : The New Life
Account Number : 16321152804
IFSC Code : KVBL0001632

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.. தங்களின் நற்பணிகள் தொடர்ந்து பெருகட்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.