இந்த வார வல்லமையாளர்!
பிப்ரவரி 8, 2016
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு மாணவி திருமிகு. உதயகீர்த்திகா அவர்கள்
வல்லமையின் இந்த வார வல்லமையாளர், உக்ரைன் நாட்டிலுள்ள, உலகின் சிறந்த விண்வெளிக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ‘கார்க்கிவ் யுனிவர்சிட்டி ஆஃப் ஏர்ஃபோர்ஸ்’ (Kharkov Air Force University, Ukraine) இல் ‘ஏரோ ஸ்பேஸ் இன்ஜினீயரிங்’ (Aerospace engineering) படிக்கும் மாணவி திருமிகு. உதயகீர்த்திகா அவர்கள். இவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர், வல்லமையின் அறிவியல் எழுத்தாளரான திரு. சி. ஜெயபாரதன் அவர்கள். அவருக்கு வல்லமைக் குழுவினரின் நன்றிகள் உரித்தாகிறது.
தேனியின் அல்லிநகரம் என்ற ஊரினைச் சேர்ந்த, ஓர் எளிமையான சராசரி இந்தியக் குடும்பத்தில், தனியார் நிறுவனமொன்றில் குறைந்த ஊதிய வேலையிலிருப்பவரும், சிறுகதை எழுத்தாளரும் ஓவியருமான திரு. தாமோதரனுக்கும், தட்டச்சுப் பணிபுரியும் திருமதி. அமுதாவிற்கும் ஒரே செல்ல மகளாகப் பிறந்தவர் உதயகீர்த்திகா. குழந்தைப் பருவத்தில் இருந்தே வானவியல் பற்றிய ஆர்வம் கொண்டவர். பள்ளி நாட்களில் நிலா, வானம், அண்டம், விண்வெளி, விண்வெளி வீரர் என விண்வெளி தொடர்பான நூல்களைத் தேடித் தேடிப் படித்துத் தகவல்களை குறிப்பெடுத்துக் கொள்வதிலும், விண்வெளி தொடர்பான போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகளைக் குவிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது தந்தையும் ஆய்வுக்குத் தேவையென மகள் கேட்கும் விலை அதிகமான நூல்களையும் வாங்கிக் கொடுப்பதற்காக ஒரு வேளை உணவைத் தியாகம் செய்யத் தயங்காதவர்.
2011-ம் ஆண்டு தேசிய அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில் நடைபெற்ற புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் தனது ஆய்வைச் சமர்ப்பித்து,‘Inspire Award’ விருதும், 2012-ம் ஆண்டு மகேந்திரகிரியில் உள்ள விண்வெளி ஆய்வு மையம் சார்பாக மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையில் நடத்தப்பட்ட ‘சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் விண்வெளி ஆய்வின் பங்கு’ என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் பரிசும், 2014-ம் ஆண்டு அதே விண்வெளி ஆய்வு மையம் நடத்திய ‘வழி நடத்தும் விண்வெளி’ என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியிலும் மாநில அளவில் முதல் பரிசும் பெற்றுள்ளார். மேலும் இவர் பெற்ற பல பரிசுகளின் பட்டியல் கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் பள்ளியின் முதல் மாணவி, அறிவியல் பாடத்தில் நூற்றுக்குநூறு, ப்ளஸ் டூ தேர்விலும் நல்ல மதிப்பெண்களைப் (1030 ) பெற்றவரான உதயகீர்த்திகா தமிழ்வழிக் கல்வி பெற்றவர். விண்வெளி ஆய்வு பற்றி படிக்க விரும்பி தனது ஆய்வுகள், கட்டுரைகள், பெற்ற பரிசுகள், மதிப்பெண்கள் ஆகியவற்றைச் சமர்ப்பித்து கார்க்கிவ் யுனிவர்சிட்டி ஆஃப் ஏர்ஃபோர்ஸ் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்த பொழுது அங்குப் படிக்க உதவித் தொகையும் வழங்கப்பட்டுத் தேர்வு செய்யப்பட்டார். மேற்கொண்டு, நான்காண்டு படிப்பிற்குத் தேவையான சுமார் 12 லட்சம் ரூபாய் செலவிற்காக, வங்கியில் கொஞ்சம் கல்விக் கடன், பிற இடங்களில் கடன் என ஒரு 7 லட்சம், உதவும் உள்ளங்கள் நீட்டிய உதவிக்கரங்கள் வழங்கிய தொகை எனச் சேகரித்தது போக, நடிகர் ராகவா லாரன்ஸும் ஆனந்த விகடனும் இணைந்து செயல்படுத்தும் ‘அறம் செய விரும்பு’ திட்டத்திலும் விண்ணப்பித்தார். மீதம் உள்ள தொகைக்கு 1.80 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி நடிகர் ராகவா லாரன்ஸும் உதவி செய்துள்ளார்.
தனக்கு ஊக்கமளித்து உறுதுணையாக இருக்கும் தனது அப்பாவிற்காக விண்வெளி ஆய்வில் வெற்றிபெறுவதுதான் தான் செய்யும் கைமாறு எனக் கூறும் உதயகீர்த்திகா, “அறிவியல் என்றால் மருத்துவத்துறையை மட்டுமே நோக்கியதாக இருக்கிறது பெற்றோர்களின் இலக்கு. மகன்களைத் துணிச்சலுடன் ஆராய்ச்சிப் படிப்புகளை நோக்கி நகர்த்தும் பெற்றோர், தங்கள் மகள் அதை நோக்கி நகர்வதை அவ்வளவாக விரும்புவதில்லை. இந்தத் தயக்கம்தான் பெண்களை, குறுகிய வட்டத்துக்குள்ளேயே நிறுத்திவிடுகிறது. எல்லைதாண்டி சிந்திக்கவிடாமல் முடக்கிவிடுகிறது. உண்மையில் அறிவியல் அறிவில் ஆண்களைக் காட்டிலும் சிறந்து விளங்கும் திறமை பெண்களுக்கு இருக்கிறது. அதைத்தான் வரலாறும் சொல்கிறது … விண்வெளி ஆய்வு தொடர்பான பொறியியல் படிப்பை முடித்து விண்வெளி வீராங்கனையாகவும், அப்துல்கலாம் போல மிகச்சிறந்த விஞ்ஞானியாகவும் ஆவேன். உக்ரைன் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துவிட்டு, இந்திய விண்வெளி ஆய்வுத்துறைக்கு எனது பங்களிப்பைச் செலுத்துவேன். ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு உதவியாக இருப்பது, அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி, ஏழை மாணவர்களும், விண்வெளி ஆய்வு தொடர்பான கல்வி கற்பதற்கு வழிவகை செய்வேன்,” என்று பத்திரிக்கைகளுக்கு வழங்கிய நேர்காணல்களிலும் குறிப்பிட்டுள்ளார்.
உயர்ந்த குறிக்கோள்களையும், நோக்கங்களையும் கொண்டுள்ள உதயகீர்த்திகாவின் முயற்சிகள் வெற்றியடைந்து விண்வெளி ஆய்வுகள் பலசெய்து நாட்டிற்குப் பெருமை தேடித்தரவும், இளைய தலைமுறையினருக்கு சிறந்த முன்மாதிரியாக இருந்து வழி நடத்தவும் வல்லமைக் குழுவினரின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
_______________________________________________________
தகவல் பெற்ற இடங்கள்:
தேனி பெண்ணின் விண்வெளி கனவு..
http://siragu.com/?p=19568
உதயகீர்த்திகா… நிறைவேறும் விண்வெளிக் கனவு!
http://www.vikatan.com/news/article.php?aid=55240
காணொளி:
https://youtu.be/cFv90F0TeEo
_______________________________________________________
உதயகீர்த்திகா பெற்ற பரிசுகளும் விருதுகளும்:
* 2005-ஆம் ஆண்டு திண்டுக்கல் நேருகலைமன்றம் சார்பாக மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவியருக்கிடையே நடைபெற்ற ஓவியப்போட்டியில் முதற்பரிசு.
* 2007-ஆம் ஆண்டு மதுரை உயர்மாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பாக நடத்தப்பட்ட உரையாடல் போட்டியில் மூன்றாம் பரிசு.
* 2007-ஆம் ஆண்டு தேனி மேரிமாதா மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் இரண்டு நிமிடங்களில் 53 திருக்குறள்களை ஒப்புவித்து 2-ஆம் பரிசு.
* 2009-ஆம் ஆண்டு என்னுடைய கவிதை, கட்டுரை, ஓவியம் மற்றும் கல்வித்திறன்களைப் பாராட்டி, பாரதியுவகேந்திரா என்ற தன்னார்வ நிறுவனம் சார்பாக, “யுவஸ்ரீகலாபாரதி’ என்ற விருது.
* 2010-ஆம் ஆண்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் குழந்தைகள் தினவிழாவையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கிடையில் நடத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர்முறை ஒழிப்பு பற்றிய கட்டுரைப் போட்டியில், முதல் பரிசாக தங்கப் பதக்கம் பெற்றேன்.
* 2010-ஆம் ஆண்டு தேனி ஜூனியர் சேம்பர்ஸ் இண்டர்நேஷனல் என்ற அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டியில் முதற்பரிசு.
* 2011-ஆம் ஆண்டு மத்தியஅரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை சார்பில் நடத்தப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புப் போட்டியில், அறிவியல் கண்டுபிடிப்பைச் சமர்ப்பித்ததற்காக, அறிவியல் விருது.
* 2011-ஆண்டு என் கவிதை, ஓவியம், கட்டுரை மற்றும் கல்வி ஆற்றலைப் பாராட்டி, மதுரையில் உள்ள ரோஜா கலைமன்றத்தின் சார்பில் சுவாமி விவேகானந்தர் விருது. 2012-ஆம் ஆண்டில் தேனி மாட்டஅளவில் பள்ளி மாணவ-மாணவியருக்கிடையில் நடத்தப்பட்ட தனித்திறன் மற்றும் நாட்டுப்புற நடனம் போட்டியில் முதற்பரிசு.
* 2013-ஆம் ஆண்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றதற்காக பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்.
* 2013 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் சர்வதேச நுகர்வோர் தினவிழாவை முன்னிட்டு மாவட்டஅளவில் உள்ள பள்ளிமாணவ-மாணவியருக்கிடையில் நடத்தப்பட்ட விழிப்புணர்வுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு.
* 2012-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள விண்வெளி ஆய்வு மையம் சார்பில் “சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் விண்வெளி ஆய்வின் பங்கு’ என்ற தலைப்பில் மாநிலஅளவில், நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில், பெங்களுரு இஸ்ரோ மைய விஞ்ஞானி இராம கிருஷ்ணனிடமிருந்து விருது பெற்றேன்.
* 2014-ஆம் ஆண்டும் மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) சார்பில் மாநிலஅளவில் பள்ளிமாணவ-மாணவியருக்கிடையில் “வழிநடத்தும் விண்வெளி’ என்ற தலைப்பில் நடத்தப்பட்டக் கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு. இதன் மூலமாக பெங்களூரில் உள்ள விண்வெளி ஆய்வுமையத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகளையும் பி.எஸ்.எல்.வி., மங்கள்யான் ராக்கெட்டுகளை உருவாக்கிய விஞ்ஞானிகளையும் சந்தித்துப்பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
_______________________________________________________